அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

தமிழில் : ராமன் ராஜா


தக்காளிச் செடிகளுக்கு வைட்டமின் மருந்து ஸ்ப்ரே அடிப்பது ஒரு இன்பமான அனுபவம் : தூரத்து வயல்களுக்கு அப்பால் மாலைச் சூரியன் தகடு மாதிரி மண்ணுக்குள் இறங்கிக் கொண்டிருக்கையில் நான் முதுகில் ஸ்ப்ரேயர் கட்டிக் கொண்டு தோட்டத்தில் நுழைவேன். என்னைக் கண்டதுமே என் தக்காளிச் செடிகளுக்குக் குதூகலம் பிறந்துவிடும். இறை வணக்கத்திற்காக நிற்கும் பள்ளிப் பிள்ளைகள் போல் வரிசையாக நின்று என்னைத் தலையசைத்து வரவேற்கும். வாய் மட்டும் இருந்தால் கோரஸாக பாட்டுப்பாடி நடனமே ஆடிவிடும் என்று தோன்றும்.

நான் அன்புடன் அவைகளிடம் பேசியபடியே அவற்றின் இலைகளையும் காய்களையும் வேர்களையும் மருந்தினால் குளிப்பாட்டுவேன். அந்த மென்மையான மணம் கொண்ட கரைசல் சில்லென்று பட்டதுமே வாடிய இலைகளெல்லாம் பசேலென்று ஆகிவிடும்; மொட்டுக்கள் நிமிர்ந்துகொள்ளும்; தக்காளிப் பழங்களெல்லாம் இருட்டில் வைத்த நெருப்புத்துண்டங்கள் போல் ஜொலிக்கும். நான் என் தக்காளிகளை நேசிக்கிறேன்; அவைகளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

என் மனைவி லலிதா உயிருடன் இருந்தவரை அவளுக்கு இது ஒரு நிரந்தர வேடிக்கையாக இருந்தது : ‘நல்ல தோட்டக்காரர், நல்ல தக்காளி! என்னவோ பெற்ற குழந்தை மாதிரியல்லவா கொஞ்சியாகிறது! ‘ சொல்லப் போனால், அவைகள் என் குழந்தைக்கும் மேலே. அவற்றின் மரபணு வரிசைகளெல்லாம் நான் பார்த்துப் பார்த்து அமைத்தவை. பல வருட ஆராய்ச்சியின் முடிவில் விளைந்த ஜெனடிக் சாதனை. இதற்குள் எத்தனை போராட்டங்கள், எதிர்ப்புகள், கோர்ட்-கேஸ் என்று அல்லல் பட்டாகிவிட்டது!

நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவசாயமே வேறு மாதிரி இருந்தது – நான் அப்போது சின்னப் பையன். மரபணு விஞ்ஞானம் அவ்வளவாக வளராத காலம். கண்ட கண்ட பூச்சிகளும் நோய்களும் பயிர்களைப் படாத பாடு படுத்திவந்தன. பூச்சி மருந்தும் உரமும் போட்டு என்னதான் மன்றாடினாலும் விளைச்சல் இப்போது வருவதில் இரண்டு சதவீதம் கூட இருக்காது. தண்ணீர் வேறு தேவை; மழை பெய்யாவிட்டால் மொத்தப் பயிரும் காலியாகி, விவசாயிக்குத் தலையில் துண்டுதான்!

இப்போதைய தலைமுறையிடம் சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள், அந்தக் காலத்தில் தக்காளி என்றால் எல்லாமே ஒரே மாதிரி உருண்டையாக சிவப்பாக இருக்கும். நாக்கில் மழமழவென்று சற்றே புளிப்பான ஒரே சுவைதான். இப்போது என் தோட்டத்திலேயே முப்பது வகைக்கு மேல் வளர்கிறது. கரு நீல நிறத்தில் திராட்சையை நினைவூட்டும் இனிப்புத் தக்காளி – ஜுஸ் செய்தால் அருமையாக இருக்கும். ஆரஞ்சு நிறத்தில் குண்டூசித் தலை அளவுக்குப் பொடித் தக்காளி ஒன்று. (இதை ஜாக்கிரதையாகச் சாப்பிட வேண்டும் – படு காரம்.) வெள்ளரிப் பிஞ்சு மாதிரி நீளமான வெரைட்டி ஒன்று…. ஆப்பிள் போல மரத்தில் காய்க்கும் வகைக்கு ஏற்றுமதி மார்க்கெட்டில் நல்ல கிராக்கி. தரைக்கடியில் வளரும் தக்காளிக் கிழங்கு கூட இருக்கிறது.

ஒரு தலைமுறைக்குள் மரபணு விஞ்ஞானம் ரொம்பவும்தான் முன்னேறிவிட்டது. இப்போது வரும் ஜெம் பயிர்களெல்லாம் தனக்கு வேண்டிய சத்துக்களைத் தயாரித்துத் தர ஒரு பாக்டாரியா தொழிற்சாலையே வைத்துக் கொண்டிருக்கின்றன. பூச்சிகள் வந்தால் தீர்த்துக் கட்டுவதற்கு விஷச் சுரப்பிகள் உண்டு. மிகக் கொஞ்சம் தண்ணீர் போதும் – அதையும் காற்றிலிருந்தே உறிஞ்சிக்கொள்ளூம் அளவுக்குக் கில்லாடியான செடி கொடிகள்.

‘நான் தக்காளி பயிரிட்டிருக்கிறேன் ‘ என்பதே ஒரு அடையாளத்துக்காகச் சொல்லிக் கொள்வதுதான். ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு ஜீன்களை மாற்றுவது சகஜமாகிப் போன பிறகு தக்காளியாவது, வெண்டைக்காயாவது ? வேண்டுமென்றால் கத்தரிக்காயின் சுவையைப் போலவே அச்சு அசலாக உள்ள தக்காளியை உருவாக்க முடியும். அதைப் பார்ப்பதற்கு வெங்காயம் போலவோ, தாமரைப் பூ போல இதழ் இதழாகவோ அமைப்பதும் சுலபம். அதற்கு எலுமிச்சை வாசனை வேண்டுமா ? ம்….எல்லாம் ஜீன்தானே ?

மரபணு விஞ்ஞானத்தின் வீச்சையும் பலன்களையும் பார்க்கும் போது, இதையா அவ்வளவு தீவிரமாக எதிர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜீன் மாற்றப்பட்ட பயிர்களைக் கண்டு ஒரே பயம், போராட்டம், வம்பு வழக்கு என்று எவ்வளவோ ஆகிவிட்டது. மனிதர்களே இப்படித்தான் போலிருக்கிறது; முதல் ரயில் வண்டி ஊருக்குள் நுழைந்தபோது பேய் என்று கல்லை வீசி எறிந்ததும் நடந்தது…விசைத்தறிகள் வந்த போது தங்கள் பிழைப்புப் போய்விடும் என்று அதை உடைத்து எறிந்தது ஒரு கோஷ்டி.. இப்போது நினைத்துப் பார்த்தால் எல்லாம் பைத்தியக்காரத் தனமாக இல்லை ?

நான் ரிடையர் ஆகி இருபது வருடம் ஆகிறது. ஒரு மரபணு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். (இப்போது அந்தக் கம்பெனியும் இல்லை; என்னுடன் வேலை செய்த பல நல்ல நண்பர்களும் இல்லை.) ராத்திரியில் திருடன் மாதிரி பதுங்கிப் பதுங்கி லாபுக்குப் போய் ஆராய்ச்சி செய்வோம். எல்லா ஜீன் ஆராய்ச்சிகளும் ரகசியமாகவே செய்தாகவேண்டும். போராட்டக்காரர்கள் கொளுத்தி விடுவார்கள் அல்லது போலீஸ் வந்து அள்ளிக் கொண்டு போய்விடும். பல நாடுகளிலும் சட்டம் அப்படி!

அப்படி வேலை செய்வதிலும் ஒரு த்ரில் இருந்தது. புதுசாக நிறையக் கண்டுபிடித்தோம் : செடிகளைப் பேச வைக்கவில்லையே தவிர மற்ற எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தனக்கு வேண்டிய சுற்றுச் சூழலைத் தானே அமைத்துக் கொண்டு உயிர் வாழக் கூடிய செடிகளை வடிவமைத்தோம். நாங்கள் தயாரித்த ஒரு கடலைச் செடியை காதும் காதும் வைத்தாற்போல் செவ்வாய்க் கிரகத்துக்குக் கொண்டுபோய் நட வைத்தோம். ஒரு விழா இல்லை, விளம்பரமில்லை. அங்கே செழிப்பாக வளர்ந்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

ஜீன் ஆராய்ச்சியின் வரலாற்றிலேயே திருப்பு முனையாக அமைந்த என்னுடைய கண்டுபிடிப்புக் காரணம், லலிதா. அவளைக் கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்குக் கூட்டிவந்த மூன்றாம் மாதம். அந்த ஞாயிற்றுக் கிழமை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலைத் தூக்கத்தின் சோம்பேறித்தனமும் பக்கத்தில் புது மனைவியின் முயக்கமுமாக அரைக்கனவு, அரை நினைவு. அவள் உடம்பிலிருந்து வந்த அபாரமான பெண் வாசனையை நுகரவேண்டி இன்னும் நெருக்கமாகப் போனேன். ஷாம்பூவும் புதுப் புடவையும் வியர்வையும் கலந்து அவளைத் தவிர வேறு யாராலும் தர முடியாத லலிதா வாசனை. இந்த வாசனைக்குத் தானே உலகமே இத்தனை அலைகிறது, அல்லாடுகிறது ? மிருகங்கள் கூட வாசனையை வைத்துத்தான் இனப் பெருக்கம் செய்ய ஆர்வமடைகின்றன. கடைசியில் எல்லாம் வெறும் ஃபிரமோன்களின் வித்தை….வெய்ட் எ மினிட்! ஃபிரமோனா ? என் தலைக்குள் எரிந்த பல்பின் வெளிச்சத்தில் தூக்கம் சுத்தமாகக் கலைந்துவிட்டது.

என் ஐடியா மிகச் சுலபம் : மரபணுப் பயிர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள ஒரு எளிய வழி – அவர்களுக்குப் பிடித்த வாசனையில் தாவரங்களைத் தயாரிப்பது. மனிதர்களிடமிருந்து எடுத்த ஃபிரமோன்களை ஓசைப்படாமல் பயிர்களுக்குள் நுழைத்ததில், மிகமிக மெலிதான மானிட வாசனையில் அவை பூத்தன, காய்த்தன, பழுத்தன. கூடி வாழ்வதற்கும் செக்ஸுக்குமான ஆதி மனித இச்சையை அவை எங்கேயோ அடி மனதில் தொட்டுவிட, மனிதனின் சந்தேகங்களும் பயங்களும் சட்டென்று கலைந்தன. முழு மனத்துடன் அவன் மரபணுப் பயிர்களை ஏற்றுக் கொண்டான். அன்று முதல் நாங்கள் தயாரித்த எல்லா ஜெம் விதைகளும் சூப்பர் ஹிட்! பிறகு நடந்ததெல்லாம் பாடப் புத்தகம் வரை வந்துவிட்ட வரலாறு.

‘என்னடா கண்ணா ? இலையெல்லாம் வாடியிருக்கிறது ? உடம்பு கிடம்பு சரியில்லையா ? ‘ குட்டைத் தக்காளியை வருடியபடியே கேட்டேன். தக்காளி பதில் சொல்லவில்லை. கவனமாக மண்ணை நீக்கி வேர்களை ஆராய்ந்தேன். சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். குனிந்தபோது பழங்களிலிருந்து வந்த வாசனை என்னைப் பல வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்றது. லலிதா! அவளுடைய ஃபிரமோன்கள்…

திடாரென்று என் தனிமையும் ஏக்க உணர்வும் தொண்டைக்குள் மேலிட, தக்காளிச் செடியைக் கட்டிக் கொண்டு வாய் விட்டு அழுதேன்.

(Charles Dexter Ward என்ற புனை பெயரில் இந்தக் கதையை எழுதியவர் Henry Gee. கதையின் பெயர் : போர்டோ மிக்ஸர்-Bordeaux Mixture)

r_for_raja@rediffmail.com

Series Navigation

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)