கனவின் கால்கள்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

கோச்சா


———————-

ரங்கநாதன் தெரு அருகே உள்ள ராமனாதன் தெரு.மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து வந்தால் முதலில் இருக்கும் மேன்ஷன். அதானால் இந்த மேன்ஷன் எங்கும் சென்று வர வசதியானது. பேச்சிலர்களின் பேரடைஸ் எனச் சொல்லலாம். அதில் பத்துக்கு பத்து எனும் சதுரங்க ஆட்டத்தில் ஒரு காயாக சித்தார்த்.

எப்போதாவது உதடு சுடும் வரை சிகரெட்டுடன் மனம் சுட அவனைப் பற்றி அவனே நினைத்துப் பார்ப்பான்.

BSc (Biology ) படித்துக் கொண்டிருந்த போது எப்போதும் லேபிலேயே தான் கிடப்பான். அவனுக்கும் புரபஷர் ‘புஷ்கரனுக்கும் ‘ அபபடி ஒட்டிப் போச்சு. அவர் செய்யும் ஆராய்ச்சி ஒன்றில் முதல் வருடம் படிக்கும் மாணவன் எனும் போதும் சித்தார்த்தனால் நிறைய பங்கேத்துக்க முடிந்தது. நிறையப் படிப்பான் அதைவிட நிறைய யோசிப்பான். அது தான் அவனை புஷ்கரனிடம் நெருங்க விட்டது.

சில சமயம் இரவு 12 ஆகி விடும். லேப்பிலேயே தூங்கி விடுவார்கள். தூங்கப் போகும் முன் எதிரில் இருக்கும் மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் வரை நடந்து போய் வருவார்கள்.

நிலவொளியில் தூரத்தே மினுமினுக்கும் அலை கடல். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மணியடித்து வரும் ‘குல்பி ‘.அப்பப்ப எதிர்த்தாற்போல் வரும் மனிதர்கள். பளபள சேலையும், மல்லிகைப் பூவும் சூடி மோகித்துப் பார்க்கும் முரட்டு அலிகள். ஓட்டை சைக்கிளிள் ஊர்வலம் வரும் பரிதாப காவலர்கள். இடையே நாரசார ஒலியுடன் சென்ரலில் சிக்கிய சவாரியுடன் அடையாரோ திருவான்மியூரோ நோக்கி விரையும் ஆட்டோ.. என இதன் அழகியலை ரசித்தவாறு புஷ்கரனுடன் நடந்த நேரங்கள் தான் அவனது வாழ்க்கையை மாத்திப் போட்டது.

இருவருக்கும் பொழுது போக்கு புத்தகம் ,சினிமாவாய் இருந்தது. உள்ளூரின் கதை இலக்கியக்கங்கள் தாண்டி உலகின் பல கனவு இலக்கியங்கள் பற்றி அவர் தான் நிறையச் சொன்னது. கலை கலைக்காகவா.. ? இல்லை கலை மக்களுக்காகவா … ? என்று அவர் பேசப் பேச இவனுக்கு தான் வளர்வது புரிந்தது. அன்னையை தெய்வமாய் பார்த்த வரிகளைத் தாண்டி, துருவ நட்சத்திரமாய் உணர்த்திய மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய் ‘, புரியா மனிதர்களிடை தெளிவான மனிதன் அடைந்த நிலை சொன்ன ‘அந்நியன் ‘ கற்பனையின் புது பரிமாணம் சொன்ன ‘லிட்டில் பிரின்ஸ் ‘ என சித்தார்த்தைத் தாக்கின கதைகள்.

ஒரு சந்திப்பின் போது, அந்தர தார்க்கோவஸ்கியும், அக்கிரா குரசேவாவும் கதை அமைப்பு பற்றி பேசிக் கொண்டது பற்றி அவர் சொன்னதை திரும்ப திரும்ப பல முறை சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறான்.

இப்படி தினம் தினம் அவர்கள் காலார நடக்கும் போது பேசியதில் சித்தார்த் மனது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த்து.

பிறர் இலக்கியம் பேசியவர்கள், தங்கள் எண்ணங்கள் , எழுதிய கவிதைகள் எனப் பேச ஆரம்பித்தார்கள்.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று, அமாவாசை என்பதால், நிலவும் வரலை… தூரத்து கடலும் தெரியலை.. பேசிக் கொண்டே நடந்தவர்கள் தீடிரென்று நின்றார்கள். காரணம், புஷ்கரன். நின்றவர், ‘சித்தார்த், அருமைடா.. உன் சிந்தனை அருமை… இனி ஒரு நிமிஷம் கூட லேப்பிலே டைம் வேஸ்ட் பண்ணாதே..! போ ..! பிலிம் இண்ஸ்டியூட்டில் சேர்ந்திடு… ‘ என்றவர், பிலிம் இன்ஸ்ட்டியூட் பற்றி அதிகம் அறியாத அவனுக்கு எல்லாம் சொல்லி சேரும் வரை விடவில்லை.

எப்போவாவது , அவரைப் பார்க்க போனால் கூட உள்ளே கூப்பிட மாட்டார். ஏழுந்து வெளி வந்து ‘இங்கே ஏன் வந்த…! போ.. ‘ என்றாவாரே, கடற்கரையில் வந்து அமர்ந்து பேசுவார்.

இப்படித்தான் ஆரம்பித்தது… சித்தார்த் பிலிம் இண்ஸ்ட்டிடியூட்டில் உலக சினிமாக்கள் எல்லாம் பார்த்தான். விடியோ வராத காலம். வருடம் ஒரு முறை புனே பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டிலிருந்து உலக சினிமாக்கள் எடுத்து வரும் ‘நாயர் ‘, தேவதூதன் மாதிரி தெரிந்தார். எல்லோரும் இவன் கருத்து கேட்பார்கள். வந்து வந்து பேசியவர்கள், இன்று சினிமா உலகில் டைரக்டராகவும், ஒளி அமைப்பாளரவாகவும் வெற்றி பெற்றார்கள்.

கடைசியாண்டில் புத்திக்கு என்ன ஆச்சோ, ‘என் அறிவை சோதிக்க பரிட்சையா.. ‘ என எக்ஸ்ஸாம் எழுதவில்லை. அறிவாளி என்றது போய் ‘ ‘சரியான பைத்தியக்காரனோ ‘ என சொன்னது அப்போது தான்.

இவன் கதை ஒன்றிரண்டு அடுத்தவர்களுக்கு கொடுத்தான். கலைக் குடும்ப வாரிசு ஒன்றிடம் இவன் வசனம் பேசியது சரியில்லை என திருத்திப் பிடிவாதமாய் இருக்க, இவனை மாற்றினால் நான் வருகிறேன் என்று சென்று விட்டார். விடை இவன் மாற்றம். அந்த இழப்பிலும் சித்தார்த் மாறா குணத்துடனே இருந்து விட்டான்.

நாட்கள் ஒட ஒட இவனை அண்ணாந்து பார்த்தவர்கள் , வெற்றி பெற்று அண்ணாந்து பார்க்கும் இடத்துக்கு சென்றார்கள். இவன் கவலப் படவில்லை. ஆனால் இன்றும் அங்கங்கு இவன் பேச்சு வரும் போது, ‘ பிஹேவியர் சரிகிடையாது, ஆனால் நல்ல திறைமைசாலி, புத்திசாலி ‘ என்பார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனங்களிலோ, ‘திறமை இருந்தென்ன.. வளைஞ்சு கொடுக்காம பிரச்சினை பண்ணுவான், என்னவோ gone with the wind எடுக்கிறாம் என நினைப்பு ‘ என்ற நிலை கொண்டான். அது அவனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பைப் பாதித்தது.

வருடங்கள் ஒடினாலும் இவன் மாறத குணமும், திறைமையுமாய் இருத்தான்.

டி.வியும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. அது சித்தார்த்தை ஈர்க்கவில்லை.

சினிமாத் தொழிலும் மாறியது. பொது இடத்தில் ‘என்ன செய்யிற ‘ என்றால் சொல்லக் கூசமாய் இருந்த நிலை மாறி டாக்டர், இன்ஜினியர், NRIகள் என அனைவர் வீட்டு குழந்தைகளும் சினிமாவுக்கு வர ஆரம்பித்து விட்டன. வெளிநாட்டில் படித்து வந்தார்கள்.

இவர்கள் வருகையால் சலனப்படாதவனை அவர்களது ஒரு செயல் அவனைக் கொந்தளிக்க வைத்தது.

‘மனிதனிடையான பிரச்சனைகளில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், எப்படி வேண்டுமானாலும் கதை புனையட்டும். ஆனால், சமூகப் பிரச்சனையை ஏன் கதை சுவாரசியத்திற்காக நல்ல படம் எனத் தோற்றம் காட்ட உபயோகித்து மக்களிடம் கண்கட்டு வித்தை புரிந்து அவர்களின் காசை களவாடுகிறார்கள்… ? ‘.

‘பிறரின் சமூகப் பிரச்சனையை இவர்களின் மனம் கொண்டு பார்க்கிறார்கள் ‘ , என்று துடித்தவன், உலகம் முழுதும் விருது பெற்ற ஒரு தமிழ் படத்தைப் பற்றி பதறிச் சொல்வான்.

‘ஆறு வயதிலும், பத்து வயதிலும் இலட்சிய வாழ்வு வாழ்ந்த பலர் கண்ட தமிழ் சமுதாயமிடை,

டி.வி பார்த்து தன்னைத் தொலைக்கும் சமுதாயத்தில் வந்த சினிமா மனிதர்கள் என்பதால், ‘இலட்சியம் விடுத்து டி.வி பார்க்க ‘ கூப்பிடும் முடிவு அந்த படத்தில் ‘ என சினம் கொள்வான்.

அதும் தவிர, எப்படி காட்டினால் உலகில் கைத்தட்டுவார்கள், அவார்ட் கொடுப்பார்கள், எனும் வியாபார உக்தி தெரிந்தவர்கள், ஒரு மிகப் பெரிய விஷயத்தை இப்படி ஆக்கி விட்டார்களே எனப் புலம்புவான். கமர்சியல் சினிமாவின் வெற்றிக்காக, ஆழமாக மூளயைத் தொட வேண்டிய விஷயத்தை இப்படி, ‘நல்லா சொல்லிருக்காங்கள்ல ‘ என a/c ரூமில் விருந்துக்கிடையில் புளங்கிதம் அடையும் விஷயமாக்கி விட்டார்கள் ‘ என்பான்.

இதானால் இன்னும் சில பேர் இவனை ஒரு மாதிரி பாக்க ஆரம்பித்து விட்டார்கள். அது தான் மிச்சம்.

இது மட்டுமல்ல, முதல் நாள் பெரியாரப் பற்றி பேசுவான். அடுத்த நாள், மயிலை, சாய்பாபா கோவிலுக்குச் செல்வான்.

என்னடா… ? வாழ்க்கை முரண்பாடா இருக்கே… ? எனக் கேட்டால்,

சிரித்தவாறு, ‘நான் இயற்கை மாதிரி, மேடு பள்ளம், காடு கரடு, வளம் வரட்சி, வெயில் மழை…ன்னு முரண்பாடுகளில் முழு உருவம் கண்ட இயற்கை மாதிரி.. ‘ என்பான்.

இப்படி காலையில் இழுத்து விடும் முதல் சிகரெட் புகையுடன் பழைய நினைவுகளும் வட்டமிடும்.

இன்று வளசரவாக்கத்தில் யோரோ ஒரு புது புரொடியூஸர் பார்க்க வரச் சொல்லியுள்ளார். சித்தார்த்துக்கு புது புரொடியூஸர் என்றால் மிக மரியாதியுண்டு.அவர்கள் தான் தமிழில் மாற்றங்கள் கொண்டு வந்த படங்கள் தந்தவர்கள் என்பதால்.

வரிசையில் நின்று காலைக் கடன்கள் முடித்து வெளியே வந்து புதுக் கடனில் டா வடை சாப்பிட்டு ஒரு சிகரெட்டை இழுத்து விட்டான்.

பையை துழாவிப் பார்த்ததில் 4.25 இருந்த்து.

இதில் தான் போக வர பஸ் சிலவு, சாப்பாடு, சிகரெட் எல்லாம் முடிக்கனும். ரஷ்யன் கான்சுலேட் வேறு போகனும். ‘அந்ரேய் ரூபலோவ் ‘ இன்று. எத்தனை முறை பார்த்தாலும் சிலிர்க்க வைக்கும் அனுபவம் தரும். தவற விடக் கூடாது.

பின் நாளைக் காலையில நண்பன் ஒருவன், பத்து ரூபாய் தருவதாகச் சொல்லியுள்ளான். அதைக் கொண்டு நாளையைப் பார்த்துக் கொள்ளலாம்.

சிகரெட் புகைத்துக் கொண்டே மாம்பலம் ஸ்டேஷன் பாலம் ஏறி அந்தப் பக்கம் போய், மேற்கு மாம்பலம் போய் கோடம்பாக்கம் ரோடில் இருக்கும் ஹாலிவுட் ஹோட்டல் அருகே வந்து நின்றான், சித்தார்த்.

சில சமயம் கதை கேட்பவர்கள் அழைத்துப் போய், புரோட்டா, குஸ்கா, சாப்ஸ் எல்லாம் வாங்கித் தருவார்கள். உள்ரூமில் போய் பல மணி நேரம் அமர்ந்து பேசுவார்கள். எது வேண்டுமானாலும் வாங்கிக்கலாம்.

வெறும் டா வாங்கிக் கொடுத்து அனுப்புவர்களும் உண்டு.

ஆனா ஒரே வெறுப்பு. நாலு புரோட்டாவுக்கு கைல காசு இருக்கும் போது, உள்ளே போக நினைத்தால் ஸைட் குருமாவிற்கு காசு கேட்கும் அவர்கள் முறை தடித்து வெறுப்பை வரவழைக்கும். ஆனால், அந்தக் காலத்திலேயே, சினிமா ஏரியாவில் கடைக்கு ‘HOLLYWOOD ‘ என்று பெயர் வைத்த அவர்களின் புத்திசித்தாலித்தனம் நினைப்பு வர, எல்லாம் மறக்கும்.

இன்னைக்கு தண்ணி தான் குடிக்க முடியும்.

உள்ளே போய் தண்ணி குடித்து வருகையில், பிறர் பிளேட்டில் இருந்த கோழி பிரியாணியையும், புரோட்டா குஸ்காவையும் கண் நிறைய பார்த்தவாரே வந்தான்.

இன்று கதைக் கேட்க அழைத்திருக்கும் தயாரிப்பாளரை இங்கு கூட்டி வர தீர்மானம் கொண்டான்.

ரோடை கிராஸ் செய்து பஸ்ஸில் போக நின்றான்.

வந்து நின்ற பஸ்ஸில் முட்டிக் கொண்டு ஏறியது கும்பல். பத்து இருபது பேர் முன்னால் ஏரியவாறு இருக்க, தலையை எக்கி ‘ ‘கண்டக்டர் சார், வளசரவாக்கம் டிக்கெட் எவ்வளவு.. ? ‘ என்றான்.

இடைஞ்சல் சுழலிலும், இவனின் ‘சார் ‘-ல் குளிர்ந்தோ என்னவோ, ‘2.25 ‘ என்றார் கண்டக்டர்.

டபக்கென்று மனக் கணக்கு போட்டவன், பின் நகர்ந்து, வளசரவாக்கம் நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தான்.

பிளாட்பாரம் பக்கமாய் கழுத்தைத் திருப்பியபடியே நடந்தான்.

அது ரோட்டில் வட பழனி நோக்கியும், திரும்பியும் வரும் கார்களில் இருப்பவர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க உதவியது.

அதில் செல்லும் பலர் இன்று பிஸியான இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல நிலையில் சினிமாவில் வேலை பார்ப்பவர்கள்.

அவர்களில் பலருடன் இவன் பல வகையில் பணிபுரிந்துள்ளான் ,பழகியுள்ளான். அவர்களில் சிலரின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க விரும்பியே.. நடக்கும் போது கழுத்தை ரோட்டுப்பக்கம் திருப்புவதில்லை.

இப்படித்தான் ஒரு மழை நாளில் இவன் பஸ் ஸ்டாப் ஷெட் அடியில் நிற்க, விரைந்து சென்ற ஒரு வெளிநாட்டுக் கார், ரிவர்ஸ் எடுத்து வந்து நின்றது. கொட்டும் மழையில் சன் கண்ட் ரோல் பிலிம் ஒட்டிய கண்ணாடியை இறக்கி , சைகையால் ‘என்ன செளக்கியமா.. ? ‘ எனும் பாவனைக் காட்டி இவனை கிண்டலாகப் பார்த்து பின் கண்ணாடி ஏற்றியவாறே சென்றான் இன்றைய பிரபல இயக்குனரும் இவன் கதையை வைத்து முதல் படம் இயக்கியவரும். அந்த கதையை படத்தில் அவர் சொதப்பி விட்டார் என இவன் கருத்துச் சொன்னதால் பிரிவு.

நல்ல வேளை இன்று மழையில்லை.

நினைவுகளுடன் வடபழனி விஜயா மண்டபம் வந்து சற்று ஒய்வாக நின்றான்.ஏதோ பெரிய மனிதர் கல்யாணம் போல் இருக்கிறது. ஓரே கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து என ஒரே அமர்க்களம். சற்று நேரம் வேடிக்கைப் பார்த்து நின்றவன், மீண்டும் நடக்க ஆரம்பித்தவன்.

எதிர்த்தாற் போல் நிறைய தெரிந்த பல தலைகள். சிலருடன் சிரிப்பு, சிலருடன் சிறு பேச்சு, சிலரைத் தவிர்ப்பு என நடந்து வளசரவாக்கம் தயாரிப்பாளர் வீடு வந்தான்.

‘வாங்கண்ணே.. ‘ என்று வரவேற்றான் அங்கிருந்த பையன். இவன் ஏற்கனவே வந்ததைப் பார்த்ததால் மரியாதை.

‘டா சாப்பிடிறீங்களா.. ? எனக் கேட்டவாறே டா தந்து உள் சென்றான் பையன்.

அமர்ந்து டா குடித்தான்.

‘சார்ட்ட நான் வந்திட்டேன்னு சொல்லிட்டியா.. ? ‘ என்று உள்ளிருந்து வந்தவனிடம் சொன்னான்.

‘தெரியாதான்னே.. சார் இன்னிக்கு காலைலேயே வெளிய போய்ட்டாரு.. உங்க பிரண்ட்ட உங்கள இன்னைக்கு வேண்டாம்னு நாளைக்கு கூட்டி வரச் சொன்னார்.. அவர் சொல்லலையா… ? ‘

நண்பன் வீடு வேறு திசை. அவனைச் சொல்லிக் குற்றமில்லை.

‘ஏன்னே.. எல்லாரும் வச்சிருக்க மாதிரி நீங்களும் பேஜர் வெச்சுக்கலாமுல்ல… யாருக்கு எப்ப நாம தேவப் படுவோமுன்னு எபபடித் தெரியும்… ? ‘

அவன் சொல்வது வாஸ்த்துவம் தான். அட்வான்ஸ் கிடைச்ச உடனே ஒரு பேஜர் வாங்கனும் என் தீர்மானித்தான்.

கொஞ்ச நேரம் உர்கார்ந்து அங்கிருந்த பேப்பர்களைப் புரட்டினான்.

இன்னைக்கு சாப்பாட்டுக்கு ஹாலிவுட் ஹோட்டல் திட்டம் பனால் ஆகி விட்டது. மணியும் ஒன்று ஆகப் போகுது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், பையன் சாப்பாடு வாங்கப் போகும் போது தனக்கும் சேர்த்து வாங்கி வர சான்ஸ் இருக்கிறது. இந்த சிந்தனையால் அங்கிருந்த பேப்பர்களைத் திரும்ப் திரும்ப பார்த்தான்.

‘அண்ணே.. சார் கொஞ்சம் வெளி வேலை கொடுத்திருக்காரு…. வர ஆறு மணி மேல ஆகும். நீங்க இருக்கிறதா இருங்க.. இல்லைன்னா நான் கதவப் பூட்டிட்டு போகனும் ‘ என்ற பையனை நிமிர்ந்து பார்த்து, ‘இல்லப்பா.. பூட்டிட்டு போயிடு.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு ‘ என்று திரும்பி சித்தார்த் நடக்க ஆரம்பித்தான். கம்பெனிச் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போனது. பசி அதிகமானது.

இந்த 4.25 வைத்துக் கொண்டு இன்னைக்கு முழுப் பொழுத ஓட்டனும். கை நமநமத்தது சிகரெட் குடிக்க. காசு கொடுத்து இப்ப வாங்க முடியாது.

காலடியில் பட்ட இரண்டு மூன்று சிகரெட்டுகளும் ஒட்டக் குடிக்கப் பட்டிருந்தது. அதிலும் இந்த பில்டர் வைத்த சிகரெட்டுகளில் எதையும் மிச்சம் வைப்பதில்லை.

குடித்து போட்ட சிகரெட்டுகளில் ஏதாவது தேருமா எனப் பார்த்தவாறே வந்தான்.

ஃபை ஸ்டார் ஹோட்டல் இருந்தாவது உள்ளே போய் லாபியில் இருக்கும் ஆஸ்ட்ரேயில் பார்த்தால், நாலு ஐந்து இழுப்பு இழுக்குமளவு தேறும். இந்த ரோட்டில் அதற்கும் வழியில்லை.

‘ஏய்.. ஒரமா போ மாட்டே.. ‘- எனும் சத்தம் அவன் நினைவைக் கலைத்தது, ரோட்டில் யாரோ தலைவர் காரை சுற்றி ‘வாழ்க ‘ கோஷமுடன் தொண்டர்கள். அவரை சுற்றி கத்தியவாறே வந்தக் கூட்டம் இவனையும் தள்ளியவரே அந்த கேட்டினுல் புகுந்தது. முண்டி ஒதுங்கிப் பார்த்தான். விஜயா கல்யாண மண்டபம். பலரும் தாம்பூலத்துடன் திரும்பியவாறு. வெத்தலையைக் குதப்பி, தொப்பையைத் தள்ளியவாறு பலர்.

மெளனமாய் சுவர் ஓரமாய் நின்றான். பசி வயித்தைக் குமைந்தது..

சித்தார்த் பல முறை இப்படி நுழைந்து சாப்பிட்டிருக்கிறான்.முதல் முறைச் சாப்பிடும் போது கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. அப்புறம் சாப்பிட்டவுடன் அங்கிருக்கும் விநாயகரிடம், அந்த மணமக்களுக்காக் கொஞ்ச நேரம் கும்பிட்டு தன் மன நிலையைச் சரி செய்து கொள்வான்.

இன்று கையிலிருக்கும் சொற்ப காசு நினைவு வர, அப்படியே போய், பந்தியில் அமர்ந்தான். நல்லா நிமிர்ந்து புன்னகையுடன் அமர்ந்தான்.

சாதம் போடும் வரை அமைதியாக எதையும் தொடாமல் பொறுமை காத்தான். அவசரப்பட்டால் சந்தேகம் வருரலாம் என நிதானமாய் நடந்து கொண்டான். ஆனால் இயல்பு தவறிய நிலையில் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும் என்பதை ஏனோ மறந்தான், சித்தார்த்.

பக்கத்தில் நல்ல கம்பீரமாய் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருடனே வந்து அமர வைத்தவர்கள், பரிமாறுபவர்களை அழைத்து, ‘சார நல்லா கவனிங்க ‘ என்று சொல்லிச் சென்றனர். பந்தி ஜே.ஜே. என்றிருந்தது. சாம்பார் இவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் போக நல்லா ஏறக் கட்டிச் சாப்பிட்டா, நாளைக்கு வரைக்கும் தாங்கும் என்று முடிவு செய்ததால் மூன்றாவது முறையாக சாம்பாரைக் கூப்பிட்டான்.

பக்கத்திலிருந்தவர்கள் ரசத்துக்கும். மோருக்கும் போயிருந்தார்கள்.

மோர் வாளி கொண்டு வந்தவரிடம், ‘இல்லை, சாம்பார் கேட்டேன், கொஞ்சம் சாதமும் வேண்டும் ‘ என்றான்.

அவர் சத்தமாக, ‘சாதமும், சாம்பாரும் சாரைக் கவனி ‘ என்றது இவனுக்கு என்னவோ செய்தது.

சாதம் வந்து போட்டுச் சென்றார்.

சாம்பார் இன்னொரு முறை கேட்டதும் தான் வந்தது.

சாம்பார் வாளியை வைத்தவர் ஒரு கரண்டி ஊற்றி விட்டு இவனையே உத்துப் பார்த்தவாறு கேட்டார், ‘சார், மாப்பிள வீடா.. ? பொண்ணு வீடா ‘ என்று.

‘மாப்பிள்ளை வீடு ‘ என்று சொன்னவாரே அவரை அண்ணாந்து அவரைப் பார்த்தான், சித்தார்த்.

பரிமாறுபவரின் புன்னகையின் அர்த்தம் புரிந்தது. தான் வெளியாள் என்பதை அவை கண்டுபிடித்து விட்டார்.

தலையைக் குனிந்தவாறு சாம்பாரைக் குழைத்து பிசைய ஆரம்பித்தான்.

பரிமாறுபவரோ விடவில்லை.. அவன் தொழிலில் இப்படி வந்து சாப்பிடுபவர்களைப் பிடித்துக் கொடுத்தால், அவனுக்கு பெருமை.தொழிலும் ஒரு அங்கிகாரம் கிடைக்கும் அவனின் சாமர்த்தியத்திற்கு.

‘மாப்பிள்ளை அப்பா பேரு என்ன… ? ‘ எனக் கேட்டார்.

தான் அவமானப் படப் போவது புரிந்தது. ஏனோ புஷ்கரன் மனதில் வந்து போனார்.

மெதுவாய் தலைத்திருப்பி பக்கத்திலிருந்தவரை பார்த்தான். சாப்பிடுவது நிறுத்தி அவர் இவனையே பார்த்தவாறு இருந்தார். சுற்றியிருந்த சிலரும் இவனையே பார்த்தனர்

பரிமாறுபவரோ பக்கத்திலிருப்பவரைக் காண்பித்து ‘இவரு மாப்பிள்ளையோடா சித்தப்பா… மாப்பிள்ளை அப்பா பேரச் சொல்லு.. இவரே சரியான்னு சொல்வார்… ‘ கரண்டியால் சாம்பாரை கலக்கியவாறே கேட்டார்.

சித்தார்த்துக்கு அப்படியே மறைந்து போக மாட்டோமோன்னு இருந்தது. பிச்சையும் எச்சலும் சாப்பிடுபவர்கள் நிலையிலும் தாழ்ந்து போன மன நிலை கொண்டு குமட்டியது. தொண்டை அடைத்தது. அவமான உணர்ச்சியில் சித்தார்த்தின் கண்கள் கலங்க ஆரம்பித்தன….

(பிரிதொரு நாளில் மீதம்)

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா