மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

நாகூர் ரூமி


====

சிங்கம் : கீழ்த்தரமானவர்கள் தந்த வாக்குறுதியும் கீழ்த்தரமானதாகத்தான் இருக்கும். அவர்களின் தேன் ஒழுகும் வார்த்தைகள் என்னை ஏமாற்றிவிட்டன. நேரம் என்று ஒன்று உள்ளதே, அது எவ்வளவு நேரம்தான் என்னை ஏமாற்றும் ?

பாதை மிருதுவாகத்தான் உள்ளது. ஆனால் அதில் படுகுழிகள்! வார்த்தைகளும் பெயர்களும் படுகுழிகள்! உயிர் என்ற நீரை உறிஞ்சும் மண். நீரூற்றைப் பீறிட விடுகிற மண் ரொம்ப அரிது. போ, அதைத் தேடு.

ஞானத்தைத் தேடி அலைபவனும் ஞானத்தின் ஊற்றுக் கண்ணாகிறான். அவனுடைய உள்ளமோ இறைவனின் விதி வசப்பட்டே செயல்படுகிறது. அப்படிப் பட்டவனது அறிவானது, ஆத்மாவைக் கொண்டு உருவாகிறது.

சாதாரண மனிதனின் அறிவு, அவனுக்கு ஆசானாகிறது. ஞானியின் அறிவோ அவனுக்கு மாணவனாகிறது.

ஓ அஹ்மதே! இதற்குமேல் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. வைத்தால் நான் பொசுங்கிப் போவேன். சுத்தமான ஆத்மாவின் சுல்தானே! இனி என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் (இறைவனைக் காண) செல்லுங்கள் என்று (மிஃராஜ் என்ற விண்பயணத்தின்போது பெருமானாரை ஏற்றிச் சென்ற) ஜிப்ரீல் சொன்னது போல, ஞானியிடம் அறிவு சொல்லும்.

சாதாரண மனிதன் அரசனிடமிருந்து (இறைவனிடமிருந்து) கட்டளைகளைப் பெற்றுக் கொள்கிறான். இறை நேசரோ அரசனின் கட்டளைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

சாதாரணனை நட்சத்திரங்கள் ஆளுகின்றன. ஞானியோ நட்சத்திரங்களை ஆள்வார். உங்கள் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளால் அல்ல.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நீங்கள் தவறாக விளக்கம் தந்தீர்கள். உங்களை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவனின் பேச்சை பிறகு விளக்கலாம்.

கழுதை பெய்த மூத்திரக் குட்டையில் அமர்ந்துள்ள ஈ, அந்த மூத்திரக் குட்டைதான் கடல் என்று எண்ணிக்கொள்ளும். ஏனெனில் தன்னை வைத்துப் பார்க்கும்போது, எல்லையற்ற பரந்து விரிந்த கடலாக மூத்திரத்தை அது காண்கிறது. நீங்கள் கொடுக்கும் விளக்கங்களும் இதுபோலத்தான். மூத்திரத்தை மூத்திரமாகவே காட்டும் அறிவு எங்கே ?

நான் ஏமாந்தேனே! என் எதிரி என் செவிகளின் வழியாக என் விழிகளைக் கட்டிவிட்டானே! அவர்களின் மரவாள் என்னைக் காயப்படுத்திவிட்டதே!

வார்த்தைகள் என்பது தோல். அர்த்தம் என்பதோ உள்ளிருக்கும் பழம். பழத்தின் சொத்தையை தோல் மறைக்கும். நல்ல பழங்களின் ரகசியத்தையும் அது பொறாமையினால் மறைக்கும்.

காற்றினால் எழுதுகோலும், நீரினால் எழுது தாளும் செய்தால் நிற்கவா போகிறது ?

காற்றென்பது மனித ஆசை. ஆசையைத் துறந்தால் இறைவனிடமிருந்து செய்தி வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

படைத்தவனின் செய்தி இனிமையானது. ஏனெனில் அது முற்றிலும் நிரந்தரமானது. என்றைக்கும் மாறாதது. அரசர்களுக்காக நிகழ்த்தப்படுகின்ற பேருரைகளெல்லாம் அந்த அரசர்களின் ராஜ்ஜியங்களைப் போலவே மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இறைத்தூதர்களின் ராஜ்ஜியங்களும் அவர்களின் முத்திரைகளும் மாறாதவை.

திர்ஹம்களின் முகத்திலிருந்த ராஜாக்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. ஆனால் முஹம்மதின் பெயர் நிரந்தரமாக அவற்றின்மீது பதிக்கப்படுகிறது.

அஹ்மது என்ற பெயரில் எல்லா இறைத்தூதர்களின் பெயரும் அடங்கும். நூறு என்று சொன்னால் தொன்னூறும் அதில் அடங்குவது போல.

உயிரைப் பார்க்க முடியாது. ஏனெனில் நமக்கு அவ்வளவு நெருக்கமாக உள்ளது. வயிறு நிறைய நீரிருந்தும் வாய் ஏன் உலர்ந்துள்ளது ?

சிவப்பு, பச்சை என்ற நிறங்களை எப்படி அறிவாய் ? ஒளியை இதற்குமுன் நீ அறிந்திராவிட்டால் ?!

நிறங்களில் உன்னை நீ இழந்த காரணத்தினால், நிறங்களுக் காரணமான ஒளியை அறிய அவை திரை போட்டன. இரவு வரும்போதுதான் தெரியும், நிறம் என்பதெல்லாம் ஒளியில் இருந்து வருவதென.

புற ஒளி சூரியனிடமிருந்தும் நட்சத்திரங்களிடமிருந்தும் வருகிறது. உள்ளொளியோ இறைவனிடமிருந்து.

எந்த ஒளி உன் கண்ணுக்கு ஒளி தருகிறதோ, அதுதான் உள்ளத்தின் உண்மையான ஒளி! கண்ணின் ஒளி என்பது உள்ளத்து ஒளியின் விளைவு.

இரவில் நிறம் தெரியாது போவதால், ஒளி என்பதை அதன் நேர் எதிரான இருளை வைத்து விளங்கிக்கொண்டாய்.

இதைப்போலத்தான் துன்பத்தையும் வேதனையையும் இறைவன் ஆக்கியுள்ளான். அவற்றை வைத்து நீ இன்பத்தை அறிந்து கொள்ள!

மறைவான விஷயங்கள் வெளிப்படையான விஷயங்களை வைத்து அறியப்படுகின்றன.

எதிர்மறையான பொருட்கள், அதற்கு எதிர்மறையான பொருட்களை வெளிப்படுத்துகின்றன, விளக்குகின்றன.

ஆனால் இறைவனின் ஒளிக்கு எதிர்மறையான பொருள் ஒன்றும் கிடையாது.

எனவே, நமது கண்களால் அவனைப் பார்க்க முடியாது. அவன்தான் நம்மைப் பார்ப்பான்.

மூஸாதான் மலையைப் பார்ப்பார். மலையால் மூஸாவைப் பார்க்க முடியாது.

உருவமற்ற ஒன்றிலிருந்து உருவம் பிறக்கிறது. எண்ணத்திலிருந்து குரலும் பேச்சும் வருவது போல.

நிச்சயமாக நாம் அவனிடத்திலே திரும்பிச் செல்வோம் என்ற திருவசனத்தின்படி, எல்லா வடிவங்களும் உருவமற்ற ஒன்றாகிய இறைவனிடத்திலேயே மீளும்.

நமது எண்ணமென்பது ஹுவாகிய அவனிடத்திலிருந்து ஹவாவாகிய காற்றில் விடப்பட்ட அம்பு.

அம்பு திரும்பி எய்தவனிடமே செல்லும்.

ஒவ்வொரு கணமும் இந்த உலகம் புதுப்பிக்கப் பட்டுக்கொண்டே உள்ளது. ஆனால் நாம்தான் அதை அறிவதில்லை. நமது உயிரும் இப்படித்தான். ஓடை நீரைப்போல மாறிக்கொண்டே உள்ளது. பார்ப்பதற்கு அது ஒரே ஆறு போலத்தான் தோன்றும்.

ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி, அதை வேகமாக (இருளில்) ஆட்டினால், (பார்ப்பவருக்கு) அது ஒரு நீலமான நெருப்புக் கோடாகத் தெரியும். காலமும் நேரமும் இறைவனின் கையில் அந்த ஊதுபத்தியைப் போலத்தான்.

இவ்வாறு, நேரம் போவதைப் பற்றி சிங்கம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தாமதமாக வந்த முயல், இன்னொரு சிங்கம் தன்னை மிரட்டியதாகவும், தன் நண்பனைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் பொய்கூறி, சிங்கத்தை ஏமாற்றி, பாழடைந்த கிணறான தனது இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது.

ஒரு குழந்தையின் (இறைத்தூதர் மூஸா) பொருட்டு, ஃபிரவ்ன் தன் படை பலத்தோடு நைல் நதிக்குள் இழுக்கப்பட்டதுபோல.

இறைவனின் விதி நிகழவிருக்கும்போது, பகைவன் யார் நண்பன் யார் என்று தெரிவதில்லை. எங்களைப் படைத்த நாயனே! மறைவானவற்றையும் நீ அறிவாய். நெருப்பை நீராகவும், நீரை நெருப்பாகவும் காட்டாதே இறைவா என்று இறைஞ்சுங்கள்!

இறைத்தூதர் சுலைமான் கூடாரம் அடித்தபோது, பறவைகளெல்லாம் தங்களின் மரியாதையைத் தெரிவிக்க வந்திருந்தன. தங்களது பாஷையிலேயே (தங்களிடம்) இறைத்தூதர் பேசியதை எண்ணி, ஆனந்தமும் ஆச்சரியமும் அடைந்தன.

ஒரே மொழியைப் பேசுவதால் (இருவருக்கிடையே) உறவு ஏற்படுகிறது. ஆனால் மொழி ஒன்றாக இருப்பதைவிட, மனசு ஒன்றாக இருப்பதே சிறந்தது. பார்வைகள் ஒன்றும்போது, பாஷைகள் தேவையில்லை. நெஞ்சோடு நெஞ்சு இணைந்துவிட்டால், மொழியோ, வார்த்தைகளோ, சப்தங்களோ, குறிப்போ, எழுத்தோ எதுவும் தேவையில்லை. ஆயிராமாயிரம் விளக்கங்கள் ஆத்மார்த்தமாக எழுந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பறவையும் தனது பிரத்தியேகமான திறமையைப் பற்றி, இறைத்தூதர் சுலைமான் முன்னிலையில் விவரித்தது. பெருமையினால் அல்ல. வேலைக்குச் சேர இருக்கும் அடிமை, தன் திறமைகளை எஜமானனுக்கு நிரூபணம் செய்து காட்டும் விதத்தில்.

தான் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தாலும், கீழே உள்ள நீர் நிலைகளையும், அதன் ஆழம், அகலம், அது மண்ணில் இருந்து வருகிறதா, அல்லது பாறையிலிருந்து பீறிடுகிறதா என்று அறிய முடியும் என்று சொன்னது கழுகு.

நீரற்ற இடங்களில் நாங்கள் பயணிக்கும்போது, எங்களுக்கு நீ உற்ற நண்பனாக இருப்பாய் என்றார்கள் இறைத்தூதர் சுலைமான்.

பொறாமை கொண்ட காகம், கழுகின் கூற்றை மறுத்தது. அவ்வளவு கூர்மையான பார்வை இருக்குமானால், பூமியில் வைத்த கண்ணி மட்டும் ஏன் கண்ணில் படுவதில்லை, ஏன் மாட்டிக்கொள்கிறது ? என்று கேட்டது அது.

அரசே! பகைவனின் பேச்சை நம்பவேண்டாம். இறைவனின் விதியை நம்பாத இந்த காகம் ஒரு அவநம்பிக்கையாளனாகும். கண்ணியும் என் கண்களுக்குத் தெரியும். இறைவனின் விதி என் கண்களை மறைக்காமல் இருந்தால். இறை விதி வரும்போது அறிவு தூங்கிவிடும். நிலவு கறுப்பாகும். சூரியன் ஒளிராது. நம்பிக்கையில்லாதவர்கள், அப்படி இருப்பதற்குக் காரணமும் விதியேயாகும் என்று கழுகு பதிலளித்தது.

இறைத்தூதர் ஆதமின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். (உலகில் உள்ள எல்லாப் பொருட்களின்) பெயர்களையெல்லாம் ஆண்டவனே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான்.

ஆயிரக்கணக்கான விஞ்ஞான அறிவுகள் ஆதமின் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு பொருள் (அதன் உண்மையான தன்மையோடு) அதன் இறுதிவரை எப்படி இருக்கும் என்பதை முதலிலேயே அறிந்திருந்தார்கள் ஆதம். அவர்களால் சுறுசுறுப்பு என்று பெயரிடப்பட்டது சோம்பேறியானதில்லை. சோம்பேறி என்று சொல்லப்பட்டது சுறுசுறுப்படைந்ததில்லை.

யார் இறுதிவரை நம்பிக்கை கொள்வார்கள், யார் இறுதியில் நம்பிக்கை இழப்பார்கள் என்று ஆதம் அவர்கள் முதலிலேயே அறிந்திருந்தார்கள்.

மனிதனைப் பொறுத்தவரை, ஒரு பொருளின் வெளிப்புறத் தோற்றம்தான் அதன் பெயராக உள்ளது. ஆனால் படைத்தவனைப் பொறுத்தவரை, ஒரு பொருளின் உண்மையான தன்மை எதுவோ, அதுவே அதன் பெயராக உள்ளது.

மூஸாவுக்கு தன் கையில் இருந்தது வெறும் கோல். இறைவனுக்குத் தெரியும் அது பாம்பென்று. சுருக்கமாகச் சொன்னால், இறுதியில் நாம் எதுவாக இருப்போமோ அதுவே நமது பெயராக இறைவனிடம் உள்ளது.

இறைவனின் ஒளி கொண்டு, ஆதம் பார்த்ததனால், பார்க்கும் பொருளின் உண்மையும் பெயரும் அவர்களுக்கு விளங்கியது. அவர்களின் புகழை இறுதித் தீர்ப்பு நாள்வரை சொல்லிக்கொண்டிருந்தாலும் முடியாது.

எனினும், அப்படிப்பட்ட ஆதம் விலக்கப்பட்ட கனி விஷயத்தில் ஏன் தவறு செய்தார்கள் ? அது விலக்கப்பட்டதுதானா, அல்லது விளக்கம் தேவைப்படுவதுதானா ? என்ற குழப்பம் ஏன் ஏற்பட்டது ?

அது இறை விதியே ஆகும்.

தோட்டக்காரனின் காலில் முள் குத்தியபோது, தோட்டத்தையே கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டான் திருடன். இறைவனின் விதி வரும்போது, மேகங்கள் சூரியனை மறைக்கின்றன. சிங்கங்களும் சிறுத்தைகளும் சிற்றெலிகளாகின்றன.

கிணற்றில் தெரிந்த தனது பிம்பத்தை தனது எதிரி என்று எண்ணி, கிணற்றின் ஆழத்தில் பாய்ந்து செத்தது சிங்கம்.

அநியாயக்கார சிங்கம் விட்டெறிந்த அநீதி, அதன் தலைக்கே திரும்பி வந்தது. மனிதன் எந்த அளவுக்கு நியாயம் தவறுகிறானோ, அந்த அளவுக்கு பயங்கரமானதாக அவனது கிணறு (முடிவு) இருக்கும். அடுத்தவனுக்கு குழி தோண்டுபவர்கள் தங்கள் அ நியாயத்தால் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக்கொள்கிறார்கள்.

பலகீனமானவர்களுக்கு உதவி இல்லை என்று எண்ண வேண்டாம். நீங்கள் யானைகளாக இருந்தால், உங்கள் அழிவு (அபாபீல் என்னும்) சின்னப் பறவைகள் மூலம் வரும். சிங்கம் கிணற்றினுள் பார்த்தது தன்னைத்தான். தனது சினத்தின் காரணத்தினால் தன்னையே எதிரியாக எண்ணிவிட்டது சிங்கம்.

வாசகர்களே! அடுத்தவரிடம் நீங்கள் காணும் அநியாயமெல்லாம் உங்கள் பிரதிபலிப்புத்தான். உங்கள் பித்தலாட்டத்தைத்தான் அவர்களிடம் காண்கிறீர்கள். நீங்கள் அடித்துக் கொல்வதும், சபித்துக்கொள்வதும் உங்களையேதான். அந்த சிங்கத்தைப் போல.

உங்களின் ஆழத்தில் குதித்து நீங்கள் பார்த்தால், அந்த அநியாயமும் அயோக்கியத்தனமும் உங்களிடமிருந்து வந்தவைதான் என்பது புரியும். அடுத்தவரிடத்தில் நீங்கள் காணும் கெட்ட குணங்கள் யாவும் உங்களுடயவைதான்.

இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் கண்ணாடியாக உள்ளார்கள் என்பது நபிமொழி. நீங்கள் நீல நிறக்கண்ணாடி போட்டு இந்த உலகைப் பார்க்கிறீர்கள். இந்த உலகமே நீல நிறமாக உள்ளது, அவ்வளவுதான்.

இந்த நீலம் உங்களிடமிருந்து வருவதுதான் என்பதை நீங்கள் குருடர்களாக இல்லாத பட்சம், உணர்ந்து கொள்வீர்கள்.

அடுத்த மனிதனை குறை சொல்லும் யோக்கியதை உங்களுக்கு இல்லை.

உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ளுங்கள். ஏன் எப்படி என்ற கேள்விகளின் கிணற்றின் அடிபாகத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். சின்ன ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதுக்கு வந்திருக்கிறோம் என்று பெருமானார் ஏன் சொன்னார்கள் ? வெளியில் உள்ள, கண்ணுக்குத் தெரிகிற, எதிரிகளை நாம் வென்று விடலாம். ஆனால் நமக்கு உள்ளேயே நப்ஸ் எனும் (கீழான எண்ணங்களாகிய) பகைவன் உள்ளான். அவனை வெல்வது எளிதல்ல. ஒரு சின்ன குண்டூசியை வைத்து ஒரு மலையைப் பெயர்க்கின்ற முயற்சியாகும் அது.

நமக்கு உள்ளே உள்ள சிங்கத்தை முயல்களால் வெல்ல முடியாது. தன்னைத் தானே யார் வெற்றி கொள்வானோ, அவனே உண்மையான சிங்கம்.

****

அருஞ்சொற்பொருள்

மிஃராஜ் — முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்ற நிகழ்ச்சி

ஜிப்ரீல் — வானவர் தலைவர்

திர்ஹம் — வெள்ளிக் காசு

அஹ்மது — முஹம்மது நபி

ஹு — அவன்(இறைவன்)

ஹவா — காற்று

மூஸா — மோஸஸ் என்று அறியப்பட்ட இறைத்தூதர்

ஃபிரவ்ன் — மூஸாவை ஒழிக்கத் திட்டமிட்டு, ஒழிந்துபோன எகிப்திய அரசன் (இரண்டான் ரமீசஸ்)

சுலைமான் — சாலமன் என்று அறியப்படும் இறைத்தூதர். காற்றின் மீது அதிகாரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பறவைகள், விலங்கினங்கினங்களின் மொழியும் அவருக்குத் தெரியும்.

அபாபீல் — அப்ரஹா என்ற மன்னன் புனித ஆலயமான கஃபதுல்லாஹ்வை அழிக்க வந்தபோது, இறைக்கட்டளைப்படி, அபாபீல் என்ற சின்ன சின்ன பறவைகள் போட்ட கற்களினால் அப்ரஹாவும் அவனது யானைப்படையும் அழிந்து போன வரலாறு திருக்குர்ஆனில் கூறப்படுகிறது.

ஜிஹாது — புனிதப்போர், உணர்ச்சிகளுடனான போராட்டம்.

ruminagore@hotmail.com

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி