கருணையினால்தான்..

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

பத்ரிநாத்


‘’போவலாமா.. அங்க ஆயிறப்போவுதுடி..’’.

பசி வந்துடுச்சுப் போலருக்கு.. கிளம் ஆரம்பிச்சடுச்சு.. இனிமே வுடாது.. ‘’ அய்யா வூட்ல உப்புமா குடுத்துருக்காங்க.. அத சாப்புடுங்க.. புளியோதரைக்காவ அவ்வளவு தொலவு கோய்லுக்கு போவணுமா.. ?’’.ன்னு சொன்னேன்..

‘’ஆங்.. என்ன சொல்ற..’’,

‘’அதான் உப்புமா சாப்புடுங்கங்கன்னு சொல்றேன்.. போய்ட்டு வந்தா இருட்டிரும்னு சொல்றேன்..’’,

ஆங்..’’,

‘’உப்புமா.. உப்புமா..’’, காதுலயும் விளாது.. நா எவ்வளவுன்னுதான் கத்தறது..

‘’ஆங்..’’,

‘’கொஞ்சம் இருங்க..’’,ன்னு சைகை காட்டிட்டு, உப்புமாவக் காட்டினேன்.. ‘’ என்னது..’’ன்னுது கிளம்..காதும் கேக்காது, கண்ணும் தெரியாது..’’ கொஞ்சம் வாய்ல போட்டுப் பாருங்க..’’,ன்னு ஒரு விள்ள கையில குடுத்தேன்.. கிளம் வாயில போட்டுப் பாத்து,’’ என்னது.. உப்புமாவா..ஏது..’’,ன்னுது..

‘’அய்யா வூட்ல குடுத்தாங்க..’’, ன்னேன்..

‘’ஆங்..’’,

அய்யோ கடவுளே..’’ அய்யா வூடு.. அய்யா வூடு..’’, ன்னு சொல்லி கையால காட்டினேன்..

‘’ஓ..’’ன்னு சொல்லி கிளம் அடங்கிச்சு.. என்ன எளவ புரிஞ்சுக்கிட்டுதோ..

கொஞ்சம் நேரம்தான்.. கிளம் மறுபடியும் ஆரம்பிச்சுடுச்சு.. ‘’போவலாம்டி.. கோவிலுக்குப் போன மாரியும் இருக்கும்.. அப்படியே காத்தாட ஆத்தாங்கரையில ஒக்கார்ந்து வரலாம்.. இப்ப பெஞ்ச மளயில தண்ணி ஓடுது.. காத்து சிலுசிலுன்னு வருதுடி..’’,

சரி.. வாங்க.. அய்யய்யோ.. ஒரே தொண தொண..’’, கிளம் கையப் புடிச்சக்கிட்டுது.. கிளம்பினோம்.. போற வளியில கிளம் ஏதேதோ புலம்பிக்கிட்டு வந்தது.. நானும் எனக்குத் தோணறத சொல்லிட்டு வந்தேன்.. முக்காவாசி கிளத்துக்குப் புரியாது.. அது எனக்கும் தெரியும்..அதுக்கும் தெரியும்.. இருந்தும் ஏதோ கேக்கும்.. இந்த வயசான காலத்தில எனக்கு அது தொணை.. அதுக்கு நா தொணை.. ம்ம்.. நா என்னத்த இவரக் கலியாணம் கட்டிக்கிட்டு என்ன அளகிள குடும்பம் நடத்தறேன்.. பொறந்த ஒரு பய தறுதலையா பட்டணத்துக்குப் போயி ஏதோ அரசியல் கச்சியில சேர்ந்துகிட்டு ரவுடித்தனம் பண்ணிட்டு செயிலுக்குப் போயிட்டான்.. யாரையோ கொல பண்ணிட்டானாம்.. எந்த செயில்ல எங்க இருக்கானோ..

கிளம்தான் அடிக்கடித் தொல்ல பண்ணும்..’’ ஏன்டி ஒருக்க அவனப் போயிப் பாக்கணும்டி..கடுதாசிப் போடேன்..பட்டணத்தில இருக்கானாமே.. ஒரு எட்டுப் பாத்துறலாம்டி..’’,ன்னு தொணதொணக்கும்.. அவன் எங்க இருக்கான்னு யாரு கண்டா.. பத்து வருசத்துக்கு முன்ன ஓடிப்போனவன்தான்.. ஒரு மொறக் கூட அவன் கடுதாசி போட்டதில்ல.. யார் யாரோ வந்து சொல்றதுதான் கணக்கு..’’, பாட்டி.. ஒம் மவன அங்கப் பாத்தேன்.. இங்கப் பாத்தேன்..’’,ன்னு சொல்லுவாங்க.. ஒரு மொற ஒருத்தர் அப்படித்தான் சொன்னாரு..’’, பாட்டி.. ஒம் மவன், யாரயோ கொல பண்ணிட்டு செயிலுக்குப் போயிட்டான்’’,னு..

மேலத் தெரு தாண்டி வந்தோம்.. மானம் வேற இருட்டிட்டு வந்தது.. மள வரப் போவுது.. ‘’அடியே என்ன சில்லுன்னு காத்து வருது பாத்தியா..’’,ன்னு கிளம் சொல்லிச்சு.. வெறசா கிளத்த வயக்காட்டுப் பக்கம் ஒத்தயடிப் பாதையில அளச்சிக்கிட்டுப் போனேன்.. கோயிலுக்கு அப்படிப் போனா சுருக்கப் போயிறலாம்..

‘’அடியே.. ஒத்தயடிப் பாதையிலயா போறம்..’’, ன்னு கேட்டுக்கிட்டே இருந்திச்சு..

‘’அய்யோ.. நாம அப்படித்தான் போறம்..’’,ன்னு சொல்றேன்.. அதுக்குப் புரியவே இல்ல.. அப்படியே நிக்க வச்சு அது காதுல,’’ நாம அப்படித்தான் போறம்..’’,ன்னு கத்தினேன்.. ‘’அப்படியா.. சரி.. சரி..’’, ன்னுச்சு.. அப்பாடி.. ஒரு வளியா புரிய வச்சேன்.. அதுக்குக் காதில விளுவளன்னா, இந்த வைத்தியம்தான்.. நிக்க வச்சு காதுல கத்துவேன்.. ஒரு மொற கடத்தெருவுல அப்படித்தான் சேதியச் சொன்னேன்.. அதப் பாத்துட்டு ஒரு வயசுப் பையன், ‘’ அதப்பாருடா.. பாட்டி, தாத்தாவுக்கு முத்தம் கொடுக்குது..’’,ன்னு சொல்றான்.. கண்ராவி..

கோயில் வேற பொங்கதான் குடுத்தாங்க.. அதப் பிரகாரத்தில வச்சு கிளம் சாப்புட்றுச்சு.. பிறகு வந்து அய்யனார் மடத்தில ஒக்காந்தோம்.. பக்கதில ஆறு ஓடுது.. காத்து நல்லா வரும்.. அங்கதான் கிளம் ஒரு தூக்கம் போடும்.. தண்ணி கொஞ்சமாத்தான் ஓடுது.. மனசுங்க மனசு மாதிரி வறண்டுதான் போயிறுச்சு ஆறும்.. இப்ப ஓடுறதும் காட்டாத்து தண்ணி.. மள வந்ததால்.. இது எப்படிப் பாசனத்துக்குப் பத்தும்.. எல்லா வெவசாயிங்களும் கஸ்ட ஜீவனம்தான்.. முன்ன தேரடி தெரு மில்லுல ஏதாச்சும் வேல கெடைக்கும்.. கண்ணைய்யன் வூட்டு வந்து அளச்சிகிட்டுப் போவான்.. இப்போ எங்கப் பாத்தாலும் ம்ம்னு உதட்டப் பிதுக்கறான்.. ‘’இல்ல பாட்டி.. ஓனர் மில்லையே மூடலாமான்னு யோசன பண்ணிக்கிட்டு இருக்காரு.. நான் பட்டணம் பாக்கப் போவலாம்னு பாத்துட்டுருக்கேன்.. ‘’,ன்னு சொல்றான்..

திமுதிமுன்னு ஒரு பசங்க கும்பலா வந்தாங்க.., ’’ பாட்டி.. நாங்க இங்க குளிக்கணும்..தாத்தாவ வேற எடத்துல படுக்கச் சொல்லுங்க..’’,ன்னு சொன்னானுவ..

‘’ஏம்பா.. இங்க என்னத் தண்ணியா இருக்கு..இங்க குளிக்கிறிங்க..’’,ன்னேன்..

‘’ பாட்டி.. இதோ இந்த எடத்தில பெரிய கெணறு இருக்கு.. களுத்துவரை தண்ணி இருக்கும் ..அதான் இங்க குளிக்கறோம்.. ம்ம் .. தள்ளிப்போங்க..’’, பசங்க தொல்ல தாங்க முடியல.. கிளத்த எளுப்பி அளச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

&&&

‘’என்னங்க சொல்றிங்க.. கை காலு வீங்கினது சும்மா வாதம் பித்தம்னு மலையாளத்தாரு சொன்னாரே..’’,

‘’யாரு பாட்டிம்மா அது.. ?’’,ன்னு டாக்டரு கேட்டாரு..

‘’அவரு எங்க வூட்டுக்குப் பக்கதாப்ல இருக்காரு.. நாட்டு வைத்தியரு.. காச்ச தலவலி வந்தா அவருதான் ஏதாச்சும் மருந்து குடுப்பாரு..’’,

‘’சரியாப் போச்சு.. அதனாலாதான் இவ்வளவு நாளு காலம் கடத்திருக்கிங்க போலருக்கு.. அதான் பெரிய பிரச்சனை.. ம்ம்.. வேற வளியே இல்ல.. டிரான்ஸ்பிளாண்ட் பண்ணியே தீரணும்.. அதாவது, வேற கிட்னி மாத்தணும்..’’,

‘’அப்படின்னா..’’,

‘’அதாவது.. அறுவைசிகிச்சைம்மா.. வேற ஒரு ஆளுகிட்ட கிட்னி எடுத்து, அதை ஒங்களுக்கு ி வச்சித் தைக்கணும்.. இப்ப கொஞ்சகாலத்துக்கு இந்த மருந்துகள சாப்புடுங்க.. ஆனா இந்த மருந்துங்க நாள்பட சரிவராது.. சொல்றது விளங்குதா.. இதுக ரொம்ப விலை கூடுதல்தான்.. ஒங்களுக்காக இலவசமா தர்றேன்.. கொஞ்ச நாளு பொறுத்து வாங்க..’’,ன்னு சொல்லி அனுப்புனார்..

நான் எங்கப் போயி மொற இடுவேன்.. ஆண்டவா.. கிட்டினி மாத்தலைன்னா உசுரு போயிறுமாமில்ல..நா அவ்வளவு பணத்துக்கு எங்கப் போவேன்.. உற மொறயா இருக்காங்க.. இந்தக் கிளத்த வேற கட்டிக்கிட்டு என்னத்த பண்ணுவேன்.. ? உசுரு போனா போவட்டும்..

ஏதோ கொஞ்ச நடந்தா கை காலு வீங்கிப் போவுதேன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு, பக்கத்து வீட்டு உமா கூட்டிக்கிட்டுப் போனா.. அவரு இப்படி பெரிய கல்லா எந்தலையில தூக்கிப் போட்டுட்டாரு.. ஓடற வரைக்கும் ஓடட்டும்.. எனக்கு என்ன ஆனாலும் கவலயில்ல.. கிளத்த நெனச்சாதான் கவலையாயிருக்க.. நா போயிட்டன்னா, கெடந்து அல்லாடும்..

இப்போ கோவிலுக்கு உமாவும் கூட வருது..நானு பாதி தூரம் நடப்பேன்.. அதுக்கு மேல நடக்க முடியலன்னா அப்படியே ஒக்காந்துப்பேன்.. உமாதான் கிளத்தக் கூட்டிக்கிட்டுப் போவும்..

‘’பாட்டி.. தாத்தா ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு தொணதொணக்கறாரு.. சொன்னா கூடப் புரிய மாட்டேங்கிறாரு..பாட்டி..’’,ன்னுது.. மறுபடியும் என்னையப் பாத்து, ’’ கவலைப்படாதிங்க.. திருச்சி டவுனுல போய் வைத்தியம் பாக்கலாம்.. எங்கப்பா கிட்டச் சொல்றேன்..’’,ன்னு சொல்லிச்சு..

‘’அடிப்போடி.. என் கிட்ட காசு எங்க இருக்க.. நீங்க வேற கஸ்டப் படறிங்க.. இதுல எங்கப் பிரச்சனை வேற ஒங்கப்பாவுக்கா.. பாக்கலாம்.. பாக்கலாம்.. டாக்டரு, மாத்தர குடுத்துருக்காரு.. அதக் கொஞ்ச நாளு சாப்புடறேன்..அதான் உடனடியா எதுவும் தேவயில்லன்னு சொல்றாரு..’’,ன்னு சொன்னேன்..

ஆத்தாங்கரை அய்யனாரு மடத்துக்கு மேல என்னால அவரக் கூட்டிக்கிட்டு நடக்க முடியல.. உமாகிட்டச் சொன்னேன்.. கிளத்த கோயிலுக்கு அளச்சிட்டுப் போவ.. ரெண்டு பேரையும் அனுப்பிட்டு அக்கடான்னு மண்டபத்தில ஒக்கார்ந்துட்டேன்.. மள வேற வந்துட்டு இருக்கு..

அவங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாங்க.. பிரசாதம் கொண்டுட்டு வந்தாங்க.. ‘’ஏன்டி.. இன்னிக்கும் பொங்கதான.. ஆனா ரொம்ப ருசியாயிருந்துச்சு..வராம போயிட்டியே.. ‘’, கிளம் சொல்லிட்டே இருந்துச்சு.. கிளம் வளக்கப்படி அங்கயே தூங்க ஆரம்பிச்சுடுச்சு.. இருட்டிக்கிட்டு வருதுன்னு உமாவ வூட்டுக்கு அனுப்பிட்டேன்.. அவ போனப்பறம் மள நல்லா புடுச்சுக்கிடுச்சு.. கிளத்தப் பாத்தேன்.. பாவமா இருந்துச்சு.. அது கொண்டாந்த மிச்சப் பொங்கலப் பாத்தேன்..

ஒரே யோசனையா இருந்திச்சு..

எஞ் சுருக்குப் பையில இருந்த மாத்தரகளப் பாத்தேன்.. தூக்கம் வரலைன்னா எடுத்துக்கச் சொல்லி ஆசுபத்திரியல குடுத்துருந்தாங்க.. ரொம்ப எடுத்துக்கக்கூடாதாம்.. அதுக எல்லாத்தையும் நல்லா பொடி பண்ணி பொங்கல்ல கலந்தேன்..கிளத்த எளுப்பி அதுக்குக் கொடுத்தேன்.. நல்லா சாப்புட்டுட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுடுச்சு .. கொஞ்ச நேரத்தில பேச்சு மூச்சு இல்லாம கெடந்துச்சு.. ‘’ ரங்கநாதா.. என்னைய மன்னிச்சுடுடா..’’,ன்னு நெனச்சுக்கிட்டு சுத்தும் முத்தும் பாத்தேன்.. யாரும் இல்ல.. மூச்சப் புடுச்சுகிட்டு கிளத்த, பக்கத்தில இருந்த ஆத்துக் கிணத்துல தள்ளிவிட்டேன்..

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்