தீக்குள் விரலை வைத்தால்.

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

சிவஸ்ரீ


‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது

எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் ‘

கீதோபதேச வரிகளோடு காற்றிலாடியது நாள்காட்டி. கழற்றி எறிந்தான் கார்த்திகேயன். தொப்பென்று சோபாவில் விழுந்தான். யுத்தச் செறிவுடன் கண்கள் ரத்தச் சிவப்பில் எரிந்தன.

‘எது நல்லா நடந்துச்சு, இல்ல நல்லா நடக்குது ? எதுவுமில்ல, ச்ச ! எதுவும் வேணாம். எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது போயிரலாம். ‘ கழுத்தை இறுக்கிய டையைக் கழற்றி, காலர் பட்டனை எடுத்து விட்டான். இருந்தும் மன இறுக்கம் குறைய வில்லை.

‘உயிரின் உயிரே ‘ என உருகியது கைத்தொலைபேசி.

‘ சொல்லுடா ‘ , காதில் வைத்தான்.

‘ எஸ்ப்ளனேட்ல ப்யூட்டி ஃப் த பீஸ்ட் ஸ்பானிய நிகழ்ச்சி நடக்குது போலாமா ? ‘ ஜேம்ஸ் கேட்டான்.

‘ மா மிருகத்தனம் கூட வசீகரிக்கிற அழகாத் தான் வசியம் செய்யுது“

‘ என்ன சாருக்கு ரொம்ப நல்ல மூடோ ? ‘

‘ …. ‘

‘ சரி, இரு, நான் அங்க வரேன். ரெண்டு பேரும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போலாம். போய்ப் பேசுவோம், கூல் கூல் ‘, வைத்து விட்டான்.

மடமடவென்று தண்ணீரை வாயில் சரித்துக் கொண்டான் கார்த்திக். உமாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. தொலைபேசி அட்டையைப் பிரித்து, அட்டை எண்ணைத் தேய்த்து ஒற்றினான்.

‘ க்ர்ர்… ‘ என்ற முதல் அழைப்பிலேயே எடுக்கப் பட்டது.

‘ என்னங்க, எப்டி இருக்கிங்க ? ‘ உமா கேட்டாள்.

இறுக்கம் எல்லாம் ஐஸ்க்ரீமாய் உருகி வழிந்து விட்டது.

‘ஏய், திருடி, நா ஹலோ கூட சொல்லல, அதுக்குள்ள நாந்தான்னு எப்டி கண்டுபிடிச்ச ? ‘

‘தவம் இருக்கவளுக்கு வரம் வரும் போது தெரியாதா ? உங்க பையனும் இப்பத் தான் சொன்னான், அப்பா கூப்பிடப் போறாங்கன்னு ‘

‘வேற என்ன சொன்னான் என் பையன் ? என்னைப் போலவே பெரிய கம்ப்யூட்டர் இஞ்சினியர் கப் போறேன்றானா ? ‘

‘ம்க்கும் ! இப்பவே கம்ப்யூட்டர் இஞ்சினியர்க்கெல்லாம் மவுசே இல்ல ‘

‘மெளஸ்லாம் கம்யூட்டரோட தான் இருக்கு ‘

‘மாமா, இனிமே பொறக்கப் போற எல்லாப் பாப்பாவும் மெளஸ் அட்டாச்டா, இணையத் தொடர்புக்குத் தலைக்கு உள்ளயே மோடம் சொருகி வச்சுக்கிட்டுத் தான் பொறக்கப் போகுது பாருங்க. அப்ப, தனியா ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர்னு தேவையே இருக்காது. நம்ம பையன் அப்ப பயங்கர டிமான்டுல இருக்கப் போற ஒரே ஒரு வேலை, அதத்தான் பாக்கப் போறான். ‘

‘அது என்னமா வேல ? ‘

‘ம்ம்ம், விவசாயம் தான்.”

‘நல்லா செய்யட்டும், இப்ப என்ன செய்றான் ? ‘

‘ம், வாலு, உங்கள மாதிரியே கிரிக்கெட் விளையாடுறான் வயித்துக்குள்ள. ‘

‘எப்ப வெளில குதிக்கப் போறானாம் ? டாக்டர் என்னடா சொன்னார் ? ‘

‘அடுத்த மாசம் பத்தாந் தேதி சொல்லிருக்காங்க ‘, சட்டென மெதுவானது அவள் குரல், ‘ வந்துருவீங்கள்லங்க ? ‘

‘…. நா அனுப்பின சத்து பானம் எல்லாம் குடிக்கிறியா ? ‘

‘ பேச்ச மாத்தாதிங்க, வந்துருவீங்கள்ல ? சொல்லுங்கங்க ‘

‘ வரத்தான்டா ரொம்ப முயற்சி பண்றேன் ‘

‘ எப்டியாவது வந்துருங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு ‘

‘ …. ‘

‘ ஹலோ … ஹலோ … ‘

‘ சொல்லுடா ‘

‘ கார்ட் முடிஞ்சு போச்சோனு பார்த்தேன் ‘

‘ இல்ல, நமக்காகத் தான் பத்து வெள்ளி கார்ட இப்ப நாப்பத்தஞ்சு நிமிஷம் க்கி இருக்காங்க சென்னைக்கு, சொல்லு… ‘

கனத்த மனதுடன் பேசி முடித்த போது, ஜேம்ஸ் வந்து விட்டான்.

‘ என்னடா, இன்னும் கிளம்பலையா ? ‘

‘ அஞ்சு நிமிஷம் குடு, இதோ வந்துட்டேன். ‘

பட்டுப் போல் மணல் பாதத்துக்குள் குறு குறுக்க, அலை கால் விரல்களை வருடி வருடிப் போனது. வாங்கி வந்திருந்த ஃப்ரென்ச் ஃப்ரைஸைக் கொறித்த படி, மீனுக்குத் தூண்டி லிட்ட சீனச் சிறுவனை வேடிக்கை பார்த்தார்கள்.

‘ ம், சொல்லுடா கார்த்தி, என்ன பிரச்சனை ? ஜேம்ஸ் கேட்டான்.

‘ பின்ன என்னடா, நியாய அநியாயமெல்லாம் யாருக்குத் தெரியுது நாட்டுல ? கால்ல விழற மாதிரி, கால வாரி விடுறவனத் தான் நம்புறாங்க. உண்மையா உழைக்கிறவனுக்கு ஒண்ணும் கிடைக்கிறதில்ல ‘

‘ தெளிவா சொல்லேன்டா. மா, கருத்தரங்குக்குப் போறியா, இல்லையா ? ‘

‘ இல்ல! ‘

அலைகளின் இரைச்சலை விட அதிகமாய் அவன் மெளனம் ஹோவென இரைச்சலிட்டது. தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி இருந்த கப்பலை வெறித்தபடி வாய் திறந்தான் கார்த்திக்.

‘ எம்பெடட் சிஸ்டம் பத்தி என்னடா தெரியும் ஹரிக்கு ? அவன் வந்து சேர்ந்தப்ப, அசெம்ப்ளி லாங்குவேஜ்ல பழக்கமேயில்ல. அப்ளிகேஷன் பேக்கேஜ் தான் பண்ணி இருந்தான். இந்தப் ப்ராஜெக்ட்ல, அல்காரிதத்துல ரம்பிச்சு, அணுஅணுவா ரசிச்சு ரசிச்சு உழைச்சேனேடா. அவனுக்கும் தெளிவாப் புரியுற மாதிரி சொல்லிக் குடுத்தேன். இப்ப, என்னை ஒண்ணுமில்லாம க்கப் பாக்குறான். எனக்கிருக்கிற குழு உணர்வு, ஏன்டா அவனுக் கில்ல ? ‘

உட்கார்ந்து ஈர மணலைக் குவித்துக் குவித்துப் பிடித்து வீடு கட்ட ரம்பித்தார்கள். தொடர்ந்தான் கார்த்திக்…

‘ ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, அப்றம் உடலின் வெப்பநிலையை வச்சே அத்தனை ரிப்போர்ட்டையும் க்ராஃபிகலா, துல்லியமா குடுக்க, அத்தனை கருவிகளையும், மனித உதவியில்லாம, கணினி மூலமாவே, எளிமையா இயக்க வைக்கும் இந்த ப்ராஜெக்ட, ராத்திரி பகலாத் தூங்காம, அர்ப்பணிப்போட செஞ்சேனேடா… ‘

‘ ம் ! ‘

‘ இப்பப் பேர் வாங்கப் போறது மட்டும் ஹரி. அந்தக் கருவிகளை இயக்கிக் காட்டி, அதைப் பத்திப் பேசப் போற வெளி நாட்டுக் கருத்தரங்கத்துக்கு மட்டும் ஹரிய அனுப்புறாங்க. ‘

‘ … ‘

‘ எவ்ளோ பெரிய வாய்ப்பு ? பன்னாட்டு அறிஞர்கள் எத்தனை பேர் வரப் போறாங்க, தெரியுமா ? பங்கேற்ற சான்றிதழும் அவனுக்குத் தான் கிடைக்கும். ‘

‘ உன் முதலாளிக்குத் தெரியும்லடா உன்னோட உழைப்பப் பத்தி ? பின்ன ஏன்டா இப்டி செய்றார் ? ‘

‘ பத்தலடா, எனக்கு சமர்த்துப் பத்தல. நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருக்கேன்ல ? எவன் காலை எப்பப் பிடிக்கனும், எவனுக்கு வால் பிடிச்சுட்டேத் திரியனும், தமிழ் தெரியாத சீன முதலாளி கிட்ட, உன்னை இவன் இப்டி சொன்னான், அவன் அப்டி சொன்னான்னு சொல்லிக் குடுத்து, எப்டிப் பேர் வாங்கனும்னு தெரியலையேடா எனக்கு. ‘

கட்டிய மணல் வீட்டில் விரலால் துளையிட்டு வாசல் உண்டாக்கினான். மார்கழிப் பனி மெல்ல இறங்கி கடற்காற்றோடு கைகோர்த்து கிச்சுகிச்சு மூட்டியது. தோளைத் தொட்டான் ஜேம்ஸ்.

‘ சரி, விடுடா, எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்க. சீக்கிரம் ஊருக்குப் போற வழியப் பாரு. பிரசவ சமயத்தில் உன் மனைவி கூடவே இரு. அது தான் முக்கியம் ‘

‘ அதுவும் முடியாதுடா. அவன் ஒரு வாரக் கருத்தரங்குக்கு வெளிநாடு போறான். நான் இங்கயே எல்லா மருத்துவமனைகளிலும், இந்தக் கருவிகளோடு கணினியை இணைத்து, அதற்கான மென்பொருள் நிறுவுற வேலை செய்யனும். முடிக்க ஒரு மாசமாவது கும். ‘

‘ ஊருக்குப் போயிட்டு வந்து செய்யக் கூடாதா ? ‘

‘ ம்ஹூம், முடியாது. அரசாங்கத்திடம் ஒரு மாசத்தில் முடிச்சுத் தரதா கான்ட்ராக்ட் ஒத்துக்கிட்டாச்சு. இப்பப் போய் லீவ் கேக்க முடியாது. ‘

மணல் வீட்டு வாசலுக்குள் அலை வந்து நுழைந்து விட்டுப் போனது.

‘ பாருடா, இந்த அலை கூட க்குன ஒரு பொருள அழிக்க மனசு வராம, கலைக்காமத் திரும்பிப் போகுது. ‘

‘ மாடா, மிருகம் கூடத் தன் இன மிருகத்த கொல்றதில்ல. மனுஷனுக்குத் தான், சக மனிதன அழிக்றதிலும், அடுத்துக் கெடுக்கிறதிலும் அல்ப னந்தம். ‘

‘ சரி, நம்ம இங்க வந்து உக்காந்து, சேர்ந்து பாடி ரொம்ப நாளாச்சுல, ரம்பிக்கலாமா ? ‘, டென்ஷனைக் குறைக்க முயன்றான் ஜேம்ஸ்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை பாரதி பாடிய யதுகுல காம்போதி ராகத்திலேயே, இணைந்து, இழைந்து பாடினார்கள். தீக்குள் விரலை வைத்தால் வந்ததும், நிறுத்தினான் கார்த்திக்.

‘ உமா வந்துருவீங்கள்லங்கனு ஏக்கமாக் கேட்டப்ப, தீக்குள் விரல வச்ச மாதிரி தான் திகு திகுன்னு எரிஞ்சது தெரியுமா ? தீக்குள் விரலை வைத்தால், தீண்டும் இன்பமெல்லாம் தோன்றலடா. நா ஏமாறுவது பத்தாம, வர முயற்சி செய்றேன்னு சொல்லி அவளையும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன் ‘

‘ என்ன சொல்றதுனு தெரியலடா, உன் நல்ல மனசுக்கும், திறமைக்கும், நியாயமா கிடைக்க வேண்டியது கிடைக்கனும், னா உன் மனைவி கிட்ட மட்டும் உன் சூழ்நிலைய மறைக்காம இப்பவே சொல்லிரு. இப்ப வரேன், வரேன்னுட்டு, அப்றம் கடைசி நிமிஷத்துல வர முடியலனு கழுத்தறுத்தினா, அவுங்க இருக்கற உடல் நிலைல, அவுங்களால தாங்க முடியாதுடா. ‘

‘ எப்டிடா சொல்ல ? சொல்லனும்னு தயார் பண்ணிட்டுத் தான் ஃபோன் கார்ட எடுக்றேன் ஒவ்வொரு முறையும். னா அவ கேக்கும் போது வர முடியாதுனு சொல்லி அழவைக்க மனசு வரலையேடா. ‘

‘ அதெல்லாம் எப்டியாவது சொல்லித் தான் கனும், சொல்லிரு, மா ‘

‘ மா, என்னை சொல்றியே ஜேம்ஸ், நீ உன் அம்மாகிட்ட உன் காதல் விஷயத்த சொல்லிட்டியா ? ‘

‘ அட, நீ வேறடா, நா பொறந்து வளர்ந்து, படிச்சது எல்லாம் இங்க தானே ? உங்க தமிழ் நாட்டப் பார்த்ததே இல்ல. எங்க அம்மாவோட எதோ தூரத்து சொந்தக்காரங்க, போன ஜென்மத்துலயா இருக்கும்னு நினைக்றேன், என்னமோ கொட்டாம் பட்டிலயோ, தட்டாம் பட்டிலயோ, இருக்காங்களாம், அவுங்க பொண்ணத் தான் நம்ப கட்டிக்கனுமாம். பெரிய தொல்லையா இருக்கு. கச்சோர் பண்றாங்கடா ‘

‘ நீ விமலா பத்தி சொன்னியா, இல்லையா ? ‘

‘ என்னத்த, அம்மா காதுல வாங்கினாத் தானே, அப்பாவும் இல்லையா, நா இங்க இருக்கப் பொண்ணக் கட்டிக்கிட்டா, அவ என்னை அவுங்க கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிருவாளோ…ன்ற இன்செக்யூரிடி ஃபீலிங் வந்திருச்சுடா. ஊர்ப் பொண்ணக் கட்டிக் கூட்டிட்டு வந்தா அவுங்க சொல்றதக் கேட்டுக்கிட்டு அடங்கி இருக்கும்னு அம்மாவுக்கு நினைப்பு ‘

‘ விமலா என்ன சொல்றாங்க ? ‘

‘ நா பேசிப் பார்க்கவானு தான் கேட்டுச்சு விமலா. கொஞ்சம் பொறுன்னு சொல்லி இருக்கேன். விமலா எவ்ளோ நல்ல பொண்ணு, சில பேர் மாதிரி பாய்ஃப்ரெண்ட்ஸ் கூட சும்மா சுத்துற டைப் இல்ல, எங்கிட்ட கூட ரொம்பப் பண்போட தான் பழகும். நா என்ன எதாவது சீனப் பெண்ணையா லவ் பண்ணேன் ? சுத்தத் தமிழ்ப் பொண்ணு, அதுவும் பள்ளில தமிழ் இலக்கியக் கழகத்துல நா சேர்மன், அது வைஸ் சேர்மன், அதுல தான் பழக்கம் னதே. அது ரொம்ப அன்டர்ஸ்டான்டிங் அன்ட் அட்ஜஸ்டபிள் தெரியுமா, இந்த அம்மாவுக்கு எப்டிப் புரிய வைக்கிறதுனே தெரியலடா. எதாவது பேசினா, நா செத்துப் போறேன், அப்றம் எவள வேணா, கல்யாணம் பண்ணிக்க அப்டின்றாங்க. என்னா பேசுறதுனே தெரில, கொஞ்ச நாளைக்கு இதப் பத்தியே பேச வேணான்னு இருக்கேன் ‘

‘ ம், இப்பப் புரியுதா, சில நேரங்களில், சில மனிதர்களிடம், சில விஷயங்கள சொல்ல முடியாது ‘

‘ ஓஹோ, அப்டி வரியா, இது வேற, அது வேறமா கண்ணு, போய் அண்ணி கிட்ட முதல்ல விஷயத்த சொல்லி, இப்பவே சமாதானம் பண்ணி வை, வா போகலாம் ‘

கட்டி முடித்த மணல் வீட்டை அப்படியே விட்டு விட்டு, எழுந்து நடந்தார்கள் எம்.ர்.டி நிலையத்துக்கு.

ஜேம்ஸ்க்கு டாம்பனிஸ் போக எதிர்ப் புற எம்.ர்.டி இன்னும் வர வில்லை. கார்த்திக்குக்கு காலாங் செல்லும் எம்.ர்.டி வந்து விட்டது. டுட் டுட் டுட் டுட் டும் …. டோர்ஸ் க்ளோஸிங் என்று சொல்லிக் கதவுகள் மூடிக் கொண்டதும் கண்ணாடி வழியே ஜேம்ஸ்க்கு டாடா காட்டி விட்டு, காலியாய் இருந்த இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான். எதிர் இருக்கையில் ஒரு இந்தோனேஷியப் பெண் சிக்கனமாய் உடையணிந்திருந்தாள். கவனியாமல் திரும்பிக் கொண்டாலும் அவள் சும்மா இருக்காமல், சும்மாச் சும்மா செய்து கொண்டிருந்ததை எல்லாருமே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஒரு குட்டிக் கைப்பையை வைத்துக் கொண்டு, உள்ளே கைவிட்டு விட்டு, சின்னக் கண்ணாடியில் பார்த்து, இல்லாத புருவத்தைப் பென்சிலால் இழுத்து இருப்பதாக்கி, மினி பிரஷ் வைத்து இமைமுடிகளை நீட்டி, வளைத்து, கன்னத்தில் ஏற்கனவே, ஒரு இன்ச் பாரம் ஏற்றியிருந்த ரோஸ் பவுடரில், இன்னும் எடுத்து, இன்னும் கொஞ்சம் சுமை ஏற்றினாள். உதட்டு விளிம்புகளில் கலர் பென்சிலால் எல்லைக் கோடு வரைந்து, பின் சிவப்புச் சாயத்தை எடுத்துப் பெயின்ட் அடித்துக் கொண்டாள்.

ஹ்ம்! இவ்வளவு வேலை இருக்கா முகத்துக்கு மட்டுமே, பின் மொத்த உடலுக்கும் எத்தனை வேலை முடித்துக் கிளம்ப எத்தனை மணியாகும் ? கார்த்திக் நினைத்துக் கொண்டான். உமாவை எங்காவது கிளம்பச் சொன்னால், நிமிஷத்தில் கிளம்பி விடுவாள். அவசர அவசரமாக, வகிடு மட்டும் எடுத்துக் கொண்டு, லிஃப்டில் இறங்கும் போதே பின்னிக் கொண்டு விடுவாள்.

புது எம்.ர்.டி, அதனால் மேலே தொலைக் காட்சி பதித்து வைத்து இருக்கிறார்கள். சத்தம் இல்லாமல் காட்சிகள் மட்டும் காட்டிய விளம்பரத்தில், ஊதா நிறத்தில் ஏதோ திரவத்தை ஒரு குண்டுப் பெண் தூக்கித் திரையில் ஊற்றி விட, எல்லாம் வடிந்து வெள்ளையாகி, ஊதா நிறத்தில் எழுத்துக்கள் மட்டும் மிஞ்சி யிருந்தன. அப்றம் மாமோகிராம் செய்து கொண்டு விட்டார்களா, நாங்கள் செய்து கொண்டு விட்டோம் என வரிசையாய் சீன, மலாய் தமிழ்ப் பெண்கள் ஒவ்வொருவராய் வந்து கேட்டார்கள். மேலே திரையையே, பார்த்திருந்ததில், தூக்கம் அசத்த, மீண்டும் கண்களைக் கீழ் இறக்கினான்.

அந்தப் பெண் இப்போதும் சீப்பை வைத்துக் கோரை கோரையாய் நீட்டி, செம்பட்டைச் சாயம் பூசியிருந்த கேசத்தை, சீவி, சீவி விட்டுக் கொண்டு இருந்தாள். மனிதர்கள் எல்லாருக்குமே எதாவது பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது என ஜேம்ஸ் சொல்வானே, இந்தப் பெண்ணுக்கெல்லாம் எதாவது பிரச்சனை இருக்குமா என்ன ? எந்தக் கவலையும் இல்லாமல், யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்ற கவலை கூட இல்லாது, ஹாயாக அலங்கரித்துக் கொண்டே இருக்கிறாளே.

வெள்ளிக் கிழமை மாலை என்றாலே ஒப்பனை ஏந்திய முகங்களும், கற்பனை ஏந்திய கண்களுமாய், சொப்பன சுந்தரிகளாய்ப் பெண்களையும், வார இறுதி உற்சாகம் கொப்பளிக்கும் ண்களையும் பார்க்க முடிகிறது இங்கே. கார்த்திக் நினைவுலகை விட்டு நிஜத்துக்கு வந்த போது, ‘நெக்ஸ்ட் ஸ்டாப் புகிஸ் ‘ என்றது எம்.ர்.டி குரல்.

அடக் கடவுளே ! காலாங் தாண்டி வந்தாச்சா, அவசரமாய் எழுந்து புகிஸில் இறங்கி, எதிர்த் திசை எம்.ர்.டி எடுத்துத் திரும்பி காலாங் வந்து சேர்ந்தான். எம்.ர்.டியில் இருந்து வெளியே வந்து, எஸ்கலேட்டரில் இறங்கிய போது, உமா நினைவு வந்தது. முதல் தடவை எஸ்கலேட்டரில் ஏறச் சொன்ன போது, புடவை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, கணுக்காலுக்கு மேலே புடவையைத் தூக்கி ஒரு கையால் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கார்த்திக்கின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, எதோ சாமி ஸ்லோக மெல்லாம் சொல்லி, வலது காலை எடுத்து வைத்து, இடது காலையும் டபக்கென்று தாவி வைத்த ஞாபகம் வந்து சிரிப்பு வந்தது. அடுத்த படியில் நின்ற பங்களா இளைஞன் திரும்பிப் பார்த்தான். ‘சத்தமாகவே சிரித்து விட்டேனோ ‘ பான்ட் பாக்கெட்டில் இருந்து ஈ.ஸி-லிங்க் கார்டை எடுப்பது போல் குனிந்து கொண்டான் கார்த்திக்.

அபார்ட்மென்ட் ப்ளோக்கை நோக்கி நடந்த போது, இதே பாதையில் உமாவோடு கைகோர்த்துக் கொண்டு நடந்து சென்ற ஞாபகங்கள் வந்து படுத்தின. இதே ஈச்சை மரத்தில் தான், அதன் கிளை நுனியைப் பிரித்துப் பிரித்து விளையாடினாள். ‘ஏய், என்னை ஃபைன் கட்ட வைக்கத் தான் இந்த வேலை செய்ற ‘ என்று கார்த்திக் சொன்ன போது, ‘இல்லங்க ஈஞ்சு கிழிக்கிறேன், இதப் பிரிச்சு விட்டாத் தான் உயரமா வளரும் ‘ என்றாள். ‘ போலிஸ் வந்தா நம்மள கிழிச்சுருவாங்க, கை துறு துறுன்னதுனா, என்னை எதாவது செய், அங்க, இங்க, எதுவும் செய்யாம, பேசாம, வா ‘ என்று இழுத்துக் கொண்டு நடந்திருக்கிறான்.

‘இப்ப யார் வந்து இருவரையும் பிரித்து வைத்தது ? அவளாய்த் தான் ஊரில் போய்ப் பிரசவம் பார்த்துக்கிறேன்னு போனா. இங்கே பார்த்துக்லாம்னு தான் நான் சொன்னேன். அம்மா வீட்டில் பார்த்தா தான் பயமில்லாம இருக்கும்னு சொல்லச் சொல்லக் கேக்காம போனா, இப்ப என்னால் முடியாத சூழலில், வா, வான்னா நா என்ன செய்வேன். படட்டும் கழுதை ! வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணி, வர முடியாது, வந்தா வேலை போயிரும்னு சொல்லிர வேண்டியது தான். அழுதா அழுகட்டும், நா என்ன செய்றது ! ‘, இயலாமையில் கோபம் வந்தது கார்த்திக்கிற்கு.

இந்தப் பூக்கடையில் தான் பூக்கள் வாங்கி வந்து வீடெல்லாம் பூச்சாடியாய் வைத்திருப்பாள். அவள் இருந்தால், வீடே சிரித்துக் கொண்டே தான் இருக்கும், பூக்களாலும் பூப்போன்ற அவள் முகத்தாலும்.

பூட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த போது வீடே காய்ந்து சருகாய் இருப்பது போல் தெரிந்தது. ‘ ச்ச! பாவம் உமா. இங்க இருந்திருந்தா புள்ளத்தாச்சிப் பொண்ண வச்சிக்கிட்டு நான் ஒருத்தனா என்ன செஞ்சிருக்க முடியும் ? நான் பாட்டுக்கு ராத்திரி பகலா, வேலை பார்த்துட்டு, அர்த்த ராத்திரில வந்து வீட்டுக் காலிங் பெல்ல அடிப்பேன், அவளையும் படுத்திக் கிட்டு. இங்க பிரசவம் பார்த்திருந்தா, நிச்சயம் நாலாயிரம் வெள்ளிக்கு மேல் வந்திருக்கும் வேற. சமாளிக்க முடியுமா ? எல்லாத்தையும் யோசிச்சுத் தானே, அவ அங்க கிளம்பிப் போனா ? அவளுக்கு மட்டும் என்னைப் பிரிஞ்சு இருக்க சையா என்ன ? னா, பாவம், ஜேம்ஸ் சொன்னது போல் கடைசி நிமிஷத்துல சொல்லாம, இன்னிக்கு எப்டியாவது சொல்லிரனும். ‘

ஃபோன் அடித்தான். உமா தான் எடுத்து, கலவரக் குரலில் ஹலோ சொன்னாள்.

‘ இன்னிக்கு டாக்டர் கிட்ட செக்கப்புக்குப் போயிட்டு வந்தேங்க. ‘

‘ ம், என்ன சொன்னார் ? ‘

‘ எதோ பிரச்சனையா இருக்காம். நார்மல் டெலிவரி கஷ்டம் தானாம். சிசேரியன் பண்ற மாதிரி தான் இருக்கும்னு சொல்றாங்க ‘ குரல் அடைத்துப் பிசிறியது.

கார்த்திக்குக்கும் நெஞ்சு அடைத்தது, ‘ அப்டி எல்லாம் காது, எல்லாம் நல்ல படியா நடக்கும். தைரியமா இரு. நான் இங்க முருகனுக்கு வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக்குறேன். ‘

‘ ஒரு மாசம் நீங்க பக்கத்துல இருந்திங்கனா, கணவரோட சேர்ந்திருந்தா, ஈஸியா இருக்குமாம் டெலிவரி. ‘

‘ டாக்டர் சொன்னாங்களா ? ‘

‘ மாங்க, என்னிக்கு வரிங்க, டிக்கெட் புக் பண்ணிட்டிங்களா ? ‘

என்ன சொல்வது ‘ இல்ல, அது … ‘ தடுமாறினான்.

‘ இல்லையா ? ‘ அவசரமாய் அதிர்ந்து கேட்டாள். அதிலேயே வர முடியாதுனு சொல்லி விடுவானோ என்ற பயம் தெரிந்தது.

‘ இன்னும் இல்லனு சொன்னேன். பண்ணினதும் சொல்றேன் ‘ சமாளித்துப் பேசி, உளறி, முடித்தான்.

இன்றும் சொல்ல முடியவில்லை என்பதை விட, அவள் சொன்ன விஷயம், ரொம்ப கலக்கமுறச் செய்தது. சோபாவில் படுத்தபடியேத் தூங்கிப் போனான்.

காலையில் எழுந்த போது தான் தொலைக்காட்சியை நிறுத்தாமலே தூங்கிப் போனது தெரிந்தது. நிறுத்தி விட்டு, வானொலியைப் போட்டு விட்டுக் குளிக்கப் போனான். கிளம்பிக் கொண்டிருந்த போது, வானொலியில் அறிவிப்பாளர் எறும்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு எறும்பு தன்னை விட 50 மடங்கு எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லுமாம்.

‘அடேயப்பா! சின்னத் துளியூண்டு பிக்ஸல் போன்ற எறும்பு கூடத் தன் குடும்பத்துக்காகவும், எதிர் காலத்துக்காகவும், எவ்வளவு சுமை தூக்கி, எப்படி உழைக்கிறது ? அது என்னிக்காவது, நான் இவ்ளோ கஷ்டப்படுறனேன்னு புலம்பிருக்கா, இல்ல, என் உழைப்பை இன்னொருத்தன் திருடிட்டானே, அவன் எனக்குத் துரோகம் பண்ணிட்டானேனு எரிச்சல் பட்டிருக்கா, அதுபாட்டுக்கு, கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற மாதிரி போய்க்கிட்டிருக்கு ‘

வெளியே வந்தான். மழை வரும் போல் வானம் மூடிக் கிடந்தது.

‘மனுஷனுக்கு மட்டும் தான், தனக்கு மட்டுமே வெயில் சுடுவதாய், பனி குளிர்வதாய், தன்னிரக்கம் எல்லாம்! இனி, சும்மா வருத்தப் பட்டு, புலம்பி, இதெல்லாம் செய்யக் கூடாது. ‘ நினைத்துக் கொண்டு, மனதில் உறுதி வேண்டும்னு வாய் பாடிக்கிட்டாலும், மனசு மட்டும், வானத்தைப் போல் மூடிக் கிடந்தது.

அலுவலகம் வந்த போது, ஹரியின் வெளி நாட்டுப் பயணத்திற்கான யத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. இருக்கையில் அமர்ந்த போது, ஹரி நிமிர்ந்து பார்த்து, அலட்சியமாய்ச் சிரித்தான். உன் நேரம் என நினைத்துக் கொண்டு, கணினிக்குள் தலை புதைத்தான் கார்த்திக். ‘நீயே போய்க் கொள், எனக்கு என் மனைவியைப் பார்க்கப் போக முடிந்தாலே போதும் ‘ என நினைத்துக் கொண்டான்.

கணினிக் கருவிகள் நிறுவ வேண்டிய மொத்த மருத்துவமனைகளின் விவரங்களைக் குறித்துக் கொண்டு, அவற்றிற்கான கருவிகளையும், கருவிகளுக்கான மென் பொருளை சிடிக்களில் அச்சுக்கள் எடுத்தான். எப்படியும் அடுத்த வாரத்தில் வேலை தொடங்கி விட வேண்டும்.

முதலாளி கார்த்திக், ஹரி இருவரையும் உள்ளே கூப்பிட்டார். மீசை மூடாத மெல்லிய உதடுகளை ஈரப் படுத்திக் கொண்டு உட்காரச் சொன்னார். கார்த்திக் எல்லாம் தயாராக வைத்திருந்தான். ஹரி தான் இன்னும் அரை குறையாய் இருந்தான். பன்னாட்டுக் கருத்தரங்கில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து கலந்து பேசினார்கள். கார்த்திக் தான் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து இருந்தான். ஹரியின் முகம் கொஞ்சம் இருண்டு தான் போனது.

முதலாளி உடனே, கார்த்திக்கிடம் ‘இந்த விஷயங்கள் அத்தனையும் பவர் பாயின்ட்டில் போட்டு, அழகாக ஒரு ப்ரெசென்டேஷன் ஷோ தயார் செய்து விடு. நீ சொல்வது எளிமையாய், எலிகன்டா இருக்கு ‘ என்றார் சிங்லிஷில்.

கார்த்திக்கிற்குப் பெருமையில் முகத்தில் லைட் எரிந்தது.

ஹரியிடம் திரும்பினார் முதலாளி ‘ஒரு வாரம் தான் இருக்கிறது. அதற்குள் கார்த்திக்கிடம் இருந்து எல்லாத்தையும் நல்லா கத்துக்கோ. செய்முறை இயக்கம் எல்லாம் கவனமாக் கத்துக்கோ ‘ என்றார்.

கார்த்திக்கிடம் மீண்டும் திரும்பி, ‘எல்லாத்தையும் புரியுற மாதிரி நல்லா கத்துக் குடுக்க உனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். அப்டியே, ப்ரெசென்டேஷன் ஷோ வேலைகளையும், முடிச்சதும், ஹரிக்கு செய்து காட்டி, ஃப்ளாப்பி டிஸ்க்கில் போட்டுக் குடுத்துரு ‘ என்றார்.

சடக்கென மனசு சுருங்கியதை முகத்தில் காட்டிக் கொள்ள வில்லை, கார்த்திக். எறும்பு, எறும்பு என சொல்லிக் கொண்டான். எப்படியோ, முதலாளி நம்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்துத்தானே சொல்லிருக்கார். அடுத்தவரைப் பற்றி நாம் ஏன் யோசிக்கனும். முதலில் நாம் பரந்த மனப்பான்மையுடன் இருப்போம். னால், இந்தச் சூழலில், விடுப்பு தான் கேட்கவே முடியாது. நம்பிக்கையே சிதைந்து விடும்.

ரம்பத்தில் போலவே ஹரிக்கு, அ முதல் ஃ வரை அத்தனையும், தெளிவாய்ச் சொல்லிக் கொடுத்தான். எனக்கே தெரியும், இருந்தாலும் சொல்லு என்பது போல் ஹரி கேட்டுக் கொண்டான். நீ எப்டி வேணா இருந்து விட்டுப் போ. எறும்பு போல் நான் என் கடமையைச் செய்றேன் என நினைத்துக் கொண்டு கார்த்திக் சொல்லித் தந்தான்.

ஒரு வாரம் இயந்திரத்தனமாய் நகர்ந்தது. உமாவுக்குத் தொலைபேசினால் என்ன சொல்வது என்று தெரியாமலே, எண்ணை ஒற்றி ஓற்றிவிட்டுப் பேசாமலே வைத்து விடுவான்.

முதலாளி கார்த்திக்கை உள்ளே வரச்சொல்லி இன்டர்காமில் கூப்பிட்டார். நெற்றி சுருக்கி, ங்கிலத்தில் சொன்னார்

‘போன வருஷம் இந்த நேரம் பரவிய உயிர்க்கொல்லி நோய் பரிணமித்து இன்னும் வீரியமாய்ப் பரவக்கூடிய அறிகுறிகள் தென்படுவதால், இந்த வருஷம் அது வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்துவைப்பதாலும், பன்னாட்டு மருத்துவ அறிஞர்களை அழைத்து ய்வுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்வதற்காகவும் இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாம் மும்முரமாய் இருக்கின்றன. எனவே நம் கணினிக் கருவிகளை மருத்துவமனைகளில் நிறுவும் வேலையை ஒரு மாதம் ஒத்தி வைக்கச் சொல்லியிருக்கிறது அரசாங்கம்… விடுமுறை கேட்டிருந்தாயே நீ, இந்தியா சென்று வர. ஒரு மாத விடுப்பில் வேண்டுமானால் போய் வா ‘ என்றார்.

பேச வார்த்தை வரவில்லை.

‘ அந்தக் கருத்தரங்கம்… ‘ என இழுத்தான்.

‘ அது சில அரசியல் மாற்றங்களால் ரத்தாகி விட்டது. ஹரிகிட்ட சொல்லிட்டேன் போக வேண்டியதில்லனு. அந்தக் கருத்தரங்க அடுத்த மாசம் இங்க நம்ம நாட்டிலேயே வைக்கப் போறதாக் கூடப் பேச்சு நடக்குது. பார்க்கலாம். நீ ஊருக்குப் போய் வந்தபின் அது பற்றிப் பேசுவோம். ‘

நடந்து, இல்லை, பறந்து வந்தான் வீட்டுக்கு. எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என ஜேம்ஸ் அடிக்கடி சொல்வது நினைவு வந்தது.

‘தீக்குள் விரலை வைத்தால், … நிஜமாவே,

நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா ‘

என எஸ்.எம்.எஸ் அனுப்பினான் ஜேம்ஸ்க்கு.

‘ என்னடா ? ‘ உடனே தொலைபேசினான் ஜேம்ஸ்.

‘ ரெண்டு நாள்ல ஊருக்குக் கிளம்பனும். டிக்கெட் எடுக்கனும், உடனே வா”

“ வாவ், எப்டிடா ?”

“ உடனே கிளம்பி வா சொல்றேன். ‘

‘ நானும் உன் கிட்ட ஒண்ணு சொல்லனும். ‘

‘ அம்மா உன் காதலை ஏத்துக்கிட்டாங்க, சரியா ? ‘

‘ டேய், எப்டிடா தெரியும் ? ‘

‘ ம், சேனல் நியூஸ் ஏஷியால இப்பத் தான் சொன்னாங்க ‘

கார்த்திக் போய் ஜேம்ஸின் அம்மாவிடம் பேசியது ஜேம்ஸ்க்குத் தெரியாது.

‘ என்ன ஜோக்கா ? சரி, இரு வரேன் ‘ என்றான் ஜேம்ஸ்.

சோபாவில் குதுக்கென அமர, அது குதித்தது அவன் மனசைப் போல்.

அன்று கழற்றி எறிந்த நாள்காட்டி மேஜையில் கிடந்தது. ‘எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது ‘ என வாய் விட்டு வாசித்து, அதில் முத்தமிட்டு சுவரில் மாட்டினான்.

***

sreeeiii@poetic.com

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ

தீக்குள் விரலை வைத்தால்….

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

மணவழகன் ஆறுமுகம்


ஆயிரம் கொலுசுகள்
அபிநயம் புரிந்தாலும்,
அரை நொடியில் அறிந்திடுவேன்…
குறைதீர்க்கும் உன் கொலுசின் ஓசைதனை!

உலகத்தார் வளையெல்லாம்
ஒன்றாக ஒலித்தாலும்,
உள்ளத்தால் உணர்ந்திடுவேன்
உன் வளையல் பாசைதனை!

மல்லிகை மலர் தொடுத்து – நீ
மங்கையரோடு சென்றாலும்
மனம்தனிலே அறிந்திடுவேன்…
‘நலம் ‘ கேட்கும் உன் நடையை!

கண் அசைவிலே உயிர் வாழும்
என்ஆசைதனைக் கேட்பாயா!
உடல் மட்டும் காதலல்ல
உயிரிலும் உள்ளததை -நீ
உணராமல் போவாயா!

ஒரு முறை பறிக்கச்சொல்லி – நீ
வரும் வழியில் தவமிருக்கும் – என்
பார்வையதை – உன்
பார்வையால் பறிப்பாயா ?

பாதங்களின் படுதலுக்காய் – உன்
பாதைகளில் காத்திருக்கும் ‘ஏதோவொன்று ‘
‘என் இதயம் ‘ என்பதை – நீ
இன்றாவது அறிவாயா ?

என்,
உயிர் உதிர்ந்து போகுமுன்னே
ஒற்றைச் சொல்லை
ஒருமுறை உதிர்ப்பாயா…

‘உனக்கும் கூட என்னைப் பிடிக்கும் என்று ‘

***********
a_manavazhahan@hotmail.com

Series Navigation

மணவழகன் ஆறுமுகம்

மணவழகன் ஆறுமுகம்