அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

This entry is part of 45 in the series 20040122_Issue

இரா முருகன்


ராஜா என்ன சொல்லிப் பார்த்தாலும் ஜோசியர் விடுகிற வழியாக இல்லை.

இதை நிர்மாணம் செய்யப் பக்கபலமா இருந்து சகல ஆதரவும் கொடுத்தது சமூகம்தான். லோக க்ஷேமத்துக்காக யந்திரத்தை ஸ்தாபனம் பண்ணியாச்சு. அங்குரார்ப்பணம் செஞ்சா அது பாட்டுக்கு இயங்க ஆரம்பிச்சுடும். நீங்க வந்தால்தான் அதெல்லாம் நடக்கும்.

அய்யன் கெஞ்சிக் கூப்பிடும்போது தட்ட முடியவில்லை. ஆனாலும், இந்த வகையில் இன்னும் ஏதாவது காசு பிடுங்கத் தந்திரோபாயமோ என்றும் சந்தேகமில்லாமல் இல்லை.

வரலாம்தான் அய்யரே. ஆனா, அரண்மனைத் தோட்டத்திலே அந்த இடம் புகையிலை வீட்டுக்காரங்க பாத்யதையிலே இருக்கப்பட்டதாச்சே ?

அது குத்தகை தானே மகாராஜா ? அதுக்கு அப்புறம் உங்களுக்குத்தானே திரும்பி வரும் ? இந்த பூபரப்புக்கெல்லாம் அதிபதி நீங்களில்லையா ?

சந்தேகமே கிஞ்சித்தும் வேண்டாம். அய்யன் குடுமியை முடிந்து கொண்டு இறங்கி இருப்பதே மடியிலே பணம் முடிந்துகொண்டு திரும்பத்தான். இன்னும் தொண்ணூத்தொம்பது வருசம் கழித்து புகையிலைக்காரர் இந்தா பிடி என்று எல்லாவற்றையும் திரும்ப ஒப்படைத்துவிட்டுப் போக உயிரோடு இருக்கப் போவதில்லை. வாங்கிக் கொள்ள ராஜாவும் இருக்க மாட்டார். ஜோசியக்கார அய்யரும் சாட்சிக்கு வந்து நிற்க மாட்டார் என்பதும் திண்ணம்.

ஆனாலும் விநோத வாகனக் களவாணிகள் இருப்பார்கள் என்றார்கள் முன்னோர்கள். ஜோசியக்கார அய்யரோடு அவர்களும் நுழைந்திருந்தார்கள் வார்த்தை சொல்ல.

முன்னோர்கள் சொல்வது நடக்கக் கூடியதுதான் என்று பட்டது ராஜாவுக்கும்.

புகையிலை அய்யருக்குப் பாகப் பிரிவினை செய்தமாதிரி அரண்மனைக்குள் இடம் பிரித்துக் கொடுத்த பிற்பாடு முன்னோர்களும் தங்குதடையில்லாமல் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் முன் எப்போதையும் போல். ஆனால், அந்தப் பாப்பாத்தியம்மாளைக் கொஞ்ச நாளாகக் காணவில்லை அவர்களோடு.

எல்லாமே நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டார் ராஜா.

சுப்பிரமண்ய அய்யர்வாளும் நீங்க வந்து முன்னாலே இருந்து நடத்திக் கொடுத்தாத்தான் நிறக்கும்னு ஏக அபிப்ராயத்தோட இருக்கார். இதுக்கான சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவர் செலவிலே தான் நடக்கப்போறது. சக்ரவர்த்திகள் சக்ரவர்த்தினியோடு எழுந்தருளி இருந்து அனுக்ரஹம் செஞ்சா எதேஷ்டம்.

ஜோசியக்கார அய்யர் திரும்பச் சொன்னார்.

புஸ்தி மீசைக் கிழவன் சாவுக்குக் கூப்பிட்டனுப்பி பிருஷ்டத்தைத் தாங்கிப் பிடித்து மைத்துனன் வகையறாக்கள் உபச்சாரம் செய்ததை விட இது அதிக சந்தோஷகரமானதாக இருந்தது ராஜாவுக்கு. இந்த மரியாதையோடேயே தானும் ராணியும் போய்ச் சேர்ந்துவிட்டால் அப்புறம் சீமையில் போய்க் குளிர்காலத்தில் மூத்திரச் சட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கையேந்தியபடி அலைய வேண்டாம்.

சொல்லிடலாமா ? சொல்லிடலாமா ?

புஸ்தி மீசைக் கிழவன் யாரையோ கேட்டான். அவன் பாதிரியார் மாதிரி அங்கியும் காலில் தோல் பாதரட்சைகளும் அணிந்து முன்னைக்கிப்போது மிடுக்காக இருந்தான். இரண்டு வில்லை கண்ணாடிச் சில்லுகளை எப்படியோ கட்டி நிறுத்தி அதைக் கண்ணுக்கு முன்னால் அணிந்து கொண்டும், இடுப்பில் நீளத் தொங்கிய பட்டுக் கயறில் ஒரு கடியாரமுமாக அவன் இருந்த ஒய்யாரம் சொல்லி மாளாது.

போய்ச் சேர்வதில் இருக்கும் வசதிகள் நிறைய என்றுபட்டது ராஜாவுக்கு. இப்படி வேளைக்கு ஒன்றாகச் சிங்காரித்துக் கொள்ளலாம். நாலு அன்னிய பாஷையும் தன்னாலே வந்து சேரும். மல மூத்திரம் சரிவரப் பிரியாமல் திரேக அசெளகரியம் எல்லாம் எப்போதும் கிடையாது. அப்புறம் இன்னதென்று வேலைவெட்டி இல்லாமல் அவ்வப்போது ஊர் வம்பு பேச ஆஜராகி விடலாம். என்ன, சாராயம் எல்லாம் கிடைக்காது. போகட்டும். சாராயம் மட்டும்தானா உலகத்தில் எல்லாம் ?

மருதையா, உன் மருமவன் கிட்டே நல்ல சமாச்சாரம் இப்போ ஒண்ணும் கோடிகாட்ட வேணாம். ஆனா நாளைக்கு அமாவாசை ராத்திரிக்கு சாராயம் ஊத்திப் போடணும்னு ஐயர் கிட்டே சொல்லச் சொல்லு.

இன்னொரு பெரிசு ராஜா நாற்காலியை ஒட்டி நின்று கொண்டு வெள்ளைப் பூண்டும் பெருங்காயமும் சாப்பிட்டது மூச்சில் வரச் சொன்னது. அந்த வாடை எதிரில் கூனிக் குறுகி நின்ற ஜோசியக்கார அய்யர் மூக்கிலும் துளைத்திருக்க வேண்டும். அய்யர் தோளில் கிடந்த உத்தரியத்தால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறது போல் மூக்கைப் பிடித்தபடி தீர்க்கமாக சுவாசம் விட்டதை ராஜா கவனிக்கத் தவறவில்லை.

ஐயரே, நாளைக்கு எப்போன்னு சொல்லுங்க. காரியஸ்தன் கிட்டே கேட்டு அந்த நேரத்திலே ராஜாங்க சோலி ஏதும் இல்லாம இருந்தா நானும் ராணியம்மாவும் அவசியம் கலந்துக்கறோம். அப்புறம் ஒண்ணு. நாளைக்கு அமாவாசை ஆச்சுதா ?

ஆமாமா, அது கொண்டுதானே வச்சிருக்கு இந்தக் கிரிசை எல்லாம் நாளைக்கு ? நீங்களும் காலையிலே பித்ரு தர்ப்பணம் செய்து பெரியவாளுக்கு எள்ளும் தண்ணியும் இரைக்கணுமே ? அதை பிரம்ம முகூர்த்தத்துலேயே முடிச்சுக்கலாம்.

அவுகளுக்கு எள்ளும் தண்ணியும் என்னமோ சரிதான். ஆனால் கொஞ்சம் போல் சாராயமும் இருந்தா நல்லா இருக்கும்னு அபிப்ராயப்படறாங்க.

ராஜா சொல்லிக் கொண்டிருந்தபோதே பாம் பாம் என்று சத்தம் போட்டுக் கொண்டு வாசலில் நூதன வாகனம் வந்து நின்றது. இறுக்கமான வெள்ளைக் குப்பாயம் இடுப்புக்கு மேலே தரித்த களவாணிகள் தான்.

ராஜா நினைக்காவிட்டால் என்ன ? முன்னோர்கள் நினைத்த மாத்திரத்திலேயே பயல்கள் வந்து இறங்கி விட்டார்கள்.

எடா, கொஞ்சம் உப்பு எடுத்துக்கொண்டு விரசாக ஓடிவா.

ராஜா இரைய சமையல்காரன் சிட்டிகை உப்பை ஒரு கரண்டியில் ஏந்தியபடிக்கு ஓட்டமாக ஓடி வந்தான்.

கோழி அறுத்துக் கொண்டிருந்தான் கறி வைக்க. இழுத்துப் பிடித்துக் கூட்டி வந்தேன் என்றான் புஸ்தி மீசைக் கிழவன். அவன் கோழி ரத்தம் படிந்த தன் விரலைக் குச்சி மிட்டாய் போல் திருப்தியாக சூப்பிக் கொண்டிருந்தான்.

உனக்குப் புண்ணியமாப் போறது. நாளைக்கு ராத்திரி சாராயத்தோட கொஞ்சம் காடைக்கறியும் படைச்சுடு.

புஸ்தி மீசையான் கேட்க அது எப்படி சாத்தியமாகும் என்று ராஜா யோசித்தார்.

ஐயரிடம் சாராயம் ஊத்தறதுக்கான சம்பிரதாயத்தை எழுதி வாங்கிக்கோ. அப்படியே அதை அந்தக் களவாணிகள் நடத்தித்தர சன்னத்தையும். மீதியை நாங்க பாத்துக்கறோம்.

புஸ்தி மீசையான் கம்பீரமாகச் சொல்லியபடி பிரம்மாண்டமான கொக்கு போல் வெள்ளை உடுப்போடு அறைக்கு மேலே எழும்பி அங்கேயும் இங்கேயும் பறந்து வேடிக்கை விநோதமாகப் பொழுது போக்க ஆரம்பித்தான்.

சரி அய்யரே, நான் நாளைக்கு வரேன். அப்படியே உம்ம கிட்டே இன்னொன்னும் பேசி முடிவாக்க வேண்டியிருக்கு. இன்னிக்கு சாயந்திரம் வெய்யில் தாழ வந்தா அதை முடிச்சுடலாம்.

ராஜா சொல்ல, மரியாதையாகச் சரி வருகிறேன் என்று தலையசைத்துப் போனார் ஜோசியர்.

இது ராஜாவே கூப்பிட்டு அனுப்பிய சமாச்சாரம் என்பதால் தட்சிணை வைத்துத்தான் ஆக வேண்டும்.

சரி, என்னவோ விஷயம் சொல்றதாச் சொன்னீங்களே மாமா ? அதைச் சொல்லிப் போடுவதுதானே ?

ராஜா புஸ்தி மீசைக்கிழவனை ஆர்வமாக விசாரித்தார். பனியன் சகோதரர்கள் வாசலில் செருப்பை விட்டுவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கையில் பெரிய தோதில் இரண்டு புத்தகங்களைப் பிடித்தபடி இருந்தார்கள் அவர்கள்.

கொக்கோகமா ? வெள்ளைக்காரிகளும் வெள்ளைக்காரன்களும் அடங்காமல் அலைந்து குளிருக்கு அடக்கமாகக் கூடி முயங்கியதை கர்மசிரத்தையாகக் கருப்புப் பெட்டியில் பிடித்து வைத்து அச்சுப்போட்டு எடுத்து வந்த புத்தகமா இரண்டும் ?

உன் புத்தி எப்பவும் கவட்டுலே தான். மேலே வாப்பா.

புஸ்தி மீசையான் மகா உத்தமன் போல் ராஜா தோளில் வலது காலால் வருடியபடி சொல்லியபடி பறந்துகொண்டிருந்தான் அறைக்குள்.

சரி, கிளம்பலாம், இவன்கள் போன அப்புறம் மீதி விசயம் எல்லாம் சாவகாசமாகப் பேசிக்கலாம்.

ஏதோ சொல்லட்டா சொல்லட்டான்னு கேட்டாங்களே மாமா ?

ராஜா கெஞ்சினார்.

எல்லாம் நல்ல விஷயம் தான். சில்லுண்டிச் செலவுக்கெல்லாம் யோசிக்காதே. மலை மாதிரி அதிர்ஷ்டம் வருது.

குடுகுடுப்பாண்டி மாதிரி புஸ்தி மீசையான் சொல்ல, அவனையும் இழுத்துக்கொண்டு மற்ற முன்னோர்கள் ஒற்றைச் சாட்டத்தில் மறைந்து போனபோது பனியன் சகோதரர்கள் அறை வாசலில் தயங்கி நின்றார்கள்.

ராஜா வெளியே பார்த்தார். இரும்புக் கதவு அடைத்த காடிகானாவும், குதிரை லாயமும் தோட்டத்தில் சின்னத் தோதில் காரைக் கட்டிடமும் கண்ணில் பட்டன. எல்லாத்துக்கும் உள்ளே புகையிலை தான் அடைத்து இருக்கிறது. பக்கத்திலே திரும்பவும் எழும்பி இருந்தது அய்யர் வீடு. அது முன்னால் நெட்டை பனியன் போல் உசரமாக இருந்தது. இப்போது குறுக்கே பெருத்து மேலே மச்சில்லாமல் குட்டை பனியன் போக் குள்ளமாக நிற்கிறது. அவனைப் போலவே வெள்ளைச் சாயம் தரித்துக் கொண்டு.

இடுப்பில் உப்பை முடிந்துகொண்டு, வாங்க உள்ளே என்று ராஜா உத்திரவு போட்டார்.

என்ன விஷயமா வந்திருக்கிறீங்க ?

எதுவும் தெரியாததுபோல் ராஜா விசாரித்தார்.

அவிடத்திலே கூப்பிட்டனுப்பினது ராஜாங்கக் காரியத்துக்கு இடையிலே மறந்து போயிருக்கலாம்.

குட்டை பனியன் பணிவிலும் பணிவாகச் சொல்லியபடி கையில் பிடித்திருந்த பேரேட்டைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ஒரு எலுமிச்சம்பழத்தை மரியாதைக்கு நீட்டினான். ராஜா அதை முகர்ந்து விட்டு உடனடியாகக் குப்பாயத்திற்குள் போட்டுக் கொண்டார்.

பூத்திருவிழா வருதில்லே ? அதான் வசூலுக்குப் பட்டணம் போயிருந்தோம்.

நெட்டை பனியன் சொன்னான்.

அது தான் நான் நடத்தறேனே. என்னத்துக்கு வசூல் என்று ராஜா கேட்டபோது அவர்கள் சிரித்தார்கள். ராஜாவுக்குத் தன் வார்த்தையின் அபத்தம் அப்போதுதான் புலப்பட்டது.

ஆமாமா, இது வருங்காலத்துலே நடக்கற திருவிழா இல்லையா. நான் எங்கே நடத்தப்போறேன் ?

ராஜா தன்னிரக்கத்தோடு தலையை அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டியபடி முணுமுணுத்தார்.

சமூகம் இருக்காவிட்டாலும் ராஜ பரம்பரை இருக்குமே.

குட்டை பனியன் உபசாரமாகச் சொல்லியபடி தடித்த புத்தகத்தில் ஒன்றை நீட்டினான்.

பிரித்துப் பார்க்க, சேடிப்பெண் அதி ஒய்யாரமாக புஸ்திமீசைக் கிழவனைப் படுக்க வைத்துக் குடத்தில் நீர் எடுத்து வழிய வழிய அவன் மேல் பொழிந்து கொண்டிருந்த நேர்த்தியான படம்.

அருமையா இருக்கு.

ராஜா மனம் திறந்து பாராட்டினார். புஸ்திமீசையான் இந்தப் புத்தகத்தையும் சாராயத்தோடு கேட்டு வாங்கிக் கொள்வான் என்று பட்டது ராஜாவுக்கு. அந்தப் படத்தை மேலும் கீழும் அசைக்க, தொடுக்கினாற்போல் புத்தகத்தில் வைத்த அது கையோடு வந்து விட்டது.

நல்லதுக்குத்தான் இது என்று ராஜா அதை எடுத்து மேஜை மேல் வைத்தார். தொடர்ந்து புத்தகத்தைப் புரட்ட எல்லாப் பக்கத்திலும் கல்யாண மாப்பிள்ளை போல் தோரணையாக புஸ்தி மீசையான் தான்.

போகட்டும். நாளைக்கு அமாவாசை ராத்திரிக்கு இதையும் அவனுக்கும் மற்ற முன்னோர்களுக்கும் காட்டித் தரலாம். கூடவே சாராயமும் காடைக்கறியும்.

ராஜா உள்ளே போய் வராகனோடு திரும்பி வந்தார். எப்போதும் போல் இல்லாமல் அவர் முகத்தில் கும்மாளச் சிரிப்பு. முன்னோர்கள் நல்லது நடக்கும் என்கிறார்கள். கஜானா காலியாகிற அளவுக்கு எல்லா வராகனும் காத்தானுக்கும் தீத்தானுக்கும் போய்ச் சேர்ந்தாலும், நாளைக்கே எல்லாம் வட்டியும் முதலுமாகத் திரும்பி வந்து விடும்.

நாளைக்கு ராத்திரி இருபது புட்டி சாராயத்தோடு வரணும். என்ன, சரியா ?

அவர் புன்சிரிப்போடு விசாரித்தபடி வராகனை உயர்த்திப் போட்டுப் பிடித்து விளையாடினார். பழுக்காத்தட்டில் கேட்ட சோகமான ஒப்பாரி ஒன்றை வார்த்தை இல்லாமல் அவர் வாய் சந்தோஷமாக முணுமுணுத்தது.

சாராயம்தானே ? சமூகத்துக்கு எந்தக் கவலையும் வேண்டாம். எதுக்கும் இருக்கட்டும்ணு பட்டணத்துலே வாங்கி வச்சுருக்கோம். நாளைக்கு எல்லாம் எடுத்துட்டு வந்து சேர்ந்துடறோம்.

நெட்டை பனியன் வராகனையே பார்த்தபடி சொன்னான்.

அதை அவனுக்குக் கொடுத்துவிட்டு ராஜா ஆதரவாகக் கேட்டார்.

பட்டணத்துலே என்ன விசேஷம் ?

புகையிலை அய்யர் மகனை அங்கே வச்சுப் பார்த்தோம். நாசீகா சூரணம் வியாபாரம் ஆரம்பிக்க வந்திருந்தாப்பலே.

அந்த மூக்குத்தூள் சமாச்சாரம் என்ன என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.

பனியன் சகோதரர்கள் கிளம்பிப் போனபிறகு ராஜா நினைத்துக் கொண்டார்.

இங்கே தானே எல்லாம் அடச்சு வக்கப் போறான் அய்யன் ?

முன்னோர்கள் திரும்பி வந்திருந்தார்கள். மேசையின் மேலே வைத்த புத்தகத்தின் பக்கங்கள் தன்பாட்டில் விரிய, வந்தவர்கள் உற்சாகமாக எல்லாம் பார்வையிடும் சத்தம்.

அவர் தனியாக எடுத்து வைத்த படத்தை முகர்வது போல் புஸ்தி மீசையான் குனிய ராஜா அதை எடுத்து அங்கிக்குள் வைத்துக் கொண்டார்.

அட, நாளை அமாவாசை ராவுக்குக் காட்டலாம்னு வச்சா, அதுக்குள்ளே அவசரமா ?

ராஜா பெரிசுகளைப் பார்த்து பாசம் பொங்கச் சிரித்தார்.

(தொடரும்)

Series Navigation