மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

நாகூர் ரூமி


சூஃபி ஒருவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவர் சூஃபிகளுக்கான மடம் ஒன்றில் தங்கினார். தனது கழுதையை லாயத்தில் கட்டினார். நண்பர்களுடன் உரையாட, (மேடைமீது ஏறி) உயரத்தில் அமர்ந்து கொண்டார். பின் அனைவரும் இறைதியானத்தில் ஈடுபட்டனர்.

சூஃபிகள் அல்லாஹ்வின் நண்பர்கள். அவர்களை ஞான நூல் என்று சொன்னால் அது ரொம்ப குறைவு. எனினும் சூஃபி என்ற புத்தகம் மையாலும் எழுத்தாலும் ஆனதல்ல. பனி போன்ற வெண்மையான இதயமே அது. எழுதுகோல் குறிப்புகளைக் கொண்டு அறிஞர்கள் அறியப்படுகிறார்கள். இறைவனின் நண்பர்களான அவ்லியாக்களோ காலடிச் சுவடுகளால் அறியப்படுகிறார்கள்.

சாதாரண மனிதர்களுக்கு எது சுவராக இருக்கிறதோ, அதுவே சூஃபிகளுக்கு கதவாக மாறுகிறது. நமக்கு கூழாங்கல்லாக இருப்பது அவர்களுக்கு விலைமதிப்பற்ற முத்தாக உள்ளது. நாம் கண்ணாடியில் காண்பதைவிட அதிகமாக அவர்கள் வெறும் கண்ணாலேயே காண்பார்கள். காலடிச் சுவடுகளைப் பின்பற்றி வேட்டைக்காரர்கள் கஸ்தூரி மானை பிடிக்க முயல்வார்கள். இந்த ஆன்மீக வேட்டைக்காரர்களோ கஸ்தூரி வாசத்தை உணர்ந்து பின்பற்றுவார்கள்.

சூஃபிகளுடைய உயிர்கள் தெய்வீக அருட்கடலிலே இருந்தன. விதைக்கும் முன்பே அறுவடை செய்பவர்கள் அவர்கள். கடலைப் படைக்கும் முன்பே முத்தைக் கண்டவர்கள் அவர்கள். மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன் சொன்னபோது வானவர்கள் அதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி கைகொட்டிச் சிரித்தவர்கள் சூஃபிகள். படையும் இன்றி, போரும் இன்றி வெற்றியடைந்தவர்கள் அவர்கள்.

சிந்தனை என்பது அவர்களைப் பொருத்தமட்டில் (இல்ஹாம் எனப்படும்) இறையுதிப்பாக உள்ளது. சிந்தனை என்பது என்ன ? கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய எண்ண ஓட்டம்தானே ? காலத்திலிருந்து எண்ணத்தைப் பிரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

திராட்சையின் இதயத்தில் மது இருப்பதை உயிர் அறியும். இல்லாததில் இருப்பதைக் கண்டுகொள்வதும் அதுவே. சூடான ஜூலையில் டிசம்பர் குளிரையும், வெயிலில் நிழலையும் சூஃபிகள் அறிவார்கள். முழுமையான அர்ப்பணத்தில் தங்கள் தேவைகள் நிறைவேறியவர்களாக அவர்கள் உள்ளார்கள்.

எண்ணற்ற அலைகளுக்கு காரணம் காற்றே. கடல் ஒன்றுதான் (உண்மை). சூரியனைப்போன்ற வடிவங்களுக்கு கட்டுப்பட்ட பார்வையில்தான் சந்தேகம் முளைக்கிறது. பிரிவினையையும் பன்மையையும் பார்ப்பது மிருக புத்தி. மூலம் ஒன்றுதான் என்று புரிந்துகொள்வது மனிதமே.

இறைவனின் ஒளியானது என்றுமே பிரிவுக்கு உட்பட்டதில்லை என்பதைத்தான், ‘அவர்கள் (மனிதகுலம்) மீது இறைவன் ஒளியைத் தெளித்தான் ‘ என்ற இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

நண்பரே, உங்கள் களைப்பை ஒரு கணம் அலட்சியப்படுத்திவிட்டு, நான் சொல்ல வருவதைக் கேளுங்கள். அப்போதுதான் நான் இறைவன் என்ற பேரழகின் ஒரு மச்சத்தை(யாவது) விவரிக்க முடியும். அந்த அழகை முழுமையாக விவரிக்கத்தான் முடியுமா ? இந்த அநித்திய உலகமும், நித்தியமான ஆன்மீக உலகமும் அவனது மச்சத்தின் பிரதிபலிப்புத்தானே! தானியக் கிடங்கிலிருந்து தன்னைவிட பெரிய சுமையை இழுத்துக்கொண்டு செல்லும் எறும்பைப் போல நான் இருக்கிறேன்.

நண்பரே, வெளியில் தெரிகின்ற உருவம்தான் சூஃபி என்று எண்ணிவிடாதீர். சரி, கதைக்கு வருவோம். ஆனால் கதையில் அரிசி எது, உமி எது ? நீங்களே பிரித்து அறிந்து கொள்ளுங்கள்.

சூஃபிகளின் வட்டவடிவ இறைத்தியானம் முடிந்தபின், சாப்பாடு வந்தது. சூஃபிக்கு தன் கழுதையின் நினைவு வந்தது. சேவகனைக் கூப்பிட்டார்.

‘லாயத்திற்குச் சென்று வைக்கோலும் பார்லியும் எனது கழுதைக்கு வை ‘ என்றார்.

‘லா ஹவ்ல் (இறைவனைத் தவிர வேறு ஆற்றலில்லை). நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் உண்டு ‘ என்றான் சேவகன்.

‘முதலில் பார்லியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள். கழுதை கொஞ்சம் வயசானது. அதோடு அதன் பற்களும் பலகீனமானவை ‘

‘லா ஹவ்ல், எனக்குத் தெரியும் ‘

‘சேணத்தை அகற்றிவிட்டு, காயப்பட்ட அதன் முதுகில் மம்பல் (எனும் வலி நிவாரணி மருந்தை) தடவி விடு ‘

‘லா ஹவ்ல், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான விருந்தாளிகளை நான் கவனித்திருக்கிறேன். அனைவருமே எனது சேவையில் திருப்தியுற்றவர்களாகத்தான் திரும்பியுள்ளார்கள் ‘

‘குடிப்பதற்கு தண்ணீர் கொடு. ஆனால் அது ரொம்ப சூடாகவும் வேண்டாம், ரொம்ப குளிர்ச்சியாகவும் வேண்டாம் ‘

‘லா ஹவ்ல், நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கே வெட்கமாக உள்ளது ‘

‘பார்லியில் கொஞ்சம் வைக்கோல் கலந்து வை ‘

‘போதும் ஐயா, வேலை தெரிந்தவனிடம் நீங்கள் வேலையை விளக்க வேண்டியதில்லை ‘

பொறுமை இழந்த சேவகன், பார்லியும் வைக்கோலும் எடுத்து வருவதாக சொல்லிச் சென்றான். சென்றவன் சென்றவன்தான். சூஃபியின் உத்தரவுகளையும் கழுதையையும் மறந்தான். தன் சகாக்களோடு சேர்ந்து அரட்டையடித்தும், கழுதை மீது சூஃபி கொண்ட அக்கறையை கிண்டல் செய்தும் பொழுதைக் கழித்தான்.

பிரயாணத்தால் களைப்புற்றிருந்த சூஃபி, கட்டளைகளைக் கொடுத்துவிட்டு கண்ணுறங்கச் சென்றார். (கண்களைத் திறந்தே தூங்கும் முயலின்) தூக்கத்தை விழிப்பென்று எண்ணியபடி.

தன் கழுதையை ஓநாயொன்று முதுகிலும் தொடையிலும் கடித்துக் குதறுவதாகவும், சாலையிலும் கிணற்றுக்குள்ளும் அது விழுந்துவிடுவதாகவும் கனவு கண்டு விழித்தார். (இறைவசனங்களான) சூரா ஃபாத்திஹாவையும் சூரா காரியாவையும் ஓதிக்கொண்டார்.

கதவுகளை வெளிப்பக்கமாக தாழ் போட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்டார்களே! என்ன செய்வது ? யாரிடம் உதவி கேட்பது ? வேலைக்காரன் எங்கு சென்றான் ? எங்களோடுதானே உணவையும் உப்பையும் பங்கிட்டுக் கொண்டான் ? நான் அவனிடம் அன்புதானே காட்டினேன் ? அவன் ஏன் வெறுப்பு காட்டுகிறான் ? பகைமை உணர்வு ஒவ்வொன்றுக்கும் காரணம் வேண்டுமல்லவா ?

ம்ஹும். அன்பின் வடிவமான (முதல் மனிதர்) ஆதம் இப்லீஸுக்கு என்ன தீங்கு செய்தார்கள் ? அவன் அவர்களுக்கு தீங்கு செய்யவில்லையா ? தேளுக்கும் பாம்புக்கும் மனிதன் என்ன செய்கிறான் ? அவை அவனைக் கடித்து, வேதனையையும் விடுதலையையும் தரவில்லையா ?

கடித்துக் குதறுவது ஓநாயின் குணம். இந்தப் பொறாமை மனிதனிடத்திலே மிகவும் வெளிப்படையாகவே உள்ளது.

ம்ஹும். இப்படி எண்ணுவது தவறு. என் சகோதரனுக்கு எதிராக நான் ஏன் சிந்திக்கிறேன் ?

இவ்வாறாக சூஃபி சிந்தித்துக் கொண்டிருக்கையில், லாயத்தில் அவர் கழுதை நிந்தித்துக் கொண்டிருந்தது.

இறைவா, பார்லி வேண்டாம், ஒரு கைப்பிடியளவு வைக்கோலாவது தரக்கூடாதா ? ஓ, குருமார்களே! அந்த மரியாதை தெரியாத, பக்குவமற்ற அயோக்கிய சேவகனின் பொருட்டு என் மீது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்று தனது ஊமை நாவன்மையால் முறையிட்டுக் கொண்டிருந்தது.

0 0 0

விடிந்ததும் வந்தான் வேலைக்காரன். கழுதைக்கு சேணம் பூட்டினான். வழக்கப்படி இரண்டு மூன்று அடிகளும் கொடுத்தான். வலி பொறுக்க முடியாமல் துள்ளிக் குதித்தது கழுதை.

சூஃபி அதன் மீதி ஏறி தன் பிரயாணத்தைத் தொடர முயன்றபோது, பலமுறை அது குப்புற விழுந்து மண்ணைக் கவ்வியது. உடம்பு சரியில்லை என்றெண்ணி, சக பயணிகள் அதை ஒவ்வொரு முறையும் தூக்கிவிட்டார்கள். சிலர் அதன் காதுகளைத் திருகினார்கள். சிலர் அதன் குளம்பில் கல் குத்தியுள்ளதா என்று கவனித்தார்கள்.

‘குருவே, என்ன ஆயிற்று உங்கள் கழுதைக்கு ? எனக்கு இறைவன் ஆரோக்கியமான கழுதையைக் கொடுத்துள்ளான் என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்தீர்களே ‘ என்று கேட்டனர்.

‘ராத்திரி பூரா ‘லா ஹவ் ‘லைத் தின்ற கழுதை இப்படித்தானிருக்கும். இரவில் இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறது ‘ என்றார் சூஃபி.

ஷைத்தானுடைய வாயிலிருந்து வரும் ‘லா ஹவ்ல் ‘ என்பதை விழுங்கும் எவனும் இந்தக் கழுதையைப் போல குப்புற விழ வேண்டியதுதான். இஸ்லாத்தின் பாதையிலும் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீது போகும்போது, இந்தக் கழுதையைப் போல மயங்கி விழத்தான் வேண்டும்.

நயவஞ்சகர்களுடைய வார்த்தைகளின்மீது எச்சரிக்கையாய் இருங்கள். விரிக்கப்படும் வலையை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த உலகின்மீது பாதுகாப்பாகத்தான் நடக்கிறோம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.

எத்தனையோ ஷைத்தான்கள் ‘லா ஹவ்ல் ‘ என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர். ஆதமே, பாம்பின் உள்ளே இப்லீஸ் இருக்கிறான். பணிந்து கொள்ளுங்கள் எனது அன்பே, ஆத்மாவே என்றெல்லாம் ஆசை காட்டுவான். ஒரு கசாப்புக் கடைக்காரனைப் போல தோலை உரிப்பதற்குத்தான் அதெல்லாம்.

உங்களுக்கான உணவை நீங்கள் தேடுங்கள். சிங்கத்தைப் போல. அந்நியனோ, அந் நியோன்னியமான உறவுக்காரனோ, எவராக இருந்தாலும் சரி, கீழ்த்தரமானவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். அவை அந்த சேவகனின் அக்கறையைப் போன்றதுதான். ஒன்றுமில்லாதவர்களுடைய புகழ் மொழிகளுக்கு செவி சாய்ப்பதைவிட, நண்பர் ஒருவரும் இல்லாதவராக இருப்பதே மேல். அடுத்தவனுடைய நிலத்தில் உங்கள் வீடுகளைக் கட்ட வேண்டாம்.

அந்நியன் என்பது யார் ? உங்கள் உடம்புதான். அதைக்கொண்டுதான் உங்களுக்கு எல்லாத் துயரமும். உங்கள் உடம்புக்கு மட்டும் சத்தான உணவு வகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில், உங்கள் ஆத்ம சாரத்தில் கொழுப்பு இருக்காது. கஸ்தூரியிலேயே உங்கள் உடம்பைக் கிடத்தியிருந்தாலும், அதன் துர் நாற்றம் இறப்பின்போது பிறந்துவிடும். கஸ்தூரியை உங்கள் உடம்பில் பூச வேண்டாம். இதயத்தில் தேயுங்கள். கஸ்தூரி என்பது என்ன ? இறைவனுடைய புனிதமான பெயர்தான் அது.

நயவஞ்சகர்கள்தான் கஸ்தூரியை உடம்பில் போட்டுக்கொள்கிறார்கள். அவர்களுடைய உதடுகள் இறைவனுடைய திருப்பெயரை உச்சரிக்கும். அவர்களுடைய உள்ளங்களில் இருந்து அவநம்பிக்கையின் துர்நாற்றம் அடிக்கும். அவர்களைப் பொறுத்தவரை, இறைப்புகழ்ச்சி என்பது, கழிவு மலை மீது வளரும் ரோஜாக்களையும் லில்லி மலர்களையும் ஒத்தது.

நல்ல பெண்கள் நல்ல ஆண்களிடத்திலே சேருகிறார்கள். அதே போல, கெட்ட ஆண்களுக்கு கெட்ட பெண்கள் என்றும் இறைவசனம் உள்ளது. தெரிந்து கொள்ளுங்கள். கெட்ட எண்ணம் வேண்டாம். அதன் தோற்றம் நரகம் ஆகும். அது உங்கள் மார்க்கத்தின் பகைவனுமாகும். நீங்கள் நரகத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு பகுதியும் அதன் முழுமையை நோக்கியே பிரயாணப்படுகிறது. ஜாக்கிரதை.

சகோதரனே, நீ உன் எண்ணங்களின் கூட்டுத் தொகையன்றி வேறென்ன ? மற்றதெல்லாம் வெறும் எலும்பும் தோலும்தான். உனது எண்ணம் ரோஜா என்றால் நீ ஒரு ரோஜாத்தோட்டம். முள் என்றால் அடுப்புக்கு விறகாகும் முட்புதர் நீ. நீ பன்னீரென்றால், தலைகள் மீதும் நெஞ்சங்களிலும் தெளிக்கப்படுவாய். சிறுநீரைப் போல நீ துர்நாற்றமடித்தால் வெளியேற்றப்படுவாய்.

பிரிந்தும் கலந்தும் சிதறுண்டு போன மக்களை ஒன்றுபடுத்துவதற்காகத்தான் இறைவன் தூதர்களை வேத நூலுடன் அனுப்பினான். அவர்களின் வருகைக்கு முன் நாமனைவரும் ஒரே சமுதாயமாகத்தான் இருந்தோம். நல்லவர்களாகவா, கெட்டவர்களாகவா என்று யாருக்கும் தெரியாது.

நல்ல காசும் செல்லாக் காசும் ஒன்றாகக் கலந்திருந்தன. இருட்டாக இருந்ததனாலும், மக்களனைவரும் இரவுப் பயணிகளாக இருந்ததனாலும் ஒன்றும் தெரியவில்லை. இறைத்தூதர்களின் சூரியன் உதித்தபோது, செல்லாக் காசுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

ஒளியானது நல்லதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. அல்லதை அதன் தன்மையில் காட்டுகிறது. இதனால்தான் இறைவன் கியாமத்தை (மறு உயிர்ப்பு செய்யும்) நாள் என்று குறிப்பிட்டான். உண்மையில் நாள் அல்லது பகல் என்பது அவ்லியாக்களின் அந்தரங்க பிரக்ஞையாக உள்ளது. அவர்களுடைய மர்மத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது.

காலையின் மீது ஆணையாக என்று (காலை என) இறைவன் குறிப்பிடுவதெல்லாம் (இறுதித் தூதர்) முஸ்தபாவின் மன ஒளியைத்தான். இல்லையெனில், நிலையற்ற ஒன்றைக் குறிப்பிட்டு, அதன் மீது ஆணையாக என்று சொல்வது தவறாகிவிடுமல்லவா ? தற்காலிகமானவற்றைச் சிலாகிப்பது இறைவனுடைய பேச்சுக்கு உகந்ததாகுமா ?

அஸ்தமிப்பவைகளை நான் நேசிக்கவில்லை என்று இறைவனின் நண்பராகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் சொன்னதை சிந்தித்துப் பாருங்கள். இரவின் மீது ஆணையாக என்பதும் இதையொத்ததுதான். இரவு என்பது உடம்பையும் குறிக்கும்.

நானே அல்லாஹ் என்று ஃபிரவ்ன் சொன்னது பொய்யாகும். ஆனால் மன்சூர் அல்ஹல்லாஜ் வாய்வழி வெளிப்பட்டபோது அது உண்மையின் ஒளியாக இருந்தது. (இறைத்தூதர்) மூஸாவின் கையிலிருந்த கழி, உண்மைக்கு சாட்சி பகர்ந்தது. மந்திரவாதிகளின் கைகளிலோ அது பயனற்றதாக இருந்தது. களிமண்ணின் மீது ஓங்கி அடித்தாலும் நெருப்புப் பொறி பறக்குமா ?

கையும் கருவியும் கல்லையும் இரும்பையும் போன்றது. எப்போதுமே ஒரு ஜோடிதான் பிறப்பிற்கு ஆதாரம். ஜோடியும் கருவியும் இல்லாத ஒருவன் இறைவன் மட்டுமே. எண்களில் சந்தேகம் வரலாம். ஆனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது இறை என்ற அந்த ஒன்று. இரண்டு மூன்று என்று சொல்பவர்கள்கூட ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வார்கள். ஒன்றரைக்கண் போடாமல் ஒழுங்காகப் பார்த்தால் இரண்டு, இருபதெல்லாம் ஒன்றாகிவிடும்.

குருட்டு இதயங்களில் புனித வார்த்தைகள் தங்குவதில்லை. எந்த ஒளியினின்று வந்தனவோ, அங்கேயே அவை மீள்கின்றன. மனப்பாடம் செய்தாலும் சரி, தகுதியற்றவர்களிடம் தங்குவதில்லை ஞானம். நீங்கள் எழுதி வைத்தாலும் சரி, எடுத்தியம்பினாலும் சரி, தனது முகத்தை அது உங்களிடமிருந்து விலக்கிக் கொள்ளும்.

ஆனால் நீங்கள் அன்பு வைத்துவிட்டால், உங்களுக்கு அடங்கிய பறவையாய் உங்கள் கைகளில் தவழும். எந்த விவசாயியின் வீட்டிலும் தங்குவதில்லை (ஞானமாகிய) மயில்.

அருஞ்சொற்பொருள்

சிராத்துல் முஸ்தகீம் — நேரான வழி மற்றும் மறுமை நாளில் நம்பிக்கை கொண்டோர் கடக்க சொர்க்கத்து இட்டுச் செல்லும் ஒரு பாலம். நம்பிக்கையற்றோர் தவறி நரகத்தில் விழுவர் என்றும் ஐதீகம்.

ruminagore@hotmail.com

visit

http://www.tamiloviam.com/rumi

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி