சாத்திரமேதுக்கடி ?

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ஜெயந்தி சங்கர்


தன் ‘க்ரூ கட் ‘ ஹேர்ஸ்டைலை வலது கையால் படு ஸ்டைலாகக் கோதிக் கொண்டு, தன் நீல ஜீன்ஸ் பையினுள் கைவிட்டுக் கொண்டபடி மீனம்பாக்கத்தின் மூன்று வருட மாறுதல்களை தன் கண்வழி அளந்தாள் பவித்ரா .

‘கல்யாணத்துக்குள்ள ஒரு ‘போனி டெய்ல் ‘ போடறாப் போல கொஞ்சமாவது முடி வளர்த்துக்கோன்னு ‘நிச்சயம் ‘ முடிஞ்ச ஒடனேயே, போன்ல சொன்னேனே பவி. அப்பிடியே வந்து நிக்கறயே. ஒரு கண்ணி பூக்கூட வச்சிக்க முடியாது ‘, வழக்கமான குசலவிசாரிப்புக்கள் முடிந்ததுமே அம்மா தன் ஜேஷ்டப்புத்திரியிடம் குசுகுசுவென குற்றப் பத்திரிக்கை படித்தார்.

‘இப்ப என்ன, கல்யாணத்துக்கு வரட்டா வேண்டாமா ? ஒனக்கு ஒம் புதுசம்பந்திகள்ட ஏதும் கெளரவக் கொறச்சலா இருக்குமோ. ஆமா, பெரியவனோட கல்யாணத்துல நடந்தாப்புல இப்பவும் ஏதேனும் கேக்கப்போறா. அவாட்ட நீ என்னப்பத்தி சொல்லிட்டியோன்னோ ?ஆனா, கல்யாணக் கூட்டத்துக்காக வேஷமா போட முடியும் ? ‘

‘ம், ஆச்சு. சொல்லியாச்சு. ‘

‘சரி, இங்க ஏர்ப்போர்ட்டுலயே எல்லா சீரியஸ் டாப்பிக்கையும் அவுக்க வேண்டாம், ஆத்துக்குப் போய் பேசிக்கல்லாம் ‘ காரில் சாமான்களை ஏற்றியபடியே சொன்னாள் பவித்ரா.

இளவயதில் தானாகச் செய்து கொண்ட திருமணம் சரிவராமல், மணவிலக்கு பெற்று, இரண்டு வருடங்களிலேயே ஜெர்மானியன் ஒருவனை மறுமணம் செய்திருந்தாள் பவித்ரா. தனக்குப் பிடித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டதில் அவளுக்குப் பெருமை, திருப்தி. நாடு நாடாகச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் தனது தூதரக வேலையில் அவளுக்கு அதைவிடவும் பெருமை. நேர்மையாகத் தன் மனதிற்குப் பிடித்தபடி வாழப் பழகியிருந்தாள்.

முன்பு ரமணியின் திருமணத்தின் போது பெண் வீட்டார் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தது அரசல்புரசலாய் பவித்ராவின் காதுகளில் விழுந்தது. ஆனால், பெண்ணின் தந்தை வழிப்பாட்டி முதல் நாள் ஒரு கேள்வியைக் கேட்டு, கலகத்தை ஆரம்பித்தாள். ‘ஆமா, சம்பந்தி மாமி, நாளைக்கி ஒங்க சின்னப்பொண் தானே தாலி முடியப்போறா. எதுக்குக் கேக்கறேன்னா. தப்பா நெனச்சிக்கப்டாது. சபைல எதுக்கு அச்சானியமா, யாரும் கேக்கறாப்ல வச்சிக்கணும் சொல்லுங்கோ. எங்க சைட்ல கொஞ்சம் இதெல்லாம் பாப்போம், அதான். ‘

அம்மாவிற்கு பதில் சொல்லும் சமர்த்தோ தைரியமோ அந்தக்கணம் இல்லை. கேள்வியை உள்வாங்கிக் கொள்ளவே கொஞ்சம் நேரம் எடுத்தது. பக்கத்தில் இருந்த சித்ரா தான் பதில் சொல்ல வாயெடுத்தாள். அம்மா அவளைத் தடுத்து விட்டாள். ‘இவளையே நாளைக்கி தாலி முடியச் சொல்றேன் மாமி. இதுல என்ன இருக்கு ‘, என்று விஷயத்தை முடித்தார்.

‘அம்மா, என்னம்மா இது ? அக்காவப் பத்தி இவாளுக்கென்ன தெரியும் ? பெரிசா பேச வந்துட்டா. நீயும் தலயத்தலயாட்டற. மூத்தவ அவ தான் செய்வான்னு ஏம்மா உன்னால சொல்ல முடியல்ல ? ‘, சித்ரா பொரிந்து தள்ளினாள், அறைக்கு வந்து. பவித்ரா விஷயத்தைக் கேட்டு, ‘சீ, இவ்வளவு தானா ?விடு சித்ரா ‘, என்று சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.

‘இல்லக்கா, இது டூமச். என்னவிட நீ இன்னும் எவ்வளவோ நன்னாவே சந்தோஷமா இருக்க. எனக்கென்னவோ, நீ வாழ்த்தி அந்தப் பொண்ணுக்கு முடி போட்டா இன்னும் அமோகமாவே இருப்பா அவ. அந்தப் பாட்டி சொன்னதுக்கு அம்மாவும் ஒண்ணுமே சொல்லல்ல தெரியுமா ? நான் வாழற லட்ஷணம் ஒனக்கும் எனக்கும் தான் தெரியும். ஏங்க்கா இவாள்ளாம் இப்பிடி இருக்கா ? ‘- சித்ரா.

‘ரிலாக்ஸ் சித்தூ. என்ன நீ, இவ்வளவு படபடக்கற. நான் இந்த மூணு முடிச்சு போடறதுக்குத் தான் ஆறாயிரம் மைல் தாண்டி வந்தேனாக்கும். நான் எந்தம்பி கல்யாணத்துல கலந்துக்கத் தானேடி வந்திருக்கேன். விடுவியா ‘, பவித்ராவால் தான் அவ்வளவு சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிந்தது அன்று.

இப்போது மூன்று வருடங்கள் கழித்து சின்னத்தம்பியின் கல்யாணத்திற்கு வந்திருந்தாள்.

‘சொல்லு சித்ரா, எப்படிடி இருக்க ? அப்படியே ஒங்கல்யாணத் தன்னிக்கிப் பார்த்தாப் போலவே இருக்கடி நீ இன்னும். பெரியவ இப்ப ப்ளஸ்டூல்ல ? சின்னவ எந்த க்ளாஸ் ? ரெண்டும் நன்னா படிக்கறதுகளா ? ‘

‘ ம், இருக்கேன். நீ தான் இளச்சாப்ல இருக்க. பசங்க ரெண்டும் நன்னாப் படிக்கறதுகள். ‘

‘ஆமா, உன்னோட ஆம்படையான் எப்பிடியிருக்கான் ? அதே ‘கோணல் ‘ தானா ? ‘

‘அதே தான். நிறைய இருக்குக்கா, வாயேன் சொல்றேன். ‘

சித்ரா, புரியாத புருஷனுடன் கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் குடும்பம் நடத்தி விட்டாள். வேண்டுமென்றே சிலவற்றைச் செய்து சித்ராவை வருந்தச் செய்வது அவனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இதோ, ஒரு மாதம் முன்பே வந்த டூரை கல்யாண நேரத்தில் கேட்டு வாங்கிக் கொண்டு போயிருந்தான். இதெல்லாம் ஆரம்பத்தில் சித்ராவிடம் கண்ணீர் வரவழைத்தது. அவளை அழவைப்பதில் அவனுக்கு அலாதியான இன்பம். போகப்போக சித்ராவும் மனம் மரத்துப் போனதில் அடுத்த வீட்டுச் சங்கதி போல் பாவிக்கத் தொடங்கினாள். பெயரளவில் ஊரார் கண்களுக்குத் தான் சித்ரா ‘வாழ்ந்தாள் ‘. மற்றபடி உலகில் பல்லாயிரத்தில் ஒரு உயிரினமாக ஏதோ ‘இருந்தாள் ‘.

பவித்ராவிற்குத் தங்கை என்று சொன்னால் மட்டுமே தெரியும் தோற்றம் சித்ராவினுடையது. நுனி முடி வெட்டாத நீண்ட பின்னல்,பூ, புடவை என்ற ரகம்.

‘ரமணி எங்க காணோம் ? ‘

‘அவன் சாஸ்திரிகளாத்துக்குப் போயிருக்கான் ‘ -அம்மா.

‘யாரு, நம்மாத்து ஆஸ்தான சாஸ்திரிகள் ஸ்ரீனிவாசன் தானே ? ‘ அர்த்தபுஷ்டியோடு புன்னகைத்தாள் பவித்ரா.

‘ஆமா, அவரே தான் நேத்திக் கூட கேட்டார்டி, உங்கிட்ட ‘வாக்மேன் ‘ வாங்கிண்டு வரச் சொன்னாராமே. இதோட மூணுதடவ ஞாபகப்படுத்திட்டார் மனுஷன் இந்த ஒரே மாசத்துல ‘

‘ம், போன விசயே வாயவிட்டுக் கேட்டுட்டார் பிராம்ணன், நானும் வாங்கிண்டு வரேனுட்டேன். அதான் வாங்கிண்டு வந்திருக்கேன். ‘

அப்பா இறந்த போது பவித்ரா இருந்தது, நியூஸிலந்தில். நான்கு பேரில் அப்பாவிற்கு அதிக ஒட்டுதல் அவளிடம் தான். அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தபோது மூன்றாம் நாள்.

அடுத்தநாள் சாஸ்திரிகள் சொன்ன மாதிரியே, சித்ரா தன் கொசுவப் புடவையைக் கட்டிக் கொண்டு தலையோடு இரண்டு வாளி பச்சைத் தண்ணீரைக் கொட்டிக் கொண்டு, தன் கைப்பிடி கொள்ளும் அளவிற்கு அரிசியெடுத்து, முற்றத்தில் கரியடுப்பை மூட்டி, சாதம் வடித்ததைப் பார்த்தபடியிருந்தாள் பவித்ரா.

கல் ஊன்றிய இடத்தின் முன் துடைத்து ஒற்றைப்படையில் கோல இழைகளைப்போட்டு விட்டு, தாம்பாளத்தில் ஆறவைத்திருந்த சாதத்தை உருட்டிக் கொடுத்தாள் ரமணியிடம். சித்ரா செய்வதனைத்தையும் சாஸ்திரிகள் மேற்பார்வை பார்த்தார்.

‘இதெல்லாம் தெரியுமான்ன ? யாருக்கும் தெரியாது. தெரியவும் வேண்டாம். சாத்த உருட்டாத, மரிச்சுப்பரிமாறாத, ஒத்தைப்படையில கோலம் போடாதேன்னு பெரியவா சொல்லிக்கேட்டிருப்பேளே, எல்லாம் அசுப காரியங்களுக்குச் செய்யறது, அதான் ‘, என்று க்ளாஸ் எடுத்தார் சாஸ்திரிகள். அவருக்கு அது பத்தோடு பதினொன்று. வீட்டிலிருந்தவர்களுக்குத் தான் சதையைத் துண்டாக அறுத்தெரியும் வேதனை.

பவித்ரா மிகவும் தயங்கியபடி, ‘மாமா, ஒரு நாளைக்கி நானும் அப்பாக்குச் சாதம் வடிக்கட்டுமா ? ‘ என்று கேட்க,

‘ம், யாருமில்லன்னாச் சரி. அதான் ஒங்க தங்கை இருக்காளே. அவாளே பண்ணிடட்டுமே ‘, என்று மேற்கொண்டு பேசவிடாமல் ஒரே போடாகப் போட்டு விட்டார்.

பவித்ராவின் முகம் சுட்டகத்திரிக்காயாய் ஒரே ஒரு கணம் சுண்டிப் பின் இயல்புக்கு வந்தது. அதுதான் பவித்ரா. அன்று மாலையே தன் மகனுக்கு பவித்ராவிடம் கேட்டு ஒரு புதிய முழுக்கைச் சட்டையை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் சாஸ்திரிகள்.

ஒரு வாரத்திற்குப் பின் மூலையில் உட்காரவிருந்த சித்ரா, அடுத்த நாள் மதியமே உட்கார, அடுத்து வந்த மூன்று நாளும் பவித்ரா தன் மனம் போலவே அப்பாவிற்குப் பிண்டச்சாதம் வடித்தாள். அப்பாவே தன்னைப் புரிந்துகொண்டு அவ்வாறு நடத்தி வைத்ததாய் நம்பி குழந்தையாய்க் குதூகலித்தாள்.

பவித்ரா தேய்த்து வைத்திருந்த வெங்கல உருளியில் தன் முகம் பார்த்த சித்ரா, தன் அக்காவின் விதரணையைப் பார்த்துப் பார்த்து ஆனந்தித்தாள். அப்போது மட்டுமில்லாமல், பதின்மூன்றாம் நாள் கிரேகியத்தன்று போட்ட கோலமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் படியிருந்தது. எப்படி அவளால் வருடக்கணக்கில் செய்யாத வேலைகளையும் கூட அவ்வளவு திருத்தமாய்ச் செய்யமுடிந்தது என்று சித்ராவிற்கு ஒரே ஆச்சரியம். குட்டக்குட்டக் குனிந்துகொண்டு செக்கு மாடாய் உழைத்ததில் தனக்கு எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாடின்மை வந்து விட்டதோ என்று பலவாராக யோசித்தாள்.

‘உஸ்ஸு அப்பாடா, கால நீட்டி ஒக்காரமாட்டோமான்னு ஆயிடரதுப்பா ‘, பவித்ரா படுக்கையில் விழுந்தாள். வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. பவித்ரா சாப்பாடு கூட வேண்டாமென்று படுக்கையில் திரும்பிப்படுத்தாள். வாசலில் திடார் சலசலப்பு! கணீரென்று ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் குரலும் கேட்டது. உடன் வந்த தம்பி ரமணியைப் பார்க்க படுக்கையை விட்டு மீண்டும் எழுந்தாள்.

தம்பியுடன் கூட அவளைப்பேச விடாமல், சாஸ்திரிகள் முந்திக்கொண்டு, ‘எப்பிடி இருக்கேள் ? ‘

சாஸ்திரிகளையும் சம்பிரதாயமாய் விசாரித்தாள். ‘ஹூம், ம்..இருக்கேன். அங்கேயெல்லாம் ஆஸ்திரேலியாவுல வேலையெல்லாம் எப்பிடி ?எம்பிள்ள ‘எம் ஸீ ஏ ‘ முடிச்சுட்டான். ஏதாவது நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமா ? ‘, என்று கேட்க, ‘மாமா, நா இருக்கறது, நியூஸிலந்து. வேலைக்கெல்லாம் என்னால ஒண்ணும் பண்ண முடியாது. இருந்தாலும், ‘ஸீ வீ ‘ வேணா ஒரு காப்பி என்கிட்டக் குடுக்கச் சொல்லுங்கோ. தெரிஞ்சவா கிட்டக் குடுக்கறேன். ‘

‘சரி, தரச்சொல்றேன். காலம்பற சத்தரத்துலயே குடுத்துடறேனே. எம்பொண்ணு நன்னாப் படிக்கறா. மேல படிக்க வைக்கத் தான் முடியுமான்னு தெரியல்ல. அவளுக்கு எஞ்சினீரிங் தான் படிக்கணுமாம், ‘ தன் காரியத்திலேயே குறியாய் கேட்டார் சாஸ்திரிகள்.

‘நன்னாப் படிக்கறாங்கறேள். நிறைய படிக்க வைங்கோ. ‘

‘வெள்ளையப்பனுக்குத் தான் எங்க போறதுன்னே தெரியல்ல. பையனப் படிக்க வைக்கறதுக்குள்ளே அந்தப் பாடுபட்டாச்சு. ஏதோ உங்களப் போல உள்ளவா நாலு பேர் மனசு வச்சா கொஞ்சம் சமாளிச்சுடுவேன் ‘, தன் அங்கவஸ்திரத்தைச் சரி செய்தபடி குழைந்தார்.

பவித்ரா நெளிந்தாள். என்ன கொடுக்க, எவ்வளவு கொடுக்க என்று தெரியாமல் முழித்தாள். ஆனாலும் படிக்கும் பெண்ணிற்கு உதவும் தீர்மானமும் மனதிற்குள் செய்து கொண்டாள். ஒரு காகித உரையை எடுத்துக் கையில் வந்த தொகையைப் போட்டு, அவர் கையில் கொடுத்தாள். தன்னைப் பார்த்தால், அவருக்குக் கேட்காமல் இருக்கவும், அவர் கேட்டால் தன்னால் கொடுக்காமல் இருக்கவும் முடியாது என்று அவள் நன்கறிவாள்.

மறு நாள் காலையில் சத்திரத்தில் எல்லோரும் இறங்கியானதுமே சாஸ்திரிகள் தன் பையனின் ‘ஸீவீ ‘யை பவித்ராவிடம் கொடுத்து விட்டுத் தான் விரதத்திற்கான தன் வேலைத் தொடங்கவே மேடை ஏறினார். முதலில் காகித உரையைத் தன் பெட்டியினுள் வைத்து மூடினாள்.

பட்டுப் புடவைகளின் அணிவகுப்பில் தனியாகத் தெரிந்த பவித்ரா வெறும் வாயிற்கு அவலானாள் கல்யாணக் கூட்டத்தில். அதைப்பற்றி துளியும் லட்சியம் செய்யாமல் அவள் கல்யாணத்தை முழுமையாக ரசித்தாள்.

முகூர்த்தத்தின் போது மேடையில் மேளச் சத்தத்தில் அரங்கமே க்ளைமேக்ஸுக்குத் தயாரானது. ராமச்சந்திரன் என்ற ரகு ரஞ்சனியின் கழுத்தில் முதல் முடிச்சைப் போட்டான். அருகில் இருந்த சித்ரா இரண்டாம் முடிச்சைப் போட்டுவிட்டு தன் அக்கா பவித்ராவை மூன்றாவது முடியைப் போடக் கண்களாலேயே அழைத்து, அருகில் பவித்ரா வந்ததுமே, ‘எதுக்கு,..ம்..வேண்டாமே, நீங்களே போட்டுடுங்கோ, ‘ என்று சாஸ்திரிகள் சித்ராவிடம் சொன்னதும் ஆசிரியருக்குக் கீழ் படியும் மாணவியாய் பவித்ரா அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். மணமகளின் நெற்றியிலும் மாங்கல்ய முடிச்சிலும் குங்குமம் இட்டுவிட்டு அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழே கிடுகிடுவென்று இறங்கிய சித்ராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

************************************************************************************

sankari01sg@yahoo.com

sankari01sg@hotmail.com

sankari01sg@sify.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்