அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது

This entry is part of 61 in the series 20040318_Issue

இரா முருகன்


கல்யாணம் விசாரிக்க யாராவது வந்த மணியமாகவே இருந்தார்கள். சீர்வரிசையோடு கொண்டு வந்த அதிரசமும், தேங்குழலும் கைமுறுக்கும் எண்ணெய்க் காறலில் கசப்புத் தட்டும்வரை தின்று தீர்க்கவும் வந்தவர்களுக்கு இலை நறுக்கில் பொதிந்து தாம்பூலத்தோடு கொடுக்கவுமாக எதேஷ்டமாக இருந்தது.

போதாக்குறைக்கு பருப்புத் தேங்காய் வேறு. இது புது தினுசாக பூந்திலாடு சேர்த்துப் பிடித்ததும், குழந்தைகள் ருசித்து எச்சில் ஒழுகச் சாப்பிடும் வர்ண முட்டாயைத் தேங்காய் பர்பிக்கு மேலே பதித்து உண்டாக்கினதுமாக ஏகப்பட்டது.

கல்யாணம் முடிந்த கையோடு புதுவீட்டில் குடித்தனமும் வைத்துக் கொடுத்திருந்தார் சுப்பிரமணிய அய்யர். பழைய பரபரப்பும் சந்தோஷமும் மெல்லத் திரும்பிக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிய நேரம் அது.

குப்புசாமி அய்யனும் விசாலாட்சியும் பகவதியை பட்டுப்பாய், பட்சணம், பண்ட பாத்திரம், இதர சீர் வரிசை சகிதம் கொண்டு விட வந்திருந்தார்கள். விசாலாட்சிக்கு அரசூர் மிகவும் பிடித்துப் போனது. கடைத்தெருவுக்கும் கோயிலுக்கும் தனியாகவே போய் வந்தாள் அவள்.

முட்டாயைக் கரைத்த மாதிரி அது ஏன் இந்த ஊர்க் குளம் எல்லாம் சிவந்து வழிகிறது என்று சங்கரனைக் கேட்டாள் அவள். அது குளம் இல்லை அக்கா, ஊருணி என்றான் சங்கரன். ஆனாலும் தண்ணி கல்கண்டா இனிக்கிறது என்று ஊருணித் தண்ணீரை மானாமதுரை மண் கூஜாவிலிருந்து எடுத்துக் குடித்தபடி அவள் சொன்னபோது, தீர்த்ததுலே மண்ணு நெடி அடிக்கறதே. கவனிச்சியோ என்றான் குப்புசாமி அய்யன். பின்னே என்ன ஆகாச வாடையா அடிக்கும் அதிலே என்று விசாலாட்சி சிரித்தாள். அம்பலப்புழைக் குடும்ப ஸ்திரிகள் எல்லோருக்கும், பகவதி உட்பட அழகான சிரிப்பை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறான் பகவான் என்றாள் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் வீட்டுக்காரி.

விசாலாட்சியும், சுகஜீவனம் கரம்பங்காடு கிருஷ்ணய்யர் சம்சாரமும், சுந்தர கனபாடிகள் அகத்துக்காரியுமாகத் தான் ஓடி ஓடி வந்தவர்களுக்கு உபசரித்துக் கொடுத்தது.

கல்யாணி அம்மாள் இன்னும் நினைவு சரிவரத் தெளியாமல்தான் இருந்தாள்.

நாட்டுப்பொண்ணு வந்திருக்கா கல்யாணி. எழுந்து உக்காரு. ஆசிர்வாதம் கேக்கறது குழந்தைகள்.

சுப்பிரமணிய அய்யர் சிரமப்பட்டுக் கல்யாணி அம்மாளைப் பிடித்துப் படுக்கையில் உட்கார்த்த, சாமா, பொண்டாட்டியைப் பத்திரமாப் பாத்துக்கோ. தீப்பிடிக்க விட்டுடாதே என்று முனகிவிட்டுத் திரும்பத் தூங்கப் போய்விட்டாள்.

வீட்டுக்கு வந்த நவ வதுவரனுக்கு ஆரத்தி எடுக்க நித்யசுமங்கலி சுப்பம்மாள் இருந்தால் எடுப்பாக இருக்கும் என்று சுப்பிரமணிய அய்யரும் மற்றவர்களும் அபிப்ராயப்பட்டாலும் சுப்பம்மாள் போன சுவடே தெரியவில்லை.

கல்யாணியைப் பாத்துக்கறேன்னுட்டு இப்படி எங்கேயோ சவாரி விட்டுட்டாளே கிழவி என்றாள் கனபாடிகள் பெண்டாட்டி.

சுப்பம்மாளுக்குக் கடுத்த ஜூரமா இருந்தது. இங்கே இருந்தா கல்யாணிக்கு இன்னும் ரோகம் பாதிக்குமோன்னு தன்னோட கிரஹத்துக்குப் போனா. அது நீங்க கல்யாணத்துக்குக் கிளம்பிப் போனதுக்கு மறுநாளைக்கு மறுநாள்.

பாடசாலை ராமலட்சுமிப் பாட்டி சொன்னாள். அது கழிந்து சுப்பம்மாள் கவலையில்லாமல் பாடிக்கொண்டு நடுராத்திரியில் தெருவில் நடந்து போனதைப் பார்த்ததாகவும் தெரிவித்தாள். அப்போது போனவள் தான்.

மூத்தகுடிப் பெண்டுகள் என்னோடில்லையோ வந்தது ? அப்புறம் எப்படி சுப்பம்மா பாடிக்கொண்டு அவர்களோடு போகமுடிந்தது என்று நியாயமான கேள்வியைச் சுப்பிரமணிய அய்யர் எழுப்பினார்.

அவள் குரல் கர்ண கடூரமாக இருந்ததாகவும் அது மூத்த குடிப் பெண்டுகள் கைவேலை இல்லையென்றும் ஆனால் சுப்பம்மாள் வெகு உற்சாகமாக மழையில் நனைந்தபடி பாடிப் போனதாகவும் ஜோசியர் பெண்டாட்டி அறிவித்தபோது, நீ சும்மா இரு என்று ஜோசியர் அடக்கினார். சுப்பம்மாளுக்குக் கொடுத்த யந்திரத்தை அவள் போகிற போக்கில் அரண்மனைத் தோட்டத்தில் விட்டுப் போனதை இன்னும் அவர் சரியென்று ஏற்கவில்லை. அதனால் எத்தனை கஷ்டம் ? மலையாள வைத்தியன் கொடுத்த ருசியான திரவம் தவிர வேறு சுகம் ஏதும் இல்லை. கொட்டகுடித் தாசி மட்டும் கடாட்சம் காட்டாதிருந்தால் சரிந்து போன மகாயந்திரம் இன்னும் எத்தனை நாசத்தை உண்டாக்கி இருக்குமோ என்று அவர் நினைத்தபோது அம்பலப்புழை பிஷாரடி வைத்தியர் விக்ஞான ரீதியில் யோஜிக்கப் பழகிக் கொள்ளணும் என்றார். வைத்தியர் தன் மனதில் இப்படி அவ்வப்போது வந்து சேதி சொல்லும் சங்கடத்தை நிவர்த்திக்க அடுத்த யந்திரத்தில் என்ன மாதிரியான க்ஷேத்ர கணிதம் போடலாம் என்று யோசித்தபடி ஜோசியர் நடந்தபோது அரண்மனைத் தோட்டத்து யந்திரம் கண்ணில் பட்டது. அது அவர் ஸ்தாபித்ததை விட அளவு சுருங்கிக் காணப்பட்டது.

சங்கரன் பகவதிக்குட்டியைக் கடைத் தெருவுக்கு அழைத்துக் கொண்டு போனான். கொட்டகுடித் தாசி நடந்தபோது நிமிர்ந்த தலைகளை விட இப்போது உயர்ந்தவை இன்னும் அதிகம் என்று அவனுக்குத் தெரிந்தது.

கடை வாசலில் தலையாட்டி பொம்மை கண்ணை உருட்டி உருட்டி பகவதியை வரவேற்றது. அப்புறம் அப்படியே நிலைத்து நின்று விட்டது. பகவதி குறுகின மரப்படிகளின் மூலம் கடைக்குள் ஏறிவரக் கஷ்டப்பட்டாள்.

அவளுக்குப் புகையிலை வாடை வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்ததாகச் சொன்னான் சங்கரனிடம். என்ன செய்ய பொண்ணே, இதை வித்துத்தான் குடும்பத்தைச் சம்ரட்சிக்ணும் என்று நம் தலையில் விதிச்சு விட்டான் பகவான் என்றான் சங்கரன். வீட்டில் இந்தத் தடவை புகையிலை ஒரு நறுக்கு கூட இல்லாமல் எல்லாம் அரண்மனைக் கிட்டங்கியில் அடைத்து வைக்க வழி பண்ணிக் கொடுத்த வகையில் வங்கிழவன் துரைக்கு மனதில் நன்றி சொன்னான் அவன்.

யாரோ மூக்குத்தூள் வாங்க வந்து நின்று பகவதியைப் பார்த்துத் தயங்கி அப்புறம் வருவதாகச் சொல்லிப் போக, நான் வந்து உங்க வியாபாரம் தடசமானதா இருக்க வேணாம் என்று அவள் படியிறங்கினாள்.

திறக்க ஆரம்பித்த மூக்குத் தூள் பரணியைத் திரும்ப இறுக்க மூடினான் சங்கரன். அப்படியும் பகவதி தும்ம ஆரம்பித்து நடுப்படியிலேயே நின்றாள். மூடிய கண்ணும் ஒரு சிரிப்புமாக அங்கே தும்மிக் கொண்டு நின்றவளை வாரி அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் எழுந்து வந்ததை அடக்கிக் கொண்டான் சங்கரன்.

ஐயணை என்று கூப்பிடுவதற்கு முன் ஐயணை கடை வாசலில் வந்திருந்தான்.

ஆலப்பாட்டு வயசன் சாயல் ஐயணைக்கு இருப்பதாகப் பகவதிக்குட்டி சொன்னது அவளுக்கு நினைவு வர சங்கரன் சிரித்தான். அது எதுக்குச் சிரிப்பு என்று புரியாமல் பகவதியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

கொளந்தைக்கு நெறைவா சிரிப்பு இருக்கு சாமி. வீட்டுலே அதுதான் இத்தனை நாள் காணாம இருந்துச்சு.

ஐயணை பெட்டி வண்டியை ஓட்டிப் போகும்போது சொல்லியபடியே போனான்.

கல்யாணம் விசாரிக்க பக்கத்து அரண்மனையிலிருந்து ராணி வந்தபோது சுப்பிரமணிய அய்யர் குடும்பமே அங்கே கூடியிருந்து அவளை வரவேற்றது. சங்கரன் மட்டும் ஏதோ நினைத்துக் கொண்டது போல் கடைக்குக் கிளம்பி விட்டான்.

மகாராணி. அதுவும் வாயும் வயிறுமாக இருக்கப்பட்ட ஸ்திரி என்று வீட்டுப் பெண்கள் எல்லோரும் அவளை மரியாதையும் பிரியமுமாக வரவேற்றார்கள். கனபாடிகள் பெண்டாட்டியும், கச்சேரி ராமநாதய்யர் சம்சாரமும் குரல் நடுங்க லாலி பாடி அவளுக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தார்கள்.

சுப்பம்மாள் கிழவி இருந்தால் அருமையான பாட்டு ஏதாவது பாடி அவளுக்கு மரியாதை செய்வாள். மூத்த குடிப் பெண்டுகளுக்கும் இவள் வரவு இஷ்டமாக இருந்திருக்கும். சுப்பம்மாளோடு அவர்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது என்று ஆரத்தியை வாசலில் கொட்டியபோது கனபாடிகள் பெண்டாட்டி நினைத்தாள்.

ராஜாவுக்கு துரைத்தனத்துக் கணக்கு ஏதோ உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு வந்திருப்பதாகவும் காரியஸ்தனோடு அவர் விடிந்ததிலிருந்தே மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதால் வரமுடியவில்லை என்றும் ராணி அறிவித்தபோது, ஜமீன் நிர்வாகம்னா சும்மாவா, ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல் இருக்கத்தானே செய்யும் என்று கச்சேரி ராமநாதய்யர் ஆதரவாகச் சொன்னார். தான் கோர்ட்டில் சிரஸ்ததாராக ஜமீன் கணக்கு வியாஜ்யங்களையே மேலதிகம் ஆயுசு முழுவதும் பார்த்ததாக அவர் கூட்டிச் சேர்க்க, இந்த அய்யரை காரியஸ்தன் இடத்தில் அமர்த்தினால் துரைத்தனத்துக்கு லிகிதம் எழுதி அதிக மான்யம் வாங்கவும், தேவைப்பட்ட போது தர்க்கம் செய்யவும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்தாள் ராணி.

சுந்தர கனபாடிகள் பெண்டாட்டி வீடு முழுக்கச் சுற்றிக்காட்ட மெல்ல நடந்து போய்ப் பார்வையிட்ட அவள் தாம்பூலத்தோடும் மஞ்சள் குங்குமத்தோடும் கிளம்பும்போது பகவதிக்குட்டியை அணைத்துத் தலையில் வாஞ்சையாக முத்தமிட்டாள்.

கிணற்றடிக்கு மேலே ஓடு இறக்கியோ இல்லை கூறை போட்டோ ஒரு ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்லிப் போனாள் அவள். அரண்மனையில் புகையிலை அடைக்க இடம் கொடுத்தபிறகு ஆள் நடமாட்டம் அதிகமாகிப் போனதாகவும் குளிக்கும்போது யாராவது வெளியிலே இருந்து பார்க்கக் கூடும் என்பதால் இந்த யோசனை என்றும் அவள் தெரிவித்ததாகச் சங்கரனிடம் பிற்பாடு பகவதிக்குட்டி சொன்னாள்.

யாராவது பார்த்தால் பொசுக்கிப் போடுவேன் என்றான் அவன் தலையைக் குனிந்தபடிக்கு.

கல்யாணம் விசாரிக்க இனிமேல் ஊரில் ஆள் பாக்கி இல்லை. தாணுப்பிள்ளையும் தம்பதி சமேதராக மதுரையிலிருந்து வந்து பெண்ணுக்கும் பிள்ளைக்குமாக ஆளுக்கொரு வராகனும், மதுரை மல்லிகைப் பூவும், மீனாட்சி கோயில் குங்குமமுமாக வந்துவிட்டுப் போனார்.

எல்லோரும் போய் வீடு கூட்டம் குறைந்து சகஜ நிலைக்கு வந்தபோது கருத்தான் வந்து சேர்ந்தான். வந்ததும் முதல் காரியமாகக் கையோடு கொண்டு வந்திருந்த பொடித்தூள் ஜாடிகளை அரண்மனைக் கிட்டங்கியில் வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை சங்கரனிடம் சேர்ப்பித்தான்.

அய்யர் சாமி, உங்க கல்யாணத்துக்கே மலையாள சீமைக்கு வரத்தான் நினைச்சிருந்தேன். ஆனா பீவி பிள்ளையைப் பெத்துக் கையிலே கொடுத்துட்டா.

சைனா பட்டுத் துணியில் இரண்டு நேர்த்தியான சால்வைகளைப் பிரியத்தோடு சங்கரன் கையில் கொடுத்தான் அவன்.

என்ன குழந்தைடா கருப்பா இந்த விசை உனக்கு என்று விசாரித்தான் சங்கரன் அந்தச் சால்வையில் முகம் புதைத்துக் கொண்டு.

ஆம்பளை ஒண்ணு. கூடவே பொம்பளைப் புள்ளை ஒண்ணு. ரெட்டையாப் பெத்து விட்டுட்டா.

அவன் குரலில் தெறித்த சந்தோஷம் சங்கரனையும் பற்றிக் கொண்டது.

பகவதி, இந்தத் தடியன் தான் எனக்கு வியாபாரத்துலே பாகஸ்தன். கருத்தான்னு பேர்.

பகவதி கருத்தானுக்கு இரண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் செய்தாள்.

இந்த அபிஷ்டுவுக்குக் காப்பி கொண்டு வந்து கொடு.

கருத்தான் பதறிப்போய் எழுந்து வெளியே ஓடியே விட்டான்.

கல்யாணம் விசாரிக்கக் கடைசியாக வந்தவர்களில் கொட்டகுடித் தாசியும் இருந்தாள். பகவதிக் குட்டிக்கு மட்டுமே அவள் பெயர் மோகனவல்லி என்று தெரிய வந்தது. தான் பகவதியென்று சொல்லி அவளுடைய பெயர் என்ன என்று விசாரித்தபோது, முதல் தடவையாகத் தன்னிடம் இன்னொருத்தர் பெயர் கேட்பதில் அதுவும் யெளவனமும் அழகும் கல்வியும் கொண்ட ஸ்திரி ஒருத்தி விசாரிப்பதில் அவளுக்குத் தாங்கொணாத சந்தோஷம் என்றாள். சங்கரனிடம் ராத்திரி இதைப் பகவதி சொன்னபோது அவன் கொட்டகுடித் தாசியின் முழங்கைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

பெண்டாட்டியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அன்னிய ஸ்திரியை இச்சிக்கலாமா என்று மனம் கேட்டபோது அவன் பதிலேதும் இல்லாமல் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்தான். அப்போது நடு ராத்திரிப் பொழுது. வெளியே மழை பெய்கிற சத்தம்.

பகவதியிடம் கொட்டகுடித் தாசி கடைக்கு வந்த விஷயத்தைச் சொல்லவில்லையே என்று பட்டது சங்கரனுக்கு. அதை ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அவள் எழுதிக் கொடுத்த வெண்பாவையாவது காட்டியிருக்கலாம். ஆனால் பகவதிக்குத் தமிழ் படிக்க வராது. மலையாளம் தான் வரும். அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். படிப்பிக்க புருஷர்கள் யாரும் சரிப்பட்டு வராது. கொட்டகுடித் தாசி வரச் சம்மதித்தால் நன்றாக இருக்கும். அடுத்த தடவை அவள் கடைத்தெருவுக்கு வரும்போது கேட்க வேண்டும். எனக்கு என்ன கற்றுக் கொடுப்பாய் என்றும் விசாரிக்க வேண்டும்.

பகவதிக்குட்டி அவனுக்குப் பக்கமாக வந்து நின்றாள். இழுத்து அணைத்து ஊஞ்சலில் கிடத்தினான் அவளை. நாபியில் மென்மையாக முத்தமிட அவள் சிலிர்த்தபடி திரும்ப எழுந்து உட்கார்ந்து அவனை ஆரத்தழுவி உதட்டில் முத்தினாள். ஊஞ்சல் ஆட்டத்தில் அவளோடு கலந்தபோது இதெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம் என்று சங்கரன் மனதில் வந்து போனது.

ஆனாலும் தான் நீங்க ரொம்பப் படுத்தறேள்.

எழுந்து உட்கார்ந்த அவள் குரல் மட்டும் குறைப்பட்டுக் கொண்டது. அவிழ்ந்த தலைமுடியை திரும்ப முடியத் தொடங்க, வேணாம் இப்படியே இருந்துட்டுப் போகட்டும். குத்து விளக்கு வெளிச்சத்துலே ரதி மாதிரி இருக்கே என்றான் சங்கரன். இதுவும் இவன் சொன்னது இல்லை. ஏற்கனவே பேசப்பட்ட வார்த்தைகள்.

பகவதி, ஒரு பாட்டுப் பாடேன்.

பிராந்தோ, இப்படி அசுத்தமா உக்காந்து தான் சங்கீதம் பாடுவாளோ ?

நான் தொட்டதாலே அசுத்தமாயிட்டியாடி நீ ?

சங்கரன் அவளை மடியில் இழுத்துக் கொண்டு கேட்டான்.

தொட்டதோட விட்டாத்தானே ?

பகவதி சிரித்தாலும், அவனுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து பாட ஆரம்பித்தாள்.

ஒவ்வொன்றும் ஏற்கனவே நடந்து போனதாகச் சங்கரனுக்கு இன்னும் நிச்சயமாகப் பட்டது. அவன் தான் சாமா. அவன் முன்னால் உட்கார்ந்து பாடிக் கொண்டிருப்பவள் சாமாவோடு போனவள். இந்த ஊஞ்சல் தான். முன்னால் கால் இடிக்கிற இடத்தில் இதே சுவர்தான். அங்கே வரலட்சுமி முகம் வரைந்து வைத்திருந்தது. பக்கத்தில் புகையிலைக் குழாயில் இருந்து துரை சாம்பலைத் துப்பினான். கூரை இல்லாத இந்த வீட்டுக்கு வெளியே இருந்துதான் சுப்பம்மாக் கிழவி பழுக்காத்தட்டு சங்கீதத்தைப் பாடினாள். அதுவும் சாமா சுழல விட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததுதான். அதைக் கொண்டுவந்து கொடுத்த களவாணிகள் திரும்பவும் வருவார்கள். அவர்களுக்குச் சாமிநாதன் சங்கரன் எல்லோரும் ஒன்றுதான். இந்த வீட்டையும் யாரோ எரிப்பார்கள். இன்னொரு தடவை இங்கே அப்புறம் உட்கார்ந்து ஊஞ்சலாடுவது வேறு யாரோ. எல்லாம் பழுக்காத்தட்டு போல் சுழன்று சுழன்று மறுபடி மறுபடி நிகழ்ந்தபடி இருக்கும்.

சங்கரன் ஊஞ்சலில் படுத்துத் தூங்கிப் போனான். தரையில் புறங்கையைத் தலையணையாக வைத்தபடி பகவதியும் உறங்கிப்போன அந்த ராத்திரி முழுக்க விடாமல் மழை பெய்தபடி இருந்தது.

மழைக்கு நடுவே பெரிய இடிச்சத்தம். பக்கத்து வீட்டுத் திசையிலிருந்து ஏதோ பற்றி எரிவது போல் வெளிச்சம். ராஜா பதறி எழுந்து ஜன்னல் பக்கம் பார்க்க, ஜோசியர் அரண்மனை நந்தவனத்தில் நிறுத்தியிருந்த யந்திரம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வினாடியில் அது பஸ்பமாகக் கீழே விழ, அங்கே சின்னதாக இன்னொரு நெருப்பு. ஏகப்பட்ட பெண்குரல்கள் சண்டை பிடித்தபடி காற்றில் மிதந்தன.

நீ போய்த் தூங்கு. ஒண்ணுமில்லே என்றார்கள் மூதாதையர்கள் ராஜாவிடம். வீடு ஒண்ணும் தீப்பிடிக்கலியே என்று திரும்ப விசாரித்தார் ராஜா. அது மாதிரி ஆகி இருந்தால் அரண்மனையில் அந்தப்புரக் கட்டிலிலும் ஒருபக்கமாகப் புகையிலைச் சிப்பம் அடுக்க இடம் கொடுக்க வேண்டி வரலாம்.

இல்லேப்பா ஒண்ணும் ஆகலே அப்படியெல்லாம் என்றான் புஸ்திமீசையான். சரிதான் என்று சமாதானத்தோடு மூத்திரச் சட்டியை வெளியே எடுத்தார் ராஜா.

அந்தச் சின்ன யந்திரம் தீயோடு பறந்து போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர்.

சே இதொரு சல்யம். அரசூர் ஜோசியனும் அவன் யந்திரமும் எல்லாம் நசிச்சுப் போக. யார் சுப்பம்மா ? எதுக்கு இவனோட யந்திரம் அவள் போன திசைக்குப் பறக்கணும் ? மூட ஜனங்கள். தூக்கத்தைக் கெடுக்கக் கொதுகு போதாதுன்னு இவன் வேறே.

பிஷாரடி வைத்தியர் புதைப்பை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டு கலைந்த நித்திரையைத் தொடர ஆரம்பித்தபோது விடிந்திருந்தது.

(தொடரும்)

eramurukan@yahoo.com

Series Navigation