அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று

This entry is part of 46 in the series 20040129_Issue

இரா முருகன்


இலைத் தொன்னை. அரண்மனைத் தோட்டம் முழுக்க அதுதான் காலில் தட்டுப்படுகிறது. நெய்யும், சந்தனமும், பாலும், பூவன் பழத்தைக் கூழாக்கி வெல்லப்பாகோடு பிசைந்து வைத்ததும், தேனுமாக எல்லாம் நிரம்பி வழிந்து இருந்தன காலையில். சடங்கெல்லாம் முடிந்து இப்போது தோட்டம் முழுக்கக் காலில் இடறக் கிடக்கிறது.

ராஜா குனிந்து ஒவ்வொரு இலைத் தொன்னையாகப் பொறுமையாக எடுத்தார். அவர் மனம் சந்தோஷத்தால் குளிர்ந்திருந்தது.

நாள் நல்ல படிக்குப் போயிருக்கிறது. போயிருக்கிறது என்பது வெறும் வார்த்தை. காட்டுக் குதிரை மாதிரி அது ஒரு பாய்ச்சலில் போக, கூடவே வாலைப் பிடித்துக் கொண்டு ஓடின பிரமை ராஜாவுக்கு.

நேற்றுப் பகல் முதல் ராணிக்கு தேக செளக்கியம் குறைந்து சாப்பிடப் பிடிக்காமலும், நித்திரை வராமலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் யந்திரம் நிர்மாணிக்க ஜரூராக ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தன.

நேற்றைக்குப் புதிதாக யார்யாரோ வந்து ராஜாவுக்கு மரியாதை கொடுத்துப் போனார்கள். பட்டணத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள் எல்லோரும். கோட்டை உத்தியோகஸ்தன் வைத்தியனாத அய்யனும், புகையிலை அய்யர் பாகஸ்தரான சுலைமான் ராவுத்தன் என்ற அதி கெம்பீரமான ஒரு துருக்கனும் அதில் அடக்கம்.

வைத்தியநாத அய்யன் மட்டுமில்லாவிட்டால் இன்னேரம் துரைத்தனத்தார் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்யமுடியாமல் நொந்து நூலாகிக் கப்பலேறிப் போயிருப்பார்கள் என்று அவன் சொன்னதை வைத்து ராஜாவுக்குப் புரிந்தது. உத்தியோக விஷயமாகவோ, வேறே எதோ காரியத்துக்காகவோ சீமையிலிருந்து வந்து சேர்கிற துரைகள், துரைச்சானிகள் எல்லாரும் அவன் பேரேட்டில் பதிந்தாலே பட்டணக்கரையில் கால்வைத்து வந்த வேலையைப் பார்க்க முடியும் என்பது எத்தனை தூரம் உண்மை என்று ராஜாவுக்கு அர்த்தமாகவில்லை. என்றாலும், இவன் தொடர்பு ஏதாவது விதத்தில் உபயோகமாகலாம் என்று அவருக்கு மனதில் பட்டது.

நேர்மாறாகத் துருக்கன் மேல் அவருக்கு ஒரு வாஞ்சையும் மரியாதையும் பார்த்த க்ஷணமே ஏற்பட்டுவிட்டது. அவருக்கு மட்டுமில்லை. முகத்தை நோக்காடு பிடித்தது போல் வைத்துக் கொண்டு வந்தவர்களை அரை வார்த்தை சொல்லி வரவேற்க வந்த ராணியை அவன் பார்த்த மாத்திரத்தில் ராணி சாகிபா என்று கனமாக விளித்து ஆறடி உடல் கிட்டத்தட்ட மண்ணில் பட குனிந்து சலாம் செய்தான். என்னுடைய மூத்த சகோதரி போல் இருக்கிறீர்கள். இங்கே வந்ததற்கு வேறு எதுவும் பிரயோஜனம் இல்லையென்றாலும் உங்களைச் சந்தித்த இந்த மகிழ்ச்சி ஒன்றே ஆயுசுக்கும் போதும் என்று அவன் சொன்னபோது ராணி உள்ளபடிக்கே மகிழ்ந்து போனாள்.

இந்தத் தம்பி ஒரு சாயலுக்கு என் இளைய தமையன் வெள்ளையன் போல் இருக்காரில்லே என்று அவள் ராஜாவிடம் விசாரித்தபோது கட்டை குட்டையான வெள்ளையனையும் ஆறடித் துருக்கனையும் எந்த விதத்தில் ஒன்று சேர்ப்பது என்று புரியாவிட்டாலும் ராஜா ஆமா என்று தலையாட்டினார். ராணிக்கு சந்தோஷம் கொடுக்கிற காட்சிகளும் வார்த்தைகளும் அவருக்கும் அதேபடிக்கே என்றாகிப் போனது இன்று நேற்றா என்ன ?

சுலைமான், ராணிக்கு நல்ல வாசனை மிகுந்த பிரஞ்சு தேசத்து வாசனைத் தைலத்தை ஒரு குப்பியில் வைத்து மரியாதையோடு அன்பளிப்பாகக் கொடுக்க அவள் அட்டியின்றி வாங்கிக் கொண்டாள்.

சுலைமான் பட்டணத்திலிருந்து வண்டியில் கொண்டு வந்திருந்த ஜாடிகளை ஆயுத சாலையில் ஒரு ஓரமாக இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் அவள் தாராளமாக அனுமதி கொடுத்தது மட்டுமில்லாமல் பரிசாரகனையும், பங்கா இழுக்கிறவர்களையும், ஒன்றிரண்டு காவலர்களையும் அவற்றைப் பத்திரமாக உள்ளே கொண்டு வந்து சேர்க்க ஒத்தாசைக்கும் அனுப்பி வைத்தாள்.

இது நல்ல வாடையாகத்தான் இருக்கிறது. மூக்கில் பட்டால் ஜலதோஷமும் பீனிசத் தலைவலியும் இல்லாது ஒழியும் என்று வைத்தியர் குறிப்பிட்டது சரிதான் என்று அவள் சொன்னபோது ராஜாவுக்கும் அந்த வாடை சகித்துக்கொள்ளக் கூடியதாகப் போனது.

ராணி உள்ளே போன பிற்பாடு சுலைமான் சீமைச் சாராயப் புட்டிகள் இரண்டை ஒரு சஞ்சியிலிருந்து எடுத்து ராஜாவுக்குப் பிரியமாகக் கொடுத்தான். இது எதற்கு என்றாலும் ராஜா அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னார்.

நூதன வாகனக் களவாணிகள் கொண்டு வரப்போகிற சாராயம் எல்லாம் வேறு இடத்துக்குப் போய்ச் சேர வேண்டியது. இது ராஜாவுக்கு காணிக்கை வந்தது. யாரோடும் பங்கு போட வேண்டியதில்லை.

ராஜா இஷ்டப்பட்டால் அவரும் மூக்குத் தூள் விற்பதற்கோ அல்லது சீமைச் சாராயம் விற்கவோ தன்னோடு பாகஸ்தராகலாம் என்று சுலைமான் சொன்னபோது வேணாம், வேணாம். ராஜ்ய பரிபாலனம் செய்கிறவன் நிர்வகிக்கிற தொழில் இல்லை என்று ராஜா கவுரதையோடு மறுத்துவிட்டார். அதெல்லாம் செய்தால் நாலு காசு பார்க்கலாம் தான். ஆனால் முதல் போட வெறுங்கை தவிர ராஜாவிடம் வேறு என்ன இருக்கு ?

காரியஸ்தன் வேறு சுலைமான் புறப்பட்டுப் போனபிறகு அந்த மாதிரி வியாபார விஷயத்தில் எல்லாம் ஈடுபட்டால் துரைத்தனத்தோடு பொல்லாப்பு வரும் என்றும் அப்புறம் கொடுக்கிற மானியத்திலும் அவர்கள் கைவைத்துவிட நேரிடும் என்றும் பணிவாகச் சொல்லிப் போயிருந்தான்.

இறங்கி வந்த முன்னோர்களும் அதெல்லாம் உனக்கு விதிக்கப்பட்டதில்லை என்று அறிவித்தார்கள். ஆனாலும் அவர்களும் துருக்கனை நம்பும்படியும் அந்தக் கோட்டை கிளார்க் அய்யன் விஷயத்தில் ஜாக்கிரதை அவசியம் என்று எச்சரித்தும் போனார்கள். புகையிலைக்கடை அய்யர் யோக்கியமானவர் என்பதால் அவரையும் முழுக்க நம்பலாம் என்றவர்கள் அய்யருக்கு துரை அனுப்பிய இரண்டு லிகிதங்கள் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள்.

ராஜா சொன்னதற்கு மேலேயே அவருக்கு சகாயம் செய்திருப்பதால், குத்தகைக்கு எடுத்த அரண்மனை இடத்துக்குக் குடக்கூலியாக மாதம் முப்பது ரூபாயும் அதை ஏற்பாடு செய்து கொடுத்த வகையில் தனக்கு அதிலிருந்து மாதம் ஐந்து ரூபாயும் தரவேண்டும் என்றும் அவற்றில் அறிவித்திருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.

இதில் துரைக்குப் போகும் பணம் பற்றி சென்னைக் கோட்டையில் இருக்கப்பட்ட மகா பிரபு உட்பட யாருக்கும் தெரியக்கூடாது என்று உத்தரவாம். அதனால் அது மட்டும் இரண்டாவது லிகிதமாக வந்ததாம். எல்லா ஷரத்துக்கும் அய்யர் ஒப்புக் கொண்டதால் அடுத்த மாதம் முதல் ராஜாவுக்கு அய்யர் வகையில் மாசாந்திரம் இருபத்தைந்து ரூபாய் வருமானம் உண்டு என்பதாக சந்தோஷ சமாச்சாரம் சொல்லிப்போனார்கள் அவர்கள்.

குடக்கூலி சம்பந்தமான அந்த முதல் லிகிதம் மாத்திரமாவது ஒரு நகல் எடுத்து ராஜாவுக்கும் வெள்ளைப்பாண்டுக் கிழவன் துரை அனுப்பியிருக்கலாம். ராஜா ஆனால் என்ன, துரையானால் என்ன, எல்லோருக்கும் பணத்துக்குத் தட்டுப்பாடுதான். இருபத்தைந்து ரூபாய் வரப்போகிறதை உத்தேசித்து ஐந்து ரூபாயை வெள்ளைக்காரனுக்கு விட்டுக்கொடுக்க ராஜாவுக்கும் யாதொரு ஆட்சேபமும் இல்லை.

போகிறது. அய்யரையே கேட்டு துரையின் லிகிதத்தைப் பிரதி செய்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்து அந்தப்புரத்துக்குப் போக, ராணி வழக்கம்போல் பகம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

சாயந்திரம் வந்து பார்த்த வைத்தியன் பிரம்ம முகூர்த்தத்தில் வந்து நாடி பிடித்துப் பார்த்து என்ன விஷயம் என்று தெரியப்படுத்துவதாகக் கூறிப் போனான்.

ராஜா ராத்திரிக்குச் சுலைமான் ராவுத்தன் கொண்டு வந்த சீமைச் சரக்கில் கொஞ்சம் போல் பானம் செய்து படுக்க, பக்கத்தில் ராணி இல்லை. அவள் ஆரோக்கியக் குறைவால் தனியாக நித்திரை போவதாக சேடி வந்து அறிவிக்க, ஏதாவது பழவர்க்கமாவது புசித்து உறக்கம் கொள்ளச் சொன்னார் ராஜா.

காலையில் எழுந்தபோதே வைத்தியன் நல்ல செய்தியோடு எழுப்பினான்.

ராணி கர்ப்பவதியாகி இருக்கிறாள்.

அப்போது தொடங்கிய சந்தோஷம் ராஜாவுக்குப் பரிபூரணமாக இன்னும் தொடர்ந்து கொண்டு வந்தது.

ராஜா தோட்டத்தில் எழும்பி நின்ற அந்த செப்புத் தகட்டு யந்திரத்தை ஒரு மரியாதையோடு பார்த்தார். அது என்னத்துக்காக அங்கே நிற்கிறது என்று அவருக்குத் தெரியாது. ஜோசியக்கார அய்யர் சிக்கலான க்ஷேத்ர கணிதம் கொண்டு இத்தனை பாகை கிழக்கு, இவ்வளவு மேற்கு, இவ்வளவு மேல்நோக்கி என்றெல்லாம் குறித்து அந்தப்படிக்குத் துல்லியமாக அதை நிறுத்தி வைத்ததால் எல்லோருக்கும் நன்மை என்றால் அவருக்கும் மகிழ்ச்சிதான்.

ராணி கர்ப்பந் தரித்ததற்கும் அந்தச் செப்புத் தகட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதுக்கு அவரல்லாமல் வேறு ஒரு காரணம் யாராவது நாக்கில் பல்லுப்போட்டுச் சொல்ல முடியுமா என்ன ?

காலையில் மடியாகக் குளித்துவிட்டு, பட்டு வஸ்திரத்தைப் பஞ்ச கச்சமாக அணிந்து ஜோசியக்கார அய்யர் வைத்தியனைத் தொடர்ந்து வந்து ராஜாவை வணங்கினார்.

மஹாராஜா ஸ்நானம் முடித்து வந்தால் ஆரம்பிச்சுடலாம். நடுப்பகலுக்கு முன்னே ஆவாஹனம் பண்ணிட்டா என் கடமை முடிஞ்சது.

அவர் அவசரத்தோடு நிற்க, வைத்தியனுக்கு அப்புறம் மரியாதை செய்வதாக அறிவித்து ராஜா காலைக்கடன் முடிக்கக் கிளம்பினார்.

அதற்கு முன் அய்யரிடம் இந்த சந்தோஷ சமாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ள எல்லாம் பகவான் கிருபை என்றார் அய்யர் மலர்ந்த முகத்தோடு.

அய்யரே, இன்னிக்கு அம்மாவாசை ஆச்சுதா ? எங்க பெரிசுங்க கேட்டுட்டே இருக்கறாங்களே, அவுங்களுக்குப் பிரியமானதைக் கொடுத்துப் போட்டுடலாமே ?

மகாராஜா கோபிச்சுக்கப்படாது. அதெல்லாம் அவாளுக்கு விலக்கப்பட்ட வஸ்து. அங்கேயே கிடைச்சால் பிரயோஜனப்படுத்தறதுலே தடையேதும் இல்லை. இங்கே இருந்து தரமுடியாது. சாஸ்திரம் கண்டிப்பாச் சொல்றது.

யந்திரத்திலே இதற்குண்டான பரிகாரத்தையும் சேத்துடலாமே ? நான் மாசம் ஒரு ரூபாய் உமக்கு அதை பராமரிக்கத் தரணும் என்று எங்க பெரிசுகள் உத்தரவு பிறப்பித்திருக்கு.

ராஜா சொன்னது பொய்தான். அய்யர் கொடுக்கப் போகிற குடக்கூலியில் ஒரு ரூபாயை இவருக்குக் கொடுக்கலாம் என்று சற்று முன்னர்தான் ராஜா தீர்மானித்திருந்தார். வயிறு இளகிக் கொண்டு வரும்போது ஏற்பட்ட சந்தோஷமும் மற்றதோடு சேர அவருடைய மனம் தாராளமாகிக் கொண்டிருந்ததன் விளைவு அது.

பெரியவா சொன்னா அதுக்கு எதிர்ப்பேச்சு உண்டா ? சின்னதா நாலு கணக்கு போட்டு உங்க இஷ்டப்படியே பண்ணிடலாம். ஆனா, நான் எப்படி அதை எல்லாம் கையிலே எடுத்து வார்த்து.

அதை நான் பாத்துக்கறேன். வேறே யாராவது உம்ம சார்பிலே பண்ற மாதிரி ஏற்பாடு செஞ்சு கொடுத்திடும்.

அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சு. ஒரு பவித்ரம் மந்திரிச்சுக் கொடுக்கறேன். வலது கை மோதிர விரல்லே மாட்டிண்டா யார் வேணும்னாலும் அந்தக் கிரியையைச் செய்யலாம். எப்படின்னு ஓலையிலே எழுதியும் கொடுத்திடறேன்.

அய்யர் உற்சாகமாக வார்த்தை சொன்னார்.

நல்ல வேளை, புஸ்திமீசைக் கிழவன் வாய் உபச்சாரம் கொடுத்தேயாக வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவராய் ராஜா கிளம்பிப் போய்க் குளித்து விட்டுப் பட்டும் பீதாம்பரமுமாகத் தோட்டத்துக்கு வந்துசேர அங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ராணி தலை நிறைய மல்லிகைப் பூவும், ஜரிகைப் புடவையுமாக ஸ்திரிகளோடு உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

கொஞ்ச தூரத்தில் ஆண்கள். சுலைமான் ராவுத்தன் மரியாதையோடு தோட்டத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்க, ராஜா அவனைப் பிரியத்தோடு அழைத்துத் தன்பக்கம் ஒரு ஆசனத்தில் அமரச் சொன்னார்.

ஒரு ஓரத்தில் புகையிலைக்கடை அய்யர் மகன் சங்கரன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் பட்டணம் போய் வந்ததிலிருந்து முகத்தில் தீவிரமும் ஆத்திரமும் போய் ஏதோ சொல்ல ஒண்ணாத குழப்பம் வந்து அப்பியிருப்பதாக ராஜாவுக்குப் பட்டது.

அவனையும் ராஜா அமரும்படி அழைக்க அவன் வீட்டு மனுஷர்களோடேயே இருப்பதற்கு விருப்பப்பட்டவன் போல் கையைக் கூப்பி இதுவே போதும் என்பதுபோல் பார்த்தான்.

ராஜா வேடிக்கை விசித்திரம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பிராமணக் கிழவி பெரிய மூங்கில் அடுக்கைக் கொண்டு வந்து ஜோசியக்கார அய்யரிடம் நீட்டினாள். துரை வந்தபோது பழுக்காத்தட்டு சங்கீதம் நேர்த்தியாகப் பாடியவள் அவள்.

இதுக்கென்ன அவசரம் மாமி ? இந்த தேவதைகளை மெல்ல மேலே ஏத்திக்கலாமே ? இன்னும் ஒரு வாரம் சிரத்தையா அபிஷேகம் பண்ணுங்கோ. அதுக்குள்ளே கணக்கெல்லாம் போட்டு வச்சுடறேன்.

ஜோசியர் சொன்னபோது முகம் எல்லாம் ஏமாற்றம் எழுதிக் கொண்டு அந்தக் கிழவி மூங்கில் கூடையோடு வாசலுக்கு நடந்தாள்.

அப்புறம் ஒரு மணி நேரம் ஜோசியக்கார அய்யர் தரையில் கிடத்தியிருந்த யந்திரத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து ஒவ்வொரு திசையிலும் சுண்ணாம்புக் கட்டியால் ஏதோ குறிகள் எழுதி ஓலைச் சுவடியின் ஒரு நறுக்கையும் மேலே எடுத்து வைத்தார். அவர் சொன்னபடிக்கு ராஜாவும் மற்றவர்களும் இலைத் தொன்னைகளில் இருந்த பாலையும், மற்றதையும் நிலத்தில் கவிழ்த்தார்கள்.

சூரியன் உச்சிக்குப் போகும் நேரத்தை எதிர்பார்த்தபடி இருந்த அய்யர் கண்காட்ட, கொல்லன் அவர் சொன்ன இடத்தில் அடித்து நிறுத்திய அச்சில் யந்திரத்தை ஏற்றினான். செவ்வகங்களும், சதுரங்களும், முக்கோணங்களும், வட்டமுமாக இருந்த அந்தச் சிக்கலான யந்திரம் வானத்தைப் பார்த்து சவால் விட்டதுபொல் ஒரு வினாடி உயர்ந்து, நடக்கிறது நடக்கட்டும் என்பதுபோல் ஒரு ஓரமாகத் தாழ்ந்தது. அது தரையில் படாதவாறு நான்கு வலிய தேக்கங்கட்டைத் தூண்களைத் தச்சன் அய்யர் காட்டிய இடங்களில் நிறுத்தினான் அப்போது.

இதை ஸ்தாபித்து முடிந்தாகி விட்டது என்று அய்யர் அறிவித்தார். இன்னும் இரண்டு நாழிகையில் அரசூரில் கனத்த மழை பெய்யும் என்றும் ஆறு குளம் எல்லாம் தண்ணீர் கரைபுரண்டு வரும் என்றும் சொன்னார் அவர்.

ராஜா கடைசி இலைத் தொன்னையை எடுத்து ஓரமாக வைத்தபோது அவர் தோளில் இரண்டு தூறல் துளிகள் விழுந்தன. அது மழையாவதற்குள் ராஜா தலைக்கு மேல் குடை பிடிக்கப்பட்டது.

சமூகம் உத்தரவாக்கினா, அய்யர் சொன்னபடிக்கு படைச்சுட்டுக் கிளம்பிடுவோம்.

குடையைப் பிடித்தபடி குட்டை பனியன் மெதுவாகப் பேசினான்.

ஆமா, நாங்களும் கிளம்பிப் போய் நேரத்தோட ஓய்வெடுத்துக்கறோம்.

புஸ்தி மீசைக் கிழவன் சொன்னான். அவன் குரல் ஏனோ வருத்தமாக இருந்தது.

இருக்காதா என்ன ? பாப்பாத்தி அம்மாளை யந்திரத்துலே ஏத்தி மேலே அனுப்பிட்டாரே அய்யர்.

இன்னொரு பெரிசு சொன்னது.

எங்கே என்று விசாரிக்க ராஜாவுக்கு ஆர்வம் இல்லை.

தோட்டத்தில் பூக்குப்பையை ஈரமாக்கிவிட்டு இன்னும் வலுக்காமல் மழை சுருக்கமாகப் பெய்துவிட்டு நிற்க, ராஜா உள்ளே போனபோது ராணி நித்திரை போயிருந்தாள்.

நெட்டை பனியன் கூடத்தில் காத்துக் கொண்டிருந்தான்.

வண்டியைக் கிளப்பி வை. முடிச்சுட்டு வந்துடறேன்.

அவன் குட்டையனிடம் சொல்ல குட்டை பனியன் மடக்கிய குடையை இடுக்கிக் கொண்டு வாசலுக்குப் போனான்.

ஆரம்பிக்கலாம் என்றார் ராஜா.

(தொடரும்)

Series Navigation