கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ஏலங்குழலி


அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை ரசிப்பதற்காகவே அங்கு அமர்ந்திருந்தாள் என்பது யாருக்கு தெரிந்திருக்கும்.

அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் கவலை படிந்திருந்தது. கண்களில் தெரிந்த ஏக்கத்திற்குக் காரணமான சம்பவம் சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்; அவளது ரோஜாப்பூ முகத்திலோ, இளமையின் செழிப்பில் அழகாக வளைந்த உதட்டிலோ துக்கத்தின் சாயல் இன்னமும் படிந்திருக்கவில்லை.

அவள் அமர்ந்திருந்த பெஞ்சை ஒட்டிச்சென்ற பாதை வழியாக, இளைஞன் ஒருவன் நடந்து வந்தான். நல்ல உயரம். அவனது கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, ஒரு சிறுவன் ஓட்டிக்கொண்டு வந்தான். பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்ததும், இளைஞனின் முகம் சிவந்தது; உடனேயே வெளிறியது. அவளது முகத்தை வலுடன் பார்த்தவாறு, பெஞ்சை நெருங்கினான். மிகக்கிட்டத்தில் அவளைக் கடந்து சென்ற போதிலும், அவனது வருகையை உணர்ந்ததற்கான அறிகுறி எதுவும் அவளது முகத்தில் புலப்படவில்லை.

அவளைக் கடந்து சற்று தூரம் சென்றவுடன், சட்டென்று அருகில் இருந்த பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தான். சிறுவன், தன் கையிலிருந்த பெட்டியைத் தரையில் வைத்துவிட்டு ர்வத்துடன் இளைஞனைப் பார்த்தான். இளைஞன், பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். களையான இளைஞன்; உயர்தரமான கர்ச்சீஃப். சிறுவனிடம் பேசினான்:

“நான் கொடுக்கும் செய்தியை, அங்கே பெஞ்சில் உட்கார்ந்திருகும் இளம்பெண்ணிடம் தரவேண்டும். கேட்டுக்கொள்: நான் இப்போது ‘ஸான் ஃப்ரான்ஸிச்கோ’ விற்குப் பயணிப்பதற்காக, ரயில் நிலையத்திற்கு செல்கிறேன். இன்னும் சில நாட்களில் வர இருக்கும் அலாஸ்கா வேட்டையில் கலந்துகொள்ளப் போகிறேன். ‘தன்னைப் பார்க்கக்கூடது; பேசவும் கூடாது’ என்று அவள் எனக்குக் கட்டளை இட்டிருப்பதால், அவளது மனசாட்சியிடம் முறையிடுவதற்கு இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல். ஒரு விஷயத்திற்கான காரண காரியங்களை சரிவர ராயாமல், மனம் போன போக்கில், மற்றவரைக் காயப்படுத்துவது அவளது குண விசேஷங்களில் ஒன்றல்ல என்பதையும் நான் அறிந்திருப்பதாகச் சொல். இந்த ஒரு விஷயத்தில் மட்டும், தர்மத்தையும், நியாயத்தையும் அவளுக்கு உணர்த்துவதற்காக, அவளது கட்டளையை நான் மீற வேண்டியிர்ருகிறது என்பதையும் சொல். போ. “

இளைஞன் சிறுவனின் கையில் அரை டாலரைத் திணித்தான். அழுக்குப் படிந்த்திருந்த முகத்தில் கண்கள் பளிச்சென்று ஒளிர, சிறுவன் அவனை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான். உடனேயே பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் ஓட்டமாக ஓடிப்போய் நின்றான். சற்று தயக்கத்துடன்தான் அவளை நெருங்கினான் என்றாலும், அவனது பார்வையில் பயம் இல்லை. தலையில் அணிந்திருந்த கிழிந்த தொப்பியை ‘சலாம்’ வைக்கும் விதமாக ஒரு முறை தொட்டான். அவள் அருவருப்போ, ர்வமோ இல்லாத பார்வை ஒன்றை அவன் மீது வீசினாள்.

“யம்மா,” என்றான். “அந்தா கீறாரே ளு, உன்னாண்ட இன்னாமோ சவுண்டு உடணுமாம். உனுக்கு அந்தாளை தெர்யாதுன்னு வைய்யி, என்னாண்ட சொல்லு, நம்ம செக்கூருட்டியை இளுத்துக்கினு வர்றேன். உனுக்கு அவுரைத் தெர்யும்னா, அவுரு என்னாண்ட சொன்னதை உனுக்கு சொல்லிவுடறேன். ரைட்டா ?“

அவள் மெல்லிய ச்சர்யத்துடன் அவனைப் ஏறிட்டாள்.

“ செளண்ட் ?” அவள் குரலின் இனிமையில் லேசான ஏளனம் தெறித்தது. “தொழில் மாறிவிட்டார் போலிருக்கிறது. புதுமையான விஷயம்தான். அவரை எனக்குத் தெரியும்; அதனால் நீ யாரையும் துணைக்கு அழைத்து வரத்தேவையில்லை. என்ன சொல்லவேண்டுமோ, அதைச் சீக்கிரம் சொல்லிவிடு. பார்க்குக்கு வந்து செல்லும் எல்லோரது கவனத்தையும் கவர்வதில் எனக்கு விருப்பமில்லை.“

“அது இன்னாவோ, “ பயன் சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டான். “நா சொல்லுறதைக் கேட்டுக்க. அலாஸ்காவோ, இன்னாவோ ஊராம்; அங்கன எல்லாத்தையும் சுட்டுகினு அலையப்போறாங்களாம். அதுக்காக இப்பமே ரயிலு புடிக்கப் போறாராம். ‘என்னையப் பாக்கக் கூடாது, என்னாண்ட ரவுசு பண்ணக்கூடாது’ என்னு சொல்டியாம். அவரு பக்கம் என்ன நெசம்னு தெர்யாம நீயி ராங் பண்ணிட்டியாம், அதான், உன்னாண்ட எடுத்து சொல்ல சொன்னாரு. ‘ஒரே ஒரு தபா பேஸ்ட்டு போயிர்றேன்’ னு சொல்ல சொன்னாரு. “

இளைஞன் கையாண்ட வழியில் லயித்துத்தானோ, அல்லது பையன் பிரச்சனையை எடுத்துச் சொன்ன நூதன வழி அவளுக்குப் பிடித்துப் போனதினால்தானோ என்னமோ, அவள் அந்தப் பொடியனை அங்கிருந்து விலகச் சொல்லவில்லை. அவள் கண்களில் எழும்பிய ர்வம் மறையவுமில்லை. பார்க்கில் ஒரு மூலையிலிருந்து நசுங்கிப் போன பதுமை ஒன்றைப் பார்த்தபடி, அவனிடம் பேசினாள்:

“என்னைப் பற்றியும், என உள்ளத்தில் நான் சுமந்திருக்கும் கொள்கைகளைப் பற்றியும் அவருக்கு நன்கு தெரியும் என்பதைச் சொல், அவரிடம். நான் யாருக்காகவும், எப்போதும் அவற்றை மாற்றிக்கொண்டதில்லை என்பதைச் சொல். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, விசுவாசமும், நாணயமும் எனக்கு முக்கியம். நான் என் மனதை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்; அதன் சலனங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்பதையும் சொல். யாரோ சொன்னார்கள் என்பதற்காகவோ, சரியான விதத்தில் ராயமலோ ஒரு முடிவுக்கு வருமளவுக்கு நான் முட்டாளல்ல. ‘விஷயத்தைத் தெரிந்துகொண்டே தீருவேன்’ என்று அவர் பிடிவாதமாக இருப்பதால், இதோ, நானும் சொல்கிறேன்.”

“அம்மா கேட்டபடி, ரோஜாப்பூவைப் பறித்துக்கொடுப்பதற்காக நான் அன்று அந்தி வேலையில் தோட்டத்திற்கு வந்த பொழுது, அவரையும், மிஸ் ஷ்பர்ட்டனையும் பூச்செடிகளூக்கிடையில் பார்த்ததாகச் சொல். காட்சி என்னவோ மிக அழகாகத்தான் இருந்தது; நான் தான் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. அவர்கள் இருந்த நிலை, எல்லாவற்றையும், எந்த சந்தேகமும் இன்றி எனக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. பூக்களையும் எனது கொள்கைகளையும் தோட்டத்திலேயே விட்டுவிட்டு, நான் விலகிவிட்டேன். இதைப் போய் அவரிடம் சொல்.”

“’வந்து…ங்…’நெலை’யின்னா இன்னா ?”

“காதலர் நெருங்கி நின்ற என்று அர்த்தம்.”

பையனின் காலடியில் சரளைக் கற்கள் பறந்தன. அடுத்த பெஞ்சின் அருகில் போய் நின்றான். இளைஞனின் கண்கள் அவனைச் சாப்பிட்டு விடுவது போல் பார்த்தன. பையனின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

“அந்தம்மா பூவு பறிச்சுக்குனு போவ தோட்டத்துக்குள்ளாற வந்தப்ப, நீயும் இன்னொரு ஃபிகரும் கைகோர்த்துக்கினு ‘சீன்’ காட்டிக்கினு இருந்தீங்களாம். ‘சோ’வெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சாம்; அவங்களுக்குத்தான் ‘சீனு’ புடிக்கலியாம். அதான், உங்களை ரயிலு பிடிக்கப் போகச் சொல்லுறாங்க.”

இளைஞன் மெல்லச் சீட்டியடித்தான். அவனது கண்களில் மின்வெட்டு ஒன்று பாய்ந்து மறைந்தது. சட்டென்று பாக்கெட்டிற்குள் கைவிட்டு, சில கடிதங்களை வெளியே எடுத்தான். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இன்னொரு வெள்ளி நாணயத்துடன் பையனின் கைகளில் திணித்தான்.

“இதை அவளிடம் கொடு. இந்தக் கடித்தைப் படிக்கச் சொல். இதைப் படித்தால், எல்லாம் தெள்ளத்தெளிவாகிவிடும் என்பதை விளக்கு. அவள் தன் நெஞ்சத்தில் சுமந்திருக்கும் கொள்கைகளோடு, சிறிது நம்பிக்கையையும் வைத்திருந்தால், இத்தனை நாள் பட்ட வேதனையைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல். அவள் மதித்துப் போற்றும் விசுவாசமும் நாணயமும் என்றும் மாறியதில்லை என்பதைச் சொல். அவள் பதிலுக்கு நான் காத்திருக்கிறேன் என்று சொல்.”

பையன் அவள் முன் நின்றான்.

“யம்மா, அவுரு ‘சீன்’ ஒன்னியும் காட்லியாம். நீத்தான் தப்பாப் புர்ஞ்சுக்கினியாம். இந்த ‘லட்டரப் பட்ச்சுப்பாக்க சொல்லு; அல்லாம் புர்யும்’ங்குறாரு. பட்ச்சுப் பாரும்மா; அந்தாளு நல்லவர்த்தான்னு எனக்குத் தோணுது.”

அந்தப் பெண் கடிதத்தைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, பிரித்துப் படித்தாள்.

“அன்புள்ள டாக்டர் ர்னால்ட்,

என் பெண்ணிற்கு நீங்கள் அளித்த பேருதவிக்கு மிக மிக நன்றி. மார்பு வலி ஏற்பட்டு, திருமதி வால்ட்ரனின் தோட்டத்தில் நடந்த பார்ட்டியில் அவள் நிலைதடுமாறி விழுந்த போது, அருகில் இருந்து அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நீங்கள் முதலுதவி அளித்திருக்காவிட்டால், நாங்கள் அவளை இழந்தேயிருப்போம். நீங்கள்தான் பெரிய மனது வைத்து, அவளது கேஸை எடுத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட் செய்யவேண்டும்.

இவண்,

ராபர்ட் ஷ்பர்ட்டன். “

அவள் கடித்தை இரண்டாக மடித்து, பையனிடம் நீட்டினாள்.

“இன்னாமா சொல்ற நீயி ?” என்றான் அவன்.

அவளது முகம் சட்டென்று மலர்ந்தது. கண்களில் ஈரம் மின்னியது.

“அந்தாள் கிட்ட போயி…“ என்றாள் தழுதழுத்த குரலில், “அவன் லவ்வர் அவனைப் பாக்க விரும்புறா’ ன்னு சொல்லு.”

***

elankhuzhali@yahoo.com

Series Navigation

ஏலங்குழலி

ஏலங்குழலி