‘தொட்டு விடும் தூரம்… ‘

This entry is part of 50 in the series 20040226_Issue

ஏலங்குழலி


சந்தேகமேயில்லை.

வாழ்க்கை மிக மிக சுவாரஸ்யமானது.

‘எல்லோரும் அவ்வப்பொழுது சொல்வதுதானே ? ‘ என்கிறீர்களா ? அங்குதான் இருக்கிறது விஷயம். எல்லோரும் எப்போதாவது சொல்வார்கள்; நான் தினம் தினம் சொல்கிறேன். சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், உணரவும் செய்கிறேன்.

காரணம் ? புதிதாகப் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிவதனால்…ஏற்கனவே கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்க வேண்டியும் இருப்பதனால்.

அதோ, பைக்கை உதைத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பும் ஐ.டி ஆசாமி, பக்கத்து வீட்டில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு போராடும் இல்லத்தரசி, ‘ஸ்கூலுக்குக் கிளம்ப மாட்டேன் ‘ என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பாவனையில் வேலைக்காரியை ஓரப்பார்வை பார்க்கும் எதிர்வீட்டுக்காரர்…இவர்கள் எல்லோரையும் நான் தினமும் பார்க்கிறேன். புத்தம் புதிய புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் புரட்டுவது போல, ஒவ்வொரு முறையும் புதிதாக, வித்தியாசமாக இருக்கிறது.

அவர்களைச் சொல்லுவானேன்… ?

நீங்கள் காலை வேளையின் பளீர் நீலத்தைப் பார்த்து வியந்திருக்கிறீர்களா ? ‘பட் ‘டென்று இதழ் விரியும் ரோட்டோரப்பூக்களை ரசித்துக் கவனித்திருக்கிறீர்களா ? பாறையைப் புரட்டினால், அதனடியிலிருந்து விழுந்து புறப்படும் ஜீவராசிகளை ஆவலோடு பார்த்திருக்கிறீர்களா ? மார்கழி மாதக் காற்றின் சில்லிப்பை உணர்ந்திருக்கிறீர்களா ?

‘எல்லாம் நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்; இதிலெல்லாம் என்ன அதிசயம் ?” என்கிறீர்களா ? ஒரு விஷயம் சுலபத்தில் கிடைத்துவிட்டால், அதன் மேல் பிடிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். நான் அப்படி நினைப்பதேயில்லை; அப்படி நினைக்கும்படியான சந்தர்ப்பங்களும் எனக்கு உருவாகவில்லை. அதனால்தான் எனக்கு வாழ்க்கை இவ்வளவு ருசிக்கிறதோ ?

சில சமயம், என்னுடைய எண்ணங்களை நான் பகிர்ந்துகொள்வதும் உண்டு. சற்று முன் உங்களிடம் கேட்ட கேள்விகளை நான் மற்றவர்களிடம் கேட்கும்பொழுது, சிலர் புன்னகையுடன் தலையசைத்துக்கொள்வார்கள்; மற்றவர்கள் புருவத்தை உயர்த்துவார்கள்…நான் முதன் முதலில் இங்கு வந்த பொழுது, இப்படித்தான் ஒருவரிடம் தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

அப்படி ஒன்றும் கேட்கக்கூடாததைக் கேட்டுவிடவில்லை. காலையில் எழுந்தவுடன் உடல் மேல் படும் இந்த ஒளி, வர வர அதிகரிக்கும் இந்த உஷ்ணம்…எவ்வளவு அற்புதமான விஷயம் ? ‘தினமும் இப்படித்தானா ? ‘ என்று கேட்டேன். ‘ஆமாம் ‘ என்று ஒரு வரியில் சொல்லியிருக்கலாம். அதை விட்டு விட்டு அவர் என்னைப் பார்த்த பார்வை…!

வெளியூர்க்காரர்களை இங்கு நடத்தும் முறையே சரியில்லை. சென்னை ப்ராஞ்சுக்கார்ர்களிடம் முறையீடு செய்யவேண்டும்.

பின்னே ? ‘ப்ளூடோ ‘ (Pluto) விலிருந்து முதன்முறையாக பூமிக்கு வந்திருப்பவனிடம் நடந்துகொள்ளும் முறையா இது ? கொஞ்சம் நாகரீகம் வேண்டாம் ?

—-

(elangkhuzhali@yahoo.com)

Series Navigation

ஏலங்குழலி