ஒத்தை…

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

பத்ரிநாத்


பெரும் மள வர்ற மாதிரியும் இருக்கு, வராத மாதிரியும் இருக்கு.. இப்படியே போக்குக்

காட்டிக்கிட்டு இருக்கு.. மொகச் சவரம் பண்ண கடைக்குப் போவணும்.. போவ முடியுமா..

முடியாதான்னு தெரியல.. நாளைக்கி செவ்வாகிளம.. முடியாது.. இன்னிக்கிப் போனாத்தான் உண்டு.. இப்பெல்லாம் சாயங்காலம் போவ முடியறதுல்ல.. போன மாசத்திலேர்ந்து பேத்திய பள்ளிக் கூடத்திலேர்ந்து கூட்டிக்கிட்டு வர்ற வேல வந்துருச்சி.. ஆட்டோக்காரன். அம்பது ரூவா ஏத்திட்டான்.. மருமவ ஆட்டோவ நிறுத்திட்டா..

‘ ‘ஒங்கப்பா போவட்டுமே.. சும்மா இருந்தா அவருக்கு போரடிக்காதா.. ‘ ‘, ன்னு பையன்கிட்டப் பேசிட்டு இருந்தா.. ‘ ‘ஏதுக்குடி.. அம்பது ரூவாய அளுதுடுவோம்.. வயசான காலத்தில அவர ஏன் போவச் சொல்லணும்.. ‘ ‘,ன்னு கேட்டான்.. இது அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனையா ஆக வேண்டாம்னுதான், ‘ ‘சரிடா.. நானே போறேன் ‘ ‘,ன்னு சொன்னேன்.. என்ன கெட்டுப் போவுது.. எம் பேத்திதான.. நாதான செய்யணும்.. வேற யார நம்பறதுன்னு சமாதானம் சொல்லிக்கறேன்..

அன்னிக்கி மத்தியானம் கொஞ்ச அசந்தாப்ல இருந்திச்சு.. தூங்கிட்டேன்.. அலாரஞ்சனியன் வேற வேல செய்யல.. திடுக்குன்னு முளிப்பு தட்டி எளுந்து பாத்தா, மணி நாலு.. மூணரைக்கே பள்ளிக் கூடம் விட்ருவாங்க.. அரக்கப் பரக்க எளுந்து ஓடினேன்.. பேத்தி ஒண்டியா வெளியே நிக்குமே..

அன்னிக்கி பேத்தி ஒரே திட்டு..

‘ ‘என்ன தாத்தா.. எல்லாரும் என்னய என்னய பாக்கறாங்க.. அசிங்கமாக இருக்கு.. எங்க போயி தொலஞ்ச.. ‘ ‘,ன்னுது..அழுக.. நா என்னத்தப் பண்ண.. ? வெரசாத்தான் வந்தேன்.. எளுபத்திஎட்டு வயசுக் கிளவன் ஓடி வர முடியுமா.. ? ரோடுங்க வேற குண்டுங்குளியுமா.. சொன்னா எம் பேச்ச கேக்கவேயில்ல.. சமாதானம் பண்ணி அளச்சிட்டு வந்தேன்..

வெள்ளைக்காரங்க காலத்திலேர்ந்து எது மாறிச்சோ என்னவோ.. இந்த ரோடுங்க மாறவேயில்ல.. ஆனா மனுசங்க மாறித்தான் போயிட்டாங்க.. இப்ப எதப் பத்தியும் யாருக்கும் கவலயே இல்ல.. காந்தி நேரு எல்லாரும் ஏதோ இவங்க பக்கத்து வீட்டுக் காரங்க மாதிரி ஆயிப் போச்சு.. நாங்க கடவுளாப் பாத்தா மனுசங்க இப்ப கடச் சரக்கா போயிட்டாங்க..

மருமவ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில கெடந்தாளே, அப்ப நாதான் சோறு கொண்டு போவேன்.. அங்க ஒக்காந்திருந்த போது, ஒரு பையன் என்னய கேட்டான், ‘ ‘தாத்தா.. ஒங்க பழய நாட்களப் பத்திச் சொல்லுங்க.. கேப்போம் ‘ ‘,ன்னான்..

இவன் பொழுது போறதுக்கு வேணும்னா எங்கதய கேப்பான்.. ஆனா எனக்கு அப்படியா.. ?

எத்தன பிரச்சனங்க.. எத்தன மனுசங்க.. எத்தன இழப்புங்க… பெருமூச்சு விட்டுட்டே இருக்க வேண்டியிருக்கு.. நா, சேது, ராமச்சந்திரன் மூணு பேரும் மாசத்துக்கு ஒரு மொற எங்கையாச்சும் கூடிப் பேசுவோம்.. பழய நெனப்புங்கள பேசுவோம்.. நேரம் போவறதே தெரியாது..

நாலு மாசம் முன்னாடி, ராமச்சந்திரன் செத்துப் போயிட்டான்.. போன மாசம், சேது, பையனுக்கு வேற ஊர் மாத்தல் ஆயிருச்சுன்னு போயிட்டான்.. பொண்டாட்டிப் போய்ச் சேர்ந்தப்பறம் ரொம்பவே வெறிச்சுன்னு ஆயிருச்சு.. ஏதோ எப்பவோ இந்த மூணு சிநேகிதங்களோட பேசிட்டு இருந்தேன்.. அதுலயும் மண்ணு விளுந்திருச்சு..

போய் மூலையில மொடங்கின மாதிரி ஆயிட்டேன்.. என்னத்தையோ அச போட்டுட்டு ரூம்புல மொடங்கிப் போயிட்டேன்.. என்னென்னவோ நெனப்பு வந்து வாட்டும்.. எங்கய்யா, ஆத்தா நெனப்பு வந்தா ஆளப் போட்டுக் கொன்னு எடுக்கும்..

எப்பேர்பட்ட மனுசங்க அவங்க..

எங்கய்யா சொல்லிட்டே இருந்தாரு, ‘ ‘ எலேய்.. வெவரமா இரு.. வெவசாயத்தப் பாரு ‘ ‘,ன்னு சொல்லுவாரு.. நா, பட்டணத்துக்குப் போவேன்னு அடம் புடிச்சுட்டு இருப்பேன்..ஆத்தாதான் செல்லம் கொடுக்கும்.. ‘ ‘புள்ளய அவ இஸ்டத்துக்கு விடுங்க..ஒரே புள்ள.. ‘ ‘,ன்னு சொல்லும்..

பட்டணத்துக்கு வந்துட்டேன்..

எம் மொத வேல, ஒரு வக்கீலுகிட்ட, குமாஸ்தாவா..

வக்கீலய்யா, பெரிய நாமம் போட்டுக்கிட்டு இருப்பாரு.. செக்கசெவேல்ன்னு, வளர்த்தியா..ரொம்ப கண்டிப்பானவரு.. அவரு ஆபீசுல இருக்காரா இல்லையான்னு கேக்கவே வேணாம்.. இருந்தா, ரூம்புல பெரும் சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாரு.. இங்கலீசு தண்ணி பட்ட பாடு..

எங்கூட சின்னசாமின்னு ஒரு பய வேல பாத்துக்கிட்டு இருந்தான்.. இப்போ இருக்கானா செத்துட்டானான்னு தெரியல.. அவன் திடார்னு வேற வேலக்கித் தாவினான்.. எங்கிட்ட மட்டும்தான் சொன்னான்.. ‘ ‘எலேய்.. நீயும் வேற வேலைக்கிப் போயிரு.. ரொம்ப நாளு இங்க குப்ப கொட்ட முடியாது ‘ ‘,ன்னான்.

அவன் சொல்லாம கொள்ளாம வேலைய விட்டு நின்னுட்டாதால, ரொம்பவே கடுப்பாயிட்டாரு, வக்கீலய்யா.. டைப்ரைட்டிங் மிசின ஒளிச்சு வச்சுட்டு, போலீசுல பிராது குடுத்தாட்டாரு.. வெலவெலத்துப் போனேன்..

கொஞ்ச நாளுக்குப்பறம் எனக்கு போஸ்டாபீசுல தற்காலிகமா வேல கெடச்சுது..வக்கீலய்யா ஏத்துக் கிடுவாரோ மாட்டாரோன்னு பயந்து போனேன்.. மெதுவாப் போய்ச் சொன்னேன்.. என் நல்ல நேரம்.. பிரச்சனயில்லாம அனுப்பிட்டாரு..

அந்தக் காலத்தில போஸ்டாபீசு உத்யோகம் தற்காலிகமா கெடச்சாலும், ஏதோ கவர்னர் பதவி மாதிரி அப்ப இருந்துச்சு.. இப்ப, எல்லாருக்கும் வெளிநாட்டு வேலைக்கித்தான் அலையுறாங்க.. அப்படி ஒரு வெளிநாட்டு மோகம் வாட்டியெடுக்குது.. எம் பையன் சிநேகிதங்க பல பேரு வெளிநாட்டுல இருக்கறதால, இவனுக்கும் இருக்கற வேலைய வுட்டுப் போட்டு வெளிநாட்டுக்குப் போவப் போறானாம்.. மருமவளும் ஒத்து ஊதறா.. எங்கப் போயி முடியப் போவுதோ.. ?

என்னய என்னப் பண்ணப் போறாங்கன்னு தெரியல.. ஏதாச்சும் ஆஸ்ரமத்தில வுடுவாங்கப் போல இருக்கு.. எம் பேச்சு எங்க எடுபடப் போவுது..கேட்டா எடக்கா பதில் வரும்.. ம்ம்.. ஒத்தப் புள்ளையா இருந்தா இதான் கதி.. அண்ணனோ தங்கச்சியோ இருந்தா அவங்க வூட்லப் போயி விளுந்துறலாம்..

அது என்னமோ தெரியல..எங்க வம்சத்திலேயே எல்லாரும் ஒத்த மரங்கதான்.. நானு. எங்கய்யா, ஆத்தா அவ வூட்ல ஒரே பொண்ணாம்.. அதைப் போல எம் மவன் எனக்கு ஒத்ததான்.. எம் பேத்தி.. எல்லாரும் ஒத்தையாத்தான் பொறந்துருக்கோம்..

ரெண்டு நாளா ஏதோ மவனும் மருமவளும் கசமுசான்னு பேசிட்டு இருக்காங்க.. ஏதோ பிரச்சன போல இருக்கு.. என்னவாம்.. ? எங்கிட்டச் சொல்ல மாட்டாங்க..எங்கிட்ட எதச் சொன்னாங்க.. இருந்தாலும் எம் மனசு கெடந்து அடிச்சிட்டு இருக்கு.. வேலையில ஏதாச்சும் பிரச்சனயா.. இல்ல இந்தப் பாவி வேலையே கீலையே வூட்டுட்டு வந்துட்டானா.. ? நா கெடந்து தவிக்கிறேன்.. இவங்க என்னய ஒரு பொருட்டா மதிக்கவே இல்லை..

ஒரு வளியா தெரிஞ்சுகிட்டேன்..நல்ல விசயம்தான்.. சந்தோசமான விசயம்..மருமவ முளுகாம இருக்கு.. இதுக்குப் போயா ரெண்டு பேரும் குடி முளுகிப் போனது மாதிரி இருக்காங்க.. அட என்ன உலகமடா இது..

மவன் பெரிய குண்டத் தூக்கிப் போட்டான்.. கருவ கலைக்கப் போறானாம்.. அடுத்து பொண்ணா பொறந்தா என்ன பண்றதாம்.. கட்டுப்படி ஆவாதாம்.. அடப் பாவிங்களா.. கொடுமை..இந்தக் காலத்தில வாழ்க்கையே வரவு செலவு கணக்கு போல ஆயிருச்சே..ரெண்டாவது பொண்ணு பொறந்தா எத்தன செலவு ஆகும்னு அது வளர்ந்து படிச்சு, கலியாணம் கட்டிக் கொடுக்கறவரைக்கும் ஆவுற செலவ கூட்டிச் சொல்றான் ,மவன்.. இப்ப எல்லாம் வியாபாரப் பொருளா ஆயிறுச்சே.. ? என்னால பொறுக்கவேமுடியல.. கண்ணெதிரெ நடக்கற விசயத்தை வேடிக்கைப் பாத்துட்டு இருக்க வேண்டியதா போச்சு.. நா இதுக்கு அனுமதிக்கறதா.. ?

மொத மொறய அவங்க ரெண்டு பேருக்கும் மத்தியில போய்ப் பேசினேன்..

‘ ‘சுப்பு.. என்னப்பா இதெல்லாம்.. பொறக்கப் போற பச்ச மண்ணக் கொல்றதா.. நியாயமாடா.. நீ ஏன் இப்படி இருக்கே.. நா ஒன்னய வளர்த்த விதம் சரியில்லயா.. ? உடம்புல வலு இருக்கற வரைககும் எனக்கு ஒண்ணும் புரியல..இப்போ ஒண்டிக்கட்டையா ஆனதுக்கப்பறம் ரொம்பவே கொடுமையா இருக்குடா.. ஒரே வெறுமையா இருக்குடா..தனியா அல்லாடற மாதிரி இருக்குடா.. தற்கொலை பண்ணிக்கலாம்னு வேற தோணுது.. ஒரு பேச்சுத் துணை இல்ல.. எனக்கு ஒரு அக்காளோ, தங்கச்சியோ, அண்ணனோ எவனோ இருந்தா ஒரு ஆறுதலுக்கு வயசான காலத்தில போயி பேசிட்டு பளய நெனவுகளை அச போடலாம்.. நாதான் அதுக்குக் குடுத்து வைக்கல.. ஒனக்கும் வயசானா அதே கதிதான்.. இதெல்லாம் ஒனக்கு வயசானப்பறம் புரியும்.. ஆனா எம் பேத்திக்காவது அந்தக் கொடுமையான நெலமை வரவேணாம்டா.. பையனோ, பொண்ணோ ஒருத்தருக்கு ஒருத்தர் வயசான காலத்தில ஆறுதலா ஒரு பேச்சுத் துணைக்கு இருப்பாங்கல்ல.. யோசித்துப் பாருடா.. ‘ ‘, என்னய மீறி குரலு கம்முது..

பையன் அதிர்ச்சி ஆயிட்டாப்பல தெரியுது.., ‘ ‘அப்பா.. என்னப்பா பெரிய வார்த்த பேசறிங்க.. ‘ ‘, ன்னு சொல்லிட்டு என்னய கைதாங்கலா நாற்காலியில ஒக்கார்த்தி வச்சான்..

(2000)

prabhabadi@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்