தீர்ப்பு

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

மாலதி


====

‘உங்கள் மனைவியும் என் கணவரும் ஒருவரை ஒருவர் மிகத் தீவிரமாக நேசிப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ‘

‘மிகக்குரூரமான கேள்வி இது. இந்த நிலையை நான் வெறுக்கிறேன். இதை முழுக்க மாற்ற ஏதாவது வழி யிருக்கிறதா ? ‘

‘வழியை நீங்கள் தான் சொல்லவேண்டும். இந்த மாதிரி பிரச்னைகளை ஏற்படுத்துகிறவர்களே உங்களைப் போலப் பொறுப்பில்லாத கணவன்மார்கள் தான். ‘

‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ? இருந்து இருந்து பழியை எங்கள் மீது போடுகிறீர்கள்.திருமணம் என்கிற வீட்டைப் போஷிப்பது பெண் கடமை. உங்களைப் போன்ற பெண்கள் வீட்டுக்குள் இருந்துகொண்டு,இல்லத்தரசி என்று வேஷம்கட்டி கோலம் போட்டு சமையல் பண்ணி குழந்தைகளைப் பாராட்டு குவிக்கிற பணம் சம்பாதிக்கிற மெஷின்களாகத் தயார் பண்ணுகிறது தவிர வேறு என்ன செய்கிறீர்கள் ? கணவனைத் திசை திருப்பாமல் நீங்கள் அல்லவா பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் ? ‘

‘ஐயா, வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.உங்கள் தப்பினால் தான் என் அருமையான கணவரைக் கை நழுவ விட்டிருக்கிறேன்.எப்படித் தெரியும் எனக்கு உங்களைப் பற்றி என்று ஆச்சரியப்படாதீர்கள்.ப்ரைவேட் டிடெக்டிவ் வைத்து அவ்வளவும் அறிந்து வைத்திருக்கிறேன்.நீங்கள் 87ம் வருடம் ஜூலை மாதம் பெண் பார்த்து வந்தீர்களா உங்கள் மனைவியை ? செப்டம்பர் கடைசி வெள்ளிக்கிழமை உங்கள் திருமணம். திருமணத்துக்குமுன் உங்கள் மனைவியிடம் பேசியதுண்டா ? ‘

‘கிடையாது. அதெல்லாம் எங்கள் குடும்பத்தில் கிடையாது. என்ன அவசியம் அதற்கு ? ‘

‘ஆமாம், என்ன அவசியம் ?பேர் வெட்டப் பட்ட பாத்திரம் போல ஸ்விட்ச் போட்டாற்போல ,பெண் திருமணம் நடந்த உடனே மனைவியாகி விடவெண்டும். பெண் என்பவள் மனைவியாக ஒரு டிரான்ஸிஷன் தேவையே யில்லை. ‘

‘இளக்காரம் எதற்கு ? அப்படி ஆண் கணவனாக ஒரு டிரான்ஸிஷன் தேவைப்படுகிறதா என்ன ? ‘

‘அபத்தம்.ஆண் கணவனாகிற பயிற்சி தான் அவன் பிறந்த முதலே கொடுக்கப்படுகிறதே!அம்மா பாலிலிருந்து பெண் நெருக்கம் அவனுக்குக் கற்பிக்கப் படுகிறது. புடவை வாசனை ஆணுக்குப் புதிதல்ல.பெண்ணுக்குத்தான் மனைவியாகச் சில அவகாசங்கள் தேவை. இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள் நீங்கள் எல்லாம் ? ‘

‘அம்மணி, எனக்குப் புரியவில்லை,என் மனைவிக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவது அதிசயமாயிருக்கிறது. உங்கள் கோபம் என் மனைவி மீது ஆரம்பிக்காமல் என் மீது திரும்பினதற்குக் காரணமென்ன ?எங்கும் பெண்ணியம் எதிலும் பெண்ணியம் என்ற கெட்ட வீச்சம் உங்களைப் போன்ற இல்லத்தரசிகளிடையும் பரவி விட்டது தானோ ? ‘

‘காரணத்தைச் சொல்கிறேன். என் கணவர் மிக நல்லவர். சாதாரண ஈர்ப்பில் விழுபரல்ல. மிக உயர்ந்த அம்சங்களே அவரைக் கவர்ந்திருக்கக் கூடியவை. அத்தகைய பெண்ணை இல்லறத்தின் வேலி தாண்டித் துரத்தினது உங்கள் துஷ்டத்தனமாகத் தானிருக்க வேண்டும். ‘

‘அதற்காக நான் பெண் பார்த்தது முதல் ஆரம்பிக்கவேண்டுமா என் தவறுகளை ? ‘

‘ஆமாம், அங்கிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். பெண் மனசை வெற்றி கொள்ளத் துரும்பெடுத்துப் போடுவதில்லை நீங்கள். கழுத்தில் ஒரு பட்டயத்தைக் கட்டி ‘இன்னையிலிருந்து இது நீ ‘ என்று ஒரு நிபந்தனைகூடிய வாழ்வைத் திணித்து ,பிறகு அவளை இன்னாரென்று ஒரு நிமிடம் கூடக் கண்டு கொள்ள முயற்சி செய்வதில்லை. அக்கிரமமமில்லையா இது ? ‘

‘நான் ஒருத்தனா அப்படிச் செய்த ஒரே ஆள் ?காலம் காலமாக அத்தனை பேரும் அப்படித்தானே இருந்து வந்தோம் ? ‘

‘அதான், அதான் தப்பு என்கிறேன். கல்யாணமாகி ஒரு மாதத்தில் உங்கள் மனைவி தற்கொலை முயற்சி செய்தாள். உண்டா இல்லையா ? ‘

ஆமாம், வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள உன்பாடு என்பாடு ஆகிவிட்டது ‘

‘அதற்கு உபயோகப்படுத்திய உங்கள் சாமர்த்தியங்களில் ஒரு பகுதியை நீங்கள் அவளின் காரணங்களைத் தெரிந்துகொள்ள செலவழித்திருக்கலாம். ‘

‘என்ன காரணம் பெரிதாக ?உதவாக்கரை விஷயங்களுக்கு எல்லாம் பெண்களுக்கு டிப்ரஷன் வந்துவிடும்.அதையெல்லாம் தெரிந்துகொள்ளப் புகுந்தால் பிழைப்பைக் கவனிப்பது எப்படி ? ‘குழம்பு ரசம் சகிக்கலை,எதிர்த்துப் பேசறதை விடு,அளவுக்கதிகமா கேள்வி கேக்காதே, அப்பா அம்மா வளர்த்த லட்சணம் ..இப்படியெல்லாம் கொஞ்சம் போலக் கடுமையாகப் பேசிவிடக் கூடாது.கோபம் உச்சமேறி ரெண்டு தட்டு தட்டிவிடக் கூடாது. அதற்கெல்லாம் டிப்ரஷன் வந்து விடும் ‘

‘ஐயா, யோசியும்,உங்களை யாராவது முடியைப் பிடித்து மூலையோடு நிறுத்தி அறைந்து காயப்படுத்தி இருக்கிறார்களா ?பாத்ரூம் வாசலில் வழி மறித்து நின்று உங்கள் மேல் வெந்நீர் ஊற்றி உறியடி நடத்தியிருக்கிறார்களா ? ‘

‘ஓ!இதெல்லாம் நான் செய்தேன் என் மனைவிக்கு என்கிறீர்கள்.வேலைக்குப் போய்வரும் புருஷனிடம் விதரணையாக இல்லாத மனைவியிடம் கோபத்தில் மனிதன் அப்படி நடந்துகொள்ள வேண்டி வரும் தான். அதெல்லாம் தான் டிப்ரஷனுக்குக் காரணம் என்கிறீர்கள். எனக்குக் கோபம் வராத மாதிரி அவள் சூட்சுமமாக இருந்திருக்க வேண்டும். ‘

‘எதற்கெல்லாம் உங்களுக்குக் கோபம் வரும் என்று ஒரு பட்டியல் போட்டுத் தந்ததுண்டா உங்கள் மனைவியிடம் ? ‘

‘இதற்கெல்லாம் உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன ? அப்படிப்பட்ட ‘சும்பப் பயல் ‘ நானில்லை ‘

‘ஓ! இப்போது புரிகிறது.பட்டியல் போட ஒரு கோபமில்லாத சமயம் வாய்த்ததில்லை உங்களுக்கு அப்படித்தானே ? ‘

‘வளர்த்துகிறீர்கள், என்னை அநாகரிகமாகப் பேசத்தூண்டுகிறீர்கள். நான் என் குழந்தைகளின் அப்பா, ஞாபகம் இருக்கட்டும் ‘

‘ஆ! ஆச்சரியம், ஸ்பூனில் எடுத்து விட்டுக் கொண்டால் கூடக் குழந்தை பிறக்கும் தெரியுமோ ? மன்னிக்கணும், ஆத்திரத்தில் நானும் அநாகரிகத்தை எடுத்துக் கொண்டேன். அது கிடக்கட்டும். உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் எந்தக் கோட்டைகளை முறித்திருக்கிறீர்க ?ஒரு பரீட்சை,ஒரு போட்டி ஒரு இண்டர்வியூ ஒரு எக்ஸிபிஷன் ,என்று கூடப் போயிருக்கிறீர்களா ?சொல்லுங்களேன் பார்க்கலாம் ‘

‘அதெல்லாம் செய்தால் தான் நான் நல்ல தகப்பனா ? குடும்பத்தை நான் ஒன்றும் தெருவில் விட்டுவிடவில்லையே! ‘

‘அதாவது நீங்கள் என்ன செய்தும் குடும்பம் தெருவுக்கு வரவில்லை என்கிறீர்கள்.மனைவியை வேலைக்கல்லவா அனுப்பியிருந்தீர்கள் ? ‘

‘அ..அது நான் அனுப்பினது தானே ? பொருளாதார சுதந்திரம் கிடைத்ததே அவளூக்கு ? ‘

‘அட,அட!அப்படியே அவள் தொடர்ந்து போக முடியாமல் பார்த்துக்கொண்டது ? அடிக்கடி லீவ் போட வைத்தது ? அவளுக்கு ஆபீஸில் பிரச்னைகளை வரவைத்தது ? ‘

‘அதெல்லாம் இந்தப் பெண்களுக்கு சாமர்த்தியம் போதாது. இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ணத் தெரியாமல் தவித்தால் அதற்கு நாங்கள் என்ன செய்வது ? நல்ல பாதுகாப்பான வாழ்வைத்தானே தந்தேன் அவளுக்கு ? ‘

‘பிரயோசனம் ? மனைவியைக் கூட அழைத்துப் போனதுண்டா ஒரு பார்ட்டிக்கு, ஒரு ஊருக்கு, ஒரு திருமணத்துக்கு ? ‘

‘அதற்கெல்லாம் ஏது நேரம் ? அப்படியெல்லாம் குஷி, ஜாலி பிடிக்காது எனக்கு. பூஜை புனஸ்காரம் என்று வீட்டுக் கடமைகளை விட்டவனில்லை நான். ‘

‘ஆமாமா, அதுகளில் தானே கூட இருக்கிறவளை வதைக்கமுடியும் ?மகா கடமையுண்டு ஒன்று நண்பரே! மனைவியை மகிழ்விப்பது, பரவசப் படுத்துவது. சின்ன முயற்சி செய்ததுண்டா ? ‘

‘அதெல்லாம் அசிங்கம். குழந்தைகள் வளர வளர பொறுப்புகள் வளர, கொஞ்சிக் கொண்டா திரிய முடியும் ? பெண்டாட்டி தலைப்பை பிடித்துக் கொண்டு திரிபவன் பெளருஷம் இல்லாதவன் ‘

‘அப்படியா ?அதாவது பெண் பார்த்து யார் மூலமோ ‘பிடித்துவிட்டது ‘ என்று சொல்லியதோடு உங்க ரொமான்ஸ் பார்ட் தீர்ந்து போச்சு. அப்புறம் உங்கள் கணவன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள updation எதுவும் தேவை கிடையாது.அதன் தகுதிகளை அதிகரித்துக் கொள்ள என்னவும் செய்யவேண்டியதில்லை. ஒரு டிரஸ் சென்ஸோ ஒரு ஹேர்ஸ்டைல் மாற்றமோ ஒரு எடை குறைப்போ எதுவுமே அநாவசியம். உடல் ஈர்ப்பு தேவையில்லை. அப்படித்தானே ? ‘

‘நீங்கள் சொல்வது புரிகிறது. தாம்பத்தியம் உடம்பில் வளர்வதாகநான் நினைக்கவில்லை. அது குறித்துப் பெரிய புரிதல்களை ,சர்ச்சைகளை என் மனைவியிடம் நான் வைத்துக்

கொண்டதில்லை ‘

‘உலகத்தைச் சுற்றுமுற்றும் கண் திறந்து பார்த்ததேயில்லையா நீங்கள் ?உடல் சார்ந்த வாழ்வுக்கான தூண்டல்கள் சூழலில் இருப்பதே தவறு என்பீர்கள் போலிருக்கிறதே! ‘

‘என்ன நீங்கள் ? அநாவசியமாகப் பேசிக்கொண்டு ? இந்த மாதிரி என் மனவி என் முன் நின்று பேசியதே கிடையாது தெரியுமோ ? கணவன் மனசுப்படி பதிவ்ரதை நடந்துகொள்ள வேண்டும். அவள் அப்படிப் பட்டவள் தான். என்னை மீறி எதையும் அவள் செய்தவளே அல்ல. ‘

‘சிரிப்பு தான் வருகிறது நண்பரே! இப்போது நீங்கள் இதைச் சொல்வது!.. ‘

‘ஆம். சிரிப்பு வரும் உங்களுக்கு.இப்படிச் சிரிப்பாய்ச் சிரிக்கவைத்தவர் நீங்கள்.எல்லா இடத்திலும் இணக்கமில்லாமல் நடந்துகொண்டு உங்கள் கணவரை ‘மாடர்ன் ‘ என்ற பெயரில் விலங்கு வாழ்க்கைக்கு விரட்டியிருக்கிறீர்கள். பிறத்தியான் பெண்டாட்டியைத் தேடுகிறான் ஒருத்தன் என்றால் அத்ற்கு யார் காரணம் சொல்லுங்கள். ‘

‘நிச்சயம் நான் காரணம் இல்லை. ‘

‘அப்புறம்… ‘

‘நீங்கள் தான் ‘

‘அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு உங்கள் அழகின் மீது ? ‘

‘அழகைக் கொண்டு உடைப்பில் போடுங்கள்.எங்கள் திருமணம் ஒரு perfect லவ் மேரியேஜ். ஏழு வருஷம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு லவ் பண்ணி மணந்தோம். மனசார விரும்பி இணைந்தோம். ‘

‘அப்ப உங்கள் கணவரின் இப்போதைய செயல் இன்னமும் அயோக்கியத்தனமானது. ‘

‘அவர் பாவம் நெகிழ்ந்திருக்கிறார். நல்லவர். உங்களைப் போலப் பொறுப்பிலாதவர்களின் மனைவிமார் நல்லவர்களின் அன்பைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. ‘

‘அதென்ன அப்படி நல்ல தன்மை அவரிடம் ? ‘

‘எத்தனயோ இருக்கிறது. ஒண்ணைச் சொல்கிறேன். நாங்க காதலிச்சப்போ ஒரு கட்டம் வந்தது. எங்க வீட்டிலே வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க.நான் அவரை துளைச்சு எடுத்தேன். ‘என்ன சும்மா இருக்கீங்க ‘ன்னு.உடனே அவர் வீட்டிலேருந்து ஆளனுப்பிச்சாரு. எங்க வீட்டிலெ என்னைக் கேட்டாங்க.நான் வாயத்தொறக்கல. அவங்க வீட்டிலே பணிந்து போக எங்க வீட்டிலே முறுக்கிக்கொண்டார்கள்.சாக்காக என்னை ஒன்றுமில்லாமல் அனுப்பி வைத்தார்கள். அவர் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசிவரை. தானாக ஆசைப் பட்டமாதிரி எத்தனையோ விதமாக அவமானப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். நாங்க பரஸ்பரம் இஷ்டப்பட்டதை நான் அப்புறம் கூடக் காட்டிக்கிடல ‘

‘ஸ்வாரஸ்யமா இருக்குதே!அதிலே என்ன லாபம் உங்களுக்கு ? ‘

‘நல்லாக் கேட்டாங்க.பொண்ணுக்கு மனசு போல மாங்கல்யம்னா புகுந்த வீட்டிலே இளப்பம். அதுவே புருஷனுக்குப் பிடிச்சு அவன் வலிந்து பண்ணின கல்யாணம்னா பெருமை. பிறந்தவிட்டுச்சீர் தேவையில்லை. உனக்குப் பெண் கொடுத்ததே பெருசு என்று பிறந்த வீடு வீம்பு பேசலாம்.பழியெல்லாம் கணவனையே சாரும். ஏற்றக்குறைச்சலை அவன் யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாது. ‘

‘பயங்கரக்கணக்கு தான் ‘

‘மாமியார் மாமனார்,மச்சினர் நாத்தனார்களுக்கு நான் அனுசரணையில்லையென்று ஒரு நாளும் அவர்கள் என்னைத் தூற்றியதில்லை. என் புருஷன் அதற்கு இடம் வைத்ததில்லை.நல்ல தன்மையில்லையா அதெல்லாம் ? ‘

‘அப்ப நீங்க நல்ல மறுமகளா இல்லை, நல்ல மனைவியா மட்டும் இருந்திருக்கவா போறீங்க ? ‘

‘யார் சொன்னது ?என்னைவிட நல்ல மனைவி இருக்கவே முடியாது. அவருடைய தொழில் நேரம் போக மீதி நேரத்தை வினாடி வினாடியாகப் பிரித்து எனக்குள் இறுக்கிக் கொள்வேன். எனக்கானதாக முன்கூட்டித்திட்டம் போடுவேன். அவர் செயல்களை நான் திர்மானிப்பேன். ‘

‘அட! அப்படிக்கூட ஒன்று இருக்கிறதா ? ‘

‘ஆமா,கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக என்று எதுவும் இருக்கக் கூடாது.அக்கவுண்டு ஜாயிண்ட், நேரம் ஜாயிண்ட் வாழ்க்கை ஜாயிண்ட்.என்னை என் குழந்தைகளைப்பிரிந்து ஒரு இடம் போக முடியாது அவர். எனக்கு உடம்பு சரியில்லையென்று அவர் அக்கா பெண் திருமணத்தைத் தாய் மாமனாக அவர் அட்டெண்ட் செய்வதைக்கூட நிறுத்தியிருக்கிறேன். சனிக்கிழமை கடையை மூடிவிட்டு மதியம் வீட்டில் கால் வைத்தால் திங்கள் மாலை ஒன்பது மணிக்குத்தான் பிஸினஸ் பற்றி நினைக்கலாம் அவர். சனிமாலை காய்கறிக்கு அவர் முதுகை ஒட்டிக்கொண்டே போவேன். ஞாயிறு பிக்னிக் போவோம். குடும்பத்துடன். புதன் இரவு தப்பாமல் லாங்க் டிரைவ் உண்டு. பசங்களை டாக்டரிடம் க்ளாஸ் , ‘பரீட்சை என்று எங்கு அழைத்துப்போவதானாலும் அவர் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்புறம் ரிலேட்டிவ்ஸ் வரப்போக, பஸ் ,ரயில்,ஏர் டிக்கெட் வாங்க கேன்ஸல் பண்ண …முக்காலும் என் ரெலேட்டிவ்ஸ்…எதிர்கொள்ள கொண்டுவிட எப்போதும் அவர் தான் வர வேண்டும். அட்டவணை போட்டுத் திருத்தலம் போவோம். ‘

‘அத்தனைக்கும் செலவுகள் அதிகம் இருக்குமே! சேமிப்பிலும் வல்லவரோ நீங்கள் ? ‘

‘சேமிக்கும் அளவுக்கு என்ன பெரிய வருமானம் ? பணம் பற்றாக்குறைக்கெல்லாம் நாடு கடத்திவிடுவேனே! அவரை நான்! ‘

‘புரியவில்லையே! ஒரு விநாடி கூடப் பிரியக்கூடாது என்கிற அன்பான மனைவியா நாடு கடத்தமுடியும் ? ‘

‘இது கூடப் புரியவில்லையா ?பணம் வேண்டுமென்றால் அவனவன் அமெரிக்கா,அரேபியா,ஆப்பிரிக்கா என்று போவதில்லையா ?ஊரைவிட்டுப் போவதைத்தான் அப்படிச் சொன்னேன். ‘நார்த் ‘ போவதென்றால் அவருக்கு ஆகாது. ஹிந்தி தெரியாது. சப்பாத்தி ஆகாது. ராஜஸ்தானில் மார்பிள் கட்டிங் வேலை வந்தது. ஆறு வருடம் பார்த்தார். கடுமையான வேலை. ஐந்நூறு சதம் லாபம். பிள்ளைகளைப் பிரிய முடியவில்லை என்று ஓடி வந்துவிட்டார். அந்த வெய்யிலுக்கு என்னால் போகமுடியவில்லை. மீண்டும் துரத்தினேன். அஸ்ஸாமில் தேயிலை ப்ராஜெக்ட் எடுத்துக் கொண்டார். பணம் வந்தது கூடவே சர்க்கரை வியாதியும். அவர் உள்ளூர் வந்தபின்பு நன்கு வாழ முடிகிறது. அத்தனையும் என்னால். ஏகப்பட்ட மனைக்கட்டு,வீடு,வாசல், நகைகள்,கார்,பேங்க் பேலன்ஸ் இத்தனையும் எப்படி ? நான் ஒண்டியாகச் சமாளித்து நிமிட நிமிடத்துக்கு அவரை அவர் பணத்தை என் கண்ட்ரோலில் வைத்து, உள்ளூரிலும் வெளியூரிலும் அவரிடம் பேசி திட்டமிட்டு…நானா நல்ல மனைவியில்லை ? ‘

‘அவ்வளவுக்கும் அவர் குடும்பத்தார் பக்க பலமாக இருந்திருப்பார்கள் போல. ‘

‘அது தானில்லை,ஒருத்தரையும் பக்கத்தில் சேர்த்ததில்லை. ‘

‘உங்க வீட்டிலே ? ‘

‘எங்க வீட்டிலே நான் வெச்சது தான் சட்டம். நான் சொன்னபடி நடந்துக்குவாங்க. ‘

‘உங்க பிள்ளைகளும் உங்களை மாதிரியே… ‘

‘பின்னே!…அவங்க நல்லாயிருக்கணும்னு எவ்வளவு தியாகம் செய்தேன் ?..மூணாவது பிள்ளை வந்திடக் கூடாதுன்னு கவனமா கட்டுப்பாட்டில் இருந்து…மாத்திரை ஆப்பரேஷன்னு போயி எனக்குத் தொந்தரவானா பிரச்னைன்னு…இயற்கையா கட்டுப்பாடு..அவருக்கு அதிருப்தி தான்…நேச்சுரல் பிளானிங்குன்னா விலகல்லே பயங்கர உளைச்சல் இல்லயா…அவ்வளவும் பிள்ளைகளுக்காக. ‘

‘பிள்ளைகளுக்கு மதிப்பு அன்பு உங்க மேலே தானில்லையா ? ‘

‘அப்பா மேல தான் உயிர். வீட்டை விட்டு ஓடிப் போனான் என் பையன்,அவன் விட்ட லெட்டெர்ல கூட ‘அப்பா பாவம் ‘னு எழுதினான் ‘

‘என்ன இப்படி அலட்சியமா சொல்றீங்க ஓடிப்போன பையனைப்பத்தி ‘

‘என்ன செய்வது ? பதிநாலு வயசிலே அவனுக்கு கெரகம் பத்தலைன்னு ஜோஸியரே சொல்லியிருந்தாரு. ஒரு ஹோமம் பண்ண வேணும்னு சொல்லிக்கிட்டே யிருந்தேன். அவர் காதிலே போட்டுக்கிடலை. புதுசா சிகரெட் பிடிக்க ஆரம்பித்தாரு.நான் ஆறு மாசம் போய் அம்மா வீட்டிலே இருந்துட்டு வந்தேன். மனசை சேஞ்ச் பண்ணிக்க. அவரு என்னைத் தேத்திக்கிட்டு தான் இருந்தாரு. ‘ஒரு ஹோமம் பண்ணியிருந்தா உனக்கு துக்கம் வந்திருக்காது ‘ன்னு. ‘

‘அவருக்கும் துக்கம் தானே அது ? ‘

‘அவருக்கு ஸ்பைனல் கார்ட் ப்ராப்ளம் வந்திடிச்சு. பயங்கரமா ஹெல்த் ஸ்பாயில் ஆயிடிச்சு. மனசிலே வேதனைப் படற மாதிரி தெரியல. காண்பிக்கிற டைப் இல்லை. ‘

‘என் மனைவி நான் நொடித்துப் போன சமயத்திலே ரொம்ப ஆறுதலா இருந்தாள். 92லெ ன்னு நெனைக்கிறேன்,பயங்கரமா டவுன் ஆயிட்டேன். ஷேர் எல்லாம் போய் திரும்பி எழுந்திருக்க மாட்டாமெ… ‘

‘அப்ப நீங்க வீட்டுக்குள்ளே கவனம் செலுத்தியிருப்பீங்களே! ‘

‘அதில்ல, நான் விடாம ரேஸுக்குப் போனேன். முதல்ல அவ நகைகளைத் தான் வித்தேன். சீருக்கு நகை போடுவதே இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்காகத்தானே ? என் கஸின் சொன்னதைக் கேட்டு அவ ஆபீஸுக்குப் போயி மேனேஜரை அடிச்சேன்,அவ வேலையை விட வெச்சேன் ‘

‘அப்படி என்ன சொன்னான் உங்க கஸின் ? ‘

‘படிச்ச பொம்பளைகளெ அதுவும் அழகா இருக்கிறவங்களெ நம்பவே கூடாதுன்னான். ‘

‘ஓஹோ!சிரம திசையில் மனசுக்கு டைவர்ஷன் வேணும்போலத் தான் இருக்கும். ராஜஸ்தானிலிருந்து அவர் வந்த சமயம். தொழில் அமையல இங்கே. சினிமாவிலே நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நான் சரி செய்யறேன் நிலமையை. எனக்கும் சம்பாதிக்க முடியும்னேன். ‘

‘மனைவி சினிமாவில நடிக்கிறது..அதுவும் தன் சிரம திசையில் பணத்துக்காக….போவது. யாருக்கும் பிடிக்காதுன்னு நெனைக்கிறேன் ‘

‘பின்னே என்ன செய்ய முடியும் ? என் நாத்தனாருக்கு முப்பத்திரண்டாகியும் கல்யாணம் ஆகவில்லை.என் பெண்ணுக்குப் பதினேட்டாவது வயசிலேயே நல்லது பண்ணிக்காட்டறேனா இல்லையா என்று சபதம் போட்டிருக்கிறேனே என் மாமியாரிடம் ? ‘

‘தங்கை திருமணம் அண்ணன் பொறுப்பில்லையா ? ‘

‘பெத்தவங்க குத்துக்கல் மாதிரி இருக்கிறப்ப அண்ணனுக்னென்னங்கறேன். என் புருஷன் என்னை மீறி எதுவும் சொல்ல மாட்டாரே!நல்ல வேளை,அந்த நாத்தி செத்திடிச்சு. ‘

‘எனக்குப் படுது. உங்க கணவருக்கு நீங்க பொருத்தமில்லே.உங்களெ மாதிரி என் மனைவி இருந்திருந்தா நான் கட்டையா எரிச்சிருப்பேன் அவளை. என் தங்கைகளை என்னை விட அவ நல்லா பார்த்துக்கிடுவா. தன் நகையைப் போட்டு சின்னவளுக்குக் கல்யாணம் பண்ணினாள். உங்களை மாதிரிக் கூடப் பொம்பளை இருப்பாளான்னு இருக்குது எனக்கு ‘

‘வாயை மூடுங்க. நீங்க தான் மோசமான கணவர். நல்லவ நல்லவங்கறீங்க.. அவள இப்படி அடிமட்டமாக்கி நான் போட்ட கோடு தாண்டாத என் புருஷனைத் தலைகீழா மாத்த வெச்சிருக்கீங்க. ‘

‘நாம பிரச்னைய விட்டு வெகு தூரம் வெலகி வந்திட்டு ஒருத்தர ஒருத்தர் பழி சொல்றோம்னு படுது..உங்க கணவரும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறாங்க…எதுவுமே தேவையில்ல,அன்பு தான் பிரதானம்னு அவங்க நெனைக்கறதா சொன்னீங்க..இப்ப அது தான் பிரச்னை நமக்கு… ‘

‘இப்படி யோசிச்சுப் பாருங்க…அவங்க ரெண்டுபேரும் திரும்பிவர்றாங்க, நாம வர வைக்கிறோம்னு வையுங்க…பழையபடி இருந்தமாதிரி நம்மாலே இருந்துட முடியுமா ?குத்திக் காட்டாமே ஒரு வாழ்க்கை வாழ முடியுமா ? ‘

‘கஷ்டம் தான். ரொம்பக் கஷ்டம். எப்படி துரோகத்தை நெனைச்சுப் பார்க்காமே இருக்க முடியும் ? ‘

‘விடுங்க…நான் சொன்னதையும் நீங்க சொன்னதையும் சேர்த்துப் பார்க்கிறேன் ஒரு நிமிடம், நீங்களும் சரி நானும் சரி…அவங்க ரெண்டு பேருக்கு ஏற்றவங்க இல்ல. இனிமேல முயற்சி செய்து fit ஆவதும் கஷ்டம் தான். அவங்க தம் தகுதியில இணைஞ்சிருக்காங்க. அவங்களாவது சந்தோஷமாக இருக்கட்டுமே! ‘

மாலதி

பெண்படைப்பாளிகள் கதைத்தொகுப்பு[2000]

Series Navigation

மாலதி

மாலதி