நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11

This entry is part of 61 in the series 20040318_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


The fundamental identity of all Souls with the Universal Over-Soul,

the latter being itself an aspect of the Unknown Root ;

and the obligatory pilgrimage for every Soul –

a spark of the former-through the Cycle of Incarnation

in accordance with Cyclic and Karmic law. ‘

-Helena Blavatsky

இருபதாம் நூற்றாண்டு….

‘பிறந்த மண்வேறு, பேசிய மொழிவேறு, அறிந்த மதம்வேறு, அணைத்த சொந்தம் வேறு. என் கடந்தகாலம் ஒருபொய், ஒருமாயை, கறந்த பால் முலைக்கேறாது. நான் திரும்பப்போவதில்லை. அவன் நானல்ல. அவன் வேறு வேறு….வேறு வேறு. நான் மட்டுமே நிஜம். என்னுடைய நிகழ்காலம் நிஜம். இந்த மண்ணும், காற்றும், ஆகாயமும், நீரும், தீயும் நிஜம். இந்த மக்கள் நிஜம்- இவர்களின் சிரிப்பு நிஜம் – அழுகை நிஜம், இவர்களின் உறவும் நிஜம், பகையும் நிஜம் நிஜம் நிஜம்…. ‘

‘சலுய் (நட்பு முறையிலான வணக்கம்) பெர்னார்! ச வா (எப்படி இருக்கிறாய்) ? ‘

எழுதிக்கொண்டிருந்தவனின் கவனத்பை¢ பழகியகுரல் திருப்ப, குறிப்பேட்டினை மூடிவைத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்தான். எதிரே வேலு.

‘சலுய்.. உட்கார்.. ‘ அருகிலிருந்த பிரம்பு இருக்கையைக் காட்டினான்.

பெர்னாரும் வேலுவும் அமர்ந்திருந்தது, புதுச்சேரி நேருவீதியிலிருக்கும், ஒரு காப்பி பார். வேலையுள்ள, வேலையற்ற மனிதர்கள் ஆளுக்கொரு காப்பிக்கு ஆர்டர் செய்துவிட்டு, மேசையில் மொய்க்கும் ஈக்கள் வாய்க்குள் நுழைவதைச் சாமர்த்தியமாகத் தவிர்த்துக்கொண்டு கதைக்குமிடம். சிலருக்கு தூங்கியெழுந்து இடைக்கிடை தயிர்வடை சாப்பிடவும், கிராமத்துப் புதுஜோடிகள் ஜவுளியெடுத்த களைப்புக்கு, லெமன் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டுச் சுவற்ைறையும், வெள்ளையர்களையும் வேடிக்கைபார்த்த நேரங்கள்போக பிற்பகல்

காட்சிக்கானத் திரைப்படத்தைத் தீர்மானிக்கவும் உதவும். சில வேளைகளில் வேலைவிண்ணப்பத்தையும் போஸ்ட்டல் ஆர்டரையும் தபாலில் அனுப்பிவிட்டு, பழகிய இடத்தில் தேடியுட்கார்ந்து ‘ஒரு காப்பி மட்டும் ‘ எனச் சர்வர்களிடம் முணுமுணுக்கும் நாற்பது வயது இளைஞனுக்கு செளகரியமான மரத்தடி.

‘என்னவோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாயே ? இந்தச் சந்தை இரைச்சலில்கூட எழுதமுடியுமா என்ன ? ‘

‘எங்கேயும் எதையும் செய்யலாம் மனம் விரும்பினா. என்ன எழுதறங்கிறதை, எப்படிச் சொல்ல ? ஏதோ மனதிற் தோன்றுவதை அப்போதைக்கப்போது எழுதிவைக்கிறேன். உன் வருகையால் அந்தப் மனப்பிரமைகளிலிருந்து இப்போதைக்குத் தற்காலிக விடுதலை. சரி..சரி..எனக்குத் தெரிந்து நேரத்தை ஒழுங்குடன் கடைப்பிடிக்கும் இந்தியர்களில் நீயும் ஒருவனாயிற்றே ? இன்றைக்கு என்னவாச்சு ? ஏன் இவ்வளவு தாமதம் ? ‘

‘இந்தியாவில் ஏழையாகவும், சுரணையுள்ளவனாகவும் இருப்பதுதான் பிரச்சினை. ‘

‘சுரணையுள்ளவனுக்கு எந்த நாட்டிலும் பிரச்சினைதான். அதுக்காக என்ன செய்யப்போற ?. ஆட்களை சேர்க்கப்போறியா ? கோஷம்போடப் போறியா ? அப்படி வருகின்ற கூட்டத்திற்கு நம்பகத்தன்மையுள்ள தலைமையைக் கொடுக்கக்கூடிய சாத்தியங்களுண்டா ? உலகின் எல்லா இஸங்களிலும் வர்க்கபேதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வயிற்றைமட்டுமே வாழ்க்கையாகக்கொண்டவன் சுலபமா ஏமாற்றப்படுகிறான். இன்றைக்கு உன்பின்னாலே வருபவன், நாைளைக்கு அவன்பின்னாலே போவான். அவன்மேல குற்றம் சொல்வதற்கில்லை. அவன் நாட்கள் பசியோடு விடிகின்றன. அதற்காக மட்டுமே வாழவேண்டியிருக்கிறது. ஆக முதலிலே அவர்களுடைய சோற்றுக்கு உத்தரவாதந்தரணும். வயிறுகள் நிரப்பப்பட்டச் சூட்டோடு, அவர்களது மூளைகளும் நிரப்பப்படணும். அதுவரை இவர்களுக்கு எத்தனை யுகங்களானாலும் விமோசனங்களில்லை. ‘

வந்து நின்ற காப்பிபார் ஆளிடம் இரண்டு காப்பி கொண்டுவருமாறு பெர்னார் பணிக்கக் காத்திருந்த வேலு வெடித்தான்,

‘அப்போ காலங்காலமா இந்தமண்ணுல எங்களைப் போன்றவர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறதை வேடிக்கைபார்க்கச் சொல்லறீங்க ‘.

‘மோன் ஷெர் அமி! ( எனதருமை நண்பனே!). உன்னால இரண்டுபேரோட வயிற்றுக்குச் சோறுபோடவும், அவர்களோட மூளைக்குத் தெளிவான சிந்தனையும் கொடுக்கமுடியுமென்றால் முதலில் அதைச்செய். அதைவிடுத்து, அவர்களை லாரியில் ஏற்றிவந்து உணவுப்பொட்டலங்கொடுத்து முதல்நாள் கூச்சல் போடவும், அடுத்தநாள் அடங்கிப்போகவும் பழகிய ஜென்மங்களாக அவர்களை மாற்றிவிடாதேன்னு சொல்ல வந்தேன். ‘

காப்பியை சர்வர் கொண்டுவந்து மேசையில் வைக்க, இருவரும் பருக ஆரம்பித்தனர்.

‘பெர்னார்… அவசரமாக என்னை வரச்சொன்னதன் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா ? ‘

‘வேலு.. மறுபிறப்பைப்பற்றி உன்னுடைய அபிப்ராயமென்ன ? ‘

‘அதெல்லாம் மதவாதிகளின் கட்டுக்கதைகள். எங்களைப் போன்றவர்களுக்கு இந்தப் பிறப்புபற்றிய கவலைகளே நிறைய இருக்கும்போது, எங்கே மறுபிறப்பைப்பற்றி நினைக்கிறது. ‘

‘இன்றைய கிறித்துவத்தைப் பொறுத்தவரையில உயிருக்கு மறுபிறப்பெல்லாம் கிடையாது. அப்படிச் சொல்பவர்களெல்லாம் மாந்திரீகவாதிகள். இறந்தபிறகு சொர்க்கமோ நரகமோ ஏதோவொன்றில் உயிர் முடிஞ்சிடும். ஆனா உங்களோட வேதங்கள் நம்புது. ஒர் உயிரின் நல்வினை

தீவினைகளுக்குத் தக்கவாறு மறுபிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தி, மக்களின் இன்ப துன்ப வாழ்வுக்குக் காரணம் அதுவேன்னு சொல்லுது. ‘

‘வேண்டாம் பெர்னார். எனக்கு நம்பிக்கையில்லை. இதுபோன்ற கதைகள், எங்களைப் போன்றவர்களைக் காலங்காலமாய் ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுவது. அதைப்பற்றிப் பேசத் தொடங்கினா எனக்குக் கோபந்தான் வரும். விட்டுடு.. இப்போ திடாரென மறுபிறப்பு கொள்கைமேல எதனால் இவ்வளவு அக்கறை ? நீகாணும் கனவுகள் காரணமென்றால், அதற்கான விடைகள் அறிவியலில் இல்லையா ?அவற்றிற்கு விஞ்ஞானபூர்வ காரணங்களிருக்குமென தோணலியா ? ‘

‘கனவுகள் குறித்து விவாதங்கள் தொடருது. சொல்லப்போனால் விஞ்ஞானங்களில், இன்றைய தேதிகளில் முடிவான பதில்களில்லை. மூளைஇயல் வல்லுனர்கள் சோதனைச் சாலைகளில் வயர்களை வைத்துக்கொண்டு கனவுகளுக்கான காரணங்களை வெளியிலிருந்து தேடுகின்றார்கள். உளவியல் நிபுணர்களோ, கனவுகண்டவனிடம் எஞ்சியிருக்கின்ற தகவல்களடிப்படையில் அதனுள்ளேசென்று காரணம் தேடுகின்றார்கள். மூளைஇயல் நிபுணர்களுக்கு நம்முடைய உடலுறுப்புகளின் இயக்கத் தடங்கள் தேவைப்படுது. உளவியல் நிபுணர்களுக்கோ கனவுகாண்பவன் சொல்லுகின்ற கதைகள் தேவைப்படுது. ‘

‘…. ‘

‘விஞ்ஞானிகள் கனவுகளை, விழிப்புக்கும் தூக்கத்துக்குமிடையில் வைத்து ‘ஒழுங்கற்ற தூக்கம் (Le Sommeil paradoxal) ‘னு பேர் சொல்றாங்க. ஒவ்வொருஇரவும், மூளை குறிப்பிட்ட அளவு நேரத்தை அதற்காக ஒதுக்குதுண்ணு சொல்றாங்க. பிரான்சுல ஒருத்தர் மிஷல் ழூவே (Michel Jouvet)ன்னு பேரு, என்ன சொல்லறார்னா, ‘கனவுகள் ஒருமனிதனின் தனித்தன்மையை தக்கவைக்கும் அனுபவங்கிறார் ‘. அன்றக்கு டாக்டர் கோவிந்தராஜன் சொன்னதுபோல விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான் கனவுன்னு சத்தியம் செய்கிற ‘அனாதோல் ‘ (Anatole)போன்றவர்களும் உண்டு. அதற்கு எதிரிடையாக வாதிடுகின்ற தெ பேஃப் (De boeuf) போன்றவ்ர்களும் உண்டு. அப்புறம் ஃபிராய்டு, யுங்னு நிறைய பேரு. எல்லாமே யூகங்கள்தான். உருப்படியான பதில்களாக நான் நினைக்கவில்லை. உங்க ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வதைப்போல, ‘பிறப்புக்கும் இறப்புக்குமிடையிலே முடிந்தபோதெல்லாம் தனிமையைத் தேடி பழகிக்கப்போறேன் ‘. அந்தப்பாதையில் என் அறிவும், என் அனுபவங்களும், ஒழுங்கற்ற நினவுகளும் உடன்வராது. எனக்குள் பயணிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தனியே பயணிக்கவேண்டும். அப்படிப் பயணிக்க முடிந்தால் என்னுள்ளிருக்கும் அம்மனிதனையும் அவனது அனுபவங்களையும் அறியமுடியும். எனக்குநேரும் கனவுகள் பொய்யில்லை என்கின்ற என்னுடைய இன்னொரு மனதைச் சமாதானப்படுத்தமுடியும்.. உங்கள் மண்ணுக்கும் எனக்கும் பந்தமிருந்திருக்கிறது, இருக்கிறது. அதை அறியவேண்டும் ‘

‘இருக்கலாம்… இப்படி நினைத்து நினைத்துத்தான் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் எங்களை அடிமைபடுத்தினீர்கள்.. ‘

‘வேலு, நான் கொஞ்சம் சீரியஸா பேசறேன். ‘

‘நான் மட்டுமென்ன சிரித்துக்கொண்டா சொன்னேன் ‘

‘உனக்கெப்போதும் இந்த… என்ன சொல்வீர்கள் ? மறந்துவிட்டேன். என்ன சொல்வீர்கள் ? ‘

‘விதண்டாவாதம்.. ‘

‘ஆமாம் நீயொரு விதண்டாவாதி.. உண்மையில் நீ கேலிசெய்வதுபோன்று, இது என்னுடைய மண்தேடும் முயற்சியல்ல. மண்ணில் என் வேர்தேடும் முயற்சி. பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணம் தேடும் முயற்சி. என் அந்தராத்மாவின் பயணத் தடங்களை நான் பார்த்தாகணும். விஞ்ஞானத்தைவிட உங்கள் நாட்டு வேதங்களும் நம்பிக்கைகளும் தற்போதைக்கு, எனக்குதவ முடியும்னு நம்புகிறேன். ஏன் சில சமயங்களில் இந்த ஆவியிடம் பேசுதல், ஓலைச்சுவடி படித்தற்போன்ற வழிமுறைகளிற்கூட முயற்சி பண்னலாம்ணு தோணுது. டாக்டர் கோவிந்தராஜனின் அலட்சிய வார்த்தைகளைவிட, கடற்கரையில் பிரம்புடன் கை பார்த்து சொல்லுகிறேன் என்று நம்மை நெருங்கிய அப்பெண்ணின் அக்கறையான வார்த்தைகளில் என்தேடலுக்கான பதிலிருக்கிறது.

‘…. ‘

‘அவள் போகும்போது என்ன சொல்லிவிட்டுப் போனாள். அவள் பேசிய தமிழைக் கொஞ்சம் புரிந்துகொள்ள சிரமப்பட்டபோது, நீதானே விளக்கினாய். என்ன சொன்னாள் ? ‘தொரையைக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. முன் ஜென்மக் கன்னியால தொந்தரவு இருக்குது ‘ ன்னு சொன்னாளே ? எதற்காக அப்படிச் சொல்லணும் ? ‘

‘ சில சமயங்களில் நம்ம முகத்தைப் பார்த்து கெட்டிக்காரத்தனமாக எதையாவது தூண்டில் போடுவார்கள். வயிற்றுப்பிழைப்பாக எங்கள் நாட்டில் இதுபோன்ற நாடகங்கள் ஆடுவதைப் பார்த்து, எங்களுக்குப் பழகிபோச்சு. எனக்கதை வேறு மாதிரியா பொருள்கொள்ள தோணலை. ‘

‘இல்லை வேலு. நான் அப்படி நினைக்கலை. அவ்வார்த்தைகள் வயிற்றுப்பிழைப்பாகச் சொல்லப்பட்டதுண்ணு நீ நம்பறீயா ? எனக்கென்னவோ அவ்வார்த்தைகளில் உண்மையிருக்கணும். என் தேடுதலுக்கான திறப்புச் சொற்களாகத்தான், நானதனை நம்புகிறேன். ‘

‘இப்போ அதற்காக என்ன செய்யனும்ணு நினைக்கிற ? ‘

‘கொஞ்ச நாளைக்கு உன்னோட எதிர்வினைகளையொதுக்கிட்டு, என் பின்னால வரணும். என் தேடல்களுக்கு உன்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அதுக்கு முன்னால இந்தக் கடிதத்தைப் பாரு ‘

‘என்ன கடிதம் ? தமிழில இருக்கிறதே. கடிதமேகூடப் பழுத்துப்போய் இற்றுவிழும் நிலையில் இருக்கிறதே ? ‘

‘உண்மைதான்.. கொஞ்சம் கவனமாகப் பிரித்துப் படிக்கவேண்டும். அதிலென்ன இருக்கிறது ? யாரால் யாருக்கு ? எப்போது ஏன் ? என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் புரிந்துகொள்வாயென நினைக்கிறேன். பிறகொருமுறை கொடுக்கிறேன் நிதானமாகப்படி ‘ கடிதத்தை வேலுவிடமிருந்து வாங்கி மீண்டும் தன்னருகேயிருந்த முதுகுப்பையில் வைத்துக் கொண்டான்.

‘…. ‘

‘உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் ‘பெர்னார் ‘ என்பது எங்கள் குடும்பப்பெயர். என் தாத்தா பெர்னார் பிரிஸியாக், என் தந்தை பெர்னார் ஒடிக், எனக்குப் பெயர் பெர்னார் ஃபோந்த்தேன். இக்கடிதம் எங்க மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் பற்றியது. இக்கடிதத்தை எழுதியவரொரு புதுச்சேரிவாசி. பெயர் வேம்புலிநாய்க்கர். எழுதிய ஆண்டு 1943. புதுச்சேரி வண்ணாரத் தெருவிலிருந்து, கதவிலக்கம் 10ல் எழுதபட்டிருக்கிறது. கடிதமெழுதியவர் பெர்னார் குளோதனைக் குறிப்பிடுகிறார். அவரிடமிருக்கும் தகவல்கள் முக்கியம் வாய்ந்தது என்கிறார். ‘

‘பெர்னார் குளோதன் ? ‘

‘பெர்னார் குளோதன் எங்க மூதாதையர்களில் ஒருவரெனச் சொன்னேன். அவருக்கும் புதுச்சேரிக்கும் உள்ள சம்பந்தந்தங்கள் நிறைய. சிறிய வயதிலேயே கடல்வாழ்க்கையிற் சபலம். பதினெட்டாம்நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனியின் செல்லப்பிள்ளை. அப்போதைய மொரீஷியஸ் கவர்னராகவிருந்த ‘லாபூர்தொனே எங்களுக்கு எழுதிய கடிதமொன்றில், வெள்ளையரல்லாத ஒரு பெண்ணை குளோதன் காதலிப்பதாகவும், அதற்குத் தீவிலுள்ள மதகுருமாரும், வெள்ைளையர்களும் காட்டும் எதிர்ப்பினைக் குறிப்பிட்டுவிட்டு, அக்காதலைத் தடுத்து நிறுத்தவேண்டிய அவசியத்தையும் விவரித்து எழுதியிருந்தார். இந்த நிலையில் குளோதனின் பெற்றோர்கள் சேன்மாலோவைச் சேர்ந்த ஒரு பிரபுவின் பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏற்பாட்டினை, கிழக்கிந்திய கும்பெனியின் கப்பல்கள் மூலம் பலமுறை குளோதனுக்குத் தெரிவித்தார்கள். குளோதனிடம் செய்திகள் போய்ச் சேர்ந்தனவென்பதைக் கப்பல் தலைவர்களும் பின்னர் உறுதிசெய்தார்கள். ஆனால் பதிலில்லை. இதற்கிடையில் அவரைப் புதுச்சேரியில் கண்டதாகவும் சில கப்பல்தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எது எப்படியோ, ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவல்களும் இல்லை. அவ்வளவு ஏன், கும்பெனியின் நிர்வாகிகளிடம்கூட அவரது இந்த திடார் மறைவிற்கான காரணங்களேதுமில்லை. மெளனம் சாதிக்கின்றார்கள். இச்சம்பவங்கள் என் ஞாபகத்திற்கு வரவே, அவரைப் பற்றிய தகவல்கள் என் கனவுகளுக்குப் பதிலாகக் கூடும் என்ற நினைப்பில் என் குடும்பத்தாருக்கு கட,ந்த மாதம் எழுதினேன். அக்கடிதத்திற்குப் பதிலாக என் குடும்பத்தார், வேம்புலி நாயக்கர் சுமார் அருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். ‘

‘எப்படி இக்கடித்ததைவைத்துக்கொண்டு ஒருவாரமாக காத்திருப்பதற்கு உன்னால் முடிந்தது. அந்த வேம்புலி நாய்க்கரைச் சென்று பார்க்கவேண்டியதுதானே ? ‘

‘இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வேம்புலிநாய்க்கர் உயிரோடிருப்பாரா ? என்பது என் முதல்சந்தேகம். தவிர என் வெள்ைளைத் தோலை வைத்துக்கொண்டு உங்கள் மனிதர்களிடத்தில் தகவல்கள் சேகரிப்பது அவ்வளவு சுலபத்திலில்லை. நீ உடன் வந்தாயென்றால் எனக்குச் செளகரியம், வேம்புலி நாய்க்கரை பார்த்துவிட்டு வந்துவிடலாம். வண்ணாரத் தெரு எங்கிருக்கிறது, தெரியுமா ? நான் கைவசம் வைத்திருக்கும் புதுச்சேரி வழிகாட்டி வரைபடத்தில் இல்லை. ‘

‘எனக்குத் தெரியவில்லை ‘. அருகிலிருந்த இரு இளைஞர்களைக் கேட்டான். அவர்களும் அறிந்திருக்கவில்லை. காப்பிப்பாரை விட்டு வெளியேறி எதிரே நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கூட்டத்தில், தங்களுடையதை அடையாளமறிந்து எடுக்க சில நிமிடங்கள் ஆயின. வண்ணாரத் தெரு எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு எதிர்பட்ட இளைஞர்களிடமிருந்து தெரியாது என்பதே பதிலாகக் கிடைத்தது. வேலு பக்கத்தில் சைக்கிள் கொண்டுவந்து நிறுத்திய பெரியவரிடம் கேட்டான். ‘ஏங்க, இங்கே வண்ணாரத் தெரு எங்கிருக்கிறது தெரியுமா ? ‘

‘இப்போ அதுக்குப் பேரு வண்ணாரத் தெரு இல்லைங்க. சங்கரதாஸ் தெருண்ணு கேளுங்க சொல்வாங்க. காந்திரோட்டிலே வடக்காலப் . பெருமாள்கோவிலைத் தாண்டிப்போகணும். அஜந்தாடாக்கீஸ் கிட்டவரும். அங்கே தங்கவேல் சைக்கிள்ஸ்டோர்ன்னு ஒண்ணு இருக்கும். அதுக்கு முன்னால. ‘

‘ரொம்ப நன்றிங்க பெரியவரே ‘, இருவரும அடுத்த கால் மணி நேரத்தில் காந்தி ரோட்டைப் பிடித்து, சங்கரதாஸ் தெருவென்று அழைக்கப்படும் முந்நாள் வண்ணாரத் தெருவை அடைந்தார்கள்.

இருவருமாக எஞ்சியபகல் முழுவதும், வேம்புலி நாய்க்கரைத் தேடிச் சோர்ந்ததுதான் மிச்சம். ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்கியதில், பெரும்பாலானவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். யாரேனும் வயது முதிர்ந்தவர்களை விசாரித்தால் பதில் கிடைக்கலாம் என்று ஒருவீட்டினர் தெரிவித்த யோசனை புத்திசாலித்தனமாகவிருந்தது. அவ்வீதியில் மேற்கில் சிதிலமடைந்து கடைசியாக இருந்த வீடொன்று நண்பர்கள் கவனத்தை ஈர்த்தது. வீட்டின் முன்னால் ஒரு பழைய சைக்கிள். சைக்கிளில் நீலம் வெள்ளை சிவப்பென பிரான்சு நாட்டின் தேசியக் கொடி. கேரியரின் பக்கவாட்டில் ஒரு பெரிய துணிப்பை. துணிப்பை முழுக்க வண்ன வண்ணக் காகிதங்கள். முன்வாசலில் கோணிப்படுதாவைக் கட்டித் தொங்கவிட்டு சுருட்டுப்புகையும் வறட்டு இருமலுமாய் படுத்துக் கிடந்த கிழவரைக் கண்டுபிடித்ததில், கொஞ்சம் நம்பிக்கை எட்டிப்பார்த்தது. விசாரித்தார்கள்.

‘பெரியவரே.. இந்தத் தெருவில் பல வருஷங்களுக்கு முன்னால வேம்புலி நாய்க்கர்னு ஒருத்தர் இருந்தார். கேள்விப்பட்டதுண்டா ?

‘நாந்தான் வேம்புலிநாய்க்கர் ‘ என்ன வேணும் ? ‘.

உனக்கு என்ன தெரியவேண்டும் ? இந்த மண்ணில் எப்போதோ உடைந்து, எப்போதோ நொறுங்கி, ஒட்டாத மணாலாக ‘நீ ‘ உயிர்த்துக்கிடந்தது – உண்மை.. இந்த மண்ணின் காற்றில்தான் யுகங்கள்தோறும் நறுமணத்தையும், துர்மணத்தையும் ‘நீ ‘ சுமந்து திரிந்திருக்கிறாய் – உண்மை. இம்மண்ணின் ஆகாயப் பாதையிற்தான் ஓய்வின்றி சுற்றுகின்ற கிரகங்களுக்கிடையில் ஒரு நட்சத்திர மின்மினியாக ‘நீ ‘ நடைபயின்றிருக்கிறாய் – உண்மை. இம்மண்ணின் கங்கையிற்தான்தான் பாசியாகப் படர்ந்து ‘நீ ‘ கரையொதுங்கியிருக்கிறாய் என்பதும்.உண்மை.. இம்மண் வளர்த்த தீயிற்தான் அவிர்பாகமாக ‘நீ ‘ சொரியப்பட்டிருக்கிறாய் என்பதும் உண்மை..உண்மை..

ஆனால் உன்னோடுசேர்ந்து நானும் உடைந்திருக்கிறேன் என்பதையும், உன்னோடுசேர்ந்து நானும் நடை பயின்றிருக்கிறேன் என்பதையும். உன்னோடுசேர்ந்து நானும் கரையொதுங்கியிருக்கிறேன் என்பதையும் உன்னோடுசேர்ந்து நானும் அவிர்பாகமாக சொரியபட்டிருக்கிறேன் என்பதையும் அறியமறுக்கிறாயே நண்பனே!.

—-

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation