திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)

This entry is part of 45 in the series 20040122_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/4/

அழுது, உள்ளே கலங்கித் தெளிந்தாள் அவள். கண்ணீர் புனிதமானது. உள்ப் புண்ணை அழுகை ஆற்றவல்லது. உள்க்காயங்களை அது விரைந்து ஆற்றுகிறது. இடுக்கண் வருங்கால் வாய்விட்டு அழுக. அழுகை- கிணறைக் கலக்கித் துாரெடுப்பதைப் போன்றதே அது.

அவள் புதுசாய் வாழ்க்கை வாழ விரும்பினாள். வாழ்க்கைக் கணக்கை புதுசாய்த் துவக்குகிற பாவனையில் அமைத்துக் கொள்ள விரும்பினாள். அவள் முட்டாள் அல்ல. அப்பா அவளை அப்படி வளர்க்கவில்லை. தமிழ்த் தாகம் கொண்ட வம்சம் அது. வெறும் துட்டுக்கு ஈஸ்வர சன்னிதியில் பாட்டெடுத்த தலைமுறையா அது ? வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கிறது. ஏராளமாய் இருக்கிறது. எக்காலத்திலும் வாழ்க்கை என்கிற பேரனுபவம் முடிகிறதே யில்லை. தீர்ந்து தீய்ந்து போவதே இல்லை. உயிர் உள்ளவரை அனுபவம் ஓயுமோ ?

ஆ- சாவு! சரி- அதேகூட, எப்பேர்ப்பட்ட அனுபவம். கண்டவர் விண்டிலர் என்கிறதான மகானுபவம் அது அல்லவா ? வாய்த்தால் அது நல்ல விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சுகம் ஓர் அனுபவம் எனில் துன்பம் வேறு வகையில்… அதுவும் ஓர் அனுபவம். சுகம் என்றால் என்ன எனக் கற்றுத் தர துன்பம் உலகத்துக்கு வேணாமா என்ன ? சாவு எனினும் ஒதுக்குதல் கோழைத்தனமானது… வரும்போது வரட்டும். வராமல் தீராது என்கிற அளவில்… அதற்கு முன்னான பிற அனுபவங்களை ருசிக்கலாம்.

நாளிது வரை- அடடா- வாழ்க்கைப் போக்கோடு அல்லவா அவள் சிக்கி யிருந்தாள். கிடைத்த வாய்ப்புகளில்… போதும் என்கிற அளவில் பணிந்து ஏற்றுக் கொண்டிருந்தாள். அப்படி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கானது அல்ல இவ்வுலகும் அதன் பேரனுபவங்களும். அவர்களால் எந்நிலையிலும் இவ்வுலகை எடைபோட புரிந்து கொள்ள முடிந்ததே யில்லை. எத்தனை அசடாக வாழ்ந்து விட்டாயடி பெண்ணே… சரி பரவாயில்லை. இனியும் தாமதித்தல் வேணாம். களை பழைய நினைவுகளை. நீ மானுடப் பொன்பிள்ளை. சுடர். துாண்டப்பட்ட சுடரொளி. பிறர் விழி சுட்டும் சுடர்.

மாசிலாமணியுடனான பணிந்த வாழ்க்கை… பெற்றுக் கொண்ட அடிகள். அப்போதுகூட சீற்றம் காட்டாமல் விழுந்து கிடந்தாள் அவன் காலடியில்- பணிந்து கிடந்தாள். எத்தனை தவறு. அவன் தானாகவே ஒதுங்கிக் கொண்டான். நல்லதுதான். தினப்படி வருகிறதும் அவள் உழைப்பைச் சுரண்டுகிறதும்… நடுத்தெருவில் கத்துகிறதும்… எத்தனை வசைச் சொற்கள். அவன் ஒரு வசைச்சொல் அகராதியாய் இருந்தான்… வசைபட வாழ்தலும் வதைபட வீழ்தலும் உனக்குத் தேவையா என்ன ?

தமிழ்ப் புலவர் பட்டத்துக்கு ஆசைப்பட்டவளிடம் வசைச்சொல் பாடம் நடத்தினான் அவன். ஆ- அவனை விடு. அவள் பணிந்தாளே… அடிமையாகி பணிந்து பாதமேந்திக் கிடந்தாளே பாதகத்தி… மோதி மிதித்து முகத்தில் தீ உமிழ்ந்திருக்க வேணாமா ? திசையற்று விட்டதாய், திகைத்து நின்று விட்டாய்.

திசைகளைத் தொலைத்து விட்டதாய் நினைத்து அவள்… தானே அல்லவா தொலைந்து போனாள்.

எட்டு திசையும் தொலைந்தாலும் எழுந்து கொள்ள இடம் உண்டு. மேலே வானம்- திசை ஒன்பது. கீழே பூமி. பத்தாவது திசை… இருக்கிறது அல்லவா ? விரல்களை மூலதனமாக்க… விளைநிலம் ஒத்துழைக்கும். விழிகளை விரியத் திற- வானமும் வளைந்து வரும்.

உன்னிடம் உள்ளன ஆயிரம் சாவிகள். பிரச்னைகள் பூட்டு போல. பொருத்திப் பார்க்காமல் முயற்சியே செய்யாமல் மூளியாய் இருத்தல் மதியீனம். மதியெனும் கோலெடுத்து வாழ்க்கைப் படகைச் செலுத்து. நல்வாழ்த்துக்கள்.

கண்ணாடியில் பார். உன் எதிரே நிற்கிறாளே சிரித்தபடி அந்தப் பெண். அவளிருப்பாள் உனக்குத் துணை. உலகம் அழகானது. பெரியது. மகாக் கதவுகள் கொண்டது அது. ஆனால் அவை விரியத் திறந்து கிடக்கின்றன. பிரச்னை நீ கண்ணை மூடிக் கொண்டிருப்பதே… விழிகள் மதகுகளைப் போல.

எழுந்துகொண்டு கண்ணாடியில் பார்க்கிறாள் அவள். அது யாரது ? அழுதபடி… யாரடி நீ ? அவள் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தாள். வா பெண்ணே. உனக்கு நல்லதோர் வாழ்க்கை காத்திருக்கிறது. வா போகலாம். நல்வாழ்த்துக்கள்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிதல் நன்றோ ?

கண்ணைத் துடைத்துக் கொண்டது பிம்பம்.

வா என்னோடு.

அவள் கண்ணாடியில் இருந்து இறங்கி இவள்பின்னே… பணிந்த நாயாய்க் கூட வந்தாள்.

நேற்றுவரை நீ, சுடர் என்ற பெயரிலும் இருளாய் இருந்தாய். இன்றுமுதல் வெளிச்சமாகிறாய்.

பிம்பம் சிரித்தது.

சரி பரவாயில்லை. இதோ இந்த இரவு அவள் அவளுக்குத் திரும்பக் கிடைத்த இரவு. பகலில் காணாமல் போனவள்… இருளில் திரும்ப வந்தாள்… தன்னைச் சுற்றி வெளிச்சமாய்… வெளிச்சம் பரப்பியபடி வந்தாள். கருப்பு முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்த வெள்ளைக் குஞ்சு. வெளிச்சக் குளுவான்.

அவள் பார்வைக்கு நழுவித் தனிவழிப் போன மாசிலாமணி. ஒருவகையில் அவன் அவளது முன்னடையாளம். சரி- தொலைகிறான்- வழிகாட்டி!

சிமிழுடைத்த சூரியன்!

கீழ்த்திசை பாடியது வாழ்த்திசை…

—-

ரயில் தாலாட்டியது அவளை. ரயில் அநாதைகளின் தொட்டில்.

கையில் இருந்த சிறு துட்டில் அவள் ரயில் ஏறியிருந்தாள். சிறு தேவைகள் இருந்தன. உள்மூச்சு திணறுந் தோறும் ஓய்வு கொள்வாள். கிளம்புவாள். தெரிந்த வியாபாரம் பூ வியாபாரம். பூக்கட்டும் தொழில். உதிரிப் பூக்களை ஒன்று திரட்டி நாரில் தொடுத்தல்… தன் வாழ்க்கையைத் தானே திரட்டி, கட்டமைத்துக் கொள்வதாய், சீரமைத்துக் கொள்வதாய் அது அமைகிறது. காற்று ஒரு கதவைச் சார்த்திக் கொண்டு உள்நுழைந்து… ஆனால் இன்னொரு கதவைத் திறந்து கொண்டு வெளியேறியது.

இடைப்பாடுகள் இடர்ப்பாடுகள் பொருட்டே அல்ல. காயங்கள்… ஆ- சைக்கிள் கற்றுக் கொள்கையில் பட்டுக் கொள்வதில்லையா ? அதுபோலத்தானே ?

அவளைத் தீண்ட வந்த மனிதமிருகக் கரங்கள். கோரைப்பற்களை அற்பமாக, கோரைப்புற்களாக உதறி வெளியேறினாள். பெண்ணை வெற்றுடம்புகளாகப் பார்க்கும் சதைகுத்திப் பறவைகளை… மானுடக் கழுகுகளை… ஆண்களை அவள் ஏராளம் சந்திக்க நேர்ந்தது. பலியாகவும் நேர்ந்தது. அவற்றை உதறி மறந்து துள்ளியெழ வேண்டியிருந்தது.

அழுகையும் காலமுமே அவளது மருந்துகள்-

—-

பாண்டிச்சேரி எப்படி வந்தாளோ ? அழகான ஊர். தெளிவான

வீதியமைப்பு. விதிகளை அறிந்த அமைதியான மனிதர்கள். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம். அதன் வாயிலில் பூக்களுடன் அவள் காத்திருந்தாள். சற்றே ஈரப்படுத்தப்பட்ட பூக்கள். அன்னையின் பாதங்களுக்கான மலர்கள் அவை. விதவிதமான மலர்கள். எட்டு திசையில் இருந்தும் வந்திருந்தன அவை. கனவுகளுக்கு விருந்து. மனக் காயங்களுக்கு மருந்து… எந்த வெயிலும் தெரியாதபடி முதல் கட்ட அளவில் அவளுக்கே அவை குளுமை தந்தன. தீயினால் புண் சுடும்… பூவினால் அவள் குளுமை கண்டாள்.

வெளிச்சம் தீண்டாத அதிகாலையிலேயே அந்த வளாகம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. ஊரெல்லை தாண்டி மாநிலம் தாண்டி நாடும் தாண்டி வருகிறார்கள் மக்கள். அன்னையின் சிறப்பு வழிபாடு நாட்களில் அவளது வியாபாரமும் அமோகம். அந்த ஜனக்கூட்டம் பார்க்கவே அவளுக்கு அத்தனை சந்தோஷம்.

தினப்படி வருமானத்துக்குப் பஞ்சமில்லை. துன்பம் என்பதைப் பஞ்சென உணர்ந்த மனசின் மாற்றம்… மனம் மிதந்தது. அம்மனின் வாயிலில் அவளே ஒரு பெரிய பூவானாள்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation