தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் (2)

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/2/

சா ரா ய க் க டை காயம் பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல, மனக் காயம்.

மக்கள் திட்டுத் திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட அந்தச் சுமைகள் அவர்களை நடக்க விடவில்லை. வளாகமே மிரண்டு கிடந்தது. சுற்றிலுமானதோர் கருங்கோட்டை. வார்த்தைகள் விக்கித்த, சப்தங்கள் சுடப்பட்ட மெளனம்.

லேசான மழையிருட்டு. சற்று அழுத-முகமான இருட்டு. புயலுக்கு முந்தியும் அமைதி. பிந்தியும் அமைதி… அங்கே வந்திருந்தவர்கள் வாழ்வில் புயல் அடித்து ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது புயல் வரும் அறிகுறிகளில் அவர்கள் மிரண்டிருக்க வேண்டும்.

நாடியில் அடிபட்டிருந்தது ஒருத்தனுக்கு. என்ன நடந்ததோ. நாடிச் சில்லில் இருந்து ஒழுகிக் காய்ந்த சிவப்பு அடையாளம். எங்கயாச்சும் குத்திக் கிட்டானா. கீழே விழுந்துட்டாப்லியா ? இல்லை, வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு, யாருடனாவது மோதி தோற்று வந்தானா ? வலியின் தெறிப்பு தெரியாமல் போதையில் சரிந்து கிடந்தான். அருகே பாட்டில். அவனது உற்ற துணைபோல. குழந்தை போல… கல்லாவில் இருந்தவன் ‘ ‘அந்த நாயைத் துாக்கி ஓரமாப் போடு ‘ ‘ என்கிறான்.

ரெண்டுபேர் அவனைத் தரதரவென்று இழுத்து ஓரமாய்த் தள்ளுகிறார்கள். நல்ல வெள்ளை வேட்டி. வெள்ளைச் சட்டை. கைமடிப்பு துறுத்தலாய் – உள்ளே பணம் இருக்கலாம். ஹ்ரும், என்று விநோத சப்தம் அவனில் இருந்து அவ்வப்போது எழுந்தது. வலியின் முனகலா, கனவுகளின் ஏமாற்றமா, அதிர்ச்சி தாளமுடியாத, நம்பிக்கைத் துரோகம் தாளாத துவண்ட மருட்சியா. ஹா ஹா என மூச்சுப் படபடப்பு. நெஞ்சு ஏறியேறி இறங்குகிறது.

பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிற மற்றொருவன் பாட்டிலையே உறுத்துப் பார்த்தபடி இருக்கிறான். அடிக்கடி உதட்டை உதட்டைப் பிதுக்குகிறான். கண்கள் தன்னைப்போல அழுகின்றன. பேச்சு இல்லை. அவன் மகன் செத்துப் போயிருக்கலாம். கோர்ட்டில் அவன் வழக்கு தோற்றுப் போய் நஷ்டப் பட்டு வந்திருக்கலாம். அவன் வியாபாரம் படுத்திருக்கலாம். போச்சே, எல்லாம் போச்சே… என்கிறாப் போல கையைக் கையை விரிக்கிறான்.

பக்கத்தில் இருக்கிறவனோ பெஞ்ச்சில் குனிந்த தலை நிமிரவேயில்லை. புதுச்சட்டை கிழிந்திருக்கிறது. சுத்தபத்தமாய்க்கிளம்பி யிருப்பான் வீட்டைவிட்டு. இடையே அபத்தமாய் என்னவோ அசம்பாவிதம். சட்டைக் கிழிசல். யாரோ காலரைப் பற்றி இழுத்திருக்கிறாப் போல கசங்கல். காலர்ப்பட்டை பாதி துாக்கி யிருக்கிறது. குட்டிக் கரணமடித்த மீனின் வால் வெளித் தெரிவது போல. வாரியதலை கலைந்து கிடக்கிறது. எங்கோ ரகளையில் மாட்டிக் கொண்டு கைகலப்பாகி யிருக்கலாம்.

ஏற்கனவே குடித்திருந்த ஒருவன் உள்ளே நுழைந்தான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஒரு நடை. வேட்டி தடுக்கத் தடுக்க ஒரு நடை. அவன் முட்டாழம் வரை வந்திருந்தது துயரம். வாய்க்கால் தண்ணி போல. சற்று நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். யாரைத் தேடுகிறான். அவனுக்கே தெரியாத வெற்றுப் பார்வை. சிவந்த வெறியேறிய கண்கள். பெரிய தோள்த்துண்டு. மனசில் அரசியல்வாதியான தோரணையில் அவன் ஆவேசப் பட்டிருக்கலாம். மாறு வேசப் போட்டி என நினைத்து உள்ளே புகுந்துட்டானா!… அல்லது அவனே அரசியல்காரன்தானோ என்னவோ. ஒருவழியாய்ச் சாராயம் ஊற்றுகிற மேடையைக் கண்டுகொண்டாப் போலத் தெரிகிறது. மீண்டும் வாய்க்கால் கடந்து வந்து ஓரத்தில் அடுக்கியிருந்த கண்ணாடித் தம்ளர்களில் ஒன்றை எடுத்து ஆத்திரத்துடன் வைத்து ‘ஊத்து ‘ என்கிறான்.

‘துட்டு வெச்சிருக்கியா ? ‘ என்று கேட்கிறான் கடைப்பையன்.

‘துட்டா. ‘

‘ம் ‘

‘எதுக்குத் துட்டு. ‘

‘பின்ன சருக்குக்குத் துட்டு ? எவந்த தருவான். ஙொப்பனா தருவான் ? ‘ என்கிறான் கடைக்காரன். இப்போது பல்லக்கு அங்கேயிருந்தே ஆடியபடி கல்லாப் பக்கம் திரும்புகிறது. ‘ஏய் காசுதானே வேணும். நாளைக்கு வாங்கிக்க ‘ – மீண்டும் பல்லக்குச்சாமியின் தலை இந்தப் பக்கம் திரும்புகிறது. ‘நீ ஊத்துறா ‘. பையனிடம் இருந்து பதில் இல்லை.

வந்தவனுக்கோ நிற்க முடியவில்லை. தள்ளாட்டம். மூச்சுத் திணறல். எருமைமூச்சு. திடாரென்று அழுதாப்போல பையனைப் பார்க்கிறான். ‘தம்பி உன்னியக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். நான் ஏற்கனவே நொந்து நொம்பலமாய் வந்துருக்கிறேன்… ‘ என்றவன் தள்ளாடி, அப்படியே நெஞ்சு துடிக்க ‘பூட்டா அவ… ஆரு… என் சம்சாரம். அந்தத் தெருநாய்… கோவிந்து… நண்பனா அவன்… த்துா. போ. போயிரு. நல்லாயிரு. வராதே… ‘ என்று கையால் விரட்டி ஆசிர்வதித்தான். ‘தம்பி புண்பட்ட மனசுக்குப் புனுகு தடவி ஆத்தணும்டா. என்னைனக் கைவிட்றாதே. நீ ஊத்து… ‘

‘துட்ட எடு ‘

‘ஆர்ட்ட இருக்கு தம்பி துட்டு ‘ என்றவன் கல்லாப்பெட்டியிடம் திரும்பி ‘என்ட்ட துட்டு இருந்தா அவ ஏன் ஐயா ஓடிப்போறா ? ‘ என்கிறான். ‘ஹா, துட்டு இருந்தா, ஒரு பொண்டாட்டி என்ன, ஆயிரங் கெட்டலாம்… நீ ஏண்டா பையா வேடிக்கை பார்க்கிறே. நீ ஊத்து. ‘

கொஞ்சநேரம் வெட்டியாய் நின்றபடி அவன் சாமியாடுகிறான். பெரிசு பெரிசான சீறல் மூச்சுகள். திரும்பி வாய்க்கால் நடையில் நடந்து ஏமாற்றமாய்ப் போனவன் பெஞ்ச்சில் கவிழ்ந்திருந்தவனைப் பார்க்கிறான். அவனை என்றால் அவனை அல்ல. அவன் அருகே தம்ளர். திரும்ப முட்டாழத் தண்ணீரில் நடை. யாருமே எதிர்பாராமல் அந்தத் தம்ளரின் மிச்சச் சாராயத்தை அப்படி எடுத்து உயரத் துாக்கிக் கவிழ்த்துக் கொள்கிறான். கடைக்காரச் சிப்பந்திகள் பாய்ந்து வந்து தம்ளரைப் பிடுங்கி வைக்கிறார்கள். அதில் ஒருவன் நாக்கைத் துருத்தி ஆத்திரத்துடன் அவனை ஓர் எத்து விடுகிறான். வாய்க்கால் தண்ணியில் பொத்தென விழுகிறான் வந்தவன்.

—-

வண்ணை சிங்கராஜ் நுழைகையில் நிலைமை சிலாக்கியமாய் இல்லை. குடிக்கிற பரபரப்பில் நாயைக் கூடவும் மறந்து உள்ளே வந்து விட்டான்… உள்ளே சாராயம் விற்றுத் தீர்ந்து விட்டால் என்று அவசரப் பட்டாப் போல.

நாய் உள்ளே எட்டிப் பார்த்தது. கூரைக்கு முட்டுக் கொடுத்த மூங்கில் கழியில் சாய்ந்தபடி மேலே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருத்தன். அருகே தட்டில் என்னவோ அசைவப் பதார்த்தம். சிவப்பாய் நெளிநெளியாய்.

வெளியே தயங்கி நின்ற நாய் ஒரு விநாடி சுற்று முற்றும் கவனித்துக் கொண்டது. சட்டென உள்ளே பாய்ந்து வந்து அந்தக் குடல்க்கறியை ஒரே கவ்வலில் கவ்வி – சீன மந்திரவாதியின் நீள மீசை தாடி போலத் தொங்கும் குடல் – வெளியே பாய்ந்தோடு முன்… எதிர்பாராமல் நாய் கடையாளுகளால் சுற்றி வளைக்கப் பட்டது. எங்கேயிருந்து கம்புடன் முளைத்தார்கள். திணறி விட்டது. சரியான அடி. நச்சி எடுத்து விட்டார்கள். வாள் வாள் என்று கதறித் துடித்தது நாய்.

‘ஐய்ய வாயில்லா சீவனுங்க ‘

‘திருடித் திங்கத் தெரியுதில்ல ?… ‘

எப்பிடியோ யார் தொடையடியிலோ பாய்ந்து புகுந்து வெளியே அது ஓடினாலும்… வெளியே சக நாய்களுடன் இன்னொரு மோதல். கல்லெறிபட்டு ஓட்டம் எடுத்தன நாய்கள்.

அசைவக் குடல் கடைவாசலில் கிடப்பதைக் காக்ம் ஒன்று சாவகாசமாய் இறங்கி வந்து எடுத்துப் போனது.

அதிர்ஷ்டக்காரக் காகம். அதனால் உள்ளே புகுந்து குடலை எடுத்துப் போக முடியுமா ?

ஏற்கனவே போதை இல்லாமலே போதை மயக்கத்தில் இருந்தான் வண்ணை. இப்போது அழுகை முட்டியது. ஒரு அப்பாவி நாயை இப்படி அவன் கண்முன்னே ஆளாளுக்குப் போட்டு அடி நச்சிப் பிட்டார்கள். கோபமாய் எகிற… முடியவில்லை. ஒத்தொருத்தருனும் கிங்கரனாட்டம் இருக்கிறான். மீசையும் கம்பும். வாயைத் திறந்தால் உன்னையும் உதைப்பான்கள்…

‘டாய் ஊத்துறா ‘ என்றான் மேடைக்குப் போய். ‘நல்ல சரக்கா உடை. போனதபா நீ குடுத்தது கிக்கே பத்தல… ‘

‘அண்ணே வர்றப்பவே மப்பு போல்ருக்கு ‘

வாயை மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று.

தலையைக் குனிந்தபடி அப்படி பெஞ்ச்சில் கிடந்தவனின் அருகில் போய் உட்கார்ந்த கணம் அவனிடம் திடார் அசைவு. பூகம்பக் குலுக்கல். உவ்வே என்று எதிர்த்து வந்தது அவனுக்கு.

‘வாந்தியெடுத்துத் தொலைக்கப் போறான்… அவனை எழுப்பு… எழுப்பு! ‘

கடைப் பையன் ஓடிவந்து அவனைத் துாக்குமுன் ஓங்கரித்து அவன் வாந்தி யெடுத்தே விட்டான். சட்டை யெங்கிலும் சிதறியது வாந்தி. கிழிந்த பகுதி வழியே உள்ளே உடம்பெங்கும் வழிந்து… பெஞ்ச்சில் வழிந்து…

எதைத் தின்னு தொலைஞ்சானோ… கெட்ட நாற்றம். இனி இதை சுத்தம் செய்யணும், என பையனுக்கு எரிச்சல்.

தம்ளருடன் சடாரென்று எழுந்து கொண்டான் வண்ணை. சுற்று முற்றும் தேடினான். வேறிடம், பாதுகாப்பான இடம் எதுவும் இருக்கிறதா ?… யாரையும் நம்புதற்கில்லை. எப்போதும் எந்த அபாயமும் நிகழலாம் என்றான பூமி இது. எதற்கும் உத்திரவாதம் இல்லை.

போனமுறை சரக்கு வாங்கிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். திடாரென்று நாலுபேர் உள்ளே பாய்ந்து வந்தார்கள் இவனை நோக்கி. கையில் கம்பும் கத்தியும், கண்ணில் வெறியும் ஆத்திரமும்… நேரே இவனை நோக்கி ஓடி வரவும் பகீரென்றது.

இவன் அருகே உட்கார்ந்திருவனைப் பாய்ந்து சட்டையைப் பிடித்து இழுத்து அடி. அடியான அடி. கொட்டையைப் பிதுக்கிட்டாங்க. கடையாட்கள் சுதாரித்து அவர்களைப் பிரித்திழுத்து விலக்குவதற்குள் பெரும் ரகளையாகி விட்டது.

சமாதானத்துக்குத்தான் என்று பார்த்தால், அடி பெற்றவனையும், அடி நன்கொடை வழங்கியவனையும் ‘வெளிய போங்க வெளிய போங்க ‘ என்று வெளியே தள்ளிக் கொண்டு போனார்கள். அவர்கள் அக்கறை அவ்வளவே. ரெண்டு பார்ட்டியுமே நாளை திரும்ப உள்ளே அவர்களின் வாடிக்கையாக வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சாக்கிரதை.

இந்த விவகாரத்தில் வண்ணை வாங்கிய சரக்கு முழுதும் தரையில் வீணாகி விட்டது. தம்ளர் உடைந்து அதற்கும் தண்டம் அழுக நேர்ந்தது. பெரிய மீசையைப் பார்த்தபடி எடுத்துக் கொடுத்தான்.

கூடம் முழுசும் விரக்தி விரவிக் கிடந்தது. பெண்டாட்டி செத்து பிணம் வந்து சேராத அந்த இரவின் வெறுமையை நினைவூட்டியது சூழல். என்ன மோசமான இரவு. பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து உள்ளே எல்லாமே சிதறிக் கிடந்தது. எதுவுமே மிச்சமில்லை போல. சித்தெறும்பைக் கிண்ணத்துக்குள் கவிழ்த்து அடைத்தாற் போல.

தாளவியலாத் தனிமை. எனக்கு யாருமே யாருமே இல்லவே இல்லை. கூட கட்டிக்கொண்டு அழ யாராவது தேவை தேவை என்கிறது மூளை அரித்தாற்போல. இந்த நாய்ங்களில் யாரை நம்ப ?

‘ஏம்மா அழுவற ? ‘ என்று வந்தவன் ‘உம் பொண்டாட்டி அழகா ? ‘ என்கிறான். ‘எம் பொண்டாட்டியை விடவா ? ‘ இவன் பெண்டாட்டியை நான் எப்ப பார்த்தேன்… பார்க்க வேண்டும் போலிருந்தது. பின் ஏன் குடிக்க வந்தான் என்றிருந்தது. அடேய் அது அவம் பிரச்னை. நம்ம கதி இன்னா அத்த யோசி…

பாட்டிலைப் பார்த்தான். தம்ளரைப் பார்த்தான். பசுவும் கன்றும், அந்தக் கால காங்கிரஸ் சின்னம். இப்ப இதையே சின்னமா வைக்கலாம். பாட்டிலும் தம்ளரும். சட்டென்று பாட்டிலை உடைத்து ஊற்றிக் கொண்டான். அப்படியே முழு ஆவேசமாய்க் கொட்டிக் கொண்டான். டங்கென்று தம்ளரை வைத்தான். உள்ளெல்லாம் எரிந்தது. தொண்டையெல்லாம் எரிந்தது. கடும் புளிப்பு. ஏவ்… என எக்களித்து வந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டான்.

கூடம் ஈ மொய்த்துக் கிடந்தது. தரையில் ஒரு மிக்சர் பொட்டலாம். ஒரு பாட்டில் உருண்டு கிடந்தது. சற்று தள்ளி சற்று நீள சைஸ் பாட்டிலைப் போலவே ஒரு இந்நாட்டு மன்னன். குழல் விளக்கு ஒன்று எரிந்தும் எரியாமலும் மக்கர் செய்கிறது. குடிகார மூளை போல.

அப்போதுதான் அந்தக் கிழவியைப் பார்த்தான்.

சிக்கு பிடித்த உடை. எண்ணெய் காணாத தலை. வெறுமையான கண்கள். தலையை வறட் வறட்டென்று சொறிகிறதைப் பார்த்தால் நம்ம தலையே புண்ணாயிரும் போல. அத்தனை வெறுப்பு இருந்தது அந்தச் சொறியலில். வெள்ளைத் தலை. கற்றாழை நார் போல.

சிங்கராஜ் அவளை நோக்கித் தள்ளாடிப் போனான். அவள் எதிரே நின்றான். அவளைப் பார்த்தான்.

‘துன்றதுக்கு எதுனா வேணுமா ? ‘ என்றான் சிங்கராஜ்.

‘வேணா… ‘

‘வேணாமா! ‘ என்றான் சிங்கராஜ் ஆச்சரியத்துடன். ‘பின்ன ஏன் இங்க நிக்கிறே… வீட்டுக்குப் போ. ‘

‘வீடு இல்ல ‘ என்றாள் அவள். துாக்கிவாரிப் போட்டது.

போதையே அடங்கி விட்டாப் போல உணர்ந்தான்.

அவளையே பார்த்தான். வற்றி உலர்ந்த, ஈ மொய்க்கிற கண்கள். உடம்பெங்கும் காலம் உழுத வரிகள். பாயைச் சுருட்டினாப்போல உடம்பு.

‘உனக்கு இன்னா வேணும் ? ‘

‘சாராயம் வாங்கிக் குடு. ‘

‘என்ன சொல்றே ? ‘ என்றான் அவள் அயர்ந்து போய். அவள் ஈயென்று இளித்தாள்.

‘மாட்டேன் ‘ எனத் தலையாட்டி மறுத்தான்.

‘போ பின்ன பேசாம… பெர்சாப் பேச வன்ட்டான். ‘

‘வா இட்லி வாங்கித் தாரேன். ‘

‘வேணா. நீ போ. ‘

‘ஏ கெழவி, நான் சொல்றதக் கேளு… ‘

‘போடா ‘

‘சரி, உனக்கு சரக்கு வாங்கித் தாரேன் ‘ என்றான் சிங்கராஜ். அவள் திரும்பவும் சிரித்தாள். சந்தோஷமாய் இருந்தது அவள் சிரிப்பதைப் பார்க்க.

ரொம்பப் பழகியவள் போல அவள் தம்ளரைக் கூட எடுத்துக் கொள்ளாமல் பாட்டிலோடு அப்படியே கடகடவெனக் கவிழ்த்துக் கொண்டாள். ஆச்சரியமாய் இருந்தது.

‘நீ மவராசனா இருக்கணும்… ‘ என்றாள் வாயைத் துடைத்தபடியே. ‘பாக்க நீ எம் மவன் மாறிக் கீறே… ‘

‘உம் மவன் என்ன செய்யிறான் ? ‘

‘செத்துட்டான் ‘ என்றாள் அவள். அவள் குரலில் கசப்பு வழிந்தது.

அதிர்ச்சியாய் இருந்தது அதைக் கேட்க. ‘அப்ப சோத்துக்கு என்ன பண்ணுவ ? ‘

‘அதை ஏன் நீ கேக்குற ? ‘ நீ நாஷ்தா வாங்கித் தரப் போறியாங் காட்டியும் ? ‘

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். ‘தரேன் ‘ என்றான் அவன்.

‘நீ என்ன எம்ஜியாரா ? ‘ என்று திரும்பவும் சிரித்தாள். சிரிக்கையில் அவள் எவ்வளவு அழகாய் இருந்தாள்.

‘எங்கூட வரியா நீ ? ‘ என்றான் திடாரென்று.

‘எங்க ? ‘

‘என் வீட்டுக்கு ‘

‘வேணாம் ‘

‘ஏன் ? ‘

‘ஒம் பொஞ்சாதி திட்டும்… ‘

‘எனக்கு யாருமே இல்ல ‘ என்றான் அவன். அதற்குள் அழுகை வந்து விட்டது. அவள் அழவில்லை. அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

‘நான் ஒன் மவன்தானே ? ‘ என்றான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. ‘அப்ப என் கூட வா ‘ என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

தொ ட ரும்

அடுத்த வாரம், வீட்டில்

நன்றி கல்கி வார இதழ்

storysankar@rediffmail.co

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்