விடியும்! (நாவல்) – (20)

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


“ஆரது ?”

தந்திக்காரன் வாசலில் மணியடித்துக் கேட்டது மாதிரி திகிலோடு ஆரது என்று மீண்டும் கேட்டார் பொன்னுத்துரையார். தந்தி நல்லதுக்கும் வரும். கெட்டதுக்கும் வரும். வாழ்த்துத் தந்தியாகவுமிருக்கும். வருத்துகிற தந்தியாகவுமிருக்கும். ஆனால், தந்தியென்று மணியடித்தாலே என்னவோ ஏதோ ஆரோ எவரோவென்று நெஞ்சு இடிக்கத் தொடங்கிவிடுகிறது. வந்த விசயம் அப்படியொன்றுமில்லை என்று பிறகு தெரிய வருகிற போதும் நெஞ்சிடி நிற்க சிறிது நேரமெடுக்கிறது. ஆட்களைப் பயமுறுத்துவதில் தந்திக்கு நிகர் தந்திதான்.

முச்சந்தியில் இடிஇடிக்க முற்றத்தில் மழை பொழிந்தது போல ஆறாங்கட்டை கண்ணிவெடிச் செய்திக்கு வீட்டு விறாந்தையிலிருந்து பதட்டப்பட்டார் பொண்ணுத்துரையார்.

ஆனைக்குப் பயப்பிட பூனை வந்தது.

“நான் கட்டாடி இராசு”

ஆதி போய் கதவுக் கொழுக்கியை கழட்டி விட்டுத் திறக்க, பெரியய்யா இருக்கிறாரா தம்பி என்று கேட்டுக் கொண்டே முற்றத்தில் வந்து வெள்ளத்தில் சைக்கிளை நிற்பாட்டினார் இராசு.

“இராசுவா, இப்பிடி வந்து இரு, ஈரத்துக்குள்ள நிக்காதை”

உடுப்பு எடுக்க வந்தவர் மாதிரி தெரியவில்லை. இராசு திண்ணை ஈரத்துக்குப் போட்டிருந்த சாக்கில் வந்து குந்தினார். இராசு என்கிற இராசரெத்தினத்துக்கு எப்படிப் பார்த்தாலும் அறுபத்தைந்து வயசுக்கு மேலதான் இருக்கும். பொன்னுத்துரையார் எட்டாந்தரம் படிக்கையில் அதே பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பை குழப்படிக்குக் குறைவில்லாமல் இரண்டாவது வருடமாய் படித்தும் முடியாமல், தன் சீவிய உருத்தான வெள்ளாவித் தொழிலுக்கே போய்விட்டவர்.

உடுப்புக்குக் குறி போடுவதற்கு நாலு எழுத்துப் படித்தால் காணாதா என்ற தாராள மனம். அயல் முழுக்க வெளுக்கிறது இராசுதான். அவருடைய இரண்டு தம்பிமாருக்கும் பெரியகடை, சின்னக்கடை வெளுப்புகள் முதுசம்.

இராசுவின் சொல் சுத்தம் போலவே வெளுவையும் பளிச்சென்று பல்லிளிக்கும். ஞாயிற்றுக்கிழமை நாத்தில் பொன்னுத்துரையார் கறிக்கடைக்குப் போவதற்கு முன்னால், நிச்சயம் ஆளை எதிர்பார்க்கலாம். தோளில் சுமந்த வெளுத்த உடுப்பு மூட்டையோடு வந்து விறாந்தைக் கட்டில் குந்தினால் கலண்டர் மட்டையில் குறித்து வைத்த போன வார உடுப்புக் கணக்கோடு பக்கத்தில் நின்று ஒத்துப் பார்ப்பாள் லட்சுமி.

இராசு சொல்லிக் கொண்டே வருவார்.. .. .. .. தம்பியிட பள்ளிக் கலிசான் மூன்டு, சட்டை ரெண்டு, ஐயாட கரைவேட்டியொன்டு, சால்வையொன்டு, ரெண்டு பாவாடை, ரென்டு சாறன், பெரியம்மாட சீலை மூனு, கட்டம் போட்ட பெட்சீட் ஒன்டு. .. ..

மூட்டையின் முடிச்சவிழ்த்து அடுக்கியிருக்கும் துணிகளுக்கு நோகாமல் பக்குவமாக எடுத்து வைத்து லட்சுமி அம்மாவின் குறிப்புக்கு கணக்குக் கொடுப்பார். ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்து அடுக்குகிற போது வெளுப்பின் சுத்தமான வாடையும் வெளிச்சமும் அவரது தொழில் சுத்தம் பேசும்.

“இராசு ஒரு துவாய் குறையுது, எங்கயும் மாறிக் குடுத்திற்றியோ ? ”

“இன்னொருக்காப் பாருங்கம்மா”

பஞ்சிப்படாமல் மீண்டும் மற்றப்பக்கம் மாற்றி ஒவ்வொன்றாக அடுக்கி வைப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும். சரி சரி நாந்தான் பிழைவிட்டுட்டன் என்று கடைசியில் லட்சுமி சொல்லவேண்டியிருக்கும். செய்கிற தொழில் சுத்தம், சொல்லுகிற சொல்லு சுத்தம், காட்டுகிற மட்டுமரியாதை சுத்தம் – எல்லாஞ் சரிதான் குடிக்கிற குடிதான் கொஞ்சம் கூட. பொன்னுத்துரையாருக்கு கள்ளு மணந்தாலே பிடிக்கிறதில்லை.

என்னய்யா செய்யிறது. பகல் முழுக்க எறிக்கிற வெய்யிலில குளத்துக் கல்லில மாய்ஞ்சு மாய்ஞ்சு அடிச்சுத் துவைச்சு காயப் போட்டு மூட்டையோட வீட்டை வந்தா மேலெல்லாம் புண்ணா நோகுது. சிரட்டைக்கரி நெருப்பில ஒரே நிலையா நின்டு மினுக்கி அடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடியென்டு கைகாலெல்லாம் சோந்து போகுது. அந்த அலுப்புக்கு கொஞ்சம் போட்டாத்தான் இடுப்புளைவு தீரும் என்று சப்பைக்கட்டுக் கட்டி சமாதானம் சொல்வார்.

ஒன்டுக்கு ஐஞ்சு பிள்ளையளைப் பெத்திற்றாய். இப்பிடிக் குடிச்சுத் திரிஞ்சியென்டா பிள்ளையளும் நாளைக்கு உன்னைப் போலத்தான் வெள்ளாவியில விழப் போகுதுகள். நீதானே அதுகளை ஆளாக்க வேனும் என்பார் பொன்னுத்துரையார்.

“ஏனய்யா பரம்பரையா செய்யிற தொழில்தானே செய்யட்டுமன். நடக்க வக்கில்லாத நொண்டி நாலு பேருக்கு வழி காட்டேலுமா ? ”

“அட அதுக்குச் சொல்லேல்லை இராசு. அதுகளை நல்லாப் படிக்க வைச்சு ஆளாக்கி விட்டிட்டியென்டால் உன்னைப் போல வெள்ளாவியில வேகாம அதுகள் நல்லாயிருக்குங்களே!”

“அதுவுஞ் சரிதானய்யா. தொழிலும் முந்தியப் போல இல்லை. சனத்துக்கு இப்ப எங்கட தேவை குறைஞ்சு போச்சு. வீட்டுக்கு வீடு மினுக்கிற மிசின் வந்திற்றுது. கழுவிப் போடக் கஷ்டமான உருப்படியளைத்தான் போடுவினம். சடங்குவீடுகளுக்கு மாத்து உடுப்புக் குடுக்கிறது ஒன்டுதான் மிச்சம். அதுவும் இப்ப குறைஞ்சு போயிற்றுது. இந்த நெருப்புத் தின்னுற வேலை என்னோட முடிஞ்சு போகட்டும் என்டு நினைக்கிறதுதான். பேந்து அப்பிடியே மறந்து போயிருதுய்யா”

மறக்காதை இராசு. என்ன கஷ்டப்பட்டாலும் பிள்ளையளை படிக்க வைச்சிரு என்று அழுத்தம் கொடுத்துச் சொல்வார் பொன்னுத்துரையார். இராசு ஒருநாள் கண்கலங்கிப் போனார்.

“ஐயா இந்த அயலுக்குள்ள இத்தினை வருசமா ஊசாடித் திரியிறன். ஒரு குஞ்சமென்டாலும் என்னடாப்பா உன்ர பிள்ளையளின்ர பிற்காலத்தைக் கொஞ்சமென்டாலும் நினைச்சுப் பாத்தியா என்டு நெஞ்சில ஈரத்தோட கேட்டதில்லை. உங்கட பெரிய குணம் ஆருக்கய்யா வரும். நான் தீர்மானிச்சிட்டன் ஐயா. இந்தத் தொழில் என்னோட போகட்டும். கஷ்டத்தோட கஷ்டமா பிள்ளையள படிக்க வைச்சு ஒப்பீஸ் பியோனாக்கிப் போட்டுத்தான் விடுவன் ”

பொன்னுத்துரையாருக்குக் கவலை தோய்ந்த சிரிப்பு வந்தது. வழிவழியாக வந்த சாதி ஏற்றத்தாழ்வுகளினால் கற்பனையைக் கூட பெரிதாகப் பண்ணிப் பார்க்க முடியாத இராசு.

“இராசு, பொடியள் நல்லாப் படிச்சாங்களென்டால் டொக்டர் எஞ்சினியரா வருவாங்கள். இந்தக் காலத்துப் பிள்ளையளுக்கு எங்களை விட மூளை கூட”

டியூப்லைட் போட்ட மாதிரி வெளிச்சம் காட்டி சிரித்தார் இராசு. கேட்க நல்லாத்தான் இருந்தது அவருக்கு.

“இராசு என்னை நம்பு. சாதி சாதியாப் பிரிச்சு நாட்டாண்மை காட்டின காலம் மலையேறுது. படிக்கிற படிப்புக்கும் செய்யிற தொழிலுக்கும் ஏற்ற ஊதியம் மதிப்பு மரியாதை எல்லாம் வரப்போகுது. நீ தாழ்வு மனப்பான்மையை விட்டுரு. பிள்ளையளை நல்லாப் படிப்பிச்சுப் போட்டுப் பார். சொன்னது நடக்காட்டி நான் ஆரென்டு கேள். வீட்டு வாசலில காரில வந்து இறங்குவாங்கள் உன்ரை பிள்ளையள்”

“சும்மா விளையாடாதீங்கய்யா”.. .. .. .. தன் குடிசைக்கு முன்னால் கார் வந்து நிற்பதை அப்போதே கற்பனையில் கண்டு மகிழ்ந்தவராய் வெட்கத்துடன் நின்றார் இராசு.

இராசு தன்னைப் போலவே இப்போது கிழன்டிப் போயிருந்தது தெரிந்தது பொன்னுத்துரையாருக்கு. இப்ப என்றது போல இருக்கு. முதல் மூன்று பொடியளும் கிளார்க்மாரா டாச்சரா வந்து விட்டார்கள். அவரளவில் அதுவே பெரிய சாதனைதான். நாலாவது மகனும் மடத்தடியில் லோன்றிக்கடை போட்டு சொந்தமாக தொழில் செய்கிறான். வீடுகளுக்கு ஏறி இறங்குவதில்லை. அவனுடைய கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள் சட்டைகள் புதுசு போலத் தொங்குவதை அவர் கண்டிருக்கிறார். ரிசீற் போட்டு உடுப்பு வாங்க, வெளுக்க, இஸ்திரிக்கை போட வேறாக ஆள் இருக்கு. சிரட்டைக்கரித் தொந்தரவில்லை.

இராசு இன்னமும் மாசத்துக்கொருக்காவோ இரண்டு தரமோ அயலுக்குள் உடுப்பு எடுக்க வந்து போய்க் கொண்டிருக்கிறார். பழைய மரபுகள், பழக்கவழக்கங்களில் ஊறிப் போன கட்டை. காலம் மாறினாலும் மாற்ற முடியாத பழைய கட்டை.

“என்ன இராசு இந்த வெள்ளத்துக்குள்ள வந்திருக்கிறாய். உன்ர வீட்டுப் பக்கம் பள்ளக்கையல்லோ”

“அதேனய்யா கேட்கிறியள். முந்தநாள் காயப் போட்ட துணியெல்லாம் தொப்பலாப் போச்சு. அப்படியே எடுத்து வீடு முழுக்க பரத்தி வைச்சுப் போட்டு இந்தா வெளிக்கும் அந்தா வெளிக்கும் என்டு வானத்தைப் பாத்துக் கொண்டிருக்கிறன். ”

“பொங்கல் நேரம் காசு கீசு ஏதும் தேவையோ ? ”

“இல்லை.. .. .. அவர் தயங்கினார். ஐயாவோட தனியா ஒரு சங்கதி பேச வேனும் என்று சொல்லிக்கொண்டே பிள்ளைகளைப் பார்த்தார், அவர்கள் இருப்பது அவருக்கு இடைஞ்சல் போல.

கையிலிருந்த மிச்ச வடையை வாய்க்குள் திணித்துக் கொண்டு போயிற்று வாறன் அன்ரி சொல்லி விட்டு சாந்தன் முற்றத்தில் இறங்க, ஆதியும் புரிந்து கொண்டு அவன் பின்னால் தெருவாசலுக்குப் போனான்.

இரண்டு தென்னை உயரத்தில் இராட்சத ஹெலிகொப்டர் ஒன்று காதைப் பிளக்கிற சத்தத்துடன் பறந்து போனது. உள்ளேயிருந்த நாலைந்து ஆமிகள் துவக்குகளை கீழே நீட்டியபடி மங்கலாய்த் தெரிந்தார்கள். பூனை பின்கட்டுக்குப் பாய்ந்து ஈரத்தில் சறுக்கி விழுந்தது. நாய் ஓடிவந்து அண்ணாந்து பார்த்து விட்டு குரைக்காமல் நின்றது. ஹெலிகொப்டர் போன சத்தம் அடுப்படியிலும் கேட்டிருக்கும். வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தோன்றாது பெண்களுக்கு. இன்றைக்கு நேற்றா பறக்குது!

விறாந்தையில் வேறு யாருமில்லை. உள்ளே பின்னேரத்தீன் வேலை முடிந்து பாத்திரங்கள் கழுவும் சப்தம் கேட்டது. சற்றுமுன் மகள் பாக்கியலட்சுமி காட்டிவிட்டுப் போன சாம்பிராணி வாசம் அமுக்கமான அந்த மழைக்குணத்தில் தேய்ந்து போகாமல் மணந்தது. மழையிருட்டாய் இருப்பதால் இன்று வெள்ளனையோடு சாம்பிராணி காட்டிவிட்டாள் பாக்கியம்.

“பிறகு என்ன விசேசம் இராசு”

வெற்றிலைத் தட்டத்தை இராசுவின் பக்கத்தில் அரக்கி விட்டார். இராசு பாக்குவெட்டி எடுத்து நாறல் பாக்கை கைக்குள் பொத்தி நாலாக நறுக்கினார். நறுக்கிய பாக்கை மேலும் நாலாக அரிந்தார். பொன்னுத்துரையாரின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் பாக்குத் துண்டுகளை அப்படியே வாய்க்குள் எறிந்தார். வெற்றிலையைத் தடவி விட்டு சுண்ணாம்பு பூசினார். சொல்லக் கஷ்டம், சொல்லவும் வேனும் .. .. .. தயங்கித் தயங்கிச் சொன்னார்.

“என்ன நடந்தாலும் நான் உங்களிட்டைத்தானய்யா ஓடி வாறது. ”

“சொல்லு இராசு”

“ஐயா என்ர கடைசிப் பொடியன் செல்லராசுவை இப்ப இரண்டு கிழமையாக் காணேல்லை”

“காணேல்லையா எங்க ? ”

உள்ளேயும் வெளியேயும் தலைநீட்டிப் பார்த்து ஜாக்கிரதை செய்து கொண்டு அவர் சொன்னார்.

புலியில சேந்திற்றானாம் ஐயா. பொலிசுக்குத் தெரிஞ்சா குடி முழுகிப் போயிரும். மூச்சுக்கூட விடேல்லை என்றுவிட்டு மீண்டும் இராசு தயங்கினார். சொன்னால் வில்லங்கம் வருமோ என்று மசங்கினார்.

“சொல்லன் இராசு”

“இல்லை, உங்கட தங்கச்சி மகனும் கொஞ்ச நாளா வீட்டில இல்லையாம். ரெண்டு பேரும் ஒன்டாப் படிச்ச பிள்ளையள். உங்களிட்டை கேக்கப் பயமாயிருந்துச்சு. கேக்காம இருக்க இருக்க உசிரே உறைஞ்சு போகுது. அதுதான். உங்களுக்கு ஏதும் தெரியுமோன்டு கேட்டுப் போக வந்தனான் ”.. .. .. .. .. சொல்லி முடித்ததும் அவருக்கு மூக்கு வியர்த்தது.

பொன்னுத்துரையார் ஆடவில்லை. அசையவில்லை. நாங்களும் மூச்சு விடேல்லை. இருந்தும் இராசுவுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னம் ஆராருக்குத் தெரிஞ்சிருக்கோ. எவ்வளவு பொத்திப் பொத்தி வைச்சாலும் புத்துக் கொண்டு வந்திற்றுதே!

கொஞ்ச நேரம் கழிய, யதார்த்தம் புரிந்தது அவருக்கு.

இந்த ஏழைபாழையின் பிழைப்பிலேயும் மண் விழுந்திட்டுதே கடவுளே என்று பதைபதைப்பு வரத் தொடங்கிற்று. கையில் பிடிபடாத நிழல் போல ஒன்றுமே அவருக்குப் பிடிபடவில்லை.

“இதுகளுக்கு என்னடாப்பா பிடிச்சிருக்கு ? இந்தக் கெதீல போனா இக்கணம் வீட்டுக்கு ஒரு பிள்ளை போயிரும் போல கிடக்கே. மூக்கைப் பிடிச்சா வாய் மூடத் தெரியாததுகள் இந்தப் பெரிய சேனையோட மோதேலுமா ? அவள் என்னடான்டா அங்க திரிஞ்சு இங்க திரிஞ்சு ஆயுதங்களைக் கொண்டந்து குவிக்கிறாள். மாரிக்குள்ள மழை இறைச்ச மாதிரி வானத்திலயிருந்து குண்டு போட்டுத் துலைக்கிறாள். இதுகள் ஏன் இப்படி அள்ளுப்படுதுகள். சாகப் போறதுக்கு நான் முந்தி நீ முந்தியென்டு ஓடுதுகளே இதுகளுக்கு என்ன குறை வைச்சனாங்கள் இராசு”

இராசு நாலு வீடு ஏறி இறங்குகிறவர். ஊருக்குள் பலதையும் பத்தையும் உயிரோட்டமாக கேள்விப்படுகிறவர். கேட்டதை வெளியே விடுகிற பழக்கம் மட்டும் இன்றளவும் இல்லை. நெஞ்சுக்குள் போட்டு பூட்டி வைத்திருவார். பயந்த சுபாவம். நாட்டுச்சண்டை பற்றி ஆரும் வாய் திறந்தால் நமக்கேன் பொல்லாப்பு என்று சாக்கிரதையாக நழுவுகிற மீன்.

உடுப்பு எடுக்கப் போகிற வீடுகளில் சாய்மனக் கதிரைக்குப் பாரமாயிருக்கிற பெருசுகள் வாயைக் கிளறுவார்கள், அயலுக்குள் நாலுபடி ஏறியிறங்குகிறவன் நாட்டு நடப்பை சுடச்சுடச் சொல்லுவான் என்ற நப்பாசையில்.

“சந்திக்கடை வீரகத்தியின்ர மகன் போயிற்றானாமே. தேப்பனை பொலிஸ் விளங்கிப் போட்டு நாலு தட்டுத் தட்டினவங்களாம். பிறகு என்ன நடந்தது ? ”

அவருக்கு வீரகத்தி வீட்டிலும் வாடிக்கை. செய்தியும் கேள்விப்பட்டதுதான். ஆனால் ஒரு வார்த்தை பறியாது. சொன்னாலும் குற்றம் சொல்லாட்டிலும் குற்றம். சொல்லாமலே குற்றத்தைச் சுமப்பது நல்லதென நினைப்பார்.

“கும்பத்து அம்மாளாச்சி சத்தியமா எனக்கொன்டும் தெரியாதய்யா. இந்த மாதிரி விசயங்களை ஆரையும் நம்பி தாய்தேப்பன் சொல்லுவினமோ”.. .. .. .. கும்பத்து அம்மன் மேல் பழியைப் போட்டுத் தப்பிவிடுவது அவருக்கு எப்போதுமே இலேசாயிருந்தது. அந்தச் சத்தியத்திற்குப் பிறகு மேற்கொண்டு கிளறிப் பார்க்க பெரிசுகளுக்குத் துணிவிருக்காது. இப்போதும் இராசு எதுவும் சொல்லாமல் பொன்னுத்துரையாரின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜெயத்தைத் தேடும் பணியைத் துரிதமாக்க வேண்டும் என்று எண்ணிய போது தனக்கு இராசு ரூபத்தில் ஒரு துணை சேர்ந்து விட்டதென பொன்னுத்துரையார் நம்பினார். பால்காரக் கந்தசாமிக்கு விசளம் அனுப்பியதை இராசுவிடம் சொன்னார்.

“இந்த வெள்ளத்துக்குள்ள கந்தசாமி வரும் என்ட நம்பிக்கை எனக்கில்லை இராசு. இனியும் சும்மாயிருந்தா புதுசாத் சேர்ந்த பொடியள் சண்டை நடக்கிற பக்கம் போனாலும் போயிருங்கள். அதுக்குள்ள போனாத்தான் ஆக்களை மடக்கிப் பிடிக்கலாம். அவங்கட காலில விழுந்தென்டாலும் கூட்டி வந்திரலாம். நாளைக்குக் காலமை வாறியா ஒருக்கா ஆறாங்கட்டைக்குப் போயிற்று வருவம் ”

“ஐயா பொங்கல் நேரம். மழையாவும் கிடக்கு. பொங்கல் கழிச்சுப் போவமா ? ”

அவர் சரியென்று தலையாட்ட, இராசு எழும்பினார். இடுப்பைப் பிடித்தார்.

“இப்ப கொஞ்ச நாளா இருந்தா எழும்ப முடியேல்லை”

கதைத்து முடியட்டுமெனக் காத்திருந்த லட்சுமி, ஒரு சரையில் நாலு வடை சுற்றிக் கொண்டு வந்து இராசுவிடம் நீட்டினாள். பிரித்துப் பார்த்த இராசு, நல்ல நேரமம்மா உழுந்து வடை செய்தனியள். பருப்பு வடையென்டா கடிக்கக் கொடுப்புப் பல்லில்லை என்றார் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே. மாட்டுக் கொட்டடியில் தொப் தொப் என சாணி போட்ட கன்டுத்தாச்சிப்பசு தன்னில் மொய்த்த பெரிய கொசுக்களைக் கலைக்க வாலையடித்து விசுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு பறுவத்தோட கன்டு போட்டுறும், அப்ப வாறனய்யா.. .. .. என்றவாறே அவர் நடக்க, வாசல் கதவு திறந்து மருமகன் நல்லதம்பி வந்தார்.

ஆதி கேட்டான்.

“அப்பா ஆறாங்கட்டையில கண்ணிவெடியாம். நீங்க எதால வாறீங்க”

“மடத்தடியிலயிருந்து வியாளமாதா சந்தி பொறுக்க சுத்தி வளைச்சு செக்கிங் நடக்குது. வேலை விட்டு வந்தவங்களை சைக்கிளோட நிப்பாட்டி சோதிக்கிறாங்கள். நான் ஏகதேசம் சுத்தி வாறன். ”

இராசுவும் பொன்னுத்துரையாரும் பங்காளிகள் போல் ஒருவரையொருவர் முழித்துப் பார்த்துக்கொண்டார்கள், ஆறாங்கட்டைப் பக்கம் நாளைக்குப் போக விடுவார்களோ என்ற சமுசயத்துடன்.

வாகனம் ஊளையிடும் சத்தம் கேட்டு ஆதி வாசலுக்கு ஓடினான். கண்கடை தெரியாமல் தெரு வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு ஆஸ்பத்திரிப்பக்கம் ஒரு அம்புலன்ஸ் போய்க் கொண்டிருந்தது.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்