அவன்

This entry is part of 45 in the series 20040122_Issue

ஆனந்த் ராகவ்,பாங்காக்


அவன் பெயர் யாருக்கும் தெரியாது. அழுக்கு ஆடைகளும், சிக்குப் பிடித்த தலையும், ஷவரம் கண்டிராத முகமுமாய், வியர்வை நாற்றமுமாய் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமும் உடையவனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அந்தப் பிரதேசத்தில் யாருக்கும் இருந்ததில்லை. சாலையிலும் அங்காடிகளை ஒட்டிய நடைபாதையிலும் சஞ்சரிக்கும் மனிதர்களின் காலடியில் பட்டுச் சிதறும் குப்பையில் ஒருவனாக இருந்த அவனைப் பற்றிய விவரங்கள் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு அனாவசியாமாய் இருந்தது. யாருக்கும் அவன் பெயர் தெரியாத காரணம் அவன் யாரிடமும் பேசாமல் இருந்ததால் கூட இருக்கலாம். அவன் பேசி யாரும் பார்த்ததில்லை. ஊமையா இல்லை பேச விருப்பமில்லா பித்தனா என்று சொல்ல இயலாமல் ஒரு பிடிவாத மெளனம். எந்தக் கண்களையும் சந்திக்க விரும்பாத தூரப் பார்வை.

ஆனால் அந்தப் பிரதேசத்தில் அவன் வடிக்கும் ஓவியங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த ஜன சந்தடியுள்ள வீதிகளில் அவ்வப்போது துளிர்க்கும் வண்ண மயமான ஓவியங்கள் அவன் கைவண்ணம் தான். நடைபாதையில், தார் சாலையில், சில சமயம் கடை வாசலில் என்று விரியும் அவனின் நேர்த்தியான வண்ண ஓவியங்கள் அந்தப் பிரதேசத்தின் குப்பைக் கடலுக்கு இடையே பூக்கும் அழகுத் தீவு. சக்கரச் சுழற்சியில் விரையும் ஜனங்களை ஒரு நிமிடம் நின்று பார்த்து ஆச்சரியப்பட வைக்கும் வர்ணத் திட்டு. அந்த ஓவியங்களின் அழகைக் கண்டு வியந்து அதன் படைப்பாளியை பாராட்டத் தேடும் கண்கள் அருகிலேயே படுத்துக்கிடக்கும் அந்த அலங்கோலத்தைக் கண்டு அருவறுக்கும். பாராட்டு பச்சாதாபமாகி காசுகளாக ஓவியத்தின் மேல் எறிந்து விட்டு நகரும்.

மக்கள் இடும் காசு அவன் பசியைப் போக்க உதவினாலும் அவன் யாசிப்பதின் பொருட்டு ஓவியங்கள் எழுதுவதில்லை. அது தன் உணர்ச்சிகளின் வெளிப்பாடு போலவோ, தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சி போன்றோ அவன் இயல்பாக நிகழுத்தும் ஒரு படைப்பு. இன்றைக்கு இன்னது என்று திட்டமிடுதல் இல்லாமல், காகிதத்தைப் பார்த்து வரைதல் இல்லாமல், அந்த ஷணத்தின் மன மின்னல்களுக்கு ஏற்றார் போல் சட்டென்று மனத்தில் பதியும் பிம்பத்தை விரல்கள் வடிக்கும்.

அவன் ஓவியங்களுக்கென்று பொதுவான கரு ஒன்று இருந்தது. பெரும்பாலும் இறைவனின் திரு உருவங்களாகவே அவன் எண்ணங்கள் தரையில் விரியும். விநாயகர், விஷமப் பார்வையுடன் பால கிருஷ்ணன், உக்கிரம் பொங்கும் துர்கை, கருணை கடலாய் ஏசு நாதர், சாந்தஸ்வரூபியாய் புத்தர், புனித மெக்கா என்று இறைவனின் வடிவங்கள் மட்டும் தான் அவன் விரல் சிருஷ்டிக்கும். இறைவனின் இன்னொரு அவதாரமாய் இயற்கையை அவன் கருதியாதாலோ என்னவோ அவ்வப்போது இயற்கை அழகுக்கும் அவன் மனது இடம் அளித்தது. அரசியல் தலைவர்களையோ சினிமா நட்சத்திரங்களாகளையோ அவன் விரல்கள் வரைந்ததில்லை. அவன் ஓவியத்தின் வனப்பில் அதிசயத்து அவனிடம் கோரிக்கைகள் வரும். அரசியல் தலைவர் என்றோ தேர்தல் நேரத்து சின்னம் என்றோ அவன் முன் ரூபாய் நோட்டால் வீசிறி கேட்பார்கள். அதற்கெல்லாம் ‘தூ ‘ என்று காறி உமிழ்ந்துதான் அவன் பதில் சொல்லியிருக்கிறான்.

ஏதாவது ஒரு சாலை ஓரத்திலோ தெரு முனையில் மரத்தின் கீழோ படுத்துக் கிடக்கும் அவனது நாள், அந்த நகரம் விழித்துக்கொண்டு முகம் மாறும் முன்பே துவங்கிவிடும். தோளில் ஒரு அழுக்கு காக்கிப் பையில் அவன் ஓவியச் சாதனங்களை அடக்கியபடி, நகரும் அவன் இலக்கில்லாப் பயணம் அதிகாலை இருட்டு நேரத்திலேயே துவங்கிவிடும். விசாலமான நடைபாதையோ சீரான சாலையோ, எங்கு இடம் இருக்கிறதோ அங்கு உட்கார்ந்து விடுவான். அவன் தேர்ந்தெடுத்த இடத்தில் விசை இட்ட மொம்மை மாதிரி இயங்குவான். அவன் உலகமே அந்த ஓவியத்தை சிருஷ்டிக்கும் முயற்சியில் முடங்கிப் போகும்.

அவன் இயங்குவதைப் பார்ப்பதே பரவசம். ஒரு கையை தரையில் ஊன்றியபடி தரையில் தவழ்ந்து தவழ்ந்து ஒரு வெள்ளை சுண்ணாம்புக் கட்டியினால் அன்றைய எண்ணத்தின் எல்லையை நிர்ணயித்து துவக்கக் கோடு போடுவான். அதன் பின் உருவத்தின் முதல் படிவமாய் சின்னச் சின்னக் கோடுகள் உதிக்கும். அவன் கைகளின் ஆணைகளில் வண்ணச் சுண்ணாம்புக்கட்டிகளின் உரசலில் மெல்ல உருவம் பிறக்கும். கடவுளின் கருணை பொங்கும் கண்களோ , வலுவான தோளின் வளைவுகளோ, லேசான புன்னகை தாங்கிய இதழ்களோ அத்தனையையும் அவன் விரல் இடுக்கில் ஒளிந்திருப்பதை விடுவிப்பதுபோல சடார் சடார் என்று தரையில் விழும். திட்டுத் திட்டாய் வர்ணம் கூடும். படோபடமான ஆடை வனப்பையும், ஆபரணங்களின் தங்க மிளிரலையும் வர்ணம் கூட்டி ஓளியிடச் செய்வான். கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அழகு உயிர் கொள்ளும். இரண்டு மணி நேரம், ந ‘ன்கு மணி நேரம், சில நாட்கள் அரை நாள் என்று அவன் இயங்கும் அந்த முழுப் பொழுதும் அவன் வேறு சிந்தனை இல்லாமல் உணவுக்கோ தண்ணீருக்கோ நிறுத்தாமல் தொடருவான். வரைந்து முடிந்ததும், தான் ஒரு கலைப் பொருளை படைத்து விட்ட பெருமிதமோ மகிழ்ச்சியோ இல்லாமல் ஒரு கடமை முடிந்த நிம்மதியோடு ஒதுங்கி விடுவான்.

அது ஒரு ஓவியம் என்று மட்டும் நினைக்காமல் அவன் வணங்கும் கடவுள் எழுந்தருளியது போல, சிருஷ்டி முடிந்ததும் காலில் வீழ்ந்து வணங்குவான். அதுதான் அவன் ஆலயம் போல , அவன் வாழ்தலில் காரணமே அந்த இறைவனின் வடிவத்தை வெளிக்கொணரத்தான் என்பது போல, கடவுளின் அவதாரத்தில் அந்தக் கட்டாந்தரை புனிதம் பெற்றது போல, தொழுதுவிட்டுதான் ஓய்வான். ஓவியத்தின் காலடியில் காசுகள் சேரும். ஐம்பது காசு, ஒரு ரூபாய் சிலசமயம் ஐந்து ரூபாய் என்று உணர்ச்சிவசப்பட்டவர்களின், உதவி செய்ய விழைபவர்கள் இடும் காசு தெறித்து விழும். அவர்கள் எதற்காக க ‘சு இடுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ஓவியத்தின் அழகுக்கா இல்லை கடவுள் என்பதால் காசு இடும் கடமை உணர்ச்சியா ? அவர்கள் இஷ்ட தெய்வத்தைப் பார்த்த மகிழ்ச்சியா ? என்னவென்று தெரியாது. இறைவனின் அவதாரம் மாறுவதற்கு ஏற்ப காசின் அளவு மாறும் விநோதம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அன்றும் அவன் நாள் வழக்கம்போலத்தான் ஆரம்பித்தது. காலை வெளிச்சம் லேசாகப் பரவத் தொடங்க, நடக்க ஆரம்பித்தான். வெகுதூரம் நடந்தான். அமைதி நிலவிய காலையில் அருகிலிருந்த மசூதியின் தொழுகை ஒலி இன்னும் உரக்க காதில் விழுந்தது. அந்த விசாலமான நடைபாதையைப் பார்த்ததுமே நின்றான். தன் பையை அவிழ்த்து வண்ணச் சுண்ணாம்புக் கட்டிகளையும் சாயப் பொடிகளையும் ஓரத்தில் வைத்துவிட்டு சுண்ணாம்புத் துண்டை கையில் எடுத்துக்கொண்டு நடை பாதையின் நடுவில் உட்கார்ந்தான். ஒரு ஷணம் யோசித்துவிட்டு சட்டென்று உதயமான எண்ணத்தின் சாட்டை அடியில் விறு விறுவென்று கோடுகள் இழுத்தான். கோடுகளும் வர்ணத் தீட்டல்களுமாய் ஓவியம் உருப்பெறத்தொடங்கியது. மசூதியின் தொழுகை அவன் காதில் விழாமல், காலை வேளையின் பரபரப்பு இன்றி ஒரு மயான அமைதி சூழ்ந்திருந்தது தெரியாமல், வழக்கமாக விரையும் மனித முகங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்ததை உணராமல், அவன் தன் சிருஷ்டியில் சிறைபட்டான். அவன் கை விரல்கள் விரைய விரைய துளித் துளியாய் அன்றைய இறைவன் ப்ரசன்னமானார். மேகத்தைத் திரட்டிச் செய்த மேனியனாய், தேம்பா கஞ்சம் ஒத்து அலர்ந்த கண்ணனாய், கை வண்ணத்தில் தாடகையை வதம் செய்தவனாய், கால் வண்ணத்தில் கல்லை கன்னியாக்கியவனாய், சிவதனுசு முறித்த தோளினனாய், மெல்ல மெல்ல ராம பிரான் அந்த நடை பாதையில் உயிர்தெழுந்தார். பளீரென்று அடித்த வெளிச்சத்தில் அவர் தன்னைப் பார்த்து புன்னகைப்பது போல உணர்ந்து பரவசமானான். கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். அவர் கால்களை கைகளால் தெ ‘ட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். இருக்கும் அழகு போதாதென்று ஸ்ரீராம மூர்த்தியைச் சுற்றி இன்னும் வர்ண அலங்க ‘ரங்கள் செய்தான்.

அவனுக்கு அது இன்னொரு நாள். அவன் தெய்வங்களில் ஒன்று எழுந்தருளிய சாதாரண நாள். ஊர் இரண்டு பட்டிருந்தது அவனுக்குத் தெரியாது. இறைவனை மறந்த மனிதர்கள் மதத்தின் பெயரால் மல்லுக்கு நிற்பது தெரியாது. சக மனிதர்களின் இல்லத்தை தீக்கிரையாக்கிக்கொண்டும், மனிதர்களை உயிரோடு எரித்துக்கொண்டும் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது அந்தப் பித்தனுக்குத் தெரியாது. அந்த துவேஷத் தீயின் சில பொறிகள் அந்தப் பிரதேசத்திலும் சிதறி ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருந்தது அந்த கடவுள் அபிமானிக்குத் தெரியாது. ஒன்றிரண்டு உயிர்களை பலி வாங்கி , சிறுபான்மை மதத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேசமே கதவடைப்பில் ஈடுபட்டு உஷ்ணம் கூடியிருந்தது அவனுக்குத் தெரியாது. அத்தனையும் தெரியாமல், அந்த ஊரின் பதட்ட நிலையை அறியாமல், மசூதிக்குப் பக்கத்தில் அவன் ராமச்சந்திரனை பிரித்திக்ஷ்டை செய்திருந்தான்.

நன்றாக வெளிச்சம் பரவி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில கடைகள் மட்டும் பாதி திறந்திருந்தது. இறைந்து கிடந்த குப்பைத் தொட்டியை கிளறும் காக்கைகளை தவிர யாருமே இல்லாமல் சாலை வெறிச்சென்றிருந்தது. அப்போதுதான் அந்த மூன்று பேர் சாலையை நோட்டம் விட்டபடி வந்தார்கள். பச்சை சட்டையும் கைலியும் அணிந்த ஒரு வாட்ட சாட்டன் திறந்திருந்த கடைகளைப் பார்த்து குரல் கொடுத்தும், கற்களை எறிந்தும் மிரட்ட அங்கங்கே சந்தேகமாய் திறந்திருந்த ஒன்றிரண்டு கடைகள் கட கட வென்று கதவடைத்துக் கொண்டன. துரிதமாக வரைந்து கொண்டிருந்தவனுக்கு அருகில் வந்து அவர்கள் நின்றார்கள். வந்தவர்களை கவனிக்காமல் அவன் அந்தப் படத்தை வரைவதில் ஈடுபட்டிருந்ததில் அவர்களது மூர்க்கம் அதிகமானது. பச்சை சட்டைக்காரன் ‘டேய் ‘ என்று அவனைப் பார்த்து கத்தினான். அதட்டல் காதில் விழாமல் சலனமில்லாமல் அவன் படம் வரைந்து கொண்டிருக்க…கோபம் கொப்பளிக்க கால்களை ஓங்கி பலம் சேர்த்து அவனை ஆத்திரம் தீர ஒரு உதை விட்டான். அவன், அந்தத் திடார் தாக்குதலில் உருண்டு போய் விழுந்தான்.

‘…ஊரே கதவடச்சி கிடக்குது …என்னடா சாமி படம் வரைஞ்சிகிட்டு இருக்க ? நடையக்கட்றா ‘ ‘என்ன வேலை பண்றான் பாரு ‘ என்று தன் சகாக்களுக்கு அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டினான்.

கீழே விழுந்த அவன் எழுந்து நின்றான். ஓவியத்தைப் பார்த்தான். அவன் விழும்போது அவன் கால் பட்டு குடுவைகளில் இருந்த வர்ணங்கள் சிதறி, ஓவியம் ஓரங்களில் பாழ்பட்டிருந்தது. அவன் பையில் இருந்த சின்னத் துணியை எடுத்து கவனமாக வர்ணச் சிதறலை ஒற்றி எடுத்து, கலைந்து போன அந்த மூலையை கவனமாக புதுப்பித்துத்தான். அவன் இறைவனின் அலங்காரம் கொஞ்சம் சிதைந்து போனதில் கலங்கிப்போய் ஓவியத்தை சீராக்கத் துவங்கியபடி மறுபடி ஓவியத்தில் கவனம் செலுத்தினான்.

‘ஏண்டா.. வேணும்னே செய்யிறியா.. ? உன்னை போகச் சொன்னனுல்ல. திமுராடா உனக்கு ? என்னா தெனாவட்டு இருந்தா எங்க எடத்துல வந்து இந்த படத்த போடுவ ? ‘ இன்னொரு முறை உதைத்தான்.

‘ இது அந்தப் பசங்க பண்ற வேலைதான் மாமு. நம்மள வெறுப்பேத்தறத்துக்காகவே இவங்கிட்ட காசு குடுத்து வரையச் சொல்லியிருக்கானுங்க. கொம்பு சீவிப் பாக்கறானுங்கடா.. ‘

‘படம் வரையற இவன் கையை வெட்டி குடுத்து அனுப்புவோம். இனிமே நம்மள சீண்டமாடானுங்க ‘

‘எவண்டா உன்னை இங்க படம் வரையச் சொன்னது ‘ என்று பச்சை சட்டை அவனை முஷ்டியை மடக்கி அவன் தாடையில் அடித்தான். அவனுக்குள் வலி வெடித்து இறங்கியது. கண்கள் நெருப்பு உமிழ முறைத்தான். பச்சை சட்டைக்கு ரெளத்திரம் கூடி ‘என்னடா மொறைக்கிற.. ‘என்று அவனை அடிக்க ஆயத்தமாவது போல கைச்சட்டையை மடித்தான். ‘ படத்தை அழிடா ‘ என்றான் கண்களில் வெறியுடன். அவன் மெளனமாய் முறைத்தபடி இருக்க, ‘அழிடா ‘ என்றான் அவனை மறுபடி அறைந்து. பதில் சொல்லும் விதமாய் அவன், வாயில் எச்சில் சேர்த்து பச்சை சட்டை மேல் ‘தூ ‘ என்று உமிழ்ந்தான். சட்டை மேல், கைகளில், காலில் அவன் உமிழ் நீர் பட்டுத் தெறித்தது. பச்சை சட்டை வெறி மேலிட அவனை அடித்தான்.

‘ மரியாதையா அழிச்சிடு. ‘

அவன் கண்களில் தீவிரத்தோடு மாட்டேன் என்கிற பாவனையில் பலமாக தலையை ஆட்டினான்.

‘அழிக்க மாட்ட ? பிச்சகார நாயி.. ? ‘ என்று தன் காலால் அழிக்க பச்சை சட்டை அந்த ஓவியத்தின் மேல் வலது காலை உயரத் தூக்கினான்.

அவன் பதறி போனான். உடம்பெல்லாம் நடுங்க, உட்கார்ந்த நிலையிலேயே பச்சை சட்டை மேல் பாய்ந்தான். தூக்கிய அவன் காலைக் கைகளால் பற்றினான். பற்களால் காலைக் கவ்வி வெறிபிடித்தவன் போல கடித்தான். பச்சை சட்டை வலியில் அலற அவன் சகாக்கள் அவனை இழுத்தார்கள். ஆக்ரோஷமாய் அவனை அடித்தார்கள். வலிக் கதறலும், அவனின் ஊளைச்சத்தமுமாய் அந்த நிசப்தமான தெருவில் அந்த கதறல்கள் எதிரொலித்தன. அவர்களின் அடி தாங்காமல் அவன் கால்களை விடுவித்தான். அவர்கள் குரோதம் எல்லை மீறியிருந்தது.

அவன் போராட்டம் தொடர்ந்தது. சட்டென்று குனிந்து அருகில் கிடந்த கல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டான். அதை வைத்திருந்த பாவனையில், அவர்கள் அருகில் வந்தால் அவர்களை அடிக்கத் தயங்கமாட்டான் போல காத்திருந்தான். கொஞ்சம் நகர்ந்து ஓவியத்தின் நடுவில் அதை காவல் காக்கிற தினுசில் அமர்ந்து கொண்டான். அந்த எதிர்ப்பு அவர்களை இன்னும் மூர்க்கமடைய வைத்தது.

மூன்று பேரும் அவனைத் தூக்கி அவன் வரைந்த ஓவியத்தின் மேல் எறிந்தார்கள். அவனை அந்த ஓவியத்தின் மேல் கிடத்தி அடித்தார்கள். அவனை வயிற்றிலும் முகத்திலும் மாறி மாறி குத்தினார்கள். இரண்டு பேர் அவனை பிடித்துக் கொள்ள பச்சை சட்டை அவன் கையை பற்றி அவன் கையாலேயே அந்த ஓவியத்தின் முகத்தில் தேய்த்தான். வர்ணக் குடுவைகள் சிதறின. ஓவியத்தின் வர்ணங்கள் அவன் ஆடைகளில் ஒட்டித் தேய்ந்து பரவின. அவர்கள், அவனை இன்னும் நிலைகுலைய அடித்தார்கள். தலையில் , கண் ஓரத்தில், உதட்டில் அடிபட்டு ரத்தம் கொட்டி, ஓவியத்தின் வண்ணத்தோடு கலந்து சிவப்பு பரவியது. அவன் முகமெல்லாம் ரத்தமாய் , வலியில் கதறிக்கொண்டிருக்க அவர்கள் அடித்து ஓய்ந்தார்கள். தரையில் ஓவியம் கலைந்து போய் வர்ணக் குழப்பமாய் இருந்தது. கலைந்து போன ஓவியம் அவர்கள் மூர்கத்தைத் தணித்தது. இறுதியாய் அவனை ஒரு உதை உதைத்துவிட்டு அவர்கள் ஆத்திரம் தணிந்து விலகிப் போனார்கள்.

அவன் எழுந்து உட்கார்ந்தான். ரத்தத் திரை கண்களை மறைத்தது. நெற்றியிலும் வாயிலும் வடிந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்தபடி படத்தைப் பார்த்தான். கடவுள் இருந்த இடம் வெறும் கட்டாந்தரையாக இருந்தது. ஓவியத்தின் முகம் தொலைந்து போயிருந்தது. அங்கங்கள் கரைந்து போய் அலங்கோல வர்ணத்திட்டுகளாய் உருமாறி இருந்தது. கண்களில் கண்ணீர் பெருகி ரத்தத்தோடு கரைந்து விழுந்தது. இறைவனே அழிந்துவிட்டது போல அழுதான். ஓவியத்தின் ஒரு அங்கமாவது சிதையாமல் இருக்கிறதா என்று தவழ்ந்து தேடினான். ராகவனின் ஆசீர்வதிக்கும் கை மட்டும் கலையாமல் அந்த வர்ணக் குழப்பத்தில் தெளிவாய் இருந்தது.

அவன் கண்களில் கண்ணீர் பெருக கைகளின் முன் மண்டியிட்டு விழுந்தான். அந்தக் கைகளின் மேல் தன் கைகளை வைத்து…உதடு துடிக்க உரக்கக் கதறினான். ‘யா அல்லா … அவங்களை மன்னிச்சிடு ‘

————————————xxx———————————-

anandraghav@yahoo.com

Series Navigation