கலர்க் கண்ணாடி

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

இளங்குழலி


அவள் ஹாலை ஒட்டிய அந்த அறையின் மூலையில் நின்றிருந்தாள். அவன் அவளுக்கு எதிரே, ஜன்னலோரமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தான்.

‘ ‘சுஜாதா ‘ தானே உங்க பேரு ? அழகா இருக்கு. ‘

ஒருக்களித்திருந்த கதவு வழியே ஹாலில் இரு குடும்பங்களும் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்குள் எவ்வளவு அந்நியோன்யமாகிவிட்டார்கள் ? நியாயம்தானே ? அநேகமாக நிச்சயமாகிவிட்ட திருமணம்தானே இது ?

சுஜாதா தலை குனிந்து நின்றிருந்தாள். படபடப்பாக இருந்தது. கோ-எட் பள்ளியில் படித்தவள்தான். நகரத்தில் பெரிய காலேஜில் படித்தவள்தான். ஆனாலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள எண்ணும் ஆண் தனிமையில் தன்னுடன் பேசுகிறான் என்னும் நினைப்பிலேயே வியர்த்தது. அம்மா வேறு ‘அடக்கமா உக்காந்திரு ‘ என்று ஆயிரம் முறை எச்சரித்து அனுப்பியிருந்தாள். அவன்

தன்னுடைய வருங்கால மனைவியைப் பற்றி என்னென்ன கற்பனை செய்து கொண்டிருந்தானோ ? அத்தனைக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியுமா ? கொடுத்துதான் ஆக வேண்டும். அந்தஸ்துள்ள, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன். ஏதோ ஒருவிதத்தில் இவர்களுக்கு உறவு கூட. கிட்டத்திட்ட முடிவான திருமணம் இது. ‘மாப்பிள்ளை ‘ பெண்ணுடன் தனியாகப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காகத்தான்

இந்த வருகை.

‘நான் கொஞ்சம் வெளிப்படையான டைப். ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டாங்களே ? நீங்க ரொம்ப அழகா இரூக்கீங்க. ஃபோட்டோவே ரொம்ப நல்லா இருந்துச்சு… ‘

சுஜாதாவிற்கு ‘குப் ‘பென்று முகம் சிவந்தது. இவள் அவனது புகைப்படத்தைப் பார்த்திருக்கவில்லை. அதுதான் நேரில் வரப்போகிறானே என்ற நினைப்பில் இருந்துவிட்டாள். இப்போது அதற்குக் கூட தைரியம் வரவில்லை. ஃபோட்டோவைப் பார்த்திருக்க வேண்டும்.

‘அப்பா உங்களைப் பத்திச் சொன்னப்ப கூட நான் யோசிச்சேன். ஏன்னா, இது கல்யாண விஷயமில்ல ? ‘எடுத்தேன் கவுத்தேன் ‘ ன்னு முடிவுக்கு வந்துற முடியுமா ? நீங்க என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கவும் ஒரு வாய்ப்பு கொடுக்கணுமில்ல ? என்ன நான் சொல்லுறது ? ‘

அவன் குரலில் இருந்த புன்னகை அவளை ஒரு வழியாக நிமிர வைத்தது. அவன் மறுபடி ஜன்னல் பக்கம் திரும்பியிருந்தான். அழகாக வெட்டப்பட்ட கிராப்புத் தலை மட்டுமே தெரிந்தது. லேசாக முன் வழுக்கை விழுந்திருப்பவர்கள்தான் பெண்டாட்டியை மிகப் பிரியமாக வைத்துக்கொள்வார்களாம். நந்தினி சொல்லியிருக்கிறாள். அப்படியானால் முழுக் க்ராப்பு வைத்திருப்பவர்கள் அன்பாக இருக்க மாட்டார்களோ ?

‘மொதல்லே என்னைப் பத்தி சொல்லிர்றேன். M.C.A படிச்சிருக்கேன். ‘Eascare ‘ ன்னு ஒரு கம்பெனி – கேள்விப்பட்டிருக்கீங்களா ? அமெரிக்கன் கொலாபரேஷனோட…டா.வியிலே ஒரு விளம்பரம் பாத்திருப்பீங்க. ஒரு குழந்தை கம்ப்யூட்டரோட வெளையாடுமே ? அந்த விளம்பரம் எங்க கம்பெனியோடதுதான். ‘

பார்த்திருக்கிறாள். ரசித்திருக்கிறாள்.

‘அங்க நான் சாஃப்ட்வேர் கன்ஸல்டன்டா இருக்கேன். மாசம் இருபத்தையாயிரம் சம்பளம். பெர்க்ஸ் உண்டு…. ‘ வேலை விஷயமாக இன்னும் நிறைய பேசினான். குரல் கரகரப்பாக இருந்தது.

‘இப்ப என்னைப் பத்திக் கொஞ்சம் பர்சனலா…மியூசிக்னா ரொம்ப இஷ்டம். கேக்கப் பிடிக்கும். பாடத்தான் வராது. ஃபிரெண்ட்ஸோட டைம் கெடைக்கறப்ப வெளிய போவேன். மனைவியா வரப்போறவ கிட்டெ ஒளிவு மறைவு கூடாதுன்னு ஒரு பாலிஸி வெச்சிருக்கேன். அதனால உன்கிட்டே இப்பவே சொல்லிடறேன் – எப்பவாவது ஒரு பீர் குடிப்பேன். அதுக்கு மேல எதுவும் கிடையாது. இதெல்லாம் ஒரு நாகரீகத்துக்காகத்தான். நம்மைச் சுத்தி அத்தனை பேரும் செய்யிறப்ப, நாம மட்டும் கை கட்டி உக்காந்திருந்தா நல்லா

இருக்காதில்ல ? ‘

அவள் குனிந்தவாறு தலையசைத்தாள். ஹாலில் பக்கத்து வீட்டு ராமு மாமா எந்த ஜோக்கிற்கோ ‘ஹா ஹா ‘ என்று சிரித்துக் கொண்டிருந்தார். இதே ராமு மாமா எத்தனை நாள் லலிதா மாமியின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டிருக்கிறார் என்று கணக்கேயில்லை. ‘ஒண்ணே ஒண்ணுடி லல்லி. ஒண்ணே ஒண்ணுதான் போட்டேன். இனிமே குடிக்கவே மாட்டேன். உந்தலை மேல

சத்தியம் ‘ என்று அநேக இரவுகளில் அவர் குளறுவது பக்கத்து வீட்டுலுள்ள இவர்களுக்கு நன்கு கேட்கும். லலிதா மாமி குன்றிப் போவாள். அடுத்த நாள் இவர்கள் வீட்டிற்கு வந்து சமையலறையில் அம்மாவிடம் மெல்லிய குரலில் சொல்லி அழுவாள். சுஜாதாவிடம் கூடப் புலம்பியிருக்கிறாள். ‘நா பண்ண முட்டாத்தனத்தை நீயும் பண்ணிடாதே சுஜி, ‘ என்றாள் மூக்கைச் சிந்தியவாறு. ‘ஆம்படையான் ‘ஒண்ணே

ஒண்ணு ‘ம்பான். நம்பவே நம்பாதே, மூக்கு முட்டக் குடிச்சுட்டுதான் வருவான். போனாப் போறதுன்னு மட்டும் விட்டுடாதே- விட்டியோ,

நம்ப வாழ்க்கைதான் சீரழியும்… ‘

அவன் வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். ‘……..வேலை கொஞ்சம் ஜாஸ்தி. எல்லா நாளுமே கொஞ்சம் லேட்டாகும். என்ன

பண்ணுறது ? என் நிலைமை அப்புடி. டைம் கெடைக்கறச்சே வெளியூர் போவேன்… ‘

சுஜாதா தரையை வெறித்தாள். கதவிடுக்கு வழியாக அத்தை மாமாவோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. மூன்று மாதத்திற்கு முன்புவரை கூட அத்தையும் மாமாவும் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள். ‘ப்ராஜெக்ட் இருக்கிறது ‘, ‘மீட்டிங் இருக்கிறது ‘ என்று சொல்லிக்கொண்டு மாமா இரவு பதினோரு மணிக்கு வீடு வந்து சேரும்பொழுது அத்தையின் பெருமிதத்திற்கு அளவேயில்லை. அவர்

வீடு திரும்பாததற்கு ஆஃபீஸ் மீட்டிங் காரணமல்ல; காரியதரிசியுடன் இருந்த ‘தனிப்பட்ட ‘ மீட்டிங் தான் காரணமென்று அறிந்ததும்

அத்தை வீட்டில் ஏற்பட்ட பூகம்பம்…

‘…….அப்படின்னு சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறே ? ‘

சுஜாதா திடுக்கிட்டாள். இத்தனை நேரம் இவன் – இவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் ? இப்போது நாம் என்ன பதில் சொல்ல

வேண்டும் ? அவளுக்குக் கவலையாக இருந்தது. இவனுடன் நாம் என்னமாகக் குடும்பம் நடத்தப் போகிறோம் ?

‘என்னது, நான் என் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன்…. நீ ஒண்ணுமே சொல்லலை ? ‘ அவன் குரலில் ஏமாற்றம் தொனித்தது.

சுஜாதா தயங்கினாள்.

‘எங்க பொண்ணு ரொம்ப ‘ஷை ‘ டைப், மாப்பிள்ளை, ‘ மாமாவின் குரல் வாசலில் அதிர்ந்தது. ‘மொதல்ல ரொம்ப கூச்சப்படும். கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் தானே சரியாயிடுது… ‘

சுஜாதா உதட்டைக் கடித்துக்கொண்டாள். இவர் எப்போது வந்தார் ?

‘மாப்பிள்ளை ‘ இந்த குறுக்கிடுதலை ரசித்ததாகத் தெரியவில்லை. அவன் கடைசியாக ஒரு முறை அவளைப் பார்த்தது அவனது பாதங்கள் திரும்பியதிலிருந்து தெரிந்தது. இந்த அபத்தமான கூச்சத்தினால் அவனிடம் பேசக் கூட முடியவில்லை. அவள் கடைசியில் நிமிர்ந்த போது ‘மாப்பிள்ளை ‘ கடைசி கட்ட விசாரிப்புகளுக்குப் பிறகு வாசலுக்குப் போயிருந்தான்.

********************************

‘அத்தனை நேரம் என்னடி பேசினாரு மாப்பிள்ளை ? ‘ அவர்களது கார் கிளம்பியவுடன் அம்மா கேட்டாள்.

‘நானே கேக்கணும்னு நெனைச்சேன் சுஜி…மாப்பிள்ளை என்னடி பேசினார் ? ‘ லலிதா மாமி ஆவலுடன் கேட்டாள்.

சுஜாதா யோசிக்க முயன்றாள். ராமு மாமாவின் குடிகார நடத்தை பற்றியும், அத்தையும் மாமாவும் அடித்துக் கொண்டதைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தது மனதில் தோன்றியது.

‘மாப்பிள்ளை நல்ல அழகு இல்லியோடி ? ‘ லலிதா மாமியின் குரல் தொடர்ந்தது. ‘நீ சொல்லு சுஜி. மாப்பிள்ளை அழகாத்தானே

இருந்தார் ? ‘

சுஜாதா மனதில் ராமு மாமாவின் ஊதிப் போன தேகமும், அத்தையின் தோல் சுருக்கமும், மாமாவின் தொப்பையும் நினைவுக்கு வந்தன.

என்ன முயன்றும் மாப்பிள்ளையின் முகமோ, உடையோ நினைவுக்கு வரவில்லை.

தான் எதிர்பார்த்தது போல் சுஜாதாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதில் லலிதா மாமிக்கு ஏமாற்றம்.

‘ஏன் சுஜி புருவத்தைச் சுருக்கறே ? ‘ என்றாள். ‘மாப்பிள்ளையை உனக்குப் புடிச்சிருக்கோல்லியோ ? பாக்க நன்னாத் தானே இருந்தார் ? ‘

சுஜாதா பெருமூச்சு விட்டாள்.

‘தெரியலை மாமி… ‘

அம்மாவும் லலிதா மாமியும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள்.

‘என்ன இந்தப் பொண்ணு இப்புடி.. ‘ மாமி முடிப்பதற்குள் அவளது ஏழு வயது மகன் உள்ளே நுழைந்தான். லலிதா மாமியின் முகம் ‘சட் ‘டென்று மலர்ந்தது. கல்யாணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் ஏகப்பட்ட வேண்டுதல்களின் பயனாக அருமையாகப் பிறந்த மகன் அவன்.

‘எங்கடா சுத்திட்டு வரே ? என்னதது கைலே ? கண்ணாடியா ? ‘

‘ஆமாம்மா. இங்கப் பாரு, புதுசா இருக்கேன்னு அப்பா வாங்கித் தந்தா. ப்ளாஸ்டிக்லெ கூடு மட்டும் பண்ணி விக்கறாம்மா. கைலெ

இந்த மாதிரி கலர் கலரா பேப்பர்லே கண்ணாடி மாதிரி வெட்டித் தரா…அதை கண்ணாடி ஃப்ரேமுக்குள்ளே போட்டா…ஒரே

கண்ணாடிலே எவ்ளோ கலர் பாக்கலாம் தெரியுமா! ‘

லலிதா மாமி மகனின் உற்சாகத்தில் பூரித்துப் போனாள்.

‘சுஜிக்கா…நீங்களும் பாக்கறீங்களா ? ‘ அவன் சுஜாதாவிடம் வந்தான். அவளருகில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு கலர்த் தாளாக ஃப்ரேமுக்குள் பொறுத்திப் பார்த்தான்.

‘பாத்தீங்களா ? எல்லாம் பச்சையா தெரியறது… ‘ அவன் தாளை மாற்றினான். ‘ஐ…இப்பொ எல்லாம் நீலமாயிடுத்து… ‘

சுஜாதா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

‘இப்போ எல்லாம் செகப்பா மாறிடுத்து பாருங்களேன்…! ‘

சுஜாதாவின் முகத்தில் மெல்லப் புன்னகை மலர்ந்தது. ‘அட ஆமாண்டா…இப்பதான் தெரியுது… ‘

அவன் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். ‘ உங்களுக்கு எப்புடித் தெரியும் ? உங்ககிட்டயும் இந்த மாதிரி கண்ணாடி இருக்கா ? ‘

‘கொஞ்ச நேரம் முந்தி வரைக்கும் இருந்துச்சு. இப்பதான் அதை ஒடைச்சேன். ‘

சுஜாதா புன்னைகையுடன் விளையாட்டுக் கண்ணாடியை அணிந்து அழகு பார்த்துக் கொண்டாள்.

=====================

elankhuzhali@yahoo.com

Series Navigation

இளங்குழலி

இளங்குழலி