அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு

This entry is part of 48 in the series 20031010_Issue

இரா முருகன்


27

படுக்க வைத்த படிக்கு ஒரு கரிக்கட்டை. பின்னால் ரெண்டு கெட்டாக, மூளியாக நின்றபடிக்கு இன்னொன்று.

ஒன்று சுவாசித்துக் கொண்டு இருந்தது இரண்டு நாள் முன்பு வரை. மேன்மையான ஜீவிதத்தில் உடலெல்லாம் தேஜஸாக ஒளிரக் கட்டுக்குடுமியும் பத்தாறு வேஷ்டியுமாகக் கம்பீரமாக வலம் வந்தது. குரல் பிசிறிடாமல், பெளருஷம் கனக்க, பிரம்மத்தைத் தேடி நாலு திசையும் சுழன்று அடர்த்தியாகக் காற்றில் கலந்து நிற்க வேதம் சொன்னது.

எல்லாம் சொப்பனமாக, இடுப்பு வேஷ்டி நிற்காது, விரைத்த குறியை வலது கரத்தால் பற்றி மைதுனம் செய்து கொண்டு உலகத்து இழவை எல்லாம் சங்கீதமாகக் காதில் கேட்டு ஆனந்தித்தபடி, காரை பூசிய தரையிலும் சுவரிலும் விந்து சிதறச் சிரித்தது. அந்தக் கையும் குறியும் விந்தும் ரத்தமும் சதையும் எல்லாமே கரியாக அழுக்குத் துணிக்குள் பொதிந்து கிடக்கிறது.

கிடத்திய கட்டைக்குப் பின்னால் நீட்டி நிமிர்ந்து மொட்டையாகக் கூரையில்லாமல் நிற்கிறதோ அந்த வேத கோஷத்தை உள்ளேயே பொத்திப் பொத்தி வைக்க முயன்று சந்தோஷமாகத் தோற்ற கதவுகளும், விந்துத் துளிகளை மேலே சுமந்து, உடம்பின், புத்தியின், மனதின் கூறழிந்த நக்னத்தை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொண்டிருந்துவிட்டுச் சாம்பலான சுவர்களும்.

சுப்பிரமணிய ஐயர் மதுரையை நெருங்கியபோதே சேதி வந்து சேர்ந்து விட்டது. அங்கே தெற்காவணி மூலவீதியில் அவருடைய காரியஸ்தனாக, நானாதேசமும் புகையிலைச் சிப்பம் கொண்டு போக இருந்த ஊழியக்காரர் தாணுப்பிள்ளை ஊர் எல்லையிலேயே ஒரு நாள் முழுக்கக் குரிச்சி போட்டு உட்கார்ந்து இவருக்காகக் காத்திருந்தார். பின்னால் கொழும்புக் குடையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறவன் ஐயரைக் கண்டதும் குடையை விலக்கிக் குனிந்து சொல்ல, பரபரப்பாக எழுந்து நின்றார்.

பிள்ளைவாள், என்னத்துக்கோசரம் இந்தப் பொட்டல்காட்டுலே படைபடைக்கற வெய்யில்லே குடையும் பாதரட்சையும் சேவகனுமா உக்காந்திருக்கீர் ? நான் என்ன புதுசாவா மதுரைக்கு வரேன் ? வழி தெரியாதா எனக்கு ?

ஐயருக்கு உள்ளூரச் சந்தோஷம் இப்படி தனக்காக மரியாதை நிமித்தம் வந்து பழியாகக் காத்துக் கிடக்கிற உத்தியோகஸ்தன் இருப்பது பற்றி. மூக்குத் தூளும் கூடி வியாபாரம் அபிவிருத்தி ஆகும் பட்சத்தில் அந்தப் பொடித்த வஸ்து விற்க இந்தப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யவும் தாணுப் பிள்ளையே பிரதானமாக இருக்கட்டும்.

ஐயர் தன் அங்கீகாரம் முகத்தில் தெளிவாக எழுதியிருக்கச் சங்கரனைப் பார்க்க, அவன் முகத்தில் குழப்பம். பிள்ளையான் என்னத்துக்காக வழிமேல் விழி வைத்துத் தாசி வீட்டுத் திண்ணை மாமன் போல் குந்தியிருக்கிறான் ? வியாபாரத்தில் வந்த பணத்தை லேவாதேவிக்குக் கொடுத்து வைத்திருந்த கருப்பஞ்செட்டி அகாலமாக மரித்துப் போனானா ? அவனிடம் வட்டிக்கு வாங்கிப் போன கும்பினித் துரை கால் காசு பெறுமானமில்லாத துரைத்தன பாஷை அச்சடித்த பத்திரத்தை நீட்டிவிட்டுக் கப்பலேறிப் போய்விட்டானா ?

மாட்டு வண்டியின் ஆசுவாசமான அசைவிலும் நகரும் போது மெல்ல மேலே வந்து மோதிப்போன காற்றிலும் நாலு நாளாக அரசூரிலிருந்து அம்பலப்புழைக்கு அலைந்த களைப்பிலும் போதம் கெட்டு, தூரம் நிற்கப் போகிற வயதானபடியால் பலகீனப்பட்ட உடம்பில் அதீத ரத்தப் போக்கும் தளர்ச்சியுமாக வண்டிக்குள்ளே தலைக்குசரக் கட்டையை வைத்துக் கொண்டு ஒண்டியபடி படுத்திருந்த கல்யாணி அம்மாள் விழித்துக் கொண்டாள். ஐயரையும், சங்கரனையும் ஈன ஸ்வரத்தில் திரும்பத் திரும்ப அழைத்துப் பதில் வராமல் போக, எக்கி எழுந்து பார்த்தபோது வண்டிக் காரன் வேலி காத்தான் புதர் ஓரம் மூத்திரம் போகக் குத்த வைத்திருந்தது தெரிந்தது.

ராத்திரி முழுக்க உடம்பு உபாதையும் அசதியுமாகப் புரண்டு கிடந்து விடிகிற போது கொஞ்சம் கண்ணயர்ந்து எழுந்து உட்கார்ந்தால் இதைப் பார்த்துக் கொண்டா பொழுது விடியணும் ? விடிகிறதா ? பளீர் என்று முகத்தில் அறையும் காலை வெய்யில்.

அவள் விழுந்து விடாமல் மெல்ல வண்டியின் குறுக்குப் பட்டையை இறுகப் பற்றிக் கொண்டு மரப்படியில் கிட்டத்தட்டப் புடவையைத் தழைத்துக் கொண்டு உட்கார்ந்து அங்கே இருந்து தரையில் கால் வைப்பதற்குள் நாலு யுகம் கழிந்தது போல் இருந்தது.

அவளுக்கும் மூத்திரம் போக வேண்டும். ஆனால் ஆண்பிள்ளை போல் கண்ட இடத்தில் கால் பரப்பி அதற்காக உட்கார முடியாது. இன்னும் எத்தனை நேரமோ, பல்லை அழுத்தக் கடித்துக் கொண்டு அவஸ்தையைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

வயிறும்,காலும் நீர் பிரியாததால் வீங்கி மினுமினுக்க, அவள் தட்டுத் தடுமாறித் தரையில் நடந்தபோது தாணுப் பிள்ளை நமஸ்காரம் சொன்னது மங்கலாகக் காதில் கேட்டது. இந்த மனுஷ்யனுடைய வீடு பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் அங்கே போய் கிரஹத்து ஸ்திரிகளை அவசரமாகக் குசலம் விசாரித்து விட்டு கொல்லைப் பக்கம் போய்விட வேண்டும்.

தாணுப் பிள்ளை முன்னால் நின்ற மூன்று பேர் முகத்தையும் ஒரு வினாடி பார்த்தார். எதையோ சொல்ல வாயெடுத்து அப்புறம் சொல்லலாம் என்பது போல் ஒத்திப் போட்டார்.

வீரா, சாமியையும் அம்மாவையும் சின்னச் சாமியையும் நம்ம குருத வண்டியிலே விரசா நம்ம வீட்டுக்கு இட்டுப் போ. நான் அவுஹ வண்டியிலே ஏறிட்டுப் பின்னாடியே வந்துடறேன்.

அவர், ஐயர் பதிலுக்குக் காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்தார். பின்னால் குடையைப் பிடித்து நின்றவன் அதை ஐயருக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவா அல்லது மடக்கிக் கக்கத்தில் இடுக்கவா என்று தெரியாமல் நின்றபோது வீரன் என்ற சேவகன் சொன்னான்.

மாயளகு. அந்தக் குடையை முன்னாடி நீட்டிப் பிடிச்சுட்டு என் பக்கமா உக்காருடா. சாமிமாருக்கு மேலே வெய்யில் விழாம இருக்கும். வாடி வதங்கிப் போய் வந்திருக்காஹ பாவம்.

ஒரு பாய்ச்சலில் குதிரை வண்டி புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரைய, தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் தன் குசல விசாரிப்புக்கு மெளனமாகத் தலையாட்ட, சங்கரனுக்குப் பெண்ணு பார்க்கப் போய் வந்த வைபவ விநோதம் பற்றி எல்லாம் ஏன் யாரும் ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை என்று நினைத்தபடியே கொல்லையில் சங்கை தீர்த்து வந்தாள் கல்யாணி அம்மாள்.

உடனே கிணற்றில் நீர் மொண்டு குளித்து ஈர வஸ்திரத்தோடு உள்ளே பிரவேசித்த அவள் காதுகளில் ஓவென்று பெருஞ்சத்தமாகக் குரலெடுத்து அசங்கியமாக ஆண்பிள்ளை அழும் குரல் கேட்டது. சுப்பிரமணிய ஐயருடையதாக இருந்தது அது.

எப்போ ? எப்படி ஆச்சு ? ஏன் யாருமே தகவல் சொல்லலே ? தூர்த்தன் போல நான் குஷியும் கும்மாளமுமா அங்கே உட்கார்ந்திருக்க, இங்கே.

சோகம் எல்லாம் தேக்கி அலறும் இன்னொரு குரல் சங்கரனுடையது.

ஈர வஸ்திரம், மாரில் இறுகிக் கட்டியது, கணுக்காலுக்குக் கீழே தாரையாகப் புடவை நனைத்த தண்ணீர் ஓடித் தரையை நனைக்கிறது. தலையில் வேடு கட்டும் முன்னால் பாதி விரித்த காசித் துண்டு கண்ணில் விழுந்து மறைக்கிறது. நடக்க முடியாமல் கிறுகிறுத்துத் தலை சுற்றிக் கொண்டு வர, அன்னிய புருஷர் யாராரோ இருப்பதும் மனதில் உறைக்காமல் கல்யாணி அம்மாள் சாமா சாமிநாதா என்று அலறிக் கொண்டே அந்த முன்கட்டில் நுழைந்தாள். அவளுக்கு யாரும் சொல்லாமலேயே பட்டது சாமிநாதனுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று.

சாமா போய்ட்டாண்டி. சகலமும் போயாச்சு. குல நாசம்.

நிலை வாசல் படியருகே நின்றிருந்த சுப்பிரமணிய ஐயர் மாரில் அடித்துக் கொண்டு அழுதபடி அவளைப் பார்த்து இரண்டு எட்டு முன்னால் வைக்க, கல்யாணி அம்மாள் மயக்கமாகி அப்படியே கால்பரப்பி விழுந்தாள்.

தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் தாங்களும் விம்மி அழுதபடி அவளைத் தொட்டெடுத்து சிஷ்ருசை செய்யப் புருஷர் எல்லாரும் வாசல் திண்ணைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

இதற்கிடையே வாசலிலும் அண்டை அயலில் இருந்து பெருங்கூட்டமாகக் கூடிவிட்டார்கள். தாணுப்பிள்ளைக்கு எஜமான ஸ்தானத்தில் இருக்கிற அரசூர்ப் பார்ப்பானைப் பற்றி அவர்களுக்கும் தெரியும். போன வாரம் தான் அந்தப் பிராமணனும் குடும்பமும் மலையாளப் பிரதேசம் போகிற வழியில் ஒரு ராத்திரி மங்கம்மா சத்திரத்தில் தங்கியிருந்தபோது பிள்ளை பழ வர்க்கமும், மானாமதுரை மண் கூஜாக்களில் சுத்த ஜலமுமாக அவர்களை எதிர்கொள்ளப் போனது.

அந்தக் குடும்பம் சுபகாரியம் முடிந்து முந்தாநாள் இரவு திரும்பப் புறப்பட்டபோது அரசூரில் அவர்களின் வீடும் புத்தி ஸ்வாதீனமில்லாத புத்திரனும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாய்ப் போன சங்கதி எல்லாம் நேற்றுப் பகல் முதலே தெரியவந்து, தாங்கள் யாரும் சம்பந்தப்படாமலேயே விசனமும் துக்கமும் அடைந்திருந்த ஜனங்கள் அவர்கள் எல்லோரும்.

சங்கரன் எல்லோரையும் பார்த்தபடி தூணைப் பிடித்தபடி நின்றிருந்தான்.

வீடு போயாச்சு. அண்ணாவும் போய்ச் சேர்ந்துட்டான். அந்தச் சங்கடத்திலும் சங்கரனுக்குக் கொஞ்சம் ஆசுவாசம். கருப்பஞ் செட்டியாரிடம் வட்டிக்கு மூலதனமாக முடக்கிய, அவர் கும்பினிக்காரனுக்குக் கடன் கொடுத்த பணம் எல்லாம் பத்திரம். வீட்டில் வைத்திருந்த புகையிலைச் சிப்பமும் ஒரு நறுக்கு மிச்சமில்லாமல் வெளியே அனுப்பிவைத்து விட்டதால் தொழில் வகையிலும் பாதகமில்லை.

வீட்டைத் திருப்பக் கட்ட எவ்வளவு பிடிக்குமோ ? அதை ஏன் எரிக்க வேணும் ? யார் எரித்திருப்பார்கள் ? புத்தி குழம்பிய சாமாவைத் தனியாக வைத்துவிட்டு எல்லோரும் வீட்டைத் திறந்து போட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதோ ?

இந்த ஐயணைக் கடன்காரனை அவன் கூடவே இருடா மூதேவின்னு படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டு வந்தேனே ? களவாணி கள்ளுக் குடிக்கப் போயிட்டானா இவன் வீட்டைக் கொளுத்த விட்டுட்டு ? என் போதாத காலம் இப்படி நான் போற வயசிலே புத்ர சோகத்துலே புலம்ப வச்சுட்டானே படுபாவி. அவன் விளங்குவானா ?

ஐயர் தன் விசுவாசம் மிக்க ஊழியனான ஐயணையை வைது தீர்த்தபடி தலையில் தலையில் அடித்துக் கொண்டபோது தாணுப் பிள்ளைக்குக் கஷ்டமாக இருந்தது.

சாமி, அந்தக் கிளவன் மேலே குத்தம் ஏதும் இருந்ததாத் தெரியலீங்க. ராத்திரி வீட்டு வாசல் திண்ணையிலே தான் படுத்துக் கிடந்திருக்கான் அவன். வெளியே இருந்து யாரோ பந்தம் கொளுத்தி வீசியிருக்காஹ. கந்தகத்தைக் கலந்து சுழத்தி எறிஞ்சது போல. ஐயணை மெத்தைப் படியேற முடியாம புகை. நெருப்பு. அவன் போய்ப் பார்க்கும்போது பெரிய சாமி உள்ளாற தாப்பாப் போட்டுட்டுச் சிரிச்சுட்டுக் கிடந்த சத்தம் கேட்டுச்சாம்.

ஐயணை தான் நேற்றுக் காலையில் தாணுப்பிள்ளையிடம் தாக்கல் சொல்லிப் போனது. போக வர ஒன்பது நாழிகை பிடிக்கிற தூரம் அரசூருக்கும் மதுரைக்கும். அறுபது கடந்த அந்தக் கிழவன் ஓட்டமும் நடையுமாகக் கால்நடையாகவே வந்து சொல்லி விட்டு ஒரு வாய்த் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிக் குடிக்காமல் திரும்ப ஓடியிருக்கிறான்.

தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் கல்யாணி அம்மாளை நாடி பிடித்துப் பார்க்க, மேலமாசி வீதி வைத்தியனைக் கூப்பிட ஆளனுப்பிக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணிய ஐயரும், சங்கரனும் தாணுப்பிள்ளையும் அண்டை அயல்காரர்களில் நாலைந்து பேரும் உடன் வர இரண்டு பெரிய வண்டிகளில் துரிதமாக அரசூரை நோக்கிக் கிளம்பினார்கள்.

அவளுக்கு மூர்ச்சை தெளிஞ்சதும் அவளை அவளை.

ஐயர் வார்த்தை வராமல் தடுமாற, அவர் கையைப் பிடித்து ஆதரவாக முன்னால் கூட்டிப் போய்க் கொண்டே தாணுப்பிள்ளை சொன்னார் –

சாமி, அம்மாவை நம்ம வீட்டுப் பொண்டுக நல்லாக் கவனிச்சுக்கும். கவலையே வேணாம். அவங்க பிரயாணப்பட செளகரியப்பட்டபோது அவங்களோட என் மாமனாரோ சகலையோ கூடத் துணைக்கு வர நம்ம பின்னாடியே கிளம்பி வந்துடலாம்.

பிள்ளைவாள். அம்மா எழுந்திருந்தாலும் சாமாவுக்கு உடம்பு ஸ்திதி கஷ்டமா இருக்குன்னு மட்டும் சொன்னாப் போதும்.

சங்கரன் வண்டியில் உட்கார்ந்தபடியே தாணுப்பிள்ளையிடம் சொல்ல, அவருக்குத் தெரியும்டா சங்கரா அதெல்லாம் என்றார் சுப்பிரமணிய ஐயர் மேல் வஸ்திரத்தால் கண்ணைத் துடைத்துக் கொண்டே.

கைமுதல் எல்லாம் போன, நிர்க்கதியான, கூலிக்குப் பிணம் தூக்கக் கோவில் மண்டபத்தில் காத்திருக்கும் தரித்திரப் பிராமணனாகத் தன்னைக் கற்பித்தபடியே சுப்பிரமணிய அய்யர் கொஞ்சம் கண் அசர, சங்கரன் மனதில் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் பகவதிக் குட்டி சலமேலரா பாடிக் கொண்டிருந்தாள். அந்த அம்பலப்புழை வீட்டு ஏலம், கிராம்பு வாசனையும் ஜமுக்காளத்தில் தெறித்த சந்தன வாடையும், பிச்சிப்பூ வாடையும் தீர்க்கமாகச் சூழ்ந்து நிற்க அரசூருக்குள் நுழைந்தார்கள்.

நீர்க்காவி ஏறின வெள்ளை வஸ்திரம் புதைத்த உடலுக்கு வெளியே கரிப்பிடித்த கால்களின் பக்கம் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த ஐயணை இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.

சாமி, மோசம் போய்ட்டோம்.

அவன் அலறலில் அரசூரே அங்கே திரண்டு வந்தது.

(தொடரும்)

Series Navigation