அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று

This entry is part of 44 in the series 20040115_Issue

இரா முருகன்


இந்தப் பக்கம் தச்சன் இழைப்புளியை வைத்து ஏதோ மரப் பலகையை இழைத்து இழைத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறான். அந்தப் பக்கம் கருமான் ஒருத்தன் மண்ணில் குழித்து நெருப்பு மூட்டி இரும்புக் கம்பியை அடித்து நீட்டிக் கொண்டிருக்கிறான். குளத்தங்கரையில் வெளிக்கு இருந்து விட்டுப் பிருஷ்டம் கழுவ நடக்கிறவன் போல் அவனவன் இடுப்பு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டமாக அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருக்கிறான்.

இது என்ன அரண்மனையா இல்லை சாவடிப் பக்கத்து முடுக்குச் சந்தா என்று ராஜாவுக்கு விளங்கவில்லை.

போதாக்குறைக்கு ஜோசியக்கார அய்யர் வேறே அரண்மனைத் தோட்டத்தில் சச்சதுரமான ஒரு பெரிய தகட்டைக் கோபுரம் போல மரமேடையில் நடுவிலே நிறுத்தி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சாய்த்துப் பிடித்து ஏதோ அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அய்யன் வேலையை முடிக்கிற வரை நாங்கள் வருவதாக இல்லை. அவன் பரீட்சை செய்வதற்காக யந்திரத்தை அப்படியும் இப்படியும் திருப்பும்போது எங்கள்மேல் பாலைவனைப் பிரதேசக் காற்று பட்டதுபோல் வெப்பமேறி அடித்து இம்சை செய்கிறது என்று சொல்லி முன்னோர்கள் இந்தப் பக்கம் வருவதையே தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

இந்தக் களேபரம் போதாதென்று பக்கத்தில் எரிந்து போன புகையிலைப் பார்ப்பான் வீட்டைத் திரும்பக் கட்ட ஆரம்பித்து முடிக்கிற நிலையில் இருக்கிறார்கள். பால் போல் வெளுத்த சுண்ணாம்பை வெளிச்சுவர் முழுக்கப் பூசி வைக்க அது இடிந்து போன அரன்மனையைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்கிறது.

எல்லாம் அந்த வெள்ளைப்பாண்டுக் கிழட்டுத் துரை வந்து போன பின்னால் நடக்கிற விஷயம். சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தீர விசாரித்து நீதி சாஸ்திரம் இம்மியும் பிசகாது தீர்ப்பு சொல்கிற பட்டி விக்கிரமாதித்யன் என்று நினைப்பு வெள்ளைத் தேவடியாள் மகனுக்கு. பட்டணத்துப் பெரிய துரை ஜாமான் முடிபோல எகிறிக்கொண்டு கிளம்பி வந்து இவன் விதித்துப் போனபடிக்குத்தான் சர்வமும் நடந்து கொண்டிருக்கிறது.

புகையிலைக்கடை அய்யன் வீடு எரிந்து சாம்பலாகப் போனதற்கு ராஜா தான் ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அந்த விதைக்கொட்டை வீங்கினவன் உத்தரவு செய்துபோன ரெண்டு நாளிலேயே ஆரம்பமாகி விட்டது எல்லாத் துன்பமும். எழவெடுத்தவன் நீளமாகக் கம்பளிப் பூச்சி நெளிகிறதுபோல் கையொப்பம் இட்டு பழுப்புக் காகிதத்தில் துரைத்தனப் பாஷையில் எழுதின லிகிதத்தைக் குதிரையிலே வந்த ஒருத்தன் கொடுத்துவிட்டு ராஜாவின் இலச்சினையை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போன ராகுகாலப் பொழுது அது.

ராஜா அதை வாங்கி மசி வாடையையும் காகித வாடையையும் முகர்ந்து விட்டுக் காரியஸ்தனிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொன்னதோடு காரியம் முடிந்ததாக நினைத்தது மகாப் பெரிய தப்பு என்று அடுத்த நாளே பட்டது.

குதிரையில் லொங்கு லொங்கென்று வந்த பேய்ப்பயல் புகையிலைக்கடை அய்யன் வீட்டிலும் நுழைந்து துரை எழுதின லிகிதத்தின் இன்னொரு பிரதியை விநியோகித்துவிட்டுப் போயிருக்கிறான். அய்யனும் வெகு காரியமாக அதைப் பூணூலை விட உசத்தியானதாகக் கையில் பற்றிக்கொண்டு பந்து மித்திரர்களுக்கு ஆதியோடந்தமாக எடுத்தோத அவர்களும் கிளம்பி காலை வெய்யில் ஏறுவதற்குள் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ராஜா வந்தவர்களை உட்காரச் சொல்லிக் கையைக் காட்டினார். அவர் அப்போது அரண்மனை முன் மண்டபத்தில் இருந்தார், காரியஸ்தன் சினைப்பூனை மழைக்காலத்தில் கத்துகிறதுபோல் சங்கீதமான குரலில் மாசாந்திர வரவு செலவை வாசித்துக் கொண்டிருந்தான். அதிலே பாதிக் காதும், காலைப் பசியாறிய உறக்கமுமாக உட்கார்ந்திருந்தவரை வந்த கூட்டம் எழுப்பிவிட்டது.

யாரங்கே ஆசனம் கொண்டு வந்து போடுங்கள்.

ராஜா நேரே பார்த்துக் கொண்டு உத்தரவு போட்டார் வழக்கப்படிக்கு. பகலில் அரண்மனை சேவகத்து வருகிற உத்தியோகஸ்தர்கள் இன்று யாரும் வரவில்லை. அவர்கள் வாரச் சந்தையில் நெத்திலிக் கருவாடோ, மாம்பழமோ விற்கப் போயிருக்கிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்த சங்கதிதான். அரண்மனை வருமானம் போதாத காரணத்தால், புதன்கிழமை வாரச்சந்தையில் வியாபாரிகளுக்குக் கூடமாட ஒத்தாசை செய்து அவர்கள் ரெண்டு காசு பார்க்கிறதாகத் தெரிந்தபோது ராஜாவுக்கு விசனமாகத்தான் இருந்தது. என்ன செய்ய ?

இந்த அய்யன்மார் எல்லாரும் வாரச் சந்தைக்கு மாம்பழமோ கருவாடோ முகர்ந்து பார்த்து வாங்கப் போகாமல் இங்கே வந்து உசிரை வாங்க வேணுமா என்ன ?

காரியஸ்தன் உள்ளே போய் ஆசனம் ஆசனம் என்று ஆசனவாய் தெரிக்கக் கத்த, அப்பின சாந்துப் பொட்டும் தலைமுடியும் எண்ணெய்ப் பிசுக்குமாக இன்னும் இரண்டு குரிச்சி அந்தப்புரத்தில் இருந்து வந்து சேர்ந்தது. ராஜா கையைக் காட்ட, வந்ததில் ஒருத்தர் இருக்கையின் நுனியில் தொடுக்கி வைத்ததுபோல் உட்கார்ந்தார்.

நான் சுப்பிரமணிய அய்யர்வாளோட நெருங்கின பந்து. பட்டணத்துலே கோர்ட்டுக் கச்சேரியிலே உத்தியோகம் பார்த்து இப்போ வயசாச்சோன்னோ ஊரோட இருக்கேன். என் புத்ரன் அங்கே போர்ட் செஞ்சார்ஜ் கோட்டையிலே கிளார்க்கா இருக்கான்.

அந்த பிராமணன் நீளமாகப் பேசிக்கொண்டே போனான். ராஜாவுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

கோர்ட்டு, கச்சேரி, கோட்டை, கிளார்க் என்று நூதன விஷயம் ஏகத்துக்கு எடுத்துவிட்டு ராஜாவை போடா புண்ணாக்கு என்கிறான். இவன் துரைத்தனத்தோடு நெருங்கினவனாக இருந்து தொலைப்பவனோ என்னவோ. புகையிலை அய்யன் இவனை அனுப்பி வைத்ததே அரண்மனையை எழுதி வாங்கிக் கொண்டு போகத்தான் போல் இருக்கிறது.

கூட வந்த ஒரு கருத்த பார்ப்பான் இன்னொரு நாற்காலியில் இருந்தபடிக்கு கச்சேரி அய்யன் காதில் ஏதோ சொன்னான். இன்னொரு மனுஷன் திருநீறு வாசனை அடிக்க நாலு அடி தள்ளி நின்றபடி இருந்தான். பார்த்தால் ஜோசியக்கார அய்யனுக்குத் தாயாதி பங்காளி போல் இருக்கப்பட்டவன். குடுமியும் ஜோசியக்காரன் சிகை போல் நீளமாக இருக்கிறது.

இது சுப்பிரமணிய அய்யர்வாளோட அம்மாஞ்சி. கரம்பங்காடு கிருஷ்ணையர். ராமாவரத்துலே மிராசுதார். காவேரிக்கரை மனுஷர். சுகஜீவனம். அவர் சுந்தர கனபாடிகள். அய்யர்வாளுக்கு அத்தான் முறை.

சிவத்தவன், கருத்தவனை இன்னார் என்று சொல்ல, கருத்த பார்ப்பான் ராஜாவுக்கு வெகு மரியாதையாக நமஸ்காரம் செய்தான். ராஜா முகம்மதிய சுல்த்தான் போல் பொதுவாக ஒரு சலாம் வைத்தார்.

நின்றபடிக்கு இருந்த அத்தான் அய்யன் பவதி என்று ஏதோ சமஸ்கிருத மந்திரத்தை உரக்கச் சொல்லி எல்லோரையும் பொதுவாக ஆசிர்வதிக்க, ராஜாவுக்கு மெய் சிலிர்த்துப் போனது. எழுந்து நின்று அவன் காலைத் தொடக் குனிந்தார்.

ஹே ராஜன், அது எதுவும் வேண்டாம். நீர் எஜமான். பிரஜைகளைக் காருண்யத்தோடு காத்து சம்ரட்சிக்கும் க்ஷத்ரியன்.

இந்த அய்யனைச் சரிக்கட்டினால் இவர்கள் வந்த விஷயம் சுலபமாக முடிந்து விடக்கூடும் என்று ராஜாவுக்குப் பட்டது.

நாலு வேதம், சாஸ்திரம் எல்லாம் தவறாம நித்யமும் ஓதற பெரியவாள் நிக்கறீங்களே. நானும் நின்னுண்டுடறேன்.

ராஜா முடிந்தவரைக்கும் சிரத்தையோடு பார்ப்பனக் கொச்சையைப் பேச, காரியஸ்தன் சிரிப்பை அடக்கவோ என்னவோ அந்தாண்டை போனான்.

இருங்கள் என்று தலையை அசைத்து, கனபாடிகள் பத்மாசனம் இட்டு நட்ட நடுக்கூடத்தில் உட்கார்ந்தார். ராஜன் நீர் உம் ஆசனத்தில் இரும் என்று அவர் சொல்ல, தட்ட முடியாமல் ராஜா தன் இடத்தில் திரும்பவும் அமர்ந்தார்.

என்ன விஷயமாகப் பார்க்க வந்திருக்கேள் ?

ஜமீந்தார்வாள், ஹார்ட்டன் துரை அன்னைக்கு இங்கே வந்து ஆக்ஞை பிறப்பித்ததை தஸ்தாவேஜாக்கி அனுப்பியிருக்கார். உங்களுக்கும் வந்து சேர்ந்திருக்குமே.

வந்தது என்றான் காரியஸ்தன் கனகுஷியாக.

அவன் நாக்கை அறுத்துப் போட வேண்டும். ஊத்தை வாயைத் திறக்கச் சொல்லி யார் கேட்டது ?

ராஜா முகத்தை வெகு சோகமாக வைத்துக்கொண்டு கனபாடிகளைப் பார்த்தார்.

என்னத்துக்கு விசனம் ? சொல்லும் என்கிறதுபோல் ஒரு வினாடி ராஜாவைப் பதிலுக்குப் பார்த்துவிட்டு வேறு என்ன செய்வது என்று தெரியாத கனபாடிகள் யோகத்தில் அமர்ந்ததுபோல் கண்ணை மூடிக்கொண்டார்.

நான் என்ன சொல்ல ஸ்வாமிகளே. ஜமீனில் நிதிநிலைமை சரியில்லையென்று ஊருக்கே உலகத்துக்கே தெரிஞ்ச சங்கதிதானே ? வசூலிக்கிற வரியெல்லாம் வெள்ளைக்காரனுக்குத்தான். ஏதோ கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கிறதால் இங்கத்திய நடவடிக்கைகள் எல்லாம் பொன்னை வச்ச இடத்தில் பூவை வச்சதுபோல் அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடந்தேறி வருது.

ராஜா பலத்த பீடிகையோடு ஆரம்பித்தார். எதிர்பார்த்து வந்தவர்கள் போல் அவர்கள் அனுதாபத்தோடு தலையை ஆட்டினார்கள்.

இப்படியே இன்னும் கொஞ்சம் தரித்திரப்பாட்டு பாடி, நாலு இளநீர் வெட்டிக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். ரொம்பப் போனால், ஜோசியக்கார அய்யனுக்குக் கொடுத்ததுபோல் ஒரு வராகன் அழலாம். அந்த அத்தான் அய்யனுக்கு வேணுமானால் இன்னொன்று இனாமாகத் தரலாம். தானமும் தட்சிணையுமாகக் கொடுத்துக் கொடுத்து இன்னும் கொஞ்சம் தான் மிச்சம் மீதியாகக் கஜானாவில் இருக்கிறது.

போகட்டும். காலைச் சுத்தின பாம்பு ரெண்டு வராகனோடு கடிக்காமல் நகர்ந்து போனால் நல்லதுதானே.

ஜமீந்தார்வாள். நீங்க பணமாவோ காசாவோ ஏதும் தரணும்னு சுப்பிரமணிய அய்யர்வாள் எதிர்பார்க்கலே.

சுகஜீவனம் கிருஷ்ணய்யர் ஏப்பம் விட்டபடி சொன்னார். காலை நேரத்திலே சொகுசாக ஏப்பம் விடுகிற காவேரிக்கரைப் பிராமணன். நிஜமாகவே சுகஜீவிதான். ராஜாவுக்குப் பொறாமை தாங்கவில்லை.

ஆனாலும் இந்தாள் சொல்கிற வார்த்தை இதமாகத்தான் இருக்கிறது. பணம் காசு வேண்டாம் என்றால் சந்தோஷம் தானே வரும் ? ராணி உண்டாகி இருக்கிறதாக வந்து சொன்னால் ஏற்படுகிற சந்தோஷத்துக்கு ஒப்பானதில்லையோ அது ?

அய்யர்வாள் அவா கிரஹத்தை அவரே கட்டிக்கறார் பார்த்திருப்பேள். அதுக்குண்டான ஆஸ்தி பூஸ்தி அவர்கிட்டே பகவான் புண்ணியத்துலே இருக்கு. ஆனா, வியாபாரத்தைத் தொடர்றதுக்கும் விருத்தி பண்றதுக்கும்தான் உங்க ஒத்தாசை வேண்டியிருக்கு.

கச்சேரி அய்யன் சொன்னபோது கனபாடிகள் திரும்பக் கண்விழித்து இன்னொரு தடவை எல்லோரையும் ஆசிர்வாதித்தார்.

என்ன செய்யணும்னு பெரியவா சொன்னா செஞ்சு போட்டுடலாம் சடுதியிலே.

ராஜா கம்பீரமாகச் சொல்ல, உள்ளே இருந்து ராணி குரல்.

புருஷர்கள் இருக்கும் சபையில் அவள் பேசினது இல்லைதான். ஆனால் விஷயம் முக்கியமானபடியால் அவள் திரைக்கு அந்தப்பக்கம் இருந்தபடிக்கு இதில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள்.

என்னவென்று சொல்லிப்போடம்மா.

ராஜா கனிவாகக் குரல் விட்டார்.

அய்யர் வீட்டுப் பெரியவங்க முதல்லே சொல்லட்டும்.

ராணி தெளிவாகச் சொன்னாள்.

எல்லோரும் திரையைப் பார்க்கத் திரும்பினார்கள். ராஜாவை ஒரு துரும்பு போல் அவர்கள் உதாசீனப்படுத்தி, திரைக்கு அந்தப்பக்கம் இருக்கப்பட்ட ராணியோடு பேச்சு நடத்திப் போக உத்தேசித்திருக்கிறார்கள்.

மகாராணி, தேவி ஸ்வரூபிணி. உனக்கு சர்வ மங்களமுண்டாகட்டும்.

கனபாடிகள் இன்னொரு தடவை ஆசிர்வாதம் செய்தார். இன்றைக்கு முழுக்க ராஜ குடும்பப் புரோகிதனாக அவர் ஆசி மழை பொழியத் தயாராக வந்திருப்பதாக ராஜாவுக்குத் தெரிந்தது. செய்யட்டும். காசு பணம் செலவில்லாமல் அய்யர் வாக்கில் நல்லதாக நாலு வந்தால் ராஜாவுக்கு க்ஷேமமில்லாமல் வேறு என்ன ?

சுவாமிகள் பழம் பால் ஏதும் ஆகாரம் பண்றேளா ? திருவமுது படைக்கச் சொல்லட்டா ?

ராஜா பவ்யமாக விசாரிக்க, கனபாடிகள் கால் கண்ணைத் திறந்து அதொண்ணும் வேணாம் என்று கனிவாகச் சிரித்தார்.

சுப்பிரமணிய அய்யர்வாள் பிரம்மபத்திரம் சேகரித்து வைக்க இங்கே அரண்மனையிலே கொஞ்சம் ஸ்தலம் ஒழிச்சுத் தரணும்.

அவர் பேசியது என்ன மாதிரி விஷயம் என்று ராஜா புரியாமல் பார்த்தார்.

புகையிலை அடைச்சு வைக்க அரண்மனையிலே வசதி இல்லையே சாமி. அதுவும் வாடை வேறே தாங்கமுடியாதபடி இருக்குமே.

ராணி நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டு சொல்ல, கச்சேரி ராமநாதய்யர் அவசரமாக எழுந்து கிட்டத்தட்ட திரைக்குப் பக்கம் போய் நின்றார்.

மகாராணி, அரண்மணை முழுக்க புகையிலை அடைக்கறது துராக்ரமமாச்சே. அதை நாங்க கேட்போமா ? வெளிப்புறமா இருக்கறதா ரெண்டு உள்ளு, அப்புறம் கொஞ்சம் வெத்து இடம். இங்கே தோட்டத்துக்குப் பக்கம் ஒரு மூலையிலே கொடுத்தாப் போதும். சுப்பிரமணிய அய்யர்வாள் கீத்துக்கொட்டகையோ, ஓலைப்பந்தலோ போட்டுக் கிட்டங்கியாக்கிப் பட்டியடைச்சுடுவார். புகையிலை வாசம் அரண்மனைக்குள்ளே எட்டிக்கூடப் பாக்காது. இந்தோ வலது வசத்துலே காணறதே அந்த ரெண்டு மனைக்கட்டும் சரியா வரும்போல தோணறது.

கச்சேரி அய்யர் சொல்ல, ராணி அவசரப்படாதீங்க சாமி, எங்கேன்னு நான் பாத்துக் கொடுக்கறேன் எடுத்துக்குங்க என்றாள்.

உங்களுக்கு ஏன் சிரமம் மகாராணி ? ராஜா பாத்துக்கட்டுமே அதையெல்லாம்.

கச்சேரி அய்யர் குறுக்கிட்டார்.

நீ ஒண்ணும் இது குறிச்சு விசனப்பட வேணாம். ஸ்நானம் செய்து ஆகாரம் செய்து ஓய்வாக இரு. ராஜாங்கக் காரியங்களோட சுமை என் தலைமேலேயே இருக்கட்டும் பெண்ணே.

ராஜா ஆதரவாகச் சொன்னார். திரைக்கு அந்தப் பக்கம் சடாரென்று குரிச்சி இழுபடும் சத்தம். ராணி போயிருந்தாள்.

ராஜா வந்தவர்களோடு நடந்த நேரத்தில், பகலிலோ ராத்திரியிலோ ராணியை எதிர்கொள்ளும்போது அவள் வாயில் விழ வேண்டியிருக்கும் என்பதைக் கவலையோடு நினைவுகூர்ந்தார்.

ஒரு அறை, இரண்டு அறை என்று ஆரம்பித்தது ஒரு சுற்று அரண்மனையைச் சுற்றி நடந்தபோது பழைய குதிரை லாயம், சாரட் வண்டி விடும் காடிகானா, நவராத்திரிக்கு குங்குமம் சந்தனம் இட்டு எலுமிச்சம்பழம் குத்தி நடு மண்டபத்தில் பூஜைக்கு வைப்பதற்காகப் பழைய வாளும் கேடயமும் வைத்திருந்த ஆயுதசாலை, அப்புறம் அரண்மனைத் தோட்டத்தில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு என்று போய்விட்டது.

இத்தனையும் சுப்பிரமணிய அய்யர் பாத்யதைக்கு ஒப்புக்கொடுத்தால் துரையிடம் ராஜாவின் தாராள மனதைப் பற்றி நீளமாக லிகிதம் எழுதி அனுப்பி வைப்பதாகவும், ராஜா சார்பில் அவருடைய மான்யத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்படி கோரிக்கை வைப்பதாகவும், பட்டணத்தில் செஞ்சார்ஜ் கோட்டையில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் தன் புத்ரன் மூலம் அது பற்றி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் கச்சேரி அய்யர் சொன்னபோது ராஜாவால் தட்டமுடியாமல் போய்விட்டது.

ராணி திரும்பத் திரை மறைவுக்கு வந்து ஆயுதசாலை மட்டும் வேண்டாம் என்றாள். அது நாலு தலைமுறைக்கு முந்திய போர்க்கருவிகள் வைத்திருக்கும் க்ஷத்ரிய குலத்துக்கான கோவில் போல என்றும் அங்கே போகப்பொருள் அடைப்பதால் நன்மையுண்டாகாது என்றும் அவள் சொல்ல, கனபாடிகள் ஏதோ ஸ்லோகத்தை ஒன்றுக்கு இரண்டு தடவையாக ஓதி அது சரி என்று ஆமோதித்தார்.

வெள்ளைப்பாண்டுக் கிழவனின் துபாஷி வந்து இரண்டு தரப்பிலும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இந்தக் குத்தகை ஒப்பந்தம் இன்னும் தொண்ணூத்தொன்பது வருஷம் ஆயுசோடு இருக்குமென்றும் எழுதிக் கையொப்பமும் கைநாட்டும் வாங்கிப் போனான் அதற்கு இரண்டு நாள் சென்று.

அதற்கப்புறம் தொடங்கிய வேலைதான் இப்போது ஜரூர் ஆக நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதசாலையை விட்டுவிட்டு மீதி இடங்களில் புகையிலை அய்யர் வகையறாக்களும் அவர்களிடம் சேவகம் செய்து பிழைப்பவர்களுமாக நடமாட்டமும் சத்தமுமாக ஆக்கிரமித்துக்கொள்ள ராஜா சும்மாப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்.

சீக்கிரம் இதெல்லாம் முடிந்து விடும் என்றது அவருடைய மனம். இது முடிந்து இன்னொண்ணு ஆரம்பிக்கும் என்றது புத்தி.

துல்யமான கோணம். மகா அற்புதம். இந்தப்படிக்கே யந்திரம் நிலைக்கட்டும்.

தோட்டத்திலிருந்து ஜோசியக்கார அய்யர் குரல் எல்லா இரைச்சலையும் மீறி ஒலித்தது.

(தொடரும்)

Series Navigation