ஓயுமா அலை…

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சுஜாதா சோமசுந்தரம்


செயற்கையின் அழகை பார்த்து பார்த்து கொட்டி அழகுப்படுத்தப்பட்டிருந்தது அந்த வீடு.வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளிலும் ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகவே இருந்தது.குடு குடு விளையாட்டுகள்,சின்ன சின்ன சிணுங்கல்கள் அந்த வீட்டிற்கு மேலும் மெருகுபூசப்பட்டிருந்தது.இதில் எதையுமே பொருட்படுத்தாமல் கால்களை குத்துகாலிட்டு இரண்டு கைகாலும் கோர்த்தப்படி சோபாவில் அமர்ந்திருந்தாள் வாணி.

தனக்குமுன் மணக்க மணக்க வைக்கப்பட்டிருந்த காபியின் வாசனைக்கூட நாசிக்கு எட்டாத அளவுக்கு எண்ண ஓட்டங்கள் சிக்கி சிதறி திரிந்துக்கொண்டிருந்தது.

சந்தியா தன் பிள்ளைகள் இருவருக்கும் வீட்டு பாடத்தை சொல்லி கொடுத்து அமைதியாக செய்ய சொல்லிவிட்டு,தன் கணவனிடம் மாமியார்,மாமனாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து போக சொல்லாவிட்டு வாணியின் அருகில் அமர்ந்து,அவள் தோற்பட்டையை பிடித்து திருப்பினாள்.

என்ன வாணி….! போன்கூட செய்யாம திடுதிப்னு வந்து நிற்கிறே.புதுசா கல்யாணமான பொண்ணுங்கிற செந்தளிப்பே முகத்துல துளிக்கூட காணும்.அப்படியே உலகமே கவுந்து தலையில விழுந்தமாதிரி இருக்கீயே என்ன விசயம்.. ? ஏதாவது பிரச்சனையை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருக்கியா…என்ன ?

சந்தியா கேட்க கேட்க தரையையோ கவனித்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து,அண்ணி….எனக்கு இங்கே வர்றதுக்கு உரிமையில்லையா ?எப்படி ஒட்டுமொத்த குடும்பமும் ஒண்ணா சொல்லி வைச்சதுபோல ஓரேமாதிரியா பேசுறீங்க.நானே வாழ்க்கையை தேடிக்கிட்டேங்கிறதுக்காக பிரச்சனைக்கு உரியவளா ஆயிடுவேனா என்ன ?

வாணி…நான் அந்த அர்த்தத்துல சொல்லலம்மா.ரவியும் உன்கூட வரலை.நீ வேலைக்கும் போகலையா..அதான்.அதோடு வீட்டுக்கு வந்ததிலிருந்து,உங்க அப்பா,அம்மா,அண்ணன் யாருக்கிட்டேயும் பேசலயேன்னுதான் கேட்டேன்.

காபியை உதட்டில் பட்டும் படாமல் உறிஞ்சிக் குடித்தபடி,அண்ணி…என் மாமியார் வீட்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு நவக்கிரகமா இருக்காங்க.நம்ம வீட்ல இருந்த கலகலப்பு,சுதந்திரம் எல்லாம் என்னை விட்டு சட்டுன்னு காணாப்போன உணர்வு தட்டுது.என்னால யாரோடையும் ஒட்ட முடியலண்ணி.

இப்பதானே போயிருக்கே போக போக எல்லாம் சரியாயிடும்.இதுக்காகவா அறுபது வருசம் வாழ்ந்து முடிச்ச கிழவி போல கவலைபட்ற.

அதுக்காக மட்டுமில்லைண்ணி.உண்மையை சொல்லனும்னா என்னால உங்களைமாதிரி பொறுமையா அந்த வயசானவங்ககூட குப்பை கொட்ட முடியாது.

வாணி…நீயா இப்படியெல்லாம் பேசுறது..அவுங்க வாழ்ந்து கொட்டின குப்பையில முளைத்த செடிதான் ரவி. ரவிதான் வேணும்னு அடம்பிடித்து கல்யாணம் செய்துகிட்டப்ப, அந்த பெற்றவங்க முழுமனதோட ஏத்துக்கிட்டதை மறந்துட்டாயா ? பெண்ணின் சிறந்த குணமே உறவுகளை அணைக்கிறதுதான்.மிருகங்கள்,பறவைகள்,மீன்கள் இவையெல்லாம் கூடித்தான் வாழ்கின்றன.நீ மட்டும் ஏன் உறவுகளை துண்டிக்க நினைக்கிற.நம்ப முடியல வாணி.இதெல்லாம் ரவிக்கு தெரியுமா ?

தெரியும்.ரவிகிட்ட தனியா வீடு வாங்கிட்டு போகலாம்ன்னா வேண்டாங்குறார்.அதான் சண்டை போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்.

அவளின் பேச்சில் இருந்த அலட்சியம் சந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.தாலிக் கயிற்றின் ஈரம் காயாத நிலையில் அவளின் போக்கு பெரும் பயத்தை உண்டு பண்ணியது.

வாணி….நீ நினைக்கிற மாதிரி உறவுகள்ங்கிறது இழுத்த இழுப்புக்கெல்லாம் வரக்கூடிய சின்னப்பிள்ளைகள் விளையாட்ற பொம்மை கிடையாது.நீ இளமையின் வேகத்துல கிடைக்கின்ற உறவுகளை தெரிஞ்சே தொலைச்சிட்டாயன்னா,பின்னால தேடினாலும் கிடைக்காது.

அண்ணி…ஒத்துப்போவதங்களோட எப்படி ஒட்டி உறவாட முடியும்.எனக்கு கூட்டஞ்சேர்த்துகிட்டு வாழறதெல்லாம் பிடிக்காது.

ஏன் வாணி….இதே எண்ணத்தை விடாம பிடிச்சிக்கிட்டு பத்து வருசத்துக்கு முன்னாடி நான் இந்த வீட்டு படியேறியிருந்தா என்னவாயிருக்கும்.

அண்ணீ….! எதோட எதை முடிச்சிப் போட்றீங்க ?

வாணி…பேசனும்னு ஆரம்பிச்ச பிறகு பேசித்தானே ஆகணும். கல்யாணமான புதுசுல எல்லா பெண்களுக்கும் புருசன்கூட தனிக்குடித்தனம் போய் வாழனுங்கிற எண்ணம் வருவது சகஜம்தான்.நானும் அதற்கு விதிவிலக்கல்ல.ஆனா…எத்தனை நாளைக்கு இருவர்கிட்டேயும் சந்தோசங்கள் நிலைச்சி நிற்கும்.கணவனுக்கு மனைவிக்கிட்டேயும்,மனைவிக்கு கணவன்கிட்டேயும்

ஈர்ப்பு குறைய ஆரம்பிச்சதுன்னா பிரச்சனைங்கிற செடி தானா வளர ஆரம்பிச்சிடும்.இதே மாமியார்,மாமானார்,நாத்தனார்,கொழுந்தனார்னு வளைய வருகையில ஒருத்தரை ஒருத்தர் உற்று நோக்குகிற தன்மை குறைய ஆரம்பிக்கும்.

தாலி கட்டினவுடனே தனிக்குடித்தனம் போறதினால தாம்பத்தியத்தின் புனிதமும்,வாழ்க்கையின் இனிமையும் புரியாம போகுது.தனிக்குடித்தனம் போறது தவறில்லை.கொஞ்சநாளைக்கு வாழ்ந்தவங்ககூட வாழ்ந்து பாத்தியன்னா வாழ்க்கைன்னா என்னன்னு விளங்கும்.குடும்பங்கிற கோயிலிருந்து ஒரு விக்கரகத்தை உன்னோட சுயநலத்துக்காக பெயர்த்து எடுக்க நினைக்கிறது மிகப்பெரிய பாவம்.

அப்படின்னா….என்னோட சந்தோசத்தை ஓரங்கட்டி வைச்சிட்டு காலத்தை ஓட்ட சொல்றீங்க ?அப்படித்தானே….!

வாணி….! உன்னோட சந்தோசம் உங்கிட்டதான் இருக்கு.குடும்பங்கிற கோட்டையை கட்டுக்கோப்பா கட்டணும்னா சில விசயங்களை கணவனும் மனைவியும் தியாகம் செய்துதான் ஆகணும்.இந்த உடம்பு எப்படி எலும்பு,நரம்பு,இரத்தத்தால் உருவான பிண்டமோ, அதேபோல்தான் அன்பு, பாசம்,அரவணைப்பு சேர்த்து கட்டப்பட்டதுதான் குடும்பம்.உன் கையில இருக்கிற வாழ்க்கையோட மதிப்பு உனக்கு தெரியாது.

வாணி…என்னை எடுத்துக்கோ…என் மேல எப்ப குற்றப்பத்திரிக்கை வாசிக்காலாம்னு குறு குறுன்னு கவனிக்கிற உன் அம்மா,உலக நடப்புகளை ஒருவரி விடாம பேசி நியாயம் கேட்கிறமாதிரி கேட்டு வாயை கிளறுற உன் அப்பா,அலுவலக வேலையை வீட்லயும் கொண்டுவந்து இம்சை செய்யும் உன் அண்ணன்,கேள்விகளை மட்டுமே கேட்க தெரிந்த என் பிள்ளைகள் இவர்களுக்கு மத்தியில குடும்பங்கிற குத்து விளக்கை ஏற்றி பிணைப்பு என்ற வெளிச்சத்தை எல்லார் முகத்திலும் பிரகாசிக்க வைக்க என்னால முடிகிறபோது,ரவி மட்டுமே உலகம்னு கருதுகிற அவுங்களுக்கு உன்னால சின்ன அகல்விளக்கு வெளிச்சத்தைக்கூடவா தரமுடியாது.

வாணி…நான் அண்ணியா அறிவுரை சொல்லல.ஒரு பெண்ணா என் அனுபவத்தை சொன்னேன்.ஒவ்வொரிவரிடமும் கருத்து வேறுபாடும் முரண்பாடும் வந்துபோகும் விருந்தாளியா இருந்தா நல்லது தேடி போகாமலே நடக்கும்.

அம்மா…அண்ணன் என்னை அடிக்கிறான்ம்மா என்ற மகளின் கூப்பிட்ட குரலுக்கு ஓடினாள் சந்தியா.வாணி தனிமையில் அமர்ந்து சிந்திக்கவும் சிதறிய எண்ணங்கள் ஒன்றுகூடி நின்று அவளை சீர்திருத்தியது.அவள் மனதில் அடித்துக்கொண்டிருக்கின்ற அலை ஓயுமா ?

முற்றும்.

சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.

s_sujathaa@yahoo.com.sg

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்