நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

சின்னக் கண்ணன்..


ஒட்டகம் பஸ்ஸைக் காதலுடன் பார்த்தபடி நின்றது. ‘ஏய்.. நீயும் என்னைப் போலவே உயரமா இருக்கே ‘ எனச் சொல்வது போல கொஞ்சம் ஆடி அசைந்து பஸ்ஸின் கண்ணாடிக்கருகில் வந்தது. அந்த இருட்டில் நேர்க்கோடாய்த் தெரிந்த பஸ்ஸின் தலைவிளக்கின் வெளிச்சத்தில் அதன் கோலிக்குண்டுக் கண்கள் பளபளத்தன. உள்ளிருந்த ஓமானி பஸ் டிரைவர் பிடித்து வைத்த பிள்ளையார் போல அசையாமல் உட்கார்ந்திருந்தான். பஸ் மட்டும் ம்ம்ம் என்று மினி சிங்கம் மாதிரி உறுமிக் கொண்டிருந்தது.

சற்று நேரம் பஸ்ஸைப் பார்த்த படி இருந்து விட்டு பின் கோபம் கொண்ட மனைவியைப் போல முகம் திருப்பிக் கொண்டது. அழகாய் மடித்துக் கொடுக்கப் பட்ட கும்பகோணம் துளிர் வெத்திலை மற்றும் சாமுண்டிப் பாக்கை பொக்கை வாய்த் தாத்தா கன்னத்தோரம் வைத்து மெல்வது போல வாயை அசை போட்டுக் கொண்டு மெல்ல நடந்தது. என்ன நினைத்துக் கொண்டதோ மறுபடியும் பஸ்ஸை ஒருமுறைத் திரும்பிப் பார்த்து விட்டு சூல் கொண்ட வாத்தைப் போலத் தள்ளாடித் தள்ளாடி கழுத்தை விலுக் விலுக் என ஆட்டிக் கொண்டே சாலையைக் கடந்தது..

டிரைவர் மெளனமாய் பஸ்ஸை எடுத்தான்..உள்ளே இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திர சேகரனின் காதில் செளம்யா கிசுகிசுத்தாள்.. ‘ஏங்க..இந்த அர்த்த ராத்திரில்ல இது எங்க போறது. ?. ‘

‘மே பி… அதோட காதலியைப் பார்க்கவா இருக்கும்.. ‘

‘இந்த ராவேளையிலையா.. ‘

‘ஏண்டி இதுகளுக்கெல்லாம் நேரங்காலம் தெரியுமா என்ன.. ‘ என்றதற்குச் செளம்யா செல்லமாய்ச் சிணுங்கினாள்.. ‘யோவ்.. நீ ரொம்ப மோசம்..ஆமா..பஸ்ஸை எப்ப நிறுத்துவாங்க.. ‘

‘எதுக்கு ? ‘

‘எல்லாம் தாயக்கட்டம் தான்..கொஞ்சம் அர்ஜண்ட்.. ‘

‘அச்சச்சோ இவன் எப்போ நிறுத்துவான்னு தெரியலையே.. அதான் எட்டரைக்கு நிப்பாட்டினான்ல..இப்போ என்ன டைம்.. பத்து தானே ஆறது.. என்ன அவசரம்.. ‘ ‘

‘போங்க….இதெல்லாம் சொல்லிட்டா வரும். ‘ எனச் சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.. பின் தன்னிச்சையாய்த் திரும்பி ‘அந்த வாண்டு என்ன பண்றது.. ‘ எனப் பார்த்தாள்.. அவளால் வாண்டு எனச் சொல்லப் பட்ட குட்டிப் பையன் பின்னால் நான்கு இருக்கைகள் தாண்டி ஒரு சீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். எதிரில் பாதையை விட்டு இருந்த இருக்கைகளில் அவனது அப்பா, அம்மாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்..

‘என்ன லூட்டி அடிச்சுது..இப்போ டயர்டாப் போய்த் தூங்குது பாருங்களேன் ‘ என்றவாறே சீட்டில் சாய்ந்து அரைக் கண் மூடிக் கொண்டாள் செளம்யா.

கொஞ்சம் உறங்க முயற்சிக்கும் மனைவியையே ஆவலுடன் பார்த்தான் சந்த்ரு.. நல்லவேளை.. நேற்று இருந்த இருப்பிற்கு இன்று இவள் எவ்வளவோ தேவலை.. அதுவும் இன்று மதியம் ஒரு மணிக்கு ரூவியிலிருந்து சலாலா செல்வதற்காக இந்த பஸ்ஸில் ஏறியதிலிருந்து கொஞ்சம் மூட் மாறியிருக்கிறாள்..

‘சந்த்ரு.. அவசியம் பஸ்ல போகணுமா.. பேசாம ஃப்ளைட்ல போய்டேன்..பஸ் ஜர்னி ரொம்ப டயர்சம்மா இருக்கும்ப்பா..அதுவும் இப்போ மே மாசம்.. வெய்யில் ஏற்கெனவே கொளுத்துது.. ஏஸி போட்டிருந்தாலும் எஃபெக்டே இருக்காதுப்பா பஸ்ல ‘ என்று சொன்னான் அலுவலக ராபர்ட்..

‘இல்லைப்பா.. என் மனைவிக்கு ஃப்ளைட்ல ஊர் ஊராப் போய்ப் போரடிச்சுடுத்தா.. அதுவும் ரெண்டு மூணு நாளா மூட் அவுட்டா இருக்கா.. கொஞ்சம் பஸ்ல போனா சேஞ்ச் ஆ இருக்கும்னு நினைக்கிறா.. ‘

‘சரி சரி.. நானும் உன்கூட வர முடியுமான்னு பார்க்கறேன் ‘ எனச் சொன்ன ராபர்ட் கடைசியில் வரமுடியாமல் போக, இதோ பயணம்..

சந்த்ருவுக்கு மஸ்கட்டில் ஒரு பெரிய அட்வர்டைஸ்மெண்ட் கம்பெனியில் பெரிய உத்யோகம்..தங்கியிருப்பது மஸ்கட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் ரூவி என்ற இடத்தில்.

துபாயில் பத்துவருடங்களுக்கு மேல் பொறுப்பாய்க் குப்பை கொட்டியதில் கம்பெனி மகிழ்ந்து, ‘சந்த்ரு..போய் ஓமான் மார்க்கெட் ஸ்டடி பண்ணுப்பா..சமர்த்தோல்லியோ ‘ என அனுப்பி விட்டார்கள்..வந்ததுமுதல் சலாலா,சூர், சோஹர், பர்க்கா என்று ஒரே ஊர் சுற்றல் தான்..ஒவ்வொரு ஊரில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்களது க்ளையண்ட்டிற்கு ஏதாவது ப்ராடக்ட் லாஞ்ச் இருக்கும்.. சலாலா மட்டும் ஃப்ளைட் (ரூவியிலிருந்து பன்னிரண்டுமணி நேரப் பஸ் பயணம் என்பதால்.)

செளம்யா அவன் காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டவள்..தைரிய சாலி.திருமணமாகி பத்துவருடம் ஆகிறது..இருவரும் – நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி என்று பாடிக் கொண்டிருப்பவர்கள்..குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறையே இல்லை.. யாராவது ஏதாவது கேட்டால் செள சிரித்தே மழுப்பி விடுவாள்.. ‘இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.. ‘ எனச் சந்த்ருவிடம் சொல்வாள்..

ஆனால் ரூவி வந்த சில மாதங்களில் கொஞ்சம் மாறியிருந்தாள்..ஏனெனில் சுற்றியிருந்த கூட்டம் அப்படி..

ரூவி சற்றே பெரிதான சோபிஸ்டிகேடட் கிராமம் எனலாம்..எல்லாரும் மரியாதையாகப் பழகுவார்கள்..அதுவும் சந்த்ருவுக்கு உத்யோக ரீதியாக முன்பிருந்தே நிறைய பேர்கள் தெரியுமாதலால் எந்த இடத்திற்குப் போனாலும் யாராவது ஹாய் சொல்லுவார்கள்..அது லூலூ சூப்பர்மார்க்கெட்டோ, சிட்டி செண்ட்டரோ, கந்தார் பீச்சோ சரி.. அவனையும் பார்த்து விட்டு உடன் ஒல்லியாய் அழகாய் கட்டுக்குலையாமல் இருக்கும் செள வையும் பார்த்து விட்டு குசலம் விசாரித்துவிட்டு கேட்கும் முதல் கேள்வி.. ‘குழந்தையை ஊர்லயா விட்டுருக்கீங்க.. ‘.. ‘இன்னும் இல்லை ‘ என்றதும் கேள்வி கேட்டவரின் கண்களில் ஒரு பரிதாபப் பார்வை வந்துவிடும்.. ‘சாரி.சார்.. ‘ எனச் சொல்லி விலக,செள் சீறுவாள்.. ‘இவன் எதுக்கு சாரி சொல்றான்.. ‘

அதுவும் இரண்டு நாட்களுக்குமுன் தங்கியிருந்த ஃப்ளாட்டின் கீழே இருக்கும் குஜராத்திப் பெண் நண்பிகள் ஏதோ பரிகாரம் அது இது என்று சொல்லி சற்றே மூளைச் சலவை செய்து விட – ஒரே அழுகை.. ‘ஏங்க.. நமக்குன்னு ஒரு ஜீவன் வருமா..வராதா.. ‘

இருவரும் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட் என்று சொல்லப்பட்ட டாக்டர்ஸ் ரிப்போர்ட்டைப் பற்றி மறுபடியும் சொல்லி சமாதானப்படுத்திய போது தான் இந்த சலாலா பயணம் இருப்பது நினைவுக்கு வந்தது.. ‘செள.. பேசாம என்கூட சலாலா வா.. அது ஓமானின் கேரளா.. வாழைமரம்,வெத்தலை,தென்னை மரம் எல்லாம் இருக்கும்.. கொஞ்சம் மனசுக்கும் ஆறுதலா இருக்கும் ‘ என்ற போது ஒத்துக் கொண்டாள்..ஆனால் மறுபடியும் அடம் .. ‘ஃப்ளைட் ட் ராவல் எனக்கு போரடிச்சுடுத்து..பஸ்ல போலாம்.. ‘

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தது முதல் பின்சீட்டில் இருந்த குட்டித் தெலுங்குப் பையன் அவளைக் கவர்ந்தான்.. அந்தப் பையனின் அப்பாவும் சந்த்ரு போலவே ப்ளெய்ன் நீலச் சட்டை அணிந்திருந்தான்..முகத்தில் எந்த எக்ஸ்ப்ரஷனும் காட்டவில்லை.. அந்தப் பையன் தானாகவே வந்து ஏதாவது தெலுங்கில் பேசிக் கொண்டு அப்பா அம்மாவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தது..இவளிடம் வந்து ஏதோ வினவ, பதிலுக்கு செள் அவனது பெயர் கேட்க..எதுவும் சொல்லாமல் மறுபடி அம்மாவிடம் போய்விட்டது..பின்னர் இவளைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்து தயங்கித் தயங்கி அவளிடம் வந்து அமர்ந்து தெலுங்கில் கேட்க இவள் ஏதோ சொல்ல பஸ்ஸைப் போலவே நேரமும் ஓடியது தெரியவில்லை..கொஞ்சம் முறுவலும் செளம்யாவின் முகத்தில் வந்து விட்டது..

சீஸன் இல்லாததால் பஸ்ஸில் கூட்டமும் இல்லை..அங்கங்கே ஓரிரு ஓமானிகள் அமர்ந்திருந்தனர்.. மற்றவர்களும் சிலர் தான் இருந்தனர்… பஸ் இருபுறமும் பொட்டல் வெளிப் பாலைவனத்தில் நேர்க்கோடாய் இருக்கும் சாலையில் இருட்டில் வெளிச்சம் கொடுத்துச் சென்று கொண்டிருக்க, செள அவனிடம் மறுபடி கிசுகிசுத்தாள்.. ‘ஏங்க.. பஸ் டிரைவர்கிட்ட கொஞ்சம் கேளுங்களேன்.. ‘

எழுந்து சென்று பஸ் டிரைவரிடம் இந்தியில் கேட்க அவன், ‘இன்னும் ஒரு மணி நேரத்தில தான் நிற்கற நம்ம இடம் வரும்..சரி..லேடாஸ்னு சொல்றீங்க..இன்னும் பத்து நிமிஷத்தில ஒரு கிராமம் வரும்..அங்க நிப்பாட்டறேன்..சுருக்க வந்துடுங்க.. ‘

சொன்னாற்போலவே கால்மணி கழித்துகொஞ்சூண்டு விளக்கெறிந்து கொண்டு காஃபி ஷாப் என்று சோகையாக இருந்த ஒரு கடைக்கெதிரே பஸ்ஸை நிறுத்தினான்..பஸ்ஸிலிருந்தவர்கள் முக்கால்வாசி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். முழிப்புத் தட்டிய ஓரிரு ஓமானிகள் மட்டும் அரைக்கண் திறந்து பார்த்தபடி சீட்டில் சாய்ந்து கொண்டனர்..

செளம்யாவுடன் சந்த்ரு இறங்கி அந்த காஃபி ஷாப்பில் தூங்கிக் கொண்டிருந்தவனிடம் ‘பாத்ரூம் எங்க இருக்கு ‘ எனக் கேட்க அவன் பேசாமல் பின்பக்கம் கைகாட்டினான்..

பின் பஸ் ஏறிய போது ஓமானி டிரைவர் சைகையில் சந்த்ருவிடம் ஏதோ கேட்க சந்த்ரு புரியாமல் தலையசைத்து ஏறி சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.. செளம்யா.. ‘என்னங்க இது ஒரே இருட்ல பொட்டக்காடால்ல இருந்தது..பாத்ரூமே கிடையாதா இங்க.. ‘ ‘

‘சரி சரி..விஷயத்தை முடிச்சுட்டயோன்னோ.. ‘

பஸ் மெள்ளக் கிளம்ப செளம்யா அவன் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பிக்க சந்த்ருவும் மெள்ளக் கண்மூடினான்..

**********

திடுமென முழிப்பு வந்தது சந்த்ருவிற்கு..யாரோ எழுப்பி விட்டாற்போல.. கண் திறந்து பார்த்தால் நிஜமாகவே ஓமானி டிரைவர் அருகில் நின்றிருந்தான்..அதற்குள் செள வும் எழுந்திருந்தாள்.. வாயில் விரல் வைத்து இருவரையும் கீழே கூப்பிட்டான் டிரைவர்..பஸ்ஸில் ஒரு சிலர் உறக்கம் கலைந்து நெற்றிச் சுருக்க,டிரைவர்ி வெறுமனே தலையாட்டினான். அந்தப் பக்கமிருந்த இருக்கைகளில் வாண்டுவின் பெற்றோர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்..

என்ன எதற்கு என்று தெரியாமல் பஸ்ஸை விட்டிறங்கினால் பஸ்ஸிற்கு எதிரே ஒரு ப்ராடோ நின்றிருந்தது..அதனருகில் இரு ஓமானியர்கள் நிற்க பஸ்டிரைவர் அவர்களிடம் சந்த்ருவைக் காட்டினான்.. ஒரு ஆள் சட்டைப் பையிலிருந்து ஒரு ஐ.டி நீட்டினான்.. ஆர்.ஓ.பி (ராயல் ஓமான் போலீஸ்) என்றும் எழுத்துக்கள் எல்லாம் அரபியிலும் எழுதியிருக்க, அவன், ‘ நீங்கள் சந்த்ரு..இவர் செளம்யா ?.. ‘ என ஆங்கிலத்தில் கேட்கவும் சந்த்ருவின் வயிற்றில் ஒரு பயப்பந்து வந்தமர்ந்தது..

‘ஆமாம்.. ‘ எனச் சொல்லி தனது லேபர்கார்டை சந்த்ரு கொடுக்க ஓமானி வாங்கிப் பார்த்தார்.. ‘மிஸ்டர் சந்த்ரு நீங்களும் உங்கள் மனைவியும் எங்களுடன் வர வேண்டும்..உங்கள் நல்லதிற்காக.. ‘

‘என்ன விஷயம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா.. ‘

‘அது தான் சொன்னேனே.. உங்கள் நல்லதிற்காக என்று..ஒன்றும் கவலைப் படாதீர்கள்.. ‘ இப்போது அந்த ஓமானி இன்ஸ்பெக்டரின் கண்களில் ஏதோ புரியாத பரிதாபப்பார்வை வந்தது..

‘உங்களுக்குத் தெரியும்.. நான் ஒரு கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருப்பவன் என்று..அது தான் லேபர் கார்டில் இருக்கிறதே..தவிர எங்களது பார்ட்னர்…அப்துல்லா அல்.. அவர் மினிஸ்ட் ரியில் முக்கிய பதவி…வேண்டுமானால் என் பி.ஆர்.ஓவை செல்லில் கூப்பிடட்டுமா.. ‘

‘ஒன்றும் அவசியமில்லை மிஸ்டர் சந்த்ரு..நீங்கள் ஜஸ்ட் ஒரு இருபது நிமிடம் வந்தால் உங்களுக்கே தெரிந்து விடும்.. ‘

‘சூட்கேஸ்கள்.. ‘

‘அது உங்களிடம் வருவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்..ப்ளீஸ்..வாருங்கள்.. ‘

செளம்யாவிற்குத் தூக்கம் முற்றிலும் கலைந்து போயிருக்க ஒரு வித த்ரில் முகத்தில் வந்திருந்தது.. சந்த்ருவிடம் கிசுகிசுத்தாள் ‘போய்த் தான் பார்ப்போமே..என்ன ஆறதுன்னு..ஆமா நீங்க ஏதாவது போதைப் பொருள் கடத்தறீங்களா என்ன..சொல்லவேயில்லையே.. ‘ என்றாள் தூய தமிழில்- அவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்று.. ‘சே.. நீ வேற.. ‘ என்றபடி சந்த்ரு ப்ராடோ வில் ஏறி அமர, செளம்யாவும் உடன் ஏற, ப்ராடோ பஸ்ஸை விட்டு விலகி எதிர்த்திசையில் சென்றது..

ஒன்றும் புரியவில்லை..ஆண்டவனே என்ன விஷயமாக இருக்கும். தைர்யம் வருவதற்கு அது என்ன ஸ்லோகம்…வனமாலீ கதீசாங்கி..கொஞ்சம் ஸ்லோகமும் குழம்பிக் குழம்பி வர..சந்த்ரு வெளியே வெறித்தான்..செளவும் எதுவும் பேசவில்லை..

அரை மணி நேரப் பயணத்திற்கப்புறம அந்த ஜீப் ஒரு இடத்தில் நுழைய.. ‘இது..இது..என்ன.. ஞாபகம் இருக்கா ‘ செள கேட்க சந்த்ருவுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது..அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கிய கிராமம்.. காஃபி ஷாப்பிற்கு எதிரே ஒரு போலீஸ் கார் தலையில் சிகப்பு விளக்கை வைத்தபடி நிற்க, ஓரிரு போலீஸ் ஆட்கள் நின்றிருந்தார்கள்.. விஷயம் சம்திங்க் சீரியஸ் என்று இருவருக்கும் பட்டாலும் என்ன விஷயம் எனத் தெரியவில்லை..

ஜீப் நின்றதும் இருவரும் இறங்க, உடன் வந்த ஓமானி உடையில் இருந்த இன்ஸ்பெக்டர் அவர்களை மெல்ல அந்தக் காஃபி ஷாப்பிற்குள் அழைத்துச் செல்ல அங்கே இருந்த ஒரு பெஞ்ச்சில் அந்த வாண்டுப் பையன் படுத்துக் கொண்டிருந்தான்.. தலையில் சொதசொதவென ரத்தம்..

செள பதறினாள்.. ‘என்ன ஆச்சு.. ‘ எனக் கேட்டபடி தொட, இன்ஸ்பெக்டர் சந்த்ருவிடம் ‘ மன்னியுங்கள் மிஸ்டர் சந்த்ரு..உங்கள் மகன் நீங்கள் முன்பு பஸ்ஸை விட்டு இந்த இடத்தில் இறங்கி சில நிமிடங்கள் கழிது அவனும் இறங்கியிருக்கிறான்.. நீங்கள் பின் பக்கம் செல்ல அவனும் வந்து..ஒரே இருட்டாய் இருந்ததால் கொஞ்சம் பயந்திருக்கவேண்டும்..திரும்ப முயற்சிக்கையில் கால் தடுக்கி அந்தப் புதர்கருகில் இருந்த கல் மீது விழுந்திருக்க வேண்டும்..கூர்மையான கல்.. தலையில் அடிபட்டதில் ரத்தம்வந்து…உயிர் உடனே போயிருக்கலாம்.. இருட்டில் திரும்பும் போது உங்களுக்கும் தெரியவில்லை போலும்.. கொஞ்ச நேரம் கழித்து இந்த காஃபி ஷாப் ஓனர் போன போது தான் பார்த்திருக்கிறார்..பார்த்து எங்களுக்கு போன் பண்ணி…ஐயாம் ரியல்லி வெரி ஸாரி.. ‘ சரளமான ஆங்கிலம்..

சந்த்ரு உறைந்து போயிருந்தான்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை..ஓடி ஆடி கண்முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இப்போது..அதுவாகி விட்டது..சரீ…ஆனால் இந்த இன்ஸ்பெக்டர் என்ன சொல்கிறார்.. என் மகனா..

செள குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டிருக்க அவள் கண்களில் குளம் கட்டி கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது..

‘ இன்ஸ்பெக்டர்… இது..என் மகன் கிடையாது.. ‘

‘என்ன சொல்கிறீர்கள்.. ‘ இன்ஸ்பெக்டர் நிஜமாகவே அதிர்ந்தார்..

‘ஆம்.. இது பஸ்ஸில் வந்திருந்த இன்னொருவரின் குழந்தை.. ‘

‘மை குட்னெஸ் ‘ நெற்றியை நீவி விட்டுக் கொண்டார்.. ‘ நாங்கள் ட் ரிப் ஷீட் வாங்கிப் பார்த்தோமே..மூன்று பெயர்கள்..சந்த்ரு,செளம்யா, ராபர்ட்… என்று இருந்ததே..டிரைவர் வேறு உங்களிடம் பஸ் ஏறும் போது குழந்தையைப் பற்றிக் கேட்டானாம்..நீங்கள் அது நடுப் பாதை வழியாக ஏறிவிட்டது என்றீர்களாம்.. ‘

‘அன்புள்ள ராயல் ஓமான் அதிகாரியே..ராபர்ட் என்பது எனது கலீக்கின் பெயர்..பஸ்ஸில் அவன் வரவில்லை சே.. என்ன குழப்பம்..வழியிலாவது சொல்லியிருக்கலாம் அல்லவா…அதுவும் இந்தப்பையன் என்னுடைய மகனாய் இருந்தால் நான் ஆரம்பத்திலேயே தேடி இருக்க மாட்டேனா.. ‘.

சொல்லாமல் கொள்ளாமல் எங்களைக் கூட்டி வந்து… நாங்கள் எவ்வளவு அவஸ்தைப் பட்டோம் தெரியுமா..என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

‘இல்லை உங்களை அதிர்ச்சிப் படுத்தக் கூடாது என்றுதான் சொல்லவில்லை..ஓ அல்லா.. ‘ எனச் சொல்லி பையிலிருந்து செல்லை எடுத்தார்.. ‘உங்களது சட்டை நீலச் சட்டை..பையனின் அப்பாவின் சட்டையும் இதே நிறமா ‘ எனக் கேட்டபடி பட்டன்களை ஒற்றினார்..மறுமுனை எடுக்கப் பட காதில் வைத்தவாறே அரபியில் பேசியவாறு வெளியில் சென்றார்..

செள மெல்ல எழுந்து சந்த்ருவின் தோளைத் தொட, அந்த அதிகாரி மறுபடி வந்தார்.. ‘மறுபடியும் என்னை மன்னியுங்கள் நண்பரே…பஸ்ஸிற்குத் தகவல் கொடுத்து விட்டேன்.. வழக்கமாய் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறது..பையனின் அப்பா அம்மாவிற்கு- தூங்குபவர்களை எழுப்பித் தகவல் சொல்லியாகி விட்டது..என்ன தூக்கமோ…வந்து விடுவார்கள்..பின் இங்கு உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்…நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் இதோ இந்த ஜீப்பிலேயே சலாலா சென்று விடுங்கள்.. எந்த ஹோட்டல் என்று சொல்லுங்கள்..அங்கு உங்களது சூட்கேஸை அனுப்புகிறேன். ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் காஸ்ட்.. ‘

மீண்டும் ப்ராடோவில் ஏறித் திரும்புகையில் கொஞ்ச நேரம் செள வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள்..பின் திடாரென… ‘அழாதடா..செல்லம்.. ரொம்ப வலிச்சுதாம்மா.. ஒரு சத்தம் போட்டிருக்கக் கூடாது… நாங்க உடனே பார்த்துருப்போமே..தூக்கக் கலக்கத்துல இருந்துட்டோமே.. சரி சரி..கை நீட்டு… சாதம் போட்டு நெய் விட்டு பிசஞ்சு பிசஞ்சு பிசஞ்சு..உனக்கொரு வாய்..உன் அப்பாக்கு ஒரு வாய்.அம்மாக்கு ஒரு வாய்..அங்கிள்க்கு ஒரு வாய்…எனக்கு ஒரு வாய்…இப்போ.. நண்ட்டு வருது..நரிவருது..சிரி..சிரி..சிரி.. ‘

சந்த்ரு ‘செள்.. என்ன இது..calm down.. ‘

. ‘என்னால தாங்க முடியலீங்க..அதுக்கென்ன ஒரு மூணு மூணரை வயசிருக்குமா..எதுக்காக நம்ம பின்னாடியே வரணும்..எதுக்கு உசுர விடணும்.. பேசாம நாம இப்படியே இருந்துடலாங்க..குழந்தையும் வேண்டாம் குட்டியும் வேண்டாம்.. பெறவும் வேண்டாம் பறிகொடுக்கவும் வேண்டாம்.. ‘ கண்செருகிச் சாய சந்த்ரு பதறினான் ‘டிரைவர்..கொஞ்சம் வண்டியை நிறுத்து.. ‘

வண்டியை நிறுத்தி தண்ணீர் தெளித்தால் கண் விழித்தாள்.. ‘ நா கடைசியா குளிச்சது எப்போன்னு நினைவிருக்கா.. ‘

‘இப்போ அதுக்கென்ன செளம்யா..ரிலாக்ஸ்ம்மா ப்ளீஸ்.. ‘

‘இல்லீங்க..லேசா தலை சுத்தற மாதிரி இருக்கு ‘ என்றாள்…

***** kanlak@sify.com

Series Navigation

சின்னக் கண்ணன்

சின்னக் கண்ணன்