இருந்ததனால்….

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

சாரங்கா தயாநந்தன்


மெல்லச் சிரித்தேன். அவன் சிரித்தது போல் இருந்ததனால். சில வாரங்கள் தொடர் காத்திருப்பு அவனுக்கு ,எனது வருகைக்காக. என்சிரிப்பு அல்லது மென்னகை ஒரு அன்பை ஏற்படுத்தும் முன்னேற்பாடாய் இருந்திருக்கலாம். அவனது முகம் பளீரிட்டதாயும் விழிகள் ஒளி கொண்டது போலவும் இருந்தது. பஸ் நகர்ந்து விட்டது.

மறுநாள். அதே இடம். என் விழிகளின் தேடல். நிச்சயமாய் அவனுக்காகத்தான். என் மனம் என்னைக் கேலித்தது. புரிந்தும் ஒதுக்கினேன். வீதியோரத்தே பஸ் கண்ணாடித் துண்டங்களை ஊடறுக்கும் பார்வையுடனான அவன். என்னைத்தான் தேடியது போல் இருந்ததனால் விழி கலந்தேன். விழிகளில் ஒரு மென்மையான சினேகம். அது உயிர்ப் பாக இருந்ததனால் கையசைத்தேன். நயனபாஷை. அனுபவித்தவர்கள் மட்டும் புரியத்தக்க சுகம். விலகினோம்.

ஒரு மாத விலகல். அதே இடம். உடையலங்காரத்தில் இருவரதும் அக்கறை. எனக்குப் பிடித்தமான மென்னீலத்தில் ஷேர்ட்டும் கருப்பில் ஜீன்ஸும் அணிந்த அவன். அவனுக்கும் பிடித்தமாக இருக்கக்கூடிய கரும் பச்சையில் சட்டை அணிந்த நான். சில விஷயம் கதைக்க வேண்டுமாய்ச் சொன்னான். அவன் கண்களில் ஆழ்ந்த அன்பு இருந்ததனால் ‘சரி ‘த்தேன். ‘இப்போதெல்லாம் எனக்குப் பிடித்ததே தனதும் ‘ என்றான். ஒருவர் இன்னொருவர் போலேயே ஆகமுடியுமா ? வியந்தேன்.

முதற்பார்வையிலேயே ‘தனக்காய் நிச்சயிக்கப்பட்ட உறவு ‘ போல இருந்ததனால் ‘முயற்சித்ததாய்ச் ‘ சொன்னான். சொர்க்கத்திலாம். நான் கூட சிறகில்லாத தேவதையாம். மெய் புளகித்தேன். குடும்பம்,கல்வி,அந்தஸ்து,கெளரவம்,சாதி அனைத்தும் சொன்னான். பதிலினேன். கவனிக்காத அலட்சியத்தோடு கவனித்தேன். ‘தோம் ‘ ஆகவும் இருக்கலாம்.

பெற்றோரோடு வீடு வருவதாகச் சொன்னான். அன்பின் சேர்வில் தாமதம் கூடாதென்றான். அது நியாயம் போல் இருந்ததனால் ஆமோதித்தேன்..

என்வீடு. அவனும் இல்லை…. அவரும் கூடவே பெற்றவரும். ஒற்றை மகன் .வேண்டியது மறுத்ததில்லை. இப்போது வேண்டுவது உங்கள் பெண் என்றார்கள். என்னில் விஷேஷமில்லை. ஒரு பொம்மையானேன். எங்கோ நெருடிற்று. நிலத்தை அடிக்கடி பார்க்காது அவர்கள் முகம் பார்த்தேன். புன்னகைத்தேன். புன்னகை உண்மையில் தேனாகும். இனித்தது. சந்தோஷித்தோம்.

என் பெற்றவரதும் சம்மதம், நல்ல இடம் போல இருந்ததனால். இனிய உணவுகளையும் தெரிந்த பதில்களையுடைய கேள்விகளையும் பரிமாறினோம். விலகினார்கள், கெளவிக் கொண்ட எம்மிருவர் கண்கள் இழுபட. தொடர்ச்சி வழமையே, வாழ்வுப் பாதையாக இருந்ததனால்.

வேகமாய் உதிர்ந்த ஐந்து வருட இதழ்கள். பஸ்ஸில் இவரும் நானும். அருகருகே. இரு குழந்தைகள். அதே இடம். முன்பொருநாள் எம் சந்திப்பு நிகழ்ந்த பஸ் தரிப்பு. உற்சாகமானேன். எனதே அவரதும் உணர்வு. இல்லையா ? முகம் பார்த்தேன். மலர்வற்ற சாதாரணம். இப்போது புரிகிறது,அப்போது புரியப்படாமலும் சில இருந்ததென. முரண். சகித்தேன். எமது நாட்டில் விட்டுக்கொடுக்கும் பண்பு பெண்களுக்கே உரியதாய் இருந்ததனால்.

பார்வை வலயத்துள் அருகருகே இருவர். பெண் சிரித்தது போல் இருந்தது. நம் கதை தொடருமோ ? இவர் என்னைப் பார்த்தார். சிரித்தார். விஷயம் பகிரும் அர்த்த்ச்சிரிப்பு. காதல் போல் இருப்பதாய்ச் சொன்னார். பிள்ளை மடியிலிருந்து வழுக்கினான். தூக்கிச் சரிப்படுத்திய பொழுதில் என்னுள் கேள்வி. எமது ஆரம்பமும் காதல் தானா ? அல்லது காதல் போல் இருந்ததா ? கேட்கவில்லை. வாழ்க்கை அன்பு நிறைந்த சந்தோஷம் போல் இருந்ததனால்.

****

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்