த ளி ர் ச் ச ரு கு

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

காலையில் சிறிது ஆசாரக்கடன்கள், நியம நிஷ்டைகள் என வைத்துக் கொண்டிருந்தாள் மகாலெட்சுமி. வயசின் லெட்சணங்கள் நன்றாய்த்தான் இருக்கிறது. எளிய வாழ்க்கை கிராமத்தில். எளிய உணவு. பழகிய ஜனங்கள். தனிமை பாவனை இன்னும் தட்டவில்லை. ஒருவேளை உடம்பு கிடம்பு படுத்தினால் அப்போது உணர்வாளோ தெரியாது. காலை காபியே குளித்தபின். பிறகு கோவில். வீடு திரும்ப பொழுது வெயில் எடுப்பு கண்டிருக்கும். பதினோரு மணிவாக்கில் சாதம் சாப்பிட அடுத்தவேளைக்கு இரவு டிபன். யதேஷ்டம்.

வீடு திரும்ப கடிதம் வந்திருந்தது. பெண்தான். பட்டணத்துக்காரி. ராஜேஸ்வரியிடம் நல்ல பழக்கம் பதினைந்து நாட்களுக்குள் கடிதங்கள் எழுதி விசாரிப்பது. ஒரே பெண். ஒரே குழந்தை. வாயேன் அம்மா, எங்களோடுதான் இரேன், என்கிற வேண்டுகோளில் சம்பிரதாய பாவனை இராது. உள்ளொட்டுதலான கடிதம்.

மகாலெட்சுமிக்கும் பெண்ணையிட்டு வருத்தமெல்லாம் இல்லை. என்னவோ பட்டண வாழ்க்கை இயல்பாய் இல்லை அவளுக்கு. மூச்சு விடுவதையே அவர்கள் கவனமாய்ச் செய்ய வேண்டியிருக்கிறது. சிக்னல் நிறம் மாற சட்டென வேகம் பிடிப்பதும் பின்பு தன்னியல்பின்றியே வேகம் வடிவதும்… நடை என்றில்லாத நடையோட்ட வாழ்க்கை.

வீடு திரும்ப மகாலெட்சுமிக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பெண்ணோடு சேர்த்து பேத்தி மீராவும் சின்னதும் பெரிதுமான எழுத்துக்களில் ரெண்டு வரி எழுதி யிருந்தது… பாட்டி பொறப்ட்டு வா. கதை சொல்லு. எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்கு. எனக்கு லீவு தர மாட்டா ஸ்கூலில். நீ வா…

அந்த வரிகளுக்கு முத்தங் கொடுத்தாள். அவளுக்கே குழந்தையைப் பார்க்கணும் போலிருந்தது. தபாலாபீஸ் ராகவனிடம் சொன்னால் ரயில்டிக்கெட் எடுத்துத் தருவான். மாப்பிள்ளை ஸ்டேஷனுக்கே வந்து விடுவார்… என்றெல்லாம் சட்டென்று மனசு விழித்துக் கொள்ளலாச்சு. உள்ளூற புதிய உற்சாகம் கொள்ள சிறு தாகம் எல்லாரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது போலும்!

பெண் வேறு வீடென மனசில் குறிப்பு விழுந்தபின் பேத்தியிடம் இரத்தவாசனையும் ஒட்டுதலும் கைமாற்றங் கண்டிருக்கிறது. ஆச்சரியம்… போய்ப் பார்த்துவிட்டு வரலாம்தான். லட்டு லட்டாய் மதிப்பெண் வாங்கும் குழந்தை. லட்டு என்றால் பூஜ்யம் அல்ல!… அழகு. உற்சாகப் பந்து அல்லவா அவள் ? மீராக்குட்டி. செல்ல வெல்லக்கட்டி. வரேண்டியம்மா.

கையில் திரட்டுப்பால் கிண்டி எடுத்துக் கொண்டாள். கிளம்பி விட்டாள்.

—-

வெள்ளி ராத்திரி கிளம்பி சனிக்கிழமை பொழுது திரள நகரத்தில் இறங்கினாள். ஸ்கூட்டரில் மாப்பிள்ளையோடு வர சிறிது கூச்சம். என்றாலும் இதெல்லாம் இங்கே சகஜம்.

வெளியே உலகம் பரபரத்துக் கிடந்தது. புண்ணைச் சொறிகிற பரபரப்பாகவே அது மனசில் எட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. கோவிலுக்குப் போனாலே மனசைப் பிராத்தனை செய்ய விடாமல் வியர்வையே இம்சைப் படுத்தும் நகரம். திடார் நாற்றங்கள். குப்பைலாரி. கொசுமருந்து அடித்துச் செல்லுதல். வாகனப் புகை. அட யப்பா சப்தயிரைச்சலைச் சொல். மார்கழிமாசமும் விசேஷ நாளுமாய்க் கோவிலில் ஊரில் பாட்டுப் போடுகிறதில்லையா என்ன ? ஆனால் அதன் அம்சம் வேறு. வாசல் கோலம் போட பாட்டுக்கேட்பது… கூடப் பாடலாமாய் இருக்கும். அருகே கிட்டத்து இடுக்குமுடுக்கில் இங்கே கோவில் என ஆச்சு. பிள்ளையாரே சந்நிதிக்குள் வியர்த்துக் களைத்து உட்காந்திருக்கிறார். விநாாயகனே வினைதீர்ப்பவனே… என சீர்காழி அதிர வைத்தான், தேங்காய் விடல் அதிரடி… என்னத்தத வினை தீர… தீரவே தீராது, என சலிக்க வைக்கிறது. பாவம் சீர்காழி.

குபீரென சோடாக்குப்பியைத் திறந்தாற் போல மீரா ஓடிவந்து கதவைத் திறக்கிறது. ‘ ‘வா வா அம்மா… செளக்கியந்தானே… ‘ ‘ என்றபடி புன்னகையுடன் வந்து பையை வாங்குகிறாள் ராஜேஸ்வரி. ‘ ‘ரயில்ல பிரயாணம்லாம் திண்டாடலியே ?… காஃபி ரெடி. குளிக்கணுன்னா குளிச்சுட்டு வந்துரு… ‘ ‘

அவளைச் சொல்லிக் குத்தம் இல்லை. அவளுக்கு உத்தியோகம் சனி-ஞாயிறு விடுமுறை… என்றாலும் மாப்பிள்ளைக்கு ஓடணும். காலை எழுந்தபின் அவருக்குப் பாடு பார்த்து அனுப்புகிற அவசரம். கூட தன்னியல்பாய் உலகம் சுறுசுறுத்து வேறுகதியில் வேகமுகம் காட்டித்தானே ஆக வேண்டியிருக்கிறது. சிக்னல்-வாகனங்கள். நம் இஷ்டம் என்கிற பாவனையே பல சந்தர்ப்பங்களில் விட்டுப் போகிற நகர வாழ்க்கை. காலையில் கார்ப்பரேஷன் தண்ணீர் விடுவான். அதை அனுசரித்து குளிச்சிக் கிளிச்சி பழைய தண்ணீரைச் செலவழித்து புதுத் தண்ணீரைப் பிடிச்சி வெச்சிக்கணும்… என வெளிக் கணக்குகள் வீட்டுக்குள் ஒழுங்கு நிர்ப்பந்தங்களை விதிக்கின்றன.

உயிர்சுமக்கும் வாகனங்கள்!

குளியலறைப் பக்கம் பேஸ்ட் எடுத்து வாயில் விரல் கொடுத்து விறுவிறுவென்று பல் தேய்த்தாள். குனிந்து வாஷ்பேசினில் துப்புகையில் பின்புறமாக மாப்பிள்ளை கடந்து உள்ளறைக்குப் போகிறதே என்னவோபோல இருக்கிறது. பழகிக் கொள்ள கொஞ்சநாள் ஆகும்.

சிற்றறையில் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு குளியல். ஒரு ஓரமாய்க் குப்பைக் கூடை. ஷவர் இருந்தது… கிராமத்து ஏற்றம்இரைத்த குளியலைப் போல. புன்னகைத்துக் கொள்ள முயன்றாள்.

மாற்றுப் புடவையை உள்ளேயே கட்டிக் கொள்ளணும். எதும் ஸ்லோகம் சொல்லலாம் என மனஎடுப்பு காண்கையில் மாப்பிள்ளை செய்தியறிக்கை வைத்தாகிறது. ஈரம் உலர்த்த தலையில் துண்டைச் சுற்றிக் கொண்டு வெளியேவர மீரா புன்னகையுடன் காபிடம்ளரை வைத்துக் கொண்டு ஆடிப்பெருக்கில் தீபம் ஏந்தி நிற்கிறாப் போல நிற்கிறது.

—-

மாலை வீடுவர சாக்சும் சீருடையும் கழற்றி விடடெறிகிற குழந்தை. பாட்டி வீட்டில் இருப்பதில் தனி உற்சாகம் அதற்கு. வீட்டுக்கு ஓடோடிவர கன்றுக்குட்டிப் பாய்ச்சல் காணும் மனசு. கார்ட்டூனில் சிரிக்க வைக்கிற ஆங்கில நிகழ்ச்சிகளைவிட பாட்டி சொல்லும் கதைகள் அழகு அல்லவா ? பாட்டி கைமண முறுக்கு… நொறுக்குத்தீனி…

வந்த ஜோரில் மூச்சு சீராக பாட்டி மடி. சோப்பு தவிர்த்த பாட்டியின் சீயக்காய் மணம். ஆ பாட்டியின் கதைகள். அசுரர்கள் குள்ளர்கள் நடமாடும் உலகம். பகவான் வந்து துஷ்ட ராட்சசர்களை சம்காரம் செய்து அனுக்கிரகிக்கிற பாவனைகள் அழகாய்த்தான் இருக்கிறது. தெனாலிராமனோடு ஒரே சிரிப்பு. பக்கத்து வீட்டு வெண்டைக்காயை ராத்திரி சாம்பார் வெச்சது! திருடனைக் கிணத்துத் தண்ணி இறைக்க வெச்ச கதை! மரியாதைராமனின் சூப்பர் டூப்பரான நீதிகள். பாட்டி ஊரில் நடந்த அவளது சின்னவயசு ஹாஸ்யங்கள், ஊர்மனிதர்கள்… ராஜேஸ்வரி – மீராக்குட்டியின் அம்மா செய்த சின்ன வயசுக் குறும்புகள். (தைரியப் புலி என்று நினைப்பு. ஊசி போட்டுக்க அழுவள்!…)

‘ ‘துாங்கு மீராக்குட்டி. காலைல ஸ்கூலுக்குப் போக வேணாமா ? ‘ ‘ என்று அம்மாவிடமிருந்து உள்ளறையில் இருந்தபடி குரல். பாட்டிமேல் ஜோராய்க் கால்போட்டபடி குழந்தை சுவாரஸ்யமாய்க் கதை கேட்கும். துாங்கச் சொன்னால் துாங்காது. ‘ ‘துாக்கம் வரலம்மா… ‘ ‘ என்றபடியே திடாரென்று துாங்கிப் போகும்.

வெளியிடம் போக்குவரத்து என்றெல்லாம் இல்லாத நகர வாழ்க்கையில் பாட்டிக்கும் மீரா பள்ளியை விட்டு வருகிற நேரம் ஊற்சாகக் கொந்தளிப்பாய் இருக்கிறது. காலையில் கார்ப்பரேஷன் தண்ணி விடுகிறதைப் போல, மாலையில் உள்ளே உற்சாகம் ஊற்றெனப் பெருகுகிறதை நியதியில் சேர்த்துக் கொள்ளல் ஆச்சு.

‘ ‘இங்கவே இருந்திரு பாட்டி… ‘ ‘ என்கிறது குழந்தை ஏக்கத்துடன். குழந்தைக்காகவாவது இருக்க மனசு பிரியப் படுகிறது. பேச ஆசைப்படும் குழந்தை. பேச நேரம் இல்லாமல் சாயந்தரம் ஆஃபீஸ்விட்டு வந்தஜோரில் இராத்திரிக்கு சூடாய் எதாவது பண்ண மும்முரம் காட்டும் ராஜேஸ்வரி. அவளைக் குத்தம் சொல்லவும் ஒண்ணும் இல்லை. வீடு எங்கியோ, அலுவலகம் எங்கியோ… ரெண்டும் ரெண்டு மூலை என்றானால் பயணநேரமே ஆளைச் சாப்பிட்டு விடுகிறது. வந்தால் சிநேகித உறவுஜனங்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். நேரே பார்க்கணும்னா நல்லநாள் விசேஷம் என்று வைபவம் வரணும். ஞாயிறு விடுமுறை என்றால் வீட்டை சுத்தம் செய்ய, தலைக்குக் குளிக்க, துவைக்க இஸ்திரி போட…

நினைக்கவே மூச்சு முட்டும் வேலையடுக்குகள். மேஜைஃபைல்களாய்க் காத்திருக்கும் வேலையடுக்குகள்.

எத்தனை அறிவாளி இந்த மீராக்குட்டி. பாட்டியின் உள்த்திகைப்பு அதுக்குப் புரிபடுகிறது!… இந்தக் காலக் குழந்தைகளுக்கே அறிவு அதிகம்தான்!… பக்கத்து கோவில்களுக்கு மீரா பாட்டியைக் கூட்டிப் போகிறாள்.

மகாலெட்சுமி குழந்தைக்கு தனக்குத்தெரிந்த சில பாடல்கள் பாடச் சொல்லித் தரலானாள். என்ன குரல். என்னமாய்ப் பிடித்துக் கொள்கிறது.

‘ ‘குழந்தை ரொம்ப ஜோராப் பாடறதுடி. எங்கயாச்சும் பாட்டு கத்துக்கச் சேத்து விடேன் ? ‘ ‘

‘ ‘இங்க நம்மளவான்னு டாச்சர் யாருங் கிடையாது. நல்ல டாச்சர் அது இதுன்னு பாக்கணும்னா ரொம்ப துாரம்… கூட்டிண்டு போயி கூட்டிண்டு வர வகையில்லம்மா… ‘ ‘ என்றாள் ராஜேஸ்வரி. சொல்கையில் அவளுக்கே வருத்தமாய்த்தான் இருக்கிறது.

‘ ‘நீயே கத்துண்டவதானே முடிஞ்சளவு கத்துக்குடு… ‘ ‘

சந்திகாலம் விளக்கேற்றி பாட்டி பாடப்பாட குழந்தை கூட பின்பாட்டு என ஆச்சு. உலகம் உற்சாகக் குதிரை புரளல் காண்கிறது மனவெளி மணலில்.

-தாயே யசோதா…

-என்ன தவம் செய்தனை…

-நீ இரங்காயெனில் புகலேது… குழந்தை என்ன அழகாய்க் கற்றுக் கொள்கிறது. ஐயோ எங்கண்ணே பட்ரும் போலுக்கே. தாய் இரங்காவிடில் சேய் உயிர்வாழுமோ… என்ற இடத்தில் பாட்டி போட்ட அத்தனை ‘சங்கதிகளை ‘யும் பிடித்துக் கொண்டது மீரா. மீராவே தன்னியல்பாய் அவ்வப்போது அந்தப் பாடலைத்தான் வாயால் கொண்டாடியாகிறது!…

—-

நகரம் மனிதர்களை அங்கப் பிரதட்சிணம் போல எப்படி உருட்டி விட்டு விடுகிறது. எல்லாவற்றையும் அனுசரித்துப் போகிற மகாலெட்சுமியால் சில ஆசார ஒழுங்குகளை உதறுவதை சகஜமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தொலைக்காட்சியில் காண்கிற குடும்பநல விளம்பரங்கள், சானிடரிநாப்கின், மர்மநோய் விளக்கங்கள், மருத்துவ உரையாடல்கள் என உலகம் மாறியிருக்கிறது. எல்லாம் வெட்டவெளிச்சம் என ஆகிவருகிறது. புடவை அதன் மதிப்பை இழந்து எல்லாம் சுடிதார்தான்.

ஆறுவயசில் ராஜேஸ்வரி புடவை என்று துண்டைச் சுற்றிக் கொண்டு வந்து நிற்கும். சிரிப்பாய் இருக்கும் இவளுக்கு. இது சுடிதார் காலம் அல்லவா ? மீரா பெண் குழந்தை. அமர்த்தி வைத்துத் தழையத் தழையப் பின்னி விடலாம் என ஆசைப்பட்டால் தலைமுடி எங்கே இருக்கிறது ? அவ அம்மாவுக்கே அத்தனையும் கொட்டிப் போயாச்சி…

மெல்ல பாட்டிக்கு ஊர் ஞாபகங்கள் ஊர்கின்றன. இதே பிள்ளைவீடானால் என்ன நினைப்பாள் தெரியாது. பெண் என்றானால் ஒட்டுதல் கொண்டாட்டம் வேறுமாதிரிதான். மாப்பிள்ளை கட்டித் தங்கம். அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார். இருந்தாலும் மனசில் என்னவோ ஒரு நிரடல்…

வந்த ரெண்டு மாசத்தில் ராஜேஸ்வரி ‘உட்காரவில்லை ‘ என்பதை திடாரென கவனித்தாள் மகாலெட்சுமி.

ஒருவேளை வழக்கம்போல குளிச்சிக் கிளிச்சி அலுவலகம் ஓடுகிறாளோ…

என்றாலும் அம்மா இருக்கையில் மரியாதை காட்டுகிறவள்தான். எல்லாம் போட்டு உழப்ப மாட்டாள்…

ராஜேஸ்வரியிடம் சிறு வெட்கப்பூச்சு அழகாய்த்தான் இருக்கிறது. அடிப்பெண்ணே, என்று கட்டி உச்சியில் முத்தம் இடுகிறாள்.

அன்றைக்கு ராத்திரி மீரா பாட்டிமடியில் கால்போட்டு ஆட்டியபடி பாடிக் கொண்டிருக்கிறது. தன்னியல்பான பாடல். பாட்டி கண்மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். உள்ளே ராஜேஸ்வரி மாப்பிள்ளையிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். காதில் ரகசியம்போல விழுகிறது.

‘ ‘அம்மாவுக்கு ஊருக்குப் போகப் பிரியம் வந்தாச்சு… ‘ ‘

மகாலெட்சுமி கவனிக்கிறாள். ஏனோ திடாரென ராஜேஸ்வரி அழுகிறதாய்த் தெரிகிறது. மனம் பதறுகிறது. என்னாச்சி…

தாய் இரங்காவிடில்… என்று காலாட்டிக் கொண்டு ரசித்துப் பாடிக் கொண்டிருந்தது குழந்தை.

—-

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்