விடியும்!நாவல் – (39)

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து கிடந்த அந்த இருட்டு ஒழுங்கையில், பகலிரவு கிரிக்கட் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்து விட்டு ஒளிவெள்ளத்தில் கரகோசங்களுக்குக் கையசைத்துப் போவதைப் போல பெருமிதத்துடன் நடந்தான் செல்வம்.

தட்டத் தனியாக நடந்த போதும் குழந்தைகள் எல்லாம் பக்கம் பக்கமாக முட்டி ஒட்டிக் கொண்டு வருவது போன்ற சுகம் தெரிந்தது. நீங்க வயசில் சிறிசென்டாலும் மனசில் பெரிசு தம்பி என்று அம்மா இல்லப் பெரியவர் அவனிடம் சொன்ன வார்த்தைகள் காதுகளில் தங்கிவிட்டன.

முதன் முதலாய் கால் வைத்த போது பள்ளமும் திட்டியுமாய் இருந்த வழியில் பார்வையை அகலவிடாமல் நிதானமாகத் தத்தித் தத்தியே வர வேண்டியிருந்தது. இப்போது பள்ளமோ திட்டியோ எல்லாமே அந்த இருட்டிலும் பளிச்சென்று தெரிவதான நுட்பப்பார்வை கிட்டியவனாய், நெடுங்காலமாய் அந்த ஒழுங்கையில் திரிந்து கால்பழகியவன் போல சிரமமின்றி நடந்தான். உள்ளே தெளிவும் திருப்தியும் கூடிவந்து விட்டால் வெளியில் எல்லாத்தையுமே வெளிச்சமாகக் காட்டுவதுதான் மனத்தின் மாயம் போலும்!

தன் சொந்த பந்தங்களின் வாழ்க்கையை சீராக்குவது மட்டுமே லட்சியமென இருந்தவனின் வாழ்க்கைப் புத்தகத்தில் முற்றிலும் புதியதான அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. சுயநலம் பிழையானது அல்ல ஆனால் சுயநலம் மட்டுந்தான் பிழையானது என்று எப்போதோ வாசித்தது இப்போது பொருத்தமாக நினைவில் வந்து, இனி வாழப் போகிற சீவியம் நிச்சயமாய் அர்த்தமுள்ளதாக அமையப் போவதை உணர்த்திற்று.

அலுவலகமும் அரிசிசாமான் மூட்டைகள் அடுக்கி வைக்கிற இடமுமாய் இருந்த அந்தச் சின்ன அறையில் பெரியவரோடு மனம் திறந்து பேசக் கிடைத்த சொற்ப நேரத்தில் அவனை முந்திக்கொண்டு அவரே, இந்தப் பிஞ்சு முகங்களில் இருந்த எதிர்காலம் என்னதென்று தெரியாத ஏக்கம் என் மனசை புடம் போட்டு இதுகளுக்காகவே வாழுகிற உணர்வை தந்துட்டுது என்று சொன்ன போது அவனுக்கும் அந்த உணர்வே உண்டானது.

பெரியவர் தந்த ஐந்து பேரில் ஒரு பிள்ளைக்கு பெற்றோரின் முழுப் பெயர்கள் சொல்லத் தெரியவில்லை. கேட்கக் கேட்க, வீட்டில் கூப்பிட்டுப் பழகிய செல்லப்பெயர்களையே சொன்னான். அநாதையாவதற்கு என்னதான் அவசரமோ. படிச்சு முதன்மையாக வரக்கூடிய புத்திக்கூர்மையுள்ள பிள்ளை என பெரியவர் அவனை அறிமுகம் செய்து வைத்தார். நீ படிச்சு டொக்டரா வருவியா தம்பி என்று அவன் கேட்கப் போக, தன் ஓட்டைப்பல் காட்டி வெட்கம் மிளிர சிரித்த சிரிப்பு இன்னும் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

அந்த ஐந்து பிள்ளைகளோடும், அவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் தனியாகப் பேசுகிற சந்தர்ப்பத்தை பெரியவர் உண்டாக்கித் தந்ததும், அவன் பெயரை வாசிக்க, காரணம் தெரியாமலே, ஒவ்வொருவராக அடியெடுத்து முன்னுக்கு வந்து நின்ற தோற்றம் இன்னும் நெடு நாட்களுக்கு நெஞ்சை விட்டு அகலாது போலவே தோன்றிற்று.

மனதில் உண்டான சின்னத் தெளிவில், தான் ஒரு புதிய மனிதனாக மாறிக் கொண்டிருந்ததை அவன் கண்டு கொண்டான். அதற்கு சந்தர்ப்பமளித்த அந்தக் குழந்தைகளை நன்றியோடு நினைத்தான். மற்றக் குழந்தைகளின் நிலையையும் சரி செய்ய வேண்டிய தேவையிருப்பதையும் மனதில் இருத்திக் கொண்டான்.

டானியலிடம் கதைக்க வேண்டும். மற்ற நண்பர்களையும் உசார்ப்படுத்த வெண்டும். ஒருவர் ஒரு பிள்ளையைப் பொறுப்பேற்றாலே போதும்!

வரும் போது அணைந்திருந்த தெருவிளக்குகள் இப்போது ஒன்றுவிடாமல் வெளிச்சம் தந்தன. மங்கலான வெளிச்சந்தான். யாருமற்ற அந்த நீண்ட வீதியில் ஒவ்வொரு விளக்காக கடக்கும் போதும் அவனை முந்திக் கொண்டு வளர்ந்த நிழல் உயர்ந்து நீண்டு கடந்து போனதை அவன் புதினமாகப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

சந்தி வளவிலிருந்து ஆட்டுப்புழுக்கை மணம் வந்தது. அது மனதிற்குப் பிடித்ததாய் இப்போது தோன்றியது. ஆடுகளின் அசைவை மக்கிப் போயிருந்த கிடுகு வேலியால் எட்டிப் பார்த்தான். முகம் முழுக்க வெள்ளையாய் பட்டுப் போல இருந்த கறுத்த ஆட்டுக்குட்டி ஒன்று தாயின் முலையை மட்டில்லா உரிமையோடு இடித்து இடித்து இழுத்துக் கொண்டிருந்தது.

எட்டு மணிக்கே நகரம் முற்றாக அடங்கி விடுகிறது. வந்த அன்றைக்கே அப்பா சொல்லியிருந்தார், ஏழு மணிக்குப் பிறகு வெளியதெருவ போகக் கூடாதென்று. எட்டு மணிக்குப் பிறகு, நடையில் ரோந்து போகும் படையினரையும், தெருநாய்களையுந் தவிர வேறு நாதியேயிருக்காது என்றும் சொன்னார்.

நேரம் பத்தாகியிருந்தது. அப்பா சொன்னது எப்படி இன்றைக்கு உறைக்காமல் போயிற்றோ தெரியவில்லை. படையினரைக் காணவில்லை. நாய்களும் நமக்கேன் வம்பு என்று வளவுகளுக்குள் ஒடுங்கிவிட்டன! கடைகள் எல்லாம் சாத்தி விட்டார்கள். கோணேசமலைப் பக்கமிருந்து கடல் அலைகளின் ஒன்றித்த இரைச்சல் மட்டும் வானத்தில் கேட்டது, மற்றும்படி ஒரே நிசப்தம். விரித்துவிட்ட நீளப்பாயாக வெறுமையாய் இருந்த தெருவில் வேகமாக நடந்தான்.

வீடு வந்ததும், தெருக்கதவை தள்ளிப் பார்த்தான். வெளியே போயிருப்பது தெரிந்தும் வந்து தட்டட்டும் என்று அப்பாதான் பூட்டியிருப்பார். அமைதி நிலவிய அந்தக் காலத்திலேயே எட்டு மணிக்கு கதவைச் சாத்தி பழக்கப்பட்ட கை. அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிவரும் அவனுக்காக அம்மா கையில் பிரம்புடன் காத்துக் கொண்டிருப்பாள்.

கதவைத் தட்டிவிட்டு கதவுக்கு மேலால் எட்டிப் பார்க்க சின்னம்மா வேகநடையில் வந்தாள். வரப் பிந்த நான் பயந்து போயிற்றன் தம்பி என்றவள், விறாந்தையில் கால் நீட்டியிருந்து திரித்த உழுத்தம்பருப்பைத் தெரிந்து சட்டியில் போடும் காரியத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். செவ்வந்தியின் கல்யாண எழுத்துக்கு பலகாரம் பண்ணும் ஆயத்தங்கள் இவை. காலையில்தான் சொன்னான், அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டாள். முன்னங்கால்களை சாயப் போட்டு சின்னம்மாவிற்கு முன்னால் இருந்தது ரிக்கி.

அறைக்குள், நித்திரையைக் குழப்புகிற நுளம்புகளோடு மனிதருடன் பேசுவதைப் போலவே நித்திரை மயக்கத்தில் அப்பா பேசிக் கொண்டிருந்தார். ரிக்கிக்கு உணவளிக்கும் போதும் காகங்களைத் துரத்தும் போதும் கோழிகளுக்கு தீன்போடும் போதும் ஆடுமாடுகள் உள் நுழைந்து பூஞ்செடிகளில் வாய் வைக்கிற போதும் அப்பா இப்படித்தான் பேசுவார். எலி பூனை அணிலைக் கூட அவர் அப்படித்தான் பாவிப்பார். ஒருவேளை அவர் பேசுவது அவைகளுக்கும் புரிகிறதோ என்னவோ!

செவ்வந்தியும் படுத்திருக்க வேண்டும். அவளுக்கும் அலுப்புத்தான். வீட்டுப் பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் தோளில் ஏற்றிக் கொண்டு அம்மாவிற்கு ஆறுதல் கொடுக்கத் தொடங்கி விட்டாள். எழுத்து முடிந்த நாலைந்து மாதங்களில் கல்யாணமும் முடிந்து விடும். அதன்பின் இவ்வளவு பொறுப்பும் பவுத்திரமும் லட்சுமி கடாட்சமும் இன்னொரு வீட்டுக்கு சீதனமாகப் போகப் போகின்றன.

“அப்பா படுத்திற்றாராம்மா ?”

“உன்னைப் பாத்திருந்து போட்டு இப்பதான் படுக்கப் போனவர்.”

போன விசயத்தை அம்மா கேட்கமாட்டாளா என்ற ஏக்கத்தோடு முகத்தைப் பார்த்தான். சின்னம்மா பருப்பை வாயில் போட்டு மென்று இறுக்கி பதம் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் அம்மாவுக்கு அவனில் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இந்த பாராமுகமே அதற்குச் சாட்சி. காத்திருக்கப் பொறுமையில்லாமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“அம்மா இல்லம் தெரியுமாம்மா, அம்மாவின் திவசத்துக்கு அரிசிசாமான் குடுத்தமே, அங்க, ஐஞ்சு பிள்ளைகளின் படிப்புச் செலவை பொறுப்பு எடுத்திருக்கிறன். நீங்க என்னம்மா நினைக்கிறீங்க.” என்று கேட்டான் அவசரமாக பதிலை எதிர்பார்ப்பவன் போல.

“நீ செய்தா அது சரியாய்த்தானிருக்கும் தம்பி”

“நீங்க என்ன நினைக்கிறீங்க, அதைச் சொல்லுங்க”

“இந்தக் குடும்பத்தையே தாங்குகிற பிள்ளை நீ. எந்தப் பொறுப்பையெடுத்தாலும் நிறைவாய்த்தான் செய்வாய் ”

அது ஏதோ ஒப்புக்கு சொன்னது போலவும், தம்பியை இன்னும் கண்டுபிடிக்காத கையாலாகாத்தனத்தை மெலிதாகக் குத்திக்காட்டுவது போலவும் அவனுக்குப் பட, அவன் உடனே சொன்னான்.

“நீங்க இப்பிடிச் சொல்றீங்க, தம்பியின் விசயத்தில் நான் பொறுப்பா நடக்கேல்லையே. அவனைக் கண்டு பிடிச்சு உங்களிட்டைக் கொண்டந்து சேர்க்கேல்லையே”

எந்த விசயத்தை சின்னம்மாவிடம் வாய்திறக்கக்கூடாதென இருந்தானோ, அது அவனையுமறியாமல் வெளிவந்து முற்றத்து இருட்டில் விழுந்து எதிரொலிப்பது போல பிரமை காட்டிற்று. சின்னம்மாவிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற கொஞ்சநஞ்ச ஆறுதலையும் கெடுத்துவிடுகிற வேலை இது. அவசரப்பட்ட குற்ற உணர்வில் தலை குனிந்து முற்றத்து இருட்டில் ஒளிந்து கொள்வதே போல கூனிக்குறுகிப் போனான்.

“தம்பி.”

“ம்”

சின்னம்மா நிமிர்ந்து பார்க்க அவனுக்கு திருட்டு முழிதான் வந்தது. கொஞ்ச நாட்களாகவே அந்தக் கண்களை நேருக்குநேர் பார்ப்பதை, பார்த்தால் பிரச்னையாகிவிடுமாதலால் தவிர்த்துக் கொண்டே வந்திருக்கிறான். இன்றைக்கு வகையாக மாட்டிக் கொண்டானா ? வாசிகசாலைக்கு என்று பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு ஆங்கிலப் படத்திற்குப் போய் வந்து முன்னர் அகப்பட்டிருக்கிறான். உடுப்பில் அடிக்கும் தியேட்டர் வெக்கையோ, அல்லது சட்டைப் பையில் மறந்து போய் விட்டிருந்த டிக்கட் அடிக்கட்டையோ அவனைக் காட்டிக் கொடுத்திருக்கும். அப்போதெல்லாம் இந்த முழி முழித்ததில்லை.

விறாந்தை லைட்வெளிச்சம், தன் முகத்தில் படாத இடமாகப் பார்த்து சுவரோடு சாய்ந்து கொண்டான்.

“ஜெயத்தைப் பற்றி நாங்க கவலைப்பட்டு இனி நடக்கப் போறது ஒன்டுமில்லை தம்பி” என்றாள் சின்னம்மா, சொற்களுக்கு நோகக் கூடாத ஆறுதலோடு. யாரோ அயல்வீட்டுப்பெண் அவனை அழைத்துப் பக்கத்திலிருத்தி ஆறுதல் சொல்வதைப் போல அது இருக்க, நம்ப முடியாமல் பார்த்தான் செல்வம். சின்னம்மா நிதானமாகவே கேட்டாள்.

“உன் தம்பி பிழையான வழியில் போயிருக்கிறான் என்று நீ நினைக்கிறியா செல்வம் ? ”

“அப்ப, உங்களிட்டை சொல்லாம ஓடிப்போனது சரியென்டா சொல்றீங்க ? ”

இப்போதும் கேட்டபின்னரே அப்படிக் கேட்டிருக்கக்கூடாதென்று அவனுக்கு உறைத்தது. அவனுக்குத் தெரிந்த வரை, வயசுக்கு வந்த ஒரு பெண் வீட்டிலிருந்து காணாமல் போகிற சந்தர்ப்பத்தில் மட்டுமே ‘ஓடிப்போனது ‘ என்ற சொற்தொடரை அந்தப் பகுதியில் பாவிப்பார்கள். அதை வைத்து, நடந்த விசயத்தை அயல் உறுதிசெய்து கொள்ளும். ‘ஓடிப்போனது ‘ என்பதற்கு அத்தனை கருத்தாழம் உண்டு.

சின்னம்மா சற்றுத் தயங்கிவிட்டு சொன்னாள்.

“தம்பி, எனக்குத் தெரியக்கூடாதென்று நீயும், எனக்குத் தெரிந்தது உனக்குத் தெரியக்கூடாதென்று நானும், எத்தனை நாளைக்கென்றுதான் இப்படி எங்களையே ஏமாத்துவது ? இயக்கத்தில போய்ச் சேர்கிற எந்தப் பிள்ளை திரும்பி வந்திருக்கு இவர் வாறதுக்கு ? ”

அவனுக்குச் சந்தேகம் முளைத்தது. மாமா விசயத்தைச் சொல்லிவிட்டார்! மேற்கொண்டு எதுவும் கேட்கத் தோன்றாமல் அவன் சும்மாயிருந்தான்.

“பிள்ளை உனக்கு எழுதின கடிதத்தை நானும் செவ்வந்தியும் பாத்திட்டம் மகனே”

“அம்மா!..”.. .. .. கையும் களவுமாய் பிடிபட்ட கலவரத்தில் அவனும், கடிதத்தை அவனுக்குத் தெரியாமலே பார்த்துவிட்டு இன்றுவரை அதுபற்றி வாய் திறவாமலிருந்த குற்ற உணர்வில் அம்மாவும் ஒரு இக்கட்டான கணத்தில் சிறைப்பட்டு தலைகுனிந்தார்கள். சிறிது கழித்து, அவனே மெளனத்தைக் கலைத்தான்.

“தெரிஞ்சா நீங்க கவலைப்படுவீங்களே என்டுதான் கடித விசயத்தை சொல்லாம விட்டுட்டனம்மா. என்னை மன்னிச்சிருங்க”

“உன்னுடைய மனம் எனக்குத் தெரியாதா மகனே ? மூதூருக்குப் போய் வந்ததிலிருந்து நீ விலகி விலகிப் போனது எனக்கு விளங்காதா ? செவ்வந்தி உடனே சொல்லீற்றாள் அண்ணன்ர முகம் கறுத்துப் போயிருக்கென்று. என்ர பிள்ளையின் கடிதத்தை திருப்பித் திருப்பி வாசிச்ச பிறகு, குழம்பிப் போயிருந்த மனசுக்கு ஒரு தெளிவு வந்துட்டுது. கிணற்றுநீருக்கும் ஆற்றுநீருக்குமுள்ள பயன்பாட்டு இடைவெளியை என்னால புரிஞ்சு கொள்ள முடிஞ்சுது,

ஊரார் பிள்ளைகள் சுதந்திரத்தை வாங்கி தட்டில வைச்சுத் தரட்டும், எங்க பிள்ளை படிச்சு நல்லா வந்தாக் கானும் என்று நாங்க நினைச்சதெல்லாம் எவ்வளவு சுயநலம் என்டு இப்ப தெரியுது. எங்கட வீட்டிலிருந்தும் ஒரு பிள்ளை போயிருக்கிறான் என்ட ஆறுதல் எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வந்திட்டுது.”

அவன் நம்பமுடியாமல் அம்மாவையே பார்த்தான். புருசன் பிள்ளைகள், அடுப்படி, துளசி, வாழைமரம், நாய்க்குட்டி, கோழிக்குஞ்சு என்று சுற்றிச்சுற்றி தன் வீடே எல்லாமென்று இருந்தவளா இதையெல்லாம் சொல்கிறாள்! பின்னர் வாய்க்கிற ஒரு தருணத்தில், தம்பி போனதை நியாயப்படுத்தி சிறிது சிறிதாக அம்மாவை ஆறுதல்ப்படுத்த வேண்டிய கடமை தனக்கிருக்க, அந்தக் கடமை இப்போது ஆள்மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் விந்தையை கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஊர் உறங்கி விட்டது. சத்தங்களையெல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தாற் போல் ஒரு நிசப்தம். அம்மாவின் மெதுவான குரல் அந்த அமைதியைக் கிழித்து பெரிதாக முற்றத்தில் எதிரொலித்தது. அம்மா அதனை உணர்ந்து கொண்டவளாய் இன்னும் மெதுவாகப் பேசினாள்.

“யோசிச்சுப் பார் தம்பி. இதுவே ஜெயமாக இராமல் செவ்வந்தியாக இருந்திருந்தால் நாங்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பம்! குமர்ப்பிள்ளைகளை இயக்கத்துக்குக் குடுத்திட்டு இருக்கிற தாய்மார்கள் எத்தனை ஆயிரம்! அதுகளும் மனம் பொறுத்து இருக்குதுகள் தானே. நாங்கள் மட்டும் வானத்திலிருந்தா குதிச்சிருக்கிறம், சும்மாயிருந்து சுதந்திரம் வாங்க.”

“அம்மா!! ”

“ஓம் மகனே. நெஞ்சுக்குலையை பிடிச்சு உலுக்கிற மாதிரி என்ர பிள்ளை எழுதின பிறகு நான் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறது நியாயமில்லை. அவனை எடுபட்டுப் போனவன் என்டுதான் எண்ணிக் கொண்டிருந்தன். அப்பிடியில்லை என்டு நிரூபிச்சிற்றான். ஒன்று மட்டும் நல்லா விளங்குது. இழந்த கெளரவத்தை மீட்கிற வரை இந்தப் பிள்ளைகள் திருப்தியடையப் போவதில்லை. எத்தனை இடைஞ்சல் வந்தாலும் அதை தங்கள் துணிவால் வெற்றி கொள்வார்கள். இவ்வளவு நெஞ்சுறுதி உள்ள பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்காமல் போகுமா ? நல்ல நாள் கெதீல வரத்தான் போகுது. நாங்களும் இந்த மண்ணுக்கு உரிமையுள்ளவர்கள் என்டு இந்தப் பிள்ளைகள் புரிய வைக்கிற நாள் கெதியில் விடியத்தான் போகுது. அந்த விடியலைக் கொண்டு வரப்போற கூட்டத்தில என்ர பிள்ளையும் இருக்கிறான், அதுதான் எனக்கு ஆறுதல்.”

ஓடி வந்த வாகனம் திடாரென நின்றதைப் போல அம்மாவின் சத்தம் அருகிப் போக, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“இந்தப் பிள்ளையை பெத்ததை நினைச்சா.. .. .. .. எனக்குப் பெருமையா இருக்கு மகனே.”

தடங்காமல் பேசிக் கொண்டு வந்த அம்மா தளும்பிப் போனாள். கவலையும் பெருமிதமும் ஒன்றாய்க் கலந்து முட்டி மோதிய பெரும் அலையில் துவண்டு போனாள். சேலைத் தலைப்பால் முகத்தை மூடி மூச்சை இழுத்து தோள்மூட்டுகள் குலுங்கக் குலுங்க விம்மினாள்.

செவ்வந்தி நித்திரை கலைந்து ஓடி வந்தாள். அம்மாவையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். முட்டுக்காலில் தவழ்ந்து அம்மாவின் நாடி தடவி அழாதையம்மா என்றாள். மகளின் அணைப்பு கூடக் கூட, அம்மாவின் அழுகை வளர்ந்து கொண்டே போயிற்று. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா பயந்து போய் கண்களால் விசாரித்தார். அழுகையில் ஒரு கை குறைகிறது என்று நினைத்தாரோ தெரியவில்லை, அடுத்த கணமே அம்மாவோடு தானும் சேர்ந்து கொண்டார். அப்பா அழத்தொடங்கியதும் ஆறுதல்ப்படுத்த வந்த செவ்வந்தியும் அந்த அழுகை வெள்ளத்தில் அவசரமாக அள்ளுப்பட்டதை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம்.

அவனுக்கு தொண்டை கம்மிக் கொண்டு வந்தது. கண்ணீர் பொத்துக் கொண்டு பீறிட்டது தன் அன்புக்குரிய சீவன்கள் இப்படி மொத்தமாய் அழுது அவன் ஒருபோதும் கண்டதில்லை. ஆறுதலுக்கு ஒரு வார்த்தைதானும் பேச வரவில்லை. இப்போதைக்கு அழுகை நிற்கும் போலவும் தோன்றவில்லை.

அழட்டும். நெஞ்சுப்பாரம் நீராய்க் கரையும் வரை அழட்டும். நாலு மாதங்களாய் அவர்களை நார் நாராகக் கிழித்த வேதனை தீரும் வரை அழட்டும். யாரிடமும் சொல்ல முடியாமல் பூட்டிப் பூட்டி வைத்துப் புழுங்கிய துயரத்தணல் அவிந்து ஆறும் வரை அழட்டும்.

இருக்க முடியாமல் அறைக்குள் வந்தான். பள்ளியில் படித்த காலத்திலிருந்து கண்ணியமாகப் போற்றி மரியாதை செலுத்தி வந்த ஒரு புராணப் பாத்திரமாக, உரிமைகளை இழந்து தவித்த மைந்தர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் ஊட்டி உயர்த்திவிட்ட புனிதப் பாத்திரமாக அந்தக் கணங்களில் அம்மா தோன்றினாள்.

உடம்பெல்லாம் வியர்த்து சட்டை தொப்பலாகிவிட்டது. என்றுமில்லாதவாறு உணர்ச்சிகளின் பிடியில் தான் இறுகிப் போயிருந்ததை செல்வம் உணர்ந்து கொண்டான். கைகள் தானாகவே ஜன்னலைத் திறந்தன, காற்றுக்காக.

சீராகக் கூட்டிப் பெருக்கிய முற்றம் போலிருந்தது வானம், சாணம் தெளித்த மாதிரி சிதறுப்பட்ட கருமேகங்களும்! நெஞ்சு முழுக்க நிரம்பி வழிந்தது பிரார்த்தனை – அம்மாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்