அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

தமிழில் : ராமன் ராஜா


‘டிட்டாங் ‘ என்று இனிமையாக ஒரு மணி ஒலித்தது. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான் மனு. கம்ப்யூட்டர் நினைவூட்டி எதிரே பல்லிளித்தது. ‘இன்று உன் திருமண நாள். சீக்கிரம் வீட்டுக்குப் போகவும். ‘ அட, ஆமாம்!…

அலமாரியைத் திறந்து ஒரு மூளையைத் தேர்ந்தெடுத்துத் தலையில் பொருத்திக் கொண்டு யோசித்தான். ‘இன்று என் ஆயிரமாவது கல்யாண நாள். தியாவுடன் முழுசாக ஓராயிரம் வருஷங்கள் வாழ்ந்து தள்ளிவிட்டேன்! ‘ மனுவின் கடைவாயில் சின்னப் புன்னகை அரும்பியது. ‘எப்படிப் பட்ட ஆயிரம் வருடங்கள்… மனைவி மேல் பாசமும் காதலும் மோகமும் அவள் உடம்பு வாசனையில் கிறங்கிக் கிடந்ததுமான காலங்கள். ஆயிரம் வருஷ தாம்பத்தியம் என்பது என்ன ஒரு அருமையான சாதனை! இன்று பிரத்தியேகமாகக் கொண்டாட வேண்டிய நாள். ‘ அவளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான் மனு.

மனு-தியாவின் பண்ணை வீடு விசாலமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக இங்கேதான் வசித்து வருகிறார்கள். கட்டிட வேலைப்பாடு, இண்டாரியர் போன்ற சமாச்சாரங்களில் தியாவுக்குத்தான் ரசனை அதிகம். பார்த்துப் பார்த்து இழைத்து இந்த வீட்டை உருவாக்கியவள் அவள்தான். சின்னச் சின்னதாகப் படிகள் அமைத்து வெவ்வேறு மட்டங்களில் அறைகள் அமைந்திருந்தன. அந்தரங்கம் கெடாமல் உட்கார்ந்து பேசுவதற்குக் கதகதப்பான மூலைகள்; முற்றங்கள், மாடங்கள். ஒவ்வொரு இடத்திலும் இருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கைகள். வீடு பூராவும் அற்புதமான கலைப் பொருட்கள் – தியாவுடைய நானூறாவது பிறந்த நாளுக்கு அவன் பரிசளித்த வெண்கலச் சிற்பம்; வெண்ணை மாதிரி மரத்தில் கடைந்த ஜப்பானிய பொம்மை; பாரீஸில் அவர்கள் தேனிலவுக்குப் போனபோது வாங்கிய பழமையான ஓவியம். பால்கனியைத் திறந்தால் வெல்வெட் இருட்டில் வெளிச்சப் புள்ளிகளாக ஜொலிக்கும் நகரம்.

வீட்டின் ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு வித வாசனை. மனுவுக்கு சுவைகளும் மணங்களும் உறுத்தாமல் மென்மையாக இருக்க வேண்டும். படிக்கும் அறையில் வெட்டி வேர் மணம்; குளியலறையில் சந்தனம்; சமையலறையில் வனில்லா கலந்த ஏலக்காய், பெட் ரூமில் ஜாதி மல்லி!

தன் அறையிலிருந்து உன்னதமான புதிய சூட் அணிந்து வெளிப்பட்டான், மழமழப்பாக ஷேவ் செய்த மனு. தியாவின் அறைக் கதவின் வெள்ளிக் குமிழைத் திருப்பும் போதே அவன் ரத்தத்தில் எதிர்பார்ப்பு சூடாகப் பெருகியது. அதற்கேற்ப தியாவின் தோற்றம் அன்று பரவசமூட்டும்படி இருந்தது : மிக மெல்லிய கருநீலப் பட்டுப் புடவை, அவள் உடலில் ஒட்டியும் விலகியும் அருவி மாதிரி வீழ்ந்து கொண்டிருந்தது. அவிழ்த்து விட்டால் முழங்கால் வரை வரும் தன் கரிய கூந்தலைத் தூக்கிக் கட்டி தங்கக் கிளிப்புகளால் சிறைப் படுத்தியிருந்ததில், கழுத்தின் பின்புறம் தாழம்பூ நிறச் சருமம் போதையூட்டியது. அங்கே முத்தமிடுவதற்கு அவன் சிறிதும் தாமதிக்கவில்லை. அவள் அன்புடன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கணவனின் காதருகே ரகசியம் பேசினாள்…

தியாவை அணைத்து அழைத்துப் போய் டைனிங் டேபிள் எதிரே உட்கார வைத்தான். அவன் தன் வாழ்நாளில் எவ்வெப்போதோ சுவைத்து ரசித்திருந்த இனிய தின்பண்டங்கள் அத்தனையும் அன்றைய மெனுவில் இருந்தன. பாலாடைக் கட்டிகளும் பழ ரசங்களும் ஜெல்லி வகைகளும் காய்கறிகளும் கடல் உணவுப் பொருட்களும் வரிசையாக வந்துகொண்டே இருந்தன. தியா காதலுடன் அவன் கண்ணில் கண் பார்த்துக் கொண்டே கொஞ்சலும் சிணுங்கலும் தாயின் கண்டிப்புமாகப் பறிமாறினாள். விரும்பிச் சாப்பிட்டான் மனு. ஐஸ் கிரீமுக்குப் பிறகு லவங்கம் மணக்கும் பன்னீர் பீடா. கை கழுவ வெள்ளிக் கிண்ணத்தில் எலுமிச்சை மிதக்கும் வெதுவெதுப்பான தண்ணீர்.

நிலவு காயும் மொட்டை மாடிக்குப் போய் சிறிது நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு நிறைய இருந்தது. அசை போடுவதற்கு ஆயிரம் வருடத்துக் கதைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

ராத்திரி பத்து மணியானதும் மனைவியைப் பூக்கூடை போல் சுமந்துகொண்டு படுக்கையறைக்குச் சென்றான். தியா சானலில் அவனுக்குப் பிடித்தமான இசையை அமைத்து விளக்கைத் தாழ்த்திவிட்டு வெல்வெட் மெத்தையின் மேல் வெல்வெட் மெத்தை மாதிரி படுத்துக் கொண்டாள்; எதிர்பார்த்தாள். மனு மெல்ல அவள் எதிரே மண்டியிட்டுக் குனிந்து அவள் ஸ்லிப்பரை மிக மெதுவாக நீக்கினான்; வெண்ணிறக் கணுக் காலில் முத்தமிட்டான்….

அதன் பிறகு நேர்ந்த அற்புதமான தருணங்கள் அனைத்தையும், ஒவ்வொரு உணர்வு, வாசனை, சுவை உள்பட நுணுக்கமாகப் பதிவு செய்துகொண்டது அவன் மூளை.

காலையில் கண் விழித்தபோது தியா அருகில் இல்லை. வேலைக்குப் புறப்பட்டு விட்டாள். அவளுக்கு பக்கத்து காலக்ஸியில் மனிதர்கள் வசிக்கத்தக்க கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் வேலை. மனு சாவகாசமாகக் குளித்து உடையணிந்து அஸ்ட்ரோவில் ஏறி அலுவலகம் போனான். தலையைத் திறந்து மூளையை ஜாக்கிரதையாகக் கழற்றி மேசை மேல் வைத்தான். அலுவலகம்/ஆராய்ச்சி/பயானிக்ஸ் என்று லேபிள் எழுதப்பட்ட மற்றொரு மூளையை எடுத்துப் பொறுத்திக் கொண்டான்.

கழற்றின மூளையை அன்புடன் ஒரு நிமிடம் பார்த்தான். இது வரை இருபது தடவைக்கு மேல் உடலை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டுவிட்டான்; ஆனால் இந்த மூளையை மட்டும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான். அதற்குள் ஆயிரம் வருட மணவாழ்க்கையின் ஞாபகங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் எல்லா ஞாபகங்களும் இல்லை; பல சண்டைகள், காயங்கள், கோபங்கள், சோரங்கள் பற்றிய நினைவுகளெல்லாம் கவனமாக அழிக்கப்பட்டு மகிழ்ச்சியான நினைவுகளை மட்டுமே மிச்சம் வைத்துக் கொண்டிருக்கும் மூளை.

வீடு/மனைவி/காதல் என்று எழுதப் பட்டிருந்த அந்த மூளையை அலமாரியில் வைத்துப் பூட்டினான் மனு.

(Walter Jon Williams எழுதிய The Millenium Party என்ற சிறுகதையின் இளகிய தமிழாக்கம் இது.)

r_for_raja@rediffmail.com

Series Navigation

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)