டாக்ஸி டிரைவர்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

ஆனந்த் ராகவ்


ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டு கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். ஆரம்பமே கோளாறு. மும்பயிலிருந்து பிராங்பர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, பிராங்பர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத் தவரவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் நாங்கள் தாமதமாய் வந்ததால், எங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லவேண்டிய பீட்டர் க்ராஸ் மூணு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிப் போய்விட்டார். நாங்களே ஒரு டாக்ஸி பிடித்து அவர் வீட்டுக்குப் போக வேண்டும். டாக்ஸி பிடிப்பது, டிப் எவ்வளவு தரவேண்டும், அவனுக்கு இடம் தெரியுமா, ஒழுங்கான வழியில் போவானா என்று சில்லறை கவலைகள் மனதில் இறைந்திருந்தன.

பீட்டர் கிராஸ் என்னும் ஆஸ்திரியர் எங்களுக்கு நண்பர். நான் உறுப்பினராய் இருந்த மதராஸ் ரோட்டரி கிளப்பில் கலாசாரப் பரிவர்த்தனை திட்டதினால் அவர் எங்களுக்கு நண்பரானார். இந்தியாவுக்கு ஆராய்ச்சி செய்ய வரும் வெள்ளையர்களை கிளப்பின் இந்திய உறுப்பினர்களின் வீடுகளில் தங்கவைக்கும் இந்தத் திட்டத்தில் பீட்டர் இரண்டு மாதம் எங்களோடு மதராசில் தங்கியிருந்தார். வெள்ளைக்காரர்களுக்கு கலை , கலாசாரம் , சரித்திரம் சார்ந்த சில சமாசாரங்களால் இந்தியா மேல் ஏற்படும் அதீத ஆர்வத்தில் நம் உஷ்ணம், காரம், தூசி அத்தனையையும் பொறுத்துக்கொண்டு வந்து அவர்களின் தனித்தன்மையான கோணத்தில் இந்தியாவை அலசிஆராய்ந்து நமக்கெல்லாம் புலப்படாத இந்தியாவின் வசீகரங்களை சேகரித்துக்கொண்டு சந்தோஷமாய் திரும்பிப்போகிறார்கள். பீட்டர் அப்படி வந்தவர் தான். போன வருடம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வந்திருந்தார். வந்த முதல் வாரம் கடுகே காரம் என்று அலறி, வாரம் முழுக்க பேதியாகி பின்னர் சுதாரித்துக்கொண்டு, அரை டிராயரும் டா சர்டும் முதுகுப் பையுமாய் அலைந்து, ஒரு கோயில் விடாமல் சுற்றி, அதன் மூலை முடுக்கெல்லாம் காமிராவில் அடக்கி , அவைகளின் சரித்திரத்தை ஆராய்ந்து, இட்லி தோசை பிடித்துப்போய், அவரின் வெள்ளைத்தோலை பொன் வறுவலாய் ஆக்கிகொண்டு திரும்பி விட்டார். எங்களோடு தங்கியதால் மரியாதை நிமித்தம் எங்களை ஆஸ்திரியா அழைத்திருந்தார். ஐரோப்பிய ஹோட்டல்களின் டாலர் மிரட்டலில் பயந்து சிக்கனமாய் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தோதாய் பீட்டரின் அழைப்பை ஏற்று நாங்கள் கிளம்பிவந்திருந்தோம்.

வெளியே வந்ததுமே டாக்ஸி நிலையம் தென்பட்டது. கவலைதோய்ந்த முகத்தோடு வரும் எங்களைப் பார்த்தவுடனே எங்கள் நிராதரவற்ற நிலையை உணர்ந்து ‘டாக்ஸி ‘ ? என்று ஒரு ஆஜானுபாகு வெள்ளைக்காரன் ஒருவன் வந்து நின்றான். அவன் சாம்பல் கணகளை, என் ஐந்தடி தூரத்திலிருந்து அண்ணாந்து பார்த்து ‘எஸ் ‘ என்றேன். அவன் உயரமே என்னை பயமுறுத்தியது. ரத்த சோகை வெள்ளைத் தோலும் செம்பட்டை நிற மீசை தாடியுமாய் இருந்தான். ஆங்கிலம் தெரியாத, ஜெர்மன் பேசும் இந்த ஊரில் ஒரு வெள்ளைக்கார டாக்ஸி டிரைவருடன் எப்படி மன்றாடப்போகிறேன் என்று யோசனையில் சட்டையில் முகவரி காகிதத்தைத் தேடினேன். அவன் என்னைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்ததை, அந்த முகம் அறையும் குளிரிலும் என் கவலை ஓட்டத்திலும் நான் சரியாய் கவனிக்கவில்லை. பீட்டரின் முகவரி எழுதிய காகிதத்தை அவனிடம் நீட்டினேன்.

‘ யு நோ திஸ் ப்ளேஸ்.. ? பாக்மன் காசே…பதினாலாவது டிஸ்ட்ரிக்ட் ‘

அவன் கொஞ்சமாய் அதைப் பார்த்துவிட்டு ‘நோ ப்ராப்ளேம்.. ஐ கேன் பைன்ட் இட் ‘ என்று புன்னகைத்தான்.

அவன் கொஞ்சமாய் ஆங்கிலம் பேசியது ஆறுதலாய் இருந்தது. அவன் எங்கள் உடமைகளை தள்ளிக்கொண்டு போய் டாக்ஸி என்ற மஞ்சள் விளக்கு கிரீடம் வைத்திருந்த அந்த மெர்சிடிஸ் பென்ஸின் பின்புறம் திணித்தான். கதவை பணிவாய் திறந்து விட்டான். இருக்கையின் பஞ்சு மென்மை எங்களை முனகாமல் ஏற்றுக்கொண்டது.

‘மெர்சிடிஸ் … டாக்ஸி.. வாடகை அதிகமா இருக்கப்போவுது ‘ என்றாள் பானு.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை ‘ என்றேன் நான், அதே கவலையுடன்.

அவன் வந்து முன் சீட்டில் உட்கார்ந்து.. என் முகவரிக் காகிதத்தை இன்னொரு முறை பார்த்துவிட்டு.. பக்கத்தில் இருந்த சின்ன புத்தகத்தின் பக்கம் பிரட்டி… விரலால் மேய்ந்து… திருப்த்தியானவுடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு முன் பக்கக் கண்ணாடி வழியாக என் முகம் பார்த்து ‘ வி வில் கோ ? ‘ என்று புன்னகைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.

கார் வழுக்கிக்கொண்டு போனது. நகரத்தின் சுவடே இல்லாமல் வனாந்தரம் மாதிரி அடர்த்தியான மரங்கள் குளிருக்கு விறைத்துபோனது போல அசையாமல் நின்றிருந்தன. அந்த சாயந்தர மூன்று மணிக்கே இருட்டு லேசாகக் கவிந்து வாகனங்கள் வெளிச்சக் கண்கள் விழித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தன. யதேச்சையாக முகத்தைத் திருப்பியதும் அவன் தனக்கு முன்பிருந்த கண்ணாடி வழியாய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. கண்கள் சந்தித்ததும் ‘யு ஆர் ப்ரம் இண்டியா ? ‘ என்றான்.

‘யெஸ் ‘

‘நார்த் ஆர் சவுத் ‘

‘நார்த் ‘ என்றேன் ஏதோ சொல்லி தட்டிக்கழிக்கும் மனப்பான்மையில்

‘டெல்லி ? ‘ என்றான் விடாமல்

‘யெஸ் ‘

‘யு ஆர் கமிங் ஹியர்…பர்ஸ்ட் டைம் ‘

நான் ‘யெஸ் ‘ என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பி மறுபடி வெளியே பார்த்தேன் அவனிடம் பேச விருப்பமில்லை என்கிற தோரணயில். நான் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசுவதை விரும்பாதவன். அவர்கள் பேசும் ஊர்வம்பும் அரசியலும், சினிமாவும் எனக்குப் பிடிக்காதவை. மேலும் இந்த ஆட்டோ..டாக்ஸி ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களிடம் பேசுவது ஆழம் பாக்கும் செயல் என்பது என் கருத்து. ஆள் சாதுவா ? சண்டியா ? வழி தெரிந்தவனா இல்லை எந்த வழியாய் அழைத்துப்போனாலும் பேசாமல் இருக்கும் மெளனியா என்று கணிக்கும் உத்தி. மதராஸ் ஆட்டோவில் பயணித்து நான் கற்ற பாடம்.

மும்பய் விமான நிலையத்தில் பின்னிறவு கிளம்பி ப்ராங்பர்ட்டில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தூக்கம் இழந்த அசதியில் நானும் பானுவும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தூங்கிப்போனோம். வாகனத்தின் இளஞ்சூட்டிலும், பளிங்குச் சாலையின் குலுக்கலில்லா விரைவிலும் தடங்கலில்லாமல் ஆழ்ந்த தூக்கத்துக்கு நழுவினோம்.

ஒரு சின்ன அவசர ப்ரேக்கின் தள்ளல் எங்கள் இருவரையும் எழுப்பியது. பானு திடுக்கிட்டு எழுந்து, சிவந்த கண்களோடு ‘ இன்னும் வந்து சேரலயா ? டைம் என்ன ? ‘ என்றாள் வாயைத் துடைத்துக்கொண்டு. கடிகாரத்தைப் பார்த்தேன். முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. இவ்வளவு நேரம் ஆகுமா ? என்ற சந்தேகத்தில் நான் அவன் தோளை லேசாகத் தட்டி ‘ வேர் ஆர் வி ? ‘ என்றேன்..

அவன் ‘ பைவ் மினிட்ஸ்… ‘ என்றான்..

பானு டாக்ஸி மீட்டரைப் பார்த்து ‘என்னங்க 310 ஷில்லிங் காமிக்குது ? ருபாய்ல எவ்வளவு ? ‘

‘…. கிட்டத்தட்ட 1400 ரூபா… ‘

‘நாசமாப் போச்சு.. ஏர்போர்ட் லந்து சிட்டிகுள்ள வர 1400 ரூபாயா.. இவன் ஏமாத்தறாங்க…சுத்து வழில வந்திருக்கான்… ‘

எனக்கும் அந்தச் சந்தேகம் தொற்றி கொண்டது. கண்ணாடியில் மறுபடி அவன் என்னை உற்று நோக்கும் பார்வை தெரிந்தது..

‘ஊருக்குள்ள வர்றத்துக்கு எவ்வள வாடகை ஆகும்னு பீட்டர் கிட்ட கேட்டுகிட்டாங்களா ‘

‘இல்ல பானு. அவரு வந்து பிக்கப் பண்ணிக்கற ஐடியா இருந்ததால கேட்டுக்கலை. ‘

‘அவரை போன் பண்ணி ஏர்போர்ட்டுக்கு மறுபடி வரச்சொல்லியிருக்கலாங்க.. நீங்க தான் சங்கோஜப்பட்டுகிட்டு கூப்பிட மாட்டேன்னுட்டாங்க ‘

‘ அந்த ஆளு தன் வேலையை உட்டுட்டு வீட்லந்து வந்து, நாம ப்ளைட்டு மிஸ் பண்ணது தெரியாம மூணு மணி நேரம் காத்திருந்திட்டு வீட்டுக்கு திரும்பி போயிருக்காரு. அவரை மறுபடி ஏர்போர்ட்டுக்கு வான்னு எப்டி கூப்படறது ? ‘

‘ப்ராங்பர்ட் ல கனெக்ட்டிங் ப்ளைட் விட்டுட்டோம்ல. அங்கிருந்து அவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருக்கலாம் ‘

‘ பண்ணன் பானு. போன் அடிச்சிகிட்டு இருந்தது. அவரு எங்கியோ வெளிய போயிட்டாரு போல.. இதெல்லாம் எப்ப்டி தவிர்க்க முடியும் சொல்லு ‘

‘அநியாயங்க…. மெட்ராஸ்ல ஆட்டோ காரனுக்கு மீட்டர் மேல ஐஞ்சு ரூபா குடுக்க சண்டை போடுவீங்கல்ல.. இங்க சேத்து வச்சி அழுங்க. எவனோ இளிச்ச வாயனுங்க மாட்னாங்கன்னு ஊரை சுத்தி காமிக்கறான். ‘

‘ ஏமாறனும்னு இருந்தா ஏமாந்துதான் ஆகணும். புது ஊரு. ஆளுங்களைத் தெரியாது…. ‘

‘ ஊரை நல்லா பாத்துக்கங்க.. தனியா ஒரு முறை வரவேணாம் ‘

‘கொஞ்சம் பேசாம வா ‘

மறுபடி கண்ணாடியில் கண்கள் சந்தித்தன. அவன் தன் கண்களை என்னிடமிருந்து விலக்கிக்கொண்டான். டாக்ஸியின் வேகம் குறைந்திருந்தது. வெளியே தெரிந்த விளக்கிட்ட கட்டிடங்கள், அவசர நடை மனிதர்கள் , சகக் கார்கள் என்று நகரத்தின் அடையாளங்கள் ஆறுதலாய் இருந்தது. அவன், என் முகவரி எழுதிய காகிதத்தை இன்னொரு முறை எடுத்துப் பார்த்துவிட்டு இடமும் வலமுமாய் தலையை திருப்பித் திருப்பிப் பார்த்தபடி ஓட்டி வந்து வேகம் குறைத்து ஓரிடத்தில் நிறுத்தினான். எங்கள் இலக்கு எண் தெரிந்தது. ‘யுவர் அட்ரஸ் ‘ என்றான் சுருக்கமாய். நான் என் பர்சிலிருந்து மனம் லேசாக அடித்துக்கொள்ள 350 ஷில்லிங் சேகரித்து எடுத்துக்கொண்டு இறங்கினேன்.

காரை விட்டு இறங்கி வந்து டிக்கியைத் திறந்தான். எங்கள் பெட்டியை எடுத்து வைத்தான்.

பெட்டியை கீழே வைக்கக் குனிந்த போது அவன் கழுத்திலிருந்து ஒரு ருத்ராட்ச மாலை நழுவி தொங்கியது. நிமிர்ந்து எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு சட்டைக்குள் போட்டுக்கொண்டான்.

‘பனி விலுந்து ரோடு மோசமா இருக்கு.. அதனால வர லேட் ஆச்சு. சுத்தி வரலை.. தப்பா நெனைகாதிங்க. மதராஸ்லந்து வந்த உங்கல சந்திக்க ரொம்ப மகில்ச்சி.. ‘ என்றான்.

ஆனந்த் ராகவ்

—-

anandraghav@yahoo.com

Series Navigation

ஆனந்த் ராகவ்

ஆனந்த் ராகவ்