களிமேடு காளியம்மாள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

செங்காளி


கணவனை இழந்துவிட்ட களிமேடு காளியம்மாள்

மனமொடிந்து போனாலும் மாடாய் உழைத்திட்டாள்.

இரண்டுகாணி நிலம்தான் இருந்ததென் றாலுமதைத்

திரண்டு விளைகின்ற தோட்டமாய் க்கிவிட்டாள்.

அருமைமகன் பொன்னனையும் அன்போடு வளர்த்திட்டாள்.

பொன்னன்தான் வளர்ந்துமிகப் பொறுப்புள்ள இளைஞனாக,

அண்ணி பெற்றெடுத்த அருமைமகள் அருக்காணி

தன்னுடைய மகனுக்குத் தகுதியான பெண்ணென்று

பண்ணிவைத்தாள் திருமணமே பார்ப்போர் வியக்கும்படி.

மருமகளைப் பிரியமுடன் மகள்போல நடத்திவந்தாள்.

அருக்காணி அத்தையிடம் அன்புடனே நடந்திடுனும்

பெருமளவு கணவனிடம் பிரியமாக இருந்திடுனும்

ஊர்மக்கள் ஏதேனும் உதவிகேட்டு வந்துவிடின்

சிடுசிடுவென பேசிடுவாள் சிலசமயம் அவர்களிடம்

கடுகடுப்புடன் முகத்தைத்தான் காட்டிடுவாள் அப்போது.

இதையறிந்த காளியம்மாள் இப்படித்தான் நினைத்திட்டாள்,

‘களைகள் முளைக்கும்போது கவனமாய்ப் பார்த்துத்தான்

முளையிலே கிள்ளிவிட முயற்சிகள் எடுக்காவிடின்

களைகள் முற்றித்தான் கழனியெங்கும் பரவிவிட்டு

விளையும் பயிரைத்தான் வீணாக்கி விடுமன்றோ ‘.

தானும்தன் மருமகளும் தனியாக இருக்கையிலே

அன்புடனே மருமகளை அணைத்தபடி அவள்மனம்தான்

புண்படாத வகையினிலே பொறுமையாய்ச் சொல்லிவிட்டாள்,

‘மரியாதை மிகவேண்டும் மாற்றாரிடம் பேசுகையில்,

சரியாக நடக்காவிடில் சங்கடத்தில் முடிந்துவிடும் ‘.

அத்தையின் அறிவுரையை அருக்காணி கேட்டுவிட்டு,

‘பெரிதாக நானென்ன பேசிவிட்டேன் ‘ என்றுவிட்டு

சிறிதேனும் அதைப்பற்றி சிந்திக்காமல் நடந்திட்டாள்.

மேலுமிதைப் பேசித்தான் மனவருத்தம் கொடுக்காமல்

காலமிதை மாற்றுமெனக் காளியம்மாள் காத்திருந்தாள்.

இப்படித்தான் எல்லோரும் இருந்திட்ட ஒருநாளில்,

மருமகளை அழைத்து மாமியாரும் சொல்லிவிட்டாள்,

‘கருக்கலிலே எழுந்துநான் காய்விற்கப் போய்விடுவேன்

சோறுவடித்து எல்லாருக்கும் சுவையாகக் குழம்புவைத்து

பொறுப்புடனே எல்லாமே பார்த்திடுவாய் ‘ என்றுதானே.

மாலையில் திரும்பிவந்த மாமியார் பார்த்திட்டாள்

கவலையே உருவான கோலத்தில் மருமகளை.

அத்தையைக் கண்டவுடன் அருக்காணி அழுதுவிட,

அன்புடன் அவளுக்கு றுதல்மிகக் கூறிவிட்டு

‘என்னதான் நடந்தது ‘ எனக்கேட்டாள் காளியம்மாள்.

றாத துயரத்துடன் அருக்காணி சொல்லிடுவாள்,

‘சோறாக்கும் சட்டியிலே சின்னவோட்டை இருந்ததாலே

தண்ணீர் கசிந்துவிடத் தணலும் எரியவில்லை,

என்னதான் செய்வதென்று எனக்கும் புரியவில்லை.

சொன்னபடி நானும்தான் சோறும் சமைக்கவில்லை ‘

‘சின்னஞ்சிறு ஓட்டைதானே சிறிது முயன்றிருந்தால்

அன்னமும் சரியாக க்கித்தான் இருக்கலாமே ‘.

அத்தையின் சொற்களுக்கு அருக்காணி பதிலளிப்பாள்,

‘ஓட்டைமிகச் சிறிதெனினும் ஒழுகாமல் இருந்திடுமா ?,

கட்டைகொஞ் சம்நனைந்திடின் கொளுந்துவிட்டு எரிந்திடுமா ? ‘

இதைக்கேட்ட காளியம்மாள் இதமாகச் சொல்லிடுவாள்

‘இதைப்போல்தான் கண்ணே இவ்வுலக வாழ்க்கையிலும்

கடுகளவு சொல்லெனினும் கடுமையாய்ச் சொல்லிவிடின்

படியளவுப் பெரிதாகிப் பகையை வளர்த்துவிடும்.

இதையுணர்ந்து நடந்துவிடின் இன்பமே நிறைந்துவிடும். ‘

சிந்தித்த அருக்காணிதன் சிறுமையை உணர்ந்திட்டாள்.

அன்றுமுதல் அவளுந்தான் அனைத்து மக்களிடமும்

நன்றாகப் பேசித்தான் நல்லபெயர் எடுத்திட்டாள்.

தன்னுடைய திட்டம்தான் தகுந்தபடி வெற்றிபெற

பொன்னனின் தாயுந்தான் பூரிப்புமிக அடைந்திட்டாள்.

***

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி