தேடல்

This entry is part of 49 in the series 20040212_Issue

மாது


‘Janet Jackson Breast ‘ என்று வலையில் தட்டச்சி தன் காலைப் பொழுதை துவங்கினான் ரவி. இதே

போன்று வலையில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தேடல்களுடன் தன் தேடலும்

வலம் வந்து கொண்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதியின் மேல் சற்று

கோபமாக இருந்தாலும் ‘அவள் என்ன செய்வாள் பாவம் ‘ என்று கோபத்தை அடக்கிக் கொண்டான்.

—–ooooooo000oooooo——–

‘ரவி டி.வி. பாத்தது போதும், போய் குட்டிக்கு டயபர் வாங்கிண்டு வா….. ‘. சூப்பர் பெளல்

ஆட்டத்தில் இரண்டறக் கலந்து ‘ஓடுறா… ஒடு ‘ என்று கத்திக் கொண்டிருந்த ரவியை விரட்டினாள்

ரேவதி.

‘ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான மொத்தமா வாங்கினோம், அதுக்குள்ள தீந்து போச்சா ‘ என்று

டயபர் கணக்கு கேட்டு வெளியே போகாமல் டபாய்க்கப் பார்த்தான் ரவி.

‘நானா எடுத்துக் போட்டுண்டேன், பாவம் ஒருவாரமா உடம்பு சரியில்ல, கழிஞ்சுண்டே

இருக்கா….ப்ளீஸ் போய் வாங்கிண்டு வாயேன் ‘ எரிச்சலுடன் கெஞ்சினாள் ரேவதி.

அவளையே போய் வாங்கிக் கொள்ள சொன்னால் கடுப்பாகிவிடுவாள் என்று உணர்ந்த ரவி, ‘சரி ஹாஃப்

டைம் போது போய் வாங்கிண்டு வரேன், போறுமா ‘ என்று தற்காலிகமாக ரேவதியின் வாயை

அடைத்தான்.

ஆட்ட இடைவேளையின் போது வெளியே கிளம்பிய ரவி, வீதியில் கார் நடமாட்டமே இல்லாததைப்

பார்த்து பத்து நிமிடத்திற்குள் திரும்பி விடலாம் என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான்.

ரவியின் போதாத நேரம், மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த காருக்கு பின்னால் போய் மாட்டிக்

கொண்டான். ‘நம்ப ஊரா இருந்தா, மஞ்ச கோடாவது, வெள்ள கோடாவதுன்னு சைடு வாங்கிண்டு

போயிண்டே இருக்கலாம்….கெழம் எங்க போய் திரும்ப போறதொ, கடசீ வரைக்கும், இது

பின்னாடியே போயாகனும்….கெழவியயெல்லாம் ஏன் கார் ஒட்ட விடறாங்க ‘ என்று திட்டியவாறு

கிழவியின் கார் பின்னால் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தான்.

கடையை அடைந்தவுடன், காரை நிறுத்திவிட்டு வேக வேகமாக ஒடி டயபரை எடுத்துக்கொண்டு, ’10

பொருள்களுக்கு குறைவாக ‘ என்று எழுதியிருந்த வரிசைக்குள் வேகமாக நுழைந்தான். கெட்ட நேரம்

அங்கேயும் துரத்தியது. பதினைந்து செண்ட் அதிகம் வாங்கியதற்காக ஒரு அம்மணி கடை

ஊழியருடன் விவாதம் செய்து கொண்டிருந்தாள். ரவிக்கு தன் பையிலிருந்து காசை எடுத்து அந்த

அம்மணியிடம் தூக்கி எறிந்து விடலாம் என்று கோபம் வந்தது.

கிட்டே சென்ற ரவியை போலிப் புன்னகையுடன் நலம் விசாரித்தார் கடை ஊழியர். ‘என்ன நம்ப டாம்

வெற்றி பெற்று விடுமா ‘ என்ற கேள்விக்கு ‘சொல்ல முடியாது ‘ என்ற ரவியின் பதில் கடை ஊழியருக்கு

மகிழ்ச்சி அளிக்கவில்லை.

—–ooooooo000oooooo——–

காலையில் அலுவலகம் வந்த ரவியிடம் எல்லோரும் ‘பாத்தியா…பாத்தியா ‘ என்று கேட்டார்கள்.

‘பின்ன….நம்ம டாம் ஆடுது, பாக்காம அதவிட வெற என்ன வேல ‘

‘விளயாட்ட யார் கேட்டா, டிம்பர்லேக் ஜானட் ஜாக்ஸன் துணிய புடிச்சு இழுத்தத பாத்தியா ‘

ரவி விழித்தான்.

‘போச்சு போ….டேவும் நீயும் மாத்திரம் தான் பாக்கல, ஒரு சூப்பர் ஸீன தவற விட்டுட்டாங்க. அதவிட

வேற என்ன முக்கிய வேல உங்களுக்கு ‘

வாழ்க்கையில் எவ்வளவோ இழந்தாச்சு, அத்தோடு இதுவும் ஒன்று என்று மனதைத் தேற்றிக்

கொண்டான். மனது கேட்கவில்லை. வலையில் நிச்சயம் வந்திருக்கும் என்று தேடினான். விரிவாக

எழுதியிருந்தார்கள், ஒரு படமும் கண்ணில் படவில்லை.

தொலைபேசி மணி அடித்தது.

‘ரவி, பர்மிஷன் சொல்லிட்டு வரயா, குட்டிக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்ல. உடம்பு வேற லேசா

சுடறது ‘.

‘போன வாரம் போயிருந்த போது, டெஸ்ட் பண்ணாளே அந்த ரிஸல்ட் என்னாச்சுன்னு கேட்டு

தெரிஞ்சுண்டயா ‘

‘ட்ரை பண்ணேன் ரவி…அந்த டாக்டரயோ, நர்ஸயோ பிடிக்கவே முடியல. இன்னிக்கு போனா கேட்டு

தெரிஞ்சுக்கலாம் ‘

இன்னொரு கார் வாங்க வேண்டும். இந்த மாசம் வேலை போகாவிட்டால் அல்லது போன வாரம் சென்ற

வேலை கிடைத்துவிட்டால் நிச்சயம் இரண்டாவது கார் வாங்க வேண்டும் என்று நினைத்துக்

கொண்டான். ஒரு பழைய காராவது வாங்க வேண்டும். ரேவதியே குழந்தையை டாக்டரிடம் கூட்டிக்

கொண்டு போகலாம்.ஒவ்வொரு தடவையும் மானேஜனிடம் இளித்துக் கொண்டு நிற்க முடியாது.

போகிற வேலை சீக்கிரம் போய் விடும்.

‘சரி….லன்ச்ல சொல்லிட்டு வந்துடறேன் ‘

மறுபடியும் தொலைபேசி.

‘ராவி, காண்ட்ராக்ட் வேல ஏதாவது வந்தா சொல்லட்டுமா ‘ வேலைத் தரகன்.

‘ஏன், போன வாரம் நான் போன இடம் என்னாச்சு ‘

‘உள்ளுக்குள்ளயே வேற டிபார்ட்மெண்ட்டிலிருந்து ஆள எடுத்துட்டாங்களாம் ‘ பசப்பினான்.

—–ooooooo000oooooo——–

டொக்….டொக்….டொக்…….

பின்னாடி வந்து தட்டினான் மானேஜன்.

‘ராவி…..உனக்கு டைம் கிடைக்கும் போது ரூமுக்கு வறியா ‘

அது என்ன ‘டைம் கிடைக்கும் போது ‘ – ரூமுக்கு வான்னு சொல்ல வேண்டியது தானே.

திரையிலிருந்த தன் ஜானட் ஜாக்ஸன் தேடலை மறைத்துக் கொண்டு, ‘சரி…உடனே வருகிறேன் ‘

என்றான்.

ரவி என்ற பெயரை ஏன் இவ்வளவு கொலை செய்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்ததேயில்லை.

வெங்கடாசலபதி என்றோ லஷ்மிநாராயணன் என்றோ இருந்தால் போனா போகிறதென்று ஒத்துக்

கொள்ளலாம். நான்கெழுத்து ‘ரவி ‘ சொல்வதில் என்ன கஷ்டம். புரியவில்லை. பக்கத்து சீட்

பிரெஞ்சுக்காரன் ஜீனும் (ழான் ? ஏதோ ஒன்று) தன்னைப் பற்றி இப்படித்தான் நினைத்துக்

கொண்டிருப்பானொ என்று எண்ணிக் கொண்டே மானெஜன் அறை நோக்கிச் சென்றான்.

‘எதுக்குக் கூப்பிடறானோ, இன்னிக்கு திங்கக் கிழம ஆச்சே, திங்கக் கிழம யாரையும் வேலய விட்டு

தூக்க மாட்டாளே ‘ என்ற எண்ணம் ஓடியது.

‘ராவி, நீ டிஸைன் பண்ண ஸ்க்ரீன்ல கொஞ்சம் கலர் மாத்தனும். மார்க்கெட்டிங்

டிபார்ட்மெண்டிலிருந்து இப்போதுதான் ஈ-மெயில் வந்தது. சீக்கிரம் முடிச்சுடு ‘

‘ஷ்யுர்….ஆனா……குழந்தைக்கு உடம்பு சரியில்ல, லன்ச் டைம்ல டாக்டர்ட்ட கூட்டிட்டு போகனும் ‘

என்று இழுத்தான்.

‘ஓகே….போயிட்டு வந்து முடிச்சு கொடுத்துடு…இன்னிக்கு சாயந்தரந்துக்குள்ள தரேன்னு

சொல்லியிருக்கேன். உன் குழந்தை பேர் என்ன ? ‘

‘ப்ரீத்தி ‘

‘ப்ரீட்டை….ஸ்வீட் நேம் ‘

—–ooooooo000oooooo——–

‘டாக்டர், குழந்தைக்கு ரெண்டு மூணு நாளா உடம்பு சரியில்ல. லூஸ் மோஷன் வேற ‘ என்றாள் ரேவதி

‘மோஷன் எப்படி போறது ‘

‘கொஞ்சம் திப்பி திப்பியா இருக்கு டாக்டர் ‘

‘சாப்பிட என்ன கொடுக்குறீங்க ‘

‘தாய்ப்பால் தான் டாக்டர் ‘

‘உம்…..போன வாரம் செஞ்ச ரிஸல்ட் நேத்துத்தான் வந்தது. பால் அலர்ஜி இருக்குமோன்னு

சந்தேகமா இருக்கு. பயப்படறத்துக்கு ஒன்னும் இல்ல. எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தாய்ப்பால்

கொடுக்கறதயும் நிறுத்தி வையுங்க. பால வெளில எடுத்துடுங்க, இல்லாட்டி வலிக்கும் ‘.

—–ooooooo000oooooo——–

அலுவலகத்திற்கு திரும்பும் போது இரண்டு மணி ஆகிவிட்டது.

‘ராவி, எங்க போயிட்ட…ஜானட் ஜாக்ஸனோட படத்த தேடிக் கண்டுபிடிச்சுட்டேன். க்ளோசப் ஷாட்.

சூப்பராத் தெரியுது. என்னோட க்யூபுக்கு வா காட்டறேன் ‘ என்று ரகசியமாக முணு முணுத்தான் டேவ்.

‘எங்க காட்டு பாக்கலாம் ‘

டேவின் பின்னால் சென்றான் ரவி.

* * *

சுட்டிகள்:

http://50.lycos.com/020404.asp

http://www.superbowl.com

Series Navigation