து ணை -பகுதி 8 / குறுநாவல்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

ம.ந.ராமசாமி


—-

இரண்டு நாட்களாக அவனைக் காணவில்லை. என் மனதுள் அவனைப் பற்றி ஒரு திட்டத்தைத் தயாராய் வைத்துககொண்டுி காத்திருந்தேன்.

மூன்றாம் நாள் மாலையில் வந்தான். உட்கார்ந்தான். ‘சார்! அப்பாகூட சண்டை ‘ என்றான்.

‘நல்ல முடிவுக்கு நீ வரதா இல்லே… ‘

‘என்மேல குற்றம் இல்லை சார்! அப்பாதான் தொணதொணன்னு எதாச்சும் சொல்லிண்டே இருக்கார்… ‘

‘அப்பான்னில்லை, உன்னைச் சுத்தி எல்லாருமே அப்பிடி ஆயிட்டாங்க! ‘

‘இன்னிக்குக் கேட்டுட்டேன்- என்னை எதுக்காகப் பெத்தீங்கன்னு கேட்டுட்டேன் ‘

‘அடப்பாவி! ‘

‘என்னைக் கேட்டுண்டு என்னை நீங்க பெத்திருந்தீங்கன்னா, உங்களுக்கு நான் கடமைப் பட்டிருப்பேன். நீங்களே உங்க விருப்பத்துக்கு என்னைப் பெத்துப் போட்டாங்க… கடமைன்னு சொல்லி என்கிட்ட காசை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… அப்டில்லாம் எனக்கு கடமை கிடையாதுன்னு சொல்லிட்டேன்!… ‘

‘பாவி பாவி, அந்த ஒரு கேள்வியைத்தான் எந்தத் தாய் தந்தையரிடத்தும் ஒரு மகன் கேட்கக் கூடாது. நாளைக்கு உனக்கு ஒரு மகன் பிறந்து, அவன் இப்டி ஒரு கேள்வி கேட்டான்னா என்ன பதில் சொல்வாய் ? ‘

‘பாத்தேளா… அதுக்காகத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்றேன்! ஒரு குழந்தையைப் பெத்து, அதை நல்லபடியா வளர்த்து- ஆளாக்கி- படிக்க வெச்சு- அதுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து- நல்ல வேலைலயும் அதை அமர்த்த எனக்கு சாமர்த்தியமும் பத்தாது… எனக்கு அதுக்குப் பணமும் இல்ல. ‘

சிறிது நேரம் பேச்சற்று இருந்தேன்.

‘ராமகிருஷ்ணன், இந்த உலகம் இனியது… ‘

‘இல்ல சார்! துன்பமயமானது! ‘

‘உனக்குதான் தெரியுமே! துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை… ‘

‘அது சர்த்தான் சார்! இந்த உலகத்தில் துன்பம் ஜாஸ்தி. இன்பம் குறைச்சல்! ‘

‘அடேடே! அப்டிங்களா சார்! ‘

ராமகிருஷ்ணன் என்னை நிமிர்ந்து பார்த்தான். என் கிண்டல் மனதில் உறுத்தியிருக்க வேண்டும்.

‘ஆமா சார்! இந்த உலகத்தை நல்ல உலகமாப் பண்ணாமல், இன்பமயமான உலகமாப் பண்ணாமல், இந்தப் பெரியவங்க ஏன் சார் குழந்தை பெத்துக்கணும்! ‘

‘ஆகா ‘ என்றேன். ‘நீ சொல்றது ரொம்ப சரி ராமகிருஷ்ணன். அழகான உலகமாப் பண்ணி, குழந்தைகளோட சந்தோஷத்துக்குத் தேவையானதைப் பூரணமா வெச்சி, அவர்கள் அதிகம் கஷ்டப்படாமல் வாழ வழி வகுத்த பிறகுதான், குழந்தைங்களைப் பெறணும்… அதுவரை பெறக்கூடாதுதான்! ‘

ராமகிருஷ்ணன் என்னை நோக்கினான்- யதார்த்தமாகச் சொல்கிறேனா, எதுவும் உட்பொருள் வைத்து குதர்க்கம் பேசுகிறேனா என்கிற சந்தேக நோக்கு.

‘என் தகப்பனார் எனக்கு என்ன செய்தார் ? சின்ன வயதில் என்னை எதுக்கெடுத்தாலும் அடிப்பார். சரியான சாப்பாடு, வயிறு நிறைஞ்ச சாப்பாடு கிடையாது. அப்டிக் கிடைச்சாலும் திருப்தி இருக்காது…

‘முண்டமே ‘ன்னு எப்ப பார், வசைகள்தான் அவர் வாயில் வரும்… ‘

‘நான் கல்யாணம் பண்ணிண்டு, அதை இப்பிடி வளர்க்கும் நிலைமை எனக்கு வேணாம் சார்! ‘

‘சரிப்பா. இப்பிடி ஒவ்வொருவரும் நினைச்சுண்டு, கல்யாணம் பண்ணிக்காமல், குழந்தை பெத்துக்காமல் இருந்தால், என்ன ஆகிறது ?… உலகத்தை சீர் திருத்தின பிறகுதான் கல்யாணம்னா அது நடக்கிற காரியமா ? ‘

அவன் என்னைப் பார்த்தான்.

‘இவ்ளோ பேசறியே ராமகிருஷ்ணன். உனக்கே அரசியல் தெரியாதுன்னு ஒத்துக்கறே. அதுல ஆர்வமுங் கிடையாது. தேர்தலின் போது அதை பகிஷ்காரம் பண்ணியாறது… ஓட்டுப் போடறதில்ல.

அப்டியே ஒதுங்கிப் போயிட்டா, பின்ன உலகத்தை எப்பிடி அழகா, நம்ம குழந்தைக்கு ஏத்ததா வச்சுக்க முடியும் ? எப்பிடி நாட்டை சீர் திருத்த முடியும் ?… அதெல்லாம் அரசியல்லே பங்கேற்றாதான் முடியும்.

நல்லவங்களாப் பார்த்து ஊராட்சி ஒன்றியம்- சட்ட மன்றம்- நாடாளு மன்றம்னு நாம அனுப்பி வைக்க வேணாமா ?

ஊர்ல உலகத்துல நல்ல மாற்றங்கள் வரது ஒருநாள்ல ஒரு மாசத்துலன்னு வர்றது கிடையாது! மெதுவாத்தான் நடக்கும்.

அதான் நீ சொன்னியோல்யோ, எல்லாத்தையும் பகவான் பார்த்துப்பான்னு… அது என்ன சுலோகம். /கர்மண்யேவா அதிகாரஸ்தே மாபலேஷு சுதாசன மா கர்மபலஹேதுஹு பூர்மா தே சங்கோ அஸ்த்வ கர்மணி/… ‘

ராமகிருஷ்ணன் சிரித்தான். ‘நம்பறீங்களா சார் ‘

‘என்ன ? ‘

‘இல்ல. கீதைல சொன்னதை யெல்லாம் நம்பறீங்களான்னு கேட்டேன் ‘

‘ஏன் ராமகிருஷ்ணன். நீ நம்பலியா ? ‘

‘உங்ககூட பழக ஆரம்பிச்சதில் இருந்து ஒண்ணொண்ணா நம்பறதை விட்டுட்டேன்! ‘

‘ரொம்ப நல்லது. ஒண்ணை நம்பறதை விட்டுட்டால், இன்னொண்ணை கெட்டியாப் பிடிச்சுக்கணும்… ‘

‘அப்பிடி நீங்க ஒண்ணும் எனக்குச் சொல்லித்தரல்லியே… ‘

‘ஓ… ஓகோகோ! சமாச்சாரம் அப்பிடிப் போறதா… அதான் உங்க சோர்வுக்கும் விரக்திக்கும் காரணமா ? புரியறது ராமகிருஷ்ணன்! ‘

—-

தவறு என்மீதுதான். அதை நம்பாதே. இதை நம்பாதே. இது மூட நம்பிக்கை. கடவுள் கிடையாது… என்றெல்லாம் சொல்லி அவன் மனதை மாற்றி, அந்த மனதில் இருந்த நம்பிக்கைகளை எல்லாம் களைந்து எறிந்த பிறகு, அந்த மனதில் சூன்யம் விழுந்திருக்கிறது. மனசு காலியாக இருக்கிறது.

காலியன மனதில் விரக்தி, சோர்வு சூழாமல், மகிழ்ச்சியா அடைத்துக் கொள்ளும் ?

அவனுக்கு அரசியல் கற்றுத் தந்திருக்க வேண்டும்! இலக்கியம் கலைகளில் ஆர்வத்தை ஊட்டி யிருக்க வேண்டும்… மனிதர்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்க வேண்டும். மனிதாபிமானத்தை உயிர்களிடத்தில் அன்பை அவனிடம் வளர்த்திருக்க வேண்டும்.

பாரதியின் கவிதைகளைப் படித்துக் காட்டி, ஒவ்வொரு சொல்லும் எப்படி நகைகளில் பதிக்கும் வைரமாய், வைடூர்யமாய், புஷ்பராகமாய், கோமேதகமாய்ப் பார்த்துப் பார்த்துக் கட்டப் பட்டிருக்கிறாற் போல, வந்து விழுந்து ஜொலிக்கிறது, என்பதை நான் எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

இவற்றை நான் செய்யத் தவறி விட்டேன்.

ராமகிருஷ்ணன் குடும்பம் நடுத்தர வர்க்கம். நடுத்தர வர்க்கத்திலும் ரொம்பக் கீழான நடுத்தர வர்க்கம். அடுத்த மாதம் ஒண்ணாந் தேதி சம்பளம் வரும் என எதிர்பார்த்து- நம்பி- இன்று உணவுத்தட்டின் முன் அமர்கிறார்கள்.

இத்தனைக்கு நடுவில் மத்த குழந்தைகளை ஓரளவு நல்ல முறையில் கரையேற்றவும் செய்திருக்கிறார்கள் ராமகிருஷ்ணனின் பெற்றோர்…

நான் – என் குடும்பம் அப்பிடியில்லை. என் குடும்பம் வேறு மாதிரி. நானும் நடுத்தர வர்க்கம்தான். ஆனால் நடுத்தர வர்க்கத்தில் மேல்தட்டு. கம்யூனிஸ்டுகள் சொல்வார்களே. அந்த பெட்டிபூர்ஷ்வா வர்க்கம்.

மாத ஊதியம் வருகிறது. ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து வட்டி கிடைக்கிறது. தோஹாவில் இருந்து மகனும் பணம் அனுப்புகிறான்… செலவு பண்ணியது போக மிச்சம் கண்டு சேமிப்பு வளர்ந்து வருகிறது. மாசக்கடைசி என்கிற திணறல் கிடையாது.

என் குடும்பத்துக்கு வேண்டிய வசதிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் குழந்தைகள், என்னை ஏன் பெற்றாய்- என்று கேள்வி கேட்கக் கூடாத அளவுக்கு, அப்பிடி ஒரு கேள்வி அவர்கள் மனதில் எழாத அளவுக்கு- அவர்களின் தேவையை உணர்ந்து நான் வளர்த்திருக்கிறேன்!

—-

‘ராமகிருஷ்ணன், வர்ற ஞாயித்துக்கிழமை உனக்கு வேற ஜோலி இருக்கா ? ‘

‘இல்லே. ஏன் சார் ? ‘

‘அன்னிக்கு இங்கே உனக்கு விருந்து! ‘

‘எதுக்கு சார் அதெல்லாம்… ‘

‘அட உன்னைச் சாக்கிட்டு எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்! ‘

‘முன்னே மாதிரி எனக்கு சாப்பாட்டுல இப்பல்லாம் அத்தனை மோகம் இல்லே சார்! ‘

விரக்தி! புரிகிறது. வாழைப்பழம் வேணாம் என்று சொல்லும் குரங்கு!

‘பரவாயில்லை! ஒருநாள் என்னுடன் உட்கார்ந்து சாப்பிடு! சண்பம் நல்லா சமையல் பண்ணுவாள். பிசிபேளாபாத் பண்ணச் சொல்றேன்… உனக்கு எது பிடிக்கும். ‘

‘பிடிக்கும்னு ஏதும் இல்லை சார்! பிடிக்காததும் எதுங் கிடையாது! ‘

‘வேண்டுதல் வேண்டாமை இலான்!… அப்பிடியா ? ‘

‘சரி சார்! அப்ப நான் வரவா ? ‘ எழுந்தான்.

‘ஞாயிற்றுக்கிழமை ராமகிருஷ்ணன். பகல் பதினோரு மணிக்குள்ள எப்ப வேணா வந்திறலாம். சீக்கிரம் வந்தா நாம எதாச்சும் பேசிண்டிருக்கலாம்… ‘

‘வரேன் சார். நீங்க இத்தனை சொல்றேள். வராத எப்பிடி இருக்க முடியும் ? ‘

ராமகிருஷ்ணன் சென்றான். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய நடை இல்லை. சோர்ந்த நடை. லட்சியத்தை நாடிச் செல்லாத நடை. துவண்ட நடை.

—-

ராமகிருஷ்ணனின் வருங்கால மனைவியைப் பள்ளிக்குச் சென்று பார்த்து, ஞாயிற்றுக்கிழமை அன்று என் வீட்டில் விருந்துக்கு வரச் சொன்னேன். தயங்கினாள். அவளுக்கு நான் நல்லதுதான் செய்வேன், என எடுத்துச் சொன்னேன்.

பெற்றோரிடம் சொல்லிவிட்டு வருவதாகச் சொன்னாள்.

அவள் இல்லத்துக்குச் சென்று பெற்றோரிடம் சொல்லி, அவர்களது அனுமதி பெற்று அவளை அழைத்திருக்கலாம். அதுதான் முறை. அவசியம் காரணமாகச் செய்யவில்லை.

விருந்து என்றால் அவர்களையும் அழைக்க வேண்டியிருக்கும். அப்பறம் ராமகிருஷ்ணனின் பெற்றோரையும் அழைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் விருந்துக்கு வருவது என் திட்டத்துக்கு ஏற்றது அல்ல.

என் திட்டம் அல்ல அது. சண்பகத்தின் திட்டம்.

—-

/இறுதிப் பகுதி… அடுத்த வாரம்

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி