மொரீஷியஸ் கண்ணகி

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அவளுக்கு வயது 28. பிறந்தது போர்ட்லூயிஸ், மொரீஷியஸ். வளர்ந்தது, படித்தது, செக்ஸை அறிய நேர்ந்தது சர்சல், பாரீஸ். அதிநவீனமும் சம்பிரதாயமும் ஐம்பது ஐம்பது விகிதத்திற் கலந்த சராசரி மொரீஷியஸ் மத்மசல். ஆண்களோடு கலந்து கூச்சமின்றி ஆடவும் தெரியும், பிப்ரவரி மாதக் குளிரில் பித்துக்குளி முருகதாஸ் பாடலைப் பாடிக் கொண்டு காவடியெடுக்கவும் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் அனந்தாசாமி சர்மா என்கின்ற அனந்தசாமி சர்மா மந்திரம் சொல்ல மொரீஷியஸ் தமிழர்கள் முறைப்படி இந்தியன் ஒருவனை ‘மரியாழ் ‘ செய்திருந்தாள். பிறகு அந்தத் திருமணம்- நகர சபையில் நண்பர்கள் முன்னிலையில் முறையாக பதிவுச் செய்யப்பட்டது. இன்றைய தேதியில் இருவருமே பிரெஞ்சுக்காரர்கள், குடியுரிமைச் சட்டப்படி மட்டுமல்ல வாழ்க்கை முறையிலும் கூட.

2003ல் ஒரு பிப்ரவரிமாதம் காலை மணி 6.00

படுக்கையைச் சரி செய்துவிட்டு எழுந்தபோதே மனம் வலித்தது. அவளது நண்பன்- கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையைப் பகிர்ந்துகொண்ட, பரஸ்பர அக்கறைக் காட்டிய இந்திய நண்பன்- சில நாட்களில் சற்று நேரம் கழித்தேனும் வரப் பழகிய நண்பன், இப்போது இரவுகளையும் தவிர்க்கிறான். மனதிற் மெல்லப் பயம் ஒட்டிக்கொண்டது. முதன் முறையாக அளவாக அழுதாள். கட்டில் விரிப்பின் முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு. குளிக்கும் அறைக்குள் நுழைந்து கதவினை அடைத்தாள்.

இரவு மணி 9.20:

தயக்கமின்றி ‘பார் ‘ ன் கதவினைத் தள்ளிக்கொண்டு அவள் நுழைந்தபோது, மழை அங்கியையும் மீறி ஈரப்பட்டிருந்த உடலில் இலேசாக நடுக்கம். கைக்கடிகாரத்தை பார்த்து கொண்டாள் இரவு 9மணி 20 நமிடங்கள். சுவாரஸ்யமாக குடித்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் இனத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தியின் திடார்ப் பிரவேசத்தை, ஆச்சரியத்தோடு பார்வையில் ஏற்று, பின்னர் அலட்சியம் செய்து உரையாடலைத் தொடர்ந்தனர். வாய்ப்புக் கிடைத்தவர்கள் மழையில் நனைந்திருந்த தலையை அவள் துடைக்க, தெரிந்த மார்பை தெரியாமற் பார்த்து மதுக்கோப்பையோடு ஒப்பிட்டு வாய் பிளந்ததனர். பார் வாசலிற் போடப்பட்டிருந்த விரிப்பில் சற்றே நின்று, மழையங்கியின் நீர்வடியட்டுமெனக் காத்திருந்து, அதனைக் கழற்றி பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘தாங்கி ‘யில் மாட்டினாள். குடையைச் சுருக்கிக் கீழுள்ள அதற்கான இடத்தில் வைத்தாள். இப்பொழுது தன்னைச் சுதாரித்துக்கொண்டவளாய், மெள்ள மறுபடியும் பார்வையை ஓட்டினாள்.

காலை மணி 6.30:

கோல்கேட் மெளத்வாஷால் வாயைக் கொப்பளித்தாள். குளிர்ந்த நீரை வாரி முகத்திலறைந்து கொண்டாள். நிவியா ஐ லோஷனால் கண்களை அலம்பி பின்னர் டர்க்கி டவலால் அழுந்தத் துடைத்த முகத்திற்கு டஸ்டி ரோஸ் ஒத்தினாள். புருவங்களை ஒதுக்கி ட்ரிம் செய்து பென்சிலிட்டாள். கண்களை அகலத்திறந்து மஸ்க்கராவால் வருடிமுடித்து, கண்ணிரப்பைகளுக்கு ஐ ஷேடிட்டு, அதரங்களில் ப்ளூ ரோஸ் லிப்ஸ்டிகை தடவி முடித்து மீண்டும் கண்ணாடியைப் பார்த்தபோது இரப்பைகளில் எட்டிப் பார்த்தது கண்ணீர். காகிதக் கைக்குட்டையை நான்காக மடித்து அதன் முனையால் ஒற்றியெடுத்து மூக்கை உறிஞ்சினாள்.

இரவு மணி 9.22:

இவளது பார்வை.. சுவர்களிற் சென்று படியும் எல்லைவரை முடிச்சு முடிச்சாக மேசை நாற்காலிகள். அவற்றை நிரப்பியிருந்த அரைமயக்க மானுடர்கள். புகையும் மதுவும் அனுமதித்த மட்டரக விமர்சனங்கள், கேலிகள் கிண்டல்கள், புரிதலற்ற சிரிப்புகள். பிறகு இறுதியாக சில நிமிடத் தேடலுக்குப் பிறகு அவள் தேடிய மாதவி..

இவளையொத்த வயது, அளவாக வெட்டபட்டு, தோளிற் பதுங்கியும் பதுங்காமலும் தெரிந்த செம்பட்டை முடி. இறுக்கமாக ஒரு ஜம்பர். தடித்த உதட்டில் இரத்தம் குடித்த காட்டேரியாக ஈவ்ரொஷே சிவப்பு உதட்டுச் சாயம், கன்னங்களிற் தேவையின்றிக் கூடுதலாக ‘ரூழ் ‘. சற்றே பெரிய கண்கள்.

அந்தப் பெண்ணின் இருக்கை ‘பார் ‘ ன் வாசற்கதவைப் பார்க்கின்ற வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அக்கதவு திறந்து மூடப்படும்போதெல்லாம் அவள் இயல்பாய் நிமிர்ந்து நுழைகின்ற நபரைச் சரிபார்த்தபின் கைக்கடியாரத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்- யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கெதிரேவிருந்த நாற்காலியும் அதனை உறுதி செய்தது. இவள் அவளைக் குறி வைத்து நடந்து எதிரே போய் நின்றாள்.

காலை மணி 7.30:

கீழே டெனிம் ஸ்கர்ட் மேலே 3/4 ஸ்லீவ்ஸ் போலோ, ஃபெதர்ட் ஹேர்ஸ்டைல், கால்களிற் குதியுயர்ந்த கீழ்த்திசை மாடல் ஷூ. இடது கரத்தில் ஸ்வாட்ச். வலது கரத்தில் கால்ப் லெதர் வேனிட்டி பாக். வீட்டிலிருந்து கிளம்பி பாரீஸின் கிழக்கு ஃபெரிபெரிக் பிடித்து வெளியே வந்தபோது, அதி வேகப்பாதை சாலைகளில், ஆமைவேகத்தில் கார்கள் ஊர்ந்து செல்ல ‘மெர்து ‘ (ஷிட்)! சலித்துக் கொண்டாள். அலுவலகத்தை அடைந்து பிரதான கதவிற் தனக்கான அட்டையை உள்வாங்கிய இயந்திரத்திடம் வலது கட்டைவிரலை பதிப்பித்து அனுமதிகேட்க அது ‘க்வாக் ‘ கென்றது. போகின்றபோதே தனது மத்திய ஆப்ரிக்க தோழி ‘மர்லேன் ‘ க்கு ஒரு ‘சலுய் ‘(ஹாய்) சொல்லிவிட்டு இவளது கேபினில் நுழைந்தபோது, பக்கத்து கேபினில் நாற்பதுவயது மார்க்கெட்டிங் மேனேஜர் ஃபிரான்சிஸ் தனது மனைவி-கம்-செகரட்ரிக்கு வழக்கம்போல முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களிருவர்க்கும் சேர்ந்தாற்போல ஒரு போன்ழூர் சொல்லிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்

இரவு 9.25

‘மன்னிக்கணும்… யாருக்காகவோ காத்திருக்கீங்கன்னு நினக்கிறேன் ? ‘ -இவள்.

‘ ம் ..என் நண்பனுக்காகக் காத்திருக்கிறேன் ‘ – அவள்.

‘ உங்கள் நண்பர் வரும்வரை இந்த நாற்காலியில் உட்காரலாமா ? ‘

அந்தப் பெண்ணிடம் தயக்கமிருந்தது. இவளும் அவளது அனுமதி வேண்டி, கேள்வியைக் கேட்கவில்லை. நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு எதிரே இருந்தவள் அவளாகவே முன்வந்து இவளிடம் பேசினாள்.

‘நீங்க.. ? ‘

‘கண்ணகி ‘

‘இந்தியாவா ?

‘இல்லை மொரீஷியஸ். மொரீஷியஸ் கண்ணகி ‘ சிரித்துக் கொண்டாள்

‘நான் சோஃபி ‘

‘எனக்குக் காப்பிகுடிக்கணும். உங்களுக்கு .. ? ‘

‘நோ..மெர்சி (நன்றி). இப்போதுதான் குடித்தேன் ‘

‘காத்திருக்கும்போது நிறையக் காப்பியைக் குடிக்கவேண்டியிருக்கும் ‘ என்று சொன்னவள் இவளுக்கான காபியைக் கொண்டுவருமாறு பணித்துவிட்டு எதிரே இருந்தவளிடம் கேட்டாள்:

‘நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ? ‘

‘அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனால் வருவதுண்டு. நீங்க என்ன பேரு சொன்னீங்க.. காண்ணகி ? ‘

‘இல்லை கண்ணகி. ‘ நிதானித்து அழுந்தச் சொன்னாள்.

‘ம்.. கண்ணகி. .. இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்தமாதிரி தெரியலையே ? ‘

உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து கண்களை இறுக மூடி பதில் சொல்ல யோசித்து, முகத்தைத் திருப்பி மீண்டும் எதிர்கொண்டவள்,

‘உண்மை. இப்போதுதான் இங்கே முதன் முறையாக வறேன். வரக்கூடாதுதான் ? ‘

‘பின்னே எதற்காக ? ‘ கேள்வியைக் கேட்டுவிட்டு, இவள் பதிலுக்குக் காத்திருந்தாள்.

கேட்டிருந்த காப்பி வந்து சேர்ந்தது. கூடவே சர்க்கரைக் கட்டிகளும் பாலும் தனித் தனியாக வைக்கப்பட்டன. குனிந்து கோப்பையைப் பார்த்தாள். சர்க்கரைத் துண்டங்களை எடுத்தவள், எதிரே இருந்தவளிடம் பேசினாள்.

‘இது என்ன ? சர்க்கரை. இந்த நேரம்வரை அதற்கெதுவும் நேர்ந்துவிடவில்லை. அதன் புனிதத்திற்கு எந்த பங்கமுமில்லை. இந்தப் பாழாய்ப் போன காப்பியை பிடிக்கவில்லை என்பதற்காக சர்க்கரையால் தப்பிக்க முடியுமா என்ன ? காபி சூடாக இருப்பதும் அதில் குதித்தால் தான் கரைந்துவிடக்கூடும் என்பதையும் சர்க்கரை அறிந்தே உள்ளது. ‘

இவளது தத்துவம் அவளுக்குக் குழப்பத்தைத் தந்திருக்கவேண்டும். தப்புவிக்க, ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்றவைத்து, நுரையீரல் கொள்ள புகையினைத் வாங்கி, பின்னர் தவணைமுறையில் நாசிகள் மற்றும் வாய் வழியாக விருப்பமின்றி வெளியேற்றினாள். முழங்கைகளை மேசையில் ஊன்றி, மடித்திருந்த கைகளிற் தலையை இறக்கி நம்ம கண்ணகியை நேரிட்டு பார்த்தாள்.

‘ஆனா விருப்பப் படாத சர்க்கரையை, இந்தக் கோப்பையிலிருக்கின்றக் காப்பியில் இறக்கியே ஆகணும்னு ஏதோவொரு சக்தி தீர்மானிச்சாச்சு. அதை சர்க்கரை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைத்தான் நாங்க விதின்னு சொல்லுறோம் ‘..

மாலை மணி 5.30

கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுச் வெகு நேரமாக சோர்ந்து உட்கார்ந்திருந்த இவளை எழுப்பியவள் ஆப்ரிக்கத் தோழி மெர்லன் .

‘என்ன செய்யற ? வீட்டுக்குக் கிளம்பலையா ? ‘ எனக் கேட்டவள் சோர்ந்திருந்த இவளது முகத்தைப் பார்த்து, பாந்தமாக அணைத்துக் கொண்டாள்.

‘ என்ன இன்றைக்கும் அவன் வரவேயில்லையா ? ‘

‘இல்லை ‘ சொன்னவள் வெடித்து அழுதாள் ‘ இவள் அழுது முடிக்கும்வரை மெர்லன் காத்திருந்தாள்.

‘மனதிற் தேக்கி வைக்காதே. நன்றாக அழுதிடு! விட்டது சனியன்னு தலை முழுகு. டிவோர்ஸ் செய்!. உனக்காக எத்தனை பேரு வரிசையில் நிற்கிறாங்க தெரியுமா ? மிஷல் இப்போதே அரைப் பைத்தியமா அலையறான். நேற்றுபாரு, ஹாரி எங்கூடபடுத்துக்கிட்டு உன்னைப்பற்றியே பேசறான் ‘

‘இல்லை. தீர்மானிச்சுட்டேன் ‘

‘என்னன்னு ? ‘

‘நாளைக்குச் சொல்றேன் ‘ என்று கிளம்பியவைளை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த மெர்லன், உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்

இரவு மணி 9.30

தன் கைக்கடியாரத்தைப் இந்தமுறைப் பார்த்துக்கொண்டவள் சோஃபி.

‘ அப்போ நீங்க கண்ணகி இல்லை. சர்க்கரைன்னு சொல்லுங்க. ஆக இந்தச் சர்க்கரை இங்கே வந்ததற்கானக் காரணத்தைச் தெரிஞ்சுக்கலாமா ?

‘ தாராளாமா.. இவள் சிரித்தவாறே எழுந்தாள். அந்தச் சிரிப்பில், ஒரு எச்சரிக்கை இருந்தது. வெற்றியின் எக்காளமிருந்தது.

சோஃபிக்குப் புரிந்திருக்க வேண்டும். அவசரமாக கையில் வைத்திருந்த சிகரட்டை அணைத்தாள். ஏதோ ஒருவித பயம். இவளிடம் பயம். எழுந்து கொண்டாள்.

திரும்பியபோது அவன் பாருக்குள் நுழைந்து கொண்டிருந்தான்: 30லிருந்து 35 வயதிருக்கலாம், தமிழர்களின் சராரி உயரம், மானிறம், பழுப்பு நிறத்தில் லெதர் ஜாக்கெட். கருப்பு பாண்ட், புள்ளியிட்ட வெள்ளை முழுக்கைச் சட்டை. கழுத்தில் மப்ளர்.

சோஃபிக்கு வேண்டியவன். இரண்டுவருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய ரெஸ்டரெண்டில் அறிமுகமாகி, வாலைக் குழைத்துக் கொண்டு விரட்ட விரட்ட அவளிடமே ஓடி வருபவன் – இந்தியத் தமிழன்.

‘குமார்.. ‘ கூப்பிட்டவள் சோஃபி.

அவைளைப் பார்த்துக் சந்தோஷமாகக் கையைசைத்தவன் பக்கத்திலுருந்த கண்ணகியைப் பார்த்ததும் பேயறைந்தவன் போலானான்.

தயக்கத்துக்கிடையே, மெல்ல இரு பெண்கைளையும் நெருங்கினான்.

‘கண்ணகி! நீ.. நீ இங்க என்ன செய்யற ? ‘ அவனுக்கு நா குழறியது.

சோஃபிக்கு இவன் என்ன சொல்கிறான் என்பது புரியலை. ‘குமார் என்ன நடக்குது இங்கே ? ‘

‘ம்.. அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். நீ மாதவி அவன் கோவலன்னு சொல்றேன். உனக்குப் புரியாது. அவனுக்குப் புரியும். கொஞ்ச நேர முன்னாடி நான் இங்கே வந்ததுக்குக் காரணம் கேட்டியே ? பெக்க பெக்கன்னு நிக்கிறானே இவனைக் கேளு. காரணம் சொல்வான் ‘

‘.கண்ணகி.. அவசரப்படாதே…………. ‘ பயத்தில் அவனுக்குப் பேண்ட் நனைந்துவிட்டது.

சோஃபிக்கு நடக்கவிருக்கின்ற விபரீதம் புரிந்திருக்கவேண்டும்.

‘ கண்ணகி… உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்

‘ இல்லை. நான் சர்க்கரைகட்டி இல்லை. கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷீயஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை கோவலனை எரிக்கும் ரகம் ‘.

கைப்பையிலிருந்த அந்தச் சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்.

****

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா