• Home »
  • கதைகள் »
  • சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)

This entry is part of 32 in the series 20050513_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘கனிவுள்ள சார்லஸ் மன்னரே! நான்தான் பணிமாது ஜோன். ஆர்லியன்ஸ் கோட்டை, பிரான்ஸிலிருந்து அன்னிய ஆங்கிலேயரை விரட்டி ஓட்டவும், ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் உங்களுக்கு முடி சூடவும் என்னை அனுப்பி யிருக்கிறார், கடவுள். ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘போர்த் துறையில் ஜோன் ஆஃப் ஆர்க் மிகுந்த நெஞ்சழுத்தமும், துணிச்சலும், நீதி நெறிகளும் கொண்டவள். இராணுவத் தளபதியாகக் கருதும் போது, ஜோன் தவறு காண முடியாத தெளிவும், உறுதியும் ஆயிரக் கணக்கான படை வீரர்களை முன்னடத்தும் வல்லமையும் பெற்றிருந்தாள். கிறித்துவ மதப்பற்றை எடுத்துக் கொண்டால், திருச்சபைக்கு அடிபணியாது, கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரிட்ட கட்டளையை நிறைவேற்றி பிரான்ஸை விடுவித்தாள்! சார்லஸ் மன்னர் முடி சூட வழி வகுத்தாள். தேசப் பற்று மிகுந்து பிரென்ச் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டி, சிதறிக் கிடந்த பிரான்ஸை ஒன்று படுத்தி ஒரு தேசமாக்கியவள், ஜோன் ஆஃப் ஆர்க். ‘

அமெரிக்க கலை மேதை: கிரிஸ்டபர் ரஸ்ஸல்

பிரான்ஸ் அதன் வரலாற்றில் பல்லாண்டுகள் அடிமைப்பட்டு இருண்டதோர் காலத்தில் மீண்டு எழமுடியாமல் உழன்று வருகிறது! அதை ஒரே ஒரு சம்பவம்தான் இப்போது காப்பாற்ற முடியும். அற்புத நிகழ்ச்சி!

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப்பட்டதாகக் கருதியவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைச் சூழ்ச்சியும், மக்களை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

இரண்டாம் காட்சி தொடர்ச்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. சார்லஸ் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]

2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]

3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.

4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.

5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.

6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்கள்.

7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் அரண்மனைக் கோட்டை. அரச முன்னவை முன்பு ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும், மன்னர் கிராமத்து நங்கையைப் பார்க்கக் கூடாது என்று வாதாடுகின்றனர்! சார்லஸ் மன்னன் ஜோன் ஆஃப் ஆர்க்கைச் சந்திக்கப் போவதாய் அவர்களிடம் அழுத்தமாகக் கூறுகிறார்.

ஆர்ச்பிஷப்: [ஆவேசமுடன்] அந்தச் சிறுக்கி ஒரு புனித மாதா ? அவள் கீழ்க்குடி இனத்தவள்! மன்னர் வரவேற்கத் தக்க மதிப்புடைய மங்கையா அவள் ? அவள் பெண்ணே இல்லை! அவள் பெண்டிர் உடையைக் கூட உடுத்துவ தில்லையாம்! இப்படி எழுதி யிருக்கிறார், காப்டன் ராபர்ட்! படைவீரன் உடை அணிந்து குதிரையில் ஏறிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றிவரும் ஏதோ ஒரு நாடோடி! அந்த நாடோடி நங்கையை நாடாளும் மன்னர் முன்னின்று வரவேற்பதா ? வேடிக்கையாக இருக்கிறது, உங்கள் பிடிவாதம்!

லாஹயர்: [மேல்நோக்கி] கடவுளே! என்னை மன்னிப்பீர்! உண்மையாக அவள் ஒரு தேவ மாது! அவள்தான் கெட்ட வார்த்தைக் கொட்டும் ஊசி நாக்கு பிராங்க்கின் வாயை அடக்கியவள்! அவளுக்கு வந்த கோபத்தை நேராகப் பார்த்தவன் நான்! சினம் வரும்போது, அவளது கண்களிலிருந்து தீக்கனல் பறக்கிறது! மற்றவர் சினத்தைக் கண நொடியில் அடக்கி விடுகிறாள்! ஆனால் அவளது சினத்தை எந்த போக்கிரியும் அடக்க முடியவில்லை! அவள் சொல்வதை ஒருவன் எதிர்த்தால், அவன் கழுத்தை முறித்து விடுவாள்! அவள் ஓர் அரக்கிதான்! பெரியவாளுக்கு ஓர் எச்சரிக்கை.

ஆர்ச்பிஷப்: அரக்கி என்றுதான் நீ சொல்கிறாய் ? அவள் தேவதை இல்லை என்று நான் சொல்கிறேன்.

கில்லெஸ் (புளுபியர்டு): அவள் தேவமாதா இல்லையா என்று வெகு எளிதில் கண்டுபிடித்து விடலாம். [சார்லஸ் மன்னரைப் பார்த்து) எனக்கொரு யோசனை உதயமாகிறது. அவள் அரசவை முன்பாக வரும் போது, நம் இடத்தை மாற்றிக் கொள்ளலாம். உங்கள் அரச அங்கியை நான் அணிந்து கொண்டு, தலை கிரீடத்தையும் வைத்து அரசனைப் போல் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன். நீங்கள் எல்லாருக்கும் பின்னே சற்று மறைவாக நிற்க வேண்டும்! நான் அரசனில்லை என்று புறக்கணிக்கிறாளா வென்று பார்ப்போம்! உண்மை அரசரான உங்களைத் தேடிக் காண்கிறாளா என்று சோதிப்போம்!

சார்லஸ் மன்னர்: (மகிழ்ச்சியுடன்) நல்ல யோசனை அது! அப்படியே நாமிருவரும் நடிப்போம்! அரச இரத்தம் ஓடும் என்னை ஞானக் கண்ணில் கண்டுபிடிக்கா விட்டால், அவள் வெறும் போலிச் சூனியக்காரி என்பது பளிச்செனத் தெரிந்து விடும்! பிறகென்ன பேச்சு வேண்டிய திருக்கிறது ? உடனே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடலாம், அவளை. புளுபியர்டு! நீ சிறந்த ராஜ தந்திரி! மெச்சுகிறேன் உன் யோசனைக்கு!

ஆர்ச்பிஷப்: [ஆத்திர மடைந்து] இது என்ன சிறு பிள்ளை நாடகம் ? இந்த அரசவையில் கண்ணாமூச்சி விளையாட்டா ? நல்ல வேடிக்கை ? …. நான் கிறித்துவ ஆலயத்தின் சார்பாக ஆணை இடுகிறேன்! அந்தப் பட்டிக்காட்டு மாது, அரண்மனைப் படியில் கால் வைக்கக் கூடாது! … உங்கள் நெஞ்சில் உறுதி இருந்தால், ஆலயத்தின் ஆணையை மீறி, … அரசரே! .. நீவீர் அவளை வரவேற்கப் போகிறீரா ?

சார்லஸ் மன்னர்: [சிறிது நடுக்கமுடன்] பாதிரியாரே! என்னை பயமுறுத்த வேண்டாம்! இந்த ஆணை இப்போது தேவையில்லை! இது மிகச் சிறிய சம்பவம்! என்ன ? என்னைக் கிறித்துவ ஆலயத்திலிருந்து வெளியே தள்ளப் போகிறீரா ? …. பொறுமையை இழைக்காதீர்! …. பாதிக் கடிதத்தை மட்டும் படித்து விட்டு, ஆத்திரத்தில் நீங்கள் மீதிக் கடிதத்தைக் கூட படிக்க வில்லை! கடைசி வரிகளைச் சற்று கூர்ந்து வாசித்துப் பார்க்கும்படி நான் வேண்டுகிறேன். … ராபர்ட், இப்படி கடிதத்தில் எழுதி முடித்திருக்கிறார்: அந்த மங்கை ஆர்லியன்ஸ் கோட்டையைத் தாக்கி, ஆங்கிலப் பட்டாளத்தை விரட்டப் போகிறாளாம், மன்னர் படை உதவி செய்தால்! இதுதான் முக்கியத் தகவல்! நாமிதை இன்று முடிவு செய்ய வேண்டும்.

சாம்பர்லைன்: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதா ? நாடோடி நங்கையின் மூடத்தனம் நன்றாகவே தெரிகிறது. பேராற்றல் கொண்ட பிரிட்டாஷ் சிங்கப் படையை, செம்மறி ஆடு மேய்ப்பவள் தனது மந்திர சக்தியில் நசுக்கப் போகிறாளா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] ஏன் ? உங்கள் வாய்ச் வீச்சைப் பயன்படுத்தி கொண்டு, நீங்கள் ஏன் ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டுத் தரக்கூடாது ?

சாம்பர்லைன்: போதும்! நமக்குள் இந்தக் கேலிப் பேச்சு வேண்டாம்! எமது போர்த் திறமை உமது போலித் திறமையை விட உயர்ந்தது! உங்களை விட அதிகப் போரில் யாம் ஈடுபட்டிருக்கிறோம்! மறந்து விடாதீர் அதை! ஆர்லியன்ஸ் கோட்டையை அந்த மந்திரக்காரி பிடிக்கப் போவதில்லை! ஆனால் தனது மந்திர சக்தியால் உங்கள் மனக் கோட்டையைக் கைப்பற்றி விட்டாள்! மன்னரே! தேவதையை நம்பி பெருத்த ஏமாற்றம் அடையப் போகிறீர்!

ஆர்ச்பிஷப்: [மன்னர் முன் நெருங்கி] உங்களை நான் மறுமுறை எச்சரிக்கிறேன்! தேவதை என்ற போலி வேடம் பூண்டு அந்தப் பாவை இங்கு நுழைவதை என் கண்கள் காண முடியாது! கிறித்துவத் தேவாலயம் ஒன்றுதான் புனித அணங்குகள் உருவாக்கும்! மேலும் அவரைக் கண்டுபிடித்து உறுதிச் சான்று அளிக்கும்! இராணுவ அதிகாரி ராபர்ட்டும், போர் வெறியர் லாஹயரும் கண்டுபிடிக்க முடியாது! அவர்கள் பகைவரைக் கண்டுபிடிப்பதுடன் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்! கிராமத்துப் பெண்ணை தேவதை என்று சான்றிதழ் அளிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை!

சார்லஸ் மன்னர்: [கேலியாக] அந்தப் பெண் என்னைக் கண்டுபிடித்து விட்டால் புனித அணங்கு என்று சான்றிதழ் அளிப்பீரா ?

ஆர்ச்பிஷப்: [சட்டென] நீங்கள் போடும் அந்தப் புதிரில் மட்டும் அவளை அணங்காக்க முடியாது!

புளுபியர்டு: மன்னரே! மாவீரத் தளபதி ஜாக் துனாய்ஸ் ஆர்லியன்ஸ் படையின் தலைவனாக இருக்கும் போது, இந்த எழில் மங்கை போரிட்டுக் கோட்டையை மீட்டுவாள் என்பது வேடிக்கைப் பேச்சு!

சார்லஸ் மன்னர்: அது சரி! சொல்லுங்கள்! வீராதி வீரன் துனாய்ஸ் ஏன் இதுவரைப் போரிட்டுக் கோட்டையைப் பிடிக்கவில்லை ? எதற்கு அவன் அஞ்சுகிறான் ? யார் அவனைத் தடுத்து நிறுத்தினார் ?

லாஹயர்: புயற் காற்று அவனுக்கு எதிராக அடிக்கிறது!

சார்லஸ் மன்னர்: கோட்டைக்கு அரணாக இருப்பது ஆற்று வெள்ளம்! காற்றுப் புயல் இல்லை! ஆர்லியன்ஸ் அருகே ஓடும் லோயர் ஆற்றுக்குள் எங்கே காற்று எதிர்க்கிறது ?

லாஹயர்: மன்னரே! புயலடிப்பது லோயர் ஆற்றுக்குள்ளேதான்! புரிகிறதா ? லோயர் நதிப் பாலத்தின் தலைமுனைப் பகுதி ஆங்கிலேயர் வசமுள்ளது! பின்புறம் சென்று அவர்களை மடக்க தளபதி, நதியின் மேலோட்டக் கரையைக் கடக்க வேண்டும். புயற் காற்று மேலோட்ட நதியில் கிழக்கு நோக்கி அடிக்கிறது! மேற்கு நோக்கிக் காற்று அடிக்க வேண்டும் என்று துதிக்கச் சொல்லி, கிறித்துவப் பாதிரிகளுக்குப் பணம் கொடுத்துக் களைத்து விட்டார், தளபதி! அவருக்கு வேண்டியது இப்போது ஓர் அற்புதச் சம்பவம்! அதை இந்த தேவதை கொடுக்கலாம்! அதை ஏன் ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் தடுக்க வேண்டும் ? முயற்சி வெற்றி அளிக்கும்! முற்படுவதற்கு முட்டுக்கட்டை ஏன் போட வேண்டும் ?

சாம்பர்லைன்: இந்த மூடப் போரை நிறுத்த வேண்டும். தோற்றுப் போகும் போரில் ஆயிரக் கணக்கான பேர் வீணாய் உயிரிழப்பார்! ஏன் ? அந்த தேவதை கூட உயிரோடு மீள மாட்டாள்!

லாஹயர்: ராபர்ட் தலைசிறந்த போர்த் தளபதி! இந்த இளமாது ஆங்கில அரக்கரை ஓட்டுவாள் என்று அவர் நம்பினால், மற்ற படையாளிகளும் அதை நம்பிக் கொதித்து எழுவார். இளநங்கைமேல் ராபர்ட்டுக்கு அசையாத நம்பிக்கை உள்ளது!

ஆர்ச்பிஷப்: மன்னரே! கிறித்துவத் தேவாலயம் கிராமத்து மங்கையை முதலில் பரிசீலனை செய்து அங்கீகரிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் நீங்கள் போருக்குத் தீர்மானம் செய்ய வேண்டும். ஆனால் மேன்மை தங்கிய மன்னர் விரும்புவதால், அவள் அரண்மனைக்கு வர அனுமதி அளிக்கிறோம்!

சார்லஸ் மன்னர்: [கேலியாக] ஆகா! கடவுளின் தூதர் நமக்கு உத்தரவு அளித்து விட்டார்! [லாஹயரைப் பார்த்து] ஏன் நிற்கிறாய் ? போ! அந்த தேவதையை உடனே அழைத்து வா! அவள் வெகு நேரம் காத்திருக்கிறாள், என்னைக் காண! என்னைக் காணாமல் போக மாட்டேன் என்று கோட்டை வாசலில் போராட்டம் செய்கிறாள்! பார்ப்போம். என்னைக் கண்டுபிடிக்கிறாளா என்று ? அவளைக் காண வேண்டு மென்று என் நெஞ்சும் துடிக்கிறது! போ! போ! போ!

லாஹயர்: [வணங்கிய பின்] அப்படியே செய்கிறேன் மன்னரே! [வெளியேறுகிறான்].

சார்லஸ் மன்னர்: [புளுபியர்டை நோக்கி] சீக்கிரம் என்னறைக்கு வா! என் பொன் அங்கியைக் கழற்றித் தருகிறேன். என் தலைக் கிரீடத்தையும் வாங்கிக் கொள். அரசனைப்போல் நீ கம்பீரமாக என் ஆசனத்தில் அமர்ந்து பாவனை செய்! உன்னை நிராகரித்து என்னைக் கண்டுபிடிகிறாளா வென்று சோதிப்போம். [மன்னரும், புளுபியர்டும் உள்ளறைக்குச் செல்கிறார்கள்].

ஆர்ச்பிஷப்: [அருவருப்பாக சாம்பர்லைனைப் பார்த்து] படிப்பு வாசனையே மூக்கில் ஏறாத பட்டிக்காட்டுப் பாவை, மன்னரைக் கண்டுபிடிப்பாள் என்று மனப்பால் குடிக்காதீர். அரண்மனையைக் கண்டு அவள் பேதலித்து மயங்கி விழாமல் இருக்கிறாளா என்று நான் பார்க்கப் போகிறேன்.

சாம்பர்லைன்: அந்த ஒரு யூகத்தில் உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். பித்துப் பிடித்தவர் நிழல் பட்டால் மன்னரும் பித்தராகிறார்! அற்புதம் நடந்து, ஆர்லியன்ஸ் கோட்டை பிடிபடப் போவதை என்னால் கற்பனிக்க முடியவில்லை! அற்புதம், சூனிய வித்தை இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை! ஆமாம், அற்புதம் என்பது என்ன ?

ஆர்ச்பிஷப்: அற்புதம் பற்றி அறிவதில் உங்களுக்கு என்னைப்போல் அனுபவம் கிடையாது. அற்புதம் புரிவது, அற்புதம் பற்றி அறிவது, அற்புத மாந்தரை ஆக்குவது, அற்புதம் இல்லையென உளவு அறிவது அனைத்தும் எனது தொழில்! அவற்றை ஆழ்ந்து காணும் தெய்வீக ஞானத்தைக் கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். அற்புதம் என்ன வென்றா கேட்டார் ? சொல்கிறேன். அற்புதம் என்பது ஒரு சம்பவம்! அந்த தெய்வீக்க நிகழ்ச்சி நடந்தால் நமக்கு நம்பிக்கை ஊட்டும்! அதைக் கண்ணால் காண்போர் வியப்புறுவர்! காணாதோர் உங்களைப் போல் கேலி செய்வார்! செய்பவருக்கு அது எளிய செயல்! எவராலும் செய்ய முடியாத வினையை ஒருமுறைச் செய்து காட்டி உலகை நம்ப வைத்தால், அது ஓர் அற்புத நிகழ்ச்சி ஆகிறது!

சாமர்லைன்: [கேலியாக] நான் கிறித்துவ ஆலய மனிதன் அல்லன். அற்புதம் போல் புரிந்து மோசடி செய்பவரை நம்பச் சொல்கிறீரா ?

ஆர்ச்பிஷப்: [அழுத்தமாக] மோசடிக்காரர் போலி மனிதர்! அவர் மக்களை ஏமாற்றுபவர். உளவு செய்து அவரைச் சிறையில் அடைப்பது அறிவுடைமை. அவரது வாய் உருட்டலில் மயங்கி, அவர் விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்வது மடமை. மோசடிக்கும், அற்புதத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. மோசடி செய்வன் மனிதன்! அற்புதம் புரிபவன் ஆண்டவன்! மோசடி மன எரிச்சலை உண்டாக்கும்! அற்புதம் மன நிறைவைக் கொடுக்கும்! மோசடி புரிவது எளிது! அற்புதம் புரிவது அபூர்வம்!

சாம்பர்லைன்: உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை. அற்புதம் நிகழ்வதை நான் நம்ப முடியவில்லை. ஆனால் மோசடி நடப்பதை நம்புகிறேன். நான் கிறித்து ஆலயப் பக்தனில்லை. கிறித்துவ மதத்தின் அடிப்படையிலே பூதக் கண்ணாடி கொண்டு, உலக நடப்புகளை எடை போடுவது எனக்குப் பிடிக்காது!

ஆர்ச்பிஷப்: நண்பரே! மனித ஆத்மாக்களை நல்வழிப் படுத்த, இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறித்துவ மதாதிபதிகளே நாட்டு மன்னனைத் தேர்ந்தெடுத்து, நாட்டு மக்களையும் கைப்பற்றி ஆண்டு வந்திருக்கிறார்கள். நாட்டு மன்னர் ஆணையிட்டு மனித உடல்களை மட்டும் ஆள்கிறார்! ஆனால் கிறித்துவ மதாதிபதிகள் நன்னெறியில் புகுத்தி மக்களின் ஆத்மாக்களை ஆட்சி செய்து வருகிறோம்! நாங்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்தா விட்டால், மனித ஆத்மாக்கள் நாசமாகி அழுகிப் போய்விடும்! ஆனால் அழுகிப் போன ஆத்மாக்களைக் கழுவி அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க முடியும், எங்களால்! அற்புத நடப்புகள் மோசடி அல்ல! மோசடிகள் அற்புத நிகழ்ச்சிகள் அல்ல! கல்வி கற்காத அந்த இளநங்கை நிச்சயம் அற்புதங்களை ஆக்கப் போவதில்லை! புத்தி கூர்மையில் ஒருவேளை சார்லஸ் மன்னரை அவள் கண்டுபிடித்து, அற்புதம் என்று அரசர் சொன்னாலும் நான் அப்படிக் கூறமாட்டேன். தெய்வீகச் சிலிர்ப்பு ஏற்பட்டு, தான் பாவக் களிமண் பொம்மை என்பதை மறந்து, கடவுளின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் அரிய பிறவிதான் அற்புதத்தை உண்டாக்க முடியும்! ஆனால் படிப்பில்லாப் பாவை அந்த பரம்பரையில் பிறந்தவளாக எனக்குத் தோன்றவில்லை.

சாம்பர்லைன்: அற்புதம் நடக்கிறதா அல்லது மோசடி நடக்கிறதா என்று நாமிருவரும் நின்று இங்கு வேடிக்கை பார்க்க வேண்டும். மோசடி நிகழ்ந்தால் உங்களுக்கு வெற்றி! அற்புதம் நிகழ்ந்தால் அரசருக்கு வெற்றி! கிராமத்துப் பெண் வெளியே தள்ளப்பட்டால், எனக்கு வெற்றி! [அப்போது சற்று ஆரவாரம் கேட்கிறது]

[உட்கதவு திறந்து, மன்னர் சாதாரண உடையிலும், புளுபியர்டு மன்னரைப் போலும் வேடம் பூண்டு வெளியே வருகிறார்கள். அரசவையில் யாவரும் எழுந்து நிற்கிறார்கள். புளுபியர்டு முன்முறுவலுடன் கம்பீரமாக மன்னரின் தனி ஆசனத்தில் அமர்ந்ததும், எழுந்தவர் அனைவரும் உட்காருகிறார்கள். சார்லஸ் மன்னர் கூட்டத்தில் மறைந்து தெரிந்தும், தெரியாமல் நின்று கொள்கிறார். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைனும் ஜோனை முதலில் பார்க்க வேண்டுமென்று முன்புறம் நிற்கிறார்கள். ராணி தோழியர் நடுவே ஓர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அப்போது சேவகன் ஒருவன் வந்து, ஜோன் வருகையை அறிவிக்கிறான். அரசவையினர் ஆரவாரம் மெதுவாக அடங்குகிறது.]

சேவகன்: [தலை வணங்கி] யாவருக்கும் ஓர் அறிவிப்பு! இதோ! காணீர்! பணிமாது ஜோன் ஆஃப் ஆர்க்கை, டியூக் ஆஃப் வெண்டோம் அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறார்.

[அப்போது மறைவிலிருந்து மன்னர் தலைநீட்டி ஜோனைக் கண்டபின், தலையை மீண்டும் இழுத்துக் கொள்கிறார்.

புளுபியர்டு: [கம்பீரமாக] அவள் சிங்காசனத்தின் அருகில் வரட்டும்.

[நிமிர்ந்த நடையில், நேர்கொண்ட பார்வையில் ஜோன் மூன்று படைவீரர்கள் சூழ்ந்து வர அரசவையின் மையத்தை அண்டுகிறாள். கூந்தல் குறுகி வெட்டப்பட்டு, இராணுவக் கவச உடுப்பணிந்து, வாளொன்று இடுப்பில் தொங்கிட, கையில் தலைக் கவசத்தை ஏந்திய வண்ணம் ஜோன் இங்குமங்கும் நோக்குகிறாள். அரசவையில் நிசப்தம் நிலவுகிறது. அனைவரது கண்களும் பணிமாது, ஜோனையே வட்டமிடுகின்றன! தோழியர் அரங்கை விட்டு, ஜோன் ஆடவர் பகுதிக்கு மெதுவாக நடந்து, அவர்களை உற்று நோக்குகிறாள்.]

ராணி: [சிரிப்பை அடக்க முடியாமல், பக்கத்தில் நிற்கும் தோழியின் காதருகே] அடி ஆத்தா! இவளுக்கு கொண்டை முடி மேல்நோக்கி அல்லவா வளருது!

[உடனே அத்தனை தோழிப் பெண்டிர்களும் கொல்லென்று வெடித்துச் சிரிக்கிறார்கள்]

புளுபியர்டு: [சிரிப்பை அடக்கியும், அடக்க முடியாது] … உஷ்! .. தோழீயப் பெண்டூகளா! என்ன சிரிப்பு ?

[கூட்டத்தில் சிரிப்பு மெதுவாக ஒடுங்குகிறது.]

ஜோன்: [சிறிதும் குழப்பம் அடையாமல், கலவரப்படாமல், அழுத்தமான குரலில்] நான் ஒரு படையாளி! அப்படித்தான் என் கூந்தல் குறுகி யிருக்கும்! எங்கே தெளஃபின் மன்னர் ?

புளுபியர்டு: [ஜோனை நோக்கி] நீ தெளஃபின் மன்னர் முன்பாகத்தான் இருக்கிறாய்! அவரைக் காண வந்திருக்கும் நீயே அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்!

[ஜோன் குரல்வரும் திக்கில் திரும்பி, புளுபியர்டு அமர்ந்திருக்கும் ஆசனத்துக்கு அருகில் செல்கிறாள். மேலும், கீழும் புளுபியர்டை உளவு செய்கிறாள். நிசப்தம் நிலவி, அனைவரது கண்களும் ஜோனை நோக்குகின்றன! புன்னகை மேவுகிறது, ஜோன் முகத்தில்]

ஜோன்: [ஆச்சரியமுடன்] யார் நீங்கள் ? நீங்கள் மன்னரில்லை! … எங்கே மன்னர் ? …. எங்கே மன்னர் ? அவரைக் காணத்தான் வந்திருக்கிறேன். கட்டாயம் அவரைக் காண வேண்டும். சொல்லுங்கள் மன்னர் எங்கே ?

புளுபியர்டு: மன்னர் இங்குதான் இருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்க வேண்டியது, உன் பொறுப்பு! தேடிப்பார்! சுற்றிப்பார்! அவரைக் காண முடியா விட்டால், வெளியில் விரட்டப் படுவாய்!

[ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துவரும் ஜோன் இறுதியில் சார்லஸ் மன்னரைக் கண்டுபிடித்து விடுகிறாள்.]

ஜோன்: [மன்னர் வலது கரத்தை ஏந்தி முத்தமிட்டு] … நீங்கள்..! … நீங்கள்..! நீங்கள்தான் எங்கள் மன்னர்! தெளஃபின் மன்னர்! … [மெதுவாக மண்டியிட்டு வணங்கிறாள்.]

[உடனே கைதட்டல்களும், ஆரவாரங்களும் அரசவையில் எழுகின்றன. ராணி வியப்படைகிறார். தோழிர் யாவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஆனந்தம் அடைகின்றனர்! ஆடவர் கைதட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்கிறார்.]

சார்லஸ் மன்னர்: [மகிழ்ச்சியுடன் வலது கையை உயர்த்தி] … எல்லாரும் பாருங்கள்! … எல்லாரும் பாருங்கள்! … அவளது ஞானக்கண் கூரியது! அரச இரத்தம் ஓடும் என்னை அவள் கண்டுபிடித்து விட்டாள்! …. ஏமாந்து இருப்பவர் புளுபியர்டு!

ஜோன்: [ஆனந்தக் கண்ணீர் அருவியாகச் சொரிய எழுந்து நின்று, தலை வணங்கி தன் கைகளை ஒன்றாய் இணைத்து மகிழ்ச்சியுடன்] கனிவு மிக்க, கண்ணியம் நிரம்பிய மன்னரே! .. நான்தான் பணிமாது ஜோன்! … கடவுளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்! அன்னியரான ஆங்கிலேயரை ஆர்லியன்ஸ், பிரான்ஸிலிருந்து விரட்டவும், ரைம்ஸ் தேவாலயத்தில் வேந்தராய் உங்களை முடி சூட்டவும் என்னைக் கடவுள் அனுப்பி யிருக்கிறார்.

சார்லஸ் மன்னர்: [ஜோனைக் கனிவுடன் பார்த்து] … ரைம்ஸ் தேவாலயத்தில் நான் முடி சூட வேண்டும் என்று நீ என்னிடம் சொல்லாதே! … [பாதிரியாரைச் சுட்டிக் காட்டி] அதோ, அங்கு நிற்கும் ஆர்ச்பிஷப்பிடம் சொல்ல வேண்டும்!

ஜோன்: [பின் திரும்பி ஆர்ச்பிஷப்பைப் பார்த்து, பணிவுடன் மண்டியிட்டு வணங்கி உணர்ச்சியுடன்] பிரபு! நான் ஓர் ஏழை கிராமத்துப் பெண்! தாங்கள் கீர்த்தியுள்ள கடவுளின் அருளும், ஆசியும் பெற்ற கிறித்துவ தேவர்! இந்தப் பாமர மங்கையின் சிரத்தை தங்கள் உன்னதக் கரத்தால் தொட்டு ஆசீர்வதிப்பீர்களா ? அந்த தகுதியை எனக்கு அளிப்பீர்களா ?

புளுபியர்டு: [பக்கத்தில் நிற்கும் சாம்பர்லைனைப் பார்த்து] …. பாருங்கள்! .. பாருங்கள்! ஆர்ச்பிஷப் கிழட்டு நரியின் முகம் சிவந்து போவதை!

சாம்பர்லைன்: [வியப்புடன்] அது அவள் செய்யும் அடுத்த அற்புதம்! ஆம்! அடுத்த அற்புதம்! ஆர்ச்பிஷப் கல்நெஞ்சை ஒரு நொடியில் கரைத்து விட்டாளே!

ஆர்ச்பிஷப்: [கருணையுடன், ஜோன் தலையில் கரம் பதித்து] குழந்தாய்! உனது கிறித்துவ மதப்பாசத்தை நான் மெச்சுகிறேன்!

ஜோன்: [தலையைத் தூக்கிக் அவரை உற்று நோக்கி] உண்மையாகவா ? மெய்யாக எனக்கு கிறித்துவ மதப்பாசம் உள்ளதா ? சொல்லுங்கள்! அதனால் எனக்கு எதாவது தீங்கு இருக்கிறதா ?

ஆர்ச்பிஷப்: குழந்தாய்! அதில் உனக்கு எந்த தீங்கும் இல்லை! ஆனால் அபாயம் இருக்கிறது!

ஜோன்: [வேகமாய் அதிர்ச்சியுடன் எழுந்து] என்ன சொன்னீர்கள் ? தீங்கில்லை! ஆனால் அபாயம் இருக்கிறதா ? எனக்குப் புரியவில்லை! நான் அனுதினமும் போற்றும் மதப்பாசத்தில் அபாயம் உள்ளதா ? என்ன அபாயம் ? சொல்லுங்கள்! பிரபு! சொல்லுங்கள்!

(இரண்டாம் காட்சி தொடர்ச்சி அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).

4. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

5. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

6. Britannica Concise Encyclopedia (2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 9, 2005]

Series Navigation