நினைப்பும்.. பிழைப்பும்..

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

பத்ரிநாத்


அந்தத் தந்தியை நான் வாங்கிப் படித்த போது என் கைகால்கள் சற்று உதறல் எடுத்தது. உடலெங்கும் தவிப்பான தவிப்பு பரவியது.. பரபரப்பான சாலையின் நடுவே மாட்டிக் கொண்ட பட்டி நாயின் தவிப்பு அது.. அடுத்து என்ன செய்யப் போகிறேன். என்ன செய்ய வேண்டும் ஒரே குழப்பமாக இருந்ததது.

தந்தி செய்தி இதுதான்.. ‘ ‘….என்கிற சீட்டிற்கு நீங்கள்தான் ஜாமீன்தாராக உள்ளீர்கள். மனுதாரர் ரூ 75,000/ வட்டியுடன் கட்டத் தவறியதால், நீங்கள் உடனே அந்தத் தொகையைச் செலுத்தி சட்டரீதியான போலீஸ் நடிவடிக்கையிலிருந்து தப்பிக்கவும்.. ‘ ‘, என்று அன்புடன் வேண்டிக் கொண்டது.

எச்சிலை விழுங்கினேன்..

காலை நேரத்து அவசரத்தில் பரபரப்பாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மனைவி, தன்னுடைய ‘கட்ஷூ ‘வை மாட்டிக் கொண்டே, ‘ ‘ என்ன.. தந்தியா.. யாருக்கு… என்னவாம்.. ‘ ‘, என்றாள்ி கவலை தோய்ந்த முகத்துடன்..

சொல்லலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே, ‘ ‘ சீட்டுப் பத்தி.. சரி சரி.. நீ.. கெளம்பு, ‘ ‘ என்று அனுப்பினேன்..

அவள் புருவத்தை உயர்தியவாறு, ‘ ‘, ஒண்ணும் பிரச்சன இல்லையே.. ‘ ‘, விசனத்துடன் கேட்க, நான் மெளனமாக இருக்கவே, ‘ ‘ எனக்கு டயம் ஆச்சு.. நா ஒங்களுக்கு ஃபோன் பண்றேன், ‘ ‘ என்று வெளியே சென்றுவிட்டாள்.

மீண்டும் அந்தத் தந்தியை வெறித்துப் பார்த்தேன்.. மனுதாரர் ரூ 75,000/ வட்டியுடன்… சே… அந்தத் தந்தி கூறிய மனுதாரர், ஸ்ரீராம் என்ற என்னுடைய நண்பன். இந்தப் பிரச்சனையில் இழுத்துவிட்ட மகானுபாவன்..

யமாஹாவின் பறந்து கொண்டு, என்னுடைய சிறிய லேத் பட்டறையை பராமரித்துக் கொண்டு அதில் வரும் வருமானத்தில் பாதியை மனைவியிடம் கொடுத்துவிட்டு, மீதியை என் இஷ்டத்திற்கு செலவு செய்து கொண்டு, ஃபாரின் சிகரெட் இத்யாதிகளுடன் பேருந்து நிறுத்தங்களில் டெண்டுல்கர் கண்ணாடி மாட்டிக் கொண்டு திரிந்து தேமெனென்று இருந்த என்னை தேவையற்ற பிரச்சனையில் மாட்டிவிட்டுவிட்டான் இந்த ஸ்ரீராம் .. மனம் குமைந்தது. என் மனைவி வங்கிப் பணியில் வேறு இருந்ததால், பொருளாதாரச் சிக்கல்கள் ஏதும் இல்லாத என்னைக் கண்டு பொருமிக் கொண்டிருந்தான், நாசகாரப் பாவி.. எங்கள் ஊர்க் காரப் பயல்தான்.. முன்பு வடக்கே எங்கேயோ திரிந்து கொண்டிருந்தான்..(அங்கேயே இருந்துத் தொலைத்திருக்கலாம்).. திடார் என்று சென்னை வந்து என்னை மீண்டும் பிடித்தான். இதுதான் புதிதாய் வந்த பழசுகளை நம்பக்கூடாது..

நான் செய்து கொண்டு வந்தத் தொழிலைப் பார்த்து அவன் கேட்ட முதல் கேள்வியே, ‘ ‘ ஏண்டா இப்படிக் காசையெல்லாம் கரியாக்கற.. ‘ ‘, என்றுதான்..

‘ ‘ஏன்.. நீ கரியாக்கித் தர்றேன்னு சொல்றியா.. ? ‘ ‘, என்றேன் நாகேஷ் பாணியில்.

‘ ‘டேய்.. சீரியசா பேசு.. ஷேர் மார்க்கெட் பத்தி ஒனக்குத் தெரியுமா.. ? ‘ ‘,

ஸ்ரீராம் அப்போது ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அதில் இழுத்துவிட்டான். அப்படித்தான் பங்குச் சந்தையில் என் பயணம் தொடர்ந்து சென்றது. ஆசையுடன் நான் வளர்த்த பச்சைக் கிளி – என் சிறிய லேத் யூனிட்டையும் விற்று அதைக் கொண்டு ஷேர் மார்க்கெட்டில் நுழைந்தேன்.

ஸ்ரீராம் பங்குச் சந்தையில் விற்பன்னன். ஒவ்வொரு கம்பெனிகளின் நாடித் துடிப்புகளை துல்லியமாகக் கூறுவான்.

‘ ‘இவன் ஆட்டோமெமையில் தொழில விட்டுட்டு கேட்டரிங் போறான்.. தேறமாட்டான். இவன் எம்என்சியோடு கூட்டுப் போடறான்..ம்ம்… வூத்திக்கும்..இவன் புதுசா கன்ஸ்ட்ரெக்ஷன் பிசினஸ் ஆரம்பிச்சுட்டான்.. பத்து வருஷம் பதினஞ்சு வருஷம் நீடிக்கும்.. நல்ல டால்.. இதுல இன்வெஸ்ட் பண்ணலாம்.. ‘ ‘, என்று நிறுவனம் நிறுவனமாக ஆருடம் கூறும் போது மலைத்துத்தான் போனேன்..

‘ ‘ஏங்க இவ்வளவு பணமா போடப் போறிங்க.. அனுபவம் இல்லாத பிசினஸ்ல போய்..இன்ஜினியரிங் படிச்சுட்டு சம்மந்தமே இல்லாத தொழில் பண்ணிட்டு.. ‘ ‘, என்றாள் என் விசனக்கார மனைவி.

‘ ‘இன்டியாவுல சம்மந்தமில்லாத தொழில் பண்ணினாத்தான் முன்னுக்கு வரலாம்டி.. ‘ ‘, என்பேன்.

‘ ‘எத்தன அர்ஷத் மேத்தா வந்தாலும், ஒன்ன மாரி மிடில் கிளாஸ் திருந்தாது… ‘ ‘, என் அகராதி அண்ணன்.

‘ ‘மூணு வருசத்தில எப்படியும் இருபது இருபத்தி அஞ்சு லட்சம் பொறட்டப் போறம்.. ‘ ‘

துணிந்து நான்கு லட்சம், என் லேத்தை விற்றதில் இரண்டும், என் மனைவியின் பெயரில் லோன் ஒன்று, இரண்டு சீட்டுப் போட்டுத் தள்ளி எடுத்ததில் மீதி ஒன்று என்று பணத்தைப் புரட்டி அந்த ஷேர்களை வாங்கிப் போட்டேன். தினமும் என் அன்றாட வேலைகளே மாறிப் போனது..

காலையில் நானும் ஸ்ரீராமும் ஷேர் புரோக்கர்களைப் பார்ப்போம், பின்பு ஷேர் மார்க்கெட் போவோம். ஷேர் மார்க்கெட் வளாகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் ‘நடமாடும் அழகுவேல் ‘ டாக்கடை எங்கள் ஆலோசனைக் களம். எங்களைப் பார்த்ததும் அழகுவேல் எனக்கு லைட்டாகவும், ஸ்ரீராமிற்கு ஸ்ட்ராங் டா போட்டு சிகரெட் தருவான். எனக்கு வில்ஸ், ஸ்ரீராமிற்கு கோலட்ி ஃபிளேக்.

கிட்டத்தட்ட இரண்டு வருடம் பிசினஸ் செய்திருப்போம்..எங்கள் ‘ரொட்டேஷன் ‘ பத்து லட்சத்தைத் தொட்டது. அப்போதுதான் அது நடந்தது. அந்தப் பிரபல நிறுவனத்தின் ஷேர்கள் திடாரென்று உயரத் தொடங்க, புதிதாய் தொழில் தொடங்கியிருப்பதால், நல்ல ‘ஸ்கோப் ‘ உள்ள கம்பெனி என்று அரைவேக்காடாக முடிவெடுத்திருக்கிறான் ஸ்ரீராம். என்னையும் உசுப்பி விடவே, இருவரும், பேய்த்தனமாக அந்தப் பங்குகளில் முதலீடு செய்தோம். தான் போட்டிருந்த சீட்டுகளை வேறு கடுமையான தள்ளுபடிக்கு எடுத்து கடைசி நொடியில் பணத்தை புரட்டியிருந்தான் ஸ்ரீராம்.

பின்புதான் தெரிந்தது. அந்த நிறுவனம் தன் பங்குகளைச் செயற்கையாக உயர்த்தச் செய்த சதிதான் என்பது. அடுத்த சில வாரங்களில், அதன் பங்குகள் படுபாதாள விலையில் போய் முடிய, அதிக லாபம் பார்க்க நினைத்த எங்கள் எண்ணத்தில் பேரிடி. அந்தப் பங்குகளை வாங்கியதில் என்னுடைய முதலீடு குறைவுதான் என்றாலும், சீட்டுக் கம்பெனியில் ஸ்ரீராமிற்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டது மட்டுமல்லாது, என்னுடைய வீட்டையும் ஈடாக கொடுத்திருந்தேன்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக சீட்டுக் கட்டுகள் சரிவதைப் போல நடக்க, ஸ்ரீராம் தலைமறைவாகிப் போனான்.. ஆம்.. அப்படித்தான் சொல்ல வேண்டும்.. போர் நடக்கும் போது, குப்புறத் தள்ளிவிட்டுப் போகும் குதிரையைப் போல.. அவன் வீட்டிற்கு நடையாய் நடந்தேன்.. அவன் மனைவியோ, ஸ்ரீராம் மும்பை பக்கமோ எங்கோ சென்று விட்டதாகக் கூறினாள். தொடர்பே கொள்ளவில்லை என்றும் கூறினாள்..

என்னால் பொறுக்க முடியவில்லை.. ‘ ‘இதப்பாரும்மா.. இவன நம்பித்தான் இவ்வளவு செலவு செஞ்சேன்.. என் பழையத் தொழில விட்டுட்டு கூட்டுச் சேர்ந்ததுக்கு இப்ப நல்லா அனுபவிக்கிறேன்.. சீட்டை நம்பிக் கையெழுத்துப் போட்டத்துக்கு இதான் மரியாதையா.. ? ஃபிரண்டுன்னு கூட பாக்க மாட்டேன்.. அப்பறம்.. ‘ ‘, காட்டுத்தனமாகக் கத்தினேன்..

அவன் மனைவி பொங்கி அழுதாள்.. பாவமாக இருந்தது. அவளைப் பார்த்தேன்.. ஒடிசலாக.. சாதாரணப் புடவையைச் சுத்திக் கொண்டு.. கழுத்து நரம்புத் தெரிய பெயரளவில் மஞ்சள் நூலைப் போல தாலி நைந்து போய்க் காட்டியளித்தது..சே.. அவமான இருந்தது.. என்னையே நொந்து கொண்டேன்.. தன்னந்தனியாக வாழும் ஓர் அபலையிடம்.. அதுவும் என் நண்பனின் மனைவியிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமை வாட்டியெடுத்தது.. அச்சவுணர்வும் மேலோங்கி வந்தது.. அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியே வந்தேன்..

கடந்த சில மாதங்கள் என்னுடைய வாழ்க்கையில் மிகக் மிகக் கொடுமையான நாட்கள்.. அடிமாட்டு விலைக்கு வீட்டை விற்க வேண்டியிருந்தது.. கையில் இருந்த சேமிப்புகள், இருந்த மிச்ச சொச்ச பங்குகள் என்று அனைத்தையும் விற்று, கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து வருகிறேன்.. வெளியே நடந்து செல்லும் போது, நடைபிணமாக செல்வதைப் போன்ற நினைவு வாட்டியெடுக்கிறது. என் நடையில் பழைய ‘கெத்து ‘ இருந்ததா என்றே தெரியவில்லை.. இப்படி எவரை பார்க்கும் போதும் குற்றவுணர்வுடன் பார்க்க நேருகிறதே.. தாழ்வு மனப்பான்மை வாட்டியெடுத்தது.. மனைவியின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் போது கூனிக்குறுகி, அவள் முகத்தைக் கூட நேராகப் பார்த்துப் பல நாட்கள்.. நித்திரையைத் துறந்து பல நாட்கள்..

மனைவி என்னை நினைத்துத் தனியாக அழுகிறாள் என்பதை உணருகிறேன்.. அவள் இந்தப் பிரச்சனையை பெரிதாக்கவில்லை என்பதையும் என் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை என்பதையும் உணர்ந்தேன்.. எவ்வளவு பெரிய தியாகம் இது.. சே.. நான் அவளிடம் இத்தனை பாந்தமாய் நடந்து கொள்கிறேனா என்பதே சந்தேகம்தான்… நான் எத்தனை பெரிய சுயநலக்காரன்.. என்னைச் சார்ந்தவர்களை துன்பப்படுத்தும் பைத்தியக் காரன். நான் ஒரு மன நோயாளியோ.. நிச்சயம் ஆமாம் என்றே தோன்றுகிறது.. பணவெறி பிடித்து அலைபவர்கள் ஒரு வகை மேனியாக் தான்.. அவர்களுக்கு பணத்தைத் தவிர வேறு எதுவும் ஒரு பொருட்டே அல்ல .. நானும் அப்படித்தான் இருக்கிறேன்.. மீளமுடியாமல்.. எதைப் பிடிக்க வேண்டி இத்தனை வேகம்.. என்ன சாதித்தேன்..

நான் இளைத்துத் துரும்பாகப் போவதாக பலர் விசாரிக்கிறார்கள். காலில் ஒரு சிரங்கு வந்து ஆறாமல் பாடாய்ப் படுத்துகிறது. போதாக் குறைக்கு வீக்கம் வேறு வந்து சற்று காலைத் தாங்கி நடக்கிறேன். ஒருமுறை கடைத் தெருவில் கல்லூரியில் படித்த சிநேகிதனைப் பார்த்தேன். அவன் அடையாளம் கண்டுபிடித்து, நான்தானா என்று பல முறைகள் என்னை விசாரிக்கிறான்.. ‘ ‘நீதானா.. இல்லை ஒங்கப்பாவான்னு கொழம்பிப் போயிட்டேன்டா.. ‘ ‘, என்று குழப்பமாகச் சிரித்தான்.. வேதனையாக இருந்தது. என்ன ஆயிற்று என்கிறான். அப்படிக் கேட்டவர்களிடம் எனக்குத் தோன்றியதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன்..

இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, தனிமையை நாடுகிறேன். ஒரு நாள் பார்க், இன்னொரு நாள் கடற்கரை என்று தோன்றும் இடத்தில். சுநாமியைக் கண்டு அஞ்சவில்லை.. என் வாழ்க்கையில் நடந்த சுநாமியை விடவா.. சுநாமியே என்னை இப்போது அழைத்துச் சென்றாலும் அதைப் பற்றி எனக்குப் பொருட்டல்ல.. இரவு வெகு நேரம் தனிமையில் செலவிடுகிறேன். என்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது.. ம்.

எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ஒருவன் சுண்டல் வாங்க வற்புறுத்தினான்.. அவனைப் பார்த்தேன்.. அட.. இவன்.. அழகுவேல் ஆயிற்றே..

‘ ‘எப்பா.. நீ அழகுவேல்தான.. ‘ ‘, என்றேன்.. ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்த அவன் அமோதித்து, ‘ ‘ சார்.. நீங்களா… அடையாளமே தெரியலயே.. என்ன சார் இவ்வளவு தூரம்.. ‘ ‘,என்றான்.

‘ ‘ அது சரி.. சுண்டல் விக்கற.. டாக்கடைய மூடியாச்சா.. ? ‘ ‘,

‘ ‘வித்துட்டேன் சார்.. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச வேற எடத்துக்கு மாத்திட்டாங்கல்ல.. வியாபாரம் ஒண்ணும் சரியில்ல.. பாத்தேன்.. வித்துட்டேன்.. ‘ ‘, என்றான்..

‘ ‘அதனால என்னப்பா.. வேற எடம் பாக்கலாமுல்ல.. ‘ ‘,என்றவுடன், சற்று தயங்கியவன்.. தொடர்ந்தான், ‘ ‘ அது வந்து.. நம்ப தலைவர் படம் ஒண்ணு ரீலீஸ் ஆச்சு சார்.. அதுக்காக பத்து வட்டிக்கு கடன் வாங்கி, கடைய வித்து, போஸ்டர் அடிக்கறது.. முத ஷோ ஆயிரம் ரூவா கொடுத்து டிக்கெட் எடுத்தது.. பேனர் கட்றதுன்னு எக்கச்சக்க செலவு சார்.. கடனாயிடுச்சு.. அதனால என்ன சார்.. தலைவர் கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்துடுவார்.. எங்க ஏரியா செயலாளர் ஆயிடப் போறேன்…அப்ப என் ரேஞ்சே மாறிடும் ‘ ‘, என்று சர்வசாதாரணமாகச் சொன்னான்..

‘ ‘என்னப்பா.. நியாயம்.. ‘ ‘ என்று சொல்ல வந்தவன் சற்றுத் தயங்கினேன்..இவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தைகூட இருக்கிறது..இப்படிச் செய்யலாமா.. இவன் சொல்வது நிறைவேறவா போகிறது என்றெல்லாம் சொல்ல நினைத்து நிறுத்திக் கொண்டேன். எந்த அறிவுரை சொல்லவும் ஒரு யோக்கிதை வேண்டும்…. அது என்னிடம் இருக்கிறதா என்று யோசித்தேன்..

ஆனால் ‘ ‘நெனைப்புத்தான் பொழைப்பை ‘ ‘ என்னமாய்க் கெடுக்கிறது..

(2001)

—-

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்