திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16

This entry is part of 61 in the series 20040318_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


/9/

தனுஷ்கோடி பெருமூச்சு விட்டான்-

நிலைமை தலைகீழாகி விட்டது. அவள் வாழ்க்கை அவளுக்குப் போதாததாய் இருக்கிறது. திருப்தியுறாததாய் இருக்கிறது. அவனால் என்ன முயன்றும் அவளைத் திருப்திமட்டத்தில் வைக்க முடியாது போயிற்று.

நிலைமை உருப்பெருகி உக்கிரமாகி வந்தது. ஆமைப்-பொழுதுகளின் முதுகில்… பாறைகள் ஏறிக்கொண்டன. சாகக்கிடக்கிற நோயாளியின் ஆக்சிஜன் குழாய்மேல் ஏறி நின்று நலம் விசாரிக்கிற உறவினர் போல ஆகியது நிலைமை.

பொறுக்க முடியாத ஒருபோதில்… வார்த்தை நெருப்புகளை அவள் அவன்மீது திராவகவீச்சு வீசிய கணத்தில்… அவன் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்தான்.

பொறுமை எப்படியோ அவன் பிடியையும் கடந்து வெளியேறியது. அவன் தன்னிலை இழந்து வார்த்தைகளை வீசியெறிந்த வேளை அது…

வார்த்தைகளுக்கும் உஷ்ணம் குளிர்ச்சி என்பதெல்லாம் உண்டுதானே ?

பொறுமையை வெளித்தள்ளிக் கொண்டு… பஸ்நிறுத்தத்தில் கூட்டநெரிசலைத் தள்ளியிறங்கும் பயணிபோல வெளிவந்து விழுந்தன வார்த்தைகள்…

அதுகூட அல்ல. அவன் எத்தகைய பிழை செய்து விட்டான்! மறக்கவே முடியாத பிழை… இதற்காக தன்னையே அவன் மன்னித்துக் கொள்ள முடியாத அளவு அதன் விளைவு ஆகிப் போனதே…

அட அவன்… அதுவும் அவன் அப்படியொரு வக்கிரமான, கைமீறிய முடிவை எடுத்திருக்கக் கூடாது.

ரயில் நிலையத்துக்கு… பயணப்பட அல்ல… வழியனுப்ப வந்தவன் அவன்… அவனே வண்டியில் ஏறிக் கொண்டிருக்கக் கூடாது.

வண்டி கிளம்பிவிட அவன் ஓடும் வண்டியில் இறங்குகிற ஆவேசத்துடன்… கீழே குதிக்கிற அவசரத்தில்… தானே விழ நேர்ந்து விட்டது.

அவன்… அவளை… கைநீட்டி அடித்து விட்டான். அவள் எதிர்பாராதது அது.

அவனே எதிர்பாராதது.

திகைப்புடன் அவள் அவனைப் பார்த்தாள். தன் கையையே நம்ப முடியாமல் அவன் பார்த்தான். அதைத் தவறு என்று அவள்முன் ஒத்துக் கொண்டான் அவன்… பெண்ணே, உன்னை நான் கைநீட்டி அடித்தது தவறு.

திரும்பத் திரும்ப ஒத்துக் கொண்டான்- தவறு. தவறு. தவறு.

கோபக்கட்டத்தை மீறி அவன் அவளிடம் மன்றாடினான்- மன்னித்து விடு.

திரும்பத் திரும்ப மன்றாடினான். ஸாரி. ஸாரி. ஸாரி.

அவனே எதிர்பாராதது அது. அவளே எதிர்பாராதது- அவள் அந்தக் கணத்தில் முடிவெடுத்தாளா அப்படி ?… தெரியாது.

தற்கொலை.

அவனுக்கு அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது… அவன் பிரச்னையை விவாதத்தை அப்படியே அங்கேயே கீழே போட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினான். நேரமாகிக் கொண்டிருந்தது.

இன்று போ. நாளையும் வராதே கோபமே…

சண்டைகூட பட்டணத்தில் ஓய்வு நாட்களிலேயே அனுமதிக்கப் படுகிறது.

ஊரெல்லையில் இருந்து பட்டணத்தின் உள்முகத்துக்கு வரும் ரயில்களில் காலைக்கூட்டம் அலுவலக-வேலைக் கூட்டம் மிகுதி. எதிர்ச்சாரி ரயில்கள் காலியாய் அசைந்து நெளிந்து வரும். மாலையில் நிலைமை இதன் உல்ட்டாவாகி விடும்.

சே- அடித்திருக்கக் கூடாது.

அவன் உள்ளேயே நுழைய முடியாத அளவு பெருங்கூட்டமாய் வயிறெடுத்து வந்தது ரயில்வண்டி. பிரசவ வலி கண்ட தாய் ரயில்… அவளால் மெதுவாகத்தானே போக முடியும் ?… எல்லாரும் அவள் ‘ஓட்டமாய் ‘ ஓட விரும்புகிறார்கள்…

நீயும் சாதாரண ஆம்பிளை என நிரூபித்து விட்டாய். வன்முறை ஆண்களின் அயுதம். ‘பெண்களைக் கட்டுப்படுத்த… குப்புறக் கவிழ்த்த, கொட்டமடக்க ‘ ஆண்கள் அதைக் கையாள்கிறார்கள். சராசரி ஆண்கள்.

நேரமாகிறது. அவனால் உள்ளே நுழையவே முடியவில்லை. அத்தனை கூட்டமாய் வந்தது ரயில். ஜனங்கள் தொங்கியபடி வாசலை நிறைத்து வழிந்தார்கள்.

இரண்டு ரயில்களை விட்டாயிற்று. சட்டென அவன் முடிவெடுத்தான். எதிர்த்திசையில் போகிற காலிரயில் ஏறி… டெர்மினசில் இறங்கி காலியிடத்தைப் பிடித்துக் கொண்டு திரும்பி இதேவழியில் வர வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ரயிலில் அவன் உட்கார இடம் கிடைக்கவில்லை. தேடிப் பார்த்துவிட்டு அவன் பரவாயில்லை என நின்று கொண்டான். நிலையந்தோறும் நெரிசல் கூடியது. ரயில் அவனது நிலையந் தாண்டும்போது தடக்கென்று நின்றது. சக்கரம் எதன்மீதோ ஏறியிறங்கும் சத்தம்… அவர்களுக்கு… ரயில் பயண ஜனங்களுக்குப் பழகி அலுத்துப்போன சத்தம். யாரோ சின்ன வயசுப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள்.

அது அவள்… அம்பிகா… அவன் மனைவிதான்… என்பது அவனுக்கே தெரியாது. யோசிக்கவே நேரமில்லை. அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது.

அவன் அன்றிரவு வீடு திரும்பியபோது இருட்டிக் கிடந்தது. வீடு திறந்து கிடந்தது. உள்ளே அவனுக்கு அதுவே சிறு குடைச்சலாய் இருந்தது. அவள் முகத்தை எப்படிப் பார்க்கப் போகிறேன் ? எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறேன் ?…

அவள் வீட்டில் இல்லை.

அவளுக்குக் கோபம். நியாயமே…. என நினைத்துக் கொண்டான். என்றாலும் இப்படி வீட்டைத் திறந்து போட்டபடி அவள் வெளியேறியது வெறியேறியது… சரி அதிருக்கட்டும்… தவறு என் மீது… அதைப்பற்றிதான் நான் கவலைப்பட வேண்டும். அடித்திருக்கக் கூடவே கூடாது.

திரும்பி வா பெண்ணே- மன்னித்து விடு அம்பிகா. நான் உன்னைப் பூவாய் வைத்துக் கொள்வேன்…

நான் உன்னைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். உனக்கு அனுசரிக்க முயல்கிறேன். அல்லாதபட்சம் உன்னைக் குறைசொல்லவும் அப்படி நினைக்கவும் எனக்குத் தகுதியில்லாதவன் ஆகி விடுகிறேன் அல்லவா ?

ரயில் நிலையத்தில் அவளை – அம்பிகாவின் பிணத்தை அடையாளங் காட்டியவள் ரமணி. அவளது சினிமா சிநேகிதி.

அம்பிகா முகத்தை இனி எப்படிப் பார்ப்பது என திகைத்திருந்தான் அவன்…

தேவையிருக்கவில்லை.

அந்த அழகான முகம் சிதைந்திருந்தது. தற்கொலை செய்து கொண்ட அந்த நிமிடம் ரயிலாவது சிறிது நின்றது. டிரைவர் எட்டிப் பார்த்தான். அவனோ உள்ளே மாட்டிக் கொண்டிருந்தான். நேரமாகி விட்டது எனப் பல்கடித்தான் அவன்… அவளைச் சிதைத்து உதிர்த்து விட்டு ரயில் அவளுக்காக அழுதபடி ஓவெனக் கிளம்பியது.

அவள்மீது ஏறியது ரயில் அல்ல- என் வார்த்தைகள்…

ஓவெனக் கதறி அழலானான் அவன்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation