பொருட்காட்சிக்குப் போகலாமா..

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

செங்காளி


புதிதாக எங்கள் ஊரில் நடக்கும் பொருட்காட்சிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம். அப்பாவும் அம்மாவும் தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாகச் சொல்லிவிடவே, நான் பரமுவையும் பாருவையும் கூட்டிக்கொண்டு போகட்டுமா என்று அம்மாவைக் கேட்க, அவர் ‘ரெண்டுபெரும் கம்ப்யூட்டரில என்னமோ பண்ணிக்கிட்டிருக்காங்க.. கூப்பிட்டுப்பாரு, வந்தாங்கன்னா கூட்டிக்கிட்டுப்போ ‘ என்றார்.

‘கூட வந்தா ஒண்ணும் தொந்தரவு பண்ணாம இருப்பாங்களா ‘ என்று நான் கேட்க, அம்மா சிரித்துக்கொண்டே ‘எல்லாத்தையும் மொதல்லயே சொல்லி கூட்டிக்கிட்டுப் போ ‘ என்றார்.

கண்ணாடியை மாட்டிக்கொண்டு, நான் புதிதாக வாங்கிக்கொடுத்திருந்த கணினியில் பரமு மும்முரமாக ஏதொ விளையாடிக்கொண்டிருக்க, பக்கத்தில் பரமுக்கு யோசனை சொல்லிக்கொண்டு பாரு நிற்க, நான் இருவரையும் பார்த்து, ‘நாங்கள் பொருட்காட்சி பாக்கப்போறோம் நீங்களும் வர்றீங்களா ‘ என்று கேட்க, இருவருமே சிறிது ஆச்சரியத்துடன் ‘கூட்டிகிட்டுப் போவீங்களா, வர்றோம் வர்றோம் ‘ என்றனர்.

‘அப்படி வர்றதுன்னா நாங்க சொல்லறபடியெல்லாம் செய்யறதுன்னா கூட்டிக்கிட்டுப் போறோம் ‘

பரமுவும் பாரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, மெதுவாக ‘நாங்க என்ன பண்ணணும் ‘ என்றனர்.

‘அங்கே பெரிய ராட்டிணமெல்லாம் இருக்கும். அதிலெ போவேன் என்று அடம் பிடிக்கக்கூடாது ‘. இந்த முதல் விதியே பரமுக்குப் பிடிக்காதமாதிரித் தோன்றியது. ‘ரொம்ப நாளாச்சு அதிலயெல்லாம் போயி.. ‘ என்று பரமு இழுக்க, பாருவோ, ‘அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம், அதில சுத்தினா மயக்கம் வந்துடும் ‘ என்று சொல்ல பரமு அவ்வளவாகத் திருப்தியின்றி ஒத்துக்கொண்ட மாதிரி தெரிந்தது.

‘கண்டதையெல்லாம் சாப்பிட வாங்கித்தரும்படி தொந்தரவு பண்ணகூடாது ‘. இதைச் சொன்ன உடனேயே பரமுவின் வாயில் எச்சில் ஊறுவதை பார்க்கமுடிந்தது. ‘ஏதோ ஒண்ணு ரெண்டு மாத்திரம்.. ‘ என்று ஆரம்பித்த பரமுவை மேலே எதுவும் பேசவிடாமல் மடக்கிய பாரு, ‘ஆமா.. ஆமா.. அதையெல்லாம் சாப்பிட்டா ஒடம்புக்கு ஒத்துக்காது ‘ என்று பெரிய பாட்டி மாதிரி சொல்ல பரமு அதற்கும் வேண்டா வெறுப்பாக சரியென்றவுடன் அடுத்த விதியைச் சொன்னேன்.

‘எங்கே போனாலும் எங்க கையப் பிடிச்சுக்கிட்டுத்தான் வரணும். வேடிக்கைப் பார்த்துக்கிட்டு எங்களை விட்டுவிட்டு எங்கேயும் தனியாப் போயிடப்படாது. அப்பறம் அந்தக் கூட்டத்திலே உங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது கடினம் ‘ என்று சொல்ல இருவரும் உடனே இதற்கு ஒப்புக்கொண்டனர்.

‘அடுத்தது.. உங்க friends யாரையும் நீங்க பார்த்துட்டா அரட்டையடித்துகொண்டு அங்கேயே நிக்கப்படாது ‘. இது பாருவுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ‘அது எப்படி… ‘ என்று எதிர்ப்புச் சொல்ல ஆரம்பிக்க முன்னரே நான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன், ‘போனமா வந்தமான்னு வரணும்..அப்படான்னா கூட்டிக்கிட்டுப் போறோம் ‘ என்று சொல்ல இருவருமே ‘சரி சரி நாங்க யாருக்கிட்டையும் பேசிக்கிட்டு நிக்கமாட்டோம் ‘ என்று அரை மனதுடன் சொன்னார்கள்.

‘கடைசியா இன்னொண்ணு.. பாதியிலேயே பொறுமையிழந்து வீட்டுக்குப் போகலாம் என்று தொந்தரவு பண்ணக்கூடாது. களைப்பா இருக்குது, தூக்கம் வருதுன்னு சொல்லப்படாது ‘. இது எனக்கே அவ்வளவு சரியில்லையென்று தோன்றினாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று சொல்லி வைத்தேன். ‘களைப்பா இருந்தா, தூக்கம் வந்தா நாங்க என்ன பண்ணுவோம் ‘ என்று இருவருமே தங்கள் மறுப்பைத் தெரிவிக்க, நானும் கொஞ்சம் கீழே இறங்கி வந்து, ‘அப்படி இருந்ததுன்னா சொல்லிடனும், நேரா வீட்டுக்கு வந்திடலாம் ‘ என்று சொல்ல இருவருமே உற்சாகத்துடன் ‘சரி ‘ என்றனர்.

‘அப்ப சீக்கிரம் குளிச்சிட்டு துணி மாத்திக்கிட்டுப் புறப்படுங்க ‘ என்று நான் சொல்ல, வழக்கமாக ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இருவரும் பத்து நிமிடங்களில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு தயாராக நின்றனர்.

‘சரி போகலாம் ‘ என்று பரமசிவம் என்கின்ற எங்கள் தாத்தாவின் கையை நான் பிடித்துக்கொள்ள, பார்வதி என்கின்ற பாட்டியின் கையை என் மனைவி பிடித்துக்கொள்ள, இருவரையும் காருக்கு அழைத்துச் சென்றோம்.

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி