அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு

This entry is part of 39 in the series 20031016_Issue

இரா முருகன்


சாமிநாதனைக் கூட்டமாகப் போய் எரித்து விட்டுத் திரும்பி வந்தார்கள்.

இனிமேல் எரிப்பதற்கும் ஒன்றுமில்லை அவன் தேகத்தில். திரும்பி வரவும் இடம் எதுவும் இல்லை எரிக்கப் போனவர்களுக்கு.

வேதபாடசாலையை நிர்வகிக்கும் கனபாடிகள் அரண்மனைக்குப் போய் முறையிட்டு, ராஜா சத்திரத்துக்கு வேத பாடசாலையைத் தற்காலிகமாக இடம் மாற்றினார். முந்திய தலைமுறை ஜமீந்தார்கள் காலத்தில் ராமேசுவரம் போகிற யாத்ரீகர்கள் இடைவழியில் வந்து தங்கிப் போகிற சத்திரமாக இருந்தது அது. அரசூரைத் தொடத் தேவையில்லாமல் முள்ளுக்காட்டை வெட்டிச் சீர்திருத்தித் துரைத்தனத்தார் சாலை போட்ட படியால், சத்திரத்தில் யாத்ரீகர் வரவு குறைந்து போயிருந்த காலம். மானியம் கொடுப்பதிலும் துரைகள் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதால், வந்த தடியன் போன தடியனுக்கு எல்லாம் வடித்துக் கொட்டிக் காசைக் கரியாக்காமல் ராஜா அதை அடைத்துப் பூட்டி வைத்திருந்தார்.

சகல ஜாதியாரும் ஸ்வாமியைப் பங்குனி உத்திரப் பத்து நாள் மண்டகப்படியில் தூக்கிச் சுமந்த தீட்டுப் போகக் கடைசி நாள் சைத்யோபசார மண்டகப்படியாகப் பிராமணர்கள் தீவட்டி பிடித்து, பல்லக்குச் சுமந்து, வேத கோஷம் முழங்க சுவாமி புறப்பாடு நடத்தும்போது மாத்திரம் அதைத் திறந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அவர்.

சுத்தப்படுத்தறதெல்லாம் சரிதான். பல்லக்கு முன்னாடி நாகசுரம் வாசிக்க மட்டும் என்னாத்துக்கு நடேசப் பண்டிதன் ? அதையும் அவனுகளே செய்ய வேண்டியதுதானே ?

ராஜா கூட இருக்கப்பட்டவர்களிடம் வேடிக்கை விநோதமாகச் சொன்னாலும் கடைசி நாள் மண்டகப்படிக்கு கனபாடிகளிடம் ராஜா சத்திரத்துச் சாவி வந்து சேர்ந்து விடும். இப்போது கனபாடிகளே அரண்மனைக்கு ஒரு நடை விரசாக நடந்து சாவியோடு வந்து சேர்ந்து தகனத்துக்குப் போனவர்கள் திரும்புவதற்குள் பாடசாலை வித்தியார்த்திகளைச் சத்திரத்துக்கு மாற்றி இருந்தார்.

ராமலட்சுமிப் பாட்டி எரியாத விறகோடும், சத்திரத்துக் கோட்டை அடுப்போடும் போராடி பாதியிருட்டில் சமைக்கத் தெப்பக்குளக் கரையில் அவசரமாகச் சந்தியாவந்தனம் முடித்து வந்த வித்தியார்த்திகள் ஒத்தாசை செய்தார்கள்.

கனபாடிகள் சொன்னபடிக்குக் கொஞ்சம் அதிகமாகவே சமைத்திருந்தாள் ராமலட்சுமிப் பாட்டி. வயோதிகத்தால் தளர்ந்த உடம்பு வழங்காவிட்டாலும், சுப்பிரமணிய ஐயர் குடும்பத் துக்கம் தணிய ஏதோ ஒரு வகையில் தன்னாலான ஒத்தாசை என்று அவள் சிரமம் பார்க்காமல் சமைத்து முடித்தபோது மசானத்துக்குப் போனவர்கள் குளித்துவிட்டு வருவதாக கனபாடிகள் வந்து சொன்னார்.

நாலைந்து பாடசாலை வித்தியார்த்திகள் சாதமும், கொட்டு ரசமும், புடலைக் கறியுமாகப் பெரிய வெங்கலப் பாத்திரங்களில் வாழை இலை வைத்து மூடி எடுத்துக் கொண்டு அவர்கள் காலி செய்திருந்த ஜாகைக்குப் போனார்கள்.

சாப்பாடும் வேணாம். மண்ணும் வேணாம். உசிரு இப்படியே போகப்படாதா ? என்று அரற்றியபடிக்குச் சுப்பிரமணிய ஐயர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

சங்கரனுக்கு நல்ல பசி. போனவன் என்னமோ போயாச்சு. நாம பட்டினி கிடந்தா வந்துடுவானா என்ன அந்தக் கிறுக்கன் ?

அவன் சோறும் கறியும் ரசமும் மோருமாகப் பகாசுரன் போல் சாப்பிட்டான். இந்த க்ஷணத்தில் சாப்பிடுவது தவிர வேறு காரியம் லோகத்தில் எதுவும் இல்லை. புகையிலைக் கடை, பகவதிக் குட்டி, மூக்குத் தூள் விற்கிறது, அவன் கல்யாணம், எரிந்து போன வீடு எல்லாமே எல்லாருமே காத்திருக்கட்டும்.

அவன் தரையில் ரசம் ஒழுக, வேஷ்டியில் சோற்றுப் பருக்கை விழுந்து சிதறச் சாப்பிட்டு முடித்தபோது சுப்பிரமணிய அய்யர் பாத்திரம் மூடிய இலையைத் தரையில் பரத்தி வெறுங்கையால் உள்ளே இருந்து அன்னத்தை அள்ளி எடுத்துப் பரத்திக் கொண்டு அப்படியே சாப்பிட்டார்.

அப்பா, மோர் குத்திக்குங்கோ.

சங்கரன் கனிவோடு சொன்னபடி, புளித்த மோரைச் சாதத்தின் மேல் கவிழ்த்தான்.அது சிராங்காய் அளவு இலையில் விழுவதற்குள் போதும் என்று கையை மறித்து நிறுத்திவிட்டார் சுப்பிரமணிய அய்யர்.

அவர் மனதில் பிணந்தூக்கிப் பிராமணன் பலமாகக் கவிந்து கொண்டிருந்தான். சாப்பிட்டு விட்டுக் கையைத் தலைக்கு அணையாக வாசல் திண்ணையில் படுத்தால் நாளைக்கு எவனாவது எழுப்பி பொணம் தூக்க வாடா பிரம்மஹத்தி என்று கூட்டிப் போவான். அதெல்லாம் கருகிச் சாகாதவர்களின் பிணமாக இருக்கும். உயிர் போகும்போது முகத்தில் சின்னக் கீற்றாகவாவது கையெழுத்துப் போட்டுப் போயிருக்கும்.

தாணுப்பிள்ளையும் கூட வந்த மதுரைக்காரர்களும் இடுகாட்டில் இருந்து திரும்பித் தெப்பக்குளத்தில் குளித்ததுமே வண்டி கட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.

கல்யாணி அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படியும், காலையில் அஸ்தி சேகரிப்பு ஆன பிறகு தான் மதுரை வந்து அவளைக் கூட்டிப் போவதாகவும் சங்கரன் சொல்லி அனுப்பினான்.

அம்மாவைப் பத்திக் கவலையொண்ணும் வேணாம். பிராமண போஜனமா அவுஹளுக்கு ஏற்பாடு பண்ணி உடம்பொறந்தவுஹ மாதிரி நம்ம வீட்டுப் பொம்பளைங்க கவனிச்சுக்கும். நீங்க பையப் பதறாம வந்து சேருங்க.

தாணுப்பிள்ளை சம்பிரதாயத்தை அனுசரித்துச் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிப் போனார்.

மீந்த சாதத்தையும் மற்றதையும் பாடசாலை வித்தியார்த்திகள் திருப்பி எடுத்துப்போன அப்புறம் சங்கரன் சாப்பிட்ட இடத்தை எச்சில் இட்டு மெழுகினான். கொல்லையில் மூத்திர நாற்றமும், கிணற்றுப் பக்கம் கொடியில் கோவணத் துணியும், துவைக்கிற கல்லின் கீழ் எருக்கஞ் செடியும், மாடப்பிறையில் வீபுதிச் சம்படமும் சமையல் கட்டில் பாதி உலர்ந்த பூசணிக்காய்ப் பத்தையுமாக வேத பாடசாலை திரும்பவும் கிரகஸ்தர்கள் வசிக்கிற வீடாக மாறப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தது.

அவன் வாசலுக்குப் போகும்போது கூடத்திலேயே எச்சில் இட்ட இடத்துக்கு மேல் ஈரத்தில் கையை நீட்டி வெறுந்தரையில் சுப்பிரமணிய ஐயர் நித்திரை போயிருந்தார்.

புழுக்கமான ராத்திரி. அவன் திண்ணையில் வந்து உட்கார்ந்தபோது ஊர் அடங்கி இருந்தது. எழுந்து வெளிவாசலுக்குப் போனான்.

பேச வேணும். யார் கூடவாவது. ஐயணை வந்தாலும் சரிதான். கொட்டகுடித் தாசியாக, மாட்டைக் குப்புறத்திப் போட்டு லாடம் அடிக்கிறவனாக, மாடியிலிருந்து பார்த்தால் குளித்துக் கொண்டிருக்கிற ராணியாக யாராக இருந்தாலும் சரிதான்.

வயதாகிக் கொண்டிருக்கும் அந்த சுந்தரியை ஏன் இத்தனை நாள் மறந்து போனோம் என்று அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பகவதிக் குட்டியின் வசீகரம் கொட்டகுடித் தாசியை, முலை தொங்க ஆரம்பித்த ராணியை எல்லாம் அடித்துப் போட்டது. தொங்கியே இருக்கட்டும், அவள் அடுத்தவன் பெண்டாட்டி இல்லையோடா கெட்ட பயலே என்று லாடம் அடிக்கிறவன் மாட்டுச் சாணத்தை அள்ளி சங்கரன் முகத்தில் அப்பியபடி சொன்னான். சாமிநாதனின் விந்துத் துளிகள் சங்கரனின் உதட்டில் பட்டன.

தூற ஆரம்பித்திருந்தது.

இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கும் புழுக்கம். இப்படியே நடந்து போய் வீட்டைப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று யோசித்தான் சங்கரன்.

அங்கே என்ன இருக்கிறது ? எரிந்து போன சுவரும், பாதிக்கு மேலே தகர்ந்து விழுந்த மேற்கூரையும். கூடத்தில் அந்த ஊஞ்சல் என்ன ஆனது ? ஆளோடியில் பாதரட்சை விடும் இடத்துக்கு நேர் மேலே சளைக்காமல் வலை பின்னிக் கொண்டிருக்கும் அழுக்குச் சிவப்புச் சிலந்திக்கு என்ன நேர்ந்தது ? கூடத்துச் சுவரில் வரலட்சுமி நோன்புக்கு வரைந்து வைத்த லட்சுமி முகத்துக்கு ? மாடியில் அந்தக் கைப்பிடிச் சுவருக்கு ?

தூறல் வலுத்தது. அவன் மெல்ல நடந்தான். நாற்சந்திக்கு வந்தபோது அவன் கால்கள் தாமாகவே அவனைக் கடைத் தெருவுக்கு இழுத்துப் போகப் பார்த்தன.

புடுங்கி வியாபாரம். கிடக்கட்டும் இன்னும் இரண்டு நாள். கடை அடைத்தே கிடக்கட்டும்.

அவன் அரண்மனைப் பக்கம் திரும்பினான். இருட்டில் அமிழ்ந்து கிடந்த அரண்மனையில் ஏதோ ஒரு சாளரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

அந்த ராணி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாள். வயிறு பருத்த வயோதிக ராஜா கேட்டுக் கொண்டபடி விளக்கைப் போட்டுக் கொண்டே அவனுக்குச் சுகம் கொடுக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பாள். சிரமத்துக்கு இடையே போகம் முடித்து, நாளைக்குக் குளிக்க ஸ்நானப் பொடி, தைலம், சீயக்காய் எல்லாம் சேவகர்கள் எடுத்து வைத்திருப்பார்களா என்று மேற்பார்வை செய்து கொண்டிருப்பாள்.

அவள் நாளைக்கு அரண்மனைக் குளத்தில் குளிக்கும்போது சங்கரன் கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறி எட்டிப் பார்க்க மாட்டான். யாருடைய பார்வையும் படாமல் அவள் சமாதானமாகக் குளித்துச் சிதிலமான குளப்படி ஏறிப் போகட்டும்.

சங்கரன் வீட்டு முன்னால் வந்து நின்றான். மழையின் தாரைகள் வலுத்து அவன் முகத்தில் அறைந்தன. எரிந்து கருத்த பாதிச் சுவர்கள் மேல் படிந்த மழை மின்னலில் அந்தக் கருமையை இன்னும் அழுத்தப் பதித்துக் காட்டியது.

என்னை நிர்க்கதியா விட்டுட்டுப் போய்ட்டேளேடா எல்லாரும் என்று அந்த வீடு இடிக்கு நடுவே குரல் எடுத்து அழுதபோது சங்கரனும் உடைந்து போனான்.

மந்திரத்தால் முடுக்கப்பட்ட பொம்மை போல் அவன் வீட்டுக்குள் நுழைந்தான். வாசல் கதவும் நிலையும் இல்லாமல் வயோதிகத் தாய் நோய் முற்றித் துணி நழுவி விழுந்து புத்ரன் பார்க்க நக்னமாகக் கிடந்தது போல் அந்த வீடு கிடந்தது.

சரி பண்ணுவேன். உடனே. இன்னும் ரெண்டு மாசத்துலே. பங்குனி உத்திரத்துக்குத் தேரோட்டம் வர்றதுக்குள்ளே. வடம் பிடிச்சு இழுக்கறவா வாசல்லே நிக்கறபோது இங்கே திரும்ப மரப் பலகை போட்டு நீர்மோரும் பானகமும் வினியோகம் செய்வேன். இங்கே இங்கேதான் பாதரட்சையை விட்டுட்டு உள்ளே போவேன். அந்தச் சிலந்தி நெருப்பிலே சுருண்டு எரிஞ்சு போனாப் போகட்டும். இன்னொண்ணு அங்கே சித்த மேலே வலை பின்னும். மாடியிலே சாமா பழுக்காத்தட்டைப் போடுவான்.

சாமா. சாமா இனிமே வரமாட்டான். அந்த சங்கீதம் எல்லாம் இனிமே இங்கேயோ வேறே எங்கேயோ உனக்குக் கிடையாது.

சங்கரன் அப்படி இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டான். இன்னொரு மின்னலில் மாடிப் படிக்கட்டுத் தெரிந்தது. அது எரிந்திருக்கவில்லை.

அவன் இருட்டில் தட்டுத் தடுமாறிப் படியேறும்போது வெளவால் வாடையும், வியர்வை வாடையுமாகச் சூழ்ந்து வந்தது. இது பெண்ணின் வியர்வை வாடை. சம்போகத்தில் வியர்த்து விறுவிறுத்து, உச்சபட்ச சந்தோஷம் அடைந்து, கொடுத்து, அக்குளிலும், மார்க்குவட்டிலும், நெற்றியிலும் வியர்வை ஆறாகப் பெருகக் கொண்டவனைத் தழுவிக் கிடக்கிறவள். மாமிசம் சாப்பிட்ட பெண். வெளவால் மாமிசம் சாப்பிட்டவள். மனுஷர்கள் வெளவாலைத் தின்னுவார்களோ ?

அந்த மாடிப்படி அந்தரத்தில் முடியாமல் நின்றது. மின்னலில் ஆகாசம் மேலே விரிந்து கிடந்ததைக் கொஞ்சம் போல் காட்டி இன்னும் இருக்கு நிறைய என்றது. மழை சுருதி பிசகாமல் பெய்து கொண்டிருந்தது.

சங்கரன் சொட்டச் சொட்ட நனைந்தபடி இறங்கும்போது கூடத்தில் ஈரமான ஜமுக்காளத்தில் உட்கார்ந்தபடி சலமேலரா பாடிக் கொண்டிருந்த பெண் நாணத்தோடு எழுந்து நின்றாள். பகவதிக் குட்டியா ? இல்லை இது வேறே யாரோ.

இப்படிப் பக்கத்துலே வந்து உட்காருடா சங்கரா.

ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்த சாமிநாதன் சொன்னான். அவன் மேல் ஒரு துளி ஜலம் இல்லாது சுக்குப் போல் உலர்ந்து இருந்தான்.

நன்னாப் பாடினேனா ?

அந்தப் பெண் கேட்டபடியே ஊஞ்சல் அருகே வந்தாள். பழைய கிணற்றுப் பாசி வாடை அவள் உடுப்பில் இருந்து சங்கரனின் மூக்கில் குத்தியது.

உக்காருடா சங்கரா. அவ உன் மன்னி, தெரியுமோ ?

சாமிநாதன் ஊஞ்சலை விந்தி விந்தி இன்னும் வேகம் கூட்டியபடி ஆட்டிக் கொண்டு சொன்னான்.

இப்படி ஆட்டினா என் கொழுந்தனார் எப்படி உக்காருவார் ?

அந்தப் பெண் கலகலவென்று சிரித்தாள்.

உன் மன்னி அழகா இல்லே நீ பாத்துட்டு வந்த பகவதிக்குட்டி அழகா ?

சாமிநாதன் அந்தப் பெண்ணை சங்கரன் பார்க்க இழுத்து அணைத்து முத்தம் இட்டு விட்டுக் கேட்டான்.

கொழுந்தனாருக்கு என்னமோ குளிக்கப் போற ராணிதான் அழகு. அவ வீட்டையே கொளுத்திப் போட்டாலும்.

அந்தப் பெண் உதட்டைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

தப்புடா. மகா தப்பு. விவாகம் ஆன ஸ்திரியை ஒளிஞ்சு நின்னு அர்த்த நக்னையாப் பார்க்கறது தப்புன்னு எதோ கிரந்தத்திலே எவனோ மயிராண்டி எழுதி வச்சுருக்காண்டா.

சாமிநாதன் முகத்தை வேண்டுமென்றே கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னான்.

அப்ப, தெவசச் சோத்துக்குப் பிரேத ரூபமா இறங்கி வந்தவளைப் படுக்க வைக்கறது நியாயமா ?

அவள் சாமிநாதனின் அரையில் கையால் வருட, சங்கரன் சுவரைப் பார்க்கத் திரும்பிக் கொண்டான்.

பாருடா சங்கரா, இவளுக்கு ஊஞ்சல்லேயே அனுபவிக்கணுமாம். அதுவும் ஆடிண்டே. ஊஞ்சல் அதுக்கா இருக்கு ? லண்டி மிண்டை, ஊஞ்சல அத்தனை வேகமா ஆட்டினா கூடச் சுவத்திலே இடிக்கறது பாருடி. வரலட்சுமி நோம்புக்கு வரஞ்சு வச்ச அம்மன் பார்க்கிறா.

பாக்கட்டுமே. கொழுந்தனாரும் தான்.

சங்கரன் வெளியே ஓடினான். பின்னால் ஊஞ்சல் சத்தம் மழை இரைச்சலை மீறிக் கேட்டுக் கொண்டே இருந்தது.

(தொடரும்)

Series Navigation