நாகூர் ஹந்திரி

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


1.

“இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமன்றி வேறொன்றுமில்லை. என்றும் பயபக்திய்டையோருக்கு நிச்சயமாக மறுமை வாழ்க்கையே மிகவும் மேலானது…”

– அல் குர்ஆன் (அல்-அன்-ஆம் :32)

ஞானிகளின் உறக்கமானது அறியாதவர்களின் விழிப்பு நிலையை விட மேலானது – அல் ஹதீஸ்

நானும் துல்பிகாரும் நெருங்கிய நண்பர்கள். இணை பிரியாத தோழர்கள். ஒரே வயது, ஒரே தெரு, ஒரே மதம், ஒரே பள்ளிக்கூடம், ஒரே வகுப்பு இப்படி நிறைய ‘ஒரே’ எங்களிடம் இருந்தது.

துல்பிகார் படிப்பில் புலி. எல்லா பாடங்களிலும் வகுப்பில் முதல் மாணவன் அவன் தான். அதே சமயத்தில் சிறு வயதிற்கே உறிய விளையாட்டும் எங்களுக்கு இருந்தது. ஒரே பேருந்தில் தான் நாகப்பட்டினத்திற்கு படிக்க செல்வது வழக்கம். இதோ இன்னொரு ‘ஒரே’ கூட உள்ளது பாருங்களேன்.

நாங்கள் பள்ளிக்கு போகாமல் படம் பார்க்க செல்வோம் ஆனால் மாணவர் வருகை குறிப்பேட்டில் எங்களது பெயர் பள்ளிகூடம் வந்ததாக இருக்கும்.

வாத்தியார் ‘தர அட்டை’யை கொடுத்து வீட்டில் தகப்பானாரிடம் காட்டி அவரின் கையெழுத்து வாங்கி வருமாறு எங்களிடம் கூறுவார். நாங்கள் கடைசி நாள் வரை கொடுக்க மாட்டோம்.

கடைசி நாள்,

வாத்தியார் ‘யார் யார் கொண்டு வரலை’ என்று கேட்பார்.

நாங்கள் எழுந்து நிற்போம்.

வாத்தியார் ‘ஏன் கொண்டு வரலை ?’ என்று கேட்பார்.

நாங்கள் ‘சார்.. நாங்க கையெழுத்து வாங்கிட்டோம் ஆனா மறந்து வச்சுட்டு வந்துட்டோம்.. இப்ப போய் எடுத்துட்டு வந்துடறோம்’ என்று பொய் சொல்வோம்.

உண்மையில் கையெழுத்து வாங்கிய அட்டை பைக்குள் தான் இருக்கும். அப்படி சொல்லி அனுமதி வாங்கி போய் பாண்டியன் கொட்டகையில் படத்தை பார்த்துவிட்டு பள்ளிகூடம் திரும்ப வந்து ஏற்கனவே வாங்கி பையில் வைத்திருந்த ‘தர அட்டை’யை எடுத்து என்னமோ அப்பொழுது தான் வாங்கி வந்த மாதிரி கொடுத்து விடுவோம்.

வாத்தியாருக்கும் அப்போது சந்தேகம் வராதது நல்லதா போச்சு என்று இருந்தோம். ஆனால் பிறகு அப்படி செய்வது தவறு என்று நாங்கள் உணர்ந்துக் கொண்டோம் என்பது வேறு விஷயம்.

நாகூரில் நடந்தேறும் எந்த விழாவானாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் கொண்டாடி மகிழ்வோம்.

நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள், மீலாது நபி, மெளலுது ஓதுதல் அதாவது ரசூலுல்லா பெயரால், கெளது நாயகம் பெயரால் புகழ்மாலை பாடுதல், அப்புறம் முக்கியமாக ஹந்திரி..

இந்த ஹந்திரி 14 நாட்கள் நடக்கும்.

நானும் துல்பிகாரும் 14 நாளும் புது சட்டை, புது கைலி உடுத்தி, புது கைநேஞ்சி(கைக்குட்டை) வைத்து கடைத் தெருவில் உலா வருவோம்.

ஹந்திரிக்கு சில நாட்களுக்கு முன்பே தர்காவின் நான்கு வாசல்களில் அலங்கார வாசலில் விளக்கு வைத்து அலங்கரித்திருப்பார்கள். பார்ப்பதற்கு பிரம்மிப்பாய் அழகாய் இருக்கும்.

‘இந்த வருஷம் போன வருஷத்தை விட பிரமாதமா இருக்குங்கணி’ என்று ஒவ்வொரு வருஷமும் சொல்வதுண்டு.

தர்காவை ஒட்டிய தெருக்களில் புதிதுபுதிதாய் கடைகள் முளைத்திருக்கும். கைலி(லுங்கி) கடைகள் ஏக விளம்பரத்துடன் ஜொலிஜொலிக்கும். கிட்டத்தட்ட எல்லா ஒலிநாடா கடைகளிலும் நாகூர் ஹனிபா தன் குரல் வளத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்.

முதல் நாள் துவஜாரோகணம் என்னும் கொடியேற்றம் நிகழ்ச்சி. பக்கத்து ஊரான நாகப்பட்டினத்திலிருந்து இருந்து கப்பலில் கொடியை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து எங்களது ஊரில் தர்கா உள்ளேயும் வெளியேயுமாக உள்ள 5 மினாராக்களிலும் பாம்பரம் நட்டு, அலி(ரலி) அவர்களது இரட்டைவாள் கொண்ட கொடி அல்லது பிறைக் கொடியை பாவட்டத்தின் கீழ் பறக்க விடுவார்கள்.

நாங்களும் உண்டியல் குலுக்கி காசு வசூலித்து கொடியேற்றம் நிகழ்ச்சி அன்று கப்பல் இழுத்து வருவோம்.

கப்பலில் ஒலி நாடாவில் ஹனிபா பாடல் ஒலிக்க கட்டி இழுத்து வருவோம்.

துவக்க பாடலாக எப்பொழுதுமே

‘பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்

நம் பெருமான் ரசூலுல்லாவின்

பாதை செல்லுங்கள்..’

என்ற பாட்டை தான் போடுவோம்.

அதை தொடர்ந்து,

‘கருணை கடலாம்

காதர் வலியின்

காரண சரிதம்

கேளுங்கள்..’ என்று துவங்கி

‘கடலோரம் வாழும் காதர் மீரா..’,

‘சாஹே மீரா சஞ்சலம் தீர்க்கும்..’ என்று முழங்கி

‘திக்கு திகந்தவும் கொண்டாடியே வந்து..’

என்ற பாடலுடன் கடைசியாக முடிப்போம்.

அப்புறம் 8ஆம் நாள் இரவு வாணவேடிக்கை நடக்கும். தர்காவின் அலங்கார வாசலில் இந்த வேடிக்கை நடக்கும். நாஙகள் 7ஆம் நாள் இரவே அதைக் காண தயாராகி விடுவோம் என்பது பெரிய வேடிக்கை.

அதன் பிறகு முக்கியமான நிகழ்ச்சியாக 9ஆம் நாள் நள்ளிரவு கொடியேற்றம் போலவே சந்தனத்தை தாபூத்து என்னும் சந்தனக்கூட்டில் வைத்து விடிய விடிய எடுத்து வந்து 10ஆம் நாள் அதிகாலை தர்காவில் அடங்கியிருக்கும் எங்களது எஜமானின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுவார்கள்.

வெளியூரிலிருந்து எல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். மழை அவ்வப்போது வந்து வியாபாரத்தை பாதித்தாலும் மழை போல மக்கள் வர தவறுவதில்லை. நாங்களும் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்.

ஹந்திரி நிகழ்ச்சிகளில் இறுதியாக பாத்திஹா ஓதி ஹதியா செய்து(வேதபாராயணம்) குண்டுகள் முழங்க துவஜா அவரோகணம் என்னும் கொடியை இறக்குவார்கள்.

நான் துல்பிகாரிடம் கேட்டேன், ‘ஏங்கனி.. இந்த ஹந்திரி ஏன் கொண்டாடுறாஹான்னு உம்பருக்கு தெரியுமா ?’ என்று.

துல்பிகார், ‘என்னங்கனி திடார்னு இப்படியொரு சந்தேகம்’ என்றான்.

நான், ‘அட தெரியாம தானே கேக்குறாஹா.. தெரிஞ்சா தான் சொல்லுமே.. கேப்போம்’ என்றேன்.

துல்பிகார், ‘எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. எஜமாண்ட வருஷத்தன்னக்கி அஹ அடங்கியிருக்கும் இடத்துல சந்தனம் பூசுவாஹா.. அது மட்டும் தான் முக்கிய விசேஷம்.. மத்த கொடியேத்துறது எல்லாம் அதோட சேர்ந்துகிட்டது தான்..’ என்று அதற்கு மேல் பேச விரும்பாதவன் போல் நழுவி விட்டான்.

(சிறப்பான 447 ஆம் வருட ஹந்திரி நிகழ்ச்சி 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 19ந் தேதி தொடங்க இருக்கும் வேலையில்) எனக்கு ஆவல் விடாமல் ஒரு வழியாக கேட்டு படித்து தெரிந்து கொண்டேன்..

நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் பாதுஷா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை தனது 68ஆவது வயதில் உலக பயணத்தை முடித்து கொண்டார்கள். அவர்களது வஃபாத்திற்கு பிறகு அன்னாரது சீடர்கள் 404 பேரும் பான்வா, மலங்கு, மதாரி, ஜலாலி என்று நான்கு வகுப்பாக பிரிந்து அன்னாரது காரணமகனார் ஹஜ்ரத் யூசுப் சாஹிப் அவர்களிடம் விடைபெற்று ஆண்டு தோறும் அதே மாதத்தில் சந்திக்கலாம் என்ற ஏற்பாட்டுடன் சன்மார்க்க பணி புரிய பிரிந்து சென்றார்கள். அடுத்த ஆண்டான ஹிஜ்ரி 979ஆம் ஆண்டு (கி.பி.1559) முதல் ஹந்திரி கொண்டாடப்பட்டது.

உண்மையில் இஸ்லாமிய மார்க்கம் வாளால் பரப்பப்பட்டது அல்ல கொள்கைகளால் அறநெறிகளால் மட்டுமே மனித மனத்தை ஈர்த்தது என்பதற்கு எடுத்துகாட்டாய் இன்றளவும் நாகூர் நாயகமே தென்னிந்தியாவில் விளங்குகிறார்கள்.

அவர்கள் இறைநேசராய் இருந்து மதங்களை தாண்டி மனித குலத்திற்கு சேவையாற்றினார்கள். இந்த ஹந்திரியில் கூட மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக பல நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆனால் ஹந்திரி என்ற முக்கிய விழா விபரமில்லாத எங்களை பொறுத்த வரை ஈமானை வளர்க்கும் பக்தியான விழாவாகவும் இல்லாமல் எஜமானை நினைவுறுத்தும் சக்தியான விழாவாகவும் இல்லாமல் ஏதோ களிப்பான கேளிக்கை நிகழ்ச்சியாக தான் இருந்து வந்தது என்பதே உண்மை.

2.

“மறை பொருளாக விளங்கும் ஆதி மூலத்தை நினைவு கூருவோர் மிக்க உண்மையான இருக்கையில் சர்வசக்திபடைத்த வல்ல நாயனிடத்தில் இருப்பர்” – அல்குர்ஆன் (கமர் :55)

“உண்மையான் மெய்யடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் உடல் மண்ணுலகில் இருப்பினும் அவர்களின் ஆன்மா அல்லாஹ்வின் ஆட்சி பீடத்தின் கீழ் இருக்கிறது.

– அல்ஹதீஸ்

பள்ளி இறுதி ஆண்டு முடிந்தது. இருவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தோம். எங்கள் ஊரை பொறுத்த வரை ஒன்று திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரி இல்லையென்றால் சென்னையில் உள்ள புதுக் கல்லூரி இந்த இரண்டு கல்லூரியை விட்டால் வேறு கல்லூரியே தெரியாது என்ற அளவிற்கு தான் இருப்போம்.

கல்லூரி வாழ்க்கை எங்களை பிரிக்க வில்லை. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தோம். கல்லூரி விடுதியிலேயே ஒரே அறையில் தங்கியும் வந்தோம். கல்லூரி படிப்பும் நல்ல விதமாக தான் அமைந்தது.

எங்களது ஊர் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சொந்த ஊரை யாருக்குத் தான் பிடிக்காது என்கிறீர்களா ?

நான், ‘ஒய் அடுத்த வாரம் வெள்ளிகிழமை லீவு வருதே என்னா சேதி ?’ என்பேன்.

துல்பிகார், ‘வியாழக்கிழமை லீவு போட்டுடுவோங்கனி.. புதன்கிழமை சாயந்தரமே கிளம்பிடுவோம்’ என்று கூறி சொன்னது போலவே கிளம்பி வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்களும் விடுப்பு எடுத்து விட்டு செவ்வாய்கிழமை காலை தான் கல்லூரி வகுப்புக்கு செல்வோம்.

ஊரை விட்டு கிளம்பும் போது துல்பிகார் அழுது மடிவான். ‘என்னங்கணி சின்ன புள்ள மாதிரி அழுவுறீயோம்’ என்று அவனை திட்டும் போது நானும் சின்ன பிள்ளையாகி இருப்பேன். வெளியூர் என்றாலே பிடிக்காது. என்ன செய்வது ?

போய்த் தானே ஆக வேண்டும். படிப்பாயிற்றே..

இதனால் தான் இன்றளவும் நிறுவனங்களாகட்டும், கல்லூரிகளாகட்டும் எங்க ஊர்காரர்களுக்கு இடம் கொடுக்கவே யோசிக்கிறார்கள்.. ‘நாகூர்காரங்க லீவுக்கு ஊருக்கு போனா திரும்ப வரவே மாட்டாங்கப்பா’ என்று தான் சொல்கிறார்கள்.

மூன்று + இரண்டு ஆண்டுகள் என கல்லூரி வாழ்க்கை இனிதாக முடிந்தது. துல்பிகாரை பாராட்டாதவர்களே இல்லை, ஏனெனில் அவன் தான் கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவன்.

வேலை தேடும் படலம்.

பல ஊர்களில் ‘காலணா காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கணும்’ என்பார்கள். ஆனால், எங்கள் ஊரில் ‘காலணா காசா இருந்தாலும் கப்ப(கப்பல் அதாவது வெளிநாட்டு) காசா இருக்கணும்’ என்பார்கள்.

வெளிநாடு கனவுகள் எங்களது ஒவ்வொரு இரவுகளையும் பகல் வெளிச்சமாக்கியது. ஆமாம், எந்த வெளிநாட்டிற்கு போகலாம் ? துபாயா ? சிங்கப்பூரா ?.

இந்த இரண்டு ஊரும் மத்தவங்களுக்கு எப்படியோ.. தெரியாது.. ஆனால் எனக்கும் துல்பிகாருக்கும் பொல்லாத ஊரு.. எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது துல்பிகாருக்கோ துபாயில் வேலை கிடைத்தது. பிரியும் நேரம் வந்ததும் பெருந்துயரத்துடன் பிரியா விடை பெற்றோம்.

சிங்கை வாழ்க்கை சங்கையான வாழ்க்கை என்று சொல்ல முடியாவிட்டாலும் சோக வாழ்க்கை அல்ல. பொருளாதார கஷ்டத்தை சமாளிக்க முடிந்த வாழ்க்கை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கிணங்க நானும் காசு சேர்ப்பதில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தேன்.

எனது ஊர் நினைப்பு எப்போதும் என்னை விட்டு அகன்றதில்லை. முஸ்லீம்களாகிய நாங்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தொழுகை என்று வந்து விட்டால் கிப்லாவை நோக்கி திரும்பி விடுவது போல் நானும் ஒவ்வொரு வேலையும் எனது ஊரின் பக்கமே திரும்பி நின்றேன். எதை பார்த்தாலும் ஊர் ஞாபகம். ஒவ்வொரு விழாவாக ஞாபகம் வந்தது.

இந்த ஒடுக்கத்து புதன் என்று ஒரு விழா வரும். ஒரட்டி என்று ஒன்று சுட்டு தருவார்கள் பாருங்கள்.. அல்லாமா.. பிரமாதம்.. ஒரட்டியை எறச்சி ஆனம் தொட்டு தான் சாப்பிட வேண்டும். எழுதிக் கொண்டிருக்கும் போதே வயிறு கூவுகிறது, வாய் ஊருகிறது.

எங்களது ஊரை பற்றி பல பேர் பல மாதிரி சொல்வார்கள், தர்காவில் அது நடக்குது இது நடக்குது என்று. பத்திரிக்கைகளில் கூட எழுதுவார்கள். மேடையில் கூட பேசுவார்கள். நல்லவை கூடவே தானே கெட்டவையும் பிறக்கிறது.

புனித ஹஜ்ஜீக்கு பயணம் மேற்கொண்டு செல்லும் போது கஃபத்துல்லாஹ்வையும் பார்க்க வேண்டும் ஷைத்தானுடைய கல்லும் அங்கே தான் இருக்கிறது அதையும் தான் பார்க்க வேண்டும்(கல்லெறியத் தான்). அது போல என்னைப் பொறுத்த வரை கெட்டவை இருந்தாலும் நல்லவையும் இருக்கிறது.

எங்கள் ஊரில் ‘சோத்து மழை’ பொழியும். தர்காவில் ‘சோத்து சீட்டு’ என்று கொடுப்பார்கள். மிஸ்கீன்கள்(யாசிக்கும் ஏழைகள்) எல்லாம் ‘சோத்து சீட்டை’ விற்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

கொஞ்சம் இருங்கள், கைத் தொலைபேசியில் யாரோ அழைக்கிறார்கள்..

‘ஹலோ’- நான்

‘அஸ்ஸலாமு அலைக்கும்’- எதிர்முனையில் துல்பிகார்.

நான் பூரித்து போய், ‘வ அலைக்கும் ஸலாம்.. என்னங்கனி எப்படி இருக்கியோம் ?’.

துல்பிகார், ‘ஆமா.. இருக்காஹா.. கடுப்பாவுதுங்கணி.. பேசாம ஊருக்கு போயிடலாம்னு இருக்கேன்’ என்று அலுத்துக் கொண்டான்.

நான், ‘அல்லாவே.. ஏங்கணி.. இப்ப ஊருக்கு போய் என்னா செய்றது ?’ என்றேன்.

துல்பிகார், “தொப்பி கட வைச்சாவது பொழச்சுக்கலாங்கணி’ என்றான்.

நான், ‘அதான்.. சின்ன ஹொத்துவா பள்ளிக்கு எர்தாப்ல ரெண்டு கட இருக்கே, இத்தனைக்கும் நீம்பர் துபாய்ல பெரிய கம்பெனில பெரிய பதவியில் இருக்குறீயோம். அல்லாஹ்ட உதவியால பெரியோர்களோட துவா பரக்கத்தால ஒம்பருக்கு நல்ல விதமாக அமைஞ்சிருக்கு, அதை விட்டுட்டு வர்ரதாவது, ஊர்ல தொழைச்சுடுவாஹல்வோ தெரியும்ல.. பேசாம ஊருக்கு வந்துடலாம்னு சொன்னீயமே.. நான் சொல்றத கேளும்.. பேசிக்கிட்டே அங்கேயே இருந்துடும்’ என்று கடைசியாக நாகூருக்கே உறிய குறும்பில் பேசி முடித்தேன்.

அப்புறம் நானும் துல்பிகாரும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் வாய்ப்பு இந்த அத்தியாயத்திலேயே ஏற்பட்டது. இரண்டு பேரும் ஒரே நாளில் ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்து, முடிவெடுத்தது போலவே இரண்டு பேரும் ஒரே நாளில் ஊரில் சந்தித்தோம்.

நாங்கள் இருவரும் கல்லூரியில் படித்த காலங்களில் கல்லூரிக்கு செல்லும் போதும் விடுப்பில் வரும் போதும் முதல் வேலையாக தர்காவிற்கு செல்வது வழக்கம். அந்த நல்ல பழக்கத்தை விட்டு விடாமல் நான் சிங்கையில் இருந்து திரும்பிய பிறகும் முதலில் தர்காவிற்கு தான் சென்றேன். துல்பிகாரை நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் வரவில்லை. ஏன் வரவில்லை ? குழப்பமாக இருந்தது. எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு வர வேண்டியது தானே ? எஜமானை தஸ்லீமாத்து பண்றதை விட அப்படி என்ன முக்கியமான வேலை வந்து விட போகிறது ?

என் மனதின் குடைச்சலுக்கு விடை தெரியும் முகமாக நேரே அவன் முகத்தை பார்த்தே கேட்டு விடலாம் என்று என் வீட்டிற்கு செல்லாமல் அவன் வீட்டிற்கு சென்றேன்.

அவனை அழைத்தேன்.

கேட்டேன், ‘ஏன் தர்ஹாக்கு வரல ?’

துல்பிகார் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான், ‘தர்ஹாக்கெல்லாம் போ கூடாதுங்கணி அது ஷிர்க்’ என்றான்.

3.

“எவருடைய இருதயத்தை இஸ்லாத்தையுடைய அல்லாஹ் விசாலப்படுத்தியிருக்கிறானோ அவன், தன் இறைவனின் பிரகாசத்திலிருக்கிறான்…” – அல்குர்ஆன் (ஜூமர் :22)

மனிதன் என் இரகசியமாக இருக்கிறான். நான் மனிதனின் இரகசியமாக இருக்கிறேன். – ஹதீஸ்குத்ஸி

நான், ‘என்னது எஜமாண்ட வாசலுக்கு போறது ஷிர்கா ?’ என்று வியந்து போய் வினா எழுப்பினேன்.

துல்பிகார், ‘மொதல்ல எஜமாண்டே சொல்லக் கூடாது, எஜமாண்டா அது அல்லா தான், அல்லாவுக்கு இணை வைக்கிறது பெரிய பாவம், அதை விட பெரிய பாவம் உலகத்திலேயே இல்லை குரான்ல எல்லாம் தெளிவா இருக்குங்கணி’ என்று மேலும் மேலும் கருத்துக்கள் அள்ளி அள்ளி வீசினான்.

கடைசியாக, ‘நீம்பரும் போவாதியோம், நான் ஒரு கேஸட் தரேன், ஒரு புஸ்தகம் இருக்கு படிச்சு பாரும்’ என்று கூறி விடைபெறும் முன்பு இரண்டு ஒலி நாடாக்கள், நான்கு புஸ்தகம் என்று எடுத்து வந்து என் கையில் திணித்து ‘போய் படித்து பாரும்’

என்று கூறினான்.

எனக்கு குழப்பத்திற்கு மேல் குழப்பம், என்னடா இது நல்லா தானே இருந்தான், என்ன ஆச்சு இவனுக்கு ? இரண்டு வருஷம் அரபு நாட்டு பக்கம் போனான், அதுக்குள்ள இப்படி மாறி போயிட்டானே, சரி மாற்றம் நல்லது தான், ஆனால் மாற்றம் முன்னேற்றமா இருந்தா சரி, இது எனக்கு தடுமாற்றமாக அல்லவா தெரிகிறது, என்ன செய்யலாம் ? கேஸட் கேக்கலாமா ? புஸ்தகம் படிக்கலாமா ? நானும் மாறிவிட்டால்.. ? அப்படியெல்லாம் ஒரு கேஸட்டில் மாறுகிற அளவுக்கு என்ன இருக்க போகிறது ? சரி கேட்டு தான் பார்ப்போமே.. என்று ஒலி நாடாவை கேட்டேன். புஸ்தகங்கள் எடுத்து கருத்துக்களை படித்தேன்.

கேஸட் நிறைய குரான் ஷரீப், ஹதீஸ் பற்றிய ஆதாரங்கள், இது செய்யக் கூடாது மார்க்கத்தில் இல்லை, இதை இப்படி தான் செய்ய வேண்டும் ஹதீஸில் உள்ளது, இது ஷிர்க், இது பித்அத், மத்ஹபுகள் கூடாது, இமாம்கள் கூடாது இப்படியாக நிச்சயம் கேட்ட மாத்திரத்திலேயே கொள்கைகளால் ஈர்க்கப்படும் அளவிற்கு அதில் விஷயங்கள் இருக்கத் தான் செய்தது.

ஆனால் எனக்கு ஏனோ அதில் பிடிப்பு வரவில்லை.

எஜமான் என்றே கூப்பிடக் கூடாது என்ற துல்பிகாரின் வார்த்தையை நான் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. ஏன் ?.. எஜமான் என்று கூப்பிட்டால் நான் அல்லாஹ்விற்கு இணை வைத்து விடுவேனா ? எப்படி ?..

யூசுப் நபியவர்களை ஜுலைகா தவறு செய்ய ‘வாரும்’ என்று அழைத்த போது யூசுப் நபியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? ‘..அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார். அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறினார்’- என்று யூசுப் நபி கூறியதாக திருமறை கூறுகிறது.

ஜுலைகாவின் கணவரை யூசுப் நபியவர்கள் ‘என் எஜமானர்’ என்று தானே குறிப்பிடுகிறார்கள். யூசுப் நபியை இறைவன் தன் திருமறையில் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம் என்று வேறு கூறுகிறான், எஜமான் என்று அழைப்பது இணை வைப்பது என்றால் யூசுப் நபியவர்களை அவ்வாறு கூறாது தடுத்திருக்கலாமே. அல்லது முதலில் யூசுப் (அலை) அவர்கள் தான் அவ்வாறு கூறியிருப்பார்களா ?

மறு நாள், நான் தர்ஹாவிற்கு சென்று வருவதை பார்த்த ஒரு கூட்டம், ‘இது திருந்தாத ஜென்மம்’ என்றது. (அவர்கள் எல்லாம் திருந்திய ஜென்மங்களாம்!)

துல்பிகார் என்னை ஆச்சர்யமாக பார்த்தான், ‘என்னங்கணி இன்னும் கேஸட் கேக்கலையா ?’ என்றான்.

நான், ‘கேஸட் கேட்டுட்டேன், புக் படிச்சுட்டேன் கொண்டு வந்து கொடுத்துடறேன்’ என்றேன்.

துல்பிகார், ‘என்னங்கணி நீம்பர் ஏத்துக்கலயா ?’ என்றான்.

நான், ‘ஆமாங்கணி.. எனக்கு உங்க கருத்துக்கள்ல உடன் பாடில்ல’ என்றேன்.

துல்பிகார், ‘இஸ்லாம்ங்கறது சொந்த கருத்த வச்சு முடிவெடுக்குறது இல்ல.. குரான், ஹதீஸ வச்சு முடிவெடுக்கிறது’ என்று அழுத்தமாக பேசினான்.

நான், ‘குரான், ஹதீஸ் எல்லாம் சரி தான், ஆனா.. அதற்கான இண்டர்பிரடேஷன்.. அதாவது விளக்கம் கொடுக்கிறது.. இருக்குல.. அங்கே தான் நாம ரெண்டு பேரும் ஒத்துபோவலை.. அவ்வளவு தான்’ என்றேன்.

துல்பிகார் விடுவதாக தெரியவில்லை, ‘அப்டான்னா நீம்பர் தனியா விளக்கம் வச்சிருக்கீயோமா ?’ என்று கேட்டான்.

நான், ‘ஆமா வச்சிருக்கேன்.. உதாரணமா கேக்குறேன்.. குரான் ஷரீபில் ‘நடுத் தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்’ ன்னு ஒரு அருமையான வசனம் வருதே. ‘நடுத் தொழுகை’ ன்னா அது எந்த தொழுகை தெரியுமா ?’ என்று கேட்டேன்.

துல்பிகார், ‘நடுத் தொழுகை ன்னா அது அஸர் தொழுகை’ என்றான்.

நான், ‘எப்படி ?’ என்றேன்.

துல்பிகார், ‘எப்படின்னா, பஜர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா இந்த ஐந்து வக்தில் அஸர் தான் நடுவ்ல வருது அதான் அஸர் தொழுகை’ என்றான்.

நான்,‘சரி நான் பஜர் தொழுவ தான் நடுத் தொழுவங்கறேன்.. எப்படின்னா..நாளைக்கு வெள்ளி கெழமைன்னா இன்னைக்கி சாய்ந்தரமே நம்ம ஊர்ல வெள்ளி கெழமை ராவுன்னு சொல்வாஹல்வோ.. அதாவது ராத்திரி தான் முதல்ல வருது பவல் அப்புறம் தான் வருது, அந்த கணக்குல பார்த்தா ‘மக்ரிப்’ தான் மொத வக்து. மக்ரிபை மொத வக்துன்னு எடுத்துக் கொண்டால் ‘பஜர் தொழுகை’ தான் நடுவ்ல வருது அதனால பஜர் தொழுகை தான் நடுத் தொழுகை என்றாகி விடும். ஆகவே குரான் ஷரீப் கூறுவது பஜர் தொழுகையை தாங்கறேன் நீம்பர் என்ன சொல்றீயோம் ?’ என்று கேட்டேன்.

துல்பிகார் யோசித்து விட்டு, ‘இருக்கலாம்.. எப்படி வேணாலும் எடுத்துக்கலாம்..’ என்றான்.

நான், ‘நீம்பர் சாதாரணமா ஒத்துக்கிட்டாயோம்.. ஆனா இந்த மாதிரி விஷயத்துக்கு பெரிய சண்டையே வந்து பிரிஞ்சு போய் ஆளுக்கொரு பள்ளி வாசல் கட்டி தனிக்குடுத்தனம் போற மாதிரி போயிடுவாஹல்வோ’ என்றேன்.

மீண்டும் நானே கிண்டலாக, ‘அப்படி பிரிஞ்சு போனா நீம்பர் எந்த கூட்டத்தோட போவீயும் ?’ என்றேன்.

துல்பிகார் சிரித்து விட்டு, ‘குரான் ஷரீஃப்ல குறிப்பா நடுத் தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்னு ஒருமையில சொன்னத வச்சு பார்க்கும் போது அதுக்கு வேற அர்த்தம் இருக்கும் போல படுது’ என்றான்.

நான் அதே கருத்தை ஆமோதித்தவனாக, ‘நிச்சயமா.. வெளி அர்த்தத்தை மட்டும் வச்சு பார்த்தா சண்டை, கருத்து வேறுபாடு இப்படி வரத்தான் செய்யும்.’ என்றேன்.

துல்பிகார், ‘ஆனா உள் அர்த்தம் யார்ட்ட போய் கேக்குறது ?’ என்றான் .

நானே விளக்கினேன், ‘நடுத் தொழுகை என்றால் தொழுகைக்கு நடு அல்ல- மனித உடலின் நடு மையமாக இருக்கும் ‘இதய’த்தை கூட அது குறிக்கலாம்.. இல்லையா ?- அப்படி பாக்கும் போது ‘இதயப்பூர்வமான தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்’ ன்னு அர்த்தம் போட்டு பாரும். செறப்பா இருக்கும். நா இந்த கூட்டத்தில் தான் இருக்கிறேன்.

‘நடுத் தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்’ என்ற குரான் ஷரீபின் வசனத்திற்கு ‘இதயப் பூர்வமான தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்’ அப்படின்னு வெளக்கம் அளிச்சது யார் தெரியுமா ? என்று நான் கேட்டதற்கு

துல்பிகார் ஆர்வத்துடன் பதிலுக்கு எதிர்பார்த்ததில் வார்த்தை வரவில்லை.

நானே தொடர்ந்தேன், ‘அப்படி வெளக்கம் அளிச்சது வேறு யாருமில்லங்கணீ.. எக்காலமும் கண்டிராத மெய்ஞ்ஞானப் பேரரசர், அல்லாஹ்வின் ‘வல்லாண்மை’ எனும் அத்தாட்சிகளின் வெளிப்பாடு, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பரிபூரணத்துவத்தின் உண்மையான வாரிசு கெளதுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி((1077-1166) அவர்கள் தான் அது’ என்ற போது

நான்

“நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

அது எவர்களுக்கு அருள் புரிந்தாயோ

அவ்வழி.

அது உன் கோபத்திற்கு ஆளானோர்

வழியுமல்ல; நெறி தவறியோர்

வழியுமல்ல” என்ற திருக்குரானின் சூரத்துல் பாத்திஹா வசனம்

நினைவிற்கு வந்து கைகளை ஏந்தினேன்..

கடைசியாக நான் பிடிவாதமாக சொன்னேன் ‘உம்பர்க்கு உம்பர்ட வழி எனக்கு என் வழி.. தீர்ப்பு அல்லாஹ்வோட கையில்.. என்ன சரி தானே ?’ என்று தற்காலிக விடை கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டேன்.

இப்பொழுதெல்லாம் அரபியில் அலிஃப், பே(ஆனா ஆவன்னா) தெரியாதவர்கள் கூட அரேபிய இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் போல் மொழி பெயர்க்கப்பட்ட குரான் ஷரீபை கையில் வைத்துக் கொண்டு ஆதாரம் காட்டுகிறார்கள்.

இரண்டு பேர்களுக்கிடையே சண்டை நீங்கி சமாதானம் செய்து வைக்க எத்தனையோ கிலோ மீட்டர்கள் நடந்து செல்லுங்கள் என்று கட்டளையிட்ட மார்க்கம் நம்ம இஸ்லாமிய மார்க்கம் ஆனால் இப்ப அப்படியா இருக்கிறது ? சண்டை போட்டு பிரித்து வைக்க கூட்டம் கூட்டமாக கிலோ மீட்டர் கிலோ மீட்டராக கப்பல் ஏறி கடல் தாண்டி எல்லாம் செல்கிறார்கள். தொப்பி போட சண்டை, விரல் ஆட்ட சண்டை, பிறை பார்க்க சண்டை, பெருநாள் கொண்டாட சண்டை. சண்டை, சண்டை, சண்டை.. எந்த அளவிற்கு சண்டை என்றால் தனி பள்ளி வாசல் கட்டி பிரிந்து போகின்ற அளவிற்கு சண்டை.

விடுப்பு முடிந்து மீண்டும் பயணம் திரும்பும் வேலை வந்தது. எனக்கும் துல்பிகாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நட்பு கொஞ்சம் பாதிக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். நான் வழக்கம் போல் தர்காவிற்கு போய் எஜமானிடம் பாதம் பணிந்த ஸலாத்தை சொல்லி விட்டு தான் வந்தேன்.

துல்பிகார், ‘அப்படி எல்லாம் செய்வது இஸ்லாத்தில் ஒன்றும் கடமையில்லை, அதுக்கு இரண்டு ரகாத் நஃபில் தொழுதால் போதுமானது’ என்று என் காது பட வேறு யாரிடமோ சொன்னான். என்னமோ நான் நஃபிலே தொழ கூடாது, தர்ஹாக்கு தான் செல்ல வேண்டும் என்று வாதிடுவது போல அவ்வாறு கூறினான்.

இரண்டு பேரும் வெவ்வேறு திசைகளில் சென்றோம்.

நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சிங்கப்பூர் சென்றேன், அவனோ எமிரேட்ஸில் துபாய்க்கு சென்றான்.

நான் சிங்கப்பூருக்கு வந்து ஒரு வருஷம் இருக்கும் திடாரென்று ஒரு நாள் துல்பிகார் என்னை தொலைபேசியில் அழைத்தான், ‘ அஸ்ஸலாமு அலைக்கும்’

நான், ‘வ அலைக்கும் ஸலாம் என்ன சேதி, எப்படி இருக்கியோம் ?’ என்றேன்.

துல்பிகார், ‘நான் ஏர்போர்ட்டிலிருந்து பேசறேன், ஊருக்கு போறேன்’ என்றான் கவலையுடன்.

நான் கலவரம் அடைந்தேன், ‘என்னங்கணி சொல்றீயோம், ஏன் என்னாச்சு ?’

துல்பிகார், ‘ஆஃபீஸ்ல ஒரு பிரச்சினை.. நான் வேலய விட்டு நிண்டுட்டேன்.. மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம், ஊருக்கு போன வுடனே முடிஞ்சா போன் போடுங்கணி’ என்று ‘ஸலாம்’ கூறி வைத்து விட்டான்.

எனக்கு கவலையாக போய் விட்டது. என்ன செய்வது ? நல்ல படிப்பு. திறமைசாலி. அவனுக்கு வெளியூர் என்றாலே பிடிக்காது இப்ப தான் ஓரளவு வெளிநாட்டு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு உள்ளது அதற்குள்ளாக இப்படி ஆகி விட்டதே ? சரி.. அவனுக்கு ஊர் தானே பிடிக்கும் என்றாலும் ஊருக்கு போய் என்ன வேலை செய்வது ? எப்படி சம்பாதிப்பது ? அல்லாஹ் எங்கேயாவது ரிஜ்க்(உணவு) வைத்திருப்பான். கவலை இல்லை. என்று எனக்கு நானே கவலைப் பட்டு கொண்டும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டும் உறங்கிப் போனேன்.

ஆறு மாதங்கள் கழித்து ஊருக்கு செல்லும் அறிய வாய்ப்பு கிடைத்தது. துல்பிகாரை ஏர்போட்டிற்கு வரச் சொல்லியிருந்தேன். அவன் ஊரில் தான் இருந்தான்.

சென்னையில் தங்கி துல்பிகார் திறக்க இருக்கும் கடை சம்மந்தமாக பல நண்பர்களை சந்திதோம். துல்பிகார் துபாயில் வேலை போனதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இருந்தான். சென்னையில் ஒரு இடம் பார்த்து வருவதாகவும் விரைவில் அல்லாஹ் நாடினால் ஒரு கடை ஒன்று திறக்க இருப்பதாகவும் முன்பு தொலைபேசியில் என்னிடம் சொல்லியிருந்தான். என்னையும் கூட ஒரு பங்குதாரராக சேரும் படி கேட்டுக் கொண்டிருந்தான்.

அது பற்றி இப்போது என்னிடம் கேட்டான்.

நான் ‘சொல்றேனே’ என்று சொல்லி வைத்தேன்.

கடை சம்மந்தப்பட்ட வேலைகள் முடிந்ததும் சீருந்தில் ஊருக்கு புறப்பட்டோம். இடையே பாண்டிச்சேரியில் ஒரு உணவகத்தில் மதிய வேலை உணவை முடித்தோம்.

எங்களது ஊர் எல்லை வந்ததும் துல்பிகார் சீருந்து ஓட்டுனர் பஷீரிடம் சொன்னான், ‘நேரா தர்ஹாக்கு போங்க பஷீர்’ என்றான். நான் ‘பராவாயில்லை.. நீம்பர் தர்ஹாக்கெல்லாம் போவாதீயும் என்று சொல்லி வந்தவன் நான் போவதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் இருக்கிறானே’ என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

சீருந்தை தர்ஹா அருகில் ஒரு கைலி கடை வாசலில் போய் நிறுத்தினார் பஷீர்.

நான் கதவை திறந்து இறங்கினேன், எங்களது பள்ளி தோழன் அன்வர் கேஸட் கடையிலிருந்து பார்த்துக் கொண்டு கையை அசைத்து ‘எப்ப வந்தே ?’ என்பது போல் கேட்டான்.

நான் ‘இப்ப தான்’ என்று சைகை காட்டி முடிக்குமுன் ‘ஜியாரத்திற்கா.. போய்ட்டு வரும் போது வந்துட்டு போ’ என்பது போல் சைகை காட்டினான்.

துல்பிகார் சொன்னான், ‘அன்வர் இதுக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷன்ல கை காட்டி மரமா வேலை பார்த்திருப்பான் போலிருக்கு’ என்று.

நான் சிரித்து விட்டு துல்பிகாரிடம், ‘கூட்டமா இருக்கு வெள்ளிக் கெழமை ராவுல.. இரியூம்.. ஜியாரத்தை முடிச்சிட்டு வந்துடறேன்’ என்றேன்.

துல்பிகார் எனக்கு ஆச்சர்யத்தை பதிலாக கொடுத்தான், ‘நானும் ஜியாரத்திற்கு வர்ரேன்’ என்றான்.

4.

“நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்பதை அறிந்து கொள்வீராக. விசுவாசங் கொண்ட ஆண்களின் பாவத்துக்காகவும் விசுவாசங் கொண்ட பெண்களின் பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக..”

– அல்குர்ஆன் (முஹமத் :19)

“யாருமே இல்லாது, அல்லாஹ்வுக்கு நான் மிகவும் நெருக்கமாக இருந்த நேரம் ஒன்றிருந்தது. வானவர் ஒருவரோ, தீர்க்கத் தரிசி ஒருவரோ கூட எங்களுக்கு இடையே வர முடியாத அளவுக்கு நெருக்கமாக இருந்தோம்” – அல்ஹதீஸ்

எனக்கு உள்ளுக்குள் சந்தோஷமும் ஆச்சர்யமும் கலந்து வந்தது. உள்ளே சென்றோம். பெரிய எஜமாண்ட வாசலில் உட்கார்ந்திருந்தோம். குண்டு போட்டார்கள். எஜமாண்ட ரவுலா ஷரீஃபை கண் குளிர மரியாதையுடன் பார்த்து விட்டு வெளியே வந்து அங்கு உள்ள குளிர்ந்த மண்டபத்தில் அமர்ந்தோம்.

நான், ‘ஆமா.. ஏன் இந்த திடார் மாற்றம்.. துபாய்ல வேலை போயிடுச்சே அதனாலயா ?’என்றேன்.

துல்பிகார் மெதுவாக சிரித்துக் கொண்டே, ‘மெதுவா பேசும் இது எஜமாண்ட வீடு.. அவங்க வீட்ல அவங்க முன்னாடி எப்படி பேசுவீயும் அப்படி மெதுவா பேசும்’ என்ற போது எனக்கு அதிர்ச்சியில் மயக்கம் வருவது போலிருந்தது.

நான் சத்தத்தை குறைத்துக் கொண்டு தொடர்ந்தேன், ‘ஒரு வேலை எனக்கு வேலை போயிருந்துச்சுன்னா.. ?’ என்றேன்.

துல்பிகார், ‘அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லங்கணீ நீம்பர் வேற..’ என்றான்.

நான், ‘அப்புறம்.. ?’ என்றேன்.

பதில் இல்லை..

நான் விடுவதாக இல்லை, ‘ஜியாரத்த பத்தி குரான் ஹதீஸ்ல எல்லாம் ஒண்ணுமே இல்லையே.. அப்புறம் எப்படி ?’ என்றேன்.

துல்பிகார் வாயை திறக்க வில்லை.

நான் வாயை மூட வில்லை, ‘ரசூல்(ஸல்) அவங்களே ஒரு சாதாரண மனிதர் தானே நாம போய் எப்படி எஜமானை கண்ணியப் படுத்துறது’ என்றேன்.

அப்பாடா.. துல்பிகார் வாயை திறந்தான்.

இதோ பேசுறான் கேளுங்க, ‘உண்மை தான் ஒரு கட்டத்துல முஹம்மது நபி(ஸல்) அவங்களையே நம்மள மாதுரி அஹலும் ஒரு மனுஷர் தான்னு கூற துணிஞ்சுட்ட நாக்கு தான் என் நாக்கு. அபூஜஹலும் ஒரு மனிதர் தான். அதற்காக நாயகம் அவங்களும் அபூஜஹலும் சமம் என்றாகி விடுமா ? அஸ்தக்பிருல்லாஹ்.. சிந்திச்சு பார்த்தேன்.

அறிவ வச்சுக்கிட்டு சிந்திக்கல.. ஏன்னா ஆதம் நபியின் உருவத்தை பார்த்து ஏமாந்து போய் அறிவ வச்சு சிந்தித்து தான் இறைவனுக்கு ரொம்ப நெருக்கமான அஸாஸீல்ங்குறவன் இறைவனுக்கு பகிரங்க விரோதி இப்லீஸ்ன்னு ஆனாங்கறது நமக்கு தெரியாததல்ல.

அலி(ரலி) அவங்களை மாதிரி சிந்திச்சு பார்த்தேன்.

அலி(ரலி) அவங்க, ‘அதஹ்ஸிபு அன்னக ஜிஸ்முன் ஸகீருன் வஃபீக்கன்தவல் ஆலமுல் கபீரு’ ன்னு பாடுனாங்க- அதாவது ‘மனிதனே, நீ சிறிய சடலம் என்றா நினைக்கிறாய் ?, உனக்குள்ளே பெரிய உலகமே அமைந்து கிடக்கின்றதே’ ன்னு அர்த்தம்-

திருக்குரானின் எந்த இடத்திலும் நம்பிக்கை கொண்டவர்களை பார்த்தோ, ஆதமுடைய மக்களை பார்த்தோ நபியை ‘உங்களை போன்ற மனிதர் தான் என்று கூறுங்கள்’ ன்னு இறைவன் கூறல.

மாறா, நாயகம்(ஸல்) அவங்களை பார்த்து இந்த அற்புதத்தை செய்து காட்டுங்க, இந்த மலையை தங்கமாக்கி காட்டுங்கன்னு தங்க நாணயத்தை விட்டு விட்டு செல்லாத நாணயங்களுக்கு ஆசைப்படும் மக்களிடம் ‘நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தாம்’ ன்னு கூறிடுங்க ன்னு நபி(ஸல்) அவங்களிடம் தான் இறைவன் கூறுகிறான்.

அதற்காக அவசரப்பட்டு நாயகம் அவங்களும் என்னைப் போன்ற மனிதர் தான்ன்னு நானும் சொல்லிட்டேன். ஆனா இப்ப அந்த அழுக்கை என் தூய்மையான கண்ணீர் கூட கழுவி சுத்தம் செய்ய முடியாம போயிடுச்சு’ என்றான் கன்ணீர் வடித்துக் கொண்டே.

மக்ரிப் தொழுகைக்கு பாங்கு(அழைப்பு) கொடுத்தார்கள். குளிர்ந்த மண்டபத்திலிருந்து எழுந்து முத்தவல்லியில் நடந்து சின்ன குத்பா பள்ளி வந்தோம். மக்ரிப் தொழுகையை ஜமாத்துடன் முடித்தோம்.

வெளியே வந்தவுடன் நான் துல்பிகாரிடம், ‘நாயகம் (ஸல்) அவங்களை நம்பள மாதிரி ஒரு மனுஷர்ன்னு சொன்னது தப்புன்னு சொன்னீயோம்.. இல்லையா ?.. நான் இப்ப கேக்குறேன்.. குரான் ஷரீஃப்ல ‘எந்த நபிமார்களுக்கு இடையிலும் வேற்றுமை பாராட்ட வேண்டாம்’ ங்குற கருத்துக்கு என்ன அர்த்தம் ? அவங்களை மத்த நபிமார்களை மாதிரி அதே அந்தஸ்த்தில் தான் வைக்கணுமா ? இல்ல.. ?’ என்று நான் இழுத்த போது..

துல்பிகார் பெரிய விளக்கமே கொடுத்தான்.. ‘எனக்கு வெளங்குது நீம்பர் என்ன கேக்க வர்ரீயோம்னு.. உதாரணமா யூதர்களை எடுத்துக்கிட்டா யூதர் அல்லாத நபியை அவங்க நபின்னே ஒத்துக்க மாட்டாங்க.. அரபு குடில பொறந்த முஹம்மது நபி(ஸல்) அவங்கள யூதர்கள் எதிர்த்ததுக்கு நாயகம் அவங்க யூதர் அல்ல ங்கறதும் ஒரு முக்கியமான காரணம், அவங்க நபிமார்களுக்கு எடைல வித்தியாசம் காட்டினாங்க..

அப்படி பார்க்கும் போது யூத குடில பொறந்த யாகூப் நபி, யூசுப் நபி, இபுறாஹீம் நபி, இஸ்ஹாக் நபி, ஈசா நபி(ஜீஸல்) எல்லாரையும் முஸ்லீமாகிய நாம தான் நபி ன்னு நம்புறோமே.. இல்லையா ?.. ஆனா.. அதே சமயத்தில அவங்க எல்லாரும் ஒரே அந்தஸ்தில் தான் இருந்தாங்களாங்கறதை சிந்திச்சு தான் பார்க்கணும்..

நபி இபுறாஹீம்(அலை) அவர்களும் நபி லூத்(அலை) அவங்களும் ஒரே அந்தஸ்தில் தான் இருந்தாங்களா ?..

சரி அவங்களுக்குள்ள அந்தஸ்துல வேறுபாடு இருக்குன்னு ஒத்துக் கிட்டோம்னு வையும்.. அந்த அந்தஸ்தை அவங்க எந்த பண்பை வச்சு உயர்த்திக் கொண்டாங்க ?..

இப்ப உதாரணமாக மூஸா நபி ஆறு லெட்சத்து எழுபதாயிரம் இஸ்ரவேலர்களை ராவோடு ராவா எகிப்து நாட்டு கொடுங்கோல் அரசன் பிர்அவ்ன்ட அடிமைத்தனத்திலிருந்து காப்பாத்தி செங்கடல் பக்கமாக கூட்டிட்டு வந்துட்டாஹா.. பிர்அவ்ன் ங்கற கொடுங்கோல் அரசன் அவனது கருப்புச் சட்டை போட்ட ஏழு லெட்சம் படைகளோட இஸ்ரவேலர்களை குரான் ஷரீப்ல சொல்ற மாதிரி கொடுமையும் பகைமையும் கொண்டு தூரத்துல தொடர்ந்து வர்ரது இஸ்ரவேலர்களுக்கு தெரியுது..

இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பயந்து நடுங்கி மூஸா நபிட்ட, ‘நாம் இந்நிலையில் என்செய்வோம் ?’ ன்னு அலறினாங்களாம். அப்போ மூஸா நபி கொஞ்சம் கூட அமைதி இழக்காம, ‘நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு நேர்வழியைக் காட்டியருள்வான்’(கல்லா இன்னமஇய ரப்பீ ஸயஹ்தீன்) ன்னு சொன்னாஹா.. இந்த சம்பவம் குரான் ஷரீப்ல 26ஆவது அத்தியாயம் 62ஆம் வசனத்துல வருது..(ஆதாரமாம்..!)

இதே மாதிரி ஒரு சம்பவம் நம் பெருமான் அகிலத்தின் அருட் கொடை ரசூலே கரீம் ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவங்களோட வாழ்க்கைலயும் வருது.. நபியவங்க தெளர் மலைல தோழர் அபூபக்கர் (ரலி) அவங்களோட ஒளிஞ்சு கிட்டிருக்கும் போது மக்கத்து எதிரிகளாம் குரைஷிகள் தெளர் மலையை சூழ்ந்துட்டாங்க.. அபூபக்கர்(ரலி) அவங்க ‘நாம் இருவர் தாமே உள்ளோம். என் செய்வோம் ?’ ன்னு கேட்டாஹலாம்.. இறுதி தூதர் அவங்க என்ன பதில் சொன்னாஹா தெரியுமா ? மூஸா நபியவங்க மாதிரியே இஹலும் அமைதியா தான் இருந்தாஹா.. ஆனா.. இஹ பதில் நம்ம சிந்தனைக்குறியது. நபியவங்க தோழரிடத்தில சொன்னாஹா.. ‘கவலைப்பட வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’ (லாதஹ்ஸன்; இன்னல்லாஹ மஅனா)ன்னு சொன்னாஹலாம். இந்த வசனம் குரான் ஷரீப்ல 9ஆவது அத்தியாயம் 40ஆவது வசனத்துல வருது..

இதுல.. நாம கவனிக்க வேண்டியது.. மூஸா நபியவங்க ‘என்னுடன்’ ன்னு அஹல மட்டும் பிரிச்சு சொல்றாஹா.. அதுவும் தவிர முதல்ல அஹ பேர சொல்றாஹா.. அடுத்தது தான் இறைவன் பெயரை சொல்றாஹா.. ஆனா பெருமானார் அவங்க அல்லாஹ் ன்னு முதல்ல சொல்றாஹா.. அதுவும் தவிர ‘என்னுடன்’ ன்னு அவங்கள மட்டும் பிரிச்சும் சொல்லிடாம ‘நம்முடன்’ ன்னு சேர்த்து சொல்றாஹா.. இது பெருமானாரது பண்பையும் தாழ்மையையும் காட்டுது.. நமக்கு பெரிய பாடமாவும் படிப்பினையாவும் இருக்குது..’ என்று முடித்தான்.

நான் துல்பிகாரிடம் கேட்டேன், ‘ஓய் எங்கேந்துங்கணி இந்த மாதிரி எல்லாம் பேச கத்துக்கிட்டாயோம்’ என்று.

துல்பிகார், ‘ஒண்ணுமில்லைங்கணி.. நான் துபாய்லேந்து வந்தவொடனே எனக்கு மனசே சரியில்ல.. நம்ம துரை இல்ல அவன் என்ன ஹஜ்ரத் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்’ என்றான்.

நான், ‘ஹஜ்ரத் வீட்டுக்கா.. ?’ என்றேன்

எனக்கு அப்பொழுது தான் அந்த உண்மையை சொல்ல வேண்டும் போல் இருந்தது,

நான் சொன்னேன், ‘ ஓய்.. நான் சிங்கப்பூரில் வேலய விட்டுட்டு தான் வந்தேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே சென்னைல கட தொறப்போம்.. இன்ஷா அல்லா..’ என்று..

5.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே அத்தகையோரே எவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக அல்லாஹ் பரிசுத்தமாக்கி வைத்தானே அத்தகையோராவார்.

– அல்குர்ஆன் (ஹூஜூராத் :3)

“என் மெய்யடியார்கள் என் மண்டபத்துக்குள் மறைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைத் தவிர வேறு யாராலும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. – ஹதீஸ்குத்ஸி

அதைக் கேட்டவுடன் துல்பிகாருக்கு அளவற்ற சந்தோஷம்.

‘நெசமாவா சொல்றீயோம்’ என்றான்.

நான், ‘ஹக்கா(சத்தியமா) சொல்றேன்’ என்றேன்.

அதன் பிறகு தொடர்ந்து வியாபார சம்மந்தமாக பேசும் போது, ‘ஹஜ்ரத் அடுத்த மாசத்துக்குள்ள கடய தொறந்துடணும்னு சொல்லிருக்காஹா’ என்று சொன்னவுடன்

ஆச்சர்யத்தில், ‘நீம்பர் ஹஜ்ரத் வீட்டுக்கு போனது தாங்கனீ பெரிய விசேஷம்..’ ‘என்றேன்..

துல்பிகார், ‘ஹஜ்ரத் வூட்டுக்கு போனது மட்டுமில்ல அங்கே தான் நெறய பாடம் கத்துக்கிட்டேன்’ என்றான்.

சிறிது நிறுத்தி விட்டு அவனே பேச ஆரம்பித்தான், ‘மூஸா நபியை எதிர்த்து போட்டியிட வந்த மந்திரவாதிங்க கையிலேயும் ஒரு கைத்தடி இருந்துச்சுங்கணி இதுக்கெடைல அவங்க அந்த கைத்தடியை தூக்கி போட்ட வொடனே பாம்பும் வந்துச்சு.. ஆனா.. மூஸா நபிட்ட இருந்த கைத்தடி பாக்குறதுக்கு மந்திரவாதி வச்சிருந்த கைத்தடி மாதிரியே இருந்தாலும் ரெண்டும் ஒன்னல்ல அது மந்திரவாதி எறிஞ்சவொடனே வந்த பாம்புகளையே முழுங்கிடுச்சு.

அத பத்தி மஸ்னவில மெளலானா ரூமி(ரஹ்) அவங்க எப்படி எழுதுறாங்க தெரியுமா ? என்று அவன் கேட்ட போது

எனக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை..

என்னடா, வீட்டின் கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை என்றவுடன் கடலிலேயே தண்ணீர் கிடையாது என்று பேசி வந்தவன் இப்பொழுது கடலை பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான முயற்சியாகவே பட்டது..

என் ஆச்சரியத்திற்கு நடுவே அவன் தொடர்ந்தான், ‘உரைகல் மக்களின் கண்லேருந்து மறைக்கப்பட்டிருந்த போது கள்ள நாணயம், தங்கத்தை பார்த்து, ‘நாம் இருவரும் சமமே. உன்னை விட நான் எந்த வகையில் தாழ்ந்தவன் ?’ ன்னு சொன்னுச்சாம். அதற்குத் தங்க நாணயம், ‘என்னுடைய சகாவே! உரைகல் வந்து கொண்டிருக்கிறது, தயாராயிரும்! ன்னு பதில் சொன்னிச்சாம்ன்னு ரொம்ப அருமையா மஸ்னவில சொல்றாஹா தெரியுமா ?’ என்று துல்பிகார் கேட்டதும் எனக்கு ஒரு கனம் என்னையே கிள்ளி பார்க்க வேண்டும் போலிருந்தது.

நான் பேச்சை மாற்றினேன், ‘சரி, அன்வர் வர சொன்னானே பார்த்துட்டு வந்துடுவோமா ?’ என்றேன்.

அதன் பிறகு அன்வரை பார்க்க கடைக்கு போனோம் அங்கு அவன் இல்லை அவன் அப்பவே கடை வேலையாக வெளியே போய் விட்டதாக கடையில் சொன்னார்கள்.

வீட்டிற்கு வந்து சொந்தங்கள் பார்த்து களைப்பு நீங்க தூங்கி எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் துல்பிகார் இல்லத்திற்கே சென்றேன்.

அங்கு அவன் ஹஜ்ரத் மெளலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பாகவி அவர்கள் எழுதிய ‘அறிவும் தெளிவும்’ என்ற நூலை படித்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும், ‘என்ன நல்லா தூங்குனீயோமா ?’ என்றான்.

நான், ‘ஆமா, நல்லா தூங்கியாச்சு.. என்ன புக் இது ?’ என்றேன்.

துல்பிகார் புஸ்தகத்தை என்னிடம் காட்டி, ‘ஹஜ்ரத் எழுதியது’ என்றான்.

நான், ‘இது இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவங்க எழுதிய ‘இஹ்யா உலூமித்தீனோட’ தமிழாக்கம் தானே ?’ என்றேன்.

துல்பிகார், ‘ ஆமா.. கஸ்ஸாலி(ரஹ்) லேசான ஆளல்லப்பா.. அவங்க ‘ஹூஜ்ஜத்துல் இஸ்லாம்’ (இஸ்லாத்தின் அத்தாட்சி)ங்கற விருதுக்குறியவங்க.. மேனாட்டு அறுஞர் ஒருவர் இமாம் கஸ்ஸாலியை ‘ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவங்களுக்கு அடுத்த ‘மாபெரும் முஸ்லீம்’ன்னு அசந்து போய் பாராட்டுனார் அதுமட்டுமில்லை இவங்கள்ட சிறப்பை பத்தி ஒரு நிகழ்ச்சி சொல்லுவாங்க’ என்றான்.

நான் ஆர்வமாக, ‘என்ன நிகழ்ச்சி ?’ என்றேன்.

துல்பிகார், ‘ஒரு நாள் இமாம் அபுல் ஹஸன் ஷாதலி(ரஹ்) அவங்க மஸ்ஜிதுல் அக்ஸாவுல படுத்து தூங்கும் போது கனவு ஒண்ணு கண்டாங்க, கனவுல, நம்ம பெருமானார்(ஸல்) அவங்க ஒரு வாகனத்துல உக்காந்து இருக்காங்க மத்த நபிமாருங்க எல்லாம் தரைல உக்காந்து இருக்காங்க,

அப்போ மூஸா நபி பெருமானார்ட்ட போய் ‘உங்களை பின்பற்றிய உலமாக்கள் பனூ இஸ்ராயீல்கள் குலத்தில் தோன்றிய நபிமார்கள் போல இருக்கிறாங்கண்ணு சொன்னீங்களே அது எப்படி ?’ ன்னு கேட்டிருக்காஹா,

அதுக்கு பெருமானார் (ஸல்) அவங்க கஸ்ஸாலி (ரஹ்) அவங்க பக்கம் கையை காட்டி ‘அவர் அதற்கு சாட்சி’ன்னு சொன்னாஹலாம்.

உடனே மூஸா(அலை) கஸ்ஸாலி (ரஹ்) அவர்களை பார்த்து ‘உங்க பேர் என்ன ?’ன்னு கேட்டிருக்காஹா, அதுக்கு கஸ்ஸாலி (ரஹ்) அவங்க அவங்களோட பத்து தலைமுறைகளைப் பத்தி சொல்லிட்டு அப்புறமா முகம்மதுப்னு கஸ்ஸாலின்னு சொல்லியிருகாஹா.

மூஸா (அலை) அவங்க ‘உங்க பேரை கேட்டா உங்க பேரை மட்டும் சொல்லுங்க அதுக்கு பத்து தலைமுறைகளை சொல்லிட்டு உங்க பேரை சொல்ல வேண்டிய அவசியமில்லையே’ன்னு சொல்லியிருக்காஹா.

அதுக்கு இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவங்க ‘தூர் சினாய் மலைல இறைவன் உங்க வலக்கரத்தில் இருப்பது என்னன்னு தானே கேட்டான், அதுக்கு என் கைத்தடின்னு மட்டும் சொல்லாம என்னென்னவோ விளக்கம் எல்லாம் கொடுத்தீங்களே’ என்றார்களாம்.

ஆனா அவங்க அப்படி பேசி முடிக்குறதுக்கு முன்னாடியே நம் பெருமானார் நாயகம் (ஸல்) அவங்க ‘மரியாதை’ன்னு அதாவது ‘அதபு’ன்னு சொல்லி அவங்கள்ட வெலாவுல(விலா) விரலால குத்தினாங்களாம்.

உடனே இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவங்க மரியாதையாக தான் சொல்ல வந்ததை சொல்லாம நிறுத்திட்டாங்களாம்’ என்று அற்புதமான சம்பவத்தை சொல்லி முடித்தான்.

எந்த கேள்வி கேட்டாலும் படிக்கும் போது சந்தேகம் கேட்டா சொல்ற மாதிரியே மார்க்க விஷயத்திலும் துல்பிகார் பதில் சொன்னான்.

கடைசியாக எனக்கும் உங்களுக்குமாக ஒரே ஒரு கேள்வி அதுக்கு ஓரளவுக்கு பதில் சொன்னான்னா இந்த கதையையே முடிச்சுட வேண்டியது தான் என்ற முடிவில்..

‘எஜமாண்ட வாசல்ல போய் நின்று துவா கேக்கலாமா ?’ என்று கேட்டேன்..

துல்பிகார் சளைத்தவன் அல்லவே, அதற்கும் பதில் வைத்திருந்தான்..

இதோ அவனது பதில்,

‘ஒரு காலத்துல கலீபாவா இருந்த மன்சூர் அவங்க மஸ்ஹிதுந் நபவீ வந்தாங்க ‘அண்ணல் நபி(ஸல்) அவங்கள்ட அடக்கஸ்தலத்தை நோக்கி நின்று இறைஞ்சுவதா அல்லது கஃபாவை நோக்கி நின்று இறைஞ்சுவதா ?’ ன்னு இமாம் மாலிக் (ரஹ்) ட்ட கேக்கும்போது, அஹ ‘தாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவங்கள விட்டும் தங்களின் முகத்தை திரும்ப விரும்புறீங்களா, என்ன ? அஹல்ட பொருட்டாலல்லவா தங்களின் தந்தை ஆதம் பாவம் பொறுக்கப்பட்டாங்க.. கஃபாவை கொண்டு ரசூல் தூய்மை பெறவில்லை. ரசூலின் திருக்கரத்தை கொண்டு தான் கஃபா தூய்மை பெற்றது. எனவே கஃபாவை விட ரசூலே சிறந்தவங்க’ ன்னு சொல்லிருக்காஹா..’ என்று மேற்கொண்டு ஏதோ கூற நினைத்த போது..

வாசலில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற அன்வரின் குரல் கேட்டது.

நானும் துல்பிகாரும் வெளியே வந்து ஸலாத்திற்கு பதில் கூறி அன்வரை வரவேற்றோம்.

அன்வர் என்னிடம் நலம் விசாரித்து விட்டு ‘ஒரு முக்கியமான செய்திங்கணி.. தர்ஹாக்கெல்லாம் போவாதீயோம் அது ஷிர்க்’ என்றான்.

நானும் துல்பிகாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அன்வர் தொடர்ந்தான், ‘அல்லாவுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரிய பாவம் ஒண்ணுமில்லை’ என்றும் சொன்னான்.

நாங்கள் பதில் ஏதும் கொடுக்கவில்லை, கொடுத்தும் புண்ணியமில்லை அவர்களாகவே ஆராய்ந்து புரிந்து கொண்டாலொழிய பதில் சொல்லி மீளாது என்று நன்றாகவே விளங்கியிருந்தோம்.

அன்வர் விடைபெற்று வாசலுக்கு வந்தான், நாங்களும் வழியனுப்ப அவனுடன் வாசல் வரை வந்தோம்.

வாசலில் நான்கைந்து சிறுவர்கள் உண்டியல் குலுக்கி கொண்டு வந்தனர்.

அன்வர், ‘என்னப்பா இது ?’ என்று கேட்டான்.

கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன், ‘ஹந்திரி வருது, கப்ப இழுக்குறோம் அதான் உண்டிய’ என்றான்.

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்