அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது

This entry is part of 52 in the series 20040108_Issue

இரா முருகன்


எடோ தொரையப்பா, புண்ணியமாப் போறது உனக்கு. கொஞ்சம் பதுக்கெப் பேசு. பகவதி உடம்பு சுகவீனமாப் படுத்துப் பத்து நாளாச்சு. இப்பத்தான் கொஞ்சம் தீர்க்கமா உறங்கறா. பிஷாரடி வைத்தியன் மருந்து வேலை செய்யறது போல இருக்கு.

குப்புசாமி அய்யன் தன் தம்பி துரைசாமி அய்யனை இரண்டு கரமும் உயர்த்திச் சேவித்தபடி சொன்னான்.

ஆமா. இப்ப இதொண்ணும் பேச வேண்டாம்.காணியிலே எங்காத்துக்காரருக்கும் பாத்யதை உண்டு. அவர் இல்லாம அதைப் பத்திப் பேச்சு அனாவசியம். அவரும் வரட்டும். ஆலப்பாட்டுலேருந்து என் தமையன்மாரும் வரட்டும். அதுக்கப்புறம் இதைப் பேசுங்கோ.

துரைசாமி நிறுத்தினாலும், கிட்டாவய்யன் பெண்டாட்டி சிநேகாம்பாள் குரல் தாழ்த்தி முணுமுணுப்பாகக் கோரிக்கை விடுவதை நிறுத்தவில்லை.

அவள் நெல் மூட்டையும், அரிசிப் பொரியும், வெல்லமும் சாக்கில் கட்டி வைத்த அறைக் கதவை ஜாக்கிரதையாக மூடிவிட்டுத் தான் பேச ஆரம்பித்திருந்தாள்.

உள்ளே மூங்கில்ப்பாயால் ஒரு தடுப்பு ஏற்பட்டு இருந்தது. மூட்டை முடிச்சாக அரிசியும், புளியும், பருப்பும் ஒரு பக்கம். கூடவே பீங்கான் பரணிகளில் வெளிச்செண்ணெய். கொட்டானில் உப்பு. உத்திரத்திலிருந்து கட்டிக் காயவிட்ட குலையாக மிளகு. இன்னொரு பக்கம், முகத்தில் ரத்தம் போனதுபோல் வெளிறி, சுருண்டு படுத்திருந்த பகவதிக் குட்டி.

பகவதிக் குட்டிக்கு நினைத்துக் கொண்டதுபோல் விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்ந்து பசிக்கிறது என்கிறாள். பருப்பும் சாதமுமாகப் பிசைந்தெடுத்தபடி விசாலாட்சி மன்னியோ அக்கா அலமேலுவோ ஓட்ட ஓட்டமாக வருவதற்குள் திரும்பத் தூங்கிப் போகிறள். அது அரைகுறை உறக்கமாக அப்படியும் இப்படியும் பிரண்டபடி கிடக்கிறாள்.

பத்து நாளாக ஆகாரம் கொள்ளாமல், மல மூத்திரம் கழிக்காமல், குளியும் நின்றுபோய் அந்தச் சின்னப் பெண் படுகிற துன்பம் வீட்டில் யாருக்கும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.

சனிக்கிழமை ராத்திரி கூத்தம்பலம் பக்கத்தில் ஜன்னி கண்டது போல் பிதற்றிக் கொண்டு தேகம் விதிர்த்து நடுங்கக் கர்ப்பத்தில் சிசுவாக முழங்கால் தவடைப் பக்கம் உயர மரவட்டை போல் சுருண்டும் கிடந்தவளை கட்டிலில் படுக்க வைத்தபடிக்குத் தூக்கி வந்த ஊர்வலம் ஆலப்பாட்டு வயசனை வெடிவழிபாட்டுப் பரம்பிலிருந்து கொண்டு வந்த மாதிரித்தான் இருந்தது.

ஆனாலும் இப்போது இளைய எம்பிராந்திரி வரவில்லை. அவன் இடத்தில் வலிய எம்பிராந்திரி. காலை விந்தி விந்தி வெடிவழிபாட்டுக்காரனும் தீ கொளுத்திப் பிடித்த காய்ந்த இலைச்சுருளைப் பிடித்தபடி வந்தான்.

பகவதிக்குட்டியிடம் பிரசாதம் யாசித்த குருக்கள் பெண் கையை நீட்டும்போதே பகவதி மருண்டு போனாள். அம்மே நாராயணாவும் தேவி நாராயணாவும் வாய்க்குள் புரள மறுக்க, அவள் கையில் இலைத் தொன்னையில் இருந்த பிரசாதத்தை அப்படியே சாமிநாதனோடு கலந்த பெண்டிடம் நீட்டியபோது, ஊர்ந்து வந்த சம்புடம் அவள் காலுக்கு அருகே வந்து திறந்து கொண்டது.

அதன் உள்ளே இருந்து ஐந்து விரலோடு முளைத்து இருந்த பாதம் மேலே எழும்பி வந்து எனக்கு, எனக்கு என்று குருக்கள் பெண்ணை உதைத்துத் தள்ளியதைப் பார்த்த பகவதி உச்சந்தலையில் முடி சிலிர்த்து நிற்கப் பயத்தில் உறைந்துபோய் இலைத் தொன்னையைக் கீழே நழுவவிட்டாள்.

முன்னூறு வருடம் முன்னால் பஞ்சகாலத்தில் உயிரை விட்ட குருக்கள் பெண்ணும், தேவி க்ஷேத்ர வெடிவழிபாட்டுக்காரன் காலிலிருந்து துண்டிக்கப்பட்டு, பிஷாரடி வைத்தியனும், எம்பிராந்திரியும் கொடுத்த ஆலோசனைகள் கொண்டு போஷிக்கப்பட்டு ஒன்றுக்கு ஐந்தாக விரல் வளர்ந்த மனிதப் பாதமும் அங்கே ஒரு பிடி சோற்றுக்காக அடித்துக் கொண்டதைக் காண பகவதி தவிர யாரும் இல்லாமல் போனார்கள்.

வெறும் மாமிசப் பிண்டம் நீ. உன்னோட உடமைஸ்தன் அங்கே வெடி வெடிச்சுண்டு உக்காந்திருக்கான். நாளைக்கே மருத்துவன் ஒட்ட வச்சா அந்தப் புழுத்த உடம்புலே போய் ஒட்டிக்கப்போறே. இப்ப என்னத்துக்கு உனக்கு சாதமும் எழவும் எல்லாம் ?

குருக்கள் பெண், வெடிக்காரன் கால்விரல்கள் உறுதியாகப் பிடித்திருந்த இலைத் தொன்னையைப் பிடுங்கப் பார்த்தாள். ஆவி ரூபமான அவளுடைய பலத்தால் அந்த மனுஷ விரலிலிருந்து பிடுங்க முடியாத இலைத்தொன்னை தரையில் உருண்டது. நைவேத்தியச் சோற்றைச் சம்புடத்துக்குள் கவிழ்த்துக் கொள்ள அந்த விரல்கள் மும்முரமாக முயற்சி செய்தபடிக்கு இருந்தன. அது முடியாமல் போகவே அவை சம்படத்துக்கு வெளியே தைலமும் தண்ணீரும் மினுமினுக்க வெளிக்கிளம்பி வந்தன.

பகவதி, நீயே சொல்லுடி குழந்தே. எனக்குப் பசிக்கறதுன்னு உன்னை வந்து யாசிச்சா, இந்தப் பிண்டத்துக்கு என்ன வந்தது ? நான் யாருடி ? உன்னோட ஓரகத்தி இல்லியா ? சாமா இல்லாமப் போனா என்ன ? நானும்தான் இப்படி பிரேத ரூபமா, ஆவி ரூபமா அலஞ்சு பிரியத்துக்கும் நாத்தச் சோத்துக்கும் யாசிச்சபடி அங்கேயும் இங்கேயுமா அல்லாடினா என்ன ? பந்தம் விட்டுப் போகுமோடி பொண்ணே ?

அவள் ஈன சுவரத்தில் முறையிடக் கூத்தம்பலத்தில் சாக்கியார் சுலோகம் சொல்லி நாலு திசையும் நமஸ்கரித்துக் கதை கேட்க வரும்படி தேவதைகளையும், மனுஷர்களையும் விளித்துக் கொண்டிருந்தார்.

ஐயோ ஐயோ இந்த தர்த்திரப் பிண்டம் இப்படி கைக்கு எட்டினது வாய்க்கும் வயத்துக்கும் எட்டாமப் பிடுங்கிண்டு போறதே. பலிக்கல் தேவதைகளே, அரசூர் குடும்பத்து மூத்த பெண்டுகளே, பகவதி, என் பொன்னு பகவதிக் கொழந்தே. கேட்பாரில்லியா ? சாமா, அட சாமிநாதா. தேவடியாள் மகனே. பகல்லே விரிச்சுக் கிடத்தி என்னை அனுபவிச்சியேடா. இப்பப் பசிக்கறது. ஒரு வாய் சோத்துக்கு வழியில்லாம அல்லாட விட்டுட்டுப் போய்ட்டியேடா. நெருப்பிலே பொசுங்கின உன் லிங்கம் பஸ்பமான இடத்துலே ஆயிரம் நூறு எருக்கஞ்செடியும் நெருஞ்சி முள்ளும் முளைச்சு நாசமாகட்டும். உன்னோட அரசூர் வம்சமே விருத்தி கெட்டுப் போகட்டும்.

குருக்கள்பெண் அரற்ற, இருட்டுக்குள் பிரசாதம் வைத்த இலைத் தொன்னையை இழுத்தபடி ஓடிய வெடிக்காரன் பாதத்தையே பார்த்தபடி பகவதி படிக்கல்லைப் பிடித்தபடி நின்றபோது, பெண்டுகள் ஒரே குரலாகப் பாடுகிற சத்தம்.

இன்னும் பத்து நூறு தலைமுறை அரசூர் வம்சம் செழித்துச் சண்டையும் சச்சரவும் சமாதானமும் ரோகமும் ஆரோக்கியமும் ஆசையும் நிராசையும் போகமும் யோகமுமாக மனுஷ ஜாதி எல்லாம் போல நீண்டு போகும் என்று பாடின பாட்டு அது. நலங்குப் பாட்டாக ஊஞ்சலோடு மேலும் கீழும் உயர்ந்தும் தாழ்ந்தும் படிந்த அந்தக் குரல் பகவதிக்குட்டி கேட்டதுதான். அவளைப் பெண் பார்க்க வந்த அரசூர்க் கூட்டத்தில் வாயைத் துணியால் கட்டிவைத்த ஒரு பழுத்த சுமங்கலி கூடத்துச் சுவரில் சாய்ந்தபடி, வாய்க்கட்டை நெகிழ்த்தியபடிக்குப் பாடிய குரல் அது.

எனக்கு வேணும். பசி பிராணன் போறது. உடம்பு இல்லாட்டாலும் பிராணன் இருக்கு. உனக்கு உடம்பு தான் இருக்கு. பிராணன் இல்லே. எதுக்கோசரம் இந்தச் சோறு ? மண்ணுலே போட்டுப் புரட்டாதே. வேணாம். கொடுத்துடு எனக்கு.

குருக்கள் பெண் அழுதபடிக்கே போக, பகவதி மயங்கிப் போய் தட்டுத்தடுமாறி பலிக்கல் விளக்கின் நிழல் நீண்ட கல்படவில் நடந்து கூத்தம்பல முன்னால் வெறுந்தரையில் மயங்கி விழுந்தாள்.

இந்தப் பத்து நாளாக அவள் குருக்கள் பெண்ணையும், வெடிக்காரன் காலையும் தொடர்ந்தபடிக்கு இருக்கிறாள். மண்ணில் விழுந்த பிரசாதம் மண்ணோடு போனது. வெடிக்காரன் கால் விரலை எடுத்துக் கடிக்க முயன்று வாயில் ரத்தச் சுவடும் வெளிச்செண்ணையும் திளங்கச் சிரித்தக் குருக்கள் பெண்ணின் இடுப்புக்குள் அந்த விரல்கள் புக முயற்சி செய்ய, அவள் சாமா வேண்டாம் கேளுடா அங்கே எல்லாம் காலை வைக்காதே. நீ சாமா இல்லே. அந்நிய புருஷன். படுபாவி. சாமாவோட தேகச் சூடு எனக்குத் தெரியும். வெறும் பிண்டம். வெத்துக் கால் நீ. அடி குழந்தே பகவதி, வந்து இந்தச் சனியனை எடுத்து அந்தாண்டை எறிடா. பகவதி, பகவதி ஏந்திருடி கொழந்தே. பசிக்கறதுடா. புண்ணியமாப் போறது உனக்கு. எனக்காகக் கொஞ்சம் சாப்பிடு. நான் வேணுமானா யாசிக்கறேன். விசாலாட்சி மன்னி, சிநேகா மன்னி, லட்சுமி அக்கா, அலமேலு அக்கா. பருப்புஞ் சாதம் கொண்டாங்கோ. நெய் குத்தி நாலு கவளம் மாத்ரம் போதும். ஜலத்தைக் குடிச்சுட்டுப் படுத்துக்கறேன். பருப்பெல்லாம் இங்கே தான், சாக்கு மறைப்புக்கு அந்தாண்ட மூட்டை மூட்டையா அடுக்கி வச்சிருக்கான் துரைசாமி அய்யன். விசாலாச்சி மன்னி, டா சாலாச்சி, இங்கே தாண்டி படுத்திண்டே அன்னிக்கு ஆத்துக்காரனோட. நாந்தான் எல்லாம் பாத்தேனே. வயசனைத் தூக்கிண்டு வந்து முழுசும் பாக்க விடாமா. போறது. இப்ப சாதம் கொண்டாடி. க்ஷேத்ரத்துலே தேவி மாதிரி இருக்கே விசாலாட்சி. விசாலி. சாலாச்சி. சாலு. சாலும்மா. துரைசாமி ஐயன் மாதிரிக் கொஞ்சறேன். கெஞ்சறேன். பசிக்கறதுடா.

குருக்கள் பெண் சொல்வதில் நாலு வார்த்தையோ மூணோ ஈன ஸ்வரத்தில் பகவதி வாயிலிருந்து எழ, அது சாதம், சாதம், பருப்பும் நெய்யும் குழையப் பிசஞ்சு சாதம் என்று மட்டும் வருகிறது.

ஏண்ணா, பிஷாரடி வைத்தியர் என்ன சொல்றார் ? பகவதிக்கு சொஸ்தமாகல்லேன்னா ஆலப்புழைக்கு காளை வண்டி வச்சுப் பாதிரி வைத்தியன் கிட்டேக் கூட்டிண்டு போயிடலாமே ? பகவதி கல்யாணம் நெருங்கி வர நேரத்துலே இது என்ன கஷ்டம் பாரு.

துரைசாமி தமையன் குப்புசாமியிடம் சொன்னான்.

இன்னியோடு இது சொஸ்தமாயிடும்னார்டா பிஷாரடி. மருந்தை விடாமக் கொடுத்தாறதே. வைத்தியன் மேலே நம்பிக்கை இல்லாட்ட எப்படிக் குணமாகும் சொல்லு.

தமையன் குரல் தாழ்த்திப் பேசியதற்குத் தலையாட்டினான் துரைசாமி அய்யன்.

காணி விற்பதைப் பற்றிப் பேச அவன் தான் குப்புசாமி அய்யனைக் கூப்பிட்டது. இனியும் நேரம் கடத்தினால் அப்புறம் நாம் எல்லோரும் சேர்ந்து உட்காரும் நேரம் இப்போதைக்குக் கிட்டாது என்று சகோதரிமார்களின் கணவர்களான ராமேந்திரனும், சோமநாதனும் கூடவே சொன்னார்கள்.

அவர் இதோ வந்துடுவார். செத்தப் பொறுங்கோ.

சிநேகாம்பாள் இதையே பேசினபடிக்கு இருக்கிறாள். கிட்டாவய்யன் காலையிலேயே கிளம்பிப் போயிருக்கிறான். இன்னும் வந்தபடியாக இல்லை.

எங்கே போனான் அவன் ? இப்போ தேகண்டமும் இல்லியே எங்கேயும் ?

துரைசாமியும், லட்சுமியும், அலமேலுவும் அவளைத் திரும்பத் திரும்பக் கேட்டாலும் தெரியாது என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தெரியும் கிட்டாவய்யன் போன இடம்.

சாவக்காட்டு வேதக்காரப் பிராமணனைக் கண்டு வரப் போயிருக்கிறான் அவன். பணம் வேண்டி இருக்கிறது. பூர்வீகச் சொத்தான காணி விற்றால் முழுசாக விற்கச் சொல்லித் தன் பங்கைக் கேட்பான் அவன்.

மேலும், சாவக்காட்டுக் காரனிடம் சொல்லி வைத்திருக்கிறான். ரெண்டு வட்டி என்பது அதிகம் தான். ஆனாலும் அடமானம் வைக்கக் கிட்டனுக்குப் பிடி உடைந்த இருப்பச் சட்டியைத் தவிர வேறே என்ன இருக்கு ? குழந்தைகள் காதிலும், சிநேகாம்பாள் மூக்கிலும் கழுத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கும் இக்கிணியூண்டு தங்கத்தைப் பறித்தெடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

வேறே வேதமானாக்க என்ன ? நீரும் நானும் ஒண்ணுதானே. நீர் எனக்குப் பிடி சாதம் தராமல் சவட்டினாலும், இன்னிக்கு என் வீட்டு வாசல்லே வந்து நின்னு கும்புட்டுக் கேட்டாலும் நான் எப்பவும் அதே தான் சொல்றேன். தரேனய்யா. எம்புட்டு துட்டு வேணும், கேளும்.

சாவக்காட்டான் புதிதாகக் கருத்த தலைமுடியும், உடம்பில் வழக்கத்தைவிடச் சுருக்கமும் தளர்ச்சியும் அரைக்கட்டில் பட்டுச் சோமனும் உத்தரியமுமாக உட்கார்ந்து கிட்டனைப் பார்த்துக் கேட்டது முந்தாநாள்.

ஸ்வாமின், நான் ஜாகை மாத்திண்டு அம்பலப்புழைக்கோ கொல்லத்துக்கோ போய் சாப்பாட்டுக் கடை போடறதா உத்தேசம். தேகண்டத்துக்கு வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு அலைஞ்சது எல்லாம் போறும். உம்ம கடனுக்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வட்டியும், நாலு வருஷத்துலே கொஞ்சம் கொஞ்சமா முதலையும் அடைச்சுடறேன்.

கிட்டாவய்யன் ஆகாசப் பார்வையில் சொப்னத்தில் லயித்தவனாக மார்புக்குக் குறுக்காகக் கையைக் கட்டியபடி சொல்ல, சாவக்காட்டான் வெற்றிலை மென்று கொண்டு தலையை ஆட்டியபடி அவனை வெட்டுக்கிளியைப் போல் வேடிக்கை பார்த்தவண்ணம் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஓலப் புரை. தடுக்கு. இலைக்கட்டு. சுவியனும், தோசையும், புட்டும் அப்பமும் இலையடையும் உண்டாக்குகிற உத்தியோகம். உண்டாக்கி உண்டாக்கி செப்புப் பாத்திரத்தில் வைத்துப் படியேறி வருகிறவன் எல்லோருக்கும் யார் என்ன என்ற நதிமூலம் ரிஷிமூலம் தன மூலம் ஒண்ணும் விசாரிக்காமல் மடியில் முடிந்துவைத்த சஞ்சியைக் குறிவைத்துப் பரிமாறிக் காசு சேர்ப்பான் கிட்டன். ஒரு சக்கரமும், இரண்டு சக்கரமும் அரை அணாவும், காலணாவுமாக எந்தப் பேதமும் இல்லை காசுக்கு. அது யார் இடுப்பில் இருந்து இறங்கினாலும், என்ன வாடை அடித்தாலும் இஷ்டமாக எல்லாம் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள்வான் அவன். கிரஹம் உயரும். சிநேகாம்பாளும், குழந்தைகளுமாகக் குடும்பம் முழுக்க செழிப்பாக வரும். புத்திரன் பிறப்பான். பட்டும் பீதாம்பரமுமாக அவனுக்கு குருவாயூரில் அன்னப் பிரசன்னம்.

ஓய் கிட்டாவய்யர். நீர் போய்ட்டு வ்யாழனாழ்ச்சை வந்துடும். நான் என்ன தொகை தரலாம்னு யோஜிச்சு வைக்கறேன்.

இன்றைக்குத் தான் வியாழக்கிழமை. சாவக்காட்டு வேதக்காரன் சொன்னபடிக்கு விடிகாலையிலேயே கிட்டாவய்யன் அவனைத் தேடிப் போயிருக்கிறான். அவன் வந்தபிறகு காணி பற்றியும் கல்யாணம் பற்றியும் எல்லாரும் கூடிப் பேசி முடிவுக்கு வரட்டும். கிட்டாவும் பேசுவான்.

லட்சுமிக்கும், அலமேலுவுக்கும், இப்போது பகவதிக்கும் வரன் திகையத் திகையச் செலவுக்கும், சொர்ணம் வாங்கவும், சீர் வைக்கவுமாகப் பணம் புரட்டக் கிள்ளிக் கிள்ளி காணியை விற்றாகிறது. இன்னும் இருக்கப்பட்டதும் பக்கத்திலே நிலம் போக்யதை கொண்டவர்களால் அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. நாளைக்கே அது கண்ணில் காணாமல் மறைந்து விடலாம். அதற்குள் இருக்கப்பட்ட முழுசையும் விற்றுத் தீர்த்துக் குப்புசாமி அய்யனும், துரைசாமி, கிட்டாவய்யன்மாரும் பிரித்து எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் நல்லதாகும்.

இந்தக் கூட்டுக் குடித்தனம் பற்றிக் கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. எல்லாம் பேசி முடித்துவிடலாம். எல்லோரும் வீட்டில் இருக்கப்பட்ட தினம். கிட்டாவய்யன் வந்துவிடுவான்.

ஜல் ஜல் என்று கொலுசுச் சத்தம்.

பகவதிக் குட்டி கூடத்தில் நுழைந்தாள். இருட்டு விலகினது போல் அவள் முகம் தெளிவாக இருந்தது. இப்போது தான் குளித்த நேர்த்தியில் அவள் ஈரமுடி தோளில் தவழ்ந்தபடி இருக்க, அவள் விசாலாட்சி மன்னியைப் பார்த்துப் பூ மலர்ந்ததுபோல் சிரித்தாள்.

சாலாச்சி மன்னி. எனக்குப் பசிக்கறது. நிஜமாவே.

(தொடரும்)

Series Navigation