அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து

This entry is part of 49 in the series 20040212_Issue

இரா முருகன்


கிளம்பு என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னால் உடனே கிளம்பிவிட முடிகிறதா ? எல்லாம் எடுத்து வைத்து, சாயங்காலம் வெய்யில் தாழ்ந்து வியாழக்கிழமை கிளம்பலாம் என்று சித்தம் பண்ணி வைத்திருந்தபோது ஏகக் கோலாகலமாக கச்சேரி ராமநாதய்யர் வந்து சேர்ந்தார். தன் சீமந்த புத்ரன் வைத்தியும், அவன் அகமுடயைாள் கோமதியும் குழந்தைகளும் வரப் போகிறதாகச் சந்தோஷ சமாச்சாரம் சொன்னார் அவர்.

நம்மாத்துலே ரொம்ப வருஷம் கழிச்சு நடக்கிற கல்யாணம். எல்லோரும் சேர்ந்தே போகலாம். வியாழக்கிழமை காலம்பற வராளா ? வந்ததுமே குழந்தைகளுக்கும், ஏன் பெரியவாளுக்கும்தான் உடனே இன்னொரு பெரிய பிரயாணம் வைக்கக் கஷ்டமா இருக்கும். ரெண்டு நாள் சிரம பரிகாரம் பண்ணிட்டு ஞாயித்துக்கிழமை கிளம்பலாம் ராகுகாலம் கழிஞ்சு.

சுப்பிரமணிய அய்யர் உடனே கிளம்பும் தேதியைத் தள்ளி வைத்து அம்பலப்புழைக் குப்புசாமி அய்யன் குடும்பத்துக்கு லிகிதம் அனுப்பினார்.

ஏழு நாள் முன்னால் போய்ச் சேருவதற்குப் பதிலாக, நாலு நாள் முன்னால் இஷ்ட மித்ர பந்துக்களோடு போய் இறங்குவதால் எந்தக் குறைச்சலும் இல்லைதான்.

காலம் கிடக்கிற கிடப்பில் நாலு நாள் கல்யாணம் எல்லாம் மூணு நாளாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆனாலும் குப்புசாமி அய்யன் பிடிவாதமாக நாலு நாள் கல்யாணம் நடந்தாலே தனக்கும் தன் குடும்பத்துக்கும் கவுரவம் என்றும், எப்படியாவது தேவரீர் ஆதரித்து வந்து நடத்திக் கொடுக்க வேண்டுமென்றும் தெண்டனிட்டு எழுதி புகையிலைச் சுப்பிரமணிய அய்யர் மதிப்பில் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டு விட்டான்.

சொன்னபடிக்கு வைத்திசார் குடும்பத்துடன் வியாழக்கிழமை வந்து சேர, குழந்தைகளுக்கு ஜூரம். வைத்திக்கு வழக்கம்போல் வயிற்றுப் பொருமல். கோமதி மன்னிக்கு பிரயாணச் சூட்டில் தூரம் வேறு நாள் தவறி முன்னால் வந்து விட்டது.

சனிக்கிழமை குளிச்சுடுவா என்றார் வைத்திசார்.

ஊர் முழுக்கத் தண்டோரோ போட்டுட்டு வாங்கோ என்றபடி கோமதி மன்னி உள்ளே போனாள். பிரஷ்டையான ஸ்திரிக்கு சுபாவமாக வரும் கோபம் அவள் முகத்தில் எட்டிப் பார்த்தாலும் சங்கரனைப் பார்த்ததும் அது வாஞ்சையாகி ஒரு வினாடி சிரிப்பாக மலந்து அடங்கினது.

வைத்திசார் பொழுது போகாமல் வல்லவெட்டைப் போட்டுக் கொண்டு சங்கரனோடு அரசூரைச் சுற்றி வந்தான்.

என்னடா சங்கரா, அரைக் கோமணம் நீளம் கூட இருக்காது போலிருக்கு. இப்படியும் ஊராடா என்று கேட்டுச் சிரித்தான். ஆனாலும் கடைத்தெருவும், புகையிலைக் கடையில் புகையிலையும், புதிதாக வியாபாரம் ஆகிற பட்டணத்து மூக்குப்பொடியும் வாங்க அலைமோதுகிற கூட்டமும் அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சுத்தி இருக்கப்பட்ட பட்டி தொட்டிலேருந்து வர மனுஷா எல்லாரும் என்று சங்கரன் சொன்னபோது அவன் மனசுக்குள்ளேயே இங்கிலீஷில் கணக்குப் போட்டுப் பார்த்தான். செயிஞ்சார்ஜ் கோட்டை நேவிகேஷன் கிளார்க்காகக் குண்டி தேயக் குப்பை கொட்டி வெள்ளைக்காரன் பேரேட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுக்கிற பணத்துக்கு மேலேயே இந்த அரசூரான் கல்லாவில் உட்கார்ந்து வாழைப்பட்டையில் பொடி மடித்துக் கொடுத்தே சம்பாதித்துவிடுவான் என்று நிச்சயம் செய்து கொண்டான்.

அவன் கடையில் இருக்கும்போது தெரு வழியாகப் போன கொட்டகுடித் தாசி கல்லாவில் சங்கரனைப் பார்த்ததும் தடதடவென்று படி ஏறி வந்துவிட்டாள். அவளுக்கும் தலையைத் திருப்பிக் கண்ணைச் சுழற்றும் பொம்மையைப் பக்கத்தில் இருந்து பார்க்க ஆசையாக இருந்திருக்கும் என்று சங்கரன் நினைத்தான். இல்லை, அவனைப் பக்கத்தில் வைத்துப் பகல் பொழுதில் லட்சணமாக இருக்கிறானா என்று பார்க்க வந்தாளோ என்னமோ.

கொட்டகுடித் தாசிக்கு நாலு வெற்றிலையும், எலுமிச்சை பிழிந்த சர்க்கரைத் தண்ணீரும் கொடுத்து உபசரித்தான் சங்கரன். அவளை நெருக்கத்தில் பார்க்கவே, எப்போதும் கூடுவதை விட இரண்டு மடங்கு கூட்டம் கடை வாசலில் கூடி விட்டது. கொட்டகுடியாள் அந்தப் பொம்மையைப் பற்றி ஒரு வெண்பாவும், இந்துஸ்தானி கீர்த்தனம் ஒன்றும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனாள்.

குட்டி யாருடா ? ஷோக்கா இருக்காளே ?

வைத்திசார் சங்கரனை விசாரித்ததில் அசூயை தெரிந்தது.

அதைத் தவறவிடாமல் இருத்திக் கொள்ள முடிவு செய்து சங்கரன் எல்லாம் ரொம்ப நெருங்கின உறவு மாதிரித்தான் என்றான். ஊரிலேயே பெரிய நாட்டியமணி என்றும் அப்புறம் நினைவு வந்தது போல் கூட்டிச் சேர்த்தான்.

படுவா, தேவிடிச்சி தொடுப்பெல்லாம் உண்டாடா உனக்கு என்று வைத்திசார் அவன் விலாவில் இடிக்க, அதில்லே வைத்தி சார், ஆப்தர்கள்லே ஒருத்தர் என்றான்.

லட்சணமாத்தான்டா இருக்கா. கைத்தண்டையிலே புசுபுசுன்னு மயிர் மட்டும் இல்லாட்ட வெள்ளைக்கார ரதியெல்லாம் பிச்சை வாங்கணும். நீ பட்டணத்துலே வெள்ளைக்காரிகளைப் பக்கத்துலே வச்சுப் பார்த்திருக்கியோ. நீயெங்கே அதெல்லாம் பாத்து அனுபவிச்சிருக்கப்போறே பாவம். வெள்ளைக்காரி மாதிரி உடம்பு வாகு லோகத்திலேயே கிடையாதுடா. வழுவழுன்னு வாழத்தண்டு மாதிரி என்னமா ஒரு தேககாந்தி என்றான் வைத்தி.

சங்கரனுக்குச் சிரிப்பு வந்தது. வைத்தி சாருக்குத் தெரியாத வெள்ளைக்காரி உடம்பு முழுக்கச் சங்கரனுக்குத் தெரியும். வைத்தியிடம் அதைச் சொல்ல முடியாதுதான். அவனிடம் மட்டும் என்ன ? சுலைமானிடம், கருத்தானிடம், பகவதிக் குட்டியிடமும் தான்.

நினைக்கும்போதே பகவதிக்குட்டிக்கு துரோகம் பண்ணினது போல் பெரிதாக அவமானமும் குற்றபோதமும் மறுபடியும் கிளம்பி வருகிறது.

ஆனாலும் கொட்டகுடித் தாசிக்கு எல்லாம் சாங்கோபாங்கமாக விவரித்ததில் அன்றைக்கு ஒரு நாள் மட்டும் மனம் லேசானது நிஜம். அவளோடு இன்னொரு ராத்திரி இருக்க முடியுமானால் உடம்பும் நினைப்பும் சுளுக்கெடுத்து விட்டதுபோல் விண்ணெண்று நிமிரும். பாழாய்ப் போன ஜோசியன் அய்யங்கார் யந்திரத்தை எசகுபிசகாக நிறுத்தி அவளுக்குச் சம்போகத்திலேயே இஷ்டம் இல்லாமல் பண்ணி விட்டான். சங்கரன் சொல்லச் சொல்ல அவள் அதை வைத்து எப்படி நூதனமாகப் பாட்டாக ஏற்படுத்திக் கொடுத்தாள் ? அவள் புத்தி சாதுர்யம் ஊரில் யாருக்கு வாய்க்கும் ?

எல்லா ராத்திரி இப்படி ஆசிரியப்பாவும் வெண்பாவும் எழுதிக் கொண்டிருப்பதாக அவள் சொன்னது நினைவு வந்தது சங்கரனுக்கு. அதுவும் கொக்கோகம் பற்றிக் கிஞ்சித்தும் இல்லையாம். எல்லாம் பகவத் விஷயமாம்.

வைத்தி சார், உமக்குத் தமிழ்ச் செய்யுள் பிடிக்குமா என்று கேட்டான் சங்கரன்.

செஞ்ஜார்ஜ் கோட்டையிலே கிளார்க் உத்யோகம் பண்றதுக்கும் உன் மன்னியோட படுக்கறதுக்கும் அதெல்லாம் எதுக்குடா அனாவசியமா என்றான் வைத்தி.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அம்பலப்புழைக்குக் கிளம்ப முஸ்தீபுகள் ஆரம்பித்தன. விசாலமாக, நாலு பேர் உட்கார்ந்து பயணம் போகவும், நடுவிலே அதில் ஒருத்தர் இரண்டு பேர் கால்மாடு தலைமாடாகக் கிடந்து சிரம பரிகாரம் பண்ணவுமாக ஐயணை ஏழெட்டு வண்டி கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

கோமதி மன்னியின் குழந்தைகள் கடைக்கு வந்து தெரு வேடிக்கையில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்தபடி ஊருக்கெல்லாம் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் அந்தத் தலையாட்டி பொம்மையை விட்டுவிட்டு வர மனசேயில்லை அதுகளுக்கு.

ஊர்லேயிருந்து இங்கே வந்ததும் பொம்மையைக் கள்ளிப் பெட்டியிலே போட்டு நம்மாத்துக்கு எடுத்துண்டு போயிடலாம் என்று வைத்திசார் ஆசை வார்த்தை காட்டிக் குழந்தைகளைப் பயணத்துக்குச் சித்தப்படுத்தினான். கையில் முடி இல்லாவிட்டால் அவன் கொட்டகுடித் தாசியையும் கள்ளிப்பெட்டியில் வைத்து எடுத்துப் போய்விடுவானாக்கும்.

கிளம்புகிறபோது சுப்பம்மாளிடமும் அப்படியே கல்யாணி அம்மாள் கண் விழித்திருந்தால் அவளிடமும் சீக்கிரம் நவ வதுவோடும் புத்திரனோடும் திரும்பி வரப்போவதாகவும் யாதொன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் பிரயாணம் சொல்லிக்கொண்டு வரப்போனார் சுப்பிரமணிய அய்யர்.

சுப்பம்மாளைப் பார்த்த மூத்த குடிப் பெண்டுகள் அய்யரின் நாக்கில் இருந்து பெருங் குரல் எடுத்து ஓவென்று அழுதார்கள். கல்யாணி அம்மாள் களைத்துப் போய் நித்திரை போயிருப்பதால் அவளைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்று அவர்களில் ஒருத்தி கூற, குரல் அடக்கி அப்புறம் பேசினார்கள்.

அழாதீங்கோ, நான் கல்யாணியைப் பாத்துக்கறேன். போய்ட்டுச் சீக்கிரம் வந்துடுங்கோ. பாவம் இந்தப் பிராமணர். இப்படிப் புருஷாளாப் பார்த்து மேலே வராம வேறே யாராவது பொம்மனாட்டியாப் பாத்துண்டா சிலாக்கியமா இருக்குமில்லியோ ?

சுப்பம்மாள் கேட்க அவர்கள் வேறே சொந்த பந்தம், நெருங்கிய மனுஷர் என்று யாரும் கிடைக்கவில்லையாதலால் கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரனான சுப்பிரமணிய அய்யரோடு இப்போதைக்குப் போவதாகவும், அழுவது அதற்காக இல்லை என்றும் சொன்னார்கள்.

அப்புறம் எதுக்காக அழுகை ? போற எடத்துலே எல்லோரும் க்ஷேமமா இருப்பா தானே ?

சுப்பம்மாள் சங்கடத்தோடு கேட்டாள்.

ஒரு செளகரியத்துக்கும் யாருக்கும் குறைச்சல் இல்லேடி சுப்பம்மா.

சுப்பிரமணிய அய்யர் குரல் கம்மக் கம்மப் பெண்குரலில் பேசியபோது, கச்சேரி ராமநாதய்யர் உள்ளே எட்டிப் பார்த்துப் போகலாமா என்றார்.

ராமய்யா, நீ கிளம்புடா. ஊர் எல்லைக்குப் போய்ச் சேர்ந்து பிள்ளையார் கோவில்லே சிதறுதேங்காய் போடறதுக்குள்ளே சுப்பாணி வந்துடுவான். சிதறுகாய்க்கு எடுத்து வச்ச பெரிய காய் வேணாம். அது அழுகின மாதிரி இருக்கு. சமையல்கட்டுலே கர்ப்போட்டக் காய் இருக்கு பாரு அதை எடுத்து வச்சுக்கோ. எல்லாம் அம்சமா நடக்கும்.

மூத்தகுடிப் பெண்டுகள் ஏக குரலில் நல்ல வார்த்தை கூற, ராமநாதய்யர் சரியென்று சொல்லிக் கிளம்பினார்.

சுப்பிரமணிய அய்யர் கல்யாணி அம்மாள் தேகநிலை குறித்து சுப்பம்மாளிடம் எப்போதும்போல் விசனப்பட்டார்.

யாதொரு கவலையுமில்லாமல் போய்ட்டு வாங்கோ எல்லாரும். சங்கரனும் பொண்டாட்டியுமா கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்க வரும்போது கல்யாணி நிச்சயம் எழுந்து உக்காந்திருப்பா.

சுப்பம்மாள் பாட ஆரம்பித்தாள். அது ஒரு நலங்குப் பாட்டாக இருந்தது. இரண்டு அடி சொந்தக் குரலில் பாடுவதற்குள் குரல் பிசிறு தட்டி இருமலாக இழுத்துப் போய் நிற்க, மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பிரமணிய அய்யர் மூலம் அந்தப் பாட்டை வெகு அழகாகப் பாடி முடித்தார்கள்.

புது வீட்டுலே தம்பதிகளைக் குடிவைக்கும்போது இதைப் பாடணும் என்றாள் சுப்பம்மாள். சுப்பிரமணிய அய்யர் கண் கலங்கினார்.

எனக்கு விட்டுட்டுப் போறதுக்குப் பயமா இருக்கு அத்தை. நான் வரவரைக்கும் இவ உசுரோட இருப்பாளா ? இந்த அகம் இருக்குமா ? போன தடவை போய்ட்டுத் திரும்பினபோது கரிக்கட்டையா சாமா கிடந்தான். இப்போ கல்யாணியா ?

அவர் குரல் உடைந்து அழுவதற்குள் மூத்தகுடிப் பெண்டுகள் குறுக்கிட்டுத் திரும்பவும் நல்ல வார்த்தை சொன்னார்கள். எல்லாம் சுபமாக, செழித்துத் தழைத்து வளரும் என்றவர்கள் குரலில் சந்தோஷத்தை மீறிய சோகம் இழையோடியது.

எல்லா வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பிப் போவதை ஜன்னல் பக்கம் நின்றபடி கவனித்தாள் சுப்பம்மாள். எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் சங்கரன் கல்யாணம் முடிய, நார்ப்பெட்டிக்குள் இருந்த யந்திரத்து தேவதைகளையும், மூத்த குடிப் பெண்டுகளையும் ஒருசேர வேண்டிக் கொண்டாள் அவள்.

சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலப் பொழுதில் அரண்மனைத் தோட்டத்தில் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் நிறுத்தி வைத்த பெரிய யந்திரம் அவள் கண்ணில் பட்டது. அதில் இருக்கும் தேவதைகளையும் அவள் மனதில் கும்பிட்டாள்.

சுப்பம்மா, இருட்டினதும் அந்த மகாயந்திரம் பக்கத்துலே குத்து விளக்கு ஏத்தி வை. உன்னோட சம்புடத்தையும் அங்கேயே வச்சுடு. இன்னிக்கு நாள் நன்னா இருக்கறதாலே இந்தத் தேவதைகளும் அங்கேயே ஏறிக்கட்டும்.

வண்டிக்குள் இருந்து சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் சொன்னபோது, வைத்தியின் குழந்தைகள் சிரித்தார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு வந்தது.

குளிக்கும் பெண்டுகளைப் பார்க்கலாமோ ?

பக்கத்து வண்டியில் இருந்தபடிக்குச் சுப்பிரமணிய அய்யர் சங்கரனைப் பார்த்துப் பாட ஆரம்பிக்க அவனுக்குத் துணுக்கென்றது.

இந்த மூத்தகுடிப் பெண்டுகள் வேறு என்ன எல்லாம் பார்த்தார்களோ. அவனோடு பட்டணம் வந்திருப்பார்களோ ? கப்பலில் ஏறியிருப்பார்களோ ? வெள்ளைக்காரிக் குட்டிகளோடு உல்லாசமாக இருந்ததை எல்லாம் நொடிப் பொழுதும் கண்ணசையாமல் பார்த்துக்கொண்டு கப்பலோடு ஆடியபடி இருந்திருப்பார்களோ ? கொட்டகுடித் தாசி வீட்டுக்கு அவன் போனபோதும், அவனுக்கு முன்னாலேயே அங்கே இருந்தார்களோ ?

சங்கரனும் கச்சேரி ராமநாதய்யரும் இருந்த வண்டி வைத்தியநாதன் குடும்பம் இருந்த வண்டியைத் தொடர்ந்து விரைய, சுப்பிரமணிய அய்யர் குரல் மாட்டு மணிச் சத்தத்தில் அமுங்கிப் போனது.

குளிக்கும் பெண்டுகளை.

இதென்னடா கஷ்டமாப் போச்சு சுப்பாணி, சித்தெ இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கோ. பெண்டுகள் இருக்கப்பட்ட இடம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னார். மூத்த குடிப் பெண்டுகள் என்னதான் மூத்தவர்களாக இருந்தாலும் ஒரு வைதீகனான தனக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று குறைச்சல் அவர் குரலில் உஷ்ணமாக ஏறி இருந்தது.

சும்மா இரேண்டா. மாட்டுக்கண்ணா. சங்கரன் கல்யாணம் ஆனப்புறம் நாங்க யார் வழிக்கும் வரப்போறதில்லே. எல்லாரும் க்ஷேமமா இருங்கோ.

கனபாடிகள் அப்புறம் வாயைத் திறக்கவில்லை.

எல்லைக்கல் பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் உடைத்து, விக்கினம் இல்லாமல் பிரயாணமும் மேற்கொண்டு ஆகவேண்டியதுமெல்லாம் அமைய வேண்டிக்கொண்டபோது ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

துணிப்பையில் வஸ்திரங்கள் போக, கையிலே ஓலைக் கூடைக்குள் எதையோ பிடித்திருந்தார் அவர்.

வேறென்ன வேலை சோழியனுக்கு. யந்திரம்தான். பொண்ணாத்துலே ஸ்தாபிக்க அச்சாரம் வாங்கியிருக்கானே.

சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் சொன்னபோது சுந்தர கனபாடிகள் அதிர்வேட்டுப் போல சிரித்தார்.

(தொடரும்)

Series Navigation