நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49

This entry is part of 57 in the series 20041209_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுத்தி

இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை

– சிவப்பிரகாசம்

பெர்னார் குளோதனும், அவன் சிநேகிதன் மாறனும் குதிரை போட்டுக்கொண்டு நேற்றைய தினம் அதிகாலையிலேயே, கப்பித்தேன் தெக்யுபிளான் யோசனை பேரிலே புறப்பட்டு வந்திருந்தார்கள். வைத்தீஸ்வரன்கோவிற் பயணத்திற்கு முன்பாக காரைக்கால பட்டிணத்தின் நிர்வாகி மிஸியே பெஃபுரியேவிடம், கும்பெனித் திட்டத்தின்படி உத்தரவு வாங்கிக்கொண்டே குளோதன் புறப்பட்டிருந்தான். சினேகிதர்களின் குதிரைகள் இரண்டும் சீராய் ஓடிக்கொண்டிருக்கின்றன. வழி நெடுகிலும் கோடைகாலத்தினை சிங்காரித்து கொலுபொம்மையாய், காவிரி தஞ்சைப் பகுதியை அமர்த்தியிருந்தது. புதுச்சேரியில் தெரியும் வெக்கை இங்கில்லை. உச்சி வெயில் நேரத்திலும் உடற் தாகத்தை தீர்க்கின்ற வகையில் சிலுசிலுவென்ற காற்று. வயல்களில் நிறைந்திருந்த நெற்கதிர்களின் சலசலப்பில் எழுந்த நீலாம்பரி, இதமாக காற்றுடன் கலந்து வெளியை நிறைக்கிறது. அவ்விசைக்கு ஒத்த தாளமாக பாதையிற்போகும் குதிரைகளின் குளம்படிகள். இயற்கையின் தயவால் நடக்கும் இசைக்கச்சேரியினைக் கைத்தட்டி ரசிக்கும் விதத்தில், குதிரைகளின் குளம்படிச் சத்தங்கேட்டு படபடவென்று இறக்கைதட்டி எழுவதும் அமர்வதுமாயிருக்கிற உள்ளான்கள்,கொக்குகள்.

குளோதன் மிகவும் பலவீனமாக இருந்தான். உடல், உள்ளம் இரண்டிற்கும், அயற்சி கண்டிருக்கிறது. தேவயானியை மறக்கமுடிந்தால், அடுத்த சில நாழிகைகளில், இவனது விதி திருப்பி எழுதப்படுமென்கிறார்கள். இந்துக்கள் நியாயப்படி, எழுதின விதியை மாற்றமுடியாதென்பதுதானே உண்மை. இவனைச் சுற்றியுள்ளவர்கள் முடியுமென்கிறார்களே: பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே, லஸாரிஸ்து குருமார்கள், பிரபு போல்அஞ்ஞெல், காமாட்சி அம்மாள், புதுச்சேரி குவர்னர் பெண்ஜாதி மதாம் ழான்ன் துய்ப்ளெக்ஸ், கப்பித்தென் தெலாமர், பிறகு கடந்த சில மாதங்களாக பார்த்திபேந்திரன் என்கின்ற பெயர் சூட்டி அழைக்கும் மனக்குரலென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆயுதத்தை ஏந்திக்கொண்டு வெருட்டுகிறார்கள். இவர்கள் எல்லோரும் நான் தேவயானியை மணக்கக்கூடாதென்பதிற்தான் குறியாய் இருந்திருந்திருக்கிறார்கள். குளோதனுக்கு ஏற்பட்ட காதல் பிரெஞ்சுத் தீவில் கபானில் வாழ்ந்த தெய்வானைமீதன்றி, மாளிகையிற் பிறந்த தேவயானி மீதானதல்ல என்பதை இக்கூட்டதிற்கு எப்படிப் புரியவைப்பதெனத் திகைத்திருந்தவேளை, அதற்கு அவசியமில்லையென்றாகிவிட்டது. தெய்வானையையும் என்னையும் இணைப்பதென்று இந்துதேசத்தவர் நம்புவதைப்போலே விதி தீர்மானித்திருக்க, மானிட சக்தியால் ஆகப்போவதென்ன ? என்று தனக்குத் தானே பெர்னார் குளோதன் பேசிக்கொள்கிறான்.

காமாட்சி அம்மாள் இறந்துபோனச் சேதி குளோதனுக்கு மிகவும் மனவருத்ததை அளித்ததென்றே சொல்லவேணும். எப்பேர்ப்பட்ட பெண்மணி, திடாரென்று இந்தத் தேசத்திற்கு வந்து இறக்கும்படி ஆகிவிட்டதே. இந்த நேரத்தில், தெய்வானைக்கு ஆறுதலாகச் சிலவார்த்தைகள் சொல்லியாகவேணுமே. தெய்வானை, பிரெஞ்சுத் தீவுக்குக் குளோதனுடன் புறப்படத் தீர்மானித்து கிழவர் நாயக்கரை வற்புறுத்தியாகவும், அம்மனிதரும் அவளை அழைத்துக்கொண்டு காரைக்கால் வரவிருப்பதாகவும் மாறன் சொல்லுகிறான். இப்படியான நேரத்திலே, கும்பெனியின் ஆக்கினைக்கு மாறாக தெய்வானையைத் தேடி திருச்சினாப்பளிக்குச் செல்லவேணாமேயென்றும் எச்சரிக்கிறான்.

தெய்வானையை நினைத்த மாத்திரத்தில், மனச்சோர்வுகள் உலர்ந்து போகின்றன. நாடி நரம்புகளில்,இரத்த நாளங்களில், நகக் கணுக்களில், மயிற்கால்களில், மன வெளிகளில் சந்தோஷ பூக்கள் இதழ் விரிக்கின்றன. மகிழ்ச்சி அருவியாய் சிரசில் விழுந்து, சலசலவென்று பரவி மனதையும் உடலையும் ஒருசேர நனைக்கிறது. அவளைப் பார்த்தது, நினைத்தது, பிரேமைகொண்டது, வார்த்தையாடியது, தொட்டது, தள்ளி நின்றது, பிரிவால் வருந்துவது அனைத்துமே இவனுக்குப் பழகியவை. இப்பிறவியிலல்ல, ஏற்கனவே ஒருமுறை இக்காரியங்களைத் ஒத்திகைப் பார்த்திருக்கிறான். எப்போது ? எப்படி ? ஒருவேளை அமானுஷ்யக் குரல் பேரிட்டழைக்கும் பார்த்திபேந்திரன்… ? அப்படியென்றால் தேவயானி ? தமிழர்கள் நம்புகின்ற நாடி ஜோதிடத்தில் ஏதேனும் விடைகிடக்குமா ?

மாமரங்களுக்கும் பலாமரங்களுக்குமிடையில், இருந்த சிதம்பர குருக்கள் வீட்டை குடியானவச் சிறுவன் ஒருவன் அடையாளம் காட்டினான். வீட்டெதிரே ஜோஸ்யர் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள். குளோதனும் மாறனும் குதிரையிலிருந்து இறங்கிய மாத்திரத்தில், ‘உங்களுக்காகத்தான் காத்திருந்தேன் ‘ என்கிறார். நண்பர்கள் இருவருக்கும் பறுபடியும் வியப்பு. குதிரைகளை அருகிலிருந்த மரங்களில் பிணைத்தவர்கள், சோதிடர் வழிகாட்டப் பின் தொடர்ந்தார்கள்.

வீட்டு வாசலில் இருந்த மாக்கோலத்தை மொய்த்துக்கொண்டிருந்த சிற்றெறும்புகளை மிதித்துவிடாமல் ஜோஸ்யர் நுழைய, இவர்களும் அவ்வாறே செய்தார்கள். வீட்டில் நுழைந்ததுமே, பசுஞ்சாணத்தில் மெழுகியிருந்த தரையும் சுவர்களும் ஆங்காங்கே ஈரம் உலராமலிருக்க, சாணத்தின் மணத்துடன் சாம்பிராணிப் புகையும் கூடமெங்கும் வியாபித்திருந்தது. இவர்கள் இருவருக்கும் ஜோஸியருக்கும் இடையில் தெரிந்த சுவருக்குக் கீழே அமைந்திருந்த சிறிய மேடையில் செப்புச் சிலைவடிவில் அம்பிகை, மஞ்சள் குங்கும அலங்காரத்தில் ஜொலிக்கிறாள். இரு புறமும் குத்துவிளக்குகளின் பஞ்சமுகத்திலிட்டிருந்த திரிகள் நெய்யினை ஒளியாய் மாற்றி உமிழ்ந்துகொண்டிருக்கின்றன.

‘உட்காருங்கோ..! புதுசேரியிலிருந்து எப்போது புறப்பட்டிருந்தீர்கள் ? ‘

‘இல்லை நாங்கள் காரைக்கால் பட்டிணத்திலிருந்து வருகிறோம், நேற்றுப் புறப்பட்டோம். திருநள்ளார் வழியாகப் பேராளத்திற்கு வந்து அங்கே சத்திரமொன்றில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, பின்னர் இரவை மயிலாடுதுரையில் கழித்துவிட்டுக் காலையில் புறப்பட்டு வந்தோம். ‘

ஜோஸ்யர் கோரைப்பாயொன்றினை விரித்துப் போட மாறன் சப்பணமிட்டு உட்கார்ந்தான். பெர்னார் குளோதன் உட்காருவதற்குச் சிரமப்படுவதாகத் தெரிந்தது.

‘பொறுங்கள், உங்களுக்குச் செளகரியமாகத் தவிசு ஒன்று கொண்டு வருகிறேன். ‘ ஜோஸ்யர் உள்ளே நுழைந்து மொட்டை நாற்காலியொன்றை கொண்டுவர பெர்னார் குளோதன் அதிலமர்ந்து கொண்டான்.

‘என் வீட்டைக் கண்டுபிடித்ததில் சிரமங்கள் உண்டோ ? ‘

‘ஏதுமில்லை. சிதம்பரம் குருக்கள் என்று சொன்னமாத்திரத்தில், எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. வழியைச் சரியாய் சொன்னார்கள். ‘

‘உண்மைதான், எனது தகப்பனார் ஜலகண்டேஸ்வரர் காலத்திலிருந்தே, அம்பாள் கிருபையால் நாங்கள் சொல்கின்ற நிமித்தங்கள் பலிப்பதால், அரசகுடும்பங்கள், பிரபுக்கள், பிரதானிகள், பெரிய குடும்பங்களென யாராவது ஓரிருவர் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். நீங்கள் வந்த காரியமென்ன ? ‘

‘ஜோசியரே! அதையும் தங்கள் சோதிடத்தாலே சொல்ல முடியாதா ?. சித்த முன்னாலே, நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, நாங்களிருவரும் உங்களைத் தேடி வருவோமென்பதை முன் கூட்டியே அறிந்திருப்பவர் என்ற வகையில் வார்த்தை வந்ததே ‘

‘சத்தியம். சில தினங்களுக்கு முன்பு, மதுரை நாயக்கர் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்தார், அந்தப் பெண்ணின் சோதிடத்தைப் பார்த்துச் சென்றார். அப்பெண்ணுக்கு மதுரை திருச்சி அரியணைக்கு வாய்ப்புண்டா ? கலியாணம் ஆகுமா ? ஆகுமென்றால் அவளது மணாளன் யார் ? அவளது எதிர்கால விதிப்பயன் என்னவென எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு புறப்பட்டிருந்தார். அன்றிலிருந்து, அவளுக்குப் பாத்தியதை ஆன நீங்களும் என்னைத் தேடிவருவீர்களென்பதை நான் அறிந்திருந்தேன். ‘

‘நீங்கள் சோதிடம் பார்த்தது எந்தப்பெண்ணுக்கு என்று அறியலாமா. அவளது பெயரையும், சோதிடத்தின் விபரங்களையும் எங்களிடத்தில் கூறுவீர்களா ? ‘

‘ஷமிக்கவேணும். அந்தப் பெண்ணின் சாதகப்பலனை உங்களிடம் பிரஸ்தாபிப்பது, சோதிட தர்மமாகாது. தவிரவும் அப்பெண் அரசகுடும்பத்தைச் சார்ந்தவள். உங்களுக்குப் பார்க்கவேணுமென்றால் சொல்லுங்கள் ‘

‘ஜோஸ்யரே.. நீங்கள் குறிப்பிடுகின்ற பெண்ணும், நாங்கள் தகவலறியவேண்டுமென்று வந்த பெண்ணும் ஒருத்தியே. அவளது ஜாதகக் குறிப்புள்ள ஓலையையே நாங்கள் கொண்டு வந்தோம். அவளது பிறப்புகுறித்த பூர்வோத்திரம் ஏற்கனவே எங்களிடமுள்ள ஓலையில் எழுதியுள்ளது.

இந்து தேசத்தில் அப்பெண்ணுக்குள்ள அரசியல் பிரச்சினைகளையும் தற்போது நிலவும் அரசியல் சூழலைவைத்து ஓரளவு எங்களால் ஊகிக்க முடிகிறது. இருந்தபோதிலும் விதிப்பலனொன்று இருக்கிறது அல்லவா. வருங்காலத்தினை அதுவல்லவோ தீர்மானிக்கிறது. அதனை அறியவேண்டியே எங்களுக்காக இக்கட்டான நேரத்திலும், இத்தனை கல் குதிரைபோட்டுக்கொண்டுவந்தோம். சொல்லுங்கள் அப்பெண்ணுக்குக் கன்னிகழியுமா ? கன்னிகழியுமென்றால் அவளை மணப்பவன், அவளது விருப்பத்திற்குரிய மணாளனா ? ‘-வேலு

‘என் யூகம் சரியென்றால், திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்த பெரியவர் சொன்னதைப்போன்று, இப்பிரபுவைத்தான் அப்பெண் மனதிற் வரித்திருக்கவேணும். அப்படியேயென்றாலும் பெண்ணின் சாதகக் குறிப்பை அந்நிய மனுஷாளிடம் பிரஸ்தாபிப்பது நியாயமாகாதென்று ஏற்கனவே சொல்லிப்போட்டேன். வேணுமானால் ஒன்றைச் செய்யலாம். பிரபுவிற்கு ஏதேனும் சாதகக் குறிப்பு இருக்குமானால் கொடுங்கள், பார்த்து ஆரூடம் சொல்கிறேன். ‘

‘நல்ல யோசனைதான். சாதகக் குறிப்பென்று கைவசமில்லை. ஆனால் அவரது ஜனன நேரம், காலம், இடம், பெற்றோர்கள் விபரங்களைச் சொல்ல முடியுமென்றால், அதன்பேரிலே கணிக்கலாமில்லையா ? ‘

‘உடனே முடியாது. ஓரிரு தினங்கள் கழித்து வந்தீர்களென்றால், பிரபுவின் சாதகப் குறிப்பு அதற்குள் தயாராகிவிடும், பிறகு மற்றதைச் சொல்லமுடியும். ‘

‘நாடி சோதிடங்கூட, நீங்கள் பார்ப்பதுண்டு என்று கேள்விபட்டோமே ‘

‘வாஸ்த்தவம். நாடி ஜோதிடமெனில் இன்றைய தினமே பேஷாகப் பார்த்துச் சொல்ல முடியும். ஆனால் அதற்கும் உங்களுக்கு பிராப்தம் இருக்கவேணும், உங்கள் ஓலை என்னிடம் இருக்கும் பட்ஷத்தில் இன்றைக்கேகூட படிக்கலாம். உங்கள் ஓலை என்னிடம் இல்லாத பட்ஷத்தில் பலாபலன்களை வாசிக்க மாதங்களென்ன, வருடங்கள்கூட ஆகலாம். முதலில் பிரபுவின் வலதுகை கட்டைவிரல் ரேகையைப் பதிவுசெய்துகொண்டு அவரதுத் ஓலையை தேடவேணும். ‘ என்ற ஜோஸ்யர், ஓர் ஓலை நறுக்கையும், கறுப்பு மையினையும் கொண்டு வந்து, பெர்னார் குளோதனின் ரேகையை ஒற்றி எடுத்தார். ‘பிரபுவின் ரேகை ‘இருசுழி வட்ட ரேகையில் அடங்கும். ‘ நான் இதற்கான கட்டினைத் தேடிபிடித்து எடுத்து வருகிறேன், நீங்கள் அதுவரை திண்ணையில் காத்திருக்கவேணும் ‘, என்றவர் உள்ளே சென்றார். இரண்டுமணி நேரம் கழித்து அவர்களை உள்ளே அழைத்த சோதிடர் கையில், கிட்டத்தட்ட ஓரடி நீளமும், ஒன்றரை அங்குல அகலமும் உள்ள பனையோலைச் சுவடிகள். நண்பர்களை அவரெதிரேயிருந்த பீடத்தில் அமருமாறு சைகைக் காட்டினார்.

‘தம்பி, பிரபுவைக் கையைக் கன்னத்தில் வைக்கவேண்டாமென்று சொல்லு. நேராய் உட்கார்ந்து நான் வாசித்து கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ‘ஆம் ‘ அல்லது இல்லையென்று, அவர் பதில் சொல்லவேணும். தமிழ் தெரியாதென்றால், நீர்தான் துரைக்கு, அவரது பாஷையில் புரியவைத்து பதிலை வாங்கவேணும். ‘ என்றார்.

மாறன் பெர்னார் குளோதனைப்பார்க்க, சம்மதமென்ற பொருளில் அவன் தலையாட்டினான். அம்பாளையும், அருகிலிருந்த அகத்திய முனியையும் வணங்கிய சோதிடர் ஒவ்வொரு கட்டையும் மெளனமாய் வாசித்த பின் கேட்க ஆரம்பித்தார்.

‘உங்கள் பெயர் ‘க ‘கரம் ‘வ ‘கரத்தில் ஆரம்பிக்கிறதா, தங்கள் தாயார் பெயர் ஐந்தெழுத்து கொண்டதா, தங்கள் தகப்பனார் உயிருடன் இருக்கின்றாரா என்று கேட்கவும், பெர்னார் உடனுக்குடன் இல்லையென்று தலையாட்டுகிறான். ஜோசியர் வேறொரு கட்டை எடுத்துகொண்டு அதேமாதிரி கேட்டுக்கொண்டேவந்தார். அக்கட்டுகள் முடிந்தவுடன் வேறு சில ஓலைச்சுவடிக் கட்டுகளைத் தேடி எடுத்துவந்தார். இந்தமுறை ஒரு கட்டில் நான்கைந்து ஓலைகளுக்குப் பிறகு சாதகரின் தாயார் பெயர் எலீஸா அல்லது எலிசபெத்; தந்தையார் பெயர் லூயி; பிறந்தது சார்வரி வருடம், சித்திரை மாதம், சோமவாரம், மேஷராசி என ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிக்கொண்டுபோக பெர்னார் ஆம் ஆம் என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ‘இருபந்தைந்து வயதில், ஜாதகர் தனது வருங்காலத்தை அறிவேண்டு மென்பதைவிட தனது பூர்வோத்திரத்தையும் அறியவேணுமென்ற ஆவலில் வந்திருக்கிறார் அப்படித்தானே ‘ எனக் கேள்வி கேட்டுவிட்டு சோதிடர் சினேகிதர்களை நேராய்ப் பார்த்தார். பெர்னார் குளோதன் தலை அசைக்கவும், சோதிடர் கையிலிருக்கும் ஓலையை வாசிப்பதாய்ப் பாவனை செய்தவண்ணம் கடகடவென்று சொல்லிக்கொண்டு போகிறார்:

‘கேளடா ஒருவன்தன் கட்டைவிரல்ரேகை இருசுழி வட்டரேகை இரண்டுபுள்ளி கலந்து காணின், இவன் பூர்வஜென்ம பாவ புண்ணியத்தின் பயனாக ஜனனம் கண்டது சார்வரி ஆண்டு, சித்திரை மாதம், இருபாணொன்று சோமவாரத்தில், மேஷ ராசியில் சுக்ரதிசையில் பிறந்து, சூரிய திசையில் வளர்ந்து, சந்திர திசையில் செழித்து, செவ்வாய் திசையில் பரிவர்த்தனை அரசயோகம் வைத்துப் படைக்கப்பட்டு பிறந்தவன். இவன் கையில் தாரத ரேகை செடிரேகை வைத்தபடி குளோதன் நாமம் தரித்து ஸ்த்ரீ தோஷம் வைத்துப் படைக்கப் பட்டவன். தென் கிழக்குத் தென் மேற்கு மூலையை ஒட்டி ஜாதககாரனுக்கு யோகம் தர வந்தவள்தான் ஆயினும், வடமேற்குத் திசையில் வந்த பெண்ணால் பெரும் விபரீத ராஜயோகம் தர காத்துள்ளது. அவள் முன் ஜென்மத்தில் இவன் கிடைக்காமல் துர்மரணம் வேண்டிப்பெற்றவள். அவளது பர்த்தா இவனைத்தேடி இறப்பொழித்து அலைந்துகொண்டிருக்கிறான். இவன் உத்தமனே ஆயினும், கிரக நிலையைக் காணுங்கால், சூரியன் புதனுடன் சேர்ந்து அமர, மதி மேஷத்தில் நிற்க, நாலில் குரு இருப்பது உகந்த நேரமல்ல. இவன் கல்வி, கலை ஞானம், பலமொழி ஞானம், இலக்க வித்தை, வியாபாரவித்தை, வாயினால் பிழைத்தல், கடல் தாண்டிய பயணம், பெண்களை கவரவல்ல உல்லாச சல்லாப கேளிக்கையில் கவனம். ஏற்றுமதி இறக்குமதி, கம்பெனியின் கெளரவமான உத்தியோகமும் செய்து பிழைக்க எதிர்நோக்கியுள்ள காலத்தில், ஏழைச்சனங்கள் மீது பரிவு, இந்துதேச மனுஷர்கள் மீது அபேட்ஷம், கோயில் குருமார்களிடத்தில் அக்

கறை, எஜமான விசுவாசம், சினேகிதர்கள் மீது பிரியமென சிறக்கவிதி. இவனுள் சீதளசார்பு ரோகம்., சிரசில் வடு. திட்டமிட்டு எதையும் செய்ய வல்லவன் முற்பிறவியின் குரு சாபத்தாலும், கர்ம வினைகள்காரணமாகவும் இவன் சரீரத்திற்கு மாத்திரமின்றி, இவனது ஆத்மாவிற்கும் தொல்லைகள் தொடரவேணும். இருபத்தைந்துவயதில் பெண்ணால் வம்பு, பகை வழக்கு விசாரணை, கச்சோத்து அவமானமென்கிற நிலை ஆரம்பித்து விதி மாறி இவன் தடுமாற ஆரம்பித்திருக்கிறான்.

முன் ஜென்மத்தில் ராஜாக்கள் வம்சத்தில் பிறந்து ….

/தொடரும்/

Series Navigation