திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)

This entry is part of 46 in the series 20040129_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/5/

ஆண்பால் பெண் பால் … காமத்துப் பால்!

மானுடத்து மழைத்துளி உள்ளுக்குள் குளிர்விக்க வல்லது. உயிர்க்குலை உச்சியை சிலிர்க்க வைக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை சார்ந்த அழகுகள் வசப்பட இம்மாதிரி விஷயங்கள்… புலன்உணவு- புலால் உணவு தேவைப்படத்தானே செய்கிறது…

தனுஷ்கோடிக்கு சில இரவுகள் உறங்கக் கொள்ளவில்லை. உடம்பு அலுத்துக் கிடக்கிறது. அந்நேரம் மனநாயை அவிழ்த்து விட்டுவிடுதல் சகஜம்தான். என்றாலும் சற்று தள்ளிவரை அலைந்துவிட்டு சிறுவட்டப் பாதையில் திரும்பித் திரும்பி ஓயாமல் அது அலைவதாய் இருக்கிறது. ஏன் அப்படி அலைகிறது அது… யாருக்குத் தெரியும்… அதற்கே தெரியாது என்றுதான் தோணுகிறது. சும்மா முகர்ந்து கொண்டே யிருத்தல்… என அதன் பிறவியம்சம். அதை மாற்ற முடியாது. சராசரிகளிடம் அதை மாற்றிக்கொள்ளப் பிடிவாதம் பிடிப்பதும் நல்லதல்ல- அல்லவா ?

காதல். வாலிபம் ஆடுகிற வாலிபால்.

மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை துற- என்கிறார்கள் பெரியாம்பளைகள். அறிவுரைங்களா இது ? சாபம்!

அதைவிட வாழ்க்கையைத் துற-ன்னிருங்கப்பா. சிம்ப்பிள்!

அறத்துப்பால் பொருட்பால் கண்ட வள்ளுவர் இன்பத்துப்பால் பற்றியும் எடுத்துரைத்தல் காண்க. மனுசன் துள்ளி விளையாண்டுட்டான்யா… ஊடல் பற்றி வள்ளுவர் சொல்லணும்… நாம கேட்கணும். மனுசனை கலாட்டாப் பண்ணிப்பிடறாரு. கருத்து அம்சம் தவிர… வள்ளுவத்தில் நாடக அம்சமா மனசை பம்பரக்குத்து போல அந்தாக்ல அபீட் எடுத்துப்பிடறாரு.

அம்பிகாவுடனான இனிய தனிமையான தருணங்கள்…

மொட்டைமாடி அப்போதெல்லாம் அவ்வப்போது குப்பை நீக்கப்பட்டு அம்சமாய் இருக்கும். தரையையே கூட அவ்வப்போது கழுவி விட்டு விடுவாள். கனவுலக வாழ்க்கைபோல இருந்தது நிஜமே. எல்லாம் போச்சேய்யா… கைவிட்டுக் கைநழுவிப் போச்சே…

நல்லவள்தான். எளிமையானவள். மடிப்பூனை. யாராவது தடவிக் குடுத்திட்டே இருக்கணும். சொகுசுக்காரி. என்பதாலேயே தனிமையான தருணங்கள் இனித்துக் கிடந்தன. அதற்கு அவன் தவித்துக் கிடந்தான். அவற்றுக்குக் காத்திருப்பது பெரும் சுவாரஸ்யமாய் இருந்தது.

அவளுடன் தனு வாழ்ந்த வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் என்று பார்த்தால் இனிமையானது அல்ல. கல்லும் மண்ணுமான கடினப்பாதை. முட்புதர். வறண்ட வெளி நடைப்பயணம். அதை குறுக்குப் பாதை எனக் கடந்து போயிட்டால்… மெய்ன் ரஸ்தாவை எட்ட… நல்ல குளிரான மரவெளி. சைக்கிள்ல போனா சுகமோ சுகம். பாட்டெடுக்கும் தன்னைப் போல. விசிலடிக்கத் தோணும்… சிவாஜி பாடினாம் பார்… வந்தநாள் முதல் இந்தநாள் வரை வானம் மாறவில்லை… எதித்தாப்ல ஆம்பளை குறுக்க வந்தா சைக்கிள்மணி அடி. பொம்பளையாள் வந்தா ? மணி நீ அடிக்கண்டாம். தானே அடிக்கும் மாப்ளைக்கு!

இரவின் வெறுத்துப்போன மாடியுலாத்தலுக்கு ஒரு நகைச்சுவை நினைவில் தட்டுகிறது.

மாப்ளை, ஒரு அனாசின் மாத்திரை. அதை கர்ப்பத்தடை மாத்திரையா பயன்படுத்த ஏலுமா ?

ஏன் மாப்ளை முடியாது ? அனாசின் மாத்திரையை முட்டிகளுக்கு நடுவுல வெச்சிக்கிடணும். ராத்திரிப்பூரா கீழ விழாமப் பாத்துக்கணும். அவ்ளதான்!

டிங் டாங் பெல். புஸ்ஸீ இஸ் இன் தி வெல்…

எல்கேஜி பாட்டாய்யா ? பெரியாள்ப் பாட்டு!

மொட்டைமாடி வெளி. நிலவொளி நீலவொளி சேத்துக்க. ஒரு காத்து அந்தாக்ல கையத் துாக்கச் சொல்லும். ஓரு ஆழ்ந்த சுவாசத்துக்கு நல்வாசனைகள் எட்டும். வெளி வாசனை. மானுடத்து வாசனை.

அட கனவின் உட்பூ விரியலாச்சு. கிறங்கடிக்கிற வாசனையாச்சே. மனுசாளைப் போட்டுத் தாக்கிப்பிடும்… தாக்கறதுன்னா என்ன… ஒரு தாலாட்டு. சிருங்காரக் கோலாட்ட கும்மாளம்.

ஓடுதய்யா உள்ளே ஒரு ரஜபுதன லம்பாடிப் பாடல். /ஜிங்குடக்கு… டக்குடிங்டிங்./ /ஜிங்குடக்கு… டக்குடிங்டிங்/… உள்த்தோணி மல்லாந்து வானத்தைப் பார்த்து பிரமித்து வாயைப் பொளந்துருமே.

காலமே காற்றை நிறுத்திக் கைகட்டிக் கொண்டதங்கே.

மன்மத மாகாவியம் கேளுங்கோ மகாஜனங்களே.

பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் அழகெனக் கண்டுகொண்ட அற்புதவேளை பற்றி அறியக் கேளுங்கள்.

ஒரு ஆம்பளை இப்பிடி இனித்துக் கிடந்த வேளையில் கேட்டான் ஒரு சந்தேகம்- பெண்களின் கூந்தல் மணம் இயற்கையா செயற்கையா ?

அட உன் மனசின் மணமப்பா அது. உன் மணம். உனக்கு மட்டுமே தெரிந்த உன் சம்சார சமாச்சாரம் மாப்ளை. அதே மணம் எனக்கு ஒத்துக்காது! தெரியவுந் தெரியாது!

காதல் வேளையின் உன்மத்த உச்சத்தில் தலகாணிகளும் தலகாணிகளும் நேரமேற ஏற கிட்டே கிட்டே வந்து குசுகுசுவென்று சிரிப்பாச் சிரிச்சி ரகசியம் பேசுகின்றன…

பகலில் மனுசாள் கல்யாணம். இரவில் தலகாணிக்கும் தலகாணிக்கும் திருமணம்.

இடதுபக்கத் தலகாணியான நான் வலதுபக்கத் தலகாணியான உன்னை இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியேன் என உறுதி கூறுகிறேன்.

ஆமென்-

யானும் அவ்வண்ணமே…

ஆமென்-

ரொம்ப நெருக்கம். எது யார் தலகாணின்னே தெரியாதபடி ஒரு குழப்படி. குளறுபடி. அலங்கார வேளை. இவாள் தலகாணியை அவாள் மாத்திக் கிட்ட மாதிரி பொறண்டு படுக்கறதும் உண்டு. இன்னும் சொகுசுப் பார்ட்டிங்க என்ன செய்யும் ?

தலகாணிக்கு மேல தலகாணி – ரெட்டைத் தலகாணியடுக்குதான் போங்க.

பெண் தன் வெட்கத்தை விரும்பியே தொலைத்த வேளை. வளையலை வெறுத்த வேளை! சத்தம் வெறுத்த வேளை.

குடுத்தாய்யா ஒரு முத்தம். வெளியீரம். உள்ளே பத்தி எரியுதே- அதெப்படி ?

மூடிய போர்வைக்குள் ஒரு முத்துக் குளியல். முத்த சாம்ராஜ்யம் அது.

வெறும் உணர்ச்சிகளின் அலையெடுப்புன்னு சொல்லிற முடியாது அதை. மூளையின் நரம்புகளையே வீணைத் தந்தியா மீட்டும் விநோத வேளை அது.

பொழுது சூடேறினா ? மழை வரணும். இது விதி. அதை மாத்த ஆராலும் ஏலாது.

அட ஒரு பெண்சென்மம் நகை விரும்பாத, உடையும் விரும்பாத வேளை உண்டா ? உண்டே… எனக் கெக்கெலி காட்டி ஆனந்தச் சிரிப்பு கொண்டாடியது வானம்.

இது நிஜமா… நினைவுதானா… எனக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்.

முடிவுக்கு வர முடியல்லியே சாமிகளா…

கிள்ளல் வலிக்கவே இல்லை!

கிள்ளல் அல்ல அது- கிளுகிளுப்பு.

முடிவு தெரிஞ்சி என்னாப்போவுது… விட்டுத் தள்ளு என மூளையை மூலைக்கு ஒதுக்கிவிட்டு… அவர்கள் நெருக்கங் காட்டினார்கள்.

வெளிக்கிளம்பி இரையெடுத்த மானுடம் சிறையைத் தேர்ந்து சிருங்காரமாய் ஒடுங்கிக் கொள்கிறதே.

இலைவிரித்து விருந்தளிக்கிற விஷயம் அல்ல. தலையையே கனவு விருந்துக்கு இலையாய் விரித்தாள் அவள்.

இரவு நாடகம். கதை திரைக்கதை வசனம் இயக்கம்- தனு அம்பிகா.

பார்வையாளர்கள் அனுமதி இல்லை.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation