அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து

This entry is part of 40 in the series 20031204_Issue

இரா முருகன்


கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்

வந்தாண்டா வந்தாண்டா தாயோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

ஊரில் கொட்டகுடித் தாசிக்கு இந்துஸ்தானி குருட்டுப் பாடமாகத் தெரியும். அவளுக்கு வெண்பாவும், தரவு கொச்சகக் கலிப்பாவும், விருத்தமும் கூட இயற்றத் தெரியும். கூளப்ப நாயக்கன் காதல் பாட்டுக்கு அபிநயம் பிடிக்கத் தெரியும். புகையிலை போடமாட்டாள். போட்டால் பல் கருத்துப் போய் தொழில் நசித்து விடும் என்ற பயமாம். சங்கரன் கடையில் அவளுக்கு வாங்க ஒன்றும் இல்லை. வாங்காட்டப் போறது. சுவர் கே பச்சே அப்படான்னா என்ன ?

அய்யரே, ஒரு சிமிட்டா பொடி மூக்குலே தள்றியா ?

சுலைமான் தந்தத்தால் ஆன சம்புடத்தைக் காற்றுக்கு அணைவாகக் கைக்குள் வைத்துத் திறந்தபடி கேட்டான்.

பெண்பிள்ளைகள் இதைப் போடுவாங்களோடா சுலைமான் ?

அய்யரே, உனக்கு என்ன எப்பப் பாத்தாலும் அங்கேயே போவுது புத்தி ?

சுலைமான் அவன் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான்.

மூணு மணி நேரத்துக்குள் கருத்தானைவிட நெருக்கமான சிநேகிதனாகி இருந்தான் சுலைமான். பணம் புரளும் சீமான் என்பதாலோ என்னமோ அவனையறியாமலேயே அதட்டலும், கிண்டல், கேலியுமாகப் பழகக் கை வந்திருந்தது. கருத்தான் ஒரு எல்லைக்கு மேல் போக மாட்டான். அவனுடைய அய்யர் சாமி அழைப்பு சங்கரனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலைமானுக்கு அவன் வெறும் அய்யர்தான். சீக்கிரமே டேய் சங்கரா என்றும் கூப்பிடக் கூடும். சங்கரனை விடப் பத்து மடங்கு காசும் பணமும் கப்பலில் வரும் வருமானமும் அவனுக்கு ஆகிருதியைக் கூட்டிக் காட்டுகிறது.

அவன் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கும் தான்.

விசாலமான வீட்டு வாசலிலே குரிச்சி போட்டு உட்கார்ந்து வெற்றிலைக்குள் புகையிலையோ வேறு எதோ கலந்து சுருட்டிக் கிராம்பு வைத்து அடைத்த பொட்டலத்தைச் சதா மென்று படிக்கத்தில் துப்பிக்கொண்டு இருந்த அவர் பார்வையில் சங்கரன் பட்ட கொஞ்ச நேரத்திலும் பணத்தைப் பற்றித்தான் பேசினார்.

மதுரைப் பட்டணத்திலே, திருச்சிராப்பள்ளியிலே, தஞ்சாவூரிலே, புதுக்கோட்டையிலே எல்லாம் பாக்குச் சீவல் விற்கவும், வாசனை விடயம் விற்கவும், மூக்குத்தூள் போல் சீக்கிரமே பிரக்யாதி ஏறிக் கொண்டிருக்கிற இலைச் சுருட்டு விற்கவும் யாரெல்லாம் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் பணம் வந்த விதம், அவர்களுக்கு எங்கெல்லாம் வைப்பாட்டிமார், எப்படிச் செலவாகிறது பணம் அந்த விஷயமாக, எவ்வளவு அண்டஞ் சேர்கிறது என்று பட்டியல் ஒப்பித்தபடி, பக்கத்தில் நிரம்பி வழிகிற படிக்கத்தில் துப்பியபடி இருந்தார் அவர்.

வீட்டுக் கூரை மேலும், மேல்தளத்திலும், வாசல் முகப்பிலும் சுவாதீனமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மேலே எச்சம் இடாமல் தோளை அப்படியும் இப்படியும் நகர்த்திக்கொண்டு அவன் மரியாதைக்கு இதைக் கேட்டுக் கொண்டிருந்க, மாடிக்குப் போன சுலைமான் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சங்கரய்யரே சங்கரய்யரே என்று உரக்க விளித்தான்.

செருப்பாலடி படுவா. பெயரைச் சொல்றான் துருக்கன். எல்லாம் பணம் பண்ற வேலை என்று நினைத்தபடி சங்கரன் படியேறிப் போனாலும் அடுத்த நிமிடம் மனம் மாறிப் போனது.

தோஸ்த், இங்கேயே அடைப்பைத் தொறந்து வுடு.

கடன்காரன் மாடியிலேயே கழிப்பறை வைத்திருக்கிறான்.

என்னடா சுலைமான், வீட்டுக்குள்ளேயே இப்படி.

அடக்க மாட்டாமல் சிரித்தான் சங்கரன்.

அட என்னாபா நீ, கக்சுக்குள்ளே போய்க் குடித்தனம் நடத்தப் போறமா இல்லே பிரியாணி சாப்பிடப் போறோமா. அது பாட்டுக்கு அது ஒரு ஓரமா. இது பாட்டுக்கு இது நடுவுலே.

அவன் காட்டிய மகா விசாலமான மண்டபத்தில் கம்பளம் விரித்து வெல்வெட் உறை மாட்டிய திண்டும் தலகாணியுமாகக் கிடந்தது. நீக்கமற நிறைந்த அத்தர் வாடை.

அற்ப சங்கைக்கு வீட்டுக்குள்ளேயே அமைத்திருந்த இடமும் வெள்ளைப் பளிங்கினால் பாதம் அமைத்த மாதிரி நேர்த்தியாக, உள்ளே சுகந்த பரிமள மணம் சதா வீசுமாறு இருந்தது.

காசு கூடிப் போனால் மூத்திரம் கூட வாசனையடிக்கும் போல என்று நினைத்தபடியே சங்கரன் போன காரியம் முடிந்து வரும்போது கவனித்தான் அந்த அறைக்குள்ளேயே ஸ்நானம் கூட முடிக்க வசதி இருக்கிறதென்று.

அய்யரே கிளம்பலாமா. நாலஞ்சு கொடம் வச்சிருப்பே போலேருக்கே..

திண்டில் சாய்ந்து ஒரு துணிச் சஞ்சிக்குள் ஏதோ அடைத்துக்கொண்டிருந்த சுலைமான் சத்தமாகச் சொன்னது கீழ் வீட்டில் முட்டாக்குப் போட்டபடி நடமாடிக் கொண்டிருந்த பெண்பிள்ளைகள் காதிலும் விழுந்திருக்கும்.

அவனோடு கூடப் படியிறங்கிக் கீழே வந்தபோது, தஸ்தகீர் ராவுத்தர் தோளுக்கொன்றாகப் புறா உட்கார்ந்திருக்க, முகம்மதிய சுல்தான் போல் நீள ஹூக்காவுக்குள் தண்ணீர் களக் களக் என்று புரளப் புகைவிட்டுக் கொண்டிருந்தார்.

அரே முன்னா, கப்பல்லே வந்திருக்கிற ஒரு ஆத்மி விடாம விவரம் கேட்டு வச்சுக்க. காலையிலே ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டு நான் போகணும். பணமுடை யாருக்குன்னு விசாரிக்க விட்டுடாதே. இந்த அய்யர் பச்சாவுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா உபயோகமா இருக்கும். பரவாயில்லே. ஆள் கட்டுக் குடுமியும் ஜிமிக்கியுமா நல்லாத்தான் இருக்கான். வெள்ளைக்காரனுக்கு இப்படிப் பார்ப்பாரப் பிள்ளை, பாம்புப் பிடாரன், இந்திரஜால மந்திரவாதின்னு பாத்தாத்தான் கடல்லே இருந்து நிலத்துலே கால் வைப்பான்.

ராவுத்தர் தன்னை புகையிலை வியாபாரி, இப்போ புது வியாபாரத்தில் கொடி நாட்டிப் பிரக்யாதி பெற வந்த, வியாபார நெளிவு சுளிவு தெரிந்த அரசூர்ச் சங்கரய்யராகப் பார்க்காமல் குடுமியும் கடுக்கனுமாக வெள்ளைக்காரன் கண்ணில் பட்டு சந்தோஷப்படுத்த வேண்டி ஜன்மம் எடுத்த விநோதப் பிறவியாகப் பார்த்ததில் சங்கரனுக்குக் குறைச்சல் தான்.

நாளைக்கு அவனும் நிறையச் சேர்த்து வைத்தி சார் போல், அதைவிடப் பெரிதாக தஸ்தகீர் ராவுத்தர் போல் சமுத்திரக் கரையிலிருந்து வந்து காற்று சாயந்திரங்களில் பேசிவிட்டுப் போகும் அரண்மனை மாதிரி வீடு கட்டுவான். வீட்டுக்குள்ளேயே மாடியில் ஒரு கழிப்பறை ஏற்பாடு செய்ய வேண்டும். சுப்பிரமணிய அய்யரும், சுந்தர கனபாடி மாமாவும் கச்சேரி ராமநாதய்யரும் அவருடைய அவசர அவிழ்ப்பில் தெறித்த சுக்லத்திலிருந்து வழுக்கையும் தொந்தியும் தொப்பையுமாக வடிவெடுத்து வந்த வைத்தி சாரும் எல்லாம் அஸ்துக் கொட்டுவார்கள். சுப்பம்மா அத்தை வாயில் இருந்து மூத்த குடிப் பெண்டுகள் வேறே ஆயிரத்தெட்டு நொட்டச் சொல் சொல்லிப் பாட்டாகப் பாடி முட்டுக்கட்டை போடுவார்கள். ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் யந்திரம் ஸ்தாபித்துக் கொடுத்தால் சரியாகிவிடும் எல்லாம். அற்ப சங்கை செய்தபடிக்கே கீழே குளிக்கிற ராணியைப் பார்க்கலாம். அவள் இங்கே எங்கே வந்தாள் ?

கள்ளுக் குடித்தமாதிரித் தாறுமாறாக ஓடிய இரட்டைக் குதிரைகளின் காலுக்கு நடுவே மிதிபடாமல் தாவிக் குதித்து ஓடிய பட்டணத்து ஜனங்கள் அசிங்கமாகத் திட்ட சுலைமான் சந்தோஷமாகச் சிரித்தபடியே வண்டியை ஓட்டம் ஓட்டமாக விரட்டி வந்து துறைமுகத்தை அடைந்தபோது, இவனுக்கு எதற்கு வண்டிக்காரன் என்று தோன்றியது சங்கரனுக்கு. வண்டிக்காரன் அழுக்கு முண்டாசும், கடைவாயில் அடக்கிய புகையிலையுமாக, வண்டிக்குப் பின்னால் கால் வைத்து ஏறும் இடத்தில் காலடி மண்ணுக்கும் தோல் செருப்புக்கும் நடுவிலே திருப்தியாக உட்கார்ந்திருந்தான்.

ஹராம் கோட். வண்டியைப் பாத்துக்கோ பத்திரமா. குருதைக்குப் புல்லுப் போடு. தூங்கிடாதே கஸ்மாலம்.

அவன் கட்டுமரத்தில் ஏறும்போது வண்டிக்காரனுக்குப் பிறப்பித்த உத்தரவை ரொம்ப ரசித்து மனதில் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான் சங்கரன். பட்டணத்தில் ஒரு வருஷம் ஜாகை அமைத்து இருந்தால் அவனுக்கும் இதெல்லாம் நாக்கில் வெள்ளமாக வரும்.

அஹோய் அஹோய்.

கப்பலின் மேல்தளத்தில் நின்றிருந்த வெள்ளைக்காரன் நீளக் குழலைப் பிடித்து அதன் மூலம் பார்த்தபடி கூவியது கட்டுமரத்தில் கேட்டது.

லண்டன்லேயும் இப்படி சமுத்திரக் கரை இருக்காடா சுலைமான் ?

சங்கரன் அப்பாவியாகக் கேட்டான்.

அங்கே ஏது சமுத்திரம். பக்கத்துலே டோவருக்குப் போகணும்பாரு வாப்பா. அவருக்குப் பூகோளம் எல்லாம் அத்துப்படி. அது கிடக்கட்டும். இவன் இங்கிலீசுக்காரன் இல்லே. அமெரிக்காக் கண்டத்து வெளுப்பான்.

அப்படான்னா ?

அது ஒரு புது தேசம்பா. நூறு வருசச் சொச்சமா இருக்காம். இங்கிலீசுக்காரன் தான்.நம்ம ஆளு லங்கைக்குப் போறான் பாரு அப்படித் தனியாப் போய்ட்டவனுங்க.

தான் இங்கிலீஷ் காரர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கப் போவதில்லை என்பதில் சங்கரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் என்ன ? கப்பலில் வந்த துரை துரைதான். மூத்திரக் கொல்லையிலே பிறந்து வந்தவனாக இருந்தாலும்.

இன்னும் நாலைந்து வெள்ளை மூஞ்சிகள் கப்பல் மேல்தளத்தில் இப்போது பிரத்யட்சமாயின. குண்டோதரன் போல் ஒருத்தன். கொக்கு மாதிரி மெலிந்து உயர்ந்த இன்னொருத்தன். அப்புறம் ஒரு தாடிக்காரன். நீளப் பாவாடையும், தலையில் பெரிய தொப்பியுமாக சில வெள்ளைக்காரப் பெண்கள்.

வெள்ளைக்காரி வாசனை புடிச்சிருக்கியா தோஸ்த் ?

சுலைமான் சங்கரன் தோளில் கைவைத்து விசாரித்தான்.

உள்ளூர் ஸ்திரி வாடையே தெரியாதுடா நேக்கு. புகையிலை வாடையும் இப்ப நீ மூக்குலே போட்டுத் தும்மினியே அந்த மூக்குத் தூள் வாடையும் தான் தெரியும்.

கப்பல்லே வா. அப்பாலே எல்லாம் அத்துப்படியாயிடும்.

சொன்னபடிக்கு துணி சஞ்சியில் இருந்து ஏதோ குப்பியை எடுத்து சங்கரனின் மேல் விசிறித் தெளித்தான் சுலைமான்.

ஐயயோ, என்னடா இது எனக்கும் துருக்க வாசனை பூசிட்டே இப்படி.

சங்கரன் சங்கடப் பட்டுக் கொண்டாலும் அந்த வாசனை பிடித்துத்தான் இருந்தது. பகவதிக் குட்டிக்கும் இது பிடிக்கலாம்.

கப்பல் மேலே இருந்து நீளக் குழல் பிடித்த வெள்ளைக்காரன் ஏதோ கத்தினான். பதிலுக்குக் கையை வாய்க்குப் பக்கம் வைத்துக் குவித்து சுலைமானும் கத்தினான். வெள்ளைக்காரன் கையை அசைத்தான் வாவா என்று கூப்பிடுகிறது மாதிரி சைகையோடு.

சீமைச் சாராயம் கிடைக்குமான்னு கேக்கறான் தாயோளி. இவனுக வந்ததுமே இதைத்தான் தேடுவாங்கன்னு சஞ்சியிலே கொணாந்திருக்கேன்.

சுலைமான் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரிய அலை ஒன்று கட்டுமரத்தை மூழ்கடிப்பதுபோல் மேலே உப்புத் தண்ணீரை வீசி எறிந்து போனது. உடுப்பெல்லாம் தொப்பமாக நனைந்து போனது சங்கரனுக்கு.

கண்டுக்காதே. ரெண்டு ஜதை உடுப்பு எடுத்தாந்திருக்கேன். உனக்கு வேணும்னா சொல்லு.

சுலைமான் கவலைப் படாமல் சிரித்தான்.

அவன் விழுத்துப் போட்ட இடுப்புத் துணியையும் அங்கியையும் தரிப்பதைவிட ஈரமான உடுப்போடேயே சங்கரன் நாள் முழுக்க இருக்கத் தயார். அரசூர்ப் பிராமணன் அந்நிய ஜாதி மனுஷ்யன் வஸ்திரத்தை உடுக்கிற அளவுக்கு இன்னும் போய்விடவில்லையாக்கும்.

ஏணியைப் பிடித்துக் கப்பலில் ஜாக்கிரதையாக ஏறுவதற்குள் சங்கரனுக்கு உயிர் போய்த் திரும்ப வந்தது. கீழே அலையடித்துக் கிடந்த கருநீல சமுத்திரத்தைப் பார்க்கப் பயம் கொண்டு, முன்னால் ஏணியில் ஏறிக் கொண்டிருந்த சுலைமானின் பிருஷ்டத்திலேயே பார்வையைப் பதித்தபடி அவன் பாதம் எடுத்து வைத்து மேலே போனான்.

கப்பலில் அவன் காலடி எடுத்து வைத்ததும் கலகலவென்று சிரித்துக் கொண்டு ஏழெட்டு வெள்ளைக்காரிகள் ஓடி வந்தார்கள்.

கொஞ்சம் தேவதைகள் எல்லோரும். சோகை பிடித்த வெளுப்பு முகத்தில் அப்பினாலும், மதர்த்து நின்ற மார்பும் சிறுத்த இடுப்புமாக சரீரத்தை சட்டம் போட்டுக் காட்டுகிற நீளப் பாவாடை அணிந்து நிற்கிற சுந்தரிகள். ஊருணித் தண்ணீர் போல் செம்மண் நிறத்தில் தலைமுடியும் எதையோ குழைத்துப் பூசி சிவந்து போன கன்னமுமாக நிற்கிறவர்கள்.

ஒருத்தி அவன் கையைக் குலுக்கி எதோ கேட்டாள்.

பாம்பு கொணாந்திருக்கியான்னு கேக்கறா.

சுலைமான் சொன்னான்.

நான் அரசூர்ச் சங்கரன். புகையிலை வியாபாரி. பாம்பாட்டி சங்கரன் இல்லே.

சங்கரன் வினயமாகச் சொல்ல, ஒருத்தி அவன் குடுமியைப் பிடித்து இழுத்துச் செல்லமாகக் குட்ட, இன்னொருத்தி ஏதோ சொல்ல மற்றவர்கள் நெருக்கமாக நின்று சிரித்தார்கள்.

கொஞ்சம் வியர்வை நெடி கலந்து அடித்தாலும் வெள்ளைக்காரி வாசனை போதையேற்றுகிறதாகத்தான் இருந்தது சங்கரனுக்கு.

(தொடரும்)

Series Navigation