காதல் தீவு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

என் எஸ். நடேசன்


சிவலை ஓடத்தை பாறை மறைவில் மறைத்துவிட்டு பக்கத்தில் குந்தி இருந்தான்.

கவலை கரையானைப் போல் அரித்தது,

பசிவயிற்றை குடைந்தது. சிவலை சேமிப்பில் இருந்த தங்கக் காசுகளை எல்லாம் கொடுத்து ஓடத்தை வாங்கியிருந்தான். செம்படவ நண்பனுக்கு மட்டும் தான் உண்மை தெரியும். ஓடத்தின் அணியத்தில் புளிசாதமும் அவலையும் பனைஓலை பெட்டியில் பத்திரமாக மறைத்திருந்தான்.

நடுநிசியாகிவிட்டது, கோதையை இன்னும் காணவில்லை.

‘ ‘கோதைக்கு என்ன நடந்திருக்கும்.. ? ‘ ‘

‘ ‘நடுநிசிக்கு முன்வருவதாகச் சத்தியம் செய்திருந்தாளே ? ‘ ‘

அவள் தந்தை பூசை முடிப்பதற்கு முன்பு, அவள் எழுந்து வராவிட்டால் எல்லாத்திட்டமும் பிழைத்துவிடும். கவலையில் கட்டை விரலினால் சிறிய குழியே மணலில் தோண்டிவி;ட்டான். பயத்தில் சிறுநீர் வருவதுபோல் இருந்தது, எழும்புினால் யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் நடுங்கியபடி ஓடத்தில் சாய்ந்தபடி இருந்தான்.

“இனிமேல் தாங்காது ‘ ‘. சிறுநீர் கழிப்பதற்கு எழுந்தான்.

தூரத்தில் தெரிந்த தீப்பந்தங்கள் அவனது தலைவயில் மின்னலாக தாக்கியது. ஈரக்குலையை யாரோ பிடித்து உலுப்புவது போல் இருந்தது.

தீப்பந்தங்கள் கொள்ளிவாய் பிசாசுகளைப் போல் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன.

‘ ‘கோதை பிடிபட்டுவிட்டாள். ஊர் மக்கள் தன்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் ‘ ‘ என்ற முடிவுடன் மீண்டும் பாறை மறைவில் சாய்ந்தான்.

“நான் ஒரு கோழை, என்னைப்பற்றியே எண்ணுகிறேனே. என்னை நம்பிய கோதைக்கு என்ன நடந்தது ? ‘ ‘ கோதையை எண்ணித், தன் பயத்தை தற்காலிகமாக மறைந்தான்.

தீப்பந்தங்கள் நெருங்கி வந்து கொண்டிருப்பதுடன், பேச்சுகளும் கேட்கிறது ஆனால் தெளிவில்லை. சிவலை பாறையின் இடுக்கில் மறைவாக ஒதுங்கிக் கொண்டான். வந்தவர்கள் இருபிரிவாக பிரிந்து கடற்கரையை சல்லடை போட்டார்கள். சிவலை மறைந்திருந்த பாறையின் அருகில் வந்தவர்கள் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள்.

நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான் சிவலை!

ஊரார் போய்விட்டார்கள் என்ற நிம்மதி இருந்தாலும் கோதையின் நிலை கண்ணீரை வரவழைத்தது,

அருகே அரவம் கேட்டது, திடுக்குற்று திரும்பிப் பார்த்தான். திரும்பியவன் மேல் கோதை தளர்க்கரத்தால் வாயை அடைத்தபடி பூமாலையாக படர்ந்தாள். நீண்டநேரம் வாய் பேச்சுக்கு இடம் இல்லை. குளிரில் நடுங்கியவனுக்கு அவளது உடற்சூடு இதமாக இருந்தது, பேசி அதைக் கெடுத்துவிட விரும்பவில்லை.

ஒருவழியாக மெளனத்தை கோதை கலைத்தாள்.

‘ ‘நான் வரமாட்டேன் என நினைத்துவிட்டாயா ? ‘ ‘

‘ ‘நம்பிக்கை இருந்தது, ஆனாலும் உன்னை மீறி ஏதாவது நடந்துவிட்டதோ என பயந்தேன். ‘ ‘

‘ ‘ஏன் தாமதம் ? ‘ ‘

‘ ‘நடுநிசி பூசைக்கு தந்தையார் புறப்பட்டபின் நான் எழுந்து வீட்டின் பின்பக்கத்தில் தயாராக வைத்திருந்த எனது துணி பொட்டலத்தை எடுக்க சென்றேன். அந்த நேரத்தில் மறந்துவிட்ட எதையோ எடுக்க தந்தையார் திரும்பவும் வந்தார்.

படுக்கையில் என்னைக் காணாததில் பலமுறை குரல்கொடுத்தார். குற்ற உணர்வில் மெளனமாக பின்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். பதற்றத்துடன் தந்தையார் தார்மகத்தா வீட்டுப்பக்கம் சென்றபோது நான் கடற்கரை நோக்கி ஓடிவந்தேன். அதற்கிடையில் என்னைத் தேடிவந்த ஊர்மக்களை வழியில் கண்டபோது சற்று மறைவாக இருந்துவிட்டு வந்தேன் ‘”.

மூச்சு விடாமல் கூறிமுடித்தாள்.

* * * * * * *

இருபது நூறு ஆண்டுகளுக்கு முன்னய காலமிது!.

அப்போது தமிழகத்தில் சைவம் நலிந்திருந்தது, பெளத்தம் செழித்து தென்கிழக்கு ஆசியாவரையும் வியாபித்த காலமது, தமிழ்நாட்டு நாகைபட்டினம் பெளத்தம் பரந்து வளர்வதற்கு கண்மாயாக இருந்தது. இங்குள்ள சூடாமணி விகாரத்தில் வெளிநாட்டு சிறுவரும் இளைஞர்களும் கல்வி கற்றார்கள். விகாரைக்கு உதவுவதற்கும் நிதி அளிப்பதற்கும் நாகை தனவந்தா;கள் பின்னிற்கவில்லை. அந்தணர் உணவுக்காக ஊர்விட்டும் வேறு தொழில் செய்யவும் தலைப்பட்டார்கள். அரசமானியம் அற்று வணிகார் உதவியும் இல்லாமல் சைவம் நலிந்த காலம்.

நாகைக்கு சிலகாதத்தில் உள்ள குயில்பாக்கம், மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த கிராமம். காவேரியின் பக்கமானதால் மீன்வளமும் நெல்வளமும் நிறைந்தது. பல விவசாயிகள் வளமுடன் வாழ்ந்தார்கள். குணசீலர் குயில்பாக்கத்து சிவன்கோயிலில் வேதியர் நெறிநின்று ஆறுகால பூசை செய்து வந்தார். தந்தை, பாட்டன் என இவர்கள் குடும்பமே இந்த கோயிலில் பணியாற்றி வந்தார்கள். குணசீலருக்கு இளவயதில் மனைவி இறந்துவிட்டாள். இறக்கும்போது இல்வாழ்வின் பரிசாக பெண்குழந்தையை கொடுத்துவிட்டு சிவலோகம் சென்றுவிட்டாள்.

இறைவனுக்கு சாத்தும் மாலையின் நினைவாக பூங்கோதை என பெயரிட்டு சீராட்டி வளர்த்தார். பூங்கோதை என்ற பெயர் பேச்சுவழக்கில் கோதையென மருவியது.

மீண்டும் திருமணம் செய்யும்படி குணசீலரைப் பலர் வற்புறுத்தியபோதும் அவர் பிடிவாதமாக மறுத்தார். ஏன் கோதைகூட சிறுமியாக இருக்கும்போது தனக்கு ஒரு தாய் வேண்டும் என கேட்டாள். கோதையை வளர்ப்பதிலும் சிவத்தொண்டிலும்

இளமையை இறுக்கிக் கொண்டார்.

அந்தணருக்கே உரிய குடுமி வளர்த்ததாலும் முகத்தை மட்டும் கிழமைக்கு இருமுறை மழித்துக் கொள்வது குணசீலரின் வழக்கமாகிவிட்டது. சாம்புவன் கடந்த கால்நூற்றாண்டுகளாக குணசீலருக்கு சவரம் செய்துவருகிறான். இருவருக்கும்

ஒத்தவயது. சவரம் செய்யும் போது பலவிடயங்களை இருவரும் மனம் திறந்து பேசுவார்கள்.

ஒருநாள் சாம்பவனுக்கு உடல்நலகுறைவு காரணமாக தன் மகனான சிவலையை அனுப்பினான். சிவலை சவரத்தை முடித்துக் கொண்டு கை அலம்புவதற்காக கிணற்றை நோக்கிச் சென்ற போது, உலரப்போட்ட சேலையின் கீழ் இரு அழகிய பாதங்கள் தெரிந்தன.

‘ ‘மருதாணியால் சித்திரம் வரையப்பட்ட பாதங்கள், அவை நிச்சயம் மனித கால்களாக இருக்கமுடியாது, தேவதையின் கால்கள் இப்படி இருக்குமோ ? ‘ ‘

ஆவல் மீறி பாதத்துக்கு உரியவளை தரிசிக்க கை அலம்ப வந்தவன் காத்துநின்றான்.

அந்நிய ஆடவன் அடுத்த பக்கம் உள்ளதை உணர்ந்த கோதை சீலைமறைவில் இருந்து வெளிவரவில்லை.

விநாடிகள் சென்றன.

இனி நிற்பது நாகரீகம் இல்லை என திரும்பி சென்றுவிட்டான்.

கோதைக்கு சாம்புவனை நன்றாகத் தெரியும் ‘. ‘ ‘நாச்சியாரே ‘ ‘ என அழைத்து தண்ணீர் கேட்பதும், ‘ ‘எப்பொழுது திருமண சாப்பாடு போடுகிறாய் ? என கேட்டு தன்னை

குங்குமத்தில் குளிக்க வைப்பதும் சாம்புவனின் பழக்கம். தந்தையை ஒத்தவரானதால் ஏதும் பேசாமல் சிரித்துவிட்டு செல்வாள்.

சிவலைக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. கோதையின் பாதங்கள் இதயத்தில் ஆழப் பதிந்தது, அவன் கண்களுக்கும் மருதாணி பூக்கள் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

குணசீலருக்கு சவரம் செய்யும் நாளை எண்ணி எண்ணி காத்திருந்தான். இருமுவதும் தும்முவதும் காதலின் சங்கீத பாஷையாகியது. காதலோடு கோதையின் துணிவும் வளர்ந்தது, குணசீலரின் கண் காது புலன்களின் குறைபாடு இவர்களது காதல் பரிமாற்றத்திற்கு துணைசெய்தது.

சாதி, சமயக் கட்டுப்பாடுகள் நிறைந்த குயில் பாக்கத்தில் இவர்கள் காதல் திருமணத்தில் முடியும் என்ற எண்ணம் இவர்களுக்கில்லை. மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த கிராமம் ஆனதால் அடுத்த ஊருக்கு ஓடிச் சென்று வாழ முடியாது. விடயம் வெளிவந்தால் இருவரும் சமாதியாவதும் அல்லாமல், தந்தையர் இருவரும் அவமானத்தால் இறப்பது நிச்சயமாகும்.

சிவலையின் செம்படவ நண்பன் ஒரு ஆலோசனை கூறினான். குடில் பக்கத்தில் இருந்து தென் கீழ் திசையில் நாழிகை சென்று மீண்டும் கரை நோக்கி வந்தால் பாண்டி நாட்டின் கரைப்பகுதியை அடையலாம், ‘ ‘ அங்கு நீங்கள் அனாதைகள் என

கூறிவிட்டு வாழலாம், என ஆலோசனை கூறித் தனது ஓடத்தையும் கொடுத்திருந்தான்.

கண் கலங்கியபடி சிவலை தான் சேகரித்து வைத்திருந்த தங்க காசுகளை அவன் கைகளில் வைத்தான்.

8 8 8

கோதையை ஓடத்தில் ஏற்றிவிட்டு, ஓடத்தை மெதுவாக தள்ளிக்கொண்டு இடுப்பளவு தண்ணீர்வரையும் வந்த பின்பு மெதுவாக துள்ளி ஏறினான். கடல் மிக அமைதியாக இருந்தது, கிழக்கு நோக்கி இரு துடுப்பால் வலித்தான். வேகமாகத் துடுப்பு வலித்ததாலும் கரையை விட்டுப் படகு விலகவில்லை. அவனுக்குப் படகோட்டிப் பழக்கமில்லை.

‘ ‘விடிவதற்குள் நடுக்கடலுக்குள் செல்ல வேண்டும். இல்லையேல் ஓடத்தில் துரத்தி எம்மைப் பிடித்துவிடுவார்கள். ‘ ‘

‘ ‘நான் உதவிக்கு வரவா ‘ ‘ என்றாள் கோதை.

‘ ‘எங்கே உன் கரங்களைக் காட்டு, ‘ ‘ நீட்டிய கரங்களைப் பார்த்தபடி, ‘ ‘இக்கரங்கள் மலர் கொய்ய மட்டும்தான் முடியும் ‘ ‘ என்றான்.

வைகறையில் காற்று மாறியது. சிவலையின் மடியில் கண்ணயர்ந்த கோதையைத் தட்டி எழுப்பினான். கோதை திடுக்கிட்டு எழும்பினாள்.

‘ ‘உன் முந்தானையை என்னிடம் தா. ‘ ‘

‘ஏய், ஏய் என்ன சொல்கிறாய் ‘ ‘ ?

‘ ‘தயவு செய்து கோவிக்காதே. வேறு வழி தெரியவில்லை. ‘ ‘

‘ ‘அதற்காகவா என்னை நடுக்கடலுக்கு அழைத்து வந்தாய் ? ‘ ‘

‘ ‘எதற்காக ?, நீ என்னை தவறாகப் புரிந்துவிட்டாய் ‘ ‘ ‘

நான் உன்னைப் பாய்மரமாகவும், உனது சேலையை பாய்மரச்சீலையாக்கவும் போகிறேன். காற்று திசை மாறியதால் நாங்கள் விரைவாகக் கடலுக்கு செல்லமுடியும். தன் அறியாமையைப் புரிந்து கொண்ட கோதை முந்தானைத் தலைப்பை சிவலையிடம் கொடுத்துவிட்டு ஓடத்தின் நடுப்பகுதியில் கால்களைப் பரப்பிக்கொண்டு நின்றாள்.

சேலைத் தலைப்பை பற்றிக்கொண்டு ஓடத்தின் அணியத்தில் அமர்ந்தான்.

‘ ‘வேகம் காணாது ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே கடல் தண்ணீரை கையால் எடுத்து கோதையின் சீலையை நோக்கி அடித்தான். தண்ணீர் துளிகள் கோதையின் மார்பை நனைத்தன.

இப்ப என்ன செய்கிறாய் ? ‘ ‘

‘ ‘சேலையை நனைத்தால் வேகமாக ஓடம் போகும் என்றான். ‘ ‘

நம்ப மறுத்த கோதை மார்பை இருகைகளாலும் பொத்தினாள்.

ஓடம் வேகமாக சென்றது.

குயில்பாக்கம் கண்ணுக்கு மறைந்தவுடன் கோதை தன்சீலையை சுற்றியபடி ஓடத்தில் அமர்ந்தாள். அணியத்துள் இருந்த அவலையும், புளிச்சாதத்தையும் எடுத்து சிவலை கோதைக்கு ஊட்டினான்.

உண்ட களைப்பால் இருவரும் தூங்கிவிட்டனர்.

சூரியனின் வெட்கை ஏற இருவரும் கண் விழித்தனர். மார்பு சேலை விலகி இருந்ததால் அவசரமாக எழுந்தாள். “ ஏய் மெதுவாக எழும்பு, இல்லையேல் ஓடம் கவிழ்ந்துவிடும். நாங்கள் மீனுக்கு இரையாக வேண்டி இருக்கும்”.

மீன் என்றதும் முகம் சுழித்தாள்.

“எங்கே இருக்கிறோம்” ?

“ஏதோ ஒரு தீவுக்குப் பக்கத்தில் உள்ளோம்”. துடுப்பை போட்டுக் கொண்டு கரையை நோக்கி நடந்தான்.

பனையும், தென்னையும் சேர்ந்த அந்த தீவை பச்சைத் திடலாகக் காட்டியது. சிவலை சூரியனைப் பார்த்துவிட்டு இது தீவின் மேற்குகரை என்றான். ஓடத்தை கல்லுடன் கட்டிவிட்டு இருவரும் கரையில் நடந்தார்கள். தென்னை மரங்களுக்கு இடையில் நடக்கும் சிறுகற்கள் கோதையின் கால்களை உறுத்தின. சிவலை கற்பாறையில் கோதையை இருக்கச் சொல்லிவிட்டுக் கீழே கிடந்த தேங்காயை கல்லில் அடித்து உடைத்தான்.

இருவரும் தேங்காயையும் தின்று, நீரையும் அருந்தினார்கள்.

தென்னை மரநிழலில் சிறிது சாய்ந்தபோது இவர்களை நோக்கி ஓர் பெளத்த சன்னியாசி வந்து கொண்டிருந்தார். ‘ இருவரும் எழுந்து சன்னியாசியை வணங்கினர்.

“குழந்தைகளே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” ?

“நாங்கள் சோழநாட்டை சேர்ந்தவர்கள்” என தமது வரலாற்றை ஆதியோடு கூறினார்கள்.

‘ ‘நானும் உங்கள் ஊரைச் சேர்ந்தவன். நாகையில் சூளமணி விகாரை தான் என் வசிப்பிடம். ஈழத்தின் புத்த தலங்களைத் தரிசித்துவிட்டு ஊர் திரும்புகிறேன். வணிகார்களின் மரக்கப்பல் இந்த வழியால் தான் செல்லும், மேலும் இது

புத்தபகவான் வந்த இடம். நாகதீபம் என்று பெயர். சிறிய புத்தகோயிலும், அம்மன் கோயிலும் உள்ளது”.

‘ ‘நீங்கள் விகாரைக்கு அல்லது கோவிலுக்கு பக்கத்தில் இருந்துவிட்டு சிறிதுகாலம் செல்ல உங்கள் ஊர் செல்லுங்கள். இன்று மாலை இங்கு ஒரு வணிககப்பல் வரும், அதில் நான் செல்ல இருக்கிறேன். ‘ ‘

‘ ‘கோதை சன்னியாசியின் கால்களைக் கட்டிக்கொண்டே, ‘ ‘சாமி எனக்கு உதவி செய்யுங்கள் ‘ ‘ என்றாள்.

‘ ‘குழந்தை எழுந்திரு, என்ன வேண்டும் ? ‘ ‘

‘ ‘எனது தந்தையாரை குயில்பாக்கத்தில் சந்தித்து நான் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள். ‘ ‘ இல்லையேல் என் தந்தை என் நினைவில் இறந்துவிடுவார் ‘.

‘ ‘அப்படியே ஆகட்டும் ‘ ‘.

மனநிம்மதியுடன் கோதையும், சிவலையும் கைகோத்தபடி கிழக்காலே இருக்கும் புத்தகோயிலை நோக்கிச் சென்றனர்.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்