விடியும்!:நாவல் – (25)

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


கூப்பிட்ட குரலுக்கு எட்டிப் பார்க்கிற வசதியில் தங்கச்சிமாரின் வீடுகள் ஒரு வேலிக்குள் இருந்தன. தெருப்படலையைத் திறந்ததும் முன்னுக்கிருப்பது மூத்தவள் ராணியுடையது. வசந்தியின் வீட்டுக்குப் போக பத்தடி வழிவிட்ட ஒழுங்கை. அவசரத்துக்கு ஒரு ட்றாக்டர் போகக் கூடிய விட்டுவீதி. அக்கா தங்கச்சி இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாக நல்ல ஒற்றுமை. சகலன்மாரும் ஆளுக்காள் நல்ல உதவி. கட்டிக் குடுத்ததிலிருந்து பிரச்னையென்று கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றதில்லை.

இரண்டு சொப்பிங் பைகள் நிறைந்த பாரத்துடன் தங்கச்சிமாரைப் பார்க்க செல்வம் கிளம்பினான் – மனதில் சின்னதாக ஒரு விரிசலுடன்.

தொப்புழ் கொடி உறவானாலும் சரி, கூடிப்பிறந்த பந்தமானாலும் சரி, ஒரே பாயையும் சுகதுக்கங்களையும் பகிர்ந்து கொண்ட தாம்பத்யமானாலும் சரி, ஒன்றாய்ப் படித்து ஒரே கோப்பையில் உண்டு குடித்த நட்பானாலும் சரி, சம்பந்தவழி சொந்தமானாலும் சரி – ஏதாவது ஒரு விசயத்தில் அபிப்பிராயம் மாறுபட்டு அது விவகாரமாகி விட்டால் வில்லங்கந்தான் மனவிரிசல்தான். அரிசி மூட்டை அவிழ்ந்து கொட்டிச் சிதறிய மாதிரி உறவில் ஒரு சின்னச் சரிவு வந்து விடும். சிந்திய அரிசிமணிகளை அப்படியே விட்டுவிட முடியுமா! ஒன்று விடாமல் பொறுக்கி மீண்டும் முடிச்சுக்குள் போடத்தான் வேனும். உறவு மூட்டை சரிந்து போகாமல் முட்டுக் கொடுத்து தாங்கத்தான் வேனும்.

மச்சான்மார் எடுத்தெறிந்து கதைத்த விதம் சின்னம்மாவைக் கவலைப்படுத்தினாலும் பெரிசுபடுத்தாமல் விட்டது அவளது பெருந்தன்மை. தகவலுக்காக மட்டுமே செல்வத்திடம் சொன்னாள். கேட்டவனுக்கோ மனம் குறுகுறுக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் பிறத்தியாரைப் போல நடந்து கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை.

அப்பாவால் ஒன்றுக்கும் ஏலாது. ஓடித் திரியக்கூடிய பெரியப்பாவும் வருத்தத்தில் விழுந்திட்டார். குடும்பத்தில் ஆம்பிளையென்று மிஞ்சினது இவர்கள் இரண்டு பேருந்தானே! நாங்கள் இருக்கிறம் ஒன்றுக்கும் யோசிக்காதீங்க மாமி என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் தாங்கிப் பிடிக்க பிள்ளைகுட்டிகள் பக்கத்திலயிருக்கு என்று நெஞ்சுக்கு ஆறுதலாயிருந்திருக்கும். அதை விட்டுட்டு வளர்த்த வளர்ப்பில் குறை சொல்லி பூப்போல இருந்த மனசை கசக்கியெறிந்து போட்டார்கள். மரத்தால் விழுந்த மனுசியை மாடேறி மிரித்த மாதிரி உழக்கிப் போட்டார்கள். சின்னம்மா ஆரையும் எதிரிகட்டாத மனுசி. மனட்சாட்சியில்லாத மருமக்களைக்கூட விட்டுக் கொடுத்துக் கதைக்கமாட்டாள்.

“அதுகளுந்தான் வேற என்ன செய்யுங்கள் தம்பி. அவையள் என்றில்லை, ஆராயிருந்தாலும் இந்த மாதிரி விசயத்தில முன்னுக்கு வரமாட்டினம். அந்த அளவுக்கு பயந்து போயிருக்குது சனம். அயல் சனத்தைப் பார். ஒரு குருவியென்றாலும் இன்றை வரைக்கும் என்ன ஏது என்று கேட்டு வாசல்படி ஏறேல்லை. ஏறினால் தங்களையும் ஆமி கொண்டு போய் கழுவில் ஏற்றிப் போடுவாங்கள் என்ற பயம்.”

அவனால் அதனை மனதளவில் ஒப்புக்கொள்ள முடியவில்லை. விழுந்த நேரத்திலதான் மனுசரைத் தூக்கிவிட வேனும். நல்லாயிருக்கிற போது நானும் கூட நிற்கிறேன் என்று வெறும் பொசுப்புக்கு நின்று என்ன பிரியோசனம்!

சும்மா சாத்தியிருந்த தெருக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் செல்வம். ராணியின் வீட்டுக்குள்ளிருந்து றேடியோ பாடிக் கேட்டது மெலிதான சத்தத்தில். தண்ணீர் தெளித்து முற்றம் கூட்டியிருந்ததில் மண் வாசம் வந்தது. வீட்டுச் சுவர் நீளத்துக்கு மூன்றடி அகலப் பாத்தி எடுத்து பூந்தோட்டம் போட்டிருந்தார்கள். தண்ணீரில் குளித்திருந்த கனகாம்பரப் பூக்கள் கண்களைப் பறித்தன. செம்பருத்திப் பூக்களில் இத்தனை நிறங்களா என்ற வியப்பு வந்ததை அடக்க முடியவில்லை.

ஆரோ பிறத்தி ஆட்களின் வளவிற்குள் நுழைந்தவன் போல செருப்புகளை ஓரமாக ஒதுக்கிவிட்டு ஒட்டாமல் நின்று ராணி என்று மெதுவாகக் கூப்பிட்டான். சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த ருத்திரமூர்த்தி செல்வத்தைக் கண்ட சங்கடத்தை சட்டென மறைத்துக் கொண்டு வாங்கோ அத்தான் என்று வரவேற்றான். உள்ளே திரும்பி ராணி அண்ணன் வந்திருக்கிறார் என்றான். அத்தான் என்று முறை சொல்லி சொந்தம் பாராட்டி வரவேற்றது செல்வத்திற்கு வியப்பாயிருந்தது. ராணி வாயெல்லாம் பல்லாக அண்ணனை வரவேற்றாள்.

“என்னண்ணா ரெண்டு கிழமைக்குள்ள நல்லா கறுத்துப் போயிற்றாய். ஏனன்ணா வெய்யிலுக்கை திரியிறாய்”

செல்வம் வாய் திறவாமல் சும்மா சிரித்தான். சின்ன வயதில் அண்ணனையே சுற்றிச் சுற்றி வரும் அதே தங்கச்சி. அவள் சிரித்தால் அம்மாவின் ஞாபகம் அவனுக்கு உடனே வந்துவிடும். அந்த அளவிற்கு அம்மாவின் முகவாக்கை குத்தகைக்கு எடுத்திருந்தாள். அன்றைய ராணி மனதில் வந்தாள் – அந்தா, கொய்யாவில அணில் கோதியிருக்கு ஆய்ஞ்சு தாண்ணா என்பாள் தங்கச்சி. அவள் காட்டிய பிறகுதான் அவனுடைய கழுகுக் கண்களுக்குத் தெரிந்திருக்கும். சறுக்கென்று ஏறி பழத்தைப் பிடுங்கிக் கொண்டு கீழே இறங்கு முன்னரே ஒரு கடி கடித்து விடுவான். எனக்கும் ஒரு கடி தாண்ணா நாந்தானே காட்டினனான் என்று அண்ணனுக்கு முன்னும் பின்னும் திரிவாள் ராணி. இன்றைய ராணி அடக்கமான குடும்பப்பெண். ஜன்னலால் தெரிந்த சடைத்த வாழை மடலின் செழிப்பு அவளில் தெரிந்தது. இஞ்சினியர் மாப்பிள்ளை. பிச்சுப் பிடுங்கலில்லாத சீவியம். கையுதவிக்கு மலை போல சின்னம்மா பக்கத்தில்.

அண்ணாவோட கதைச்சுக் கொண்டு இருங்க தண்ணி சுட வைச்சிற்று வாறன் என்றாள்.

இப்பிடி வாம்மா என்ன அவசரம் இப்ப என்றபடியே ஒரு பையை அவளிடம் கொடுத்தான் செல்வம்.

அதில் கப்பல் வாழைப்பழச்சீப்பு பட்டுச் சேலை ரவிக்கைத் துணி மச்சானுக்கு நல்ல சேட் கால்சட்டைத்துணி பிஸ்கட் பெட்டி ஒரு என்வலப்பில் முன்னூறு டொலர்ஸ் எல்லாம் இருந்தன.

“என்னம்மா ஏதோ அடுப்பில தீய்ஞ்சு மணக்குது”

“வடை சுட்டுக் கொண்டிருந்தனான்.”

செல்வம் செற்றியில் இருக்குமட்டும் காத்திருந்து தானும் இருந்தான் ருத்திரமூர்த்தி.

“கனடாவில வடை சாப்பிட்டிருக்கிறியாண்ணா ? ”

“ஓம் டானியல் வீட்டில”

“டானியல் அண்ணன் அன்டைக்கு டெலிபோன் எடுத்ததென்டு சின்னம்மா சொன்னவ. என்னவாம் ? ”

“சுகமா வந்து சேர்ந்ததோ என்டு கேக்கத்தான் எடுத்தவர். ரவுண்டப்புக்கு போய் வந்ததில எனக்கு அன்டைக்கு மனஞ்சரியில்லை. சரியாக் கதைக்கக் கூட இல்லை. என்ன நினைச்சானோ தெரியாது. ”

ராணி புருசனின் முகத்தை ஒருதரம் கூர்ந்து நோக்கிவிட்டு அண்ணனிடம் சொன்னாள்.

“அண்ணா தம்பியிட விசயம் கதைக்க வரவேனும் என்டு இருந்தனாங்கள் ? ”

“என்னம்மா ?”.. .. .. அவன் ஆர்வமில்லாதவன் போல் கேட்டான். சின்னம்மா வேறு சொல்லி அனுப்பியிருக்கிறாள் – தம்பியின் விசயத்தைத் தொட வேண்டாமென்று. தொடாமல் முடியாது. அவன் வந்ததே அதற்காகத்தான். தங்கச்சி தொடங்கியது வசதியாகப் போயிற்று. ராணி புருசனின் முகத்தை மீண்டும் பார்த்தாள். பச்சை விளக்கு விழுந்ததைக் கண்டவன் போல் மூர்த்தி இப்போது வாய் திறந்தான்.

“ஜெயம் ஐஞ்சாறு பொடியளோட கெவிலியாப் பக்கம் போன மாதிரிக் கேள்வி. குணம் முந்தி சம்பூர்ப் பக்கம் படிப்பிச்சவர். உங்களிட்டை அதைப்பற்றிச் சொல்ல வேனும் என்டு இருக்க நீங்க வந்திட்டாங்கள்.”

என்ன என் பெயர் அடிபடுது என்று கேட்டுக் கொண்டே வசந்தியின் புருசன் குணரெத்தினம் உள்ளே வந்தான். செல்வம் இருப்பதைக் கண்டு சிறிது தயங்கினான். வாங்க தம்பி என்று செல்வம் வரவேற்றதும் தயக்கம் நீங்கி செற்றியில் குந்தினான்.

“குணம் ஜெயத்திட விசயமா ஏதும் அறிஞ்சனீரா ? ”

“ஓம் செல்லத்தம்பி மாஸ்றருக்கு கடிதம் குடுத்தனுப்பீற்றன். எந்த நேரமும் மறுமொழி வரலாம்.”

என்ன இங்க வந்து இருக்கிறீங்கள் அக்கா வடை சுட்டது மணந்திற்றுது போல என்று சொல்லிக் கொண்டே படியேறிய வசந்தி செல்வத்தைக் கண்டதும் கண்கள் விரிய அண்ணாவா என்று வாய் கிழியச் சிரித்தாள். பையைத் தூக்கி வசந்தியிடம் கொடுத்தான் செல்வம்.

“இப்பதான் வந்தனீங்களாண்ணா ? ”

“பத்து நிமிசமிருக்கும் ”

அவள் பக்கத்தில் வந்து நின்று தமையனின் தலையைத் தடவிப் பார்த்துவிட்டு அண்ணா ரெண்டு மயிர் நரைச்சிருக்கு என்றாள். அவளது தடவலில் சின்னம்மாவின் பரிவு இருந்தது. அவன் மாரிலும் தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளை அவள். அப்போது ஆறோ ஏழு மாசம் இருக்கும். சின்னம்மா அடுப்படியில் வழமை போல வேலையாயிருப்பாள். சாமியறையில் வளர்த்தியிருக்கும் பிள்ளை பாலுக்குக் கத்த, ஓடிப் போய் மடியில் போட்டு ஓராட்டுவான். கிலுக்கியை ஆட்டி பிராக்குக் காட்டுவான். தாய்ப்பாலுக்கு அழுகிற பிள்ளையிடம் கிலுக்கியெல்லாம் செல்லுமா! குரலெடுத்து தெருவுக்குக் கேட்கக் கத்தும். தன் சின்னிவிரலை பிள்ளையின் விரல்களுக்குள் பிடிக்கக் கொடுப்பான். அண்ணாவின் விரலை இறுக்கிப் பிடித்துச் சூப்பி வீணி வடித்து அழுகையை மறந்து போகும் பிள்ளை.

இன்றைக்கு கல்யாணம் கட்டி தானும் ஒரு ஆளென நிற்கும் வசந்தியைப் பார்த்தான் செல்வம். மனதில் பட்டதை பளிச்செனச் சொல்லி விடும் குணம். மூக்கு நுனியில் கோபம்.

மூர்த்தி விசயத்துக்குத் தாவினான்.

“அத்தான் நாளைக்கு சனிக்கிழமை. திங்கக்கிழமை காலைல அல்லை கந்தளாயால ஜீப்பில மூதூருக்கு போறன். ரெண்டு நாள் நிப்பன். விசாரிச்சுக் கொண்டு வாறன். ”

“இல்லைத்தம்பி. நீங்கள் ரெண்டு பேரும் கவண்மன்ட் ஒப்பீசர்ஸ். பொங்கல் கழிய நானே போய்ப் பார்க்கலாம் என்டு இருக்கிறன் ”

நீங்க எங்கயென்டு தேடப் போறீங்கள் என்று குணம் கேட்டான்.

“அண்ணா, உங்களுக்கு அங்க ஆரையுந் தெரியாது. ஒன்டு கிடக்க ஒன்டு நடந்திற்றால் கரைச்சல். அத்தான் விசாரிச்சு வந்தாப்பிறகு யோசிச்சுச் செய்வம் ”.. .. .. புருசனோடு சேர்ந்து கொண்டாள் வசந்தி.

அன்றைக்கு எல்லாருக்கும் முன்னால் புருசனை தூக்கியெறிந்து கதைத்த அந்த வசந்தியா இது! செல்வம் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“தம்பி இப்ப ஊர் இருக்கிற இரையில், இதில மிச்சம் கவனமாயிருக்க வேனும். எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பாத்து வைக்க வேனும். எனக்கு நீங்களும் ஒன்டுதான் தம்பியும் ஒன்டுதான். நீங்க இவ்வளவு சொன்னதே நெஞ்சு நிறைஞ்சு போச்சு. மூதூரில ஆரைச் சந்திக்க வேனுமென்டு சொன்னீங்கண்டா நான் போய்ச் சந்திக்கிறன். நீங்க ரெண்டு பேரும் இதில தெரிபடக் கூடாது.”

“தெரிபடக் கூடாதென்டுதான் நாங்களும் நினைச்சனாங்கள். அது எவ்வளவு பெரிய பிழையென்டு இப்ப உணந்திற்றம். எல்லாத்துக்கும் பயந்து பயந்து இருந்தா ஒன்டும் நடக்காது. யோசிச்சு யோசிச்சு நாளைக் கடத்தினா பிந்திப் போயிரும். நீங்க ஒன்டுக்கும் யோசிக்க வேணாம். நீங்கள் வரவேனும் என்டு அவசியமில்லை. வரத்தான் வேனுமென்டா வாங்க”

“அண்ணா இவருக்கு மூதூர் தண்ணிபட்ட பாடு. வேனுமென்டா நீங்களும் கூடப் போயிற்று வாங்கோ”

“அப்ப நான்! ” என்று குணம் கேட்டான்.

மூன்டு பேர் ஒரு விசயத்துக்குப் போகக் கூடாது. நீங்க மாஸ்றருக்குக் கடிதம் குடுத்து விட்டாக் கானும் என்றாள் வசந்தி.

குடும்பத்தின் அச்சாணியாக தங்கச்சிமார் இருப்பது புரிந்தது. இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று சின்னம்மாவிடம் பறை சாற்றிய மருமக்கள் இப்போது எங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்! இந்த மனமாற்றம் எப்படி நிகழ்ந்தது! இன்றைக்கு நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறார்களே!

சின்னம்மா நீங்க தெரிந்தெடுத்த மாப்பிள்ளைகள் எப்படியம்மா குறைந்து போவார்கள்! தட்டான் உரைச்சு எடுத்த தங்கம் சோடை போகுமா!

வெய்யிலில் தண்ணீர் விடாயோடு வந்தவனுக்கு தண்ணீர்ப்பந்தலில் மோரும் பாணகமும் கிடைத்தது போலாகிவிட்டது. திணறிப் போனான். அவனால் எந்த உணர்வுகளையும் மறைத்து வைக்க முடியாது. கண்கள் பனித்துப் போயிற்று. முகத்தை மூடிக் கொண்டான். சின்னப்பிள்ளை மாதிரி அழ வேண்டும் போலிருந்தது. முகத்தை மாறி மாறித் துடைத்துக் கொண்டான். தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது. கரகரப்பில்லாமல் இனிக் கதைக்கலாம் என்ற தெம்பு வந்ததும் சொன்னான்.

“தம்பி, என்னை நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிருங்க. உங்க குணத்தைப் புரிஞ்சு கொள்ளாம நான் சரியா முகங் குடுத்துக் கதைக்காம விட்டுட்டன்.”

குணம் சொன்னான்.

“அத்தான் – மாமிக்கு ஆறுதலா ஒரு வார்த்தையென்டாலும் சொல்லாதது எங்கட பிழை. குடும்பமென்டு இருந்தா இந்தமாதிரி நேரத்தில கை கோர்த்துக் கொண்டு நிற்கிறதுதான் முறை.”

அவன் சொல்லிவிட்டு இலேசாக வசந்தியின் முகத்தைப் பார்த்தான். அவளும் நிறைவாகச் சிரித்தாள். அதற்குள் சுடச்சுட வடை கொண்டு வந்து வைத்தாள் ராணி. நெடுநேரம் இருந்து கதைத்துவிட்டு வெளிக்கிட நன்றாக இருட்டி விட்டது. வீட்டிற்கு வர அப்பா விறாந்தையிலிருந்து ‘வெறிட்டாஸ் ‘ கேட்டுக் கொண்டிருந்தார்.

“மாமா இவ்வளவு நேரமும் இருந்து பார்த்திற்றுப் போறார் தம்பி. ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்”.. .. .. என்றாள் சின்னம்மா.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்