இது தாண்டா ஆஃபீஸ்!

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை செய்யவில்லை. எனவே, கால்கள் வலிக்க வலிக்க, அவள் படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் இருந்த தனது பிரிவுக்குள் பெருமூச்சுடன் நுழைந்த போது அங்கிருந்த கெடியாரம் 8.54 என்றது. ‘அப்பாடா! என்ன வெய்யில்!’ என்றவாறு அவள் பொத்தென்று தனது இருக்கையில் அமர்ந்து கழுத்தையும் முகத்தையும் துடைத்துக்கொண்ட கணத்தில் ஜெயராமன் பிரிவுக்குள் நுழைந்தான்.

வீணா புன்னகை செய்து, “குட் மார்னிங், மிஸ்டர் ஜெயராமன்!” என்றாள்.

ஜெயராமன் தானும் புன்னகை புரிந்தபடி, “குட் மார்னிங், வீணா!” என்றவாறு தனது இருக்கையில் அமர்ந்தான். பிறகு, தலையை உயர்த்தியபடி, “நீங்கதான் ஃபேனையெல்லாம் போட்டாங்களா ?” என்றான்.

“இல்லேல்லே. நான் நுழைஞ்சப்பவே எல்லாம் சுத்திட்டிருந்தது. ஆளே இல்லாத செக்ஷன்லே யாரு இப்படி எல்லா ஃபேன்ஸையும் சுத்த விட்டதுன்னு தெரியல்ல. நம்ம வீடா யிருந்தா இப்படிப் பண்ணுவோமா ? எவ்வளவு எலெக்ட்ரிசிடி வேஸ்ட்!”

“நீங்க நுழைஞ்சதைப் பாத்துக்கிட்டேதான் நானும் வந்தேன். யாருமே இன்னும் வராத செக்ஷன்லே யாரு இப்படி ஃபேனையெல்லாம் சுத்த விட்டிருப்பாங்கன்னு தெரியலியே ?”

தன் விழிகளைச் சுழற்றிய வீணா, “முதல்ல நம்ம செக்ஷன்ல இருக்கிற சார்ட்டிங் பெஞ்ச்சை எடுக்கச் சொல்லணும். வருஷத்துல ஒரு மாசத்துக்குத்தானே அந்த பெஞ்ச்சுக்கு இங்க வேலை ? வருஷம் முழுக்கவும் இங்கேயே கிடக்கிறதுனாலதான் எவனோ சோம்பேறி வந்து இங்க படுக்கிறான்!” என்றாள்.

“எவனோ என்ன ? எல்லாம் நம்ம வாட்ச்மென்ல ஒருத்தனாத்தான் இருக்கும்!”

“சரி. படுக்கிறப்போ ஃபேன் போட்டுக்கணும்னு சொகுசு கொண்டாடத் தெரியறதில்ல ? எழுந்து போறப்ப நிறுத்தணுமா இல்லியா ?”

மேசையைத் துடைத்தபடி, “எட்டரைக்கெல்லாம் வந்து எல்லா மேசைகளையும் பியூன் துடைக்கணும்னு ரூல்! செய்யறானா பாத்தீங்களா ? நாமளேதான் துடைக்க வேண்டி யிருக்கு. பாருங்க. மணி ஒம்பது! இன்னும் நம்ம ஹெட் க்ளார்க்கைக் கூடக் காணலே!” என்ற ஜெயராமனை நோக்கி நக்கலாய்ச் சிரித்த வீணா, “ நம்ம ஹெட் க்ளார்க் என்னிக்கு டயத்துக்கு வந்திருக்கார் ?” என்றாள்.

“அது சரி.”

தானும் மேசையைத் துடைத்த வீணா, “ வந்ததுக்கு அப்புறமாவது வேலை செய்யறாரா ? பே கமிஷன் ரிப்போர்ட்டைக் கையில வச்சுக்கிட்டு, கையில என்ன வரும், கால்ல என்ன வரும்னு கணக்குப் போட்டே பொழுது போக்க வேண்டியது!” என்று சிரித்தாள்.

நாற்காலியைத் துடைத்துவிட்டு அதில் உட்கார்ந்த ஜெயராமன், “பில்டிங் செக்ஷன் கணநாதன் தெரியுமா உங்களுக்கு ? வேலையே செய்ய மாட்டான். சரியான வாழைப் பழச் சோம்பேறி!” என்றான்.

“தெரியும்.”

“அவனுக்கும் இதேதான் வேலை. எப்ப பாரு, போனஸ் எவ்வளவு வரும், அர்ரியர்ஸ் எவ்வளவு வரும், சம்பள உயர்வு எவ்வளவு வரும்னு கணக்குப் போட்டமணியந்தான்.”

“நாங்கல்லாம் அவனைப் பணநாதன்னுதான் சொல்றது.”

“அதுவும் சரிதான்.”

“போன பே கமிஷன் வந்தப்ப கையில என்ன வரும், கையில என்ன வரும்’னு கேட்டுண்டே அலைஞ்சான். ‘வேலையே செய்யாத உனக்கெல்லாம்‘ அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, ‘கையில சிறங்குதான் வரும்’னேன்.”

“வேலை செய்யாதவங்களுக்கெல்லாம் கையில சொறி வரத் தொடங்கினா, இந்த ஆபீஸ் முழுக்கவும் சொறி பிடிச்சவங்களாத்தான் இருப்பாங்க!”

“அதுல கூட, தாங்களே சொறிஞ்சுக்க சோம்பல்பட்டுண்டு யாரையாவது சொறிஞ்சு விடச் சொல்லுவாங்களோ என்னமோ!”

வீணா கோப்பு ஒன்றைப் பிரித்துக்கொண்டே, “வேலையே செய்யாம எப்படி இவங்கல்லாம் காலந்தள்றாங்க! ஆச்சரியமா யிருக்கு!” என்றாள்.

“நம்ம ஜெநா இல்லியா ? அதே மாதிரிதான்,” என்று பதில் கூறிவிட்டு ஜெயராமன் தானும் ஒரு கோப்பைப் பிரித்தான்.

வீணா சிரித்து, “ஆமாமா. வர்ற பேப்பர்ஸை ரிஜிஸ்டர்ல எண்ட்ரி போட்றதோட சரி. வேற எந்த உருப்படியான வேலையும் செய்யறதில்லே,” என்றாள்.

“அதான் மத்தவங்க செஞ்சு குடுத்துடறாங்களே! ‘எனக்குப் புருஷன் சரியில்லே. நேத்து குடிச்சுட்டு வந்து செமை அடி! மனசே சரியால்லே. படிக்கிறதுல எதுவுமே மனசுல பதிய மாட்டேங்குது’ அப்படின்னு அழுதுக்கிட்டே கெஞ்சறப்ப என்ன பண்றது ?”

“புளுகுறாங்க, மிஸ்டர் ஜெயராமன்! பார்த்தா அடி வாங்குறவங்க மாதிரி தெரியல்லே. அடிக்கிறவங்க மாதிரிதான் தெரியுது.”

“அது மட்டுமா ? எப்பவுமே மேக்-அப் கலையாத மொகத்தோடதான் இருக்காங்க.”

“கேட்டா, தன்னோட துக்கம் வெளியே தெரியக் கூடாதுன்னு மேக்-அப் போட்டுக்குறாங்களாம்! சொல்றாங்க.”

“ஏதோ ஒரு சமாதானம் சொல்லி மேக்-அப் பண்ணிடுவாங்க!. . .ஸ்ஸ். . . . வர்றாங்க, வர்றாங்க. . .”

“குகுகு.. . குட் மார்னிங், ஜெநா!”

ஜெயராமனும் அவளுக்குக் காலை வணக்கம் கூறினான்..

ஜெயநாராயணி எனும் ஜெநா உட்கார்ந்துகொண்டே இருவருக்கும், “குட் மார்னிங்குங்க!”” என்றாள்.

“இன்னிக்கு மழை தான் வரப் போறது. கரெக்ட் டயத்துக்கு வந்துட்டியே!”

“ஓசி லிஃப்ட் கிடைச்சுது! அதான். அது சரி, நம்ம ஆஃபீசை எப்ப ஏ.சி. பண்ணப் போறாங்க ? வெய்யில் தாங்க முடியல்ல.”

“கொட்டேஷன் கால் ஃபார் பண்ணியாச்சு. யாரு ஆஃபீசர்சுக்கு அதிக லஞ்சம் தர்றாங்களோ, அவங்களுக்கு சான்ஸ் அடிக்கும்.”

வீணா, சிரித்தவாறு, “ஏன், ஜெநா ? ஏஸி போட்டுட்டா, நீ அடிக்கடி முகங்கழுவிப் பவுடர் போட்டுக்க எந்திரிச்சுப் போக மாட்டே, இல்லியா ?” என்றாள்.

“என்னோட சிரிப்பு, மேக்-அப் எல்லாமே பொய்டா, வீணா! நேத்துக்கூட செமை அடி. நான் போய் முகங் கழுவிண்டு வர்றேன்,” என்று கைப்பையுடன் ஜெயநாரயணி எழுந்து சென்றாள்.

ஜெயராமன், பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, “இன்னைத் தேதி இருபத்தஞ்சு. மந்த்லி ஸ்டேட்மெண்ட் சப்மிட் பண்ணணுமே! அதுக்குத்தான் அடி போடுது ஜெநா!” என்றான், மெதுவாக.

“நீங்க செஞ்சு குடுக்காதீங்க! நானும் செய்யப் பேறதில்ல. சோம்பேறி! சம்பளம் வாங்கல்லே ?”

“நாம உதவி பண்ணாட்டியும், அவங்க சீட்டுல இதே செக்ஷன்ல இதுக்கு முந்தி வேலை செஞ்ச பழைய ஆளுங்க இருக்காங்களே! அவங்க செஞ்சு குடுத்துட்றாங்களே!”

அப்போது இன்பரசு வந்தான். இருவரையும் நோக்கி, “காலை வணக்கம், நண்பர்களே!” என்றான். இருவரும் பதிலுக்குக் காலை வணக்கம் செலுத்தினார்கள்.

இன்பரசு, “இன்று வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக வந்துவிட்டேன். கல்விக்கூடங்களுக்கெல்லாம் விடுமுறையாதலால், பேருந்துகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை,” என்றான்.

“ஏய், இன்பரசு ! இப்படிச் செந்தமிழ்லயே பேசிப் பேசி உன் பல்லெல்லாம் சீக்கிரமே விழுந்துடப் போறது, பாரு.”

“நான் தமிழன். தமிழுணர்வு கொண்டவன், அப்படித்தான் பேசுவேன்.”

அப்போது தலைமை எழுத்தர் பிரிவுக்குள் நுழைந்தார். இன்பரசு எல்லாரையும் முந்திக்கொண்டு, “காலை வணக்கம், அய்யா!” என்றான்.

தலைமை எழுத்தர், “ . . .’காலை வணக்கம்’ கிறது தமிழங்களோட வழக்கமா என்ன ? தமிழ்ப் பண்பாடா எனா ? வெறுமன ‘வனக்கம்’னு மட்டுந்தானே சொல்லணும் ?” என்றார். பிறகு தமது இருக்கையில் அமர்ந்தார். முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை.

“அய்யா! பண்பாடு பற்றி நாம் பேசவில்லை. என்பாடு தமிழன் தமிழில்தான் பேசவேண்டும் என்பது மட்டுமே.”

“இத பாரு, இன்பரசு! இனிமே இது மாதிரி அகட விகடமால்லாம் பேசாதே. எனக்குப் பிடிக்கல்லே. மரியாதையாப் பேசு. நான் உன்னோட ஹெட்க்ளார்க்குங்கிறது ஞாபகம் இருக்கட்டும்!”

“புரியாத மொழியிலா பேசுகிறேன் ? ஒருமையிலா விளிக்கிறேன் ? என் பேச்சில் என்ன மரியாதைக் குறைவைக் கண்டார் ?”

“இது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆஃபீஸ், இன்பரசு! உனக்கு அவ்வளவு தமிழ் ஆர்வம்னா, தமிழ் வாத்தியாராப் போய் வேலை செய்!”

“அய்யா!”

“ . . . ‘சார்’னு கூப்பிடு.”

“சார் என்று மேலோரை அழைத்தல் நாம் வெள்ளையரின் ஆட்சியின் கீழ் இருந்த காலத்துக்குப் பொருந்தலாம். சுதந்திர இந்தியாவில் அன்று, அய்யா! நான் அலுவலகக் குறிப்புகளையும் வரைவுகளையும் தமிழில் எழுதினால் நீர் ஆட்சேபிக்கலாம்.. தமிழில் உரையாடுவதற்கு அன்று!”

ஆத்திரத்துடன் எழுந்து நின்று, “மிஸ்டர் இன்பரசு! இது என்னோட கடைசி எச்சரிக்கை. அப்புறம் நான் நம்ம செக்ஷன் ஆஃபீசர் கிட்ட கம்ப்ளெய்ண் பண்ணிடுவேன். தெரிஞ்சுதா ?” என்றார் தலைமை எழுத்தர்.

“தாராளமாய்ச் செய்து கொள்ளுங்கள், அய்யா! செந்தமிழில் ஊழியர்கள் பேசக்கூடாது என்கிற சட்டம் இல்லாத வரையில் உங்கள் புகார் செல்லுபடி யாகாது அய்யா, செல்லுபடி யாகாது!”

“இதோ, இப்பவே போறேன். திச் ஈஸ் த லிமிட்!”

“அய்யா! ‘இதுதான் என் பொறுமையின் எல்லை’ என்று தமிழில் கூறலாகாதா ?”

“ஷட் அப்!”

“வாயை மூடு!”

“என்னது!”

“ , , , ‘ஷட் அப்’புக்குத் தமிழ் கூறினேன், அய்யா!”

ஜெயராமன் அப்போது குறுக்கிட்டு,” ஹெட் க்ளார்க் சார்! நீங்க இதைப் பெரிசு படுத்தக்கூடாது. இன்பரசு செந்தமிழ்ல பேசறது ஒண்ணும் புதுசு இல்லியே, சார் ?” என்றான்.

“புதுசோ, பழசோ! இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்!” என்று எரிச்சலுடன் இரைந்து கூவிய தலைமை எழுத்தர் ஆவேசமாகப் பிரிவிலிருந்து வெளியேறினர்.

வீணா சிரிப்பை அடக்கியவண்ணம், “எப்பவும் இன்பரசு செந்தமிழ்ல பேசறதை யெல்லாம் சிரிச்சுண்டே கேட்டுண்டிருப்பாரே! இன்னைக்கு என்ன ஆச்சு அவருக்கு ?” என்றாள். அவள் குரலில் வியப்புத் தெரிந்தது.

இன்பரசு, துளியும் கவலைப் படாமல், “இன்று தமது அகத்தில் மாமியுடன் சண்டை போட்டிருப்பார். அந்த எரிச்சலின் மிச்சம் மீதிகளை அலுவல் அகத்தில் காட்டுகிறார். . . வேறொன்றுமில்லை!” என்றான்.

அப்போது அப்பிரிவில் பணி புரியும் சென்னகேசவலு வேர்க்க விறுவிறுக்க, அவசர நடையில் அங்கு வந்து தனது இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான். முகத்தைக் கைக்குட்டையால் அழுத்தித் துடைத்தபடி, “எடுத்துண்டு போயாச்சா ?” என்றான்.

“என்னப்பா கேக்கறே நீ ? செத்த வீட்டில கேக்குற கேள்வி மாதிரியில்ல கேக்குறே! எடுத்தாச்சான்னு!”

“அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரைக் கேக்கறேம்ப்பா! நீ வேற. தெரியாத மாதிரி பேசு.. டயத்துக்கு வந்துட முடியற கொழுப்பா ?”

இன்பரசு, “அமைதி! அமைதி! வருகைப் பதிவேடு இன்னும் இங்கேயேதான் தலைமை எழுத்தரின் மேசை மேல் இருக்கிறது. எடுத்துக் குறுங்கையெழுத்தைப் போடு!” என்றான்.

சென்னகேசவலு மலர்ந்த முகத்துடன் விரைந்து சென்று வருகைப் பதிவேட்டில் தனது குறுங்கையெழுத்தைப் பதித்துவிட்டு, “அப்பாடா! ஹெட்க்ளார்க்கோட குடையையும் பையையும் பாத்ததும் போயிடிச்சாக்கும்னு நினைச்சேன். அவரு எவ்வளவு லேட்டா வந்தாலும் அது இங்கேயே கிடக்குமே! ஆஃபீசருக்கு அனுப்ப மறந்து போயிட்டாரா என்ன ? தான் மட்டும் தப்பிச்சுட்டாப் போதுமே அந்தாளுக்கு ?” என்றான்.

“அவரு ஆஃபீசர் ரூமுக்குப் போயிருக்காரு,” என்றான் ஜெயராமன்.

“சரி, வாங்கய்யா. காண்டானுக்குப் போயி காப்பி குடிச்சுட்டு வரலாம்,” என்று சென்னகேசவலு கூறினான். மற்ற இருவரும் அவனுடன் செல்ல, பிரிவில் வீணா மட்டுமிருந்தாள்.

சற்றுப் பொறுத்து வந்து அமர்ந்த தலைமை எழுத்தர், “எங்கே எல்லாரும் ?” என்றார்.

“காண்டானுக்குக் காப்பி குடிக்கப் போயிருக்காங்க, சார்!” என்ற வீணா,”ஆஃபீசர் கிட்ட பேசிட்டாங்களா, சார், இன்பரசுவைப் பத்தி ?” என்று விசாரித்தாள்.

“இல்லேம்மா. அவரு இன்னைக்கு லீவாம். அவரோட பியூன் சொன்னான். ஆமா ? நம்ம பியூன் இன்னும் வரல்லையா ? இல்லே, வந்துட்டு எங்ேகேயாவது தொலைஞ்சு போயிருக்கானா ?”

கேட்டுக்கொண்டே அவர் தமது இருக்கையில் சாய்ந்த நேரத்தில், பியூன் கந்தையா வேர்க்க விறுவிறுக்க அங்கு வந்தான்.

“குட் மார்னிங், சார்! லேட்டாயிறுச்சு!”

“இல்லேனா வாழ்ந்தே! என்னிக்கு நீ டயத்துக்கு வந்திருக்கே ?”

‘நீ மட்டும் ரொம்ப ஒயுங்கு!’ என்று தனக்குள் கூறிக்கொண்டே, “எந்திரிங்க, சார். சேரைத் துடைச்சிர்றேன்,” என்றான், பணிவாக.

“நான் உக்காந்து என் வேட்டியில எல்லாத் தூசியையும் அப்பிண்டதுக்கு அப்புறம் துடைக்கிறேன்றியா ? போப்பா. போய்ச் சில்னு குடிக்கத் தண்ணி கொண்டா. ஓடு.”

கந்தையா கூஜாவுடன் சென்றதும், “நம்ம சென்னா வந்தாச்சா ? என்று தலைமை எழுத்தர் விசாரித்தார்.

“வந்தாச்சு சார். அவரும்தான் காண்டானுக்குப் போயிருக்கார்!”

“ஜெநா ?”

“அவங்களும் வந்தாச்சு. லேடாஸ் ரூமுக்குப் போயிருக்காங்க.”

“மேக்-அப்பா ?” என்று வினவி விட்டுத் தலைமை எழுத்தர் கேலியாய்ச் சிரிக்க, வீணாவின் முகம் கடுகடுவென்று ஆயிற்று.

“ஃப்ரண்டைச் சொன்னது பிடிக்கலையாக்கும்!”

“ஆம்பளைங்க மூணு பேரும் கண்டானுக்குப் போயிருக்காங்க. காப்பி குடிச்சு, அரட்டை யடிச்சு, சிகரெட்டும் குடிச்சுட்டு முக்கால் மணி நேரங்கழிச்சுத்தான் வருவாங்க. அவங்களைப் பத்தி மட்டும் கமெண்ட் பண்ண மாட்டாங்க. பதினஞ்சு நிமிஷம் எடுத்துக்குற லேடாஸை மட்டும் கிண்டல் பண்ணுவீங்க! ஏன் சார் இந்த ஓர வஞ்சனை ?”

தலைமை எழுத்தர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து, “சேச்சே! அந்த மாதிரி எடுத்துக்காதேம்மா. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். சன்ஸ் அண்ட் டாட்டர்ஸ். . . . ஆம்பளையோ, பொம்பளையோ, மொத்தத்துல யாருக்குமே தொழில் பக்திங்கிறது இல்லவே இல்லே. நோகாம நோம்பு கும்பிடப் பாக்கறா எல்லாருமே. சின்சியரிட்டின்றது ரொம்பக் கம்மியாத்தான் இருக்கு.. . “ என்றார்.

“எல்லாரும் அப்படி இல்லே, சார். ரெண்டு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, வீட்டுக்காரரையும் டயத்துக்கு ஆஃபீசுக்கு அனுப்பிட்டு நான் தினமும் டாண்ணு எட்டு அம்பதுக்கெல்லாம் வந்துட்றேன், சார்!”

“நிஜமாவா! அவ்வளவு பங்ச்சுவலாம்மா நீ ?”

“பின்னே ? என்னோட பங்க்ச்சுவாலிட்டி பத்தி மிஸ்டர் ஜெயராமன் ஒருத்தருக்கு மட்டுந்தான் தெரியும். ஏன்னா, அவரையும் என்னையும் தவிர வேற யாரு சார் நம்ம செக்ஷன்ல டயத்துக்கு வர்றாங்க ? எல்லா செக்ஷன்ச்ஸ்லேயும் எங்களை மாதிரி ரெண்டொரு பைத்தியங்கள் இருக்கு, சார்.”

தலைமை எழுத்தரின் முகத்தில் அசடு வழிந்தது : “ அப்படிச் சொல்லாதேம்மா! நம்மள மாதிரி சில பயித்தியங்கள் இருக்கிறதுனாலதான் இந்த நாடு இந்த மட்டாவது இருக்கு! என்னடா, இவன் தன்னையும் சேத்துண்டு பேசறானேன்னு பாக்கறியா ? நானும் ஒரு காலத்திலே ஆஃபீசே கோவில்னு இருந்தவந்தாம்மா. எம் பொண்டாட்டி, ‘ஆஃபீஸ் ஃபைல்தான் உங்களுக்கு வேதம்’ அப்படின்னு கிண்டல் பண்றதுண்டு. இப்ப நான் மாறிட்டேம்மா. சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்க.”

“ஏன் சார் மாறிட்டாங்க ?”

“மாறக்கூடாதுதான். மாற வெச்சுட்டா. பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு வம்புல மாட்டிண்டுட்டேம்மா. ஒரு ஃப்ராட் கேஸ் அது. என் மேல எந்தத் தப்பும் கிடையாது. பண்ணினதெல்லாம் ரெண்டு ஆஃபீசர்ஸ். கடைசியில மாட்டிண்ட தென்னமோ நான்! அதுலேர்ந்து வெறுத்துப் போயிடுத்தும்மா.”

“என்ன சார் நடந்தது ? சொல்லலாம்னா சொல்லுங்கோ.”

“சுருக்கமாச் சொல்லணும்னா, லீவ்ல போயிருந்த ஒருத்தனோட வேலையை ஒரு பொறுப்பு உணர்ச்சியால நான் இழுத்துப் போட்டுண்டு செய்யப் போக, அந்த ஃப்ராடைப் பண்றதுக்காகவே அப்படி நான் பண்ணினதாப் பேராயிடுத்து எனக்கு! ஆஃபீசர்ஸ் ரெண்டு பேரும் நோட் ஷீட்ஸையெல்லாம் கம்ப்ளீட்டா மாத்தி, ரீ-பில்ட் பண்ணிட்டா. அது பெரிய கதைம்மா. விவரமாச் சொல்லணுனா ரொம்ப நாழியாகும். சுருக்கமா இதுதான். . . .” என்ற தலைமை எழுத்தரின் கண்கள் கலங்கின.

“ஐ’ம் சாரி, சார்! யாரு சார் அந்த ஆஃபீசர்ஸ் ?”

“நமக்கு வரப் போற புது ஜி.எம். ஒருத்தர். இன்னொருத்தர் ரிடைராயாச்சு.”

“கடவுள் அவரைத் தண்டிக்காம விடமட்டார், சார்! தெய்வம் நின்னு கேக்கும்.”

“தெய்வம் நின்னு கேக்கும்தான். ஆனா, அதனால எனக்கென்ன லாபம்மா ? என் ப்ரொமோஷன் போயிடுத்து. பட்ட அவமானம் பட்டது தானே ? நான் அப்பழுக்கு இல்லாதவன்கிறதை என்னால நிரூபிக்க முடியல்லியே! ரிடைராயிட்ட ஆஃபீசருக்குப் பக்கவாதம் வந்து இன்னும் ரெண்டு வருஷம் இருந்தப்பவே வேலையை விடும்படி ஆச்சு. ஒரு பொண்ணு வாழாவெட்டியா வந்துட்டா. பிள்ளை படிக்கவே இல்லை. குடிகாரன். இப்ப வரப் போறாரே, அந்த ஜி.எம். கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான். அவனோட பொண்டாட்டி படுத்த படுக்கை. மூத்த பிள்ளை ஓடிப் போயிட்டான். ரெண்டாவது பிள்ளை தனிக்குடித்தனம் போயிட்டான். பொண்ணுக்குப் புருஷன் செத்துப் போயிட்டான். இன்னொரு பிள்ளை ட்ரக் அடிக்ட் ஆயிட்டான். ஆனா அவங்களுக்குக் கிடைச்ச இந்தத் துன்பங்களால என் துன்பம் போயிடுத்தா எனன ? எனக்கு நேர்ந்த துன்பம் நேர்ந்ததுதானே ?”

“அது சரி.”

“இன்னைக்குக் கார்த்தால என் ஒய்ஃபோட ஏதோ வாக்குவாதம். அந்த மூட்லயே வந்தேனா ? இன்பரசுவோட செந்தமிழ் என் காதுல தேனாப் பாயறதுக்குப் பதிலாச் செந்தேளாப் பாஞ்சுடுத்து! . . . அது கெடக்கு. . . நம்ம ஜெநா மன்த்லி ஸ்டேட்மெண்ட் போட்டாச்சா ? தெரியுமா ?”

“தெரியல்ல, சார். என்னோட க்வார்ட்டர்லி ஸ்டேட்மெண்ட் நேத்திக்கே ரெடி. ஒரு தரம் சரி பார்த்துட்டுக் குடுத்துட்றேன்.”

“உன்னையும் ஜெயராமனையும் மாதிரி கவர்ன்மெண்ட் செர்வண்ட்ஸ்ல ஒரு அம்பது பெர் செண்ட் இருந்தாப் போறும். நம்ம நாடு கடைத்தேறிடும்.”

வீணா வெட்கத்துடன், “தேங்க்யூ, சார்!” என்றாள்.

அப்போது, மெல்லிய குரலில் ஏதோ பாட்டை முனகியபடி, ஜெயநாராயணி பிரிவுக்குள் நுழைந்து தன்னிருக்கையில் அமர்ந்தாள்.

“குட் மார்னிங், சார்!”

“குட் மார்னிங்! குட் மார்னிங்! . . . மேக்-அப் போட்டு முடிச்சாச்சா ?”

“என்னது!”

“ஐ’ம் சாரி. மன்த்லி ஸ்டேட்மெண்ட் போட்டு முடிச்சாச்சான்னு கேக்க நினைச்சேன். வாய் தவறி அப்படி வந்துடுத்து!”

“முடிச்சுட்டேன். சரி பார்க்கிறதுக்கு ஒருத்தர் கிட்ட குடுத்திருக்கேன்.”

“இம்மானுவேல் கிட்ட தானே ? என்ன, அப்படிப் பாக்கறீங்க ? எனக்கு எல்லாம் தெரியும். மத்தவங்க போட்டுத் தர்றதை அப்படியே காப்பி பண்ணிடறேள். சொந்தமா எது ஒண்ணும் என்னிக்கு நீங்களாப் பண்ணப் போறேள் ?”

ஜெயநாராயணியின் முகம் உடனே வாடிவிட்டது: “சார்! என்னோட நிலைமையில இன்னொருத்தி இருந்தா அவளுக்குப் பைத்தியமே பிடிச்சிருகும், சார். எப்படியோ, என் வேலையைக் காலாகாலத்துல முடிச்சுட்றேனா இல்லியா அதைப் பாருங்க, சார்.”

“சரி. காப்பி பண்றதையாவது தப்பில்லாம பண்ணுங்கோ.”

அப்போது மற்றவர்களுடன் உள்ளே நுழைந்த சென்னகேசவலு, “ பள்ளிக்கூட நாள்லேர்ந்தே அவங்க காப்பி யடிக்கிறதுல எக்ஸ்பெர்ட்னு தோணுது, சார். அதெல்லாம் தப்பில்லாம காப்பி பண்ணிடுவாங்க. நீங்க கவலையே படாதீங்க!” என்றான் குசும்பாக.

ஜெயநாராயணிக்கு முகம் சிவந்துவிட்டது. “மிஸ்டர் சென்னா! உங்க வேலையைப் பாத்துண்டு போங்க!” என்றாள், ஆத்திரமாக.

“என்னோட வேலையை நாந்தான் பார்க்கறேன். பின்ன, வேற யார் கிட்டயோவா குடுத்துச் செய்யச் சொல்லி சப்மிட் பண்றேன் ?”

“அடாடாடா! நீங்க ரெண்டு பேரும் ஏன்தான் இப்படி இந்தியாவும் பாகிஸ்தானுமா இருக்கீங்களோ! மணி பத்தரை ஆயாச்சு. எல்லாரும் சளசளன்னு பேசாம, வேலைப் பாருங்க. . . அப்பா, இன்பரநு! என்னைப் போய்த் தமிழ்த் துரோகி என்பது போல் பேசி அய்யா என்று விளிக்காதே என்று நான் சொல்லச் சொல்ல அப்படியே திரும்பத் திரும்பச் சொன்’னாயே’ ? இன்று நம் அலுவலர் விடுப்பில் உள்ளார். அதனால், நீ தப்பி’னாய்’ !” என்ற தலைமை எழுத்தர் குறும்பாய்ச் சிரித்தார்.

இன்பரசு மீது பழைய சினம் அவருக்கு இல்லை என்பது எல்லாருக்கும் புரிந்தது. ஆனால், ‘னாய்’ என்பதை அவர் அழுத்தி அழுத்திச் சொன்னது யாருக்குப் புரிந்ததோ புரியவில்லையோ, இன்பரசுவுக்குப் புரிந்துவிட்டது.

அவன் உடனே, “இன்மு ‘கத்தை’க் காட்டி, இனிய தமிழில் இன்று பேசிவிட்டதால், உமது தமிழ்த் துரோ’கத்தை’ மன்னித்தோம். இதுகாறும் நீர் தமிழில் எம்முடன் உரையாடாத துக்’கத்தை’ மறந்தோம். ‘கத்தை கத்தை’ யாக நிலுவையில் என்னிடம் நிறைய தாள்கள் உள்ளன. இனி நான் வேலையில் ஆழ்ப் போகிறேன். . .” என்றான்.

தலைமை எழுத்தர், தமக்குள், ‘இவன் சரியான கில்லடிதான். ‘னாய்’ என்பதை நான் அழுத்தி அழுத்திச் சொன்னதைப் புரிந்துகொண்டு பதிலுக்கு என்னை என்னமோ ‘கத்தை, கத்தை’ என்று குறிப்பிடுகிறான். ‘கத்தை’ என்றால் என்னவென்று தெரியவில்லையே! யாரைக் கேட்பது ? . . . சரி, அப்புறம் பார்க்கலாம்,’ என்று சொல்லிக்கொண்டார்.

அப்போது ஒரு பியூன் வந்தார். அன்றாடம் தபால்களை வெவ்வேறு பிரிவுகளில் பட்டுவாடாச் செய்வது அவரது பணி.

“வாய்யா, சுந்தரேசன்! இன்னைக்கு எத்தனை லெட்டர்ஸ் ?”

“தகராறு பிடிச்ச பேப்பரு ஒண்ணு இருக்குங்கையா. அத்தை முதல்ல வாங்கிக்குங்க. மத்தப் பேப்பரை யெல்லாம் அப்பால கொண்டுட்டு வர்றேன்,” என்ற சுந்தரேசன் அந்தத் தாளை அவரிடம் நீட்டினார்.

“பேஜார் பிடிச்ச பேப்பர், சார்! பத்து செக்ஷன் சுத்தியாச்சு. சுத்திச் சுத்திக் காலு நோவுது, சார். அல்லாரும், என்னிதில்ல, என்னிதில்லன்றாங்க. சுத்துறதே வேலையாப் போச்சு, சார், ரெண்டு நாளா!”

“அப்ப, சுந்தரேசன்கிற பேரை சுத்தரேசன்னு மாத்திட்டாப் போச்சு,” என்றாள் ஜெயநாராயணி.

சென்னகேசவலுவைத் தவிர எல்லாரும் சிரித்தார்கள்.

“சார்! நம்ம செக்ஷன்ல ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் நான் ஜோக் சொன்னா சிரிக்கக் கூடாதுன்னு சங்கல்பம்!” என்றாள் ஜெயநாராயணி.

இன்பரசு, குறுக்கிட்டு, “ரொம்ப அல்பம்!” என்றான்.

தலைமை எழுத்தர் எதையும் காதில் வாங்காமல், சுந்தரேசன் கொடுத்த தாளை வாங்கி முணுமுணுவென்று படித்துவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தார். எல்லாரும் ஆவலுடன் அவரையே பார்த்தார்கள்.

“இன்னாத்துக்கு சார் சிரிக்கிறீங்க ?” என்றார் சுந்தரேசன்

தலைமை எழுத்தர், தமது சிரிப்பு ஓய்ந்ததும், வாயைத் திறந்தார்: ”கேலிக் கூத்துன்னா, கேலிக்கூத்து! கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல உள்ளவங்க எவ்வளவு அழகா வேலை பண்றாங்கங்கிறதுக்கு இதை விட நல்ல உதாரணம் இருக்கவே முடியாது!”

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் மறுபடியும் சிரிக்க, “சார், சார்! விஷயம் இன்னதுங்கிறதை சொல்லிட்டுச் சிரிங்க சார்னா ? அப்பதானே நாங்களும் கொஞ்சம் சிரிக்கலாம் ?” என்றாள் வீணா.

“நாலு மாசத்துக்கு முந்தி ரிடைர் ஆன நம்ம நாலடியார்தான் இதை நம்ம ஆஃபீசுக்கு அனுப்பியிருக்கார்.”

இன்பரசு, மகிழ்ச்சியோடு, ”என்னே அவர்தம் தமிழ்ப்பற்று! நாலடியார் என்று பெயர் வதை¢துக்கொண்டுள்ளாரே!” என்றான்.

“அட, நீ வேற. சும்மா இரய்யா. அவரு ரொம்பக் குள்ளமா யிருப்பாரு. அதுக்காக நான் வெச்சிருக்கிற நிக் நேம் அது. அவரு வேற யாருமில்லேய்யா. நம்ம குண்டுக் குமரேசந்தான் எழுதி யிருக்காரு.”

ஜெயநாரயணி, “ஓ! அவரா ? அப்படி என்ன சார் சிரிக்கச் சிரிக்க லெட்டர்ல எழுதியிருக்காரு ?” என்றாள்.

“சிரிக்கச் சிரிக்க அவரு எதுவும் எழுதல்லேம்மா, ஜெநா! அவரே சிரிப்பாச் சிரிச்சுக்கிட்டு இருக்காரு. ரிடைர் ஆனதுலேர்ந்து இன்னும் பென்ஷன் வராததால .. . அவரு என்ன கேக்கறாருங்கிறதைக் கூடச் சரியாப் புரிஞ்சுக்காம ஆளாளுக்கு, ‘இது எங்க பேப்பர் இல்லே’ ன்னு அதைப் பந்தாடியிருக்காங்களேன்னு சிரிச்சேன். பேப்பரோட மார்ஜின்ல, ‘நாட் ஃபார் திஸ் செக்ஷன்’ அப்படின்னு எத்தினி பேரு எழுதி யிருக்காங்கன்னு பாருங்க. . .”

பியூன் சுந்தரேசன் குறுக்கிட்டு, “எங்க ஹெட்க்ளார்க்கு அய்யா பென்ஷன் செக்ஷன்னு மொதல்ல சரியாத்தான் சார் எழுதினாரு. அவங்கதான் எங்களுது இல்லேன்னு பதிலுக்கு எழுதிட்டாங்க ஓரத்துல,” என்றார்.

”அதான்யா நானும் சொல்றேன். லெட்டரைச் சரியாப் படிக்காம பென்ஷன் செக்ஷன் ஆளு என்ன எழுதியிருக்கார்னு கேளுங்க எல்லாரும். தனக்கு இன்னும் பென்ஷன் வராததால, 60 வயசுல மெச்சூர் ஆக இருந்த இன்ஷ்யூரன்ஸ் பாலிசியை சரண்டர் பண்ணிப் பணம் வாங்கி அதுல குடும்பச் செலவை மேனேஜ் பண்ணினதா எழுதியிருக்காரு. ‘இன்ஷ்யூரன்ஸ்’ங்கிற வார்த்தை கண்ணுல பட்டிச்சா ? உடனே, அந்தாளு, ‘இது எங்களது இல்லே. இன்ஷ்யூரன்ஸ் செக்ஷன்ல செய்ய வேண்டிய வேலை’ன்னு ஓரத்துல குறிப்பு எழுதிட்டாங்க. அப்பால நீ இன்ஷ்யூரன்ஸ் செக்ஷனுக்குப் போயிருக்கே. அங்க என்ன பண்ணினாங்க ? ‘நான் ஒரு சின்சியர் ஸ்டாஃபா இத்தினி வருஷம் உழைச்சும் எனக்குப் பென்ஷன் வரலை’ ன்னு அவர் எழுதியிருக்கிற வாக்கியத்துல இருக்குற ‘ஸ்டாஃப்”ங்கிற வார்த்தையில பார்வை பட்டதும், ‘இது ஸ்டாஃப் செக்ஷன் பண்ண வேண்டிய வேலை’ அப்படின்னு இன்ஷ்யுரன்ஸ் செக்ஷன்லே எழுதிட்டாங்க. அப்பால நீ ஸ்டாஃப் செக்ஷனுக்குப் போயிருக்கே. அங்க இருந்த பிரகஸ்பதி என்ன செஞ்சாரு ? ‘நான் பில்டிங் செக்ஷன் ஹெட்க்ளார்க்கா ரிடைர் ஆனவன்’ அப்படின்னு இந்தாளு எழுதறாரு. ‘பில்டிங் செக்ஷன்’கிற வார்த்தை கண்ணுல பட்டிச்சா ? போச்சு! முழுக்கப் படிச்சுப் பார்க்காம, ‘ இது பில்டிங் செக்ஷன் பண்ண வேண்டிய வேலை’ அப்படின்னு அதுக்கு மார்க் பண்ணிட்டாரு ஸ்டாஃப் செக்ஷன் ஆளு!”

“அடப்பாவிகளா! இது மாதிரி வேலையைச் சரியாச் செய்யாத ஆள்கள் மேல யெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கணும், சார்!” என்றான் சென்னகேசவலு, ஜாடையாக ஜெயநாராயணியின் பக்கம் பார்த்தபடி. அவள் புரிந்துகொண்டு முகம் கடுத்தாள்.

“பில்டிங் செக்ஷன் ஆளு என்ன சார் எழுதினாரு ?” என்று ஜெயராமன் ஆவலுடன் வினவினான்.

“இதோ. . . வந்துண்டே இருக்கேன். . .’என்னோட பேங்க் அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை யெல்லாம் எடுத்துச் செலவு செஞ்சிண்டிருக்கேன்’ அப்படின்னு எழுதியிருக்காரு குமரேசன். அதுல இருக்குற ‘அக்கவுண்ட்’ ங்கிற வார்த்தையைப் பார்த்ததும் அக்கவுண்ட்ஸ் செக்ஷனுக்கு – அதாவது நம்ம செக்ஷனுக்கு – மார்க் பண்ணிட்டாங்க! ஒரு லெட்டரை முழுக்கப் படிச்சுப் பார்க்கப் பொறுமை இல்லாதவனுக் கெல்லாம் சர்க்கார் உத்தியோகம். ஆயிரக் கணக்குல சம்பளம், போனஸ், மண்ணாங்கட்டி! . . வேலை கத்துக்குறதுக்கு முந்தி ஸ்டிரைக் பண்ணக் கத்துக்குறானுக!” என்றார் தலைமை எழுத்தார், ஆத்திரமாக.

இன்பரசு, குறுக்கிட்டு, “அய்யா! நீங்கள் தேவையற்று எங்கள் தொழிற் சங்கத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள்! எங்கள் வேலை நிறுத்த அறிக்கையைக் கேலி செய்கிறீர்கள். இது தகாது. . .” என்று தொடங்க, “அட, சும்மருய்யா. வேலை நிறுத்தமாம், வேலை நிறுத்தம்! வேலையின்னு ஒண்ணு நடந்தாத்தேனேய்யா அதை நிறுத்துறதுக்கு ?” என்றார் தலைமை எழுத்தர்.

“அப்புறம், சார் ?” என்றான் ஜெயராமன்.

“இந்த வேலையில நம்ம செக்ஷனோட பங்கும் கொஞ்சம் இருக்குதான். ஆனா அது இப்ப இல்லே. பென்ஷன் செக்ஷன்ல முதல்ல டால் பண்ணி, அவரு சம்பந்தப்பட்ட ரெகார்க்ஸையெல்லாம் நமக்கு அனுப்பின பிற்பாடுதான் நம்ம வேலை தொடங்கணும். . . இத பாருய்யா, சுந்தரேசன்! நான் விவரமா ஒரு நோட் எழுதி வைக்கிறேன். ஒரு அரை மனி கழிச்சு வா. நானும் மொட்டையா, ‘ இது எங்களுக்கு இல்லை’ ன்னு எழுதினா மறுபடியும் நீ சுத்தரேசனாயி சுத்தோ சுத்துணு சுத்தணும். . . பாவம் நீ. போயிட்டு வாய்யா.”

“நல்ல கூத்து, சார்!” என்ற சுந்தரேசன் அங்கிருந்து அகன்றார்.

“அவங்களை யெல்லாம் பார்த்து இப்ப நாம சிரிக்கிற மாதிரி, நம்மளப் பார்த்து மத்தவங்க சிரிக்காதபடி நல்லா வேலை செய்யுங்க எல்லாரும்!” என்ற தலைமை எழுத்தர் அந்தத் தாளின் பின்புறத்திலேயே தமது குறிப்பை எழுத முற்பட, எல்லாரும் வேலை செய்யத் தொடங்கினர்.

.. . பிற்பகல் சாப்பாட்டு நேரத்தின் போது எல்லா ஆண்களும் வெளியே சென்றிருக்க, ஜெயநாராயணியும் வீணாவும் மட்டும் பிரிவிலேயே அமர்ந்து சாப்பிடத் தொடங்கிசார்கள்.

வீணா, தயிர் சாதத்தை விழுங்கிக்கொண்டே, “ஆமா ? உன்னை எல்லாரும் ஏன் ஜெநா, ஜெநான்னு கூப்பிட்றாங்க ? ஜெயநாராயணிங்கிற உன் பேரைச் சுருக்கி, ஒண்ணு, ஜெயான்னு கூப்பிடணும், இல்லேன்னா, நாராயணின்னு கூப்பிடணும். அதென்ன, ஜெநா ?” என்று கேட்டாள்.

“நீ இந்த செக்ஷன்ல ஜாய்ன் பண்றதுக்கு முந்தி ஒரு ஆங்கிலோ-இண்டியன் ஹெட் க்ளார்க் இருந்தாரு. தெரியுமில்லியா ?”

“ஆமா. மிஸ்டர் விக்டரைத்தானே சொல்றே ?”

“ஆமாமா. அவர் வாயிலே ஜெயநாராயணின்ற என்னோட பேரு நுழையல்லே. ஜெயான்னு கூப்பிடச் சொன்னேன். ஜாயா, ஜாயான்னு கூப்பிட்டாரு. ரெயில்வே ஸ்டேஷன்ல சாயா விக்கிற மாதிரி இருந்திச்சு. சரிதான்னு, நாராயணின்னு கூப்பிடச் சொன்னேன். அதுவும் வரல்லே. நாரா, நாரான்னு கூப்பிட்டாரு. நாராசமா யிருந்திச்சு. அப்புறம் நம்ம ஜெயராமன் தான் ரெண்டு பகுதிகளோட முதல் எழுத்தையும் சேர்த்து, ‘ஜெநா’ ன்னு கூப்பிடச் சொன்னாரு.”

“சென்னகேசவலுவுக்கும் இதே மாதிரிக் கதையா ?”

“ஆமா. முதல்ல, கேசவன்னுதான் கூப்பிடச் சொன்னாரு. கேசு, கேசுன்னு கூப்பிட்டாரு. ஒரு ஆளைப் பார்த்துக் கேசு, கேசுன்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கு ? அதான் சென்னான்னு கூப்பிடச் சொன்னாரு. அப்புறம் இன்னொரு க்ளார்க். அவரோட பேரை மிஸ்டர் விக்டர் ‘டாண்ட்யூடாப்னி’ அப்படின்னு உச்சரிப்பாரு. அது என்ன பேருங்கிறதைக் கண்டுபிடி, பார்ப்போம். நீ சரியாச் சொன்னா காப்பி வாங்கித் தருவேன்.”

“தெரியல்லே. நீயே சொல்லிடு.”

“ஸ்பெல்லிங் சொல்றேன். D-A-N-D-A-Y-U-D-A-P-A-N-I.”

“இரு, இரு. எழுதின்னா பார்க்கணும் ?” என்று வீணா கூற, ஜெயநாராயணி மறுபடியும் ஒவ்வோர் எழுத்தாக நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.

“அட, கஷ்டமே! தண்டாயுதபாணி! அதையா டாண்ட்யூடாப்னிம்பாரு ? சரியாப் போச்சு!”

சற்றுப் பொறுத்து, “ஆமா ? உனக்கும் அந்தச் சென்னாவுக்கும் ஏன் ஆகவே மாட்டேங்குது ? எப்ப பாரு சண்டை போட்றீங்களே ?” என்று வீணா விசாரித்தாள்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டாரு. பொண்டாட்டி செத்து, அந்தாளுக்கு ஒரு கொழந்தை வேற இருந்திச்சு. எனக்குப் பிடிக்கல்லே. மாட்டேன்னுட்டேன். அந்த எரிச்சல். மகா கெர்வி! நீ அப்ப இந்த செக்ஷன்லே இல்லே. செக்ஷன்லே சீனியர்மோஸ்ட் ஆனதுனால, ஹெட்க்ளார்க் லீவ் போட்றப்பல்லாம் இவருதான் அவரு சேர்ல உக்காருவாரு. வேணும்னே என்னைச் சதாய்ப்பாரு. லேட்டா வர்றதுக்குப் பத்து நிமிஷம் க்ரேஸ் டைம் கூடத் தராம எம் பேருக்கு நேரே அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்ல ரெட் மார்க் போடுவாருன்னா பாத்துக்கோயேன். ஒரு நாள் என்னால பொறுக்க முடியாம போயி, ஆஃபீசர் கிட்ட போய்க் கம்ப்ளெய்ன் பண்ணிட்டேன். கூப்பிட்டு நல்லா டோஸ் விட்டாரு – என் எதிர்லயே! அதுலேர்ந்து என்னைக் கண்டாலே அவருக்கு இன்னும் அதிகமா ஆகாது.”

அதன் பிறகு இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள். அவர்கள் கை கழுவ எழுந்த போது தலைமை எழுத்தர் பிரிவுக்குள் நுழைந்தார்.

“நாங்க ரெண்டு பேரும் காண்டானுக்குப் போயிட்டு வர்றோம், சார். கால் மணியில வந்துடுவோம்,” என்று வீணா கூற, அவர் தலை யசைத்து விடை கொடுத்தார்.

இருவரும் போனபிறகு, தலைமை எழுத்தர் தொலைபேசியை இயக்கினார். “ஹல்லோ! ட்ரான்ஸ்லேஷன் செக்ஷனா ? நான் அக்கவுண்ட்ஸ் செக்ஷன் ஹெட் க்ளார்க் பேசறேன். யாரு பேசறது ? முரளியா ? தமிழ் அகராதியைக் கொஞ்சம் கொண்டுவந்து தர முடியுமாப்பா ? ரெஃபர் பன்ணிட்டுத் திருப்பிக் குடுத்துட்றேன் சரிப்பா. இப்பவே கொண்டு வறியா ? ரொம்ப தேங்க்ஸ்ப்பா.”

இரண்டு நிமிடங்களில் முறளி தமிழ் அகராதியுடன் வந்தான். அதை அவனிடமிருந்து பெற்றுப் புரட்டிய தலைமை எழுத்தர், “கத்தை” என்னும் சொல்லுக்குப் பொருள் பார்த்தார். “கழுதை” என்று போட்டிருந்தது. அவரது முகம் சுருங்கியது.

அகராதியை மூடி அவனிடம் திருப்பிக் கொடுத்துவிடு, “ரொம்ப தேங்க்ஸ்ப்பா, முரளி!” என்றார்.

“என்ன வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தீங்க, சார் ? நானும் தெரிஞ்சுக்கலாமா ?”

“சாதாரண வார்த்தைதான். வல்லினமா இடையினமான்னு பார்த்தேன். ஹி, ஹி!”

‘ஏதேனும் கெட்ட வார்த்தையா யிருக்கும்’ என்று தனக்குள் நினைத்தபடி முரளி அங்கிருந்து கிளம்பிப் போனான்.

தமக்குள், ‘ . . . “கத்தை” ன்னா கழுதையாம்! நான் “நாயே” ன்னேன். இன்பரசு கழுதைன்னான். போகட்டும். விட்டுடலாம். . . . ஹாவ்! குட்டியா ஒரு தூக்கம் போட்றேன்’ என்று சொன்னவாறு தலைமை எழுத்தர் அன்றைய “இந்து” நாளிதழை முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்துக்கொண்டு நாற்காலியின் முதுகில் நன்றாய்ச் சாய்ந்தபடி உறங்கத் தொடங்கினார்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெருங்கூச்சல் கேட்டது. உறக்கம் கலைந்து போய் அவர் திடுக்குற்று நிமிர்ந்து உட்கார்ந்து கவனித்தார். அப்போது ஜெயநாராயணியும் வீணாவும் பிரிவுக்குள் நுழைந்தார்கள்.

“என்னம்மா, வெளியில ஒரே கூச்சல் ? என்ன நடந்தது ? ஏதானும் அடிதடியா ?”

“ஆமா, சார். லம்பர் ரூம்ல கிடந்த அறதப் பழசான கேலண்டர்ஸ் சிலதை நம்ம ஆஃபீஸ் பியூன் ஆனந்தன் திருடிட்டானாம், சார். அதுக்காக ஆஃபீஸ் சூப்பரிண்டெண்டெண்ட் அவனைக் கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டார். அதான் அவன் கத்தினான்,” என்று வீணா தெரிவித்தாள்.

ஜெயநாராயணி, “கொஞ்ச நாளுக்கு முந்தி நம்ம ஆஃபீஸ்லெர்ந்து ரெண்டு ஸ்டால் பீரோவும், ரெண்டு டைப்ரைட்டர்ஸும் காணாமப் போச்சே, அதையெல்லாம் கடத்திண்டு போனவங்க கன்னத்தில யாரு சார் அடிக்கிறது அப்படின்னு சூப்பரிண்டெண்டெண்ட் கிட்ட கேட்டுட்டேன், சார்!” என்றாள்.

தலைமை எழுத்தரின் முகம் மலர்ந்தது: “அட! அப்படியே கேட்டுட்டேளா! தைரியந்தான். விஷயம் தெரிஞ்சு கேட்டேளா, இல்லேன்னா தெரியாம கேட்டேளா ?”

“என்ன சார் சொல்றீங்க ?”

“ஸ்டால் பீரோக்களையும் டைப்ரைட்டர்ஸையும் கடத்தினதே அந்த சூப்பரிண்டெண்டெண்ட் தாம்மா!”

“அய்யய்யோ!”

“ஆமாம்மா. ஒரு லீவ் நாளன்னைக்கு வந்து கடத்திண்டு போயிட்டான். கடத்தலைக் கண்ணால பார்த்துட்ட எவனோ மொட்டைக் கடுதாாி போட்டுட்டான். வீட்டுக்குப் போய் சர்ப்ரைசாச் செக் பண்ணினா, ரெண்டு அலமாரியும் அங்க இருந்தது. அதில வொய்ட் பெய்ண்ட்ல எழுதி யிருந்த நம்ம ஆஃபீசோட பேரை பெய்ண்ட்டால அழிச்ச அடையாளமெல்லாம் நன்னாவே அவனைக் காட்டிக் குடுத்துடுத்து. ஏன்னா ஒரிஜினல் பெய்ண்ட்டும் புதுசா அவன் அடிச்ச பெய்ண்ட்டும் ஒத்துப் போகல்லே. வகையா மாட்டிண்டுட்டான்.”

“அப்புறம் ?”

“அப்புறமென்ன ? எல்லா இடங்கள்லேயும் நடக்கிற கதைதான். ஜி.எம். கால்ல விழுந்தான். அவர் மசியல்லே. அப்புறம் எவனோ எம்.பி., மினிஸ்டர்னு சிபாரிசு பிடிச்சு டிபார்ட்மெண்டல் என்க்வொய்ரி இல்லாமயே தப்பிச்சுட்டான். அவ்வளவுதான். எல்லாம் தெரிஞ்ச லட்சணந்தானே ? கோடிக் கணக்கிலே ஊழல் பண்றவனை விட்டுடுவாங்க. இது மாதிரி கிழிசல் கேலண்டரை எடுக்கிறவனைக் கிழி கிழின்னு கிழிப்பாங்க! அயோக்கிய ராஸ்கல்ஸ்!”

அப்போது பியூன் சுந்தரேசன் அங்கு வந்தார்.

“என்னப்பா ? இன்னொரு தகராறு பிடிச்ச பேப்பரா ?”

“இல்லே, சார். டில்லியிலேருந்து தந்தி வந்திருக்குது. ஏதோ பார்லிமெண்ட் கொஸ்டினாம். உங்க ஆஃபீசரு வராததால எங்க ஆஃபசரு வாங்கினாரு. உங்களாண்ட குடுக்கச் சொன்னாரு.”

“சரி. குடுத்துட்டுப் போ. அப்படியே, காலையில கொண்டு வந்தியே, நாலடியார் பென்ஷன் கேஸ், அந்தப் பேப்பருக்குப் பின்னாலேயே விவரமா ஒரு நோட் போட்டு வெச்சிருக்கேன். அதை எடுத்துட்டுப் போய்ப் பென்ஷன் செக்ஷன்ல குடு. . . இந்தா!”

சுந்தரேசன் போனதன் பிறகு, தந்தியைப் படித்த தலைமை எழுத்தர், “இது லீவ்ல இருக்கிற தண்டபாணி டால் பண்ற கேஸ்னா ?” என்று கூறிய போது, சாப்பிடப் போயிருந்த சென்னகேசவலுவும், ஜெயராமனும், இன்பரசுவும் பிரிவுகுள் நுழைந்தார்கள்.

“ஏம்ப்பா, சென்னா! தண்டபாணி தன்னோட அலமாரிச் சாவியை உங்கிட்ட குடுத்தானா, லீவ்ல போறப்போ ?”

“குடுத்திருக்காரு, சார்,” என்ற சென்னகேசவலு தன் மேசை இழுப்பறையிலிருந்து தண்டபாணியின் அலமாரிச் சாவியை எடுத்து அவரிடம் கொடுத்தான். தலைமை எழுத்தர் உடனேயே எழுந்து அலமாரியைத் திறக்க, அதிலிருந்து ‘கும்’ மென்று பன்னீர் விபூதியின் மணம் அந்தப் பிரிவு முழுவதும் பரவியது.

“அலமாரியில ஒரு தட்டு முழுக்க விபூதிப் பொட்டலங்களாக் குவிஞ்சு கிடக்கு. நூத்துக்கணக்குலே இருக்கும் போல இருக்கே!” என்றவாறு இன்னொரு தட்டை ஆராய்ந்த அவர், “அடப்பாவி! ஃபேர் காப்பீஸை (fair copies) டெஸ்பாட்ச் பண்ணாம ஒரு ஃபைலை அப்படியே போட்டு வெச்சிருக்கானே ? அட, இதென்ன ? எல்லாம் பெண்டிங் பேப்பர்ஸ். . . பெண்டிங் பேப்பர்ஸ் ஒரு கிலோன்னா, விபூதிப் பொட்டலங்களும் ஒரு கிலோ இருக்கும் போல இருக்கே! தண்டபாணி! வெறும் ‘தண்டம்ப்பா நீ’ ! உன்ன மாதிரி ஆளுங்களைச் சுட்டுத் தள்ளணும். . .” என்ற தலைமை எழுத்தர் தந்தி சம்பந்தப்பட்ட கோப்பை எடுத்துக்கொண்டு, “யாருப்பா இந்தத் தந்தியை வாங்கி டால் பண்றீங்க ?” என்றவாறு எல்லாரையும் பார்த்தார்.

யாருமே அவர் பக்கம் பார்க்காமல் மும்முரமாக வேலை செய்வது போல் தலை குனிந்து அமர்ந்திருந்தார்கள்.

“ம்! இப்ப எல்லார் கிட்டவும் அவங்கவங்க பேப்பர்ஸே எக்கச் சக்கமா இருக்குமே! இதை வாங்கிக்க மாட்டாங்களே! எனக்குத் தெரியுமே ? எல்லாம் என்னோட தலை எழுத்து. நானே டால் பண்றேன். தலைமை எழுத்தர்ங்கிற டெசிக்னேஷனைத் தலை எழுத்தர்னுதான் மாத்தணும். . . அலமாரியில ஒரு தட்டு முழுக்க விபூதிப் பொட்டலம். . . பெரிய சிவபக்தன்!”

இன்பரசு குறுக்கிட்டு, “அவர் உண்மையான சிவனடியார் தான் அய்யா! அதனால்தான் பதில்களை அனுப்பாது ‘சிவனே’ என்று இருந்து வந்துள்ளர்!” என்றான்.

“சும்மாருய்யா. . . அது சரி, லீவ்ல இருக்கிற இன்னொரு ஆளு . . . அதான் . . வீரபத்திரன். . . அவனோட அலமாரிச் சாவி யார்கிட்ட இருக்கு ?”

“அதுவும் எங்கிட்ட தான் சார் இருக்கு.”

“அதையும் இப்படிக் குடுப்பா. அவனோட அலமாரியையும் திறந்து பார்த்துட்றேன்,” என்ற அவர் அதைத் திறந்து ஆராய்ந்த பிறகு, “அடப்பாவி! இவனும் கத்தை கத்தையா வச்சுட்டுப் போயிருக்கானே! ஆக்ஷன் ட்யூ பெண்டிங் பேப்பர்ஸா, இல்லாட்டா ‘கத்தை’ க்குப் போட்ற வேஸ்ட் பேப்பர்ஸ்ா ?” என்றவாறு ஓரத்து விழிகளால் இன்பரசுவைப் பார்த்தார்.

“ . . . ‘கத்தை’ ன்னா என்ன சார் ?” என்றான் ஜெயராமன்.

“நம்ம தமிழ்ப் புலவர் இன்பரசுவைக் கேளுங்க. சொல்லுவாரு.,” என்ற தலைமை எழுத்தர் அந்தத் தாள்களுடன் தமது மேசைக்குத் திரும்பினார்.

“மை காட்! இவனும் ஆக்ஷனே எடுக்காம முக்கியமான பேப்பர்ஸை யெல்லாம் கட்டி வெச்சிருக்கான். வீர பத்திரனோல்லியோ ? அதான் எல்லாத்தையும் ‘பத்திரமா’க் கட்டி வெச்சிருக்கான்!”

அப்போது ஜெயநாராயணி திடாரென்று தன்னிருக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள்:

“அய்யோ! என் மேஜைக்கு அடியிலே எறும்பு. பிடுங்கி விட்டிடிச்சு!”

“எறும்புக்கா அப்படித் துள்ளி எழுந்தீங்க ? நான் பாம்புதான் வந்திடிச்சோன்னு பார்த்தேன்,” என்றான் சென்னகேசவலு.

“உங்க விமர்சனத்தை யாரும் இங்கே கேக்கல்லே., மிஸ்டர் சென்னா!” என்ற ஜெயநாரயணி குனிந்து தன் மேசைக்குக் கீழே பார்த்தாள்.

“மேஜைக்கு அடியிலே யெல்லாம் அந்தச் சின்னியம்மா பெருக்குறதே இல்லே போல இருக்கு! முந்தா நாளு நான் போட்ட குப்பை அப்படியே கிடக்கு. கந்தையா! . .

கந்தையா!”

பிரிவுக்கு வெளியே முக்காலியில் உட்கார்ந்துகொண்டிருந்த பியூன் கந்தையா எழுந்து வந்து, “என்னங்மை¢மா ?” என்றான்.

“நீ உடனே போய் ஸ்வீப்பர் சின்னியம்மவைக் கையோட கூட்டிக்கிட்டு வா. காண்டான் வாசல்ல உக்கந்துக்கிட்டு வம்பு பேசிட்டிருக்கும்.”

“சரிங்கம்மா.”

கொஞ்ச நேரம் கழித்துக் கூட்டிப் பெருக்கும் தொழிலாளி சின்னியம்மா வந்தாள்: “என்னங்கம்மா ? கூப்பிட்டாங்களாமே ?”

“ஆமா ?. நீ என்ன தரையைப் பெருக்கவே மாட்டியா ? குப்பைக் கூடையில நாங்க போடுற குப்பையை மட்டும் சாக்குப் பையில எடுத்துப் போட்டுக்கிட்டுப் போயிர்றே போல இருக்கே ? முந்தா நாளு போட்ட குப்பை அப்படியே கிடக்கு, பாரு. குனிஞ்சு பாரு. மேஜைக்கு அடியில ஒரே எறும்பு!.”

சின்னிய்ம்மா, குனிந்து பார்த்துவிட்டு, “ஒரே எறும்பு இல்லீங்கம்மா. சாரி சாரியாப் போகுதுங்க,” என்றாள்.

“என்ன! கிண்டலா பண்றே ? சாரி சாரியாப் போகுது, தாவணி தாவணியாப் போகுதுன்னுக்கிட்டு! என் காலைப் பிடுஞ்கிடிச்சு. . . தண்டச் சம்பளம்!”

“இத பாரும்மா. நாக்கை அடக்கிப் பேசு. நீ மேசைக்கு அடியிலே போட்டிருக்குற வேர்க்கடலைத் தோலுக்காக எறும்பு வந்திருக்குது. ஊர்க்கதை பேசிக்கிட்டு நீ போடுற வேர்க்கடலைத் தோலை யெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வாரித் தள்ளுறது என்னோட வேலை இல்லேம்மா. தெரிஞ்சுக்க!” என்றாள் சின்னியம்மா, கோபமாக.

புன்னகை செய்த சென்னகேசவலு, “சின்னியம்மா! நீ ‘ரைமா’ பேசறே! சி(ன்)னிம்மாவுக்கு வசனம் எழுதப் போகலாம் நீ!” என்றான்.

“என் பொயப்பே வெசனமாகீது. இதுல நான் இன்னாயா வசனமெல்லாம் எய்தறது ?”

“மிஸ்டர் சென்னா! என்ன இது ? நான் சீரியஸா அதுங்கூடப் பேசிட்டிருக்கிறப்ப அநாவசியமாக் குறுக்கே பேசிக்கிட்டு! . . . இத பாரு, சின்னியம்மா! நான் வேர்க்கடலைத் தோலும் போடுவேன், வேற எத்தை வேணுமின்னாலும் போடுவேன். பெருக்க வேண்டியது உன்னோட டியூட்டி. தெரிஞ்சிச்சா ? ஏடாகூடமா பதில் சொன்னா, அப்பால ரிப்போர்ட் பண்ணிடுவேன். ஆமா.”

“அட, பண்ணிக்கம்மா ரிப்போட்டு! உன்னை யாரும் சப்போட்டு பண்ண மாட்டாங்க. ஆபீஸ் டயத்துல வேர்க்கடலை துண்றதுதான் தப்பு, தெரிஞ்சுக்க!”

“லஞ்ச் டயத்துல நான் என்ன வேணா தின்னுவேன்!”

“அப்ப தோலையும் சேத்துத் துண்ணவேண்டியதுதானே ?”

அப்போது குறுக்கிட்ட வீணா, “இத பாரு, சின்னியம்மா. நீ ரொம்பப் பேசறே. தப்பு! நீ சரியாப் பெருக்கல்லைங்கிறதை ஒத்துக்கிட்டு மறுபடியும் துடப்பத்தை எடுத்துண்டு வா!” என்றாள்.

தொடர்ந்து, “தரையைப் பெருக்கிறியோ இல்லியோ, வாயைப் பெருக்கத் தெரியறது நல்லா,” என்று அவள் கண்டிக்கவும், சின்னியம்மா தலையைக் குனிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

தில்லியிலிருந்து வந்திருந்த தந்திக்கு இதற்குள் பதிலை எழுதி முடித்திருந்த தலைமை எழுத்தர்,”கந்தையா! இந்தாய்யா. இந்த டெலிகிராமைக் கீழே டெலிக்ராஃப் ஆஃபீசுக்குப் போய் உடனே அனுப்பிட்டு வா. . .” என்றார். கந்தையா அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

“சென்னா! வீரபத்திரனோட வீட்டு அட்ரெஸ் தெரியுமாப்பா ? அந்தாளை லீவைக் கட் பண்ண்ிட்டு உடனே வந்து வேலையில ஜாய்ன் பண்ணச் சொல்லணும். அதுக்குத்தான். முக்கியமான பேப்பர்ஸை யெல்லாம் கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாம கட்டி வெச்சுட்டுப் போயிருக்கான்.”

“நீங்க ஜி.எம். கையெழுத்துல லெட்டர் அனுப்பினாலும் வரமாட்டான், சார். மெடிக்கல் லீவ்ல இல்லே போயிருக்கான் ? ஏதோ பத்திரிகை வெச்சிருக்குற நாவல் போட்டியில கலந்துக்கக் கதை எழுதுறதுக்காக லீவ் போட்டிருகான், சார். வர மாட்டான்.”

“கதைகள்லே ஊருக்கு உபதேசம் நல்லாத்தான் பண்றான். ஆனா சொந்த வாழ்க்கையிலே பண்றதெல்லாம் அட்டூழியம். ஸ்டேஷனரியெல்லாம் வாங்கி வெச்ச் மறு நாள்லேர்ந்து ஆசாமி லீவு. ஆனா அவனோட அலமாரியில ஒரு வெள்ளைத் தாளைக் கூடக் காணல்லே!”

“அந்தாளு ஆஃபீஸ் பேப்பர்லதான் சார் கதை எழுதறாரு. தெரியாதா உங்களூக்கு ?”

“என்ன அய்யா அப்படியே அதிர்ந்து போய் விட்டார்கள் ? இந்த நாடு முழுவதும் பயிர் மேயும் வேலிகளே நிறைந்துள்ளன. கீழ்மட்ட ஏவலாள் முதல் மேல் மட்டக் காவலாள் வரை படுமட்ட ஊழல்தான். என்னமோ புதுசாக அதிர்ந்து போய்ப் பார்க்கிறீர்களே ?”

அப்போது கந்தையா தந்தியின் அலுவலக நகலைக் கொண்டு வந்து தலைமை எழுத்தரிடம் கொடுத்தான். ஜெயநாராயணி கைப்பையுடன் எழுந்து சென்றாள்.

“ஜெயா மேக்-அப் போட்டுக்கக் கிளம்பிப் போயாச்சு. அப்ப சரியா மணி மூணரைன்னு அர்த்தம். யாரும் கெடியாரம் பார்க்கத் தேவை இல்லே. வாங்க. காண்டானுக்குப் போய்க் காப்பி குடிச்சுட்டு வரலாம்,” என்று சென்னகேசவலு கூற, எல்லாரும் எழுந்தார்கள்.

அவர்கள் மறைந்ததும், “நாலேகாலுக்கு முன்னாடி திரும்ப மாட்டாங்க. அஞ்சரை வரைக்கும் ஆஃபீஸ்னு பேரு. ஆனா அஞ்சு மணிக்கே மொத்த ஆஃபீசும் காலியாயிட்றது. ம்! .. . நீங்கல்லாம் அஞ்சுக்கே போயிடலாம்தான். நான் – ஹெட்க்ளார்க் – அப்படிப் போயிட முடியுமா ?” என்றார் தலைமை எழுத்தர்.

கந்தையா, “சார்! சில செக்ஷன்லே எட்கிளார்ர்க்குங்க டெலிபோன் வந்தாப் பாத்துக்கன்னு சொல்லிட்டுப் பியூனைக் காவலுக்கு வெச்சுட்டுப் போயிர்றாங்க, சார். யாராச்சும் அபீசருங்க போன் பண்ணிக் கூப்பிட்டா, ‘இப்பதான் சார் போனாரு’ அப்படின்னு சொல்லச் சொல்லிட்டுப் போறாங்க. ஆனா. . . ஹிஹி! பியூனுக்குக் காப்பி வாங்கிக் குடுத்துடுவாங்க. . .” என்று இளித்தான்.

“யாருக்கும் பொறுப்பே இல்லேம்மா. குடுத்து வெச்ச கடனைத் திருப்பி வாங்கிக்கிறதுக்கு வர்றவங்க மாதிரிதான் ஆஃபீசுக்கு வந்து சம்பளம் வாங்கிட்டுப் போறாங்க முக்கால்வாசிப் பேரு. . . “

சற்றுப் பொறுத்து ஜெயநாராயணி பவுடர் மணம் கமழ வந்தாள். அதன் பிறகு அவளும் வீணாவும் காண்டானுக்குக் காப்பி குடிக்கப் புறப்பட்டுப் போனார்கள்.

தலைமை எழுத்தர், “கந்தையா! இங்க வா. நீ ஒரு காப்பி குடிச்சுட்டு, அப்படியே எனக்கும் ஒரு காப்பி வாங்கிட்டு வா,” என்றபடி கந்தையாவிடம் காசைக் கொடுக்க, அவன் கிளம்பினான்.

அவன் போன பிறகு, தனிமையில், ‘ம்! . . . என்னமோ காப்பியும் டாயும் குடிக்கிறதுக்காகவே எல்லாரும் ஆஃபீசுக்கு வர்ற ,மாதிரி இருக்கு. நானும் கெட்டுத்தான் போயிட்டேன். . அப்பனே! முருகா!’ என்று கொட்டாவி விட்டபடியே தலைமை எழுத்தர் தமது நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

*********

jothigirija@hotmail.com – “மகரந்தம்” மாத இதழ் – மார்ச், 2000

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா