தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

மாலதி


காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம்.

எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து விட்டிருக்கிறாள்.

திரும்பிப் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரிக்க முயன்றேன். முடியவில்லை.இந்த மீசை முகத்தில் அசடு வர மாட்டேன் என்கிறதே!

‘பேடியாகிப்போ!பெண்மையை அவமதித்தவனே!பெண்கள் மத்தியில் அசடும் குழப்பமுமாய் நகைப்புக்கிடம் வைத்துப் பேடியாகிப் போ! ‘நீனா சபித்தது இன்று போல் இருக்கிறது.நான் என்ன செய்வேன்!ருத்ரபதியின் போட்டி தான் என்னை எப்போதும் ஆட்கொண்டிருந்தது.வியூகம் வியூகம். திரும்பிய இடமெல்லாம் வலை.குட்டிப் பெட்டியும் லாப்டாப்புமாய் விமானம் விமானமாய் ஏறி இறங்கி முறியடிக்க வேண்டி வந்தது.கடைசியில் ருத்ரபதியின் ‘பாசுபதா ஆன் லைன் ‘ என்னுடையதாயிற்று. அவனுடைய சினேகமும் தான்.

என் பார்ட்னர் துவாரகா நாத்தின் அருகாமை போலவே ருத்ரபதியின் அருகாமையில் ஏதோ இருந்தது.பிறகு நானும் அவனும் சமமாகவே வளர்ந்தோம். இப்போது திரும்பவும் ஓட்டம். பங்காளிச் சண்டையில்.இது விசித்திரமான பங்காளிச்சண்டை.

சண்டை விவரம் அப்புறம் சொல்கிறேன்.

அதற்குள் சாபம் பலித்ததைச் சொல்ல வேண்டும்.பலித்ததென்றா சொன்னேன் ?ம்..ஏறக்குறைய அப்படித்தான்.மும்பை விட்டுக் கிளம்பிய ராஜதானியில் அந்த அலிகள் கூட்டத்தில் மாட்டினேன்.நானும் அலிதான் என்று சூளுரைத்தேன்.அந்த இடத்தில் ஜிம்ப்பாப்வேயில் சந்தித்த ஆப்கானியன் அருளிய ‘காண்டம் ‘தயவு. நன்றிகள் அவனுக்கு.அலியாக பாவாடை தாவணியில் ஏழு தீரர்களைப் புரட்டிப் போட்டு விரட்டியடித்தேன்.அலிகள் போர்வையில் இருந்த தீவிர வாதிகளைக் காட்டிக் கொடுத்தேன். சொல்லவந்த தென்னவென்றால் அலியாகவும் நான் அசடு வழியவில்லை.

இப்ப என்ன செய்யப் போகிறேன் ? வாசல் மெயின் மல்லாந்து கிடக்கிறது.கொலாப்ஸிபிள் ஷட்டரை இழுத்து உள்பக்கம் பூட்டிக் கொண்டு வீட்டில் நுழைந்தேன்.

போட்டது போட்டபடி விட்டுச்சென்றிருக்கிறாள் என் மனைவி சுபத்ரா.அண்ணண் மகள் திருமணம் என்றால் சும்மாவா ?

துவாரகி ஏதேதோ புலம்பினான் போfனில். ‘வத்சுவுக்குப் பார்த்த இடம் சரியில்லைடா ,பாவி, சீக்கிரம் வா, உன் சிங்கப்பூரும் நீயும் ‘ என்றான்.

இதோ…இப்ப பொடிசா ஒரு சமையல் பண்ணிச் சாப்பிட்டுக் கிளம்ப வேண்டியது தான்.ரெண்டு நாளில் கல்யாணம். நாற்பது கிலோ மீட்டர் தள்ளி….பயணத்துக்கு ‘மாடிஸ் ‘ போதும்.

இந்த ‘கப்போ நூடுல்ஸ் ‘ எங்கே ?எப்போதும் நிரப்பி வெச்சிருப்பாளே கப்போர்ட் முழுக்க! கிடைத்தால் ஒரு டம்ளர் வென்னீர் ஊற்றினால் தீர்ந்தது வயிற்றுப்பாடு.

‘உங்க சாப்பாடே சரியில்ல…என்னத்த சாப்பிடறீங்க நீங்க ?ஒரு வாரம் தங்குங்க,திருவண்ணாமலையிலெ,நான் நல்ல சாப்பாடு செய்து போடறேன் ‘உருகுவாள் தீவிரி.கால் மணி நேரம் கொடுத்தால் போதும்.

கடுகிச் சமைப்பவள்.அட்சய பாத்திரம் ஏதாவது வைத்திருக்கிறாளா என்று சோதனை போடவேண்டும்,ஒரு தடவை.துவாரகி இவளுக்கும் கடவுள்.

‘ஆ! ஒருவாரம் இங்கேயா ?உன் ஏ,பி,ஸி,டி..க்கெல்லாம் என்ன பதில் சொல்வே ?ஒரு வாரம் அப்பாயிண்ட்மெண்ட் உண்டா எனக்கு ? ‘

‘அப்பாயிண்ட்மெண்ட் கேக்கற ஆளா நீங்க ?போன வருஷம் அப்படித்தானே ‘தரம் மேத்தா ‘ வந்திருந்தப்ப ‘என் ப்ராஜெக்ட் பைfலை வெச்சிட்டுப் போயிட்டேன் ‘னு துழாவி எடுத்திட்டுப் போனீங்க ?அதற்கப்புறம் பதினெட்டு மாசம் விட்டு இப்பத்தான் வர்றிங்க ‘

‘நெருப்பே!உனக்கு எப்படிச் சொல்வேன் ?உன்னில் எனக்குக் குளிரி விறைக்கும்.நான் பனிக்கட்டியாய் உறைந்து கெட்டித்து மலராமலே போகிறேன் சகியே!உன்னைப் பிரியாமையை எங்கே யாசித்து விடுவேனோ என்று பயந்து தானே ஓடுகிறேன் ?பெண் அரசியே!உன்னை விட்டு ? ‘

அந்த கம்பீரமும் அந்த அழகும் அடிக்குமென்னை. அப்பப்பா!

சுபத்ரா சொன்னபடி சமையலறை ஷிப்fடிங் செய்து முடித்தேன். மாடியும் கீழுமான உள்புற படிகளமைந்த டூப்ளெக்ஸ் ப்fளாட் எங்களுடையது.மேலும் கீழும் இரு பேண்ட்ரிஅமைப்புகள் உண்டு.தச்சனை வரவழைத்து வாசல் கதவைச் சரி செய்தேன்.

அவனை விட்டே ப்fரிட்ஜை மேலேற்ற வைத்தேன். சுபத்ராவுக்கு திடாரென்று மாடி சமயலறையில் சமைத்துப் பார்க்க ஆசை வந்து விட்டது.முதலிலேயே சொல்லி வைத்திருந்தாள் எனக்கு. ‘உங்க வீட்டுக் கும்பல் எல்லாம் வரும் கல்யாணத்தைச் சாக்கிட்டு.என்னாலே கீழே புழங்க முடியாது. அட்லீஸ்ட் மேலே சமையல் என்று வந்து விட்டேனானால் உங்க பெரியம்மா பிடுங்கல்லேருந்து தப்பலாம்.

பெரியப்பாவுக்குத்தான் கண் போயிடுச்சுன்னால் இவங்களுக்கென்ன ?தானும் கூடவே கண் தெரியல்லேன்னு…பாடு…அத்தனையிலே …உள்ளே நடக்கிறது சகலமும் தெரிஞ்சாகணும்…கொள்ளிக் கண்ணு வேற,,,சே!..உங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க… மரியாதை கொடு…பணிவா நடந்துக்க…ன்னு உபதேசம்…ப்fளைட் விட்டு இறங்கி அடிச்சிப் பிடிச்சி ஓடி வர வேண்டாம்.சமையல் ரூமை ஷிப்fட் பண்ணிட்டு வாங்க…கல்யாண வேலை எல்லாம் எங்கண்ணன் துவாரகி பார்த்துப்பான்.இருக்கிற திரிசமன் எல்லாம் உங்க ரெண்டுபேருக்கும் அத்துப்படி தானே ? ‘

பேச விட்டால் நான்ஸ்டாப் என் சகதர்மிணி.

தச்சன் மாய்ந்து மாய்ந்து போனான். ‘அதெப்படி இப்படி விழுந்தது கதவு ?கொள்ளை போயிடுச்சா ?எத்தினி பேரு ? என்ன என்ன போச்சு ? ‘

நான் பதில் சொல்லவில்லை.

ப்fரிட்ஜை இழுத்த பிறகு தான் தெரிய வந்தது.ப்fரிட்ஜ் சூப்பர் சைஜ்.மாடியில் செருகிடம் மீடியம் சைஜுக்கான ப்ரொவிஷன்.கூர்ந்து பார்த்தேன். நல்ல வேளையாக ஸ்லாப்பில் ஒரு இடுக்கு இருந்தது. தட்டினேன்.

அழகாகக் கையோடு வந்தது.தச்சனைக் கூப்பிட்டுச் சைகை காட்டினேன் ப்fரிட்ஜை வைக்கும்படி.

‘நீ…நீங்களா ? எப்படி ஐயா எடுத்தீங்க ? ‘

‘அட,நீ வேற…அது முன்னமேயே வீக்..கா ஆடிக்கிட்டிருந்தது… ‘

கூலியே பேசாமல் கொடுத்ததை வாங்கிப் போனான் தச்சன்.

உள்ளே போய் கணினி முன் அமர்ந்தேன்.ஈமெயிலைப் பிரித்தால் ஏகப்பட்ட குப்பை.செம்பாதியில் காதல். கடவுளே!அழகான பெண் காதலுக்கேற்றவள் என்று ஆண்களும் கெட்டிக்காரனெல்லாம் கில்லாடிகள் என்று பெண்களும் நினைத்துத் தொலைக்கிறார்களே! அதி வைஸ் வெர்ஸா அம்மணியரே!

யார் நம்புகிறார்கள் நான் சொன்னால் ?பெண் பாகங்களில் என் புரிதலோ அறிதலோ இல்லை. தெய்வமே! என் உடல் செல்களிலெல்லாம் பிடி!பிடி! வெற்றி! என்கிற கோஷம் தானிருக்கிறது.அதிலும் மனசு இருக்கிறதே! அது ஒன்றி ஒன்றி பரத்தில் முடிகிறது. சிலநேரம் ருத்ரபதியாகவோ சிலநேரம் துவாரகாநாத் ஆகவோசொர்க்க லாபங்கள் என்னை மடியில் கிடத்தி அறிவைத் தூக்கிப் போட்டுக் கூத்தாடுகின்றன.

—-

தவறாக ஒரு அடையாளம் கதையில் பாதியை அனுப்பியிருக்கிறேன். மீதி பாதியை அனுப்புமுன் திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எல்லாரும் அறிந்த ஒரு மஹாபாரத கேரக்டரை நவீனப் படுத்தியிருக்கிறேன் என்பது புரிந்திருக்கும். அதை எப்படி நிலை நிறுத்த இஷ்டப்படுவார்கள் நம் வாசகர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?

**

மாலதி

====

Malathi

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி