திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)

This entry is part of 49 in the series 20040212_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/6/

அவை வெறும் அச்சு யந்திரங்கள் தாமே… கொடுத்ததைப் பேசாமல் அவை பதிக்கின்றன. கல்யாணப் பத்திரிகை அடிச்ச மையைக் கழுவி விட்டு இழவு அறிவிப்பை அடிக்கச் சொன்னாலும் அழாத மெளனத்துடன் அவை அடிக்கின்றன… உண்மைகளைப் பொய்களை அடிக்கின்றன…

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

– என்கிறார் நகுலன். பரவலாய்க் கேலியாடப்பட்ட கில்லியாடப்பட்ட கவிதை இது. ரொம்பநாள் தனுவுக்கும் அந்தக் கவிதை வேடிக்கையாகத்தான் இருந்தது. இந்தக் கவிஞர்கள் அப்படி விவரம் அற்றவர்களும் அல்ல… A rose is a rose is a rose – என ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறான் அவன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகு என்கிறானாம், என ஒரு விளக்கம் தருகிறார்கள் அதற்கு. நம்ப சினிமாக்கார ஆசாமி ஒருவர் கூட – வாலியா கண்ணதாசனா தெரியவில்லை… இதற்குமேலே இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல!… என்பாரல்லவா ?

அச்சக வேலைக்கு வந்த ஒரு பொழுதில் நகுலனின் அந்தக் கவிதை உள்விழிப்பு தந்தது. சில ஹைகூ கவிதைகள் அந்தக் கணம் உயிரற்றுத் தெரிந்தாலும் வேறொரு கணத்தில் பளீரென்று முழு வீர்யத்துடன் மனசுக்குள் தாமரை விரிக்கும். அது போன்றதொர் சிலிர்ப்பு தட்டியது நகுலன் கவிதையில்.

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

காகிதம் என்பதென்ன ? ஓர் சிந்தனா ஊடகம் தானே ? பிற ஊடகங்களைப் போலத்தானே அது ? மனிதனுக்கு சேதி சொல்கிற ஊடகந்தானே ? – என நினைத்திருந்தான்.

இல்லை என்கிறார் நகுலன். பிற ஊடகங்களைப் போலில்லை அது, என்கிறார் என்பது புரிந்தது. பிற ஊடகத்தில் இல்லாத தனித்தன்மை இந்த ஊடகத்தில்… காகிதத்தில்… அவர் நினைவில் தட்டியிருக்க வேண்டும் என்றாகிறது… கண்ணாடியை எடுத்துக் கொள். நம் பிம்பம் காட்டுகிறது நாம் எதிரே நிற்கிறபோது. நாம் எதிரே நில்லாவிட்டாலும் வேறெதையாவது காட்டிக் கொண்டேதானே இருக்கிறது ?… நீரை எடுத்துக் கொள். நம் நிழலைக் காட்டும். நாம் பார்க்காதபோதும் எதையாவது பிம்பமாய்ச் சுமந்து கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அல்ல இது… காகிதம்! அது நாம் எழுதினால் நம் எண்ணத்தைக் காட்டுகிறது. எழுதாதபோது ? ஆ! அது எதையும் காட்டுவதேயில்லை. வெற்றுக் காகிதம்! எத்தனை நுட்பமான வேறுபாட்டை நகுலன் கண்டு கொண்டிருக்கிறார்!

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

வெல்டன் நகுலன்-

மொட்டைமாடியில் காற்று சுகமாய் இருந்தது. பகலில் படைபடைக்கிற வெயிலில் புழுக்கமான அறைக்குள் திணறித் தவித்து மாலை ஆறு ஆறரை என்று வெளியே வருகையில் பள்ளிக்கூடம் விட்ட குழந்தையின் தனி ஆனந்தம் கிடைத்தது அவனுக்கு. ஊரெல்லைகள் தாண்டி பஸ்ஸேறி ரயிலேறி வீடுவர ஊரடங்கும். எத்தனை நேரங் கழித்து வந்தாலும் குளித்து விடுகிறான் அவன். வரும் வழியில் கையேந்திபவனில் சிற்றுணவு. அவன் இரவுப்பாடு அதுதான். இட்லி. முட்டைபரோட்டா… அல்லது ஆம்லெட்.

வெப்பந் தணிவிக்க சிறிது நிழல் கண்ட மாடி அது. தரையெல்லாம் துாசியும் சருகுகளும் முள்ளம்பன்றி மாதிரியாய் மயிர்சிலிர்த்த பூக்களும் சிந்திக் கிடக்கும். ஆனால் இம்மரங்கள் இரவில் அடர்த்தியாய் மூச்சு விடுகின்றன. அடியில் அவனுக்கு இரவில் சிறிது சிரமமாகவே இருக்கிறது. திணறலாகவே உணர வைக்கிறது. தரையும் பெருக்கிக் கொடுத்ததில் ஓரமாகப் பெருங் கூளம். வீட்டுக்கார அம்மாள் மாடியிலேயே அதை தீக்குச்சி கொளுத்திப் பற்ற வைத்து இரவு முழுக்க அதன் நாற்ற வீர்யத்தை அவன் நாசிக்கு ஏற்றி விடும். இருமல் இருமலாக வரும்…

வேறெதாவது யோசி. நகர வாழ்வில் அடிக்கடி தானறியாத இந்த எரிச்சல் வந்து கொண்டே யிருக்கிறது. எதையாவது தனி மனிதன் இழந்து கொண்டே யிருப்பதான பிரமை நகர வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிப்போனது.

எழுத்துகளில் எத்தனை விதம் என்பது போலவே எழுத்தாளர்களிலும் ஆயிரம் வகை… ஒவ்வொருவரும் ஒரு வித சுவாரஸ்யம். பிரமை சுமந்து வருகிறவர்கள்… தலை கனத்து அமர இலக்கியவாதி என எதிரே வந்து அமர்கிறவர்கள். தலை கலைந்து கிடக்கும். வேண்டாவெறுப்பு போல புகை பிடிப்பார்கள். பேச உள்ளூற ஆசையும் கிறுக்குத் தனமான ஆவேசமும்… ஆனாலும் அலட்சிய பாவனை காட்டும் நடிப்பும் கொண்டவர்கள். சிலர் பேச அத்தனை ஆர்வப் படுவார்கள். பிழை திருத்தியபடியே தான் எழுதியிருக்கிற அந்தப் புத்தகத்தை வியந்துகொண்டே… விடாமல் பேசிக் கொண்டே போவார்கள். மிகப் பெரும் சமூக நிகழ்வை நிகழ்த்தி விட்ட பரவசம் அவர்கள் முகமெல்லாம் வழிந்து வியர்வையோடு சிதறும். சொந்தத் துட்டு போட்டு புத்தகம் வெளியிட வரும் எழுத்தாளர்கள் இதில் கணிசமாய் அடக்கம். வீட்டில்… போன புத்தகமே விற்காமல் கட்டுக்கட்டாய் மொட்டைமாடி மழைத் தண்ணீரென தேங்கிக் கிடக்கும். புதிதாய் வேறு இந்தப் புத்தகம்… எங்கே வைக்க என்று பெரியவர்களும்… இவர் பெரிய வயதுக்காரர் எனில் மனைவியும் ரகளை செய்திருப்பார்கள். அதனாலேயே இவரை இவர் எழுத்தை சபிப்பார்கள். அதுசார்ந்து இவருக்கே சிறு உள்த்திகில் உண்டுதான்… இருந்தாலும் எழுதி… அதை அச்சில் பார்ப்பது… தனி உற்சாகம்தான்.

சினிமா ரசிகர் மன்ற ஆத்மாக்கள் நாடகம் போடுகிறாப்போல இலக்கிய ஆசாமிகள் சிறு பத்திரிகை துவங்குவதையும் – website ?! – வேடிக்கை பார்க்கலாம். கையெழுத்திதழ் நடத்தி ஆவேசம் அதிகமாகி, துாக்கம் கெட்டு… தட்டச்சு – ஜெராக்ஸ் இதழ் – பிறகு ‘இயேசு வருகிறார் ‘ வகையறாவில் அச்சிட்ட சிறு கவிதைத் துக்கடா பிரசுரம். இன்லண்டியில் சிலாள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று மார்ஜின் எல்லாம் எழுதுவான். திருவிழாக் கால ஊரணிக்கரை காலைப் பதித்து மிதிக்க முடியாத அளவு சிக்கலாகிக் கிடக்கும்- அதுபோல.,, இந்த சிறு கவிதை அச்சு இதழ்க்காரர்களும் துட்டுக்கு அழுதபடி எடுத்து அடைக்க அடைக்க கவிதை வெளியிட்டு பொதுக்கூட்டங்களில் வருகிற ஆட்களுக்கு விநியோகிப்பார்கள்… கோவிலில் திருநீறு கட்ட சில புண்ணியாத்மாக்கள் காகிதம் வழங்குவதைப் போல.

அடுத்து தங்கள் அளவில் நிகழ்த்துகிற /புரட்சி ?/ கூட்டம் பற்றிய அறிவிப்பு நோட்டிஸ் வேறு இலக்கியக் கூட்டங்களில் விநியோகம் நடக்கும். இந்தக் கூட்ட ஆரம்பத்தில் சமோசா சாப்பிட்ட ஒருவன் நன்றி- என வாங்கிக் கொண்டு நோட்டிசில் எண்ணெய்க் கையைத் துடைத்தான் பார் அன்றைக்கு. ரசாபாசம் ஆயிட்டது. அங்கேயே புரட்சி வெடித்தது.

சிலாள்களுக்கு எழுத வராது. ஆனால் புத்தகம் போட்டு மேடை ஏற்ப்ாடு செய்து வேண்டியாளைக் கூப்பிட்டுப் பேசச்சொல்லி, புல்லரிக்கக் கேட்கும். எழுத்தில் பேரைப் பார்க்கிறது ஒரு ருசி. அதைப் பாராட்டச் சொல்லிக் கேட்பது அதைவிட ருசி. அதையாவது வாழ விடறானுகளா ? இலக்கிய சாம்ராட் என்று தன்மிதப்பில் திரிகிற எவனாவது அன்றைக்குப் பேச அழைக்கப் பட்டிருந்தால் படைப்பாளி செத்தான். மேடையேறியவனுக்கு கொம்பு சிலுப்பிக்கும்- ஏண்டா டேய் இதெல்லாம் புத்தகமாடா.. ஏண்டா இதெல்லாம் இலக்கியமாடா… எனக் காய்ச்சி எடுத்து விடும் மேடையிலேயே. புத்தகம் போட்டவனின் அடியாள் ஒருத்தன் கீழயிருந்து எந்திரிச்சி ஏண்டா டேய் நீ இலக்கியவாதியாடா, இலக்கிய வாந்திடா… என ஆரம்பித்து விடும். புத்தகம் போட்டவன் வெலவெலத்துப் போவான். உண்மையில் மேடையில் பேசுகிறவனுக்கும் கீழேயிருந்து எதிர்க்க எழுந்தாளுக்கும் வேறெதோ பகை. தீ பத்திக் கிட்டது, தீர்த்துக் கிட்டது இந்தக் கூட்டத்தில்…

அடிதடி ரேன்ஜில் கூட இயங்குகிறார்கள். அதில் ஒரு பெருமை. இலக்கியத்தைக் காப்பாத்தறாங்களாம்ல ? இலக்கியத்திற்காக தன்னுயிரையும் கொடுப்பாங்க போலுக்கு!… தமிழ்க் கோஷ்டிகளில் தமாசுக்குப் பஞ்சமில்லை. கூட்டத்தில் பேசுகிறவனோ, கேட்பாளியோ நல்ல குடியில் வந்து… வேட்டி நழுவிவிழ விழக் கட்டிக்கொள்ளத் திணறியபடி ஹ்ரும் ஹ்ரும் என்று செருமி உருமி உட்கார்ந்திருக்கும். கூட்டம் போட்டவனுக்கு- நெருப்பு வைத்தும் வெடிக்காத வெடியாகத் தோணும் இந்தப் பார்ட்டி. சுவாரஸ்யமெல்லாங் கிடையாது. சைக்கிளில் தாண்டிப் போலாமா நின்னு போவமான்னு குழம்பறான்ல ரோட்டில்… அவன் நிலைமை போன்றது இது. உள் ஏற்பாட்டில் அந்தக் குடிகார சிந்தனையாளரை அப்புறப் படுத்த சகல சமாதான முயற்சிகளும் நடக்க ஆரம்பிக்க… மேடையில் என்னவோ பேசுவார்கள்…. கீழே அதைவிட தனி நாடகம். அதன் கிளைமாக்ஸை நோக்கில்ல போயிட்டிருக்கு… கேட்கிறவனுக்கு மேடையில் அல்ல- இந்த ஹ்ரும் பார்ட்டி எழுந்து வெளியேறச் சம்மதிக்குமா மாட்டாதா என்று சுவாரஸ்ய-மையம் மாறிரும்.

அச்சிட வரும் புத்தகங்களும் பலதரப் பட்டவை. வரவர மஞ்சப் புத்தகத்துக்கும் நவீன-இலக்கியப் புத்தகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிட்டது. அட மஞ்சளே மேல்ங்கறாப்லல்லாம் வந்திட்டதய்யா. சமூகக் கலவரம் நிகழ்த்தி மனித உள் வக்கிரங்களை வெளிச்சம் போட்ட துணிச்சலான எழுத்துன்றாங்களே இதை… யாரு சொல்றது- அவங்களேதான். படம் வேறு… சாக்குப்பைக்குள் குவிந்து கிடக்கிற பல்வேறு ஐட்டங்கள் போல… கோணமாணலா வரைஞ்சா மாடர்ன் ஆர்ட் – நவீன ஓவியம். அதும் சேர்த்து வெளியிடணும் – அதான் நவீன கவிதைப் புத்தகம்… படம் இல்லாமப் புத்தகம் போட மாட்டாங்களாப்பா. இதென்ன ரெண்டாங் கிளாஸ் ஒண்ணாங் கிளாஸ் /அணில்- ஆடு- இலை- ஈக்கள்/… புத்தகமா ? அதை இலக்கியக் கூட்டத்துக்கு ஓசி தந்துவிட்டு அவசியம் வாசிச்சிட்டு உங்க ஒப்பீனியன் எழுதணும்னு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார்கள். அடேய் நீ ராஜாடா. யார் ஒப்பீனியன் உனக்கு வேணும் ? இலக்கியத்தில் சாதிச்ச ஆளுகள் யாரும் இப்டி துன்னீருக் காகிதம் விநியோகம் பண்ணியதாக தனு அறிந்ததில்லை.

ஒரு ஆறுதலுக்கு அடுத்த சந்திப்பில் அல்லது தொலைபேசியில் பரவால்ல- என்று ஊக்கம் தந்தால் எத்தனை உற்சாகக் கொந்தளிப்பாகி விடுகிறார்கள்… ‘சார் அந்த மூணாவது கவிதை- மனசு… அட்டகாசமா வந்திருக்குல்ல ? ‘ என்று சுயசிலாகிப்புடன் கண்ணெல்லாம் கனவுசிவக்க நிற்கிறார்கள்… தனுவுக்கு ஒரு ஜோக் ஞாபகம் வந்தது.

கணவன் மனைவி இடையே ஓர் உரையாடல்-

ஏங்க எனக்கு இந்த ஜிமிக்கி நல்லாயிருக்கா ?

ம், என்கிறான் கணவன்.

அவ அவனை ஹிண்டு படிக்க விடறாப்ல இல்லை.

ஏங்க எனக்கு இந்தப் புடவை எடுப்பா இருக்கா ?

ம்… ஹ்ரும்- என்கிறான் அந்த மகாத்மா.

ஏங்க நான் எது கட்டினாலும் அளஹ்ஹா இருக்கில்ல…

கண்ணாடியைக் கழற்றியபடி அவன் -ஓ எஸ்…

அவள் வெட்கத்தில் சுருண்டு மோவாயைப் பின்தள்ளிய பூரிப்புடன், போங்க நீங்க என்னை ரொம்பப் புகழ்றீங்க. எனக்கு என்னமோ போலருக்கு… என்றாளாம்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation