பிறந்த மண்ணுக்கு – 2

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

அ முகம்மது இஸ்மாயில்


நாட்டுத் தொடக்கப்பள்ளி என்ற அந்த பழைய பலகை சொல்லா விட்டால் யாருக்கும் அது பள்ளிக்கூடம் என்றே தெரியாது. எல்லா வகுப்புகளும் கீற்று கொட்டகைகளில் தான் நடக்கும். தரையில் வரிசையாக பலகை போடப்பட்டிருக்கும். மாணவர்கள் சாதாரண உடையிலேயே வரலாம் பள்ளிகூடத்திற்கு என்று தனியாக உடுப்புகள் கிடையாது.

தமிழ்வாணன் படிக்கும் வகுப்பில் பள்ளி வாத்தியார் கந்தசாமியின் மகள் தேவிகா தான் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் எடுப்பாள். நம்ம நாயகன் தமிழ்வாணன் கடைசியாக தான் வருவான். விளையாட்டு புத்தி. வாத்தியார் எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியாக தான் பதில் சொல்லுவான்.

அன்றும் அப்படித்தான் அந்த கணக்கு வாத்தியார் சுடலைமுத்து தமிழ்வாணனை அழைத்தபோது ஏடாகூடமாக தான் பதில் சொன்னான். சுடலைமுத்து, “தமிழ்வாணன்.. ஒண்ணு ரெண்டு மூணு.. நூறு வரைக்கும் சொல்லு” என்றார்.

தமிழ்வாணன், “1, 2, 3,… 29, 30, 31, 1, 2, 3,..” என்று சொல்ல ஆரம்பித்தான்.

சுடலைமுத்து கடுப்பாகிவிட்டார், “நிறுத்து.. நிறுத்து.. என்ன எண்ணுறே நீ.. மறுபடி ஒழுங்கா எண்ணு” என்ற போது மறுபடியும் 31 க்குப் பிறகு 1, 2,.. என்று எண்ண ஆரம்பித்தான்.

சுடலைமுத்து கோபமாக “31க்குப் பிறகு 32ல வரணும் என்ன எண்ணுறே நீயி” என்றார்.

தமிழ்வாணன் படுசாதாரணமாக “போங்க சார் நீங்க தப்புதப்பா சொல்லி கொடுக்குறீங்க” என்றான்.

சுடலைமுத்து “யார்.. நான்.. தப்புதப்பா சொல்லி தர்ரேன்.. இல்ல ?..” என்று கேட்டார்.

தமிழ்வாணன், “ஆமா சார்.. நீங்க தான்.. தப்புதப்பா நடத்தறது.. எங்க வீட்டு காலண்டர்ல கூட 31 க்குப் பிறகு 1, 2ன்னு தான் வருது நீங்க தான் என்னென்மோ சொல்லி தர்ரீங்க” என்றான்.

எல்லோரும் சிரித்தார்கள் ஆனால் தேவிகா மட்டும் சிரிக்கவில்லை. அவனுக்காக வருத்தப்பட்டாள்.

தேவிகாவும் தமிழ்வாணனும் பக்கத்து பக்கத்து வீடு தான். தமிழ்வாணனின் வீட்டுப்பாடம் எல்லாம் தேவிகா தான் செய்து முடிப்பாள்.

தேவிகா சொல்லுவாள் “நீயே எழுதேன் எல்லாம் ஈசி தான் நான் சொல்லி தர்ரேன்” என்று

“நீயே எழுதிடேன் அது எனக்கு இன்னும் ஈசி” என்பான் தமிழ்வாணன்.

நடேசனிடம் தமிழ்வாணனைப் பற்றி ஒழுங்காக படிப்பதில்லை என்று புகார் போனது. வாத்தியார் கந்தசாமி அவரது மகள் தேவிகாவுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது தமிழ்வாணனுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் படியும் அதுவும் நடேசன் வீட்டிலேயே தான் தமிழ்வாணனும் தேவிகாவும் படிக்க வேண்டும் என்றும் வேண்டப்பட்டார். ஒரு முறை வானொலியில் தமிழ்வாணனுக்கு பிடித்த ‘சுராங்கணி சுராங்கணி’ பாட்டு ஒலிபரப்பப் போவதாக சொன்னார்கள்.

வாசலில் கந்தசாமி பாடம் சொல்லி கொடுக்க வேண்டி வந்து நின்று “தமிழ்வாணன்.. தமிழ்வாணன்..” என்று கத்தினார்.

தமிழ்வாணன் எரிச்சலுடன் வெளியே வந்தான். கந்தசாமி வாசலில் கதவிடுக்கில் கையை வைத்துக் கொண்டிருந்தார். தமிழ்வாணன் ஓடிப்போய் கதவை வெடுக்கென்று சாத்திவிட்டான். அவ்வளவுதான்.. கந்தசாமி துடித்து விட்டார். அப்புறம் விஷயம் கேள்விப்பட்டு நடேசன் அவனை அடித்ததற்கு கந்தசாமி தமிழ்வாணனை அடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதன் காரணத்தால் தேவிகா தமிழ்வாணனிடம் பேசுவதில்லை, வீட்டுப்பாடம் செய்து தருவதில்லை.

தமிழ்வாணன் தேவிகாவிடம் சென்று “இனிமே இத மாதிரி செய்ய மாட்டேன் என் கூட பேசு” என்றான்.

தேவிகா முகத்தை திருப்பிக் கொண்டு “ஒன் கூட சண்டை.. இனிமே பேசவே மாட்டேன்” என்றாள். ஆனால் கடைசியில் அவளாக தான் வந்து பேசினாள் என்பது வேறு விஷயம்.

தமிழ்வாணன் தேவிகாவையும் அடித்திருக்கிறான், கிள்ளியிருக்கிறான், கீறி விட்டுறிக்கிறான்.

கந்தசாமி கேட்பார், “யார் இந்த காரியத்தெல்லாம் செஞ்சது கூட படிக்கிற புள்ளைங்களா நான் நாளைக்கு கேக்குறேன்” என்பார்.

தேவிகா “நானா தான்ப்பா கிழிச்சுகிட்டேன் நீங்க யாரையும் கேக்க வேணாம்ப்பா” என்று அழுவாள்.

கந்தசாமி தேவகியை தாயில்லாத பிள்ளையாச்சே என்று அழ விட மாட்டார் தன் பிள்ளையை கட்டிக் கொள்வார்.. “என்னட கண்ணுல்ல.. அழக் கூடாது.. அப்பா கேக்க மாட்டேன்” என்பார்.

பள்ளி வாத்தியார்லேயே பிரம்பு வைத்துக் கொள்ளாத வாத்தியார் கந்தசாமி மட்டும் தான்.

“தங்கமான வாத்தியார்” என்று மாணவர்களே சொல்வார்கள்.

தமிழ்வாணனுக்கு விளையாட்டு புத்தி மட்டும் தான் குறை மற்றபடி இரக்க குணம் உடையவன். ஒரு முறை கந்தசாமி வீட்டுக்கு வந்தான் அங்கு கந்தசாமியும் தேவிகாவும் பழைய ரொட்டியும் கஞ்சியும் உண்பதை பார்த்தான்.

தேவிகா தமிழ்வாணனை பார்த்து விட்டு கந்தசாமியிடம் சொன்னாள், “அப்பா தமிழ்வாணன் வாசல்ல நிக்கிறான்ப்பா” என்று.

கந்தசாமி, தமிழ்வாணன் “உள்ள வாயேன்” என்றார்.

தமிழ்வாணன் வெளியே ஓடி விட்டான். ஒரு ஐந்து நிமிடத்தில் வேகமாக திரும்ப வந்தான் கையில் இட்லி சாம்பார் வடை எல்லாம் எடுத்துக் கொண்டு. உள்ளே வந்து “இத சாப்டுறீங்களா ?” என்று மரியாதையாக தட்டை நீட்டினான்.

கந்தசாமி நடேசனிடம் இது சம்மந்தமாக பேசும் போது “குடும்ப குணமாச்சே” என்று புகழ்ந்துரைத்தார்.

தேவிகா பள்ளிகூடம் விட்டதும் தமிழ்வாணன் வீட்டுக்கு வந்து வீட்டு வேலை பார்ப்பாள். ரொம்ப புத்திசாலி.. எந்த வேலையையும் கவனமாக பார்ப்பாள் அதை அடுத்த முறை அப்படியே செய்து முடிப்பாள். அவள் வீட்டையும் தமிழ்வாணன் வீட்டையும் அன்றாடம் பெறுக்கி சுத்தம் செய்து விடுவாள். பாத்திரம் சுத்தம் செய்வாள். பாத்திரங்கள் கலைந்து இருந்தால் அவளுக்கு பிடிக்காது ஒழுங்காக அடுக்கி வைப்பாள். மல்லிகாவுக்கு பெரும் உதவியாக இருக்கும். வீட்டுக்கு வந்த யாரோ ஒருவர் தேவிகா அங்கு செய்யும் வேலைகளை பார்த்து விட்டு “எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்றாளே.. போற போக்கை பார்த்தா தேவிகா இந்த வீட்டுக்கு மருமகளா வந்துடுவா போலருக்கே” என்று கூற-

மல்லிகா தேவிகாவை விட்டு கொடுக்காமல் “அதுக்கு நாங்கள்ள கொடுத்து வைச்சிருக்கணும்” என்றார்.

மல்லிகா சொன்ன வார்த்தைகள் சற்று தள்ளி அமர்ந்திருந்த நடேசன் காதிலும் விழுந்தது. நடேசன் சட்டென்று திரும்பி மல்லிகாவை பார்த்தார். மல்லிகா ‘நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா’ என்பது போல் பார்த்தார். நடேசன் முகத்தில் ஒரு வித சந்தோஷ புன்னகையை பூத்தார். மல்லிகா ‘இந்த புன்னகையை நான் இதுக்கு முன்னாடி எப்பவோ பார்த்திருக்கிறேனே’ என்று யோசிக்க ஆரம்பித்து ‘அடடே இது அவர் என்னை பெண் பார்க்க வந்த போது செய்த புன்னகையாச்சே’ என்று வெட்கி தலை குனிந்தாள்.

தமிழ்வாணனின் சேஷ்டை அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு பையனை அடித்து விட்டான். ஒரு பையன் சட்டையை கிழித்து விட்டான். ஒரு முறை மரத்தின் மீது ஏறி இருக்கிறான் பாருங்க.. கீழே விழுந்து சரியான அடி. முரட்டு பையன் அவன்.. வலித்திருக்கிறது.. ஆனால் அழவே இல்லை என்றால் பாருங்களேன். சாதாரணமாக தான் இருந்தான். மருத்துவர் எலும்பு முறிவு என்று கூறி கையில் கட்டு போட்டு விட்டார். செய்தி அறிந்ததும் தாமோதரன் ரவிக்குமார் இருவரும் காரில் வந்தார்கள். தாமோதரன் ஆள் அடையாளமே மாறி போய் இருந்தான். மல்லிகாவும் நடேசனும் அவனின் உடல் இளைத்து இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். இருவரும் விசாரித்த போது தாமோதரன் கண்கள் கலங்கினானே தவிர பதில் ஏதும் கூறவில்லை.

தாமோதரன் ரவிக்குமாரிடம் “பெரியப்பா கால்லயும் பெரியம்மா கால்லயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க” என்றான்.

ரவிக்குமாரும் அப்பா பேச்சுக்கு மாறாமல் காலை தொட்டு கண்ணில் வைத்துக் கொண்டான். ரவிக்குமாரும் பிரியமாக அடக்கமாக தான் பேசினான். ஆனால் தாமோதாரன் அவனாகவே ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு தமிழ்வாணனிடம் சரியாக பேசவேயில்லை.

தாமோதரன் நடேசனிடம், “அண்ணே தமிழ்வாணன் இங்கே இருந்துகிட்டு எல்லார்க்கும் தொந்தரவு கொடுத்துகிட்டு இருந்தான்னா நான் வேண்ணா வெளியூர் ஹாஸ்டல்ல சேர்த்து உட்டுடவாண்ணே” என்றான்.

நடேசனுக்கும் மல்லிகாவுக்கும் தமிழ்வாணனை விட்டு பிரிய மனமில்லை அதனால் “ஏன்.. இங்கேயே இருக்கட்டுமே நாங்க பார்த்துக்கறோம்” என்றார்கள்.

தாமோதரன், “நீங்க என்ன சொல்றீங்களோ அது தான்” என்று எப்போதும் போல் சொன்னான்.

மேலே படித்த சம்பவம் நடந்து மூன்று மாதம் இருக்கும். தமிழ்வாணன் பள்ளிகூடம் விட்டதும் வீட்டுக்கு போகாமல் அவன் பையை தேவிகாவிடம் கொடுத்து விட்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையன் சண்முகத்துடன் ஊருக்கு வெளியே பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்தான்.

சண்முகம் சொன்னான் “இந்த பஸ் பின்னாடியே தொங்கிட்டு போவணும் உன்னால முடியுமா ?” என்று.

தமிழ்வாணன் “என்னால முடியாதா ? இப்ப பாரு பஸ் வரட்டும்” என்று பேருந்துக்காக காத்திருந்தான்.

பேருந்து வந்து நின்றது, தமிழ்வாணன் பேருந்துக்கு பின்னால் ஓடினான். பேருந்தின் பின்னால் உள்ள ஏணிப்படியில் ஏறி நின்று இறுக்கமாக பிடித்துக் கொண்டான். பேருந்து கிளம்பியது. தமிழ்வாணன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். அவனை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்தது. திரும்பி பார்த்தான் அவர் தான் தேநீர் கடை வைத்திருக்கும் முத்து. பேருந்து நிறுத்தப்பட்டது. எல்லோரும் தமிழ்வாணனை கடுமையாக திட்டினார்கள்.

விஷயம் நடேசன் சமூகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

முத்து சொன்னார், “நடேசா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே தமிழ்வாணன் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும்.. ஆண்டவன் காப்பாத்துனான்.. ஆனா ஒவ்வொரு தடவையும் யாரும் பார்த்துக்க முடியாது. தாமோதரன் அன்னக்கி சொன்னதுன்னு சொன்னீயே அந்த மாதிரி ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து உடுறது தான் நல்லது. பஸ்ல எல்லாரும் என்ன தெரியுமா சொன்னாங்க.. புள்ள அப்பாவ மாதிரி படிக்காம பெரியப்பாவ மாதிரி தான் வருவான் போலிருக்குன்னாங்கப்பா” என்றவர் சிறுது இடைவெளி விட்டு “நல்லா யோசனை பண்ணிக்க.. நான் வர்ரேன்” என்று சொல்லி விட்டு விடைபெற்றார்.

நடேசன் தாமோதரனுக்கு செய்தி அனுப்பினார் ‘வந்து தமிழ்வாணனை கூட்டிட்டு போ’ என்று. கேள்விப்பட்டதும் தமிழ்வாணன் “நான் போமாட்டேன்” என்று அழுதான்.

தேவிகாவிடம் போய் அழுதான் “நான் அடிக்க மாட்டேன் கிள்ளி உட மாட்டேன் நீ போய் சொல்லு” என்று.

கந்தசாமியிடம் போய் சொன்னான் “நான் நல்லா படிக்கிறேன் நீங்க போய் சொல்லுங்க” என்று.

எதற்குமே அழாதவன் ஊரை விட்டு போகணும் என்றவுடன் அழுததை பார்க்க எல்லோருக்கும் இரக்கமாக இருந்தது.

போவது நிச்சயமாகி விட்டது என்று உணர்ந்தவுடன் “நீங்க என்ன மட்டும் அனுப்பி வச்சீங்கன்னா நா இனிமே இங்கே திரும்ப வரவே மாட்டேன்” என்று மல்லிகா மடியில் படுத்துக் கொண்டு அழுதான்.

தாமோதரன், ரவிக்குமார் எல்லோரும் காரில் காத்திருந்தார்கள். தமிழ்வாணன் நடேசனிடம் வந்தான், “நான் போறேன் பெரியப்பா..” என்று காலை தொட்டான்.

நடேசன் அழுத தமிழ்வாணனின் கண்களை துடைத்துக் கொண்டு “நீ போய்ட்டு பெரிய ஆளாயி திரும்ப வரணும்.. வருவியா ?” என்றார். தமிழ்வாணன் பதில் பேசாமல் அழுதுக் கொண்டே மல்லிகாவிடம் வந்தான், “நான் போறேன் பெரியம்மா” என்றான்.

மல்லிகா அழுகையை அடக்கிக் கொண்டே “எம்புள்ள வெளிநாடெல்லாம் போய் பெரிய படிப்பெல்லாம் படிச்சு திரும்ப வரணும் வந்து பெரியம்மாவ பாப்பீயா ?..சொல்லு..” என்றார்.

தமிழ்வாணன் “ம்ஹீம்..நா வர மாட்டேன்” என்று அழுதான்.

தமிழ்வாணன் தேவிகாவிடம் வந்து “நான் போறேன்” என்றான்

தேவிகா “என்ன மறந்துடுவீயா ?” என்றாள்.

தமிழ்வாணன் “ஆமா.. நான் உங்க எல்லாத்தையும் மறந்துடுவேன்” என்றான்.

காருக்கு வந்தவன் எதுவும் சொல்லாமல் ஏறி ரவிக்குமார் அருகில் உட்கார்ந்து தலையை தொங்க போட்டுக் கொண்டான். கார் புறப்பட்டது. எல்லோரும் “இங்கே பாரு டாட்டா காட்டு” என்றார்கள்.

தமிழ்வாணன் பிடிவாதமாக தலையை நிமிர்த்தாமல் கண்களை மூடிக் கொண்டான். கார் போய் ரொம்ப நேரமாகியும் போன திசையையே கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் நடேசன், மல்லிகா, தேவிகா மூவரும்.

—-

Series Navigation

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்